12 January 2011

திருமாவளவன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்


மீனகம் இணைய தளம் வெளியிட்டு இருந்த இராவணன் எழுதிய கட்டுரைக்கு போதிய விளக்கமும் பதில்களும் கொடுத்த பின்னரும் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக விமர்சனத்தை வைக்கும் கட்டுரைகளை வெளியிடும் மீனகமும்,சாதிய கண்ணோட்டத்தில் பதிலுரைத்து வரும் இராவணனும் தம் பொது முகத்தை இழந்து நிற்கிறார்கள்.. சாதி ஒழிப்பை கொள்கையாக ஏற்று கொண்டமேதகு பிரபாகரன் வழிநடத்தும் ஈழ தேசத்தில் இது போன்றசாதியவெறியர்களுக்கு இடமில்லை.
நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து தேர்தலைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் மீது அடுக்கடுக்கான துரோகப் பட்டியலை வாசித்துத் தீர்த்துவிட்டார்கள் தமிழகத்தின் "புதிய புரட்சிக்காரர்கள்'.


ஈழ விடுதலைக்காக வீரச்சாவடைந்த கரும்புலி முத்துக்குமார் உடல் அடக்கம் செய்யாமலிருந்திருந்தால் இந்நேரம் மாணவர்களே புரட்சி செய்து தமிழகத்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்திருப்பார்கள் என்பதுபோல ஒரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் தமிழக நக்சல்பாரிகள் இப்படித்தான் இவர்கள் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள்.

இந்த நக்சல்பாரிகள் "தேர்தல் பாதை திருடர் பாதை' என்று சொல்வார்கள்; ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் மட்டும் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறாமல் போனது தமிழகத்திற்கு இழைத்த துரோகம் என்பார்கள். "ஆயுதம் ஏந்த வேண்டும்' என்பார்கள்; ஆனால் திண்ணியத்திலும் மேலவளவிலும் சாதிவெறியர்கள் கொட்டமடித்தபோது வெறும் துண்டறிக்கைகளை மட்டும் அடித்துக்கொடுப்பார்கள். இதுதான் இந்த நக்சல்பாரிகளின் ஆயுதம்போலும். முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தின்போது, மாணவர்கள் பெயரில் உள்ளே புகுந்து ஏதோ "புரட்சி அரசியல்' செய்ய முயன்றார்கள். பாவம், உண்மையான மாணவர் எவரும் அகப்படவில்லை. அந்த ஆற்றாமையால் விடுதலைச் சிறுத்தைகள் மீது காழ்ப்புணர்ச்சியைக் கொட்டித் தீர்க்கிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகளின் தமிழ்த்தேசிய அரசியல், சேரி இளைஞர்களை மட்டுமின்றி உண்மையான தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் அணிதிரட்டி வருகிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் துரோகம் இழைத்து விட்டது என்று "கிணற்றுத் தவளையாய்'கத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் காழ்ப்புணர்ச்சி நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே இருக்கையில், போகப் போக அவர்கள் கூறும் துரோகப்பட்டியல் இப்படித் தொடர்ந்தாலும் தொடரும்...


  • இலங்கையில் இராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றதற்குக் காரணமே விடுதலைச் சிறுத்தைகள்தான். தமிழர்களைக் கொன்றுகுவித்த இராஜபக்சேவுக்கு காங்கிரசு கை கொடுத்தது. அந்தக் காங்கிரசுக்கு திமுக துணை நிற்கிறது. திமுகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துçணாயய் இருக்கிறது. அதனால்தான் இலங்கையில் மீண்டும் இராஜபக்சே வெற்றிபெற முடிந்தது என்று சொன்னாலும் சொல்வார்கள்.
  • காங்கிரசோடு கடந்த ஐந்தாண்டுகளாய் கூட்டணி அமைச்சரவையில் இருந்த பா.ம.க.வுக்கும் வெளியிலிருந்து ஆதரவு தந்த மதிமுகவுக்கும் ஐந்தாண்டுகள் கழித்துத்தான் காங்கிரசு, "தமிழர் விரோதக் கட்சி' என்று தெரிந்தது. பாவம் அவர்களை இவர்கள் குற்றம் சொல்லவே மாட்டார்கள்.
  • தெலுங்கானா கோரிக்கை வலுப்பெற்று இவ்வளவு கலவரங்கள் உருவானதற்குக் காரணமே விடுதலைச் சிறுத்தைகள்தான் என்பார்கள். இந்தியாவில் காங்கிரசு ஆட்சி அமைக்க விடுதலைச்சிறுத்தைகள்தான் காரணம் என்பார்கள். காங்கிரசு உ.பி.யில் பெற்ற வெற்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பெற்ற வெற்றி இதற்கெல்லாம் திமுகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு தந்ததாலும், திமுக காங்கிரசைத் தாங்குவதாலும்தான்.. என்று சொன்னாலும் சொல்வார்கள்.
  • அந்தத் திமிரில்தான் தெலுங்கானா பிரச்சனையை காங்கிரசுக் கட்சி முடிக்காமல் கலவரத்தைத் திட்டமிட்டே தூண்டி வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் ஜெயலலிதாவை ஆதரித்து "அம்மா வாழ்க' என்று சொல்லியிருந்தால் தெலுங்கானா என்கிற பிரச்சனையே இல்லாமல் போயிருக்கும். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் செய்த துரோகத்தால்தான் இவ்வளவு சிக்கல்களும் என்று சொன்னாலும் சொல்வார்கள்.
  • ஜார்கண்ட்டிலும் திரிபுராவிலும் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைக்குக் காரணம்... வேறு யாராக இருக்க முடியும்? தண்டவாளத்தைப் பிளந்து உயிர்ச் சேதமும் பொருள் சேதமும் செய்தார்களே அதற்கு யார் காரணம்? விடுதலைச் சிறுத்தைகளின் துரோகம்தான் காரணம்! திமுகவோடு கூட்டுச் சேர்ந்தது மட்டுமல்லாமல், காங்கிரசுக்காரர்களோடு ஒரே விமானத்தில் பயணம் செய்து அவர்களோடு பேசிச் சிரித்துக்கொண்டு தில்லிக்குப் போகிறாரே திருமாவளவன்! இது அடுக்குமா? துரோகிகளோடு கை கோக்கலாமா? இதனால்தான் காங்கிரசுக்காரர்கள் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க மறுக்கிறார்கள்.. என்று சொன்னாலும் சொல்வார்கள்.
  • ரஷ்யாவில் குரேசியர்கள் மீது செர்பியர்கள் தாக்குதல் நடத்தி தனிநாடு கேட்டுப் போராடுகிறார்கள். என்ன கொடுமை பாருங்கள்! அப்படிப்பட்ட நாட்டோடு என்ன உறவு வேண்டியிருக்கு காங்கிரசுக்கு? வெளியுறவுக் கொள்கையை உருப்படாமல் வைத்திருக்கும் மன்மோகன் சிங் அரசினுடைய கூட்டணியில் திருமாவளவன் இருப்பதால்தான் குரேசியர்கள் மீதான தாக்குதல் தீவிரமடைகிறது. குரேசியர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை திருமாவளவன் செய்திருக்கிறார்.. என்று சொன்னாலும் சொல்வார்கள்.
  • தெற்கைச் சுரண்டிக் கொழுக்கும் வடக்குக்குத் திருமாவளவன் போவது சரியா? தமிழ்த்தேசியம் பேசும் திருமாவளவன் இந்தித் தேசியக்காரர்களோடு உட்கார்ந்து பேசுவது தமிழர்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமில்லையா?... என்றுகூடச் சொன்னாலும் சொல்வார்கள்.
தமிழர்களுக்கு இப்படி அடுக்கடுக்கான துரோகங்களைச் செய்துவரும் திருமாவளவனை மன்னித்து விடலாம்.


ஆனால் மன்னிக்கவே முடியாத ஓர் துரோகத்தைச் செய்து வருகிறார். அது என்ன துரோகம் தெரியுமா?


  • பாவம், ஒரு மூலையில் கிடந்த சேரிச் சனங்களை அமைப்பாக்கி அவர்களை அரசியல் சக்தியாய் மாற்றி நடுநாயகமாய் தெருக்களிலும் அரசியல் உலகிலும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறாரே, இது ஊர்த் தெருத் தமிழர்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் இல்லையா? ஊர்த் தெருத் தமிழர்கள் சேரிச் சனங்களுக்கு என்ன குறை வைத்தார்கள்? வேளாவேளைக்குக் கூழும் கஞ்சியும் ஊற்றினார்கள். தீபாவளி, பொங்கலுக்கு புதுத்துணி எடுத்துக் கொடுத்தார்கள். வீட்டின் கொல்லைப்புறம் வந்து, கூலி வாங்கிப் போனார்கள். இப்படிச் சுகமாக இருந்தவர்களைக் கெடுத்து, சொகுசுக் கார்களில் பயணம் செய்ய வைப்பது ஞாயமா? இது அம்மக்களுக்குச் செய்கிற துரோகமில்லையா?.. என்று சொன்னாலும் சொல்வார்கள்.
  • திமுகவிலோ, அதிமுகவிலோ, பா.ம.க.விலோ, மதிமுகவிலோ கொடிபிடித்து, "போஸ்டர்' ஒட்ட வேண்டியவர்களை விடுதலைச் சிறுத்தையயன்று தலைநிமிர வைத்திருப்பது ஊர்த் தெருத் தமிழர்களுக்கு மட்டுமல்ல தலித்துகளுக்கே செய்கிற துரோகமில்லையா?.. என்று சொன்னாலும் சொல்வார்கள்.
இவ்வளவு துரோகம் இழைத்திருக்கிற திருமாவளவனுக்கு கரும்புலி முத்துக்குமார் மீது ஆணையிட்டு ஒன்றைச் சொல்கிறோம். அவர் பேசாமல் தலித்துகளை சாதிவெறியர்களிடம் சாணிவாற விட்டுவிட்டு இந்த நாட்டைவிட்டே வெளியேறுவதே நல்லது. அப்போதுதான் தமிழகம் உருப்படும்.. என்று சொன்னாலும் சொல்வார்கள்.


- வன்னி அரசு

0 comments:

Post a Comment