08 September 2011

“நான் உமி கொண்டு வருகிறேன்! நீ அரிசி கொண்டு வா! இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்!

  “நான் 
  உமி கொண்டு வருகிறேன்!
  நீ அரிசி கொண்டு வா!
  இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்!

  என்கிற கதையாகப் போய்க்கொண்டு இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்.

  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனு இந்திய குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது முதலே தமிழ்நாட்டுத் தமிழர்களின் இரத்தம் சூடேறியது. தமிழீழ ஆதரவு இயக்கங்கள் தனித்தனியாகப் போராட்டங்களை நடத்தின.

  விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் 19.8.2011 அன்று சென்னையிலும் 22.8.2011 அன்று தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகளும் பா.ம.க.வும் இணைந்து தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் சார்பில் ‘மரணதண்டனை ஒழிப்பு மாநாடு' என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை ஒருங்கிணைத்தன!  மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.  தமிழகத்தின் இந்த கொதிப்புயர்ச் சூழலில் அனைத்துத் தலைவர்களுமே தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் ஒன்றை முன் வைத்தனர். “தூக்குத் தண்டனையைக் குறைப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.  அதனால் தூக்குத் தண்டனைக்கு எதிராக உடனே நடவடிக்கை எடுங்கள்" என்பதுதான் அது. ஆனால், வீதிகளெங்கும் ஒலித்த தமிழர்களின் குரல் முதல்வர் ஜெயலலிதாவின் காதில் விழவில்லையோ என்னவோ தெரியவில்லை. ஒரு வாரகாலம் அமைதியாகவே இருந்தார்.

  28.8.2011 அன்று மறைமலை நகரில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற ‘மரண தண்டனை ஒழிப்பு' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் “தமிழக முதல்வருக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது. உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் இயற்றி ஆளுநருக்குப் பரிந்துரைக்க வேண்டும். இல்லையேல், 6ந்தேதி முதல் எல்லாத் திசைகளிலிருந்தும் வேலூர் நோக்கி ஊர்திப் பயணம் சென்று 8ந்தேதி வேலூர்ச் சிறையை முற்றுகையிடுவோம்! என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

  மறுநாள் 29.8.2011 காலை 9.30 மணிக்கெல்லாம் சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், “மூவரின் தூக்குத் தண்டனையைக் குறைப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதுபோல் சில அரசியல் கட்சித் தலைவர்கள் பேசி வருகிறார்கள். இது தவறு. தமிழக அரசுக்கு அதற்கான அதிகாரம் எதுவும் இல்லை என்று அறிவித்தார்.


  
தமிழகம்  மேலும் கொதித்தது. 28.8.2011 அன்று தீக்குளித்து உயிர்நீத்த தமிழகக் கரும்புலி தங்கை செங்கொடியின் வித்துடல் மங்கல்வாடிக்கு 29.8.2011 அன்று எடுத்துச் செல்லப்படும்போது இளைஞர்களின் கோபம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் திரும்பியது. “ பதவி விலகு! பதவி விலகு!, “அதிகாரம் இல்லை என்றால் அமைச்சரவை எதற்கு? முதல்வர் பதவி எதற்கு? என்று முழங்கினர்.

  விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் உடனடியாக தமது அறிக்கையில், “... அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்கள் 72 மற்றும் 161 ஆகியவற்றின் கீழ் மரண தண்டனையை ரத்து செய்வதற்காக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அரசாங்க ஆணைகளோ, அரசுகள் இயற்றும் சட்டங்களோ கட்டுப்படுத்த முடியாது என உச்சநீதி மன்றம் 2003ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில் தெளிவுப்படுத்தியிருக்கிறது. (supreme court in State Govt. of NCT, Delhi V.Premraj 2003 (7) SCC 121)  1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பில் (State Punjab V.Joginder Sting,1990 (2) SCC 661) சட்டத்தினால் கூட இந்த அதிகாரத்தைத் தடுக்க முடியாது எனக் கூறப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகள் மட்டுமின்றி இந்தியச் சட்டத்தின் பிரிவு 54 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 433 ஆகியவைகூட மரண தண்டனையைக் குறைக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கியுள்ளது... என்று தெளிவுபடுத்தினார்.

  மேலும்  மங்கல்வாடியில் செங்கொடியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுச் செய்தியாளர்களிடையே பேசும்போது 8ந்தேதி வேலூர்ச் சிறையை முற்றுகையிடும் போராட்டத்தை உறுதி செய்தார்.

  மறுநாள் 30.8.2011 அன்று கூடிய சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, “மூவரின் கருணை மனுக்களைப் பரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில்... என்றார்.  முதல் நாள் கூறிய அதே கருத்தை மறுநாள் வேறுவிதமாக, குழப்பமாக படித்து முடித்துக்கொண்டார் முதல்வர்.

  அதே 30.8.2011 அன்றுதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை தொடர்பான வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜரானார். இதற்கான ஒழுங்குகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் செய்தார். தீர்ப்பு தமிழர்களுக்குச் சாதகமாக வந்தது. 8 வார காலத்திற்குத் தூக்குத் தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. “நீதியரசர்கள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோருக்கு நன்றி,  “வைகோவுக்கு நன்றி, “வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு நன்றி என்று நீதிமன்றத்தில் தமிழ் உணர்வாளர்கள் உணர்ச்சியில் முழக்கமிட்டனர்.

  வழக்கு 8 வார தடையாணை காலத்திற்குப் பின்னர் நீதிமன்றத்துக்கு வரும். அதனை எதிர்கொள்ள வழக்கறிஞர்கள் தற்போது ஆயத்தமாகி வருகிறார்கள்.

  இந்நிலையில் நமக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எழுகின்ற நியாயமான கேள்வி, மூவருக்குமான தூக்குத் தண்டனை 8 வார காலத்திற்குத் தள்ளிப் போனது உயர் நீதிமன்றத் தடையாணையாலா? ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானத்தாலா? எந்தக் குழப்பமும் தேவை இல்லை. திரு. வைகோ அவர்களின் முன் முயற்சியால் எடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கையால்தான் என்று அரசியல் தெரியாதவர்கள் கூடக் கூறுவார்கள்.

  ஆனால், எனது அண்ணன் சீமான் அவர்கள் தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்து  ‘நாம் தமிழரோடு’ நடை பயணம் போனார்.. இல்லை போக முற்பட்டார்.

  கடந்த 6.9.2011 அன்று வேலூர் கோட்டை மைதானத்திலிருந்து சென்னையை நோக்கி நடைபயணம் என்று அண்ணன் சீமான் அறிவித்தார். இதில் காமெடி என்னவென்றால், ‘நாம் தமிழர்’ சுவரொட்டிகளில் “தாயுள்ளத்தோடு தமிழர்களின் உயிர்காக்கத் தீர்மானம் இயற்றிய மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்து நடைபயணம்’  என்று குறிப்பிட்டிருந்ததுதான்.


  
அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் போலவே, அல்லது ஹிட்லரின் கோயபல்ஸ் போலவே நமது அண்ணன் சீமான் அவர்கள் தவறான பிரச்சாரத்தை தமிழின உணர்வாளர்களிடம் திட்டமிட்டுப் பரப்ப முனைகிறார் என்பதுதான் எமது வருத்தம்.

  29.8.2011, 30.8.2011 ஆகிய இரு நாள் தீர்மானங்களையும் படித்தவர்களுக்கு நன்றாகப் புரியும், இரண்டுமே ஒரே தீர்மானம்தான்; வார்த்தைகள்தான் மாற்றம். அதாவது, 30ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மீண்டும் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைக்கும் தீர்மானமாகத்தான் நிறைவேற்றியுள்ளாரே தவிர, அய்யா நல்லகண்ணு அவர்கள் சொன்னது போல, சி.ஏ.பாலன் வழக்கில் கேரள அரசு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலனின் தூக்குத் தண்டனையைக் குறைத்தது போல ஜெயலலிதா அவர்கள் செய்யவில்லை.

  இதற்காகவா இவ்வளவு பாராட்டுகள்.. நடை பயணங்கள்! நன்றி தெரிவிக்க விருப்பப்பட்டால் வழக்கறிஞர்கள் ராம்ஜெத்மலானி, ‘தடா சந்திரசேகர் மற்றும் வைகோ, நீதியரசர்கள் நாகப்பன், சத்தியநாராயணன் ஆகியோருக்குத் தானே நன்றி தெரிவித்து நடைபயணம் போக வேண்டும்.

  இதில் ஜெயலலிதா என்ன செய்து விட்டார்? தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை என்று ஜெயலலிதாவுக்கே நன்றாகத் தெரியும். இல்லையென்றால், எதற்கெடுத்தாலும் மத்திய அரசைச் சாடும் ஜெயலலிதா, ‘தமிழகச் சட்டமன்றத் தீர்மானம் எங்களைக் கட்டுப்படுத்தாது! என்று மத்திய சட்ட அமைச்சர் தெரிவித்த பின்னரும் அமைதி காப்பாரா?

  அண்ணன் சீமான் முதல்நாள் புதுச்சேரியில் பேசும்போது, “இவ்வளவு போராட்டங்களை மக்கள் நடத்துகிறார்கள். கருணாநிதி ஆட்சியாக இருந்தால் உடனடியாக தடை விதித்திருப்பார்! அம்மா ஆட்சியில் எந்தத் தடையும் இல்லை; ஈழத்தமிழர்கள் மீது உண்மையான அக்கறையுள்ள ஈழத் தாய்” என்று பேசினார். மறுநாள் நடைபயணம் தடை செய்யப்பட்டு அண்ணன் சீமான் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைதானவுடன் அண்ணன் சீமான் இப்படி சொல்கிறார்: “சட்டம் ஒழுங்கு சீர்கெடும் எனக் கூறி கைது செய்துள்ளனர். சட்டத்துக்கு கட்டுப் பட்டு கைதாகிறோம்” என்றார்.

  இதுமட்டுமல்ல தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தூக்குத் தண்டனைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும்போது, ‘நாம் தமிழர்’ சார்பில் எந்தவித ஆர்ப்பாட்டங்களையும் நடத்தாமல் பொதுக்கூட்டங்களை மட்டுமே நடத்தினார்கள். ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று அம்மா கோபித்துக்கொள்வார் என்பதாலா?

  இன்னும் நம் தோழர்கள் தூக்குத் தண்டனையிலிருந்து விடுதலையே ஆகவில்லை. அதற்குள்ளாக விடுதலை ஆனது போல நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டங்களும், நடை பயணங்களும் மேற்கொண்டால் அடுத்த கட்டப் போராட்டங்களை எப்படி நடத்துவது? மக்களை எப்படி உசுப்புவது? இது தவறான முன்னுதாரணமாகாதா? செய்யாத வேலைக்கு ‘சர்டிபிகேட்’ தருவது நியாயம்தானா?

  தமிழ் மக்கள் எழுச்சியும் செங்கொடியின் தியாகமும்தான் நீதிமன்றத்தில் 8 வார காலத் தடை வாங்குவதற்குக் காரணமாக அமைந்தனவே தவிர, சட்டப் பேரவை தீர்மானம் அல்ல.  ஆனால், அண்ணன் சீமான் திசை திருப்புவது ஏனோ? யார் மீதோ இருக்கிற கோபத்தில் மேலும் மேலும் தமிழர்களுக்கு தவறான ‘தலைமையை அடையாளம் காட்டுவதை வரலாறு மன்னிக்காது.

  தமிழர்களே முதல் பத்தியை இப்போது திரும்பப் படியுங்கள். எவ்வளவு காலத்திற்குத்தான் தமிழர்கள் ‘உமி’ யை மட்டுமே சாப்பிடப் போகிறோமோ தெரியவில்லை.

1 comments:

SENTHIL said...

வணக்கம் அண்ணா,மிக அருமையான கட்டுரை.10 தேதி எம்.ஜி.ஆர் நகர் கூட்டத்தில் அண்ணன் சீமான் அவர்கள் பேசும்போது சொல்கிறார் " ராஜபக்சே போர் குற்றவாளி என்று நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் டி.ராஜாவும்,ஆ.தி.மு.க மைத்ரையனும்,தி.மு.க திருச்சி சிவாவும் பேசுவதற்கு அனுமதி கோரியிருந்தார்கள் அதை முடக்கவே மூன்று பேர் தூக்கு தண்டனையை உறுதி செய்து திசை திருப்பியது காங்கிரஸ் அரசு "அவருக்கு திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதே மறந்து விட்டதோ.நிச்சயமாக சொல்கிறேன் இது மறதி இல்லை என்பதை காலம் சொல்லும்.எல்லா காலமும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது.

Post a Comment