13 September 2011

பேய் அரசாண்டால்...


இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் அரச பயங்கரவாதம் காக்கிச் சட்டை வடிவத்தில் தலித்துகளைக் கொன்று குவிக்குமோ என்று தெரியவில்லை?

ஜெயலலிதா அம்மையார் அரியணைக்கு வந்ததும் வராததுமாய் தலித்துகளின் இரத்தத்தை தமிழகத்தின் வீதிகளில் தெளித்திருக்கிறார். 

மாவீரன் இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளான செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து காலை முதலே எழுச்சிகரமான உணர்ச்சிகளுடன் பரமக்குடியை நோக்கி ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் வாகனங்களில் அணிவகுக்க ஆரம்பித்தனர்.  தம்மைத் தலைநிமிர வைத்த அத்தலைவனின் நினைவுநாளில் அஞ்சலி செலுத்தத்தான் எவ்வளவு ஆர்வத்துடனான கடமை!  மக்கள் திரள் கட்டுக்கடங்காமல் போனது. 


திடீரென தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கைது என்கிற செய்தி அறிந்த இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அந்த ஒற்றைக் காரணத்திற்காகக் காத்திருந்ததுபோல போலிசுக் கும்பல் தலித்துகளைக் குறிபார்த்துச் சுட ஆரம்பித்தது.  7 பேர் கொல்லப்பட்டனர்.  பலர் படுகாயம் அடைந்தனர்.  அப்பாவி மக்கள் சிதறி ஓட ஓட அடித்து விரட்டப்பட்டனர். 

இது  குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, முத்துராமலிங்கத் தேவர் குறித்து தவறாக விளம்பரங்களில் எழுதியதால்தான் மண்டலமாணிக்கம் பழனிக்குமார் கொல்லப்பட்டதாகவும் அங்கு ஜான் பாண்டியன் செல்ல முயன்றதால்தான் கைது செய்ய நேர்ந்தது என்றும் கூறிவிட்டு, காவல்துறையினர் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாகிவிட்டது என்றும் தெரிவித்து, தலித் மக்களைச் சுட்டுக்கொன்ற போலிசு ரவுடிகளுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.  இந்த வக்காலத்துப் போதாது என்று விஜயகாந்த் கட்சியிலுள்ள சகுனி பண்ருட்டி இராமச்சந்திரன்கூட இப்படுகொலைக்கு நீதி விசாரணை தேவையில்லையென்று உளறியுள்ளார்.   (அவருக்கு இன்னும் அம்மா பாசம் போகவில்லைபோலும்!).  காவல்துறை கொடுத்த அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அப்படியே வாந்தி எடுத்துள்ளார்.  பால் மணம் மாறாத பள்ளிச்சிறுவன் பழனிக்குமார் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றித் தவறாக விளம்பரம் எழுதியதுதானாம். அம்மையாரே சட்டப்பேரவையில் அறிவித்து விட்டார்.  எவ்வளவு பெரிய பொய்யை இரு சமூகங்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்தும் முகமாக முதல்வரே சட்டப்பேரவையில் தெரிவித்திருப்பது எந்தவிதத்தில் சரியாகும்?  செப்டம்பர் 11 இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியாதா?  அந்த நாளில் ஏன் ஜான்பாண்டியனைக் கைது செய்ய வேண்டும்?  முதல் நாள் நடந்த படுகொலையின்போதே போதிய போலிசுப் பாதுகாப்பை அதிகரிக்காதது ஏன்?... இப்படிப் பல கேள்விகள் பச்சைப் படுகொலைகளுக்குப் பின்னால் எழுகின்றன. 

இது  மட்டுமல்லாமல், 2008ஆம் ஆண்டு வின்சென்ட், 2009ஆம் ஆண்டு இளவரசன், 2010 அரிகிருஷ்ணன் என ஒவ்வோர் ஆண்டும் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு முதல் நாள் செப்டம்பர் 10ஆம் தேதி ஒரு தலித் தோழர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.  அதன் தொடர்ச்சியாக 2011ஆம் ஆண்டு மண்டலமாணிக்கம் பழனிக்குமார் படுகொலையும் நடந்தேறியுள்ளது.

1956ஆம்  ஆண்டு செப்டம்பர் 11 அன்று வெட்டிக்கொல்லப்பட்ட மாவீரன் இம்மானுவேல் சேகரனின் இரத்தம் இன்று பழனிக்குமார் உடம்பிலிருந்தும் வழிகிறது.  அன்று முத்துராமலிங்கத் தேவரிலிருந்து தொடங்கிய சாதி வெறி இன்றைக்கு ஜெயலலிதா வடிவத்திலும் தலைவிரித்தாடுகிறது. தலித்துகளின் இத்தொடர் படுகொலைகள் குறித்து ஜெயலலிதாதான் இப்படியென்றால், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் கலைஞர் கருணாநிதிகூட, 'பாம்பும் சாகாமல் பிரம்பும் ஒடியாமல்' அறிக்கை கொடுத்துவிட்டு சாய்வு நாற்காலியில் கவனமாகப் போய்க்கொண்டிருக்கிறார்.  தமிழ்த் தேசியவாதிகளாகக் காட்டிக்கொள்கிறவர்கள் இது குறித்து வாயே திறக்கவில்லை.  வாய் திறந்தால் தலித்துகள் வாயில் சாதிவெறியர்கள் மலத்தைத் திணித்ததுபோல, மூத்திரத்தை அடித்தது போல தம் மீதும் திணித்து விடுவார்களோ என்று அச்சப்பட்டுக்கொண்டு, தெருக்களில் தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியத் தளத்திலும், சாதிஒழிப்புக் களத்திலும் வீரியமுடன் களமாடிக் கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே 16.9.2011 அன்று சென்னையிலும், 20.9.2011 அன்று மதுரையிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.  அது மட்டுமல்லாமல் இந்தப் படுகொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், இல்லையேல் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

7 தலித்துகள் பட்டப்பகலில் பெரும் மக்கள் திரளின் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்... அதுவும் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறையினரால்!

திராவிட ஆட்சியாளர்களின் தலித் விரோதப் போக்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.  என்ன செய்ய?  பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதுபோல் ஜெயலலிதாவின் அரசு வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டது. 

தலித்துகள் இதிலிருந்து படிப்பினை கொள்ளவேண்டும்.

1 comments:

Wayang Kulit Malaysia said...

சாதி ஒழிய வேண்டும் என்றால் சாதி சங்கங்களை முதலில் மூட வேண்டும். உங்கள் சாதி சங்கங்கள்தான் மேலும் மக்களை தூண்டி விடுகின்றன.

Post a Comment