26 September 2011

மூளை இல்லாதோர் அணுகவேண்டிய முகவரி: தோழர் தா.பாண்டியன்


Photo : http://www.flickr.com/photos/bhagathk

"ஆட்டுக்கும் நாலு காலு மாட்டுக்கும் நாலு காலுன்னு பெரிய பெரிய தத்துவமெல்லாம் சொல்லுவீங்களே! உங்களுக்கே இந்த நிலைமையா?" - நடிகர் ஜனகராஜ் ஒரு திரைப்படம் முழுக்கப் பேசி வரும் வசனம் இது.

இந்தக் காமெடி போல தமிழக அரசியலிலும் பெரிய பெரிய தத்துவங்களை அவ்வப்போது அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார் மூத்த அரசியல்வாதி தா.பாண்டியன் அவர்கள்.  சொந்த மூளையைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தும் அடுத்தவர் மூளையைப் பயன்படுத்துவதில்லை என்ற பெரிய தத்துவத்தைச் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை ஒன்றிணைந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் 24-9-2011 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விடுத்த வேண்டுகோளுக்கு பதில் சொல்லிவிட்டாராம் தா. பாண்டியன் அவர்கள்!

அய்யோ! அய்யோ! சூரியன் ஏன் பகல்ல உதிக்கிதுன்னு கேட்ட கேள்விக்கு, எனக்குத் தெரியாது நான் வெளியூருன்னு சொன்ன ஒரு மனநோயாளியைப் போல் தா.பாண்டியன் அவர்கள் 'சொந்த மூளை'த் தத்துவத்தைச் சொல்லியிருக்கிறார்.  தமிழகச் சூழலில் தமிழர்களின் வாக்குகளை நம்பி அரசியல் நடத்தும் தா.பாண்டியன் அவர்களின் மூளை மட்டும் ஏனோ தில்லி பொலிட் பீரோவிடம் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.  சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த லெனின், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் மூளையை வைத்து தமிழகத்தில் அரசியல் வியாபாரம் செய்யும் தா.பாண்டியன் அவர்களுக்கு 'அடங்க மறு! அத்துமீறு!' என்கிற முழக்கத்துக்குப் பின்னுள்ள அரசியலையும் காலங்காலமாய் ஒடுக்கப்படும் மக்களின் கோபத்தையும், ஞாயத்தையும் புரிந்துகொள்ள முடியாதுதான்.  ஒடுக்கப்பட்ட மக்களின் தேவையாய் உருவாகியுள்ள தலைவர் திருமாவளவன் அவர்களின் தலித் அரசியலைப் புரிந்துகொள்ள, ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் மாநில ஏஜெண்டாக நியமிக்கப்பட்டுள்ள தா.பாண்டியன் அவர்களின் ரஷ்ய மூளை பயன்படாதுதான். 

கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்று 14 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்திய அம்மக்களின் உணர்வுகளை மதிக்காமல், அந்த உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஜெயலலிதா என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருந்ததா தா.பாண்டியன் அவர்களின் சொந்த மூளை?  ரஷ்ய அணுஉலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் மக்களின் போராட்டத்துக்கு ரஷ்யாவிடம் அனுமதி கேட்டுவிட்டுக் கருத்துச் சொல்லலாமா என்று காத்திருந்ததா தா. பாண்டியன் அவர்களின் சொந்த மூளை?

21-8-2011 அன்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழு விஞ்ஞானி சுப. உதயகுமார் தலைமையில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து, போராட்டம் முடிவுக்கு வந்தபின், மக்களின் அச்சம் போக்கும்வரை அணுஉலையை இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்கிற ஜெயலலிதாவின் அதே அறிக்கையை  பெயரை மட்டும் மாற்றித் தமது அறிக்கையாக வெளியிட்ட தா.பாண்டியன் அவர்களின் சொந்த மூளையைத்தான் என்னவென்று சொல்வது!

பரமக்குடியில் 7 தலித்துகள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் போராட்டக் களத்தில் நின்றபோது தா.பாண்டியன் அவர்கள் மட்டும் பரமக்குடியில் அரசபயங்கரவாதத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லச் செல்லாமல் ஜெயலலிதா அழைப்புக்காக சென்னையிலேயே காத்திருந்தாரே அந்த மூளை கெட்ட செயலை என்னவென்று சொல்வது?

ரஷ்யாவுக்குச் சென்று லெனின் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் தா.பாண்டியன் அவர்கள், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த 7 தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் ஜெயலலிதா போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டபோது பரமக்குடிக்குச் சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவிடாமல் தடுத்தது எந்த மூளை?

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியபிறகும் கூட்டணிக்காக போயஸ் தோட்டத்து வாசலிலும், எந்த தத்துவார்த்தக் கொள்கையும் இல்லாமல் 50 வயது வரை நடிகைகளைக் கட்டிப்பிடித்தும், தொப்புளில் பம்பரம் விட்டும் ஆடிக்கொண்டிருக்கும் 'கேப்டன்' அலுவலகத்தின் வாசலிலும் கையேந்தி நிற்கும் தா.பாண்டியனின் கம்யூனிச சுயமரியாதை மூளையை என்னவென்று சொல்வது?

தமிழகத்தில் மூத்த தலைவர் அய்யா நல்லக்கண்ணு அவர்களின் செயல்பாட்டால் ஓரளவுக்கு மதிக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொஞ்ச நஞ்ச மதிப்பையும் மரியாதையையும் குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கும் தா.பாண்டியன் அவர்களுக்கு போயஸ் தோட்டத்து பூர்ஷ்வா முனி பிடித்து விட்டது.  சசிகலா போன்ற பூசாரிகள் மூலம் ஏதாவது நல்லது நடக்கும் என்று இன்னமும் நம்பும் இவரது சொந்த மூளையின் சிந்தனை அபாரம் அற்புதம்தான். 

சொந்த மூளை இல்லாதவர்கள் அணுக வேண்டிய முகவரி தா.பாண்டியன், பா./பெ. ஜெயலலிதா, போயஸ் தோட்டம், சென்னை. (அல்லது) பா./பெ. கேப்டன், கோயம்பேடு, சென்னை.

குறிப்பு: 1) முகவரி மாற்றும் எல்லா உரிமைகளும் சொந்த மூளைக்கே உரியது.  2) புரட்சித்தலைவி வாழ்க என்கிற உசிலம்பட்டி, செக்காணு£ரணிக்காரர்களுக்கு முன்னுரிமை தரப்படும். 

***

1 comments:

ரத்ன.செந்தில் குமார் said...

அண்ணா இந்த கட்டுரையிலேயே ரொம்ப சூப்பர் எதுனா ????........................தாசில்தாரோட போடோதான்.கலக்கிடிங்க போங்க.

Post a Comment