02 November 2011

முருகதாசின் ஏழாம் அறிவில் ஓர் அறிவு "மிஸ்ஸிங்'

""என்னுடைய "தாய்மண்' என்கிற கதையை மட்டும் திரைப்படமாக எடுத்திருந்தால் ஈழமே விடுதலை அடைந்திருக்கும்'' என்றுபுலம்பெயர்ந்த தமிழர்களிடமெல்லாம் நாக்கைத் தொங்கப் போட்டு அலைவதைப் போலச் சொல்லித் திரியும், தங்கர்பச்சானாக இருக்கட்டும்...

""ஈழ விடுதலை அரசியலைப் பரப்புவதற்காக கட்சி ஆரம்பிக்கச் சொன்னவரே அண்ணன் பிரபாகரன்தான்'' என்று மேடைதோறும் முழங்கித் திரியும் "புரட்சித் தலைவியின் அன்புத் தம்பி' சீமானாக இருக்கட்டும்...

""என் இனிய தமிழ் மக்களே'' என்று கைகூப்பி, ஈழத் தமிழர்களுக்காக உணர்ச்சி வசப்பட்டு முக்குலத்து மக்களின் அப்பனும், ஆத்தாளும் என்று சொந்த சாதிக்குள் முடங்கிப்போன பாரதிராஜாவாக இருக்கட்டும்...

""யாராவது தீக்குளித்து வீரமரணம் அடைந்தால் அந்த எழவு வீட்டில் அரசியல் செய்யும் இயக்குனர்கள் சேரன், ராம் போன்றவர்களாக இருக்கட்டும்...

... இவர்கள் அனைவரும் தங்கள் படைப்புகளில் ஈழ விடுதலை அரசியல் இல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகளின் அந்த உன்னத அரசியலை, கலை, இலக்கியம், சினிமா ஆகியவற்றின் மூலம் பரப்புரை செய்ய முடியாத அல்லது துணிச்சலற்ற, இந்தப் புலித்தோல் போர்த்திய நடிகர் திலகங்கள் செய்ய முன்வராத ஒரு படைப்பிலக்கியத்தை உலகத் தமிழருக்குத் தந்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.

"ஏழாம் அறிவு' என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழர்களின் விடுதலை அரசியலை துணிச்சலாகச் சொல்லியிருக்கும் இயக்குனர் முருகதாஸ் பாராட்டுக்குரியவர்தான். பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு, நேர்த்தியான திரைக்கதை ஊடாக, போதிதர்மன் வழியாக தமிழனின் வீரத்தையும், அவனது நுட்பமான சண்டைப் பயிற்சியையும் தோண்டி எடுத்திருக்கிறார் இயக்குனர். வன்னி மண்ணை ஆண்ட எல்லாள மன்னனின் வரலாற்றைப் புதுப்பிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் எல்லாளன் என்கிற பெயரை வைத்துத் தாக்குதல் நடவடிக்கை நடத்தியது மட்டுமல்லாமல், திரைப்படத்தையும் எடுத்ததன் முக்கியத்துவத்தை போதிதர்மனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

தமிழனுக்கென்று ஒரு நாட்டை அமைக்கப் போராடிய விடுதலைப் புலிகளை ஒழிக்க இந்தியா மட்டுமல்ல, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, கியூபா, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இலங்கை இனவெறி இராணுவத்தோடு சேர்ந்து நடத்திய யுத்தத்தை, ""அது யுத்தம் அல்ல, துரோகம்'' என்று துணிச்சலாக இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியிருக்கும் இடத்தில் திரையரங்கம் கரவொலிகளை இயக்குனருக்கு வழங்கியுள்ளது. ""மலேசியாவில் தமிழனை அடித்தார்கள், இலங்கையில் அடித்தார்கள், இப்போது தமிழ்நாட்டுக்குள்ளேயே அடிக்கிறார்கள்'' என்கிற வசனம் தமிழீழ மண்ணுக்குள் வந்து சீனர்கள் தற்போது தமிழர்களை அடித்து அடிமைப்படுத்தும் கொடுமைகளை நினைவுபடுத்துகிறது. இப்படி தமிழர்களை அடித்தொழித்த சீனக் கொடுங்கோலர்களை ஒவ்வொரு தமிழனும் அடித்துத் துவசம் செய்ய வேண்டும் என்கிற ஆத்திரத்தை வெளிப்படுத்தும் முகமாக ஒட்டுமொத்தத் தமிழர்களின் சார்பில் இயக்குனர் முருகதாஸ் மிக விவேகமாக சீன வில்லனை அடித்து நொறுக்கியிருக்கிறார் தனது ஏழாம் அறிவு மூலம்.

6ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை ஆண்ட பவுத்த மன்னனான போதி தர்மன் சீனாவுக்குச் சென்று சீனர்களுக்கு குங்பூ, வர்மம், நோக்கு போன்ற நுட்பமான சண்டைக் கலைகளை கற்றுக்கொடுத்து சீனர்களாலேயே நஞ்சு கொடுத்துக் கொல்லப்படுகிறார். அந்தக் கலைகளை கற்றுக்கொண்ட சீனன் ஒருவன் தமிழ்நாட்டுக்குள் வந்து இந்தியாவுக்கு எதிரான "பயோ வார்' நடத்தத் தயாராகிறான். அவனை போதி தர்மனுடைய பரம்பரையைச் சேர்ந்த ஒரு தமிழன் வீழ்த்துவதுதான் கதை.

போதி தர்மன் என்கிற தமிழானால்தான் சிறந்த மருத்துவமும் வர்மக் கலைகளும் உலகமெங்கும் பரவியது என்பதை தமிழர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளார் இயக்குனர். சென் பவுத்தம் என்கிற பவுத்தத்தைப் பரப்பிய போதி தர்மனுடைய வீரம் தமிழர்களுடையது என்கிற போது தமிழர்களுடைய தற்போதைய சூடு, சுரணையை கொஞ்சம் உரசிப் பார்ப்பதுபோல்தான் இருக்கிறது. தூக்கடு, ஒக்கடு போன்ற வெற்றி பெற்ற தெலுங்குப் படங்களை தமிழ்ப் படமாக்கி, நடித்து கல்லா கட்டும் இளைய தளபதி போன்ற கோமாளிகள் இப்படத்தைப் பார்த்தாவது திருந்துவது நல்லது.

ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடுகிற வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கேள்விகள் எழுப்பக்கூடிய பல இடங்கள் இருந்தாலும் இத்தகைய புதிய முயற்சிக்காகவாவது அந்தக் கேள்விகளை நாம் விட்டுவிட்டாலும், தமிழனின் வீரஞ்செறிந்த வரலாற்றைத் தோண்டியயடுத்து தமிழர்களைத் தலைநிமிர வைக்க முயற்சிக்கும் இயக்குனர் முருகதாஸ், இடஒதுக்கீடு தொடர்பான வரலாற்றைக்கூட சரியாக அறிந்திருக்கவில்லை என்பதில் நமக்கு வருத்தமே. ஆராய்ச்சி மாணவியான அந்தக் கதாநாயகி தனது ஆராய்ச்சி குறித்து பேசும்போது, தமிழை இழிவுபடுத்தும் பேராசிரியர்களிடம் கோபப்பட்டு ""ரிசர்வே­ன், ரெக்கமண்டேசன், கரப்­ன்' இருப்பதால்தான் திறமை இருப்பவர்கள் வெளிநாட்டில் போய் பிழைக்கிறார்கள்'' என்று பேசுவது இயக்குநரின் இந்துத்துவக் கொள்கையை அம்பலப்படுத்துகிறது.

இப்போது ஊழலுக்கு எதிராகப் படமெடுத்தால் ஓடும் என்று சினிமாக்காரர்கள் எல்லோரும் அன்னா அசாரே ஆகிக்கொண்டிருக்கிறார்கள். ஊழலில் சம்பாதித்து பலகோடி கருப்புப் பணத்தை வைத்து திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் திரையுலகிலிருந்து கொண்டு ஊழலுக்கு எதிராக முருகதாஸ் பேசுவது வேடிக்கைதான்.

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற அறிவாற்றல் மிக்க தலைவர்களால் போராடிக் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமை. இதனை ஏதோ சலுகை போன்று சினிமாக்காரர்கள் புரிந்துகொண்டு வசனம் பேசுவது, அதுவும் பெரியார் மண்ணிலிருந்து பேசுவது சமூகநீதிக்கே ஆபத்தானது. இடஒதுக்கீடு தொடர்பான நிறைய நூல்கள் இருக்கின்றன. சிறந்த படைப்பாளியான முருகதாஸ் அவற்றை ஒருமுறை படித்துப் பார்த்தால், தமிழர்களின் கடந்தகால ஆரியத்துக்கெதிரான போராட்ட வரலாற்றை அவர் புரிந்துகொள்வார். ஏனென்றால், வித்தியாசமான கருத்தைச் சொல்லுகிறோம் என்கிற போர்வையில் திட்டமிட்டே பார்ப்பன அரசியலைப் பரப்பும் ­சங்கர், தமது ஜெண்டில்மேன் படத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக பகிரங்கமாக வி­சமப் பிரச்சாரம் செய்ததை, முருகதாசும் தொடர்கிறாரோ என்கிற எண்ணம் நமக்கு வருகிறது.

நடிகர் விஜயகாந்த் கூட உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின்போது பொதுத் தொகுதி தனித்தொகுதி என்று ஏன் பிரிக்க வேண்டும். எல்லாமே பொதுத் தொகுதிகளாக இருக்க வேண்டியதுதானே என்ற "வித்தியாசமான' கருத்தை முன்வைத்தார். தனித் தொகுதி என்று ஒன்று இருப்பதால்தான் தலித்துகளுக்குத் தொகுதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்ற தலித் விரோத காழ்ப்புணர்ச்சியால்தான் அப்படியயாரு நஞ்சை விஜயகாந்த் கக்கியிருக்கிறார். திரு. முருகதாசுக்கு அப்படியயாரு உள்நோக்கம் எதுவும் இருக்க முடியாது என்று நம்புவோம். ஏனென்றால் விஜயகாந்த் வகையறா போலல்லாம், முருகதாஸ் ஒரு பச்சைத் தமிழர்.

முருகதாசின் ஏழு அறிவுகளில் இடஒதுக்கீடு குறித்த ஓர் அறிவு "மிஸ்ஸிங்'.

4 comments:

VANJOOR said...

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


.

LEMOORIYAN said...

சாதி உணர்வுகளால் நிரம்பிய ஒருவனின் சொந்த நல்ல குணங்கள் மட்டும் எப்படி அவனை நல்லவனாக்கிவிட முடியும்.....
புரட்சியளர் அம்பேத்கர்...
புரட்சியாளரின் போர்ப்படை தளபதியான தோழர் வன்னி அரசு இந்த படத்தை பட்டும் படாமல் தொட்டும் தோடாமல் விமர்சிப்பது... மேலும்... இதில் ஒரு அறிவு மட்டுமே மிஸ்ஸிங் என்பது மிகவும் கேலிக்குறியதாய் உள்ளது...
தோழர் இந்த விமர்சனத்தை தமிழ் நாட்டில் இருந்து எழுதி இருக்க வாய்ப்பில்லை... வன்னிக் காட்டில் இருந்தான் எழுதி இருக்க வேண்டும்....
ஏழாம் அறிவில் ஏழு அறிவும் மிஸ்ஸிங்.. அண்ணல் அம்பேத்கரின் கூற்றுப்படி.....
சாதியத் தினவில் இட ஒதுக்கீடை கொச்சை படுத்தும் ஒரு படம் தமிழன் என்ற சொல்லுவதால் மட்டும் எப்படி நல்ல முயற்சி தைரியமான முயற்சியாக இருக்க முடியும் சிறுத்தையே!!!!

உங்கள் தோழன்.. வேந்தன் said...

இந்த விமர்சனத்திலே ஒரு அறிவு மட்டும் மிஸ்ஸிங். அது தான் அம்பேத்கரிய பார்வை. அந்த கண்ணோட்டத்தில் படத்தில் அணுகியிருந்தால் படத்தைப்பற்றி பாராட்டி எழுத முடியாது. சாதியை மழுப்பும் தமிழ்தேசிய கண்ணோட்டத்தில் எழுப்படும் விமர்சனமாகத்தான் உள்ளது. ”படம் முழுதும் நல்லாதான் இருக்கு இடஒதுக்கீடு மட்டும் மிஸ்ஸிங்”. என்ற பாராட்டை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அதுவும் தலித் அரசியலில் இருப்பவர் இப்படி எழுதியிருப்பது ஆச்சரியமாக உள்ளது.

Selva said...

நேர்மையான பதிவு தோழர்.. ஆனால் சேரன், ராம், என்று சரமாரியாக வைதுவிட்டீர்களே.. அவர்களும் நமது களத்துக்கு தேவை தானே தோழர்.. அவர்கள் மற்றவர்கள் போல் இன்னும் தவறு செய்யவில்லையே.. :)

Post a Comment