29 January 2012

முத்துக்குமாரின் கேள்விகள் தொடருகின்றன2009ஆம் ஆண்டு சனவரி 29. இந்த நாளை உணர்வுள்ள தமிழர் எவரும் மறந்து விட முடியாது.  முத்துக்குமார் சாவடைந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  

'கரும்புலி முத்துக்குமார்' என்று தமிழர்களால் அழைக்கப்படும் அந்த மாவீரன் தன் உடலுக்கு நெருப்பு வைத்துக்கொண்டு, தமிழீழ விடுதலை நெருப்பை தமிழகமெங்கும் பற்ற வைத்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன.  3ஆம் ஆண்டு நினைவுநாள் நம் மனசாட்சியைப் பிடுங்கித் தின்றுகொண்டிருக்கிறது.  
இன்றைக்கும் அந்த சாஸ்திரி பவன் அலுவலகத்தைக் கடக்கும்போதும், மூலக்கொத்தளம் இடுகாட்டிற்குச் செல்லும்போதும் நெருப்பை அள்ளித் தின்ற அந்த முத்துக்குமாரின் நினைவுகள் நம்மை அப்படியே சுட்டெரிக்கின்றன. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சவக்கிடங்கில் அவனது உடலை கரிக்கட்டையாய் காட்சிக்கு வைத்திருந்தபோது தமிழர்களின் ஒட்டுமொத்த மௌனமும் கரிக்கட்டையாய் அங்கே கிடந்ததை உணரமுடிந்தது. முத்துக்குமாரின் ஈகச் சாவை, தமிழ்த் தீவிரவாதி என்று காவல்துறை திசை திருப்ப முயற்சிசெய்தபோது அந்த மருத்துவமனை வளாகமே தமிழ் உணர்வாளர்களால் கனன்றுகொண்டிருந்ததைக் கண்டுதான் காவல்துறை ஒதுங்கியது.  ஆட்டுவித்துக்கொண்டிருந்த அன்றைய கருணாநிதி அரசும் மௌனித்தது.  இளைஞர்களின் அதிவுயர் கோபம் கொளத்தூர் பகுதியை மட்டுமல்லாமல் சென்னையைத் திணறவைத்தது.  முத்துக்குமாரின் வித்துடல் கொளத்தூரிலிருந்து மூலக்கொத்தளம் இடுகாட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்டபோது எத்தனை எத்தனை தடைகள், எத்தனை எத்தனை முழக்கங்கள், எத்தனை எத்தனை இளைஞர்களின் முகங்கள்... நெருப்பே முழக்கமிட்டுப் போவதுபோன்ற உணர்ச்சிப் பிழம்புகள்.

26 January 2012

பழ.நெடுமாறன் அவர்களுக்கு பகிரங்கக் கடிதம்


படம் நன்றி : ஜீனியர்விகடன்
மேதகு பிரபாகரன் வழியா? அரசியல் புரோக்கர் நடராசன் வழியா?

தமிழ்த் தேசியப் பெருந்தலைவர் என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் மரியாதைக்குரிய அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு வணக்கம்.  நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்; விரும்புகிறேன்.
‘கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்க ரெண்டு கொடுமை அவுத்துப்போட்டு ஆடுச்சாம்’ என்ற கதையாக இந்துத்துவ-சாதியத்தை அடித்தளமாகக் கொண்ட இந்திய தேசிய கொள்கையிலிருந்தும் பார்ப்பனியக் கொள்கையிலிருந்தும் விடுபட்டு தமிழ்த்தேசியக் களத்திற்கு வந்தால் இங்கும் அதே கொடுமை தலைவிரித்தாடினால் என்ன செய்வதய்யா?  அந்தக் கொடுமைகளை உங்களைப் போன்றவர்களும் முன்னெடுத்துச் செல்வதைப் பொறுக்க முடியாமல்தான், சமூகத்தின் கடைக்கோடியிலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் விடுதலைச் சிறுத்தைகளில் ஒருவனாகவும் இருந்து தங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன்.
உங்களைப் புண்படுத்தும் நோக்கத்துடனோ, அல்லது திட்டமிட்ட அரசியல் நோக்கத்துடனோ இம்மடலை தங்களுக்கு எழுதவில்லை.  உங்களை, உங்களின் அரசியல் பயணத்தை மதிப்பவன் என்கிற உரிமையில் இந்த மடலை எழுதுகிறேன். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் உங்களால் பதில் சொல்லப்படுவதில்லை. ஒரே வார்த்தையில் அதை அவதூறு என்று சொல்லாமல் - மௌனமாக இருந்துவிட்டுச் செல்வீர்கள். முன்னர் எல்லா காலத்தையும் விட ஏராளமான இளைஞர்கள் இன்று தமிழ்த் தேசிய அரசியலில் ஈர்ப்பாகி அமைப்புகளுக்கு வருகிறார்கள். அவர்கள் இனியும் ஏமாறக்கூடாது என்பதாலேயே இதை எழுதுகிறேன்.

19 January 2012

தமிழகத்தில் நடப்பது சண்டிராணி ஜெயலலிதா அரசா? மலையாள வெறியன் உம்மன்சாண்டி அரசா?


அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  நஞ்சு கொடுத்துக் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  கழுத்தை நெறித்துக் கொலை செய்வதைப்  படித்திருப்போம். ஆனால் கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றிக் கொலை செய்யப்படுவதை இப்போதுதான் தமிழகம் கேள்விப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்தவர்  சாந்தவேல்.  மனைவி சித்ரா, பெண் குழந்தைகள் தட்சனா, சஞ்சனாவுடன் தானுண்டு, தனது பிளம்பர் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தார்.  ஒவ்வோர் ஆண்டும் சபரிமலை சென்று அய்யப்பனை வழிபடுவதையும் மற்றொரு முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார்.