29 January 2012

முத்துக்குமாரின் கேள்விகள் தொடருகின்றன



2009ஆம் ஆண்டு சனவரி 29. இந்த நாளை உணர்வுள்ள தமிழர் எவரும் மறந்து விட முடியாது.  முத்துக்குமார் சாவடைந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  

'கரும்புலி முத்துக்குமார்' என்று தமிழர்களால் அழைக்கப்படும் அந்த மாவீரன் தன் உடலுக்கு நெருப்பு வைத்துக்கொண்டு, தமிழீழ விடுதலை நெருப்பை தமிழகமெங்கும் பற்ற வைத்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன.  3ஆம் ஆண்டு நினைவுநாள் நம் மனசாட்சியைப் பிடுங்கித் தின்றுகொண்டிருக்கிறது.  
இன்றைக்கும் அந்த சாஸ்திரி பவன் அலுவலகத்தைக் கடக்கும்போதும், மூலக்கொத்தளம் இடுகாட்டிற்குச் செல்லும்போதும் நெருப்பை அள்ளித் தின்ற அந்த முத்துக்குமாரின் நினைவுகள் நம்மை அப்படியே சுட்டெரிக்கின்றன. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சவக்கிடங்கில் அவனது உடலை கரிக்கட்டையாய் காட்சிக்கு வைத்திருந்தபோது தமிழர்களின் ஒட்டுமொத்த மௌனமும் கரிக்கட்டையாய் அங்கே கிடந்ததை உணரமுடிந்தது. முத்துக்குமாரின் ஈகச் சாவை, தமிழ்த் தீவிரவாதி என்று காவல்துறை திசை திருப்ப முயற்சிசெய்தபோது அந்த மருத்துவமனை வளாகமே தமிழ் உணர்வாளர்களால் கனன்றுகொண்டிருந்ததைக் கண்டுதான் காவல்துறை ஒதுங்கியது.  ஆட்டுவித்துக்கொண்டிருந்த அன்றைய கருணாநிதி அரசும் மௌனித்தது.  இளைஞர்களின் அதிவுயர் கோபம் கொளத்தூர் பகுதியை மட்டுமல்லாமல் சென்னையைத் திணறவைத்தது.  முத்துக்குமாரின் வித்துடல் கொளத்தூரிலிருந்து மூலக்கொத்தளம் இடுகாட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்டபோது எத்தனை எத்தனை தடைகள், எத்தனை எத்தனை முழக்கங்கள், எத்தனை எத்தனை இளைஞர்களின் முகங்கள்... நெருப்பே முழக்கமிட்டுப் போவதுபோன்ற உணர்ச்சிப் பிழம்புகள்.
  

மூன்றாண்டுகள் சென்றதே தெரியவில்லை.  கோபமும் ஆதங்கமும் மறைந்துபோய் விரக்தியும் மனஉளைச்சலுமே இப்போது மிஞ்சிக்கிடக்கின்றன. போராடிய அனைவரையும் இந்த மூன்று ஆண்டுகளில் எங்கெங்கோ உருட்டிப் போட்டு விட்டன காலமும் பாழாப்போன அரசியலும்.  அனைத்துத் தலைவர்களும் அனைத்து இளைஞர்களும் ஒன்றுசேர்ந்து  மாவீரன் முத்துக்குமாரின் வித்துடலை எடுத்துப்போய் மீண்டும் ஒரு முறை எரித்ததோடு சரி. அந்த மாவீரனின் நினைவு நாள் ஒவ்வோர் ஆண்டும் தனித்தனியேதான்  நினைவுகூரப்படுகிறது. அந்த மாவீரனை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போது இவனா அப்படி என்று முணுமுணுக்கத் தோன்றுகிறது.

அவனை முதன்முதலில் இயக்குனர் செந்தூரன் அலுவலகத்தில் சந்தித்ததை நினைக்கும்போது இப்படிப்பட்ட இளைஞனா அவன் என்று நினைக்கத் தோன்றியது.  அவனும் அவனது பழைய மிதிவண்டியும் இப்போதும் தமிழ்மண் திடலுக்கு வந்து தமிழ்மண் இதழை வாங்கிச் செல்வதுபோலத்தான் உணருகிறேன்.  எமது தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடந்த சனவரி 14, 2009 அன்று சாகும்வரை உண்ணாநிலை இருந்தபோதும் அந்த மாவீரனுக்கு ஏற்பட்ட கோபமும் ஆவேசமும் இன்னமும் என் கண்முன் நிற்கின்றன.  மூன்றாண்டுகள் ஓடிவிட்டன.  தீக்கிரையாகிப் போனான்.  தமிழ்த்தேசிய விடுதலை அரசியலுக்கு உரமாகிப் போனான். தன்னை எரித்ததன் மூலம் இந்திய தேசிய அரசியலை எரித்து தமிழர் அரசியலை விதைக்கும் விதை நெல்லாய்ப் போனான். இப்போது படித்தாலும் அவனது மரண சாசனம் நம்மைச் சுட்டெரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவனது எந்தக் கோரிக்கையும் விருப்பமும் நிறைவேற்றப்படாமல் சாஸ்திரி பவன் வாசலிலேயே செத்துக்கிடக்கின்றன...
"வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும் சேட்டன் என்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது" என்று வேதனைப்பட்ட அந்த மாவீரனின் தமிழ்மண்ணில்தான் இன்றைக்கு முல்லைப்பெரியாறு அணைச் சிக்கல் விவசாயிகளின் போராட்டமாய், வெகுமக்களின் போராட்டமாய் தீவிரமடைந்து வருகிறது. சேட்டன்களின் தமிழர் விரோத அரசியலால் தமிழகம் கொதித்தெழுந்து வரும் சூழலில்தான் கடந்த 15-1-2012 அன்று சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் சென்ற திருவேற்காடு சாந்தவேலு சேட்டன் என்று அழைக்கப்படும் மலையாளிகளால் வெந்நீர் ஊற்றிக் கொல்லப்படுகிறார்.

தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவடைந்த முத்துக்குமார், சென்னை எழில்வளவன், அமரேசன், பள்ளபட்டி ரவி, உள்ளிட்ட கரும்புலிகளின் அனைவரின் இறுதி வணக்க நிகழ்ச்சிகளும் தமிழகத்தில் நடைபெற்றன.  தமிழர் விரோத அரசாக அன்றைக்குச் செயல்பட்ட கலைஞர் கருணாநிதி, இப்படியான இறுதி வணக்க நிகழ்ச்சிகளில் எந்தக் குளறுபடி வேலைகளையும் செய்யவில்லை.  ஆனால் இன்றைக்கு சாந்தவேலுவின் உடலை திருவேற்காட்டில் அரசே காவல்துறை மூலம் திருட்டுத்தனமாக எடுத்துச் சென்று எரித்துவிட்டு ஓடுகின்றனர். ஆட்சிக்கு வந்தால் ஈழமே பெற்றுத் தருவார் என்று தமிழகத்தில் பொய்யாகப் புனையப்பட்டு முதல்வராக்கப்பட்டுள்ள ஜெயலலிதா இன்றைக்கு எப்படிச் செயல்படுகிறார் என்பதற்கு, அவருக்கு முட்டுக்கொடுத்தவர்கள்தான், முட்டுக்கொடுக்கிறவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.  

மீண்டும் மீண்டும் அந்த மாவீரனின் மரண சாசனத்தைப் படிக்கும்போது தொடர்ந்து மன உளைச்சலாகிக்கொண்டுதான் இருக்கிறது.  
"தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது.  தம்முடைய சொந்தக் காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்குக் கோயில் கட்டி தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரையும் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான்.  முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன்" அந்த மாவீரனுக்கு முன்பே தெரிந்திருந்ததால்தான் முல்லைப் பெரியாறு உரிமையை நன்றிப் பெருக்கோடு எழுதியிருக்கிறான். ஆனால் அரசு தமிழர் நல அரசாகத்தான் அமையும் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து ஜெயலலிதாவை அரியணையில் ஏற்றினார்கள்.  ஆனால் ஆட்சிக்கு வந்ததும் வராததுமாய் சமச்சீர்க் கல்விக்குப் பாடை கட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.  சூத்திரன் கல்வியே கற்கக் கூடாது என்கிற மநுதர்மத்தின் வாரிசாக இருக்கும் ஜெயலலிதாவிடம் வேறு எதை எதிர்பார்ப்பது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு மூடுவிழா நடத்தியதாகட்டும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை தொடர்பான வழக்கில் எடுத்த 'பல்டி' முடிவாகட்டும், எல்லாமே தமிழர் விரோத முடிவுகளாகத்தான் எடுத்து ஜெயலலிதா  செயல்படுத்தி வருகிறார் என்பது வெளிப்படையான உண்மை.
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள்.  ஈழத்துத் தாய் என்றார்கள்.  வீர வேலுநாச்சியார் என்றார்கள்.  தமிழர் விரோத சக்திகளை இப்படியெல்லாம்கூட அடையாளம் காட்ட முடியும் என்பதை தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்துதான் முத்துக்குமார் வீரச்சாவடைந்தானோ என்னவோ தெரியவில்லை.  
இன்றைக்கு நினைத்தாலும் அந்த மாவீரனின் வீரமரணம் பிரமிக்க வைக்கிறது.  கண்கள் நீரை பனிக்கின்றன.  அவன் நல்ல முடிவை எடுத்தான்; தமிழர்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதற்காக.  ஆனால் பழைய முடிவையே எடுத்து 'மறுபடியும் மொதல்ல இருந்தா' என்கிற வடிவேலுவின் காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது தமிழக அரசியல். வீரச்சாவடைந்த மூன்றாண்டுகளில் எதையெதையோ கடந்து வந்துவிட்டோம். தொலைத்தும் வந்துவிட்டோம்.  இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்கள், அப்படியே பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் விடுதலைக்கான போராட்டமாக மடைமாற்றப்பட்டன. 

கூடங்குளம் அணுஉலைக்கெதிரான போராட்டம் தீவிரமாகிக்கொண்டிருக்கும்போதே முல்லைப்பெரியாறு உரிமைக்கான போராட்டம் திசைதிருப்பப்பட்டது. இப்படி தமிழர்களின் போராட்டங்களைக் கூட இந்திய இறையாண்மை திட்டமிட்டு நசுக்கவும், திசைதிருப்பவும் செய்து கொண்டிருக்கின்றன. இன்னும் எதையெதை நோக்கி தூக்கி வீசப்படப்போகிறோமே தெரியவில்லை.
ஆனாலும் அந்த மாவீரனின் மரண சாசனம் மீண்டும் மீண்டும் போராடத் தூண்டிக்கொண்டுதான் இருக்கிறது, தமிழர்களுக்கான அரசு அமையும் வரை. அப்படியென்றால் இப்போதுள்ள ஜெயலலிதா அரசு...? 
பழ. நெடுமாறன் உள்ளிட்ட பண்டித தமிழ்த் தேசியவாதிகளிடம் கேட்பதைவிட இராஜகுரு துக்ளக் சோவிடம் கேட்டால்தான் சரியாகச் சொல்வார்.
ஆனந்தவிகடன் கேள்வி: ஜெயலலிதா எப்போதுமே தமிழ்த் தேசியவாதிகள், ஈழத் தமிழ்ப் போராளிகள் ஆகியோருக்கு எதிராகவே இருந்திருக்கிறார்.  ஆனால் அவருடைய சமீபகால நடவடிக்கைகள் அப்படியில்லை.  இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சோ: தனித் தமிழ்நாடு வேண்டும் என்றோ, இலங்கை பிரிய வேண்டுமென்றோ விடுதலைப் புலிகள் சரி என்றோ, வன்முறை தீர்வு என்றோ அவர் கூறிவிடவில்லை. தமிழர்கள் நலன் முக்கியம் என்றுதான் பேசுகிறார். அவ்வளவுதானே.  இதில் என்ன நிலைப்பாடு மாற்றம் இருக்கிறது.  (ஆனந்தவிகடன் 1-2-2012) இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ஜெயலலிதாவுக்கு முட்டுக்கொடுத்த தமிழ்த் தேசியவாதிகள். 

எனது சாவை மேதகு பிரபாகரனிடத்திலும் அண்ணன் திருமாவளவனிடத்திலும் சொல்லுங்கள் என்று சாகிற தருவாயில் சொன்ன அந்த நெருப்புச் சொற்களையே எரிக்க முயற்சி செய்பவர்களின் மனசாட்சியை யார்தான் எழுப்ப முடியும்... முத்துக்குமாரைத் தவிர.

"விதியே விதியே தமிழ்ச் சாதியை என்ன செய்ய நினைத்தாயோ" என்கிற முத்துக்குமாரின் கேள்வி இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.  சாதியாய்ப் பிரிந்து கிடக்கும் வரை தமிழர் விதியை யார்தான் மாற்ற முடியும். சாதியத்தை  உள்வாங்கிக் கொண்ட தமிழ்த் தேசியத்தால் என்னதான் கிழித்துவிட முடியும்?  முத்துக்குமாரின் கேள்விகள் தொடருகின்றன.  நமது போராட்டமும் தொடரட்டும்.
- வன்னிஅரசு

1 comments:

Samaran Nagan said...

சாதியத்தை உள்வாங்கிக் கொண்ட தமிழ்த் தேசியத்தால் என்னதான் கிழித்துவிட முடியும்?

Post a Comment