22 July 2012

ஜக்கம்மா இது உனக்கே ஞாயமா?

"கீழ்ச் சாதிக்காரங்க சமைக்கிற சோத்தச் சாப்பிட்டா சாமிக் குத்தம் ஆயிடும். எங்க ஜக்கம்மாவுக்குக் கோவம் வந்து எங்களல்லாம் அழிச்சிடும்... அதனாலதான் இந்தச் சாப்பாட்டை எங்க பிள்ளைங்கள விடல"
- இப்படி ஒரு நவீன சாதிய வன்கொடுமை ஜக்கம்மாவின் பேரால் நடந்துகொண்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையிலிருக்கிறது கொத்தமங்கலம் கம்மப்பட்டி. கே.கம்மப்பட்டி என்று அழைக்கப்படும் அந்த ஊரில் இராஜகம்மளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கும் மேற்பட்ட மக்கள் நிலைகொண்டுள்ளனர். வானம் பார்த்த பூமியான அந்தக் கரிசல் பூமியில் விவசாயம்தான் அப்பகுதி மக்களுக்குத் தொழிலாய் இருந்தது. ஆனால் அப்பகுதியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலில்தான் நல்ல வருமானம். இருந்தாலும் இந்த ராஜகம்மளத்து நாயக்கர்களுக்கோ வீடு வீடாய்ச் சென்று குறி சொல்வதுதான் குலத் தொழிலாம்.
வருடத்தில் ஆறு மாதம் ஊர் ஊராய், வீடு வீடாய்ச் சென்று என்ன நடக்கப் போகிறது என்று குறி சொல்வார்கள். 'யார் வாயிலும் விழலாம்; ஆனால் கம்மளத்து நாயுடுகளின் வாயில் மட்டும் விழக்கூடாது' என்று பயந்துகொண்டு ஊர் மக்கள் அரிசி, பருப்பு போன்ற தானியங்களும் பணமும் கொடுப்பார்கள். 'வீட்டில் கருப்பு இருக்கிறது, தோஷம் இருக்கிறது; அதை விரட்ட வேண்டுமானால் ஜக்கம்மாவுக்குப் படையல் செய்ய வேண்டும்' என்று கூறி கூடுதலான பணமும் பெற்றுக்கொள்வார்கள். இதுதான் இம்மக்களின் ஓராண்டு வருமானம். அரசு வேலை பெறுவதில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகளை ஆரம்பக் கல்வி வரை மட்டுமே படிக்க வைப்பார்கள். மேற்கொண்டு படிப்பது ஜக்கம்மாவுக்குப் பிடிக்காதாம்.
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இம்மக்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இம்மக்கள் அதிகம் குடியேற ஆரம்பித்தார்கள். வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் இச்சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் செய்தி. வீட்டில் தெலுங்கு மொழியிலும், வெளியில் தமிழ் மொழியிலும் பேசிவரும் கம்பளத்தார்கள், சாதி வெறியில் தமிழகத்தின் எந்தவொரு ஆதிக்க சாதிக்கும் சளைத்தவர்கள் அல்லர்.
இப்படியான மக்கள் வசிக்கும் அந்த கம்மபட்டியில், அம்மக்களின் வளர்ச்சிக்காகவே தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. தொடக்கப்பள்ளிக்கான இடத்தை கம்மப்பட்டி ஜக்கம்மா வாரிசுகளே அளித்துள்ளனர். இப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக கம்மப்பட்டியிலிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மானகசேரியைச் சேர்ந்த மரகதவல்லி பணி நியமனம் செய்யப்படுகிறார். மரகதவல்லிக்கு சமையல் உதவியாளராக சரவணக்குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் கம்மப்பட்டி தொடக்கப்பள்ளிக்குச் சென்று அடுப்பு பற்ற வைத்ததிலிருந்து தீண்டாமையும் பற்றிக்கொண்டது. திடீரென்று பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு நேரத்தில் சத்துணவு சாப்பிடாமல் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். சமைத்த உணவு வீணாததுதான் மிச்சம். அப்புறம்தான் தெரிந்தது, "எஸ்.சி. ஆளுங்க சமைச்ச சாப்பாடு ஜக்கம்மாவுக்கு ஆகாது" என்று சத்துணவு ஊழியர்களிடம் அவ்வூர் மக்கள் சொன்ன செய்தி.
இது குறித்து மரகதவல்லி கல்வித்துறை அதிகாரியிடம் புகார் செய்துள்ளார். அதிகாரிகளோ, "அவுங்க உங்ககிட்ட பிரச்சனை பண்ணாதது வரை அந்த ஊருக்குப் போங்க. கொஞ்சமா சமையல் பண்ணுங்க. பசங்க வந்தால் சாப்பாடு கொடுங்க. இல்லேன்னா சாப்பாட்டை கீழே கொட்டிட்டு வாங்க" என்று, திணிக்கப்படும் நவீன சாதியத் தீண்டாமைக்கு ஆதரவாகவே பேசி அனுப்பியுள்ளனர்.
மரகதவல்லியும் சரவணகுமாரியும் தினமும் பள்ளிக்குச் சென்று ஒரு படி அரிசியை சமைத்துக் கீழே கொட்டுவதுதான் வேலை. அரசுக்குத் தெரிந்தே இதனைச் செய்கிறார்கள். கீழே கொட்டுவதற்காகவே வேலைக்குச் செல்கிறார்கள். ஜக்கம்மா என்கிற தெய்வத்தின் பெயரால் இப்படிச் சாதியப் பார்வையுடன் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் அந்தக் கம்மளத்து நாயக்கர்களிடம் இதுவரை அரசு அதிகாரிகளோ மற்ற யாருமோ பேசக்கூட முயற்சிக்காததுதான் வேதனையாக உள்ளது. தொடர்புடைய சத்துணவு ஊழியர்களோ, தங்களை வேறு ஊருக்குப் பணியிட மாற்றம் செய்ய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாழ்த்தப்பட்டோரல்லாத சத்துணவு ஊழியர்களை வரவேற்பதற்காக கே.கம்மப்பட்டி ஊருக்கு வெளியே ஜக்கம்மா காத்துக்கொண்டிருக்கிறாள். அரசோ பின்னால் நின்றுகொண்டு ஜக்கம்மாவுக்கு விசிறிக்கொண்டிருக்கிறது.
ஜக்கம்மாவின் பெயரால், சாமி குத்தம் என்ற பெயரால் புதுவிதமாக சாதியக் வன்கொடுமை நடந்து வருகிறது. இதற்கு அரசே துணை போகிறது. 'தீண்டாமை ஒரு பாவச் செயல். தீண்டாமை ஒரு பெருங்குற்றம்' என  பாடப் புத்தகத்தில் பாடம் சொல்லித் தருகிற இடத்திலேயே தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. அரசுதான் இப்படி என்றால் தமிழர்களுக்காகப் பாடுபடுவதாகவும் தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டுவதாகவும் தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தருவதாகவும் தமிழகத்தில் பீற்றித் திரியும் தலைவர்கள் இச்சாதி வெறி குறித்து கண்டன அறிக்கை கொடுக்கக்கூடத் தயங்குகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள்தான் அந்த ஊருக்குச் சென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். சாதியத்தை ஒழிக்காமல் தமிழர்களுக்கான விடுதலையை எப்படிப் படைக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
கம்மளத்து மக்களுக்கு ஜக்கம்மாவே பக்கபலமாக இருக்கிறாள்... ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு...? ஜக்கம்மா இது உனக்கே ஞாயமா?
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20558%3A2012-07-22-02-12-36&catid=1%3Aarticles&Itemid=264http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20558%3A2012-07-22-02-12-36&catid=1%3Aarticles&Itemid=264

0 comments:

Post a Comment