08 November 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீது கட்டப்படும் ஒரு புதிய அரசியல் அணி !!

மாவீரர்கள் என்றாலே நவம்பர் மாதம்தான் நினைவுக்கு வரும். உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் அவரவர் வீட்டுக்குள் மாவீரர்களின் திருவுருவப் படங்களை வைத்துத் தீபம் ஏற்றி வணங்குவார்கள். தமிழீழத்தை அடைய உறுதிமொழியும் எடுத்துக்கொள்வார்கள்.


“இன்று புனிதமான நாள். தமது உன்னதமான உயிருக்கும் மேலாக தமது தேசத்தின் விடுதலையை அதிஉன்னதமாக நேசித்து அந்த உயரிய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிக்கொண்ட எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்னாள். எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத்திருநாள்..”

என்று மாவீரர்கள் குறித்துப் பெருமையோடு மேதகு பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் உரையாற்றுவார்.


மண்ணை மீட்க வீரச்சாவடைந்த மாவீரர்களை வணங்கி விளக்கேற்றி சிறப்புச் செய்யும் அந்த மகத்துவ நாள்தான் நவம்பர் 27. தமிழீழ மண்ணில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களில்தான் தாய்மார்களும் குழந்தைகளும் குடும்பத்துடன் வந்து அந்த மாவீரர்களை வணங்குவார்கள். கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்துவார்கள். அந்தளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் ‘மாவீரர்கள்’ இருந்தார்கள்.

ஓர் இலட்சியப் பயணத்தில் தமிழீழத்தின் அடிக்கற்களால் தங்களை விதைத்துக்கொண்ட அந்த மாவீரர்களைப் போலவே பொதுமக்களும் வீரச்சாவடைந்தார்கள்.


விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்த பொதுமக்களுக்குத் தெரியும். எப்போது வேண்டுமானாலும் இனவெறியர்கள் தம்மைத் தாக்குவார்கள் என்று. ஆனாலும் மேதகு பிரபாகரன் கைப்பற்றிய சுதந்திரத் தமிழீழத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வாழ்ந்தார்கள். சிங்களப் பேரினவாதத்தின் கடும் பொருளாதார நெரக்கடியையும் மீறி வாழப் பழகினார்கள். 2008ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதம் போர் ஒப்பந்தத்தை மீறி போரைத் தொடங்கியபோதும் பொதுமக்கள் அச்சப்படவில்லை. “தாக்குல் நடத்தப் போகிறோம். எல்லோரும் இராணுவப் பகுதிக்குப் பாதுகாப்பாக வந்துவிடுங்கள்” என்று சிங்கள இராணுவம் ஹெலிகாப்டரில் பறந்துவந்து துண்டறிக்கை வெளியிட்டு எச்சரித்தார்கள். ஆனாலும், பொதுமக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பவில்லை. மேதகு பிரபாகரன் அவர்களை விட்டுவிட்டு ஓடிவிட விரும்பவில்லை. 2009 சனவரி 2ஆம் நாள் கிளிநொச்சியை உலக நாடுகளின் துணையுடன் சிங்களப் பேரினவாதம் கைப்பற்றிய பிறகும் பொதுமக்கள் பாதுகாப்புத்தேடி சிங்கள இராணுவம் அறிவித்த பாதுகாப்புப் பகுதிக்குள் செல்ல விரும்பவில்லை. ‘கிபீர்’ குண்டுகளும் ‘ஷெல்’களும் விழுந்தாலும் பொதுமக்கள் கிளிநொச்சியிலிருந்து பரந்தன் வழியாக தருமபுரம், விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு, இரணபாலை, மாத்தளன், புதுமாத்தளன், வலைஞர் மடம், வெள்ளா முள்ளிவாய்க்கால், முள்ளி வாய்க்கால் என்று இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து சென்றார்கள். அந்த இடப்பெயர்வுகளுக்கிடையே எத்தனையோ பேர் ‘கிபீர்’ தாக்குதலில் இறந்தார்கள். விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளில் ‘ஷெல்’ தாக்குதலில் ஆயிரக் கணக்கில் செத்து விழுந்தார்கள்.


தாய் சாக, மகளும் மகனும் தாயைப் புதைக்கக்கூட வழியில்லாமல் அப்படியே போட்டுவிட்டு இடம்பெயர்ந்தார்கள். நேற்றுவரை தங்களோடு பேசி ஆறுதல்கூறி ஓடி வந்தவர்கள் செத்து பிணங்களாய் ஆங்காங்கே கிடந்ததைப் பார்த்துக் கண்ணீர்விட்டுக் கடந்துவரத்தான் முடிந்ததே தவிர வேறெதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்தார்கள்.


அச்சூழலில்கூடசிங்கள இராணுவப் பகுதிகளில் பாதுகாப்புத் தேடி பொதுமக்கள் செல்ல விரும்பவில்லை. தங்களுடைய தலைவர் மேதகு பிரபாகரன் வழியிலேயே எதற்கும் சமரசமாகாமல் சாகத் துணிந்தார்களே தவிர, சிங்களப் பேரினவாதத்துக்கு அடிபணிய விரும்பவில்லை. அப்படிப் போராளிகளோடு போராளிகளாக மாண்டு மடிந்த பொதுமக்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் மாவீரர்களின் தியாகத்திற்கு இணையானதுதான்.
கொத்துக்குண்டுகளில் செத்து மடிந்தவர்கள் மட்டுமல்லாது, சிங்கள இராணுவத்தால் பிடிக்கப்பட்டு பல புலித் தளபதிகளைக் குறிப்பிட்டு, அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று கேட்டு சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனேகம் பேர். பிஞ்சு பிள்ளைகள், பெண்கள், முதியவர்கள் என்று தமிழீழத் தேசத்திற்காக வீரச்சாவடைந்தவர்கள் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டும். அப்படி சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக, சமரசமாகாமல் வீரச்சாவடைந்த போராளிகள் உள்ளிட்ட பொதுமக்களை வணங்கி அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகத்தில் ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ திறக்கப்படவுள்ளது. தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில், நவம்பர் 8ம் நாள், இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்படவுள்ளது. இதற்கான முழுச் செலவையும் ம.நடராசன் என்பவர் ஏற்றுள்ளார். இவர் தமிழீழப் போராட்டத்தை ஆதரித்தோ போராடியதோ இல்லை. தமிழீழம் குறித்தும் தேசிய இனவிடுதலை குறித்தும் இவருக்கு எவ்வித அரசியல் பார்வையும் இல்லை என்பது தமிழகம் அறியும்.



ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் இமானுவேல் சேகரனைக் கொலை செய்த முதன்மைக் குற்றவாளி முத்துராமலிங்கத் தேவரின் வழியில் அரசியல் செய்து வருபவர். மருதுபாண்டியர் விழா, பூலித்தேவன் விழா என்று தமிழகத்தில் சாதி அரசியலை கடந்த காலங்களில் நடத்தியவர், நடத்தி வருபவர். சாதியவாதிகளுக்குப் பின்புலமாக இருப்பவர்.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை முன்னிறுத்தி நடத்தும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கும் பின்புலமாக இருந்து இந்த செயற்கரிய செயலைச் செய்துள்ளார். முள்ளிவாய்க்கால் முற்றத்திற்காகக் கொடுக்கப்பட்ட விளார் நிலம்கூட மோசடி செய்து வாங்கப்பட்ட நிலம் என்று ம.நடராசன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

எப்படியானாலும் முள்ளிவாய்க்காலில் மாண்டு மடிந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்கு இடம்கொடுத்து முழுச் செலவையும் பொறுப்பேற்றுக்கொண்ட ம.நடராசன் அவர்களது கொடைக்குணத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

ஆனால், சிங்களப் பேரினவாதத்திற்கு அடிபணியாமல் சமரசமாகாமல் மாண்டு மடிந்த அம்மக்களின் தியாகத்தை அவமதிக்கும் வகையில், ஓர் சாதிய நிலப்பிரபுவிடம் அடிபணிந்து நினைவு முற்றம் அமைப்பதுதான் கவலையளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவிற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத், பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற இந்துத்துவவாதிகளை அழைப்பது தமிழ்த் தேசியத்திற்குக் கேடுவிளைவிப்பது மட்டுமல்லாது, தவறான முன்னுதாரணமுமாகும். இத்தகைய செயல் மேதகு பிரபாகரனின் தமிழ்த் தேசியப் போராட்டத்தையும் அவரது தூய்மையையும் கொச்சைப்படுத்துவதாகத்தான் அமையும்.

பாரதிய ஜனதா கட்சி தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கின்ற கட்சி அல்ல; தமிழீழம் அமைவதையும் விரும்புகிற கட்சி அல்ல. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்னவோ அதே நிலைப்பாட்டைத்தான் பா.ஜ.க.வும் கொண்டுள்ளது. இதை பழ.நெடுமாறன் அவர்களே தமது ‘உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்’ என்கிற நூலில் தெளிவுபடுத்துகிறார்:

“காங்கிரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தேசிய ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டுமானால் பலமான மத்திய அரசு மூலமே சாத்தியம். அதுவும் தன்னால் மட்டுமே அந்த ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க முடியும் என மார்தட்டுகிறது. மொழிவழி மாநிலங்களை அமைக்க மறுத்த பின்னர் மக்கள் போராட்டங்களின் விளைவாக மொழிவழி மாநிலங்களை அமைக்க ஒப்புக்கொண்ட காங்கிரசுக் கட்சி அம்மாநிலங் களுக்குரிய அதிகாரங்களை அளிக்க இன்னமும் மறுக்கிறது. பா.ஜ.க.வோ மொழிவழி மாநிலங்களை ஒழித்துவிட்டு ஒரே மத்திய அரசின்கீழ் 100 ஜன பாதங்களை அமைக்க வேண்டும் எனக் கூறுகிறது.

ஆக, இரு கட்சிகளுக்கிடையே அதிக வேறுபாடு இல்லை. காங்கிரஸ் கட்சி மிதவாத இந்துத்துவக் கட்சி. பா.ஜ.க. தீவிரவாத இந்துத்துவக் கட்சியாகும். காங்கிரஸ் கட்சி சமயச் சார்பின்மை முகமூடியணிந்து தனது உண்மை உருவத்தை மறைத்துச் செயற்படுகிறது. பா.ஜ.க.வோ ஒருபோதும் தனது நோக்கத்தை மறைக்காமல் பாசிச கோரமுகத்தை வெளிப்படையாகக் காட்டிச் செயற்படுகிறது. எனவே காங்கிரசுக்கும் பா.ஜ.க.விற்குமிடையே அதிக வேறுபாடுஇல்லை.” (பக்கம் 745) 

என்று மிகத் தெளிவாக விளக்குகிறார்.

அதாவது, காங்கிரசைவிட தீவிர இந்துத்துவக் கட்சி பா.ஜ.க.தான் என்று அய்யா பழ.நெடுமாறன் அம்பலப்படுத்துகிறார். பா.ஜ.க.வைப் பற்றி மேலும் அந்நூலில், 

“இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பல மொழிகள் பேசும் தேசிய இனங்கள் தத்தமக்குரிய பகுதிகளில் தனித்தனித் தேசங்களாக அமைந்திடுமானால் பார்ப்பனிய ஆதிக்கம் சிதைந்து போகும். பாரதப் பண்பாடு என்ற பெயரில் பார்ப்பனியப் பண்பாட்டை நிலைநிறுத்த முடியாது. அந்தந்த மொழிக்குரிய பண்பாடுகள் ஓங்கி வளர்ந்து தாங்கள் நிறுவ முயலும் போலியான பாரதப் பண்பாட்டைச் சிதைத்துவிடும் என இந்துத்துவவாதிகள் கருதுகின்றனர்” (பக். 746) 

என்று அம்பலப்படுத்துகிறார்.

அதாவது, தேசிய இனங்கள் பிரிந்துபோக ஒருபோதும் இந்துத்துவவாதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நெடுமாறன் கூறியிருக்கிறார்.

ஆனால், தமிழ்த் தேசிய இனத்திற்கான நாடாக தமிழீழம் அமைவதை மட்டும் பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளுமா? தனித்தேசத்திற்காக வீரச்சாவடைந்த அம்மக்களின் நினைவைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு பா.ஜ.க.வினர் அழைக்கப்பட்டிருப்பது முரண்பாடு இல்லையா? அவமதிப்பது ஆகாதா?

தமிழீழத் தேசத்திற்காக மிகப் பெரிய அறப்போராட்டத்தை நடத்தியவர் மேதகு பிரபாகரன். சிங்களப் பேரினவாதத்தின் தாக்குதலில் இந்துக் கோவில்கள் பல சிதைக்கப்பட்டன. ஏனென்றால் தமிழீழத்தின் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள்தான். ஏ9 நெடுஞ்சாலை வழியாக வரும்போது, இடைமறிக்கும் முறிகண்டி முருகன் கோவிலிலிருந்து யாழ்ப்பாணம் கந்தசாமி நல்லூர் கோவில் வரை இந்துக்கோவில்கள்தான். (கிறித்தவத் தேவாலயங்கள் குறைவுதான்). அப்படிப்பட்டக் கோவில்களையெல்லாம் சிங்களப் பேரினவாதம் உடைத்து நொறுக்கியது. முருகன்கோவிலில் முளைத்த அரச மர நாற்றுகளைத் தமிழர்கள் சுத்தம் செய்யும் நோக்கில் பறித்ததற்காக புத்தர் ஞானஒளி அடைந்த அரச மரத்தை இந்துக்கள் பறித்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட கொடுமையான காலத்தில்கூட மேதகு பிரபாகரன் அவர்கள் ‘இந்துக்களை கொடுமைப்படுத்துகிறார்கள்’, இந்து மதத்தின் கோவில்களைச் சிங்களமதவாதிகள் இடிக்கிறார்கள் என்று இந்துமதவாதத்தை முன்வைத்து அரசியல் தீர்வை உருவாக்க நினைக்கவில்லை.

சிங்கள மதவாதத்திற்கு எதிராக இந்து மதவாதத்தை ஒருபோதும் பிரபாகரன் முன்வைத்ததில்லை. அப்படி வைத்திருந்தால் இந்தியா முழுவதும் புலிகளுக்குப் பெரும் ஆதரவு உருவாகியிருக்கும். ஒருமுறை சிவசேனா தலைவர் பால்தாக்கரேகூட, “பிரபாகரன் ஒரு இந்து. ஆகவே, விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்” என்று அவரது ‘சாம்னா’ இதழில் எழுதியபோதுகூட பிரபாகரன் இந்துத்துவத்தை முன்வைத்ததில்லை. “தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம்’ என்றுதான் தேசிய இனத்தை முன்வைத்தார்.
                                 


                                          
                             
                                                              Source : Flickr : Arjun Sampath
மதவழியிலோ சாதி வழியிலோ தமிழர்களைத் திரட்டாமல் தேசிய இன அடையாளத்தோடு தமிழர்களைப் போராட்டக் களத்தில் ஒன்று திரட்டினார். அந்த வகையில் விடுதலைப்புலிகளின் போராட்டம் என்பது தூய்மையான தேசிய இனப்போராட்டமாகத்தான் உருப்பெற்று வலுப்பெற்றுள்ளது. ஆனால், அய்யா பழ.நெடுமாறன், பா.ஜ.க. புலிகளின் போராட்டத்தை ஆதரித்தது போலவும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் மலரப் போவது போலவும் கற்பிதம் செய்ய முயலுகிறார்.

2000 ஏப்ரல் 22ஆம் நாள் விடுதலைப் புலிகளின் படை சிங்கள இராணுவத்தை ஓடஓட விரட்டி ஆனையிறவு சமரில் வெற்றி பெற்றதையடுத்து யாழ்ப்பாணத்தை நோக்கி புலிகள் முன்னேறினர். யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் உள்ள பளை நகரமும் ஏப்ரல் 30ஆம் நாள் புலிகளால் கைப்பற்றப்பட்டது. யாழ் நகருக்குள் 35,000 சிங்கள இராணுவ வீரர்கள் புலிகளால் முடக்கப்பட்டனர். ஏ9 சாலை முழுவதும் புலிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் தரை வழியாக சிங்கள இராணுவம் யாழ் நகருக்குள் நுழைய முடியவில்லை. 35,000 இராணுவ வீரர்கள் உணவின்றித் தவித்தனர். இராணுவத்தினரின் குடும்பத்தினர் கொழும்புவில் தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில்தான், அன்றைக்கு சிங்களத் தேசத்தின் அதிபராக இருந்த சந்திரிகா உலக நாடுகளிடம் கெஞ்சினார். அப்போது, இந்தியாவின் ஆட்சிபீடத்திலிருந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமும் ஓடிப்போய் புலிகளிடமிருந்து இராணுவ வீரர்களைக் காப்பாற்றுங்கள் என்று மன்றாடினார்.

உடனே பிரதமர் வாஜ்பாயும் கடல்வழியே கப்பல்களை அனுப்பி சிங்கள இராணுவத்தினருக்கு உணவு அனுப்பியதோடு புலிகளின் முற்றுகையிலிருந்தும் காப்பாற்றினார். அப்போது மட்டும் பா.ஜ.க. சிங்கள இராணுவத்தை காப்பாற்றாமலிருந்தால் இன்று இந்த முள்ளிவாய்க்கால் அவலமே ஏற்பட்டிருக்காது. யாழ்ப்பாணத்தையும் புலிகள் கைப்பற்றியிருப்பார்கள். அந்த அளவுக்கு புலிகளின் போராட்டத்தை நசுக்கிய பா.ஜ.க.வினரைத்தான் பழ.நெடுமாறன் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அழைத்துப் பெருமைப்படுத்துகிறார்.

இது மட்டுமல்லாமல், பா.ஜ.க. ஆட்சியின்போது கடந்த 2000 ஜூன் 11, 12 ஆகிய நாட்களில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங் இலங்கைக்குச் சென்று அதிபர் சந்திரிகாவைச் சந்தித்து உரையாடிவிட்டு புலிகளை ஒடுக்குவதற்காகவும் அந்நாட்டின் வளர்ச்சிக்காகவும் இந்தியாவின் சார்பில் 100 மில்லியன் டாலர் கடன் உதவி வழங்குவதாக அறிவித்தார். இப்பயணம் குறித்து ஜஸ்வந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இலங்கையின் ஒற்றுமை மற்றும் எல்லைக்குட்பட்ட ஒழுங்கமைவு குறித்து இந்தியா தொடர்ச்சியாக பொறுப்புணர்வுடன் இருக்கிறது. இலங்கையில் நிரந்தரத் தீர்வு காண இந்திய அரசின் ஆதரவு எப்போதும் உண்டு” என்று கூறினார்.

ஜஸ்வந்த்சிங்கின் அந்த இருநாள் பயணம் என்பது இந்திய-இலங்கை என்னும் இரு நாடுகளின் உறவை வலிமைப்படுத்தத்தான் என்றும் கூறினார். புலிகளின் ஆனையிறவு வெற்றிக்குப் பிறகு இந்தப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி விடுதலைப்புலிகளின் போராட்டங்களை முடக்கிய பா.ஜ.க.வைத்தான் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அய்யா நெடுமாறன் அழைத்து விருந்து வைக்கிறார்.

மேலும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்திலிருந்து போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியிலிருந்துகூட அமைச்சர்கள் வாசன், ஏ.கே.அந்தோணி, ஜெயந்தி நடராசன் போன்றோர் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால் பா.ஜ.க.வின் தலைவர்களான நிதின்கட்காரி, வெங்கையா நாயுடு, அண்மையில் சேர்ந்த சுப்பிரமணியசாமி உட்பட பலர் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்கிறார்கள். இதுதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.

                            
                                                                  Source : The Hindu

அப்படிப்பட்ட இந்துத்துவ பா.ஜ.க.வைத்தான் நெடுமாறன் அழைத்து தமிழகத்தில் ஓர் அரசியல் ஆபத்தை உருவாக்க முயற்சிக்கிறார். இது முழுக்க முழுக்க தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது மட்டுமல்ல. சமயச்சார்பின்மைக்குப் பெரும் ஆபத்தானதுமாகும். இந்துத்துவத்தை பொது நீரோட்டத்தில் இணைத்தால் தமிழ்நாடு என்ன ஆகும் என்பதை நெடுமாறன் அவர்களே தமது ‘உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும்’ நூலில் விளக்குகிறார்:

“உருவாகாத இந்திய தேசிய மாயையில் மயங்கிய தமிழர்கள் தங்களின் தனித்த அடையாளங்களை இழந்தார்கள். மொழி, இனம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றால் தொன்மையும் பெருமையும் பெற்றவர்கள் என்பதை மறந்த நிலைக்குத் தமிழர்கள் ஆளாக்கப்பட்டார்கள். ஆனாலும் இருபதாம் நூற்றாண்டு நெடுகிலும் தமிழறிஞர்களும் தலைவர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கிய தமிழ்த்தேசிய உணர்வால் தமிழர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியும் விடுதலை வேட்கையும் துளிர்விட்டுள்ளன. இதை அழிக்க இந்து பாசிசம் உள்நுழைந்துள்ளது.

இந்தியத் தேசியத் தளையில் சிக்கித் தவித்து விடுபடப் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு மதவெறியூட்டி நிரந்தர அடிமை மயக்கத்தில் ஆழ்ந்த இந்துத்வா முயலுகிறது. இந்த அபாயத்திலிருந்து தமிழர்களைக் காக்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியவாதிகளுக்கு உண்டு. அந்தக் கடமையைத் தவறாமல் செய்வோம். தமிழ் மண்ணிலிருந்து இந்து பாசிசத்தை விரட்டியடிப்போம்.” (பக்கம் 752)

இப்படி, இந்து பாசிசத்தை விரட்டியடிப்போம் என்று அறைகூவல் விடுத்துவிட்டு அதே இந்துத்துவவாதிகளுக்கு சிவப்புக் கம்பளம் .. இல்லை.. காவிக்கம்பளம் விரிப்பதன் நோக்கம் என்ன?

அய்யாவின் கதர்ச்சட்டை காவியாக மாறுவதன் உள்நோக்கம் என்ன? ஓர் புதிய அரசியல் அணியைக் கட்டுவதாக இருந்தால் வெளிப்படையாகக் கட்டுங்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மேல் கட்டி மாவீரர்கள் மற்றும் பொதுமக்களின் தியாகத்தைக் களங்கப்படுத்தாதீர்கள்.

- வன்னிஅரசு ( vanni.viduthalai@gmail.com)

0 comments:

Post a Comment