17 August 2014

ஜெயலலிதாவின் 23ஆம் புலிகேசி ஆட்சி


வன்னிஅரசு
23ஆம் புலிகேசி வடிவேலு மன்னரைப்போல் ஆட்சி செய்து வருகிறார் ஜெயலலிதா.   மக்களுக்காக ஆட்சி நடத்துவதாகச் சொல்லிவிட்டு அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா திரையரங்கம், அம்மா மருந்தகம் என்று அவருக்கு அவரே சொரிந்து வருகிறார்.  சட்டப் பேரவையில் 5 நிமிடப் பேச்சில், 50 முறை அம்மா அம்மா என்று சொன்னால்தான் அனுமதி கிடைக்கும்.  தமிழகத்தில் இனி மின்வெட்டே ஏற்படாது என்று சட்டப்பேரவையிலே அறிவித்தார்.  அறிவித்த நாளிலிருந்து 5 மணி நேரம், 6 மணி நேரம் என்று மின்வெட்டு தமிழகத்தை இருட்டாக்கியது.  அந்த இருட்டில் வழிப்பறியும், கொலையும் கொள்ளையும் நாள்தோறும் நடந்துகொண்டிருக்கிறது.   இந்த இலட்சணத்தில்தான் இருக்கிறது ஜெயலலிதா ஆட்சி. 
தருமபுரியில் சாதிவெறியர்களின் கொலைவெறியாட்டத்திலிருந்து தொடங்கிய மரம் வெட்டிகளின் வன்முறைப் பயணம், தங்குதடையின்றி மாவட்டம் மாவட்டமாகப் தொடர்ந்தது.  அதனைத் தடை செய்ய வக்கில்லாத ஜெயலலிதாவால்தான் இளவரசன் கொல்லப்பட்டான்.  ஜெயலலிதா வாய்மூடி அமைதி காத்ததால்தான் சாதிவெறியர்கள் பலமடங்கு துணிச்சலுடன் வெளிப்படையாகச் செயல்படத் தொடங்கினர்.   அந்தக் கும்பலை அடக்க முடியாத ஜெயலலிதா அரசு விடுதலைச் சிறுத்தைளை ஒடுக்கத் துடிக்கிறது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலைவர் திருமாவளவன் நுழையவே தடை விதித்தது.  சாதி வெறியர்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கவே அனுமதி மறுத்தது.  நத்தம் காலனி மக்களுக்குக் கொடுக்க வேண்டிய உடை, தட்டு முட்டு சாமான்கள் மற்றும் அரிசி, பருப்பு ஆகியவற்றை ஓராண்டாக அம்மக்களுக்குக் கொடுக்கக்கூட அனுமதிக்காத ஈவிரக்கமற்றராக ஜெயலலிதா நடந்துகொண்டது அவரது தலித் விரோத நடவடிக்கை மட்டுமல்ல மனித நேயத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட அம்மக்களுக்களோடு மக்களாக நின்று அழக்கூட தலைவர் திருமாவளவனுக்கு இன்று வரை அனுமதியில்லை.  கொல்லப்பட்ட இளவரசன் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தத் தடை விதித்த ஈவிரக்கமில்லாத ஜெயலலிதாதான் ‘அம்மா’வாம்.  அப்படிப்பட்ட கொடு மனம் படைத்த ஜெயலலிதா இப்போது விடுதலைச் சிறுத்தைகளின் கல்வி உரிமை மாநாட்டுக்குத் தடை விதித்துள்ளார்.
அனைவருக்கும் கல்வியை இலவசமாக்கு என்கிற முழக்கத்தில் என்ன தவறு இருக்க முடியும்?  கல்விக் கொள்ளையர்களிடமிருந்து மாதாமாதம் வரவேண்டிய கப்பத்திற்குத் தடை ஏற்பட்டு விடும் என்பதால்தான் இந்தத் தடையா? எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். அப்படிப்பட்ட எழுத்தறிவை அனைவருக்கும் இலவசமாக்க வேண்டும்.  கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்கிற விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையில் என்ன தவறு இருக்கிறது.  ஆனால் ஜெயலலிதா போலீசு சேலத்தில் ஆகஸ்டு 17 அன்று நடைபெறும் மாநாட்டிற்குத் தடை விதித்திருக்கிறது.  சென்னை உயர் நீதிமன்றம் அத்தடையை நீக்கி மாநாடு நடத்த ஆகஸ்டு 14 அன்று அனுமதி அளித்தது.  தமிழகம் முழுக்க கல்வி உரிமை மாநாட்டை விளக்கி சைக்கிள் பேரணி, பிரச்சாரங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் 16ந்தேதி காலையில் திடீரென சேலம் மாவட்ட நிர்வாகம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது.  அதாவது சொந்த வாகனங்களில்தான் மாநாட்டிற்கு வரவேண்டும்.  வாடகை வாகனங்களில் வர அனுமதியில்லை என்பதுதான் அந்த ஆணை.  ஜெயலலிதா எப்படிப்பட்ட கொடுமனம் படைத்தவராக இருந்தால் இப்படிப்பட்ட ஆணையைப் பிறப்பிக்க முடியும். தலித்துகள் எத்தனை பேருக்கு சொந்த வாகனங்கள் இருக்கின்றன?  தமிழகத்தில் அப்படிப்பட்ட செல்வாக்கிலா தலித்துகளின் நிலை உயர்ந்துள்ளது?  இப்படிப்பட்ட உத்தரவு வேறு கட்சியின் மாநாட்டிற்குப் போட்டிருக்கிறார்களா?  முழுக்க முழுக்க சாதிவெறியை வளர்த்தெடுக்கும் மாமல்லபுரம் மாநாட்டிற்கு இப்படி தடை விதித்திருந்தால் ஜெயலலிதாவைப் பாராட்டியிருக்கலாம்.  ஆனால், கல்வியை வளர்த்தெடுக்க நடத்தப்படும் ஒரு மாநாட்டிற்குத் தடை விதித்திருப்பதுதான் அம்மாவின் துணிச்சலா?  எளியவர்களிடம் சட்டத்தைக் காட்டி அடக்க நினைப்பதுதான் துணிச்சலா?
எளிய மக்களின் விடுதலைக்காக தன்னை விதைநெல்லாக விதைத்துக் கொண்ட போராளித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளை தமிழகம் முழுக்க சிறுத்தைகள் ஆகஸ்டு 17 அன்று கொண்டாடுவது வழக்கம்.  அந்த நாளில்தான் இந்த கல்வி உரிமை மாநாடு.  காலங்காலமாய் கல்வி மறுக்கப்பட்ட சமூகமாகத்தான் தலித் சமூகம் இருந்து வந்துள்ளது. கல்வி அளிக்கப்பட்டால் அவர்கள் விழிப்புணர்வு அடைந்து மேம்பட்டுவிடுவார்கள் என்பதால்தான் கல்வி கேட்கக் கூடாது என்று மனுதர்மம் தடை விதித்தது.  அதே தடையைத்தான் மனுதர்மவாதி ஜெயலலிதா இப்போது நடைமுறைப்படுத்துகிறார்.  பேய் அரசாண்டால் பினந்தின்னும் சாத்திரங்கள் என்பார்கள். இந்தப் பேயை ஆள விட்டதன் விளைவை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இந்தப் பேயை ஓட ஒட விரட்டியடிப்பது சிறுத்தைகளால் மட்டுமே முடியும் என்பதை வரும்காலம்முடிவு செய்யும்.

0 comments:

Post a Comment