30 September 2014

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - செவப்பா இருக்கிறவங்க ஊழல் செய்ய மாட்டாங்களா?

'ஸ்நேக் பாபு' வடிவேலு நகைச்சுவைக் காட்சிபோல் தமிழக அரசியல் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.  ஒரு திரைப்படத்தில் அரசியல்வாதியாய் வரும் வடிவேலுவிடம் கையொப்பம் கேட்கும் கதாநாயகன் மாதவனிடம் லஞ்சம் கேட்பார்.  மாதவனோ லஞ்சத்தைக் கொடுக்க மறுத்து, இலவசமாய் கொடுக்க வேண்டிய வேட்டி சேலையை வடிவேலு பதுக்கிவிட்டார் என்று பொதுமக்களிடம் போட்டுவிடுவார்.  பொதுமக்களோ கோபத்துடன் வடிவேலுவை நையப் புடைக்க ஆரம்பிப்பார்கள்.  அப்போது ஒருவர், "டேய் செவப்பா இருக்கிறங்க பொய் சொல்ல மாட்டங்கடா" என்று சொல்லிக்கொண்டே அடிப்பார்.  

அதுபோல செவப்பாய் இருக்கும் ஜெயலலிதா ஊழல் செய்திருக்க மாட்டார் என்று அந்தக் காமெடியை உண்மையாக்க முயற்சித்து வருகின்றது ஒரு கூட்டம்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், 27-9-2014 அன்று 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது சிறப்பு நீதிமன்றம்.  சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 10 கோடி ரூபாய் அபராதத்துடன் கூடிய 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை.  கடந்த 18 ஆண்டுகளாக வாய்தா வாய்தா என்று இழுத்தடித்து ஒரு வழியாக இப்போதுதான் தீர்ப்பு வந்திருக்கிறது.  சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதுதான் நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது.  


தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றங்களில் தங்கள் தரப்பு ஆதாரங்களை அல்லது வாதங்களைக் கொடுத்து வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்ள ஜெயலலிதாவுக்கு நிறைய வாய்ப்புகளும் சனநாயக உரிமையும் உள்ளது.  
ஆனால், அந்த சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தமிழகம் முழுக்க அதிமுகவினரைக் கொண்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுவிட்டு சிறை சென்றிருக்கிறார் ஜெயலலிதா.  இத்தகைய வன்முறையின் மூலம் சட்டத்தைக் கையிலெடுத்து நீதியை அடி பணிய வைக்க முயற்சித்துள்ளார் ஜெயலலிதா.  தமிழகம் முழுக்க அம்மாவின் தொண்டரடியார்கள் பேருந்துகளை எரிப்பது, உடைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது என்று 27ந் தேதியை தொடங்கிவிட்டார்கள்.  தமிழகம் முழுக்க இத்தகைய வன்முறை வெறியாட்டம் நின்றபாடில்லை. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம், பேரணிகள், கருப்புச்சட்டை அணிந்து போராட்டம், ரயில் மறியல் போராட்டம் என தமிழகம் முழுக்க அதிமுகவினர் ஜெயலலிதா மீதான விசுவாசத்தைக் காட்ட போட்டி போட்டுக்கொண்டு கலவரம் செய்துகொண்டிருக்கின்றனர்.  

இந்தப் போட்டியில் மைய அரசின் முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானியும் இறங்கிவிட்டார்.  'நீதியரசர் ஜான் மைக்கேல் அளித்தது தீர்ப்பே அல்ல; அது அரசியல் வெறுப்புணர்ச்சி' என்று கொதித்து, லண்டன் விமானத்திலிருந்து குதித்து பெங்களூரு வந்தே விட்டார்.  


இவர்களுடன் சினிமாக்காரர்களும் தங்கள் விசுவாசத்தைகக் காட்டுவதற்கு நல்ல வாய்ப்பு என்று உண்ணாவிரதத்தில் (30-9-2014) உட்கார்ந்துவிட்டார்கள்.  ஊழல் செய்தார் என்பதற்காகத்தான் ஜெயலலிதாவுக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது.  காவிரி நீர் உரிமை கோரியதாலோ, அல்லது முல்லைப் பெரியாறு உரிமை கோரியதாலோ ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.  
ஆனால், தமிழ்நாட்டு உரிமைக்காக ஜெயலலிதா சிறைக்குச் சென்றதுபோல் சினிமாக்காரர்கள் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்துவிட்டார்கள்.  

நடிகர் விஜய் கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் புதுதில்லியில் ஊழலுக்கு எதிராக அன்னாஅசாரே உண்ணாவிரதம் இருந்தபோது மேடைக்கே சென்று வாழ்த்தினார்.. பாராட்டினார்.  பாராட்டியது மட்டுமல்லாமல் இந்தியாவில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்.  அதற்காக இயக்கம் எடுக்கும் அன்னா அசாரே பிரதமராகவும் வேண்டும் என்று முழங்கினார். ஊழலுக்கு எதிராக டெல்லிக்கு சென்று அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் விஜய், இங்கே ஊழலுக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து தன் அப்பா இயக்குனர் சந்திரசேகரை அனுப்பி ஆதரவு தெரிவித்து இரட்டை வேடம் போடுகிறார்.அதே நாளில் சென்னையிலும் சினிமாக்காரர்கள் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்கள்.  நடிகர்கள் சரத்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்-நடிகைகள் ஊழலுக்கு எதிராக மைக் பிடித்து முழங்கினார்கள்.  ரஜினியும் கமலும் ஊழலுக்கு எதிராக அறிக்கை மட்டும் விட்டுவிட்டுப் படப்பிடிப்புக்குப் போய்விட்டார்கள்.  அன்றைக்குத் தமிழகம் முழுக்க ஊழல் எதிர்ப்புக்காக முழங்கிய அதே சினிமாக்காரர்கள் இன்று ஊழலுக்குத் தண்டனை கொடுத்தவுடன் இதையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.  


இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஜெயலலிதா பெற்ற தண்டனைக்குக் காரணமே காவிரி நீருக்காகப் போராடினார் என்றும், தில்லியை எதிர்த்தார் என்றும் அரிய பெரும் கண்டுபிடிப்புகளை அவர்களது திரைக் கதைகளைப் போலவே அள்ளிவிட்டார்கள் நடிகர்கள்.  விசுவாசத்தைக் காட்ட எப்படியெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது.  

தமிழகம் முழுக்க வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வெறியாட்டம் நடத்திவரும் அதிமுகவினரால் தமிழகத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய அராஜகங்களைக் கண்டிக்கத் துப்பில்லாத சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம் இருப்பது யாரை ஏமாற்ற?  சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையே கையைக் கட்டி, வாயைப் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை நினைத்தால் இது சனநாயக நாடுதானா என்று கேட்கத் தோன்றுகிறது.


வன்முறை செய்த ஒருவர் மீதுகூட வழக்குப் பதிவு செய்யாமல், தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த கலைஞர் மீதும், ஸ்டாலின் மீதும் வன்முறையைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யும் காவல்துறையின் போக்கு சர்வாதிகாரப் போக்காக மாறியுள்ளது.  சட்டத்தின்படிதான் காவல்துறை நடக்க வேண்டுமே தவிர விசுவாசத்தின்படி அல்ல.  வன்முறையைத் தடுத்து நிறுத்தச் சொல்லி இன்னமும்கூட முதல்வர் பன்னீர்செல்வம் எந்த வழிகாட்டலும் செய்ய வில்லை. ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்திய அன்னாஅசாரே முதல் அரவிந்த் கெஜ்ரிவால் வரை யாருமே இத்தகைய வன்முறைப்போக்கைக் கண்டிக்க முன்வராததற்கு வேறு உள்நோக்கம் இருப்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

வன்முறை, அராஜகத்தின் மூலம் சட்டத்தை அடிபணிய வைக்க முடியும் என்றால், இது தவறான முன்மாதிரியாக அமைந்திடாதா?  இதே வழிவகைகளை வலுத்தவர்கள் ஆங்காங்கே கையாண்டால், சட்டமும் நீதியும் எதற்கு?  ஜெயலலிதா சட்டத்தின் முன் தான் நிரபராதி என்று நிரூபித்து வெளியே வருவதுதான் நல்ல சனநாயகமாகும்.  அதைவிடுத்து அச்சுறுத்தி பிணையில் வருவது சனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எரானதுதான். 

செவப்பா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்று சொல்வதுபோல ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த அவாள்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் என்று தெரிவிக்கத்தான் இத்தனை வன்முறைகளும் போராட்டங்களும்.  இதுதான் உள்ளீடான மநுநீதி.

 வரலாறு நெடுக வன்முறை மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள் அதே பணியை இன்னமும் தொடருகிறார்கள்.  அதற்காகத்தான் ராம்ஜெத்மலானியும் நிற்கிறார்.  இதே துடிப்பு லல்லு பிரசாத் யாதவ் வழக்கில் தீர்ப்புச் சொல்லப்பட்டபோது இருந்திருந்தால் ராம்ஜெத்மலானி உண்மையான சட்டவல்லுநர் என்று புரிந்துகொள்ளலாம்.  அவாளுக்கு ஒரு நீதி சூத்திரவாளுக்கு ஒரு நீதியாகத்தான் அரசியலமைப்பையே மாற்ற முயற்சிக்கிறார்கள்.  அந்த நீதிதான் மநுநீதி. நாளையேகூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையிலிருந்து வெளிவரலாம்.  அப்போது நீதி சிறைப்படும்.

0 comments:

Post a Comment