27 May 2015

உன் நினைவுகளே எம்மை இழுத்துச் செல்கிறது!

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு (குறள் 783 - நட்பு-பொருட்பால்)

சிறந்த நூல்களைப் படிக்கப் படிக்க இன்பம் கிடைப்பதைப்போல, நல்ல நண்பர்களின் நட்பும் அப்படித்தான் என்று சொன்ன திருவள்ளுவரின் நட்பு அதிகாரத்திற்கு இலக்கணமானவர் அவர்.நூல்களைப் படிக்கப் படிக்க எப்படி இன்பமோ, அப்படித்தான் அந்த மனிதரிடம் பேசப் பேச இன்பம்.. பழகப் பழக இன்பம். உடன் பயணம் செய்யச் செய்ய களைப்பில்லாத இன்பம். அவர் உடனிருந்தால் நேரம் போவதே தெரியாது. அவர் இருக்கும் இடமே ஒரே கலகலப்பாகத்தான் இருக்கும்.

இப்போது அந்தக் கலகலப்பு காணாமல் போய்விட்டது. அந்தச் சிரிப்பு சிதைந்துபோய் விட்டது. எப்போதும் எல்லோருக்கும் நலன்தரும் அந்தத் தோப்பு சாய்ந்துவிட்டது. அந்தக் கப்பல் கவிழ்ந்துவிட்டது. அன்பைச் சுமந்து பயணித்த அந்த உடல் புதைக்கப்பட்டுவிட்டது. இவ்வளவுகாலம் எங்களோடு பயணித்த அந்த மாமனிதர் இப்போது எங்களுடன் இல்லை. அவரது நினனவுகளைச் சுமந்துகொண்டே பயணித்தாலும் பாரம் தாங்க முடியவில்லை. சோகம் அழுத்திக்கொண்டே இருக்கிறது. திடீர் திடீரென கண்கள் கண்ணீரை வாரி இரைக்கின்றன. வலிமை மிகுந்த இதயம் வலிப்பதுபோல் இருக்கிறது. எப்போதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கும் அந்த மாமனிதர் இப்போது எங்களோடு இல்லை. அவர் இருக்கும் இடத்தில் கவலையும் சோகமும் காணாமல் போய்விடும்.

ஆம்... இப்போது வெற்றிச்செல்வன் காணாமல் போய்விட்டார். கவலையும் துக்கமும் நம்மைச் சூழ்ந்துகொண்டன. யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத அந்த மாமனிதனை வாரிக்கொடுத்துவிட்டு நடைப்பிணமாக நடமாடிக் கொண்டிருக்கிறோம்.

சென்னை, அசோகர் நகர், 100 அடிச்சாலையில், விடுதலைச் சிறுத்தைகளின் திடலில்தான் அந்த மனிதரை முதன்முதலில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது எழுச்சித்தமிழரின் களப்பணியில் கால் நூற்றாண்டு விழா பணிகளில் மூழ்கியிருந்தேன். சிறப்பு மலர் தயாரிப்புக்காக திடலிலேயே இரவு பகல் தங்கி பணி செய்துகொண்டிருந்த சூழலில், ஒரு நாள், "நான் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் தோழர்" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி, ஆனால் மார்க்சியச் சித்தாந்தத்தை உள்வாங்கியதோடு, சிறுத்தைகளில் தன்னை இணைத்துக்கொண்டதைப் பெருமையாகச் சொன்னார். 'களப்பணியில் கால் நூற்றாண்டு' மாநாட்டுக்காக அவர் செய்த விளம்பரங்கள்தான் அனைத்துச் சிறுத்தைகளையும் அவரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தன. அந்த அளவிற்கு தன்னுடைய பெயர்தாங்கிய கட்-அவுட்கள், பதாகைகள், சுவரொட்டிகள், செய்தித்தாள் விளம்பரங்கள் என்று சென்னையையே மிரள வைத்தவர்.

தலைவர் மீதும் கட்சியின் மீதும் அடங்காப் பற்றுக்கொண்டவர். தலைவருடைய செயல்பாடுகளை எப்போதும் பெருமையாகப் பேசிக்கொண்டேயிருப்பவர். அவரின் இந்த உணர்வுதான் வெற்றிச்செல்வனோடு எனக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது. ஆண்டுக் கணக்கு ஆறேழு ஆண்டுகளேயானாலும், அறுபது ஆண்டுகால நட்பைப் போல அது மாறியது. உற்ற தோழனாக, நம்பிக்கை நண்பனாக, கட்சியிலும், கட்சிக்கு வெளியிலும் பெருமையாகப் பேசிக்கொள்ளும் வகையில் எங்கள் நட்பு இறுக்கமானது. எனது வாழ்வில் நம்பிக்கைக்குரிய நண்பனாக வெற்றிச்செல்வன் முன்நின்றார். என்னை எங்குமே அவர் விட்டுக்கொடுத்ததில்லை. எனக்காக வாதாடுவார். நான் எங்காவது தவறுதலாகப் பேசியிருந்தால்கூட, "யோவ் ஏன்யா இப்படி பண்ற?" என்று உரிமையுடன் கண்டிப்பார், திட்டுவார். 
அப்படிப்பட்ட அந்த மனிதரைத்தான் கடந்த மே 20 அன்று அதிகாலை அவர் வாழ்ந்துதிரிந்த அலுவலகப் படிகளிலேயே வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். துரோகமே அவரைச் சாய்த்துவிட்டது. இவ்வளவு காலமும் வெற்றிச்செல்வனின் நிழலிலேயே வாழ்ந்த அந்தக் கோடரி, நிழல்தந்த அந்த மரத்தையே வெட்டிச் சாய்த்துவிட்டது.

எப்போதும் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வெற்றியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்துவிடும். அரை மணி நேரத்திற்கு மேலாக அரசியல், சினிமா, கட்சி நிலவரம் என்று அனைத்தும் குறித்து விவாதிப்பார். முதல்நாள் நடந்த எல்லாவற்றையும் விளக்குவார். அப்படித்தான் மே 20 காலை 6.35க்கு என் தொலைபேசியில் அவர் தொடர்புகொண்டுள்ளார். தவறியழைப்பைப் பார்த்து 7 மணிக்கு அவரைத் தொடர்புகொண்டு பேசினேன். வழக்கம்போல், "என்ன... தலதளபதி! என்னய்யா பண்ற? வாக்கிங் போய்ட்டு வந்துட்டயா?" என்று என்னைக் கலாய்த்துக்கொண்டே, நடந்துகொண்டிருக்கும் நிலப் பிரச்சனை தொடர்பாக விளக்கியவர், 26ந்தேதி பிரச்சனை முடிவுக்கு வரப்போவதாக நம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு, "வெள்ளிவிழாவையொட்டி தலைவருக்கு எதுவும் பண்ணல. இந்தப் பிரச்சனை முடிஞ்சதும் ஆகஸ்டு 17 தலைவர் பிறந்த நாளைக்கு எதாவது பண்ணணும்யா" என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, வழக்கம்போல "சந்திப்போம்" என்று தொலைபேசியைத் துண்டித்தார்.

அடுத்த 15 நிமிடங்களில் தம்பி அகரனிடமிருந்துதான் அந்தத் துயரச் செய்தியைக் கேள்விப்பட்டேன். 'அடப்பாவி இப்போதுதானே பேசினேன். அதெப்படி அதற்குள் இந்தக் கொடூரம் நடந்திருக்கும்' என்று துடிதுடித்தவாறு வெற்றிச்செல்வன் எண்ணுக்குத் தொடர்புகொண்டேன். தொலைபேசியை எடுத்து, 'என்ன தலதளபதி?' என்று மீண்டும் என்னைக் கலாய்க்க மாட்டாரா? என்று ஏங்கியபடி காத்திருந்தேன். அவரது தொலைபேசியிலிருந்து அந்த அம்மா பாடல் 'ரிங்டோன்'தான் கேட்டுக்கொண்டேயிருந்தது. அவர் எந்த அம்மாவை நேசித்தாரோ அந்த அம்மாவைத் தேடியே போய்விட்டார். நானோ அனாதையாகிவிட்டேன்.

பொதுவாக அரசியல் என்பதே போட்டி நிறைந்ததுதான். காட்டிக்கொடுப்புகளும், காலை வாரிவிடுவதும்தான் நான் கடந்த 20 ஆண்டுகளாகச் சந்தித்துவரும் அரசியல். யாரையும் நம்ப முடியாது. எல்லோரையும் நாம் நேசித்தாலும் நம்மை நேசிக்க யாரும் இருக்க மாட்டார்கள். இந்தச் சூழலில்தான் உண்மையான அன்பையும், நட்பையும், கள்ளம் கபடமில்லாச் சிரிப்பையும் சுமந்த ஒரு மாமனிதர் கிடைத்தாரென்றால் அவர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன்தான். தவறுகளை நேருக்கு நேராகச் சுட்டிக்காட்டும் துணிச்சல்காரர். அதேபோல்தான் அண்ணன் தகடூர் தமிழ்ச்செல்வன் அவர்களும். நாங்கள் மூவரும் இணைந்து கட்சிப் பணிகளை, தலைவர் கட்டளையிட்ட பணிகளைச் செய்துவந்தோம். அரசியலில் உண்மையாய் இருப்பது சிரமம். ஆனால் நாங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய், நம்பிக்கையாய் இருந்தோம். அரசியலில் மட்டுமல்ல, வீட்டு நிகழ்வுகளையும் அப்படியே பகிர்ந்துகொண்டோம்.வெற்றிச்செல்வன் எப்போது பார்த்தாலும் "வன்னி ஐ லவ் யூ" என்று கிண்டலாகச் சொல்லுவார். காதலும் நகைச்சுவையும் மிகுந்த வெள்ளை மனிதராக, சிறந்த அறநெறியாளராக வாழ்ந்தவர். நண்பர்களின் சட்டைப் பையில் உரிமையுடன் கையைவிட்டுத் துலாவி அதில் பணம் இல்லை என்றால் பணத்தைத் திணிக்கும் வள்ளலாகவும் இருந்தவர். எதைப் பற்றியும் விவாதிப்பார். உடனடியாக அதைப் பற்றிய தனது கருத்தை முகநூலில் பதிந்துவிடுவார். கட்சியையும் தலைமையையும் விட்டுக்கொடுக்காமல் துணிச்சலாக வாதாடிவந்தார். தலைவர் மீது அவ்வளவு காதல் கொண்டவர்.பாம்புகளும் ஓநாய்களும் நரிகளும் சிங்கங்களும் உலவுகிற இந்த அரசியல் உலகில் நல்ல மனிதராக வாழ்ந்தவர் வெற்றிச்செல்வன். அவதூறுகளும், அவமதிப்புகளும், துரோகங்களும், ஏமாற்றங்களும், மோசடிகளும், ஜால்ராக்களும் நிலவுகிற அரசியல் களத்தில் உண்மை, அன்பு, நம்பிக்கை என்று உயர்ந்து நின்றவர் வெற்றிச்செல்வன். ஆயிரமாயிரம் தம்பிகளுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்துகொண்டே இருந்தவர். தமிழகம் முழுக்க மாவட்டத்திற்கு பல நூறு தம்பிகளைக் குடும்ப உறவாகக் கொண்டவர்.

அப்படிப்பட்ட மாமனிதரை இழந்ததன் மூலம் அவரை நேசித்த சக்திகள், நண்பர்கள், தோழர்கள் சிரிப்பைத் தொலைத்து நிற்கிறோம். ஆறுதலைத் தொலைத்து நிற்கிறோம். அரவணைப்பைத் தொலைத்து நிற்கிறோம். காதலைத் தொலைத்து நிற்கிறோம். நட்பின் இலக்கணத்தைத் தொலைத்து நிற்கிறோம்.

வெற்றி... உன்னைப் பாதுகாக்க முடியாத குற்றவாளிகளாக நாங்களும் கூனிக்குறுகி நிற்கிறோம்.

போக வேண்டிய பயணமோ வெகுதூரம். அத்தனை தூரத்திலும் மனிதன் ஒருவன் கூட இல்லை. எவ்வளவு தூரத்திலும் உன் நினைவுகளே எம்மை இழுத்துச்செல்கிறது.

வன்னி அரசு.

20 March 2015

அரசு உருவாக்குமா ஆண்ட பரம்பரை ‘கோட்டா’?

"நாங்கள்லாம் ஆண்ட பரம்பரை... நாடாளப் பிறந்தவர்கள்..." என்றெல்லாம் சாதிப் பெருமை பேசுபவர்கள் இடஒதுக்கீட்டுச் சலுகைகளுக்காக மட்டும் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று வெட்கமே இல்லாமல் அரசிடம் மண்டியிடுகிறார்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களிடம் மட்டும் வீரம் காட்டுகிறார்கள்.

இப்படித்தான் இந்தியா முழுக்க ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போக்குக்குக் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் காட்டியுள்ளது உச்ச நீதிமன்றம். வட மாநிலங்களில் மிக வலிமை வாய்ந்த சாதியான ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

வட மாநிலங்களில் 'ஆரிய ஜமீன்தார்கள்' என்றும், நிலக்கிழார்கள் என்றும் அழைக்கப்படும் இந்த ஜாட் சமூகத்தினரை கடந்த மார்ச் 4, 2014 அன்று முன்னேறிய வகுப்பிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. அதாவது, தேர்தல் ஒழுங்குமுறை விதிகள் அமலுக்கு வரும் மார்ச் 5 2014க்கு முந்தைய நாளில் அவசரம் அவசரமாக அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தது.

இதற்கு முன்பாகவே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைப்பது தொடர்பாக மத்திய அரசு கருத்து கேட்டது. அதற்கு, சமூக பொருளாதார ரீதியாக எடுக்கப்படும் சென்சஸ் பணி (2011) முடிந்த பிறகுதான் இதனைப் பரிசீலனை செய்ய முடியும் என்று சொன்னது. ஆனாலும் தொடர் அழுத்தத்தின் காரணமாக, ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். என்னும் சமூக அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி மையத்திடம் ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிட்டது ஆணையம். ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். நிறுவனமோ எந்த நேரடி கள ஆய்வும் செய்யாமல் இருக்கும் பழைய தரவுகளின் அடிப்படையில் தமது கடமையை வெறும் புள்ளிவிவரங்களாகத் தொகுத்து தந்தது. இந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஜாட் சமூகத்தைச் சேர்க்கக் கூடாது என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கருத்துச் சொன்னதுடன் எதிர்ப்பையும் பதிவு செய்தது. ஆனாலும் கடந்த காங்கிரஸ் அரசு அரசியல் இலாபத்திற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் எதிர்ப்பை மீறி ஜாட் சமூகத்தின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. பா.ஜ.க.வும் இதனை வரவேற்றது.

வட மாநிலங்களில் பீகார், குஜராத், அரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், தில்லி, இராஜஸ்தான் (இரு மாவட்டங்களில் மட்டும்), உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மிக அதிகமாக வாழும் ஜாட் சமூக மக்கள் தங்களை ஆரிய பாரம்பரியத்தில் வந்தவர்களென்று, இராஜபுத்திரர்களுக்கு இணையாகக் கருதி வருபவர்கள். இந்தியாவையே ஆளப் பிறந்தவர்கள் என்று மார்தட்டுபவர்கள். நாடாண்ட பரம்பரை என்று மீசையை முறுக்கிக் கொள்பவர்கள். அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை, நம்ம ஊரு 18 பட்டி பஞ்சாயத்து மாதிரியான ‘காஃப்’ பஞ்சாயத்தின் மூலம், நம்ம ஊரு வன்னியர், தேவர், கவுண்டர் மாதிரி அடக்கி ஒடுக்கி வருபவர்கள். 

ஜாட் காஃப் பஞ்சாயத்து 
அரியானா மாநிலத்தில் துலினா என்னுமிடத்தில் செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக 2002ஆம் ஆண்டு 5 தலித்துகள் அடித்தும், உயிரோடு எரித்தும் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர கொலைகளைச் செய்தவர்கள் இந்த ஜாட் சாதியை சேர்ந்த இந்துத்துவ கும்பல் தான். கடந்த 2012ஆம் ஆண்டு இதே மாநிலத்தில் இஸார் மாவட்டம் டாப்ரா கிராமத்தில் +2 படிக்கும் தலித் மாணவி ஒருவரைத் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த 18லிருந்து 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 8 பேர், தூக்கிக்கொண்டுபோய் நாள் முழுக்க கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். 

அதேபோல், 2014ஆம் ஆண்டு இதே இஸார் மாவட்டத்தில் பகானா என்னும் கிராமத்தில் தங்கள் உரிமைக்காக போராடிய தலித்துகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ஜாட் பஞ்சாயத்து தலைவரின் உறவினர்கள் உடன் 3 ஜாட் இளைஞர்கள் சேர்ந்து கொண்டு தலித் சிறுமிகள் 4 பேரை (13ல் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள்) விடிய விடிய ஒரு வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தனர். அம்மாநிலத்தில் சமீப காலங்களில் தலித்துகள் தங்கள் நிலவுரிமைக்காக நடத்திய போராட்டங்களினாலும், அரசியல் ரீதியாக அமைப்பாய் திரள தொடங்கியதாலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், தலித்துகளை அச்சுறுத்தவும், சாதிவெறியை நிலைநாட்டவுமே இக்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டது . 

மிர்ச்பூர் கலவரம் என்றைழைக்கப்படும் சம்பவத்தில் 2010ஆம் ஆண்டு மிர்ச்பூர் சேரிக்குள் புகுந்த ஜாட் சாதி வெறியர்கள் அங்கிருந்த குடிசைகளை தீக்கிரையாக்கினார்கள், இதில் 70வயது தந்தையையும் அவரின் 18 வயதான மாற்றுத் திறனாளி மகளையும் குடிசைக்குள் உயிரோடு எரித்துக் கொன்றனர். மிர்ச்பூர் தலித்துகள் பொருளாதாரத்தில் வலிமை பெற்று வந்ததாலேயே திட்டமிட்டு தாக்கப்பட்டதாக பின்னர் உண்மை அறியும் குழுக்கள் கண்டறிந்தனர். இந்த இடத்தில் உங்களுக்கு 2012ல் சாதி வெறியர்களால் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட தர்மபுரி கலவரம் நினைவுக்கு வரலாம். (மிர்ச்பூர் கலவரத்தின் படங்கள்)

அதேபோல் முஸாபர் நகரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் மீது ஜாட் இந்துக்கள் கொடூரத் தாக்குதலைத் தொடுத்து கலவரங்களை உருவாக்கினர். 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டும் 50,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், இங்கே குச்சிக்கொளுத்தி இராமதாசு கிளப்பிவிட்டதுபோல, இஸ்லாமிய இளைஞர்கள் ஜாட் இனப் பெண்களைக் கிண்டல் செய்தனர் என்பது தான். பின்னர் இந்த பகுதியில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மிகப் பெரும் வெற்றி பெற்றது. சாதி வெறியின் புகலிடம் இந்துத்துவம் தானே?

முஸாபர் நகரின் அப்பாவி இஸ்லாமியர்கள்

காவல்துறை ஜாட் குடியிருப்புகளுக்குள் நுழையவே அஞ்சியது. அது குறித்த வழக்குகள் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. காஃப் பஞ்சாயத்தில் இத்தகைய பலாத்கார நடவடிக்கைகளைச் சொல்லி வெளிப்படையாக மிரட்டி வருகின்றனர். ஆனாலும், பெரிய, சிறிய ஓட்டுப் பொறுக்கும் கட்சிகள் இந்தக் கொடுமைகளைக் கண்டுகொள்வதில்லை. கடந்த 18 ஆண்டுகளாக அரியானா மாநிலத்தின் முதலமைச்சராக ஜாட் சாதியினரே இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் கண்டித்தும், நீதிகேட்டும் தலித் மக்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்ட தலைமைச் செயலகத்தை கடந்த 2 ஆண்டுகளாக தலித்துகள் முற்றுகையிட்டு தங்கள் வாழ்வுரிமைக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதேபோல் தலைநகர் தில்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் மூன்று மாதங்கள் முகாமிட்டு தங்களது வீரஞ்செறிந்த தொடர் போராட்டங்களை தலித்துகள் முன்னெடுத்தனர். ஆனாலும் கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தலித்துகளின் போராட்டத்தை மோடி அரசு அடக்கி ஒடுக்கியது. 

ஹிசார் மாவட்டம்: இரண்டு வருடங்களுக்கும் மேலாக தலித்துகளின் முற்றுகை போராட்டம் 

ஜந்தர் மந்தரில் மூன்று மாதங்கள் நடந்த பகானா தலித்துகளின் போராட்டம்  
இப்படி சாதியப் பெருமைகளை நிலைநாட்டுவதற்காக அரசியல் பொருளாதார பலத்தோடு ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும் சமூகத்தைத்தான் பின்தங்கிய வகுப்பு என்றும், சமூக-பொருளாதாரம் மற்றும் கல்வியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அச்சமூகத்தை முன்னுக்குக் கொண்டுவருவதற்காக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வரிசைப்படுத்தியது மத்திய அரசு. ஏற்கனவே இந்தப் பட்டியலில் குஜ்ஜார், குர்மி போன்ற ஆதிக்க சமூகங்களை இணைத்தது. இந்தச் சமூகங்கள் எல்லாம் நிலவுடைமைச் சமூகங்களாக, மற்ற சமூகங்களை ஒடுக்குகிற சமூகங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

இப்படியான ஆதிக்கச் சாதியான ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது தவறு என பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கான போராட்டக் குழு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததையொட்டித்தான் கடந்த 18-3-2015 அன்று உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பின் நகலை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம் (தீர்ப்பின் நகலை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)


இந்த தீர்ப்பில் உள்ள சில முக்கிய குறிப்புகள் :

பத்தி 48- பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பது போன்ற முக்கிய முடிவுகள் பழமையான, காலாவதியான தரவுகளை கொண்டு எடுக்கப்படகூடாது. பிற்படுத்தப்பட்டோர் ஆணைய சட்டத்தில் பகுதி 11ல் குறிப்பிடப்படுவது போல 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிற்படுத்தப்பட்டோர் சாதி பட்டியலை மறு ஆய்வுக்கு கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. இது தற்காலத்திற்கு ஏற்ற புதிய புள்ளி விவரங்கள், தரவுகளின் தேவையை உணர்த்துகிறது. 

பத்தி 51- சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பழைய தரவுகளைக் கொண்டு பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலை அணுகுவது பிற்போக்குத்தனமான ஆட்சியையே குறிக்கும். கடந்த 20 ஆண்டுகளில் இந்த பட்டியலில் புதிய சாதிகள் சேர்க்கப்படுகிறதே ஒழிய எந்த சாதியும் நீக்கப்படவில்லை. இந்த போக்கே நமது அரசியலமைப்பின் நோக்கத்திற்கு மாறாக உள்ளது. 

பத்தி 53- பின்தங்கிய நிலைக்கு சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம், கல்வி மற்றும் அரசியல் என பல தனித்த காரணிகள் இருக்கலாம். ஆனால் சாதியை மட்டுமே பிற்படுத்தப்பட்டதற்கான அளவீடாக எடுத்துக் கொள்ளகூடாது என நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இதற்கு புதிய அளவீடு முறைகளை உருவாக்கி, புதிதாக தோன்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை கண்டறிதல் வேண்டும். . இதன் அடிப்படையிலேயே சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவினர்க்குரிய உரிமைகள் மூன்றாம் பாலினம் என்று சொல்லப்படும் அரவாணிகளுக்கும் பொருந்தும் என்று 2014ல் தீர்ப்பு ஒன்று வந்துள்ளது.

பத்தி 54- இனிமேலும் பிற்படுத்தப்பட்ட நிலையை கணக்குகள் அடிப்படையில் வகுக்கப்பட்ட சமூகம், பொருளாதாராம், கல்வியை குறித்தான தரவுகள் மட்டும் தீர்மானிக்க முடியாது. அதன் அடிப்படையில் முன்பு எடுக்கப்பட்ட தவறான முடிவுகளை வைத்து மீண்டும் அந்த தவறை அனுமதிக்க முடியாது. மேலே கூறப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில், அரசியல் ரீதியாக நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஜாட் போன்ற சாதிகளை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பிரேந்தர் சிங் தலைமையில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த 27 ஜாட் எம்பிக்கள், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீயை சந்தித்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியுள்ளனர். இத்தீர்ப்பை ரத்து செய்யாவிட்டால் பெரும் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதற்குப் பணிந்துபோன இந்துத்துவ பாஜக அரசு மேல் முறையீடு செய்யவும் தயாராகிவிட்டது. ஏனென்றால், இந்துத்துவத்தைக் கட்டிக்காப்பதுதானே பாஜகவின் மநுதர்மமாக இருக்கிறது.

கடந்த பல நூறாண்டு காலமாக அரசியல் சமூகம் பொருளாதாரம் என அனைத்து மட்டங்களிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு சமூக இழிவுக்குள்ளாக்கப்படும் சமூகங்களுக்குத்தான் இடஒதுக்கீடு, அவர்களை கை தூக்கி மேலே விடுவது தான் இடஒதுக்கீட்டின் நோக்கம், இதுவே சமூக நீதி என புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் போராடினார்கள். ஆனால், இன்று சாதிப் பெருமை பேசுகின்ற சமூகத்தினரும் கூட இடஒதுக்கீட்டுப் பலனை அனுபவித்து வருகின்றனர்.

இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் ஒன்றில் ஜாட் சாதியினர் 
தமிழகத்திலும் இப்படிப் பல சாதிகள் உள்ளன. தங்களை ஆண்ட பரம்பரை என்றும், இயற்கையின் உயர்ந்த கொடையான தாயின் கர்பப் பையைத் தவிர மற்ற எல்லா இடங்களிலிருந்தும் பிறந்தோம் என்று பெருமை பேசிக்கொண்டு, இடஒதுக்கீட்டுக்காக அரசிடம் கையேந்துகிறார்கள். இப்படி சாதிப் பெருமை பேசுபவர்கள், தங்களை உயர்த்த சமூகமாகச் சொல்லிக் கொள்பவர்கள், ‘நாங்கள் முன்னேறிவிட்டோம். பின்தங்கியவர்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு எங்களுக்கு வேண்டாம், யாரிடமும் கையேந்துகிற நிலையில் நாங்கள் இல்லை’ என்று அறிவித்துவிட்டு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து வெளியேற வேண்டும். இதுதான் வீரம். இதைவிட்டுவிட்டு ஒரு பக்கம் ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம் இடஒதுக்கீட்டுக்காக மண்டியிடுவது முரண்பாடு இல்லையா?

மூன்றாம் பாலினமான அரவாணிகளுக்கும் இடஒதுக்கீடு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டியதன் அடிப்படையில் அவர்களை இந்த அரசு பரிசீலிக்க வேண்டும். 'ஆண்ட பரம்பரை' 'தீச்சட்டியிலிருந்து பிறந்தவன்' 'இந்த ராஜாவின் பரம்பரை - அந்த சமஸ்தானத்தின் வாரிசு' எனப் பேசுகின்ற அனைத்துச் சாதியினரையும் ஒரு தொகுப்பாகச் சேர்த்து ‘ஆண்ட பரம்பரை கோட்டா’ ஒன்றை உருவாக்கி அதில் இணைத்துவிடுவது நல்லது. இதுதான் உண்மையான சமூகநீதியின் உச்சமாக இருக்கும்!

வன்னி அரசு.

12 March 2015

இந்தியாவுக்கு கடற்படை ஒரு கேடா?

பயணங்களில் மிக மகிழ்ச்சியான பயணம் கடல்வழிப் பயணம்தான். அதே நேரத்தில் ஆபத்துகள் நிறைந்த பயணமாக நாவல்களும், திரைப்படங்களும் அச்சுறுத்தியுள்ளன. அதுவும் ‘தினத்தந்தி’யில் வரும் கன்னித்தீவு நாயகன் சிந்துபாத், நாயகி லைலாவை அடைவதற்காகக் கடல்தாண்டி, மலைதாண்டி பயணிப்பார். அதில்கூட கடல்வழிப் பயணத்தில்தான் பல ஆபத்துகளை சிந்துபாத் சந்திப்பார். அப்போதெல்லாம் நாமும் கடலில் பயணம் செய்தால் எப்படி ஒரு ‘த்ரில்’ இருக்கும் என்பதை நினைக்கும்போதே அச்ச அலை அடிக்க ஆரம்பிக்கும்.

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல்களில் புக்கர் பரிசு பெற்ற ‘The old man and the sea’ நாவலில் வரும் நாயகன் சாண்டியாகு கடலில் படும் பாடுகளை நினைத்தாலே கடலிலிருந்து தரையில் விழுந்து துடிக்கும் மீனைப் போலத்தான் நம் மனம் துடிக்கும்.

அப்படித்தான் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடல்வழிப் பயணத்திற்கு வாய்ப்புக் கிடைத்தது. தமிழீழ மக்களின் விடுதலைக்காக, சாவை ஒரு குப்பியில் அடைத்துக் கழுத்தில் மாட்டிக்கொண்டு போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூலம்தான் அந்த அழைப்பு வந்தது.
போர் தொடங்கிய நேரம். வான்வெளியில் விமானங்கள் ‘கிபீர்’ குண்டுகளை அப்பாவி தமிழ் மக்கள் மீது பொழிந்து கொண்டிருந்தன. ‘ஷெல்’கள் வெடித்துச் சிதறுகையில் பனை மரங்களும், காணிகளும்கூட ஓலமிட்டன.

இந்தச் சூழலில்தான் இராமேசுவரத்திலிருந்து கடல்வழிப் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. முதல் நாள் இரவிலிருந்து தூங்க முடியவில்லை. கடல் அலைகள் முகத்தை முத்தமிட்டுப் போயின. சீறிப் பாயும் புலிகளின் படகுகள் கடலைக் கிழித்துக்கொண்டு பறந்தன. நெருப்பாய்க் கொதித்தது கடல் நீர். கடல் பயணம் இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்று நினைத்து நினைத்துத் தூக்கம் படகேறிப் போனது.

மடிஅடித்து மீனவனாக மாறி அதிகாலை படகில் ஏறிய 1 மணி நேரத்தில் கடல் ஒவ்வாமையால் வாந்தி.. குடல் பகுதியின் கடைசி நீரும் கடல் நீரில் கலந்தது. 5 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு நமது மீனவச் சொந்தங்களின் படகிலிருந்து புலிகளின் படகுக்கு மாற்றம். எந்த நேரமும் சொடுக்கத் தயாராகும் துவக்குகள். கையைத் தட்டினால் கடல் அலைகளும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் கம்பீரம். நான்கே புலிகள். அழைக்க வந்திருந்தார்கள். கேனல் சேரலாதன்தான் எம்மைக் கைத் தூக்கி புலிகளின் படகுக்குள் இழுத்தார். ‘சேரா’ என்று அன்புடன் அழைக்கப்படும் சேரலாதன், தமிழீழ ஊடகப் பிரிவின் பொறுப்பாளர். ‘ஒளிவீச்சு’ என்னும் ஒளி நாடா ஊடகத்தை உருவாக்கியவர். (இதைப் பார்த்துத்தான் பின்னாளில் ‘தமிழ்மாலை’ என்று மாறன் தொடங்கினார்.) எப்போதும் பாட்டும் பகடியுமாய் இருக்கும் களப்புலி சேரா. இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படியான ஊடகப் புலி நீண்ட கால நண்பர். இவரின் முயற்சியில்தான் இந்த கடல்வழிப் பயண வாய்ப்புக் கிடைத்தது.

தமிழகத்தின் அரசியல் நிலவரத்தைக் கதைத்துக்கொண்டே இழுவை வயரை இழுத்துவிட படகு நெருப்பை இரைத்துக்கொண்டு பறந்தது. வானும் கடலும் ஒரே நேரலையில் சங்கமித்தன. இருளும் அலையும் வெள்ளியை அள்ளிக்கொண்டு வருவது போன்று கடல் அலையை அள்ளி வந்தன. வங்காள விரிகுடா அமைதியானது. புலிகளின் படகு போகிறது. எல்லாம் அமைதியாய் இருப்போம் என்று அமைதியானது. புலிப் படகின் பாய்ச்சல் பேரிரைச்சலாய் கடலைக் கிழித்துக்கொண்டு சீறியது. ஒரு மணி நேரத்தில் நாச்சிகுடா என்னும் நாவலந்தீவில் இறங்கிவிட்டது. படகிலிருந்து கை கொடுத்து வரவேற்றார் கேனல் சிறீராம். (படுகொலையான இசைப்பிரியாவின் கணவர்.) “வாங்க மச்சான்” என்று வரவேற்று அழைத்துப் போனார் வன்னிதேசத்துக்கு.

நாச்சிகுடா தீவில் இறங்கும்போது வேறு படகு ஒன்று புறப்படத் தயாரானது. அந்தப் படகு எங்கு போகிறது என்று கேட்டபோது, கச்சத்தீவுக்குப் போகிறது என்றனர் கடல் புலிகள். அங்குதான் புனித அந்தோணியார் கோவில் இருக்கிறது என்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும், நெடுந்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் உள்ள ஈழத் தமிழர்களும் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வது நீண்டகாலத்து வழக்கம் என்ற கூடுதல் தகவலையும் தந்தனர். அப்போதிருந்தே கச்சத்தீவு போக வேண்டும் என்கிற ஆவல் அவ்வப்போது மேலெழும்பிக்கொண்டே இருந்தது.

இராமேசுவரத்தைக் கூட நெடுந்தீவுக்காரர்கள் ‘தீவு’ என்றுதான் குறிப்பிடுகின்றனர். நீண்ட காலமாக கச்சத்தீவை ஒரு வழிபாட்டுத்தலமாக இரு நாட்டுத் தமிழர்களும் கொண்டிருந்தாலும் வணிகத்திற்கும் பயன்பட்டதாகக் கூறுகின்றனர். 1974ஆம் ஆண்டு, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி - இலங்கை அதிபர் சிறீமாவோ பண்டாரநாயகாவிடம் கச்சத் தீவைக் கையளித்தபின் கச்சத் தீவுக்கு தமிழர்கள் யாருமே போக முடியவில்லை. 1974ஆம் ஆண்டு வந்த கச்சத் தீவு ஒப்பந்‌தத்தில் மொத்தம் 8 விதிகள் உள்ளது. அதில் 5, 6ஆம் விதிகளில் கச்சத் தீவுக்கு மீனவர்கள் போவதற்கோ, புனித அந்தோணியார் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கோ எந்தத் தடையும் இல்லை. யாரிடமும் அனுமதியும் கேட்க வேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் எழுதிய நூலில் கச்சத் தீவு குறித்து இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தமே செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார். திமுககூட இந்த ஒப்பந்தம் செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சட்டப்படி ‘Historical Water’ கடல் பரப்பில் இந்த ஒப்பந்தங்கள் செல்லாது என்பதுதான் சரியானது. ஆனால் எல்லை மீறியதாக, இன்று வரை 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தெற்காசியப் பெருநிலப்பரப்பில் வல்லரசாகத் துடிக்கும் இந்தியாவின் குடிமகனை குருவி சுடுவதுபோல் சுட்டுக்கொல்கிறார்கள். ஆனாலும், வெட்கமே இல்லாமல் வங்காள விரிகுடா கடல் பரப்பில் இந்தியக் கப்பல் படையைச் சேர்ந்த வீரர்கள் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தக் கேவலத்தை கடந்த 28-2-2015 அன்று அனுபவிக்க நேர்ந்தது. கச்சத் தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவுக்குப் போக கடந்த இரு ஆண்டுகளாகவே முயற்சி செய்து வந்தோம். இந்த ஆண்டுதான் அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

28ஆம் தேதி காலை 10 மணிக்கு இராமேசுவரம் கடற்கரைக்கு வரச்சொல்லியிருந்தார்கள். அதற்கு முன்னதாகவே கடற்கரைப் பரப்பெங்கும் கச்சத் தீவுக்குப் போகத் தயாராகும் மக்கள் கூட்டம். தமிழகக் காவல்துறையும் கடலோரக் காவல்படையும் மக்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தது. எமது படகு எண் 89. வரிசை வரிசையாக அழைத்துக் கொண்டிருந்தனர். எந்த வசதியும் செய்து கொடுக்கப்படாத நிலையில் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இந்திய அதிகாரிகள் மட்டும் நிழலில் அமர்ந்திருந்தார்கள். கச்சத் தீவு போகும் பக்தர்களுகளோ கடும் வெய்யிலில் கொதிக்கும் மணற்பரப்பில் காத்திருக்க வேண்டியிருந்தது. எந்த ஒழுங்கும் செய்யப்படவில்லை. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் படாதபாடு படவேண்டியிருந்தது.

காலை 10 மணிக்கு நின்றவர்கள் நண்பகல் 1 மணிக்குத்தான் சுங்க அதகாரிகள் முன் நிறுத்தப்பட்டோம். சோதனைகள் செய்கிறார்களாம்... அவ்வளவு சோதனைகள்! நாவறண்டு தண்ணீர்த் தாகத்தில் மயக்கம் போட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படவோ, முதலுதவி செய்யவோ அங்கு எந்த முகாமும் அமைக்கப்படவில்லை. மந்தை மந்தையாக படகில் ஏற்றிவிட்டு தன் கடமையைச் செய்ததாக திருப்திப்பட்டுக்கொண்டார்கள் சுங்க இலாகா அதிகாரிகள். காவல்துறையின் பல்வேறு கடும் சோதனைகளுக்குப் பிறகு, படகு கச்சத் தீவு நோக்கி விரைந்தது.

கடந்த முறை நாச்சிகுடா தீவு பயணத்திற்கும் கச்சத்தீவுப் பயணத்திற்கும் நிறைய வேறுபாடு இருந்தது. இடையே இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகளும் வீரர்களும் கடலில் ரோந்து வந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு படகிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? குழந்தைகள், பெண்கள் எத்தனை என்று கணக்கைச் சரிபார்த்து சரிபார்த்து அனுப்பிக் கொண்டிருந்தனர். வெள்ளி நிலா கடலுக்குள் குதித்து குதித்து விளையாடுவதுபோல் மீன்கள் துள்ளி துள்ளி படகுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்தன. 

 தமிழினத்தின் அடையாளமாக கடல் நீர் கருப்பு வயப்பட்டிருந்தது. அப்படியே கடல் நீர் குதித்து குதித்து எழுவதுபோல் அலை மேலெழும்பியது. மேலெழும்பிய கடல் அலை நம்முடன் ஏதோ கதைப்பது போலவே இருந்தது. இந்தக் கடல்தான் மாவீரன் கிட்டு உள்ளிட்ட 18 புலிகளை விழுங்கியது. இந்தக் கடல்தான் தங்கச்சி அங்கயற்கண்ணியை உள்வாங்கியது. சிங்கள ஆதிக்க ஒடுக்குமுறையிலிருந்து தப்பிப் பிழைக்க ஓடிய எம் சொந்தங்களைச் சுமந்து சுமந்தே இந்தக் கடல் தள்ளாடுகிறதே... இந்தத் தள்ளாட்டத்தில் எத்தனை பேர் செத்து மடிந்தார்களோ! கடல் பரப்புக்கு மேலே மட்டுமல்ல உள்ளேயும் எம் சொந்தங்கள்.

அதோ... கச்சத் தீவு என்று படகைச் செலுத்திக் கொண்டிருந்த மீனவச் சொந்தத்தைச் சார்ந்த தம்பிகள் கை நீட்டிக் காட்டிய திசையை நோக்கிப் பார்த்தபோது நமக்கு முன்பு ஏராளமான படகுகள் கச்சத் தீவை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தன. 'சயூரா' என்ற ஒரு சிங்களக் கடல் படையைச் சார்ந்த கப்பல் கச்சத் தீவை ஒட்டி நின்றுகொண்டிருந்தது. அதற்கு நேரெதிரிலே ‘விக்ரகா’ என்னும் இந்தியக் கப்பல் நின்று கொண்டிருந்தது. தமிழகப் படகுகள் இந்தியக் கப்பல் படையின் கேப்டன் நினைத்த மாதிரி வராததால் தமிழர்களை மிக மோசமாக நடத்தினார். அவமதிப்புச் செய்ததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த படகுகள் சிங்களக் கப்பலை நோக்கி நகர்ந்தன. அங்கு போனதும் இன்னும் ‘Green signal’ வரவில்லை. போய் அணுகி வாங்கிவரச் சொன்னார்கள். என்ன அனுமதி என்றால் இந்தியக் கடற்படை கேப்டனின் அனுமதி. இவர் சிங்கள அதிகாரிக்கு ‘Green signal’ செய்யவில்லையாம். மீண்டும் இந்திய ‘விக்ரகா’ கப்பலுக்கு வந்து அனுமதி வாங்கிய பிறகே நகர முடிந்தது.

கடற்கொள்ளையர்களை எப்படி நடத்துவார்களோ அப்படி தமிழர்களைப் படகிலேயே வரிசை வரிசையாக மூன்று முறை சுற்ற வைத்து, உட்கார வைத்து எண்ணிவிட்டு விரட்டினார்கள். இந்தி அதிகாரிகளும், மலையாளிகளும் கப்பல் மேல்தளத்தில் நின்று சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்த்தார்கள். ‘சிங்களமும் இந்தியமும் தமிழுக்கு இரட்டைப் பகை’ என்பதை அனுபவரீதியாகக் காண முடிந்தது. 

இரவு 8 மணியளவில் கச்சத் தீவில் இறங்கியபோது, சிங்களக் காவல்துறையும் கடல் படையைச் சேர்ந்தவர்களும் எந்தச் சோதனையுமின்றி உள்ளே அனுமதித்தனர். இந்திய அதிகாரிகளைவிட சிங்கள அதிகாரிகள் மேலானவர்கள் என்று எண்ணும் வகையிலான செயல்பாடுகளைக் கச்சத் தீவில் காண முடிந்தது. கடந்த முறையைவிட பக்தர்கள் அதிகம் என கடற்கரை ஓரத்தில் படுத்துக்கொண்டிருந்தவர்கள் கூறினர். அவர்களுக்குப் பக்கத்திலேயே 89ஆம் எண் படகைச் சேர்ந்தவர்களும் படுத்துக்கொண்டோம். கச்சத் தீவு முழுக்க, அந்த அந்தோணியார் கோவிலைச் சுற்றி எங்கெங்கு இடம் கிடைத்ததோ அங்கெல்லாம் மக்கள் படுத்துத் தூங்க ஆரம்பித்தார்கள். தேவாலயத்தில் இரவு 12 மணி வரை ஜெப ஆராதனைக் கூட்டம் தொடர்ந்துகொண்டே இருந்தது.

“போரில் கொல்லப்பட்டவர்களுக்காகவும், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்காகவும், காணாமல் போனவர்களுக்காகவும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் இன்னும் சிறைப்பட்டிருக்கும் மக்களின் விடுதலைக்காகவும், அம்மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்படியாக ஜெபிப்போமாக..!” என்று ஆராதனைப் பாடல்களுக்கிடையே ஜெபித்தனர்.

ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் சந்தித்துக் கொண்டாலும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டனர். அங்கு போடப்பட்டிருந்த சந்தையைச் சுற்றிக் கூட்டம். சந்தையில் 2 சதவீதம்தான் தமிழர்களின் கடை. மற்றவை சிங்களவர்களின் கடைகளுக்குத்தான் சிங்கள அரசு அனுமதி அளித்திருந்தது. வணிகத்தில் தமிழர்கள் இலாபம் சம்பாதித்து பொருளாதாரத்தில் வலிமையாகிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்ததை கவனிக்க முடிந்தது.

மறுநாள் அதிகாலையே தேவாலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வந்திருந்த யாவரும் தத்தமது காலைக் கடன்களை முடித்துவிட்டு அந்தோணியாரைத் தரிசிக்கத் தயாரானார்கள். சிலர் சந்தைகளில் சிங்களப் பொருட்களை வாங்கவும் வேடிக்கை பார்க்கவும் தயாரானார்கள். காலை 10 மணியளவில் இலங்கையைச் சேர்ந்த நீதிபதி ஒருவரும் இலங்கை கப்பல்படை அதிகாரிகளும் அழைக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மறை மாவட்டப் பேராயர் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இந்திய - இலங்கை மக்களுக்கான கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அமைதி திரும்ப வேண்டுமெனவும், ஈழ மக்களின் அபிலாசைகள் நிறைவேற வேண்டுமெனவும், காணாமல் போனவர்கள் திரும்ப வரவேண்டுமெனவும் எல்லாம் வல்ல தேவாலயத்தில் ஜெபித்தனர். அவரது ஜெபம் விண்ணிலும் கேட்கப்படட்டும் என நாமும் ஜெபித்தோம்.

வரிசை வரிசையாக படகுகள் தயாராய் நின்றன. அவரவர் வந்த படகுகளில் ஏறி ஊர் திரும்பினோம். திரும்பும்போது இந்தியக் கப்பல் ஒன்றில் இந்திய தேசியக் கொடி பறந்து கொண்டிருந்தது. பார்க்கும்போதே அந்தக் கொடியின் மீது நமக்கு மரியாதை ஏற்படுவதற்குப் பதிலாக அருவறுப்புத்தான் ஏற்பட்டது. இந்தக் கொடியைத் தூக்கிக்கொண்டு யாரைப் பாதுகாக்க கடல் பரப்பில் அலைகிறார்கள் என்கிற கேள்வியே கடல் அலைபோல் அடித்துக்கொண்டே இருந்தது.

இராமேசுவரத்தில் இறங்கியபோதும் அங்கே உட்கார்ந்திருந்த இந்திய அதிகாரிகளைப் பார்த்ததும் கோப உணர்ச்சியே மேலெழுந்தது. கடலில் மீன்பிடிக்கப் போகும் மீனவர் சொந்தங்களைக் காப்பாற்றத் துப்பில்லாத இவர்களுக்கு என்ன மரியாதை? என்ன வல்லரசு நாடு இது? இவர்களுக்கு ஒரு கொடி தேவைதானா? என்கிற கேள்விகள் நம்மைத் துளைத்துக்கொண்டே இருந்தன. இந்த இலட்சணத்தில் இந்திய - இலங்கைப் படகுப் பயணம் என்கிற அறிவிப்பு வேறு. 

 சொந்த நாட்டுத் தமிழர்களைக் காவுகொடுத்தேனும் இந்தியா தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தயாராகிவிட்டது.

வன்னி அரசு.

கச்சத் தீவு பயணத்தின் புகைப்படத் தொகுப்பு: