22 February 2015

இன்னுமாடா இந்த ஒலகம் ஒங்கள நம்புது?

அண்டப்புளுகனும் ஆகாசப்புளுகனும் தனித்தனியாக புளுகினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது, அந்த பேட்டி. அதுவும் அப்பனும் புள்ளையுமே அந்த புளுகர்களாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு மக்களை ஏமாளிகளாக்கி விடுவார்கள். அப்படித்தான் அண்டப்புளுகன் ராமதாசின் நேர்காணல் புதிய தலைமுறையிலும் ஆகாசப்புளுகன் அன்புமணியின் நேர்காணல் தந்தி தொலைக்காட்சியிலும் சனிக்கிழமை(21.2.2015) இரவு ஒளிபரப்பாகியது. இரு புளுகர்களையும் அவரவர் வீடுகளில் பேட்டி கண்டார்கள் நெறியாளர்கள்.புதியதலைமுறையில் நேர்காணல் கண்ட திரு.குணசேகரன் அவர்களுக்கு ராமதாசைப் பற்றி நன்றாகவே தெரியும் என்பதால், ஆரம்பத்திலேயே நன்றாக புளுக அனுமதித்தார். அண்டப்புளுகனும் அள்ளி விட்டுக்கொண்டே இருந்தார். இறுதியாக, "முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு தேர்தல் வரைக்கும் தான், தேர்தலில் வந்ததும் மாறிடுவீங்கன்னு மக்கள் பேசிக் கொள்கின்றனர்" என்று கேள்வி கேட்டதும், முகத்தை சுழித்த அண்டப்புளுகன், "இது எங்களை இழிவுபடுத்துகிற கேள்வி, இப்படியெல்லாம் தெரிந்திருந்தால் பேட்டிக்கே ஒத்திருக்க மாட்டேன்" என்று பிகு செய்தார். இறுதியாக ஒரு கேள்வி என்று திரு.குணா கேட்ட போது கூட, எதுவுமே இல்லை என்று கடுகடுப்பாக முடித்து விட்டார்.

வெகு மக்களின், பல கட்சிகளின் சந்தேகமல்ல, உறுதியாக நம்பப்பட்டதையும் கடந்த கால புளுகுகளையும் மனதில் வைத்து தான் திரு.குணா கேள்வியாக ஆதங்கமாக கேட்டார். இதற்கு கூட அந்த அண்டபுளுகனால் பதில் சொல்ல முடியவில்லை. இதில் கோபம் வேறு.

தமிழக மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியாது. தேசிய கட்சிகளோடும் திராவிடக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை என்று ஊர் ஊராய் புளுகி விட்டு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே தேசியக்கட்சியான பாஜகவுடனும், திராவிடக்கட்சியான மதிமுகவுடனும் கூட்டணி வைத்தார். அதற்கு முன்பு வரை சாதிவெறி அமைப்புகளை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு மாவட்டம் மாவட்டமாக படங்காட்டி விட்டுத்தான் பாஜகவுடன் பேரம் பேசினார். இது ஊர் உலகத்திற்கு தெரிந்த கதைதான். கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல், இப்படி தெரிந்தால், பேட்டிக்கே வந்திருக்க மாட்டேன் என்று சொல்வது தான் பதிலா? பாவம் இதற்கு எந்த பொய்யும் கிடைக்காததால் கோபத்தை மட்டும் வெளிப்படுத்தினார்.

அடுத்து நம்ம ஆகாசப்புளுகன். அப்பன் 8 அடி பாய்ந்தால் புள்ளை 16 அடி பாய்வார்கள் என்று கிராமப்புற பழமொழி உண்டு. அதைப்போல, அண்டப்புளுகனை மிஞ்சுகிற ஆகாசப்புளுகனாக அன்புமணி, தந்தி தொலைக்காட்சியில் அள்ளி விட்டார். நேர்காணல் கண்ட திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் எந்த கேள்வியையும் முடிக்கும் முன்பே முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு பதில் என்கிற பெயரில் புளுகிக்கொண்டு இருந்தார். "இதற்கு முன்பு தலித் ஒருவரைத்தான் முதலவராக்குவதாக நீங்கள்" என்று கேள்வியை முடிக்கும் முன்பே, "அதெல்லாம் பழசுங்க. இப்ப என்னன்னு பேசுங்க. ஓட்டை ரிக்கார்டு மாதிரி சொன்னதையே சொல்லாதீங்கன்னு கோபத்துடன் சொல்லிவிட்டு, தலித் எழில்மலைக்கு மத்திய அமைச்சரு, பொதுச்செயலாளர் ஒரு தலித் என்று ரொம்ப காலத்து ஓட்டை ரிக்கார்டை ஓடவிட்டார். "தமிழகம் முழுக்க 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியுமா?" என்று அடுத்த கேள்வியை முடிக்கும் முன்னரே, "ஏன் முடியாது? ஏற்கனவே 234 தொகுதிகளிலும் நின்றுருக்கிறோம்" என்று ஆகாசப்புளுகை அள்ளி விட்டார். "உங்கள் தலைமையை ஏற்று மற்ற கட்சிகள் வரலாம் என்று சொல்லியிருக்கிரீர்கள். எந்த கட்சி வரும் என்று எதிர்பார்க்கிரீங்க? விஜயகாந்த், வைகோ உங்கள் தலைமையை ஏற்பார்களா? என்று திரு.பாண்டே கேட்டதற்கு, "வருவார்கள். அரசியலில் எதுவுமே நடக்கும்" என்று ஜோதிடத்தை நம்புவது போல எந்த வெட்கமும் கூச்சமும இல்லாமல் சொன்னது தான் காமெடியிலும் காமெடி. அதாவது, சந்தானம், சூரி போன்ற காமெடியர்களுக்கு துணை பாத்திரமாக விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களை அழைப்பது போல தான் இந்த ஆகாசப்புளுகனின் ஆசை இருக்கிறது.

"உங்கள் வாக்கு வங்கி என்ன? உங்கள் பலம் தெரிந்துதான் முதல்வர் வேட்பாளரை அறிவித்தார்களா?" என்று அடுத்தடுத்த எந்த கேள்விகளுக்குமே, "அரசியலில் எதுவும் நடக்குமுங்க, மக்கள் நம்புறாங்க மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்" என்று சீரியசாக காமெடி செய்தார். பெரும்பாலும் நான் இரவில் ஆதித்யா, சிரிப்பொலி தொலைக்காட்சிகளைத்தான் பார்ப்பது பழக்கம். ஆனால், அதையெல்லாம் மிஞ்சக்கூடியதாக ஜாலியாக இருந்தது ஆகாசப்புளுகனின் பொய்யுரை.

இடையிடையே நாங்க ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீங்கன்னு தயவு செய்து கேளுங்க.. கேளுங்க என்று அடுத்த பெரிய புளுகுகளை புளுகுவதறகு வாய்ப்பு கேட்டுக்கொண்டிருந்தார் ஆகாசப்புளுகன். ஆனால், திரு.பாண்டே அவர்களின் வழக்கம் போலான சாதுரியத்தால், "தேர்தல் நேரத்தில், தேர்தல் அறிக்கையை முன்வைத்து அப்போது கேட்கலாம்" என்று மக்களை காப்பாற்றினார். அப்படியும் விடாமல், "நாங்க ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதை செய்வோம், மிஸ்டு கால் கொடுக்க வைப்போம் (ஏதோ புதிய கண்டுபிடிப்பு மாதிரி) கள்ளச்சாராயம் இருக்காது, அது இருக்காது, இது இருக்காது என்று பள்ளிக்கூடத்தில்" நான் முதலைமைச்சர் ஆனால்.." என்கிற தலைப்பில் மாணவர்கள் ஒப்புவிப்பது போல ஒப்புவித்துக்கொண்டிருந்தார். திரு.பாண்டே எவ்வளவோ முயன்று மற்ற கேள்விகளுக்கு நகரந்தாலும் பாவம் அவரால் முடியவில்லை. வேறு வழி இல்லாமல் ஆகாசப்புளுகனுக்கு முதல்வராக வாழ்த்துச்சொல்லி புளுகை முடித்து வைத்தார்.

பொய் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என்று முடிவெடுத்த பிறகு, எப்படி வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் புளுகிக்கொண்டே இருக்கலாம். அந்த கோயபல்சு கூட வெட்கப்படுமளவுக்கு பொய்யுரைக்கலாம். அதுவும் சொந்த வன்னிய மக்களை ஏமாற்றி மற்ற கட்சிகளுடன் பேரம் பேசுவதற்காகத்தான் இந்த 'முதல்வர் வேட்பாளர்' காமெடி நாடகம் என்பதை அப்பாவி வன்னிய மக்களே புரிந்து கொண்டிருக்கும் போது, மற்றவர்களுக்கு புரியாதா என்ன? 

டே...இன்னுமாடா இந்த ஒலகம் ஒங்கள நம்புது?

-வன்னி அரசு.

0 comments:

Post a Comment