27 May 2015

உன் நினைவுகளே எம்மை இழுத்துச் செல்கிறது!

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு (குறள் 783 - நட்பு-பொருட்பால்)

சிறந்த நூல்களைப் படிக்கப் படிக்க இன்பம் கிடைப்பதைப்போல, நல்ல நண்பர்களின் நட்பும் அப்படித்தான் என்று சொன்ன திருவள்ளுவரின் நட்பு அதிகாரத்திற்கு இலக்கணமானவர் அவர்.நூல்களைப் படிக்கப் படிக்க எப்படி இன்பமோ, அப்படித்தான் அந்த மனிதரிடம் பேசப் பேச இன்பம்.. பழகப் பழக இன்பம். உடன் பயணம் செய்யச் செய்ய களைப்பில்லாத இன்பம். அவர் உடனிருந்தால் நேரம் போவதே தெரியாது. அவர் இருக்கும் இடமே ஒரே கலகலப்பாகத்தான் இருக்கும்.

இப்போது அந்தக் கலகலப்பு காணாமல் போய்விட்டது. அந்தச் சிரிப்பு சிதைந்துபோய் விட்டது. எப்போதும் எல்லோருக்கும் நலன்தரும் அந்தத் தோப்பு சாய்ந்துவிட்டது. அந்தக் கப்பல் கவிழ்ந்துவிட்டது. அன்பைச் சுமந்து பயணித்த அந்த உடல் புதைக்கப்பட்டுவிட்டது. இவ்வளவுகாலம் எங்களோடு பயணித்த அந்த மாமனிதர் இப்போது எங்களுடன் இல்லை. அவரது நினனவுகளைச் சுமந்துகொண்டே பயணித்தாலும் பாரம் தாங்க முடியவில்லை. சோகம் அழுத்திக்கொண்டே இருக்கிறது. திடீர் திடீரென கண்கள் கண்ணீரை வாரி இரைக்கின்றன. வலிமை மிகுந்த இதயம் வலிப்பதுபோல் இருக்கிறது. எப்போதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கும் அந்த மாமனிதர் இப்போது எங்களோடு இல்லை. அவர் இருக்கும் இடத்தில் கவலையும் சோகமும் காணாமல் போய்விடும்.

ஆம்... இப்போது வெற்றிச்செல்வன் காணாமல் போய்விட்டார். கவலையும் துக்கமும் நம்மைச் சூழ்ந்துகொண்டன. யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத அந்த மாமனிதனை வாரிக்கொடுத்துவிட்டு நடைப்பிணமாக நடமாடிக் கொண்டிருக்கிறோம்.

சென்னை, அசோகர் நகர், 100 அடிச்சாலையில், விடுதலைச் சிறுத்தைகளின் திடலில்தான் அந்த மனிதரை முதன்முதலில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது எழுச்சித்தமிழரின் களப்பணியில் கால் நூற்றாண்டு விழா பணிகளில் மூழ்கியிருந்தேன். சிறப்பு மலர் தயாரிப்புக்காக திடலிலேயே இரவு பகல் தங்கி பணி செய்துகொண்டிருந்த சூழலில், ஒரு நாள், "நான் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் தோழர்" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி, ஆனால் மார்க்சியச் சித்தாந்தத்தை உள்வாங்கியதோடு, சிறுத்தைகளில் தன்னை இணைத்துக்கொண்டதைப் பெருமையாகச் சொன்னார். 'களப்பணியில் கால் நூற்றாண்டு' மாநாட்டுக்காக அவர் செய்த விளம்பரங்கள்தான் அனைத்துச் சிறுத்தைகளையும் அவரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தன. அந்த அளவிற்கு தன்னுடைய பெயர்தாங்கிய கட்-அவுட்கள், பதாகைகள், சுவரொட்டிகள், செய்தித்தாள் விளம்பரங்கள் என்று சென்னையையே மிரள வைத்தவர்.

தலைவர் மீதும் கட்சியின் மீதும் அடங்காப் பற்றுக்கொண்டவர். தலைவருடைய செயல்பாடுகளை எப்போதும் பெருமையாகப் பேசிக்கொண்டேயிருப்பவர். அவரின் இந்த உணர்வுதான் வெற்றிச்செல்வனோடு எனக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது. ஆண்டுக் கணக்கு ஆறேழு ஆண்டுகளேயானாலும், அறுபது ஆண்டுகால நட்பைப் போல அது மாறியது. உற்ற தோழனாக, நம்பிக்கை நண்பனாக, கட்சியிலும், கட்சிக்கு வெளியிலும் பெருமையாகப் பேசிக்கொள்ளும் வகையில் எங்கள் நட்பு இறுக்கமானது. எனது வாழ்வில் நம்பிக்கைக்குரிய நண்பனாக வெற்றிச்செல்வன் முன்நின்றார். என்னை எங்குமே அவர் விட்டுக்கொடுத்ததில்லை. எனக்காக வாதாடுவார். நான் எங்காவது தவறுதலாகப் பேசியிருந்தால்கூட, "யோவ் ஏன்யா இப்படி பண்ற?" என்று உரிமையுடன் கண்டிப்பார், திட்டுவார். 
அப்படிப்பட்ட அந்த மனிதரைத்தான் கடந்த மே 20 அன்று அதிகாலை அவர் வாழ்ந்துதிரிந்த அலுவலகப் படிகளிலேயே வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். துரோகமே அவரைச் சாய்த்துவிட்டது. இவ்வளவு காலமும் வெற்றிச்செல்வனின் நிழலிலேயே வாழ்ந்த அந்தக் கோடரி, நிழல்தந்த அந்த மரத்தையே வெட்டிச் சாய்த்துவிட்டது.

எப்போதும் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வெற்றியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்துவிடும். அரை மணி நேரத்திற்கு மேலாக அரசியல், சினிமா, கட்சி நிலவரம் என்று அனைத்தும் குறித்து விவாதிப்பார். முதல்நாள் நடந்த எல்லாவற்றையும் விளக்குவார். அப்படித்தான் மே 20 காலை 6.35க்கு என் தொலைபேசியில் அவர் தொடர்புகொண்டுள்ளார். தவறியழைப்பைப் பார்த்து 7 மணிக்கு அவரைத் தொடர்புகொண்டு பேசினேன். வழக்கம்போல், "என்ன... தலதளபதி! என்னய்யா பண்ற? வாக்கிங் போய்ட்டு வந்துட்டயா?" என்று என்னைக் கலாய்த்துக்கொண்டே, நடந்துகொண்டிருக்கும் நிலப் பிரச்சனை தொடர்பாக விளக்கியவர், 26ந்தேதி பிரச்சனை முடிவுக்கு வரப்போவதாக நம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு, "வெள்ளிவிழாவையொட்டி தலைவருக்கு எதுவும் பண்ணல. இந்தப் பிரச்சனை முடிஞ்சதும் ஆகஸ்டு 17 தலைவர் பிறந்த நாளைக்கு எதாவது பண்ணணும்யா" என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, வழக்கம்போல "சந்திப்போம்" என்று தொலைபேசியைத் துண்டித்தார்.

அடுத்த 15 நிமிடங்களில் தம்பி அகரனிடமிருந்துதான் அந்தத் துயரச் செய்தியைக் கேள்விப்பட்டேன். 'அடப்பாவி இப்போதுதானே பேசினேன். அதெப்படி அதற்குள் இந்தக் கொடூரம் நடந்திருக்கும்' என்று துடிதுடித்தவாறு வெற்றிச்செல்வன் எண்ணுக்குத் தொடர்புகொண்டேன். தொலைபேசியை எடுத்து, 'என்ன தலதளபதி?' என்று மீண்டும் என்னைக் கலாய்க்க மாட்டாரா? என்று ஏங்கியபடி காத்திருந்தேன். அவரது தொலைபேசியிலிருந்து அந்த அம்மா பாடல் 'ரிங்டோன்'தான் கேட்டுக்கொண்டேயிருந்தது. அவர் எந்த அம்மாவை நேசித்தாரோ அந்த அம்மாவைத் தேடியே போய்விட்டார். நானோ அனாதையாகிவிட்டேன்.

பொதுவாக அரசியல் என்பதே போட்டி நிறைந்ததுதான். காட்டிக்கொடுப்புகளும், காலை வாரிவிடுவதும்தான் நான் கடந்த 20 ஆண்டுகளாகச் சந்தித்துவரும் அரசியல். யாரையும் நம்ப முடியாது. எல்லோரையும் நாம் நேசித்தாலும் நம்மை நேசிக்க யாரும் இருக்க மாட்டார்கள். இந்தச் சூழலில்தான் உண்மையான அன்பையும், நட்பையும், கள்ளம் கபடமில்லாச் சிரிப்பையும் சுமந்த ஒரு மாமனிதர் கிடைத்தாரென்றால் அவர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன்தான். தவறுகளை நேருக்கு நேராகச் சுட்டிக்காட்டும் துணிச்சல்காரர். அதேபோல்தான் அண்ணன் தகடூர் தமிழ்ச்செல்வன் அவர்களும். நாங்கள் மூவரும் இணைந்து கட்சிப் பணிகளை, தலைவர் கட்டளையிட்ட பணிகளைச் செய்துவந்தோம். அரசியலில் உண்மையாய் இருப்பது சிரமம். ஆனால் நாங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய், நம்பிக்கையாய் இருந்தோம். அரசியலில் மட்டுமல்ல, வீட்டு நிகழ்வுகளையும் அப்படியே பகிர்ந்துகொண்டோம்.வெற்றிச்செல்வன் எப்போது பார்த்தாலும் "வன்னி ஐ லவ் யூ" என்று கிண்டலாகச் சொல்லுவார். காதலும் நகைச்சுவையும் மிகுந்த வெள்ளை மனிதராக, சிறந்த அறநெறியாளராக வாழ்ந்தவர். நண்பர்களின் சட்டைப் பையில் உரிமையுடன் கையைவிட்டுத் துலாவி அதில் பணம் இல்லை என்றால் பணத்தைத் திணிக்கும் வள்ளலாகவும் இருந்தவர். எதைப் பற்றியும் விவாதிப்பார். உடனடியாக அதைப் பற்றிய தனது கருத்தை முகநூலில் பதிந்துவிடுவார். கட்சியையும் தலைமையையும் விட்டுக்கொடுக்காமல் துணிச்சலாக வாதாடிவந்தார். தலைவர் மீது அவ்வளவு காதல் கொண்டவர்.பாம்புகளும் ஓநாய்களும் நரிகளும் சிங்கங்களும் உலவுகிற இந்த அரசியல் உலகில் நல்ல மனிதராக வாழ்ந்தவர் வெற்றிச்செல்வன். அவதூறுகளும், அவமதிப்புகளும், துரோகங்களும், ஏமாற்றங்களும், மோசடிகளும், ஜால்ராக்களும் நிலவுகிற அரசியல் களத்தில் உண்மை, அன்பு, நம்பிக்கை என்று உயர்ந்து நின்றவர் வெற்றிச்செல்வன். ஆயிரமாயிரம் தம்பிகளுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்துகொண்டே இருந்தவர். தமிழகம் முழுக்க மாவட்டத்திற்கு பல நூறு தம்பிகளைக் குடும்ப உறவாகக் கொண்டவர்.

அப்படிப்பட்ட மாமனிதரை இழந்ததன் மூலம் அவரை நேசித்த சக்திகள், நண்பர்கள், தோழர்கள் சிரிப்பைத் தொலைத்து நிற்கிறோம். ஆறுதலைத் தொலைத்து நிற்கிறோம். அரவணைப்பைத் தொலைத்து நிற்கிறோம். காதலைத் தொலைத்து நிற்கிறோம். நட்பின் இலக்கணத்தைத் தொலைத்து நிற்கிறோம்.

வெற்றி... உன்னைப் பாதுகாக்க முடியாத குற்றவாளிகளாக நாங்களும் கூனிக்குறுகி நிற்கிறோம்.

போக வேண்டிய பயணமோ வெகுதூரம். அத்தனை தூரத்திலும் மனிதன் ஒருவன் கூட இல்லை. எவ்வளவு தூரத்திலும் உன் நினைவுகளே எம்மை இழுத்துச்செல்கிறது.

வன்னி அரசு.

0 comments:

Post a Comment