05 November 2013

முள்ளிவாய்க்கால் முற்றமும் மன்னிக்காது!

ஓர் உன்னதமான விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டவர் மேதகு பிரபாகரன் அவர்கள். சிங்கள இனவெறியர்களால் ஒடுக்குமுறைக்குள்ளான தமிழினத்தை விடுவிக்க களத்தில் வெடித்தவர்; தமிழர் விடுதலைக்காகவே துடித்தவர்; அதற்காகவே புலிப்படை படைத்தவர்.
1956ஆம் ஆண்டு இலங்கை அதிபர் பண்டாரநாயகா சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று பிரகடனப்படுத்தியதை எதிர்த்து தமிழர்கள் கொதிப்புற்றனர். இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 1956 சூன் 5ஆம் நாள் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்உள்ள காலி முகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இப்போராட்டத்தில் தமிழறிஞர் வனப்பிதா தனிநாயகம் அடிகளார் கலந்துகொண்டு சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராக முழங்கினார். இதனால் சிங்கள இனவெறியர்கள் தமிழர்கள் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் உக்கினியாகலை அருகில் உள்ள கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கில் நிறுவப்பட்டிருந்த கரும்புத் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த தமிழர்கள் மீதுதான் முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவும் அம்பாறையில் குடியேற்றப்பட்ட சிங்களர்களால்தான் அக்கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தமிழர்கள் 150 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் முதல் இனப்படுகொலை என்று இலங்கை அவசரகாலச் சட்ட நூல் தெரிவிக்கிறது.
இதற்கடுத்து தொடர்ச்சியான படுகொலைகள் பல மாவட்டங்களில் நிகழ்த்தப்பட்டன. தலைநகர் கொழும்பில் தினமும் தமிழர்கள் கொல்லப்பட்டனர். சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று அறிவித்துவிட்டு தமிழ் மொழியைப் புறக்கணித்ததால் ஏற்பட்ட புறக்கணிப்பு அரசியலிலிருந்து இனப்படுகொலை அரசியல்ரீதியாகவே பகிரங்கமாகவே நிகழ்த்தப்பட்டது. ஈழத் தந்தை செல்வாவும், பண்டாரநாயகாவும் 26-7-1957 அன்று ஓர் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். தமிழ்மொழிக்கு சம உரிமை தொடர்பான அவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன கண்டிக்கு யாத்திரை கிளம்பினார். ஜெயவர்த்தனேவின் பிரச்சாரம் நாடு முழுக்க தமிழர்கள் மீது வெறுப்புணர்ச்சியைத் தூண்டியது (இப்போது இராமதாஸ் தலித்துகளுக்கெதிராகச் செய்வதுபோல்). தமிழர்கள் எல்லா நிலையிலும் எல்லா இடங்களிலும் புறக்கணிக்கப்பட்டனர். சூன் 1, 1981ஆம் அன்று தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான யாழ் நூலகத்தை இலங்கை இராணுவம் தீக்கிரையாக்கியது. இதில் 97,000 நூல்களும் சாம்பலாயின. அத்தனையும் வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்கள். 
இவ்வெறியாட்டத்திற்குப் பிறகு இனப்படுகொலைகள் தீவிரமாகின. சூலை 25, 1983 - திருநெல்வேலிப் படுகொலை, 1984 - வவுனியா மாவட்டம், சாம்பல் தோட்டம் படுகொலை; யாழ் மாவட்டம் சுண்ணாகம் காவல்நிலையப் படுகொலை; மார்ச் 28, 1984 - சுண்ணாகம் சந்தைப் படுகொலை; 1984 செப்டம்பர் - அனுராதபுரம் மாவட்ட எல்லை கிராமமான மதவாச்சிப் படுகொலை; 16-9-1984 - பருத்தித்துறை, சிக்கம் படுகொலை; 1984 திசம்பர் 1 - முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுச்சுட்டான், ஓதியமலை படுகொலை; திசம்பர் 2, 1984 - முல்லைத் தீவு மாவட்டம் குமுழுமுனைப் படுகொலை, அதே நாளில் வவுனியா மாவட்டம் செட்டிகுளத்தில் படுகொலை என்று 1980களில் தொடங்கி தமிழர்கள் இன்றுவரை கொத்துக்கொத்தாகக்கொல்லப்பட்டு வருகின்றனர். சிங்கள இனவெறியர்களோடு இணைந்து இராணுவமே கொலைவெறியாட்டத்தை நடத்தியது. இத்தகைய சூழலில் வேறு வழியில்லாமல் காலம் தமிழர்களிடத்தில் ஆயுதத்தைக் கையளித்தது. ஆயுதங்களை மட்டுமல்லாது, பிரபாகரன் என்கிற போராளித் தலைவனையும் காலம் பிரசவித்தது. 
சிங்களர்களின் ஒடுக்குமுறைக்கெதிராகவும், புறக்கணிப்புகளுக்கெதிராகவும், பிரபாகரன் முன்னெடுத்த போராட்டங்களை வரலாறு திரும்பிப் பார்த்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அந்த அறம்சார்ந்த போராட்டங்கள் உலகம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்களாக மாறின. ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலை வேட்கையாக புலிகள் உச்சரிக்கப்பட்டனர். உலகம் முழுக்கப் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மேதகு பிரபாகரன் அவர்களின் போராட்டத்தை ஆதரித்தனர். அப்படிப் புலிகளின் போராட்டத்தை வெளிப்படையாக தமிழகத்தில் ஆதரித்த இயக்கங்களில் முக்கியமானது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். 
1990க்கு முன்பு விடுதலைப் புலிகளுக்கான ஆதரவும், அவர்களின் நடமாட்டமும் வெளிப்படையாக இருந்தது. ஆனால், 1991 மே 21க்குப் பிறகு அதாவது, இராஜீவ் கொலையுண்டதற்குப் பிறகு தமிழகத்தில் விடுதலை என்ற சொல்லையே உச்சரிக்கத் தயங்கினர். புலிகளை ஆதரித்தவர்கள் ‘தடா’ சட்டம் போன்ற தேசத் துரோகச் சட்டங்கள் மூலம் அச்சுறுத்தப்பட்டனர். இச்சூழலில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக 1991ஆம் ஆண்டு இறுதியில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார் திருமாவளவன் எனும் இளைஞர். அந்த இயக்கத்திற்கு ‘விடுதலைச் சிறுத்தைகள்’ என்று பெயர் சூட்டினார். விடுதலை எனும் பெயரையே உச்சரிக்கப் பயந்த அந்த நெருக்கடி காலத்தில் ‘விடுதலைப் புலிகளின் தாக்கத்தால்தான் விடுதலைச் சிறுத்தைகள் என்று பெயரைச் சூட்டினேன்' என்று வெளிப்படையாகவும் துணிச்சலுடனும் அறிவித்தார். அறிவித்தது மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்று நெஞ்சுறுதியுடன் பிரகடனம் செய்தார்.
சாதியச் சிக்கல்கள் நிறைந்த தமிழகத்தில் - சாதியின் பெயரால் புறக்கணிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் திருமாவளவன். சிங்கள இனத்தில் ஒடுக்குமுறையிலிருந்து உருவானது விடுதலைப்புலிகள் இயக்கம். சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து உருவானது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். தேர்தல் புறக்கணிப்பு அரசியல் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டிய காலத்திலிருந்து, தமிழ்த் தேசிய அரசியலைச் சேரிகளில் விதைக்க ஆரம்பித்தார் திருமாவளவன். சாதிஒழிப்பும் தமிழ்த்தேசியமும் என்கிற எழுச்சி முழக்கம் சேரி இளைஞர்களிடையே முன்வைக்கப்பட்டது. அதனால்தான் மற்ற தலித் அமைப்புகளிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் முற்றிலும் மாறுபட்ட அமைப்பாகக் கவனிக்கப்பட்டது. வெகுமக்கள் மட்டுமல்லாது, அரசும் கூர்ந்து கவனித்தது. விடுதலைச் சிறுத்தைகளைக் கவனிப்பதற்காகவே ஒற்றுத்துறை ஒன்று இயங்கியது. ஆனால், எதற்கும் அச்சப்படாமல் துணிச்சலுடன் விடுதலைச் சிறுத்தைகளை வழிநடத்தினார் திருமாவளவன். 
1983ஆம் ஆண்டு மாணவராக இருந்தபோதே, மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராட்டங்களை முன்னெடுத்தது போல, மற்ற சனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து தற்போது தமிழ்த் தேசியக் களத்தில் களமாடி வருகிறார். 1984ஆம் ஆண்டு மாணவர் பருவத்தில் ‘விடுதலைப்புலி’ எனும் கையெழுத்து இதழ் நடத்தியது மட்டுமல்லாது, அதே ஆண்டில் பெரியார் திடலில் கவியரசர் கண்ணதாசன் பேரவை சார்பில் ஈழ விடுதலை ஆதரவு மாணவர் மாநாட்டை ஒருங்கிணைத்தார். மாணவப் பருவத்தில் தொடங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது - வலிமையாக... விரிந்த களத்தில்.
1991ஆம் ஆண்டு இராஜீவ் கொலைக்குப் பிறகு தமிழ்நாடு எப்படி ஒரு நெருக்கடி நிலையைச் சந்தித்ததோ அதைவிடக் கடும் நெருக்கடியை 2001ஆம் ஆண்டு தமிழகம் சந்தித்தது. ஜெயலலிதா அம்மையார் வெளிப்படையாகவே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மீது யுத்தத்தைத் திணித்தார். விடுதலைப் புலிகளை ஆதரித்த பெரும்பாலானோர் ‘பொடா’வில் தளைப்படுத்தப்பட்டனர். பிரபாகரன் பெயரையோ அவரது படத்தையோ பயன்படுத்துபவர்களுக்கு சிறைக்கதவு திறந்தே வைக்கப்பட்டிருந்தது. இச்சூழலில், அடுத்த கைது திருமாவளவன்தான் என்று ஊடகங்கள் ஆரூடம் கூறின. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில்தான் 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். புலித் தளபதிகளோடு பயணமானார். புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களைச் சந்தித்தார். தமிழகம் திரும்பியதும் கைது செய்யப்படலாம் என்று தங்களது விருப்பத்தை தலைப்புச் செய்திகளாக்கின ஊடகங்கள். “தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன்; கைது நடவடிக்கைக்கு அஞ்ச மாட்டேன்!” என்று விமான நிலையத்திலேயே செய்தியாளர்களிடம் முழங்கினார். தமிழக அரசின் அடக்குமுறைக்கெதிராக அடங்க மறுத்து, அதிரடிப் பாய்ச்சலில் பயணித்தது சிறுத்தைகள்.
இச்சூழல் குறித்து, யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழ்மண் இதழுக்கு (சனவரி 2008) அளித்த நேர்காணலின்போது, “பழ.நெடுமாறன், வைகோ போன்றவர்களின் கைதுக்குப் பின்பு தற்போது விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசக்கூடாது என்கிற பிரச்சாரத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் கொஞ்சம் அடிபணிந்திருந்தால் ஈழப் போராட்ட ஆதரவுக்கான சவப்பெட்டியின் கடைசி ஆணியை அடித்து முடித்திருப்பார்கள். ஆனால் அதற்குக் கொஞ்சமும் இடம்கொடுக்காமல் விடுதலைச் சிறுத்தைகள் அந்த சக்திகளின் முயற்சியைத் தகர்த்து விட்டார்கள். ஈழப் போராட்டத்திற்கான ஆதரவு தமிழகத்தின் இனி அதிகரிக்கத்தான் செய்யும். அதைத் தடுக்க முடியாத அளவிற்கு விடுதலைச் சிறுத்தைகளின் செயல்பாடுகள் இத்தருணத்தில் சரியாக இருக்கிறது. தமிழகத்தில் கருத்துரிமைக்கு எதிரான நெருக்கடியை இறுக்கமான சூழலை விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் உடைத்திருக்கிறார். ஏனென்றால், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கடத்துவது பெருமைதான் என்று வெளிப்படையாகப் பேசியதன் மூலம் அத்தகைய இறுக்கம் பிசுபிசுத்துப் போய்விட்டது. விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் கொஞ்சம் யோசித்துச் செய்வோம், கொஞ்சம் அடக்கி வாசிப்போம் என்று பின்வாங்கியிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும்” என்று உண்மையை உலகுக்கு உரத்துக் கூறினார். இன்றைக்கும் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழீழ மக்களுக்காக முதல்வர் விக்னேஸ்வரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
அப்படித்தான் ஜெயலலிதா அம்மையாரின் நெருக்கடிகளை உடைக்கும் வகையில் 23-11-2001 அன்று திருச்சி உறையூரில் ‘பொடா’ எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று வெளிப்படையாக அறிவித்து அதற்கான செயல்திட்டங்களையும் மேற்கொண்டார். ‘பொடா’வை எதிர்த்து தொடர்ச்சியாக தமிழகத்தில் முழக்கமிட்ட ஒரே தலைவர் திருமாவளவன்தான். இதன் தொடர்ச்சியாக கடந்த 5-8-2002 அன்று சென்னை பாம்குரோவ் விடுதியில் பொடா எதிர்ப்பு முன்னணியை உருவாக்கும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் அய்யா நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர் டி.கே.ரங்கராஜன், சுப.வீரபாண்டியன், விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். பொடா எதிர்ப்பு முன்னணியை உருவாக்கியதன் மூலம் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை எதிர்த்து தமிழகம் முழுக்க போராட்டங்களை முன்னெடுத்தார் திருமாவளவன். கடைசிவரை பொடாவை எதிர்த்துப் போராடியது சிறுத்தைகள்தான்.
இதையொட்டி சூலை 2003ஆம் ஆண்டு தமிழகம் முழுக்க அடக்குமுறைச் சட்டங்கள் எதிர்ப்பு மாநாடுகள் மண்டலவாரியாக சிறுத்தைகளின் சார்பில் நடத்தப்பட்டன. பிப்ரவரி 16, 2006 அன்று ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு ஒன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் இலட்சக் கணக்கான இளைஞர்கள் ஆர்த்தெழுந்தனர். 16-6-2006 அன்று தமிழகமெங்கும் ஈழத்தமிழர் பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள், 6-7-2006 அன்று மயிலை மாங்கொல்லையில் ஈழத்தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் என்று விடுதலை அரசியலுக்கான நெருப்பை சிறுத்தைகள் தொடர்ந்து அடைகாத்தது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வனின் படுகொலைக்குப் பிறகு, தமிழகத்தில் இரங்கலுக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. இத்தருணத்தில்தான் ‘கண்டனமும் இரங்கலும் தேசத் துரோகமா?’ என்கிற முழக்கத்தோடு சனவரி 25, 2008 அன்று கருத்துரிமை மீட்பு மாநாடு சென்னையில் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. யார் வாய்மூடிக் கிடந்தாலும் நாங்கள் வாய்மூடி இருக்க மாட்டோம் என்று முழங்கினார்.
இதனையடுத்து தமிழகத்திலிருந்த இறுக்கம் தளர்ந்தது. விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளின் தமிழீழ அரசியலை மையப்படுத்தியும், ஆதரித்தும் பல மாநாடுகளை தலைநகர் சென்னையிலேயே நடத்திக் காட்டியது. 2008 நவம்பர் மாதம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், ‘இந்திய அரசே போரை நிறுத்து! ஈழத் தமிழரைக் காப்பாற்று!’ என்கிற முழக்கங்களோடு அடுத்தடுத்த போராட்டங்களை அறிவித்தார். அக்டோபர் 23, 2008 அன்று இரயில் மறியல் போராட்டம்; 6-11-2008 - மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் உண்ணா நிலைப் போராட்டம், 11-11-2008 அன்று தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் தொடர்முழக்கப் போராட்டம், 18-11-2008 அன்று முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் பேரணி என தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஈழப் போராட்ட நெருப்பைப் பற்றவைத்தது சிறுத்தைகள். இதன் தொடர்ச்சியாக தமிழீழத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுமென்று வலியுறுத்தி, 26-12-2008 அன்று தமிழீழ அங்கீகார மாநாடு சென்னையில் நடைபெற்றது. அரசின் பல தடைகளைத் தகர்த்து இலட்சக்கணக்கான சிறுத்தைகள் புல்லாரெட்டி நிழற்சாலையை நிரப்பினர். 
தமிழீழ மக்கள் மீதான போரை நிறுத்த பலகட்டப் போராட்டங்களை நடத்திய பிறகும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் போர் நிறுத்தப்படவில்லை. இதன் உச்சகட்டமாகத்தான் தலைவர் திருமாவளவன் அவர்களே, தமது உயிரை ஆயுதமாகப் பயன்படுத்தத் துணிந்தார். 15-1-2009 அன்று சென்னை மறைமலைநகரில் உயுராயுதமாக காலவறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். நான்கு நாட்களாகத் தொடர்ந்த அந்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர விரும்பாத சமூகவிரோதிகளின் சதியால் உண்ணாநிலைப் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது. ஆனாலும், தமிழீழத்தின் தேவையை தமிழர்களின் விடுதலை அரசியலை முன்வைத்து, மீண்டும் 28-5-2009 அன்று மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரை விடுதலைச் சிறுத்தைகளின் அமைதிப் பேரணி நடைபெற்றது. ஈழப் போராட்டத்தில் கொத்துக்குண்டுகளால் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியாக அது நடத்தப்பட்டது.
போர் முடிந்து, புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டாலும், தமிழீழத்தின் தேவையும், விடுதலை வேட்கையும் தமிழர்களின் உயிர்மூச்சு என்பதை முன்னெடுக்கும் வகையில் 17-8-2009 அன்று எழும் தமிழ் ஈழம் எனும் மாநாட்டை நடத்தி உலகத் தமிழர்களிடையே நம்பிக்கையை விதைத்தார். விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் இத்தகைய வீரியமிக்க போராட்டங்களை நடத்தினாலும், மற்ற தோழமை இயக்கங்களின் சார்பில் நடைபெற்ற போராட்டங்களிலும் திருமாவளவன் கலந்துகொண்டு ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்தினார். அந்த வகையில்தான் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற அத்தனைப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு போராட்டத்தின் களத்தை விரிவுபடுத்தினார். 
சிங்களப் பேரினவாதத்தால் புறக்கணித்து ஒடக்குமுறைக்குள்ளான தமிழ் மக்கள் விடுதலைக்காக தமிழகத்தில் ஒடுக்குமுறைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்டிப் போராடிய விடுதலைச் சிறுத்தைகளின் களப்பணிகளும் அர்ப்பணிப்பும் விடுதலைப்புலிகளுக்கு நன்றாகவே தெரிந்தது. அதனால்தான் தமிழீழத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் 2002ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டிற்கு தலைவர் திருமாவளவன் அவர்களை அழைத்தார். தமிழகத்திலிருந்து புலிகளால் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்ட ஒரே அரசியல் அமைப்பு விடுதலைச் சிறுத்தைகள்தான். அந்த அளவுக்கு வீரியமிக்க போராட்டங்களால் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தமிழீழ ஆதரரவைக் கொண்டு சேர்த்த இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். எளிய சமானிய மனிதர்களை விடுதலைப் புலிகளின் விடுதலைப் போராட்டடத்தை ஆதரிக்கிற வகையில் துணிச்சலை உருவாக்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். சேரிகளிலும் குப்பங்களிலும் மேதகு பிரபாகரன் படங்களும், தமிழ்த் தேசியக் கருத்தியலையும் கொண்டு போய்ச் சேர்த்தது விடுதலைச் சிறுத்தைகளின் எழுச்சிமிகுந்த போராட்டங்களும் பரப்புரைகளும்தான். சுருக்காகச் சொன்னால், விடுலைப் புலிகளின் விடுதலை அரசியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்தது மட்டுமல்லாமல் இளைய தலைமுறையையும் போராட்டக் களத்தில் இறக்கியதும் விடுதலைச் சிறுத்தைகள்தான்.
விடுதலைச் சிறுத்தைகளுக்கே இத்தகைய களமாடுதல் தொடரும்போது பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகத்துக்கு எந்த அளவுக்கு களங்கள் இருக்கும் என்பதை உலகம் அறியும். இலங்கை மண்ணில் தமிழர்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டுமானால் தனித் தேசமாகத்தான் பிரிய வேண்டும், தமிழீழம்தான் தீர்வாக அமையும் என்று தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அத்தகைய தளகர்த்தர் தலைமையில், எத்தனையோ போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்தன. பெரியார் திடலே ஈழப் போராட்டத்திற்கான களங்களை உருவாக்கித் தந்தது என்றால் யாரும் மறுக்க முடியாது. 
1983ஆம் அண்டு கொழும்பில் தமிழர்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தொடங்கிய கலவரங்களால் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அடைந்தனர். இச்சூழலில் உடனடியாக பெரியார் திடலில் 18-6-1983 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திராவிடர் கழகம் சார்பில் ஆசிரியர் கூட்டினார். 2-7-1983 அன்று சென்னை புல்லாரெட்டி நிழற்சாலையில் அனைத்துக் கட்சி கண்டனப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதுதான் ஈழத்துக்கு ஆதரவான அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டம். இதனைத் தொடர்ந்து 1983 ஆகஸ்டு 15ஆம் நாளை துக்க நாளாக அறிவித்து, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டங்களை அறிவித்தார் ஆசிரியர். தமிழ்நாடெங்கும் இப்போராட்டம் பற்றி எரிந்தது. ஆசிரியர் கி.வீரமணி உட்பட திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை என சிறைக்குப் போன தோழர்கள் விடுதலையான பிறகும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர்.
தமிழர் இறைச்சிக் கடைகளைக் கொழும்பில் திறந்து தமிழர்களைக் கொன்றழித்த ஜெயவர்த்தனே 23-11-1983 அன்று புதுதில்லிக்கு வருவதை எதிர்த்து ஆசிரியர் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுக்க நடத்தி மீண்டும் கைதானார்கள். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இனப்படுகொலைக்கெதிரான போராட்டங்கள் வெடித்தன. இச்சூழலில்தான், ஆசிரியர் அவர்களின் முன்முயற்சியால் ‘டெசோ’ உருவாக்கப்பட்டது. கலைஞர் அவர்களைத் தலைவராக முன்மொழிந்து மே 13, 1985 அன்று ‘டெசோ’ (தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு) உருவானது. இவ்வமைப்பில் ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் அன்பழகன், பழ.நெடுமாறன் ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்பட்டனர். சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனேக்கு எதிரான போராட்டங்கள் டெசோ சார்பில் தமிழகம் முழுக்கக் கிளர்ந்தெழுந்தன.
30-8-1985 அன்று டெசோ சார்பில் நாடெங்கும் நடைபெற்ற ரயில் மறியல் தமிழகத்தை உசுப்பியது. இப்போராட்டத்தில் ஆசிரியர் உட்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்புக் கருவிகளைத் தமிழக அரசு பறிமுதல் செய்ததைக் கண்டித்து 23-11-1986 அன்று அடையாறில் பிரபாகரன் உள்ளிட்ட போராளிகள் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டபோது, ஆசிரியர் வீரமணி அவர்கள் பிரபாகரன் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாது, அரசோடு பேசி தொலைத் தொடர்புக் கருவிகளைத் திரும்பக் கொடுக்க வைத்தார். அப்போது சட்டக்கல்லூரி மாணவராக இருந்த விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்களும் மாணவர்களைத் திரட்டி பிரபாகரன் உண்ணாநிலையிருந்த அடையாறு இல்லத்திற்கே சென்று அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1987ஆம் ஆண்டு இராஜீவ்காந்தியும் ஜெயவர்த்தனேயும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் தமிழர்களுக்கு எந்தப் பயனும் அளிக்காது என்பதை தமிழகமெங்கும் பிரச்சாரத்தை முடுக்கிவிடும் வகையில் 16-6-1987முதல் 21-6-1987 வரை முதல் கட்டமாகவும், 7-9-1987 முதல் 11-9-1987வரை இரண்டாம் கட்டமாகவும் நாடு முழுவதும் இராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை எதிர்த்து ஆசிரியர் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இது மட்டுமல்லாமல், 26-10-1987 அன்று வானொலி-தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகைப் போராட்டம் ஆசிரியர் தலைமையில் எழுச்சியாக நடைபெற்றது. காவல்துறை வழக்கம்போல் ஆசிரியர் உள்ளிட்ட திராவிடர் கழகத்தினரைக் கைது செய்து சிறைப்படுத்தியது. இச்சூழலில் 22-12-1987 அன்று தமிழகம் வந்த ஜெயவர்த்தனேவின் பங்காளி இராஜீவ்காந்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆசிரியர் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய கையோடு, 25-1-1988 அன்று இந்தியக் குடியரசு விழாவிற்கு வந்த ஜெயவர்த்தனேவுக்கு கருப்புக்கொடி என்று எண்பதுகளில் தொடங்கிய வீரஞ்செறிந்த போராட்டங்களை இன்றும் கொள்கை வழுவாமல் நடத்திக்கொண்டிருக்கிற இயக்கம் - மற்ற இயக்கங்களுக்கு முன்னத்திஏராக வழிகாட்டும் வகையில் சனநாயகப் போரை நடத்தும் திராவிடர் கழகத்தின் களப்பணிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 
அப்பேரியக்கத்தை வலிமை குன்றாமல் நடத்திவரும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழீழப் போராட்டக் களத்தில் மட்டும் 22 முறை கைது செய்யப்பட்டுச் சிறை சென்றிருக்கிறார். 80 வயதைக் கடந்தும் இன்றும் இளைஞராக அனைவரையும் அரவணைத்து விருப்பு வெறுப்பின்றி பெரியார் வழியில், மானுடநேயத்துடன் சமரசமின்றிக் களமாடி வருகிறார். போராடி வருகிற இளைஞர்களை ஊக்கப்படுத்துவதோடு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். அப்படித்தான் விடுதலைச் சிறுத்தைகளையும் அரவணைத்து ஊக்கப்படுத்தி வருகிறார். பெரியார் திடல்தான் போராட்டக்காரர்களுக்கு உலைக்களமாகத் திகழ்கிறது. அந்த உலைக்களத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஆயுதம்தான் திருமாவளவன். அதனால்தான் எவ்விதச் சமரசமுமின்றி நெருக்கடிகளை உடைத்து பொதுநீரோட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி வருகிறார். 
அந்த உலைக்களத்தில் வடிக்கப்பட்ட இன்னொரு ஆயுதம்தான் சுபவீ. தொண்ணூறுகளில் ‘விடுதலைக் குயில்கள்’ அமைப்பைத் தொடங்கி தமிழ் இனம் மானம் காக்கக் களத்திற்கு வந்த போராளி சுபவீ, கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தாலும் மாணவர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர். இதற்காகவே பலமுறை கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைக்குள்ளானவர். 1992 மார்ச் மாதம் புலிகளை ஆதரித்து தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினார். கல்லூரிக்குப் போய்விட்டு போராட்டக் களம் நோக்கியே வந்து களமாடிய போராளி சுபவீ 1993ஆம் ஆண்டு மாவீரன் கிட்டு வீரச்சாவையொட்டு இரங்கல் நிகழ்ச்சி நடத்துவதற்காக, புலவர் புலமைப்பித்தன் உள்ளிட்ட உணர்வாளர்களோடு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார். அடிக்கடி போராட்டங்களினால் சிறைக்குப் போவதால் ஆசிரியர் பணி இடையூறாக இருப்பதாக உணர்ந்து, 1997ஆம் ஆண்டு தம்முடைய 45ஆம் வயதில் விருப்பு ஓய்வு கொடுத்துவிட்டு தீவிர இனவிடுதலைப் போராட்டத்தில் இறங்கினார்.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்கிற முத்திரை உங்கள் மீது விழுந்துள்ளதே என்று சுபவீயிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அது முத்திரை அல்ல; எனது முகவரி” என்று வெளிப்படையாகத் தமது முகவரியைப் பெருமையாக அறிவித்தார்.
2002ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் மூலம் தமிழீழ ஆதரவாளர்களை அச்சுறுத்திவந்த நிலையிலும் புலிகளை ஆதரிப்பது எனது கடமை என்று அறிவித்ததன் மூலம் பொடா சட்டத்தின்கீழ் கைதாகி 494 நாட்கள் சிறை அனுபவித்தார். சிறைவாசத்திற்குப் பிறகும், முன்பைவிட அதிரடிப் பாய்ச்சலில் புலியாக தமிழகத்தில் களமாடி வருகிறார்.
தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர் கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டு தலித்துகள் விடுதலையிலும், சமூக மாற்றத்திலும் அக்கறையுள்ள தலைவர்களாக வாழ்ந்து வருபவர்கள் ஆசிரியர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன், பேராசிரியர் சுபவீ. தலித்துகள் விடுதலையடைந்தால்தான் தமிழ்ச் சமூகம் முழுமையான விடுதலை அடையும் என்கிற கொள்கை நம்பிக்கையோடு களமாடி வருபவர்கள். அதனால்தான் தருமபுரி, மரக்காணத்தில் தலித்துகளுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட சாதிவெறியாட்டத்தை முதலில் கண்டித்துக் குரலெழுப்பினார்கள் ஆசிரியரும், பேராசிரியரும். ஈழவிடுதலைக் களம் என்றாலும், தலித்துகளின் விடுதலைக் களமானாலும், பெண்ணிய விடுதலைக் களமானாலும் முன்னணியில் நிற்பவர்கள். விடுதலைச் சிறுத்தைகளை நேசிப்பது மட்டுமல்லாது, எப்போதும் தோளோடு தோள் நிற்கும் தோழர்கள். உலகம் முழுக்க ஈழ விடுதலைக்காகச் சுற்றுப் பயணம் செய்தவர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் நேசிக்கப்பட்டவர்கள். 
இப்படிப்பட்ட தலைவர்களைத்தான் சிலர் ‘துரோகிகள்’ என்று சான்றிதழ் வழங்கியுள்ளனர். நிலப்பிரபுக்கள் ம.நடராசன் (சசிகலா), பொள்ளாச்சி மகாலிங்கம், விஐடி விசுவநாதன் போன்ற முதலாளித்துவப் பின்புலம் இல்லாதவர்கள்தான் இம்மூன்று தலைவர்களும். சாதாரண ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இவர்களது பின்புலம். மக்களோடு மக்களாக இருப்பவர்கள், மக்களுக்காகவே வாழ்பவர்கள், முதலாளித்துவத்துக்கு எதிரான தொழிலாளர்களின் தோழர்கள்.. இப்படிப்பட்ட தலைவர்களை, பெரிய முதலாளிகளுடன், கொடிய மதவாதிகளுடன் இனவிடுதலைக் களத்தில் கைகோர்க்கும் சில சுயநல சக்திகள் ‘துரோகிகள்’ என்று குற்றப்பத்திரிகை வாசித்ததை முள்ளிவாய்க்கால் முற்றம் மட்டுமல்ல தமிழ்ச் சுற்றமும் ஏற்காது. 
 காலம் ஒருநாள் பதில் சொல்லும்.
- வன்னிஅரசு ( vanni.viduthalai@gmail.com)

15 June 2013

சுயமாய் எடுத்த முடிவுதானா திவ்யா..?

செல்லங்கொட்டாய் திவ்யாவுக்கு வணக்கம்.

திவ்யா தவறாக நினைக்க வேண்டாம். இக்கட்டான ஒரு மன நிலையில் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் உங்களுக்கு இப்போது இப்படி ஒரு மடல் எழுதுவது உறுத்தலாக இருக்கலாம். இரண்டு தனி நபர்களின் காதல் திருமணமாக இருந்தால் கூட நான் இதை எழுதியிருக்க மாட்டேன். இரண்டு சமூகங்களுக்கிடையிலான மோதாலாக ஊதிப் பெருக்கப்பட்டு தலித் மக்களின் குடிசைகள் வரை எரிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து விட்டதால் மட்டுமே இதை எழுத வேண்டி நேர்ந்தது.

அக்டோபர் 14ஆம் நாள் பதிவுத் திருமணம் செய்துகொண்ட பிறகு என்ன நடந்தது என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. ஊராரின் குடும்ப கௌரவ பேச்சும் சாதிவெறியர்களின் நயவஞ்சகத்தையும் கொடூரமான அவமதிப்பையும் தாங்கமுடியாத உனது தந்தை நாகராஜ் மரணத்திற்குப் பிறகு, நத்தம் காலனி ரத்தச் சிவப்பாய் தீக்கிரையானதை மறந்துவிட முடியாது. இளவரசனோடான உங்கள் திருமணத்துக்குப் பிறகு நத்தம் காலனியிலுள்ள அத்தனை வீடுகளுமே தீக்கிரையாக்கப்பட்டன. வீட்டிலிருந்த டி.வி., வாசிங் மெசின், பீரோ, கட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள் என அனைத்துமே உடைத்து நொறுக்கப்பட்டு வெளியே வீசப்பட்டன. வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கொளுத்தப்பட்டு எலும்புக்கூடுகளாய் நின்றுகொண்டிருந்தன. உனது ஆசைக் கணவன் இளவரசனின் வீடு பார்க்கவே பரிதாபமாய்க் கிடந்தது. கொஞ்சம் பாத்திரங்களும் பாதி எரிந்த நிலையிலிருந்த மின்விசிறிகளுமே வீடு இருந்ததற்கான சாட்சியங்களாய் இருந்தன. நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மாற்றிக்கொள்ள துணிமணிகள்கூட இல்லாமல் மிக மோசமான நிலையில் நத்தம் காலனி மக்கள் கண்ணீரும் கம்பலையுமாய் நின்றுகொண்டிருந்தார்கள். நத்தம் காலனியே சுடுகாடுபோலக் காட்சியளித்ததை தொலைக்காட்சிவழி நீ பார்த்திருப்பாய்.





நத்தம் காலனி மட்டுமல்லாது, கொண்டம்பட்டி, அண்ணாநகர் காலனிகள்கூட சாதிவெறியர்களிடமிருந்து தப்பவில்லை. அடுத்தவேளை சாப்பிடக்கூட வழியில்லாமல் பொதுமந்தையில் கஞ்சி காய்ச்சிக் குடித்துக்கொண்டிருந்தார்கள். சேமித்து வைத்த நெல், வரகு, கம்பு போன்ற உணவு தானியங்கள் கருகிக் கிடந்ததைப் பார்க்கும்போது 'இந்த மக்கள் செய்த பாவம்தான் என்ன?' என்று நெஞ்சுருகாதோர் இருக்க முடியாது. சேமித்து வைத்த சொத்துக்கள் எல்லாமே பறிபோய்விட்டன. பள்ளிக்கூடம் செல்கின்ற குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாது, அவர்களது சான்றிதழ்களும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. இன்னமும் அந்த சான்றிதழ் கிடைக்கப்பெறாமல் எத்தனையோ பிள்ளைகள் பரிதவித்துக் கிடக்கிறார்கள். நீதிமன்றம் வழிகாட்டிய பிறகும் எந்தப் பயனும் இல்லை. நர்சிங் படித்த உன்னைப் போன்றோருக்குக் கல்விச் சான்றிதழின் முக்கியத்துவம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவ்வளவு வேதனைகளும் சோதனைகளும் எதற்காக நடத்தப்பட்டன என்பது உனக்கு நன்றாகவே தெரியும்! தனிப்பட்ட முறையில் உனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக நீ விரும்பிய ஆண்மகனை திருமணம் செய்ய முடிவெடுத்ததுதான் காரணம். இளவரசன் ஒரு தாழ்த்தப்பட்டவன் என்றாலும் அவனோடுதான் வாழ்வேன் என்று உறுதியாக இருந்து திருமணம் செய்தாய். தனிப்பட்ட உனது வாழ்க்கையை விரும்பியவனோடு அமைத்துக்கொள்ள இளவரசன் சார்ந்த சமூகம் கொடுத்த விலை சாதாரணமானதல்ல என்பதை நீ அறிவாய். அத்தனையையும் அம்மக்கள் தாங்கிக்கொண்டார்கள்.


உனது காதல் திருமணம் போலவே பல திருமணங்கள் உங்கள் பகுதிகளில் நடந்திருந்தாலும் உன்னுடைய காதலுக்கு ஏற்பட்ட நெருக்கடிபோல் யாருக்கும் ஏற்பட்டதில்லை. உன்னைக் காப்பதற்காகவே வாராது வந்த மாமணிபோல் களமிறங்கினார் மருத்துவர் இராமதாசு. நாடகக் காதல் செய்து உன்னை ஏமாற்றித் திருமணம் செய்ததாக ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்தார். ஆனாலும், அந்தப் பொய்ப் பிரச்சாரத்தைக் கண்டுகொள்ளாமல் நீ இளவரசனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தாய். உன்னுடைய ஒற்றைக் காதல் திருமணம் தமிழக அரசியலையே புரட்டிப்போட்டது. காதல் திருமணம் செய்தால் என்ன ஆகும் என்பதற்கு நத்தம் காலனிதான் எடுத்துக்காட்டு என்று மருத்துவர் இராமதாசு தலைமையிலான குச்சிக்கொளுத்திக் கும்பல் கொள்ளிக்கட்டைகளோடு பிரச்சாரம் செய்ததை நீ கவனமாகப் பார்த்துக்கொண்டுதான் இருந்தாய்.



                      நத்தம் காலனியில் தாக்குதலுக்கு உள்ளான இளவரசனின் வீடு. 


இளவரசனிடமிருந்து உன்னைப் பிரிக்க எத்தனையோ வழிமுறைகளைக் கையாண்டார்கள். உன்னைக் கெஞ்சினார்கள்; அச்சுறுத்தினார்கள். உன் தாய் தேன்மொழி, தம்பி மணிசேகரனைக் காட்டி 'பாச மிரட்டல்' செய்தார்கள். ஆனாலும் நீ எதற்கும் அஞ்சாது இளவரசனின் குடும்பத்தோடுதான் வாழ்ந்தாய். அப்போது உனக்காக இளவரசனின் குடும்பம் பட்டபாடுகள் சாதாரணமானதல்ல என்பதை உடனிருந்தே அறிந்திருப்பாய். வீடு கூட வாடகைக்குக் கிடைக்காமல் அலைந்த அலைச்சல் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்திருப்பாய். எப்போது யார் வந்து என்ன செய்வார்களோ என்கிற பதைபதைப்பு உன்னையும் இளவரசன் குடும்பத்தையும் தொடர்ந்துகொண்டேயிருந்தது. உன்னை மட்டுமல்லாது சேரியையும் அந்தப் பதைபதைப்பு விட்டுவைக்கவில்லை. எந்தச் சேரி எந்த நேரத்தில் எரியுமோ என்கிற அச்சம் குடிகொண்டிருந்தது.

பயந்ததைப் போலவே, மரக்காணத்தில் வீடுகள் எரிக்கப்பட்டன. மா மரங்கள், பலா மரங்கள் எரிக்கப்பட்டன. மரக்காணம் சேரியின் காவல்தெய்வமான அங்காளம்மனைக்கூட சாதிவெறியர்கள் விட்டுவைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க எத்தனையோ பேருந்துகள் கொளுத்தப்பட்டன. சாதிவெறியர்களின் வன்முறை வெறியாட்டம் மருத்துவர் இராமதாசு உள்ளிட்டோரைக் கைது செய்த பிறகு ஓரளவு குறைந்தது. ஆனாலும் பதற்றம் குறையவில்லை. இவை அத்தனைக்கும் உனது காதல் திருமணத்தையை அடிப்படைக் காரணமாகக் காட்ட முனைந்ததை நீ அறிவாய்.

பாவம், உனது காதலுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் என்ன தொடர்பு? தமிழகம் முழுக்க தலித் எதிர்ப்புணர்வை, தலித்துகள் மீதான காழ்ப்புணர்வைப் பரப்பிவிட்டார்கள். அனைத்து சமுதாயத்திற்கும் பொது எதிரியாக தலித்துகளைச் சித்தரித்தார்கள். ஒழுக்கமில்லாதவர்கள் என்று பொது விதியை உருவாக்க முயற்சித்தார்கள். ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருந்த பொதுப்புத்தி இதற்குக் களம் அமைத்துக் கொடுத்தது. இதன் மூலம் தமிழகத்தை, மானுட நாகரிகத்தை நூறாண்டுகளுக்குப் பின் இழுத்துச் சென்றதை, படித்த உன்னால் உணராமல் இருக்க முடியாது.

இதிகாசங்களில் இலக்கியங்களில் இல்லாத காதலையா நீயும் இளவரசனும் செய்துவிட்டீர்கள்? மலைசாதிப் பெண்ணான வள்ளியை முருகன் சாதி மறுப்புத் திருமணம் செய்த பின்பும் அவனே தமிழ்க் கடவுள் என்று வணங்கினார்கள். ஆனால் அந்த முருகன் வழியில் நீ திருமணம் செய்தவுடன் உன்னையும் இளவரசனையும் கொல்லத் துடிக்கிறார்கள். நீ உயர்நீதிமன்றத்தில் ஆஜர்ஆனபோது உன் முகத்தில் அந்தக் கொலை பயத்தைப் பார்க்க முடிந்தது. வழக்கறிஞர்கள் புடைசூழ நீ மிரட்சியோடு வந்ததைப் பார்த்தபோது உனது நிலை என்ன என்று தெரிந்தது. உன்னை எப்படியெல்லாம் மிரட்டினார்களோ? தைலாபுரம் தோட்டத்தில் எத்தனை நாள் சிறை வைக்கப்பட்டாயோ? "கீழ்சாதிப் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சாதி கவுரவத்தை குழிதோண்டிப் புதைச்சிட்டியே!" என்கிற வசைச் சொற்களால், நடைபிணமாய் நிலைகுலைந்துபோய் நீ நீதிமன்றம் வந்ததைப் பார்க்க முடிந்தது. செய்தியாளர்களிடம்கூட சுதந்திரமாகப் பேசவிடாமல், உன்னை இழுத்துச் சென்ற போக்கு பெண்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு உள்ளது என்பதைத்தான் காட்டியது. அம்மா வீட்டிற்கே போவதாய் நீதிபதிகளிடம் சொல்லிவிட்டதாகத் தீர்ப்பில் சொன்னார்கள். நீ மனக்குழப்பத்தில் இருப்பதாகவும் சொன்னார்கள்.

சகோதரி திவ்யா, உனக்குப் பிடித்த இளவரசனோடு பத்து மாதங்கள் வாழ்ந்தாய். இப்போது உங்கள் குடும்பத்தோடு போகப்போவதாய்ச் சொல்கிறாய். யாருடன் இருப்பது என்பது உன் அடிப்படை உரிமை. தாராளமாகப் போகலாம்.

ஆனால்...

நீ போகும்போது ஏனம்மா அழுதாய்?

இளவரசன் முகத்தைக்கூடப் பார்க்காமல் எப்படியம்மா போக முடிந்தது?

நீ எடுத்த முடிவு உன் சுயமான முடிவுதானா அல்லது மிரட்டலால் எடுத்த முடிவா?
அம்மா, தம்பியின் அழுகையால் எடுத்த முடிவா?

நாடகக் காதல்.. நாடகக் காதல் என்று ஊர் ஊராய்ப் புலம்பிய சாதிச் சொந்தங்களின் அழுத்தங்களால் எடுத்த முடிவா? அல்லது இந்தச் சமூகத்தில் வாழவே விடமாட்டார்கள் என்ற அவநம்பிக்கையால் எடுத்த முடிவா?

தான் வாழ்ந்த காலமெல்லாம் சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி சமூகநீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியாரின் மண்ணில் இன்னமும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்கிற அவநம்பிக்கையால் எடுத்த முடிவா?

எத்தனையோ புரட்சிகரக் குழுக்கள் உருவாகி சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவரப் போராடும் தமிழ் மண்ணில் விரும்பியவனோடு வாழ்வதுகூட முடியாத காரியம் என்கிற கோபத்தால் எடுத்த முடிவா?

ஜீன்ஸ் போட்டும், டி-சர்ட் போட்டும் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், பெண்களுக்கு சொத்துரிமை கொடுப்பதால்தான் தலித்துகள் இப்படி திருமணம் செய்கிறார்கள் என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்தபோது, பெண்களையே கேவலப்படுத்துகிறார்கள் என்கிற கோபத்தில்கூட பெண்ணுரிமை இயக்கங்கள் தெருவுக்கு வந்து போராடாத போக்கால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தாயா?

சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக, இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக அனைத்துச் சமுதாயப் பேரவை என்கிற பெயரில் ஊர் ஊராய் சாதிவெறியைத் தூண்டிக் கலவரம் செய்த பிறகும் அவர்களின் பிரச்சாரத்தைத் தடுக்காமல், கண்டிக்காமல் அவர்களுக்கு ஆதரவு தருகிற திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கலைஞரே இப்படி முடிவெடுக்கிறாரே, நாமெல்லாம் எம்மாத்திரம் என்கிற பயத்தினால் எடுத்த முடிவா?

'ஏனம்மா தாலியைக் கழற்றிவிட்டாய்? அம்மாவோடுதானே போகப்போகிறாய், போய்விட்டு வரவேண்டியதுதானே' என்று கேட்காமலிருந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மவுனம்தான் இந்த முடிவுக்குக் காரணமா? 

'உன்னுடைய திருமணத்திற்குப் பிறகுதானே மூன்று சேரிகள் கொளுத்தப்பட்டன, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன, குடியிருக்கக்கூட வீடுகள் இல்லாமல் போய்விட்டன. இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு அம்மாவுடன் போ' என்று நீதிபதிகள் சொல்லாததால்தான் உன்னால் இப்படி எளிதாக முடிவெடுக்க முடிந்ததா?



                         உயர்நீதிமன்றத்தை விட்டு வெளியில் வரும் திவ்யா (படம்: தி இந்து) 

துப்பட்டாவால் உன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து வெளியேறியபோது நீதியே சாதி அமைப்பு முறைக்குள் முடங்கிக் கிடக்கிறது என்பதை இந்த வழக்கின் மூலம் உணர்ந்ததால்தான் இப்படி ஒரு முடிவை எடுக்க முடிந்ததா திவ்யா?

இத்தனை அவநம்பிக்கைகளோடு வாழ முடியாதுதான். உன்னைப் போன்ற சாதாரண ஒரு பெண்ணைக்கூட பாதுகாக்க முடியவில்லையென்றால், வெறுமனே புரட்சி, பெண்ணுரிமை, சமூகநீதி, சட்டம், நீதி இவையெல்லாம் என்ன எழவுக்கு என்று கேட்கத்தான் தோன்றுகிறது.. உனது மனசாட்சியைப் போலவே. உன்னுடைய இயலாமையும், சாதி ஆதிக்கமும்தான் இந்த முடிவுகளுக்குக் காரணமாகிவிட்டது. பரவாயில்லை! உன்னுடைய சொந்த ஊரான செல்லங்கொட்டாய்க்குப் போகும்போது நத்தம் காலனியைக் கடந்துதான் நீ போவாய். உன்னுடைய காதலுக்குச் சாட்சியமாய், தியாகமாய் நின்றுகொண்டிருக்கும் அந்த நத்தம் காலனியை ஒரு முறை பார். உனக்காகப் பாதிப்பை ஏற்றுக்கொண்ட அந்த மக்களைப் பார். நானும் உன்னை துன் புறுத்த விரும்பவில்லை. ஆனால் உன் வாழ்வு முழுவதும் எரிக்கப்பட்ட குடிசைகளின் சாம்பல் நெடி இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் திவ்யா, நீ ஓணாய்களை நம்பிப் போகிறாய். உன் அப்பாவை சாதிவெறியர்கள் கொன்றதைப் போல, உனக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது. ஏனென்றால் நீ எங்கள் வீட்டு மருமகள். சாதி அமைப்பை உடைத்து நீ விரைவில் வருவாய் என நம்புகிறோம்.

எதிர்பார்ப்புடன்
சாதிஅமைப்பை உடைக்கும் களத்தில்..
வன்னிஅரசு

(இந்த வாரம் 15.06.13 கல்கி இதழில் வெளியாகியுள்ள என்னுடைய கடிதத்தின் திருத்தப்படாத பதிப்பு)

10 May 2013

மருத்துவர் இராமதாசின் பொய் முகமும், வேலாயுதபுர சாதியத்தின் கோர முகமும்-வன்னிஅரசு

“நெல்லை மாவட்டம் கழுகுமலைக்கு அருகே உள்ள அந்த ஊரில் வசிக்கின்ற நானூறு ரெட்டியார் குடும்பத்தினர் கதறி அழுகின்றனர். தாழ்த்தப்பட்டோர் எங்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று காப்பாற்றும்படிக் கதறி அழுகிறார்கள்”
vanniarasu_velayuthapuram_6
நாதஸ்வர வித்வான் எம்.எஸ்.முத்தையாவுடன்...
கடந்த 25-4-2013 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சாதிச் சங்கக் கூட்டத்தில் கூடியிருந்த இலட்சக்கணக்கானோர் மத்தியில் நூற்றுக் கணக்கான உளவுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இந்த அதிர்ச்சித் தகவலை மருத்துவர் இராமதாசு வெளிப்படுத்தினார். அந்த ஊர் எது என்று ஊடகவியலாளர்களும் உளவுத்துறையும் ஆராய ஆரம்பித்தனர்.
8-5-2013 அன்று நாமும் அந்த ஊரைத் தேடி பயணப்பட்டோம். அந்த ஊரின் பெயர் டி.வேலாயுதபுரம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையிலிருந்து 3வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த டி.வேலாயுதபுரம் (மருத்துவர் இராமதாசு சொல்வதைப்போல் நெல்லை மாவட்டத்தில் இல்லை.)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் இராசா, ஆதித் தமிழர் பேரவையின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், கவுதமன் ஆகியோருடன் நாமும் அந்த ஊருக்குச் சென்றோம். புளியம்பழங்களைச் சுமந்துகிடக்கும் மரங்களும், மஞ்சநெத்திப் பூக்களின் மணம் மரப்பும் மரங்களும் வழிநெடுக எங்களை வரவேற்றன. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த 47 குடும்பங்களும், ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 4 வண்ணார் குடும்பத்தினரும் அடங்கியதுதான் இந்த வேலாயுதபுரம்.
வேலாயுதபுரத்திற்குள் விடுதலைச் சிறுத்தைகள் கொடி பறக்கும் காரில் நுழைந்தவுடனேயே அந்த ஊர் மக்கள் கும்பல் கும்பலாகக் கூட ஆரம்பித்தனர். ஊர் மந்தைக்கு அருகே இரண்டு போலிசார் காவலுக்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் வேலாயுதபுரம் சேரிக்குச் செல்லும் பாதையைக் கேட்டுச் சென்றோம். எலந்தப் பழங்களை சின்னஞ்சிறு பிள்ளைகள் முள் படாமல் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். ஊருக்கும் சேரிக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது. சேரிக்குள் நுழைந்தோம்.
இந்தியாவிலுள்ள எல்லா ஊர்களும் சேரியை எப்படி நடத்துகின்றனவோ அப்படித்தான் வேலாயுதபுரமும் சேரியை நடத்துகிறது. ஊருக்கே செருப்புத் தைத்துக் கொடுத்தாலும் அருந்ததிய மக்கள் செருப்புப் போட்டுக்கொண்டு ரெட்டியார் தெருவுக்குள் நடக்க முடியாது. சைக்கிள் வாங்கலாம். ஆனால் உருட்டிக்கொண்டுதான் போக வேண்டும்; ஏறிச் செல்ல முடியாது. அங்குள்ள நடுநிலைப் பள்ளிக்குச் செல்லும் அருந்ததியர் குழந்தைகளுக்கு தனியேதான் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்புக்கு மேல் யாரும் படிக்கக் கூடாது.
இங்குள்ள அருந்ததியர்களுக்குச் சொந்தமாக நிலங்கள் எதுவும் இல்லை. கூலி வேலைக்குத்தான் செல்லவேண்டும். பெண்கள் அங்குள்ள தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்குச் சென்று தீக்குச்சிகளை அடுக்க வேண்டும். ஆண்கள் சீமைக் கருவேல மரங்களை வெட்டி கரிக்கட்டைகளாக்கி திருநெல்வேலி, தூத்துக்குடி, கழுமலை, சங்கரன்கோவில் போன்ற ஊர்களுக்குச் சென்று விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டும். இதுதான் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலை.
vanniarasu_velayuthapuram_7
சுபா குடும்பத்தாருடன்..
கடந்த 10-8-2006 அன்று தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைசெய்யும் சுபா என்கிற 16 வயது பெண், “இந்த ஊரின் கொடுமையிலிருந்து எங்கள் மக்கள் விடுதலை பெற வேண்டும்” என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார்.
ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் சுபாவை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வந்துள்ளனர். சாதிப் பெயரைச் சொல்லி கேலியும் செய்து வந்துள்ளனர். சுபா மட்டுமல்லாது சேரியிலிருந்து வருகிற எல்லா பெண்களிடமும் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கேலியும் கிண்டலும் செய்து கடுமையாக நடந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த சுபா தற்கொலை செய்துகொள்கிறார். காவல்துறையோ, வழக்கம்போல் சிலரைக் கைது செய்துவிட்டு பின்பு அவர்களை விட்டுவிடுகிறார்கள். சுபாவின் தற்கொலையை அடுத்து, போலிஸ், கோர்ட் என்று அதே சேரியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அலைய ஆரம்பிக்கிறார். “போலிசுக்கெல்லாம் போக வேண்டாம்!” என்ற ரெட்டியார்களின் கட்டளையை மீறி கருப்பசாமி களப்பணியாற்ற ஆரம்பித்தார்.
இந்நிலையில், கடந்த 12-4-2013 அன்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கருப்பசாமி வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு தொடர்பாக ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த 13 இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
“இந்த ஊர்ல ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கு தம்பி. எங்க தெருவுக்குள்ள ரேசன் கடை இல்லை. அவுங்க தெருவுக்குள்ள இருக்கிற ரேசன் கடைக்குத்தான் போக வேண்டும். யாரும் இல்லாத நேரமாப் பாத்து ஜன்னலுக்கு வெளியே நின்னுதான் வாங்க வேண்டும்” என்றார் சேரித்தெரு நாட்டாமை சுப்பிரமணி.
சுப்பிரமணியின் மகன் முத்துகிருஷ்ணனுக்கு ஊரில் அஞ்சல் அலுவலக உதவியாளராகப் பணி கிடைத்தது. “சக்கிலியப் பய தொட்ட லட்டர நாங்க வாங்கணுமா? ஒழுங்கு மரியாதையா வேலை வேணாம்னு எழுதிக் கொடுக்கச் சொல்லு” என்று தினமும் ரெட்டியார் சமூகத்தினர் சுப்பிரமணியை மிரட்ட ஆரம்பித்தனர். மிரட்டலுக்குப் பயந்து முத்துகிருஷ்ணன் வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்னைக்குச் செல்கிறார். இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால், முத்துகிருஷ்ணனோ சென்னைக்குப் போய் அடுத்தடுத்த போட்டித் தேர்வுகளை எழுதி இப்போது தலைமைச் செயலகத்தில் கமாண்டோவாக துப்பாக்கியும் கையுமாகப் பணிபுரிகிறார்.
நாதஸ்வர வித்வானாக அம்மாவட்டங்களில் புகழ்பெற்றவராக மதிக்கப்படும் எம்.எஸ்.முத்தையா, “இப்பகுதியில் திருவிழாக் காலங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் நாங்கள் போகக் கூடாது. ஊரில் உள்ள நிகழ்ச்சியில்தான் நாதஸ்வரம் வாசிக்க வேண்டும். அதுவும் இலவசமாகத்தான் வாசிக்க வேண்டும். உறவினர்களின் வீடுகளுக்கு நாங்கள் போக வேண்டுமென்றாலும், உறவினர்கள் எங்கள் வீடுகளுக்கு வரவேண்டுமென்றாலும் ஊர் மந்தையில் காலில் விழுந்து கேட்டுவிட்டுத்தான் போக வேண்டும், வரவேண்டும்” என்றார். சிறந்த நாதஸ்வர வித்வானான எம்.எஸ்.முத்தையாவுக்கு கடந்த ஆண்டுதான் அரசு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்தது. ஆனால் வேலாயுதபுரமோ...?
vanniarasu_velayuthapuram_8
கருப்பசாமி குடும்பத்தாருடன்..
அடிமைத்தனத்திற்கு எதிராக 2006ஆம் ஆண்டு உயிர்நீத்த சுபாவின் மறைவுக்குப் பிறகு அருந்ததியர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்தார்கள். மந்தையில் துணிச்சலாகக் கேள்வியெழுப்ப ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அரிபால் ரெட்டியார், அருந்ததியர் பலரை மந்தையில் வைத்தே அடித்துள்ளார். இவர் வேலாயுதபுரத்திலிருந்து வெளியேறி துபாயில் சென்று பணிபுரிந்து வந்தவர். “நான் போகும்போது ஊரு இப்படியில்லையே. இவனுகளுக்கு யார் துணிச்சலத் தந்தது? இவனுகள ஆரம்பத்துலயே அடக்கி வைக்கணும்” என்று அரிபால் ரெட்டியார் கொதித்துப்போனதன் விளைவு சேரியைச் சுற்றி முள் வேலி அமைக்கும் பணி தொடங்கியது. 47 குடும்பங்கள் வசிக்கும் அருந்ததியர் குடியிருப்பைச் சுற்றி இரும்பு முள்வேலி அமைத்தனர். அருந்ததியர்கள் இந்த முள்வேலிக்குள்தான் வாழ வேண்டும். ரெட்டியார்களின் காடு கரைகளில் கால் வைக்கக் கூடாது. கால் வைத்தால் தீட்டுப் பட்டுவிடுமாம்.
இந்தத் தீண்டாமை முள்வேலி அமைக்கும்போது பஞ்சாயத்து தலைவர் இராதாகிருஷ்ணன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இவர் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். “என்னையும் சக்கிலியர்களோடு ஒதுக்கி வைத்துவிடுங்கள். இதற்கு நான் உடன்படமாட்டேன்” என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். விளைவு 2011 பஞ்சாயத்துத் தேர்தலில் தோழர் இராதாகிருஷ்ணன் தோற்கடிக்கப்பட்டு அமராவதி என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மதிமுகவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பழனிச்சாமி ரெட்டியார்தான் இப்போது அருந்ததியர்களை ஒடுக்குவதில் மும்முரமாக இருக்கிறார். இவரோடு போஸ், அரிபால், சுப்புராஜ் (அதிமுக), இராஜேந்திரன், மணிகண்டன், நாராயண ரெட்டியாரின் மகன் பால்ராஜ், தவிட்டு ரெட்டியாரின் மகன் ரமேஷ், நாராயணன், பெத்து ரெட்டியார், சீனிச்சாமி ரெட்டியார் ஆகியோர்தான் தீண்டாமை முள்வேலி உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளைச் செய்வதில் முன்னணியில் நிற்பவர்கள். 
கடந்த 12-4-2013 அன்று கருப்பசாமி படுகொலை செய்யப்பட்டதை அடுத்துதான் இந்தத் தீண்டாமை முள்வேலி உலகுக்கே தெரிய வந்துள்ளது. 13-4-2013 அன்று அந்த ஊருக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. இராஜேந்திரன் அவர்கள் தீண்டாமை முள்வேலியைப் பார்த்துக் கொதித்துப் போய்விட்டார். அவரே முன்னின்று முள்வேலியைப் பிரித்து எறியும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனாலும், கழுகுமலை காவல்நிலைய அதிகாரிகளோ உள்ளூர்ப் பகை வேண்டாம் என்று ரெட்டிகளோடு ஒட்டி உறவாடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இத்தகைய சேரியைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் நமக்கு வந்தது.
ஆதித்தமிழர் பேரவையின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் தோழர்கள் சிலர் எங்களைப் பார்ப்பதற்காக சேரிக்குள் வர முயன்றனர். அப்போது ஊர் மந்தையில் பெண்கள் வழிமறித்து, “ஏண்டா சக்கிலியப் பயலுகளா, எங்கடா வந்தீங்க? இந்த நாய்களுக்கு நீங்கதான் சப்போர்ட்டா? கார்ல உள்ள போன அந்த சக்கிலிய நாயிகள நாங்க வெளியே விடப்போறதில்ல...” என்று வாய்க்கு வந்தபடி கூச்சலிட்டு அவர்களை அடிக்காத குறையாக விரட்டியடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலிசோ வேடிக்கை பார்த்ததைத் தவிர ஒன்றும் செய்யவில்லை. இதையறியாமல், நாங்களோ அந்தத் தீண்டாமை முள்வேலியையும் ஊர் மக்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரே ஒரு போலிஸ்காரர் எங்களிடம் வந்து, “சார் கொஞ்சம் இருங்க. அவங்க கும்பலா கூடி கோபத்தோட இருக்காங்க. போலிஸ் ஃபோர்ஸ் வந்ததுக்குப் பிறகு நீங்கள் போகலாம்” என்றார்.
vanniarasu_velayuthapuram_9
காவல் துறையினருடன்...
மாலை 5 மணிக்கு சேரிக்குள் போன நாங்கள் இரவு 7 மணியளவில் வெளியேற முயன்றோம். போக முடியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் இரு காவலர்களுடன் வந்து, “சார் எங்க பின்னாலயே வாங்க” என்றபடி நடந்து சென்றார்கள். நாங்கள் காரில் பின்தொடர்ந்தோம். ஊர் தெருவை நெருங்கும்போதே அந்தக் குரல் கேட்டது.
“அந்தச் சக்கிலியப் பயலுகள இறக்கிவிடுங்க. இவனுங்களுக்கெல்லாம் கார் ஒரு கேடா?” என்று கத்த ஆரம்பித்தனர். கைகளில் அரிவாள், வேல்கம்பு, ஈட்டி மற்றும் கற்கள். நிலைமையை அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு எங்களிடம் மிக அமைதியாகச் சொன்னார், “சார் போகலாம் சார். பேசிட்டேன். போற வழியில மந்தையில போய் இனிமே வரமாட்டோம்னு சொல்லிட்டுப் போயிருங்க” என்றார்.
அதிர்ந்துபோன நாங்கள், “அவர்களிடம் போய் சொல்ல வேண்டுமா? இல்லை காலில் விழுந்து செல்ல வேண்டுமா? என்ன நடக்கிறது இங்கே” என்று கோபத்துடன் கேட்டோம். சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் அந்த ஊர் மக்களிடமே சென்றுவிட்டார். உயர் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசிய பிறகு டி.எஸ்.பி. தலைமையில் காவல்துறையினர் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல்தான் சேரியைக் கடந்து ஊரையும் கடந்து வெளியேறினோம். நடந்ததை கழுகுமலைக் காவல் நிலையத்தில் புகாராக எழுதிக் கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி வற்புறுத்தி வந்தோம்.
டி.வேலாயுதபுரம் சேரியைப் பார்வையிடச் சென்ற நமக்கே இந்த நிலை என்றால் காலங்காலமாய் அங்கேயே குடியிருக்கும் அப்பாவி அருந்ததிய மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். இலங்கையில் முள்வேலி முகாம்களை அகற்றக் கோரி தமிழர்களெல்லாம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற சூழலில்தான், சொந்த மண்ணிலேயே முள்வேலிக்குள் மண்ணின் மைந்தர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.
இவ்வளவு கொடுமைகளையும் செய்துவிட்டு தலித்துகள்தான் கொடுமை செய்கிறார்கள் என்று மருத்துவர் இராமதாசு பேசுவது நியாயம்தானா? அவர் பொது மேடையில் நாகரிகமாகப் பேசுவதில்லை. பேசும் பேச்சிலும் உண்மை இல்லை. ஆனால் தொடர்ந்து எங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று சவால் விட்டுக்கொண்டேயிருக்கிறார். 'விடுதலைச் சிறுத்தைகள் பெண்களைக் கடத்துகிறார்கள், அதை வைத்துப் பேரம் பேசுகிறார்கள்' என்று வாய்க்கு வந்தபடி பேசி ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இதுவரை எந்த ஆதாரத்தையும் காட்டியதில்லை. இல்லாததை எப்படிக் காட்ட முடியும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இராமதாசு பேசுவதெல்லாம் பொய்யும் புரட்டும்தான் என்பதை இந்த வேலாயுதபுரம் சேரி உலகுக்குக் காட்டுகிறது. வேலாயுதபுரம் சேரிமக்களிடம் நாங்கள் வந்த நோக்கம் குறித்துப் பேசும்போது, “நீங்கதான் ரெட்டியார்களைக் கொடுமைப்படுத்துறதா டாக்டர் இராமதாசு சொன்னாரு. உண்மையான்னு பார்க்க வந்தோம்” என்று சொன்னபோது, ஒரு கிழவி கோபத்தோடு, “அந்த பிராடுகாரப் பயல இங்கக் கூட்டியா, அவனும் எங்கத் தாலிய அறுத்துட்டுப் போகட்டும்” என்றார்.
மருத்துவர் அவர்களே உங்கள் குடும்ப சுயநலத்திற்காக ஏன் இப்படி சேரிமக்களின் உயிரை எடுக்கிறீர்கள்?
- வன்னிஅரசு
Bookmark and Share

24 April 2013

கௌரவம் - சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு - வன்னிஅரசு


கௌரவம் - சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு - வன்னிஅரசு

அந்தப் பெரியவருக்கு வயது 70 இருக்கும். 23ஆம் புலிகேசி மன்னனைப்போல் அவருக்கும் ஒரு மீசை இருக்கும். இடுப்பில் பச்சை பெல்ட் மாட்டியிருப்பார். மேல் சட்டை இல்லை. முக்கால் அளவு வேட்டி. காலையில் எழுந்தவுடன் குளித்து விபூதிப் பட்டை தீட்டி பக்தி மணக்க மணக்க நடைபயணம் புறப்படுவார். யாரிடமும் பேசமாட்டார். யாராவது பேச முயற்சி செய்தால்கூட கண்டுகொள்ள மாட்டார். உணவு வாங்குவதற்கு வரிசையில்கூட வந்து நிற்க மாட்டார். எல்லோரும் உணவு வாங்கிச் சென்றபின் அவரது அலுமினியத் தட்டில் சோறு வாங்கிச் செல்வார். காவலர்கள் ஏதாவது கேட்டால்கூட, எதுவும் பேச மாட்டார். ஆனாலும் அந்த மத்திய சிறைவாசிகளில் பலர் அந்தப் பெரிசுக்கு மரியாதை கொடுத்துத்தான் வந்தார்கள்.

gouravam_450“டேய் இது எங்களுக்காக கட்டுன ஜெயிலுடா... பள்ளன் பறையன் எவனாவது ஜெயிலுக்கு வந்திங்கன்னா தேவன்னு சொல்லிப் பிழைச்சிட்டுப் போங்கடா” என்று தனிமைச் சிறையில் அடைபட்டிருக்கும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட கைதி கூட இந்தப் பெரிசைப் பார்த்தால் வணக்கம் போடுவான்.

பெரிசு பெயர் பாண்டித்தேவர். உசிலம்பட்டியைச் சேர்ந்தவர்.

நானும் பலமுறை அவரிடம் பேச முயற்சி செய்து பேச முயன்றேன் முடியவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டேன் - பாண்டித்தேவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையாம். மற்றபடி எந்த விவரமும் தெரியவில்லை. பாண்டித்தேவர் லாக்-அப் ஆகும்வரை நூலகத்தில்தான் இருப்பார். நூலகத்தில் உள்ள எல்லா நூல்களையும் படித்து முடித்தவர் அவர்தான். நூலக ஆசிரியர் சுருளிதான் என்னை பாண்டித்தேவருக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு வரும் நூல்களை அவருக்கும் படிக்கக் கொடுத்ததன் மூலம் என்னோடு சகஜமாகப் பேச ஆரம்பித்தார். அப்புறம்தான் அவரது முழுக் கதையும் எனக்குத் தெரிந்தது.

ஆசை ஆசையாய் வளர்த்த அவரது மகள் பக்கத்து ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட பள்ளர் வகுப்பைச் சேர்ந்த பையனைக் காதலித்துளளார். ஊரில் உள்ள புளிய மரங்களும் பனை மரங்களும்கூட இவர்களது காதல் கதையினை பேச ஆரம்பித்தன. பாண்டித்தேவருக்கு அது தெரியாமலா போய்விடும்! அவர் கோபத்தின் உச்சத்தில் இருக்கும்போது காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டது.

எட்டு மாதமாகக் கண்டுகொள்ளவில்லை. எட்டு மாதமாக வீட்டை விட்டே வெளியேறியதில்லை பாண்டித்தேவர். ஏதோ நடந்தது நடந்துபோச்சு என்று ஒன்பதாவது மாதம் வளைகாப்பு செய்து மகளை அழைத்து வருவதற்காக வைப்பதற்காக பாண்டித்தேவரின் மனைவி செல்கிறார். தலித் மருமகனும் மகிழ்ச்சியாக வளைகாப்பு முடித்து மனைவியை மாமியாருடன் அனுப்பி வைக்கிறார். வயறு நிறையக் குழந்தையோடு கை நிறைய வளையல்களோடு நெற்றி நிறைய மஞ்சள் குங்குமத்தோடு வாய் நிறைய சிரிப்போடு வந்த மகளைப் பார்த்து கட்டி அணைத்துக்கொண்டார் பாண்டித்தேவர். தன் கையாலேயே மகளுக்குச் சோறு ஊட்டிவிடுகிறார்.

இரவு 10 மணி. எல்லோரும் தூங்கப்போய்விட்டனர். நள்ளிரவில் திடீரென அலறல் சத்தம். வீட்டுக்குள் ஒரு உருவம் தீயில் எரிந்து விழுகிறது. வீட்டில் உள்ளவர்களும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் வந்து பார்க்கும்போது கருகிய நிலையில் பாண்டித்தேவரின் மகள் கிடக்கிறாள். வயிற்றுக்குள் இருந்த குழந்தையும் கருகி செத்துப்போனது.

“அப்பாடா... அப்பத்தான் என் சாதி கௌரவம் காப்பாற்றப்பட்டது தம்பி!” என்றார் பாண்டித்தேவர்.

“உங்க ஆசை மகளைக் கருக்கிட்டிங்களே. உங்க மகளைவிட சாதி பெரிசாப் போச்சா?” என்று கேட்டதற்கு,

அந்தப் பெரிசு எந்தச் சலனமும் இல்லாமல் சொன்னார்- “என்னை விட என் சாதி கௌரவம்தான் முக்கியம்”

இதற்காகத்தான் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

மதுரை மத்திய சிறையை இப்போது கடந்து போனாலும் அந்த பாண்டித்தேவர் என் நினைவில் வந்துபோவார்.

சக ஆயுள் சிறைவாசியாக நான் இருந்தாலும், இம்மாதிரியான காட்டுமிராண்டித்தனங்களின் எச்சங்களோடுதான் பயணப்பட்டேன். 1990ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வை, 1998ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றபோது அறிந்தேன். இப்படியெல்லாமா மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கொதித்துப் போனேன்.

ஆனால், நாயக்கன்கொட்டாய் இளவரசன்-திவ்யா காதலை சாக்காக வைத்து மூன்று சேரிகளைத் திட்டமிட்டுத் தீக்கிரையாக்கிய சாதிவெறியர்களை நினைக்கும்போது, பாண்டித்தேவர் என்கிற பெரிசு பரவாயில்லைபோல் தோன்றியது.

விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையில் வன்னியப் பெண் கண்ணகி, தலித் வகுப்பைச் சேர்ந்த முருகேசனை காதல் திருமணம் செய்துகொண்டார். எல்லா காதலர்களும் செய்வதைப்போலத்தான் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார்கள். கண்ணகியின் உறவினர்கள் ஊர் ஊராய்த் தேடிக் கண்டுபிடித்து ஊர் மந்தைக்கு அந்த காதல் ஜோடியை இழுத்து வந்தனர். மக்கள் யாவரும் பார்த்துப் பதைக்க, காதல் ஜோடி கதறக் கதற விஷம் கொடுத்து எரித்துக் கொல்கின்றனர். தங்களுடைய சாதி கௌரவத்தைக் காப்பதற்காக மனிதநேயத்தை கொன்றழித்த இந்தக் கொடூரத்தின் முன்பு பாண்டித்தேவர் என் நினைவில் வந்து வந்து போகிறார்.

இப்படி சமூகத்தில் அன்றாடம் நடக்கும் அவலங்களை, அநியாயங்களை படைப்புகளாக்க இச்சம்பவங்கள் யாரையும் உறுத்தவில்லையோ, மனசாட்சியை உலுக்கவில்லையோ என்று வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் ‘கௌரவம்’ திரைப்படம் வந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் நீயா? நானா? நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் கொடுமை செய்பவர்களைவிட அதனை அமைதியாக வேடிக்கை பார்ப்பவர்கள்தான் ஆபத்தானவர்கள் என்று குறிப்பிட்டார். அத்தகைய ஆபத்தானவர்கள் இந்தச் சமூகத்தில் பல்வேறு வடிவங்களில் உலவுகிறார்கள். மார்க்சியம் பேசுகிற, தமிழ்த் தேசியம் பேசுகிற, காந்தியம் பேசுகிற, முற்போக்குப் பேசுகிற எத்தனையோ இயக்குநர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் இயங்குகிறார்கள். எதற்கெடுத்தாலும் புரட்சி பேசுவது, அல்லது பெரியார் கருத்துகளைச் சொல்வது, இன்னும் கூடுதலாய் கருப்புச் சட்டையைப் போட்டுக்கொண்டு நாத்திகனாய் விசுவரூபம் எடுப்பார்கள். ஆனால் எடுக்கும் திரைப்படங்களைப் பார்த்தால் சமூகத்திற்கு எதிரான மசாலா படங்களையே எடுத்து பெருமை பேசுவார்கள்.

ஆனால் இயக்குநர் ராதாமோகன் அவர்கள் மிக நேர்மையாக இச்சமூகத்தில் நிலவும் சமூக அநீதியை திரைக்கதைப் போக்கில் எந்தத் திணிப்பும் இல்லாமல் அம்பலப்படுத்தியிருக்கிறார். சாதியின் பெயரால் நடக்கும் கௌரவக் கொலைகள் இயக்குநரை எந்த அளவுக்குப் பாதித்திருந்தால் இப்படியொரு படைப்பைப் படைக்கக் களம் இறங்கியிருப்பார்! சாதி எப்படியெல்லாம் சமூகத்திற்கு எதிராக இருக்கிறது என்பதை மிக நேர்த்தியாகப் திரைப்படமாக்கியிருக்கிறார்.

திரைப்படத்தில் பல இடங்களில் சினிமாத்தனமும் முரண்பாடுகளும் இருந்தாலும் இப்படியொரு கதையை களமாக அமைத்து தமிழகம் முழுவதும் சாதியை முன்வைத்து அரசியல் செய்பவர்களை அம்பலப்படுத்திய துணிச்சலுக்காகவே இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பாராட்ட வேண்டும்.

தன்னுடன் படித்த சண்முகத்தை தேடிப்போன நண்பர்களுக்கு அந்த டி.வெண்ணனூர் கிராமத்தில் நடப்பவை அதிர்ச்சியளிக்கின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சண்முகம் அந்த ஊரில் மேல் சாதிப் பண்ணையாரான பசுபதியின் மகளை காதலித்து கூட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார். அவர்கள் என்ன ஆனார்கள்? மர்ம முடிச்சுகளை கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களுடன் சேர்ந்து அவிழ்க்கின்றனர். சாதி கௌரவத்தைக் காப்பதற்காக அந்த காதல் ஜோடியை வெட்டிப் படுகொலை செய்யும்போது இந்தியாவில் இப்படி எத்தனைக் காதலர்கள் வெட்டியும் நஞ்சு கொடுத்தும் எரித்தும் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதை நினைக்கும்போது நம் குலை நடுங்குகிறது.

“உங்களுக்கு கௌரவம்தான் முக்கியம் என்றால் நீங்க சாக வேண்டியதுதானே? ஏன் என் பிள்ளையைக் கொன்னீங்க?” என்று பண்ணையாரை அவரது மனைவி கேட்கும்போது பல பெரிய மனிதர்களின் செவுளில் அறைந்ததுபோல் இருக்கிறது. கம்யூனிசம் பேசுகிற தொழிற்சங்கவாதிகூட எப்படி இருப்பார் என்பதை நாசர் தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். தலித்துகளுக்குள்கூட தீண்டாமை இருக்கிறது என்பதை சம்பந்தமில்லாமல் கம்யூனிஸ்டுகள் பேசுவதை இயக்குநர் சுட்டிக்காட்டியுள்ளார். சேரியைக் காட்டும்போதுகூட புரட்சியாளர் அம்பேத்கர் சிலை கோணியால் மூடப்பட்டிருக்கும் அயோக்கியத்தனத்தையும் சத்தமில்லாமல் படம்பிடித்துள்ளனர்.

தேநீர்க் கடைகளில் முன்பெல்லாம் தலித்துகளுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் ஊற்றுவார்கள். அதற்கடுத்து தனிக் குவளைகளை ஒதுக்கினார்கள். நாகரிகம் வளர வளர, அறிவியல் வளர வளர தீண்டாமையும் வேறொரு வடிவம் கொள்கிறது என்பதை திரைப்படத்தின் தேநீர்க் கடைகள் அம்பலப்படுத்துகின்றன. சேரியிலிருந்து வருகிற மாசி என்கிற இளைஞன் தேநீர் குடிக்க கடைக்கு வரும்போது மரத்தில் தொங்க விடப்பட்டுள்ள பயன்படுத்திவிட்டுத் தூக்கிப்போடும் காகிதக் குவளையில் தேநீர் குடிப்பான். உயர் சாதியினர் கண்ணாடிக் குவளையில் குடிப்பதை குளோஸ்-அப்பில் காட்டும்போது இப்பல்லாம் யார் சாதி பார்க்குறாங்க என்று முற்போக்குப் பேசுபவர்களின் முகத்தில் காறி உமிழ்வதுபோல் உள்ளது.

“சேரிக்காரர்கள் எவ்வளவுகாலம்தான் அடி வாங்குவார்கள். திருப்பி அடிப்பது எப்போது?” என்று சேரித் தோழர் கேட்கும்போது தலித் மக்களின் வலியையும் உணர்வையும் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளைக் களைய மாணவர்களும் இளைஞர்களும் களமிறங்கினால்தான் முடியும் என்று இயக்குநர் இளைஞர்களை உசுப்பேற்றியிருக்கிறார்.

இன்றைக்கு மாணவர்களை, இளைஞர்களை சாதிவெறி ஊட்டி தமிழகத்தை வன்முறைக் காடாக மாற்ற முயற்சி செய்து வரும் மனித சமூகத்திற்கே அவமானமான செயலை அரங்கேற்றி வருகிற காட்டுமிராண்டிகளுக்கு அறிவுரைக்கும் வகையில் சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு இத்திரைப்படம். சமூகத்தில் தன்னோடு வாழும் சக மனிதன் ஏன் இப்படி சாதியின் பெயரால் அவமானப்படுத்தப்படுகிறான்? புறக்கணிக்கப்படுகிறான்? கொல்லப்படுகிறான் என்பதை பிரகாஷ்ராஜ், ராதாமோகன் ஆகியோர் கேள்வி கேட்டிருப்பது துணிச்சலான செயல், பாராட்டுக்குரிய செயல்.

சமூகநீதிக்காகப் போராடுபவர்கள், முற்போக்குப் பேசுபவர்கள், சமூகத்தை மாற்றத் துடிப்பவர்களும் இத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். அனைவரையும் பார்க்கத் தூண்ட வேண்டும். அப்போதுதான் இந்தச் சமூகத்தின் அவலங்களை பரப்புரை செய்ததற்கான கடமையைச் செய்ததாக அமையும்.

- வன்னிஅரசு ( vanni.viduthalai@gmail.com)