04 September 2025
புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கூறுகளில் ஒன்றான மதச்சார்பின்மையை நீர்த்து போகச்செய்யும் ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவார் கும்பலின் தொடர் முயற்சிகளில் ஒன்றாக குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது மோடி அரசு.
கடந்த 2019 திசம்பரில் குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில், இஸ்லாமியர்களின் பங்கேற்புடன் சனநாயக சக்திகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். தில்லி ஷாஹீன் பாக் போராட்டக் களம் நாடெங்கும் எதிரொலித்தது. அரசின் அடக்குமுறை - ஊடக இருட்டடிப்பு, இஸ்லாமிய வெறுப்பு பரப்புரை என அனைத்தையும் இஸ்லாமிய பெண்கள் துணிவுடன் எதிர்கொண்டனர்.
டெல்லி கலவரமும் எப்.ஐ.ஆர். எண் 59 ம்
தலைநகர் தில்லியில் பல இடங்களில் மிக வீரியமாக நடைபெற்றவந்த போராட்டத்தில், அரசின் ஆதரவோடு வன்முறையை அரங்கேற்றி சங்க பரிவார கும்பல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு பிப். 22 -24 ஆகிய நாட்களில் இஸ்லாமியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள் தாக்கப்பட்டன, அவர்களின் வீடுகள், வணிக வளாகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்ட பின்னணியில் அரங்கேறிய வன்முறை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் வழக்கு தான் எப்.ஐ.ஆர். 59/2020.
கடந்த 2020 பிப்ரவரியில் தில்லியில் வன்முறை நடைபெற்ற காலகட்டத்தில் 24மற்றும் 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். 2019 திசம்பரிலிருந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வந்தாலும், ட்ரம்பின் வருகையையொட்டி பெருமளவு வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற போராட்டக்காரர்கள் திட்டமிட்டதாகவும், அதற்காக பல மாதங்களாக சதி ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், இதன் விளைவாக தான் தில்லி கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மதரீதியாக நாட்டை துண்டாடும் திட்டமும் இருந்ததாக அரசு சொல்லியது.
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவ செயற்பாட்டாளர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் ஆகிய இருவரை தில்லி கலவரத்துக்கு மூளையாக செயல்பட்டதாக எப்.ஐ.ஆர். 59 குற்றஞ்சாட்டுகிறது. இந்த இருவருடன் சேர்த்து இந்த வழக்கில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என மொத்தம் 18 பேர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
1. தாஹிர் உசேன், 2. உமர் காலித், 3. காலித் சைஃபி, 4. இஷ்ராத் ஜெஹான், 5. மீரான் ஹைதர், 6. குல்ஃபிஷா ஃபாத்திமா, 7. ஷர்ஜீல் இமாம், 8. ஃபைசான் கான், 9. ஷடாப் அஹமத், 10. தஸ்லீம் அஹமத், 11. சலீம் மாலிக், 12. முகமது சலீம் கான், 13. அதார் கான், 14. சஃபூரா சார்கார், 15. ஷிஃபா-உர்- ரஹ்மான், 16. ஆசிஃப் இக்பால் தன்ஹா, 17. நடாஷா நர்வால், 18. தேவங்கனா கலிடா ஆகியோரை கைது செய்து சிறைப்படுத்தியது.
சாலையோர கடையில் மொபைல் சிம் விற்று வந்த ஃபைசான் கான் என்பவருக்கு 2020ஆம் ஆண்டும், பிஞ்சரா டோட் (கூண்டினை உடைத்தெறிவோம்) எனும் கல்லூரி மாணவிகள் அமைப்பை சேர்ந்த நடாஷா நர்வால் மற்றும் தேவங்கனா கலிடா ஆகியோருக்கு 2021ஆம் ஆண்டும் டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது. மேலும் ஜாமியா மிலியா பல்கலை மாணவர்களான இக்பால் தன்ஹா, சஃபூரா சர்கார் (கைது செய்யப்படும்போது 3 மாத கர்ப்பிணி), வழக்கறிஞர் இஷ்ராத் ஜெஹான் ஆகியோரும் வழக்கின் தன்மையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது.
எப்.ஐ.ஆர். 59 வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரில் 6 பேருக்கு 2 ஆண்டுகளிலேயே பிணை கிடைத்தும், மீதமுள்ள 12 பேரும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை வழக்கு விசாரணை தொடங்கப்படவில்லை.
உமர் காலித்தின் சட்டப்போராட்டம்
இந்திய நீதித்துறையின் தற்போதைய பரிதாபகர நிலைக்கான சாட்சியாக மாணவ செயற்பாட்டாளர் உமர் காலித் பிணை வழக்கு அமைந்துள்ளது. முதல் பிணை மனுவை விசாரணை நீதிமன்றம் 2022ல் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு பிணை மனு மீதான விசாரணை கிட்டத்தட்ட 14 மாதங்களில் 14 முறை ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில்
உமர் காலித்தின் பிணை மனுவை விசாரித்தவர் நீதிபதி பெலா திரிவேதி. இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வாகும் முன்னர், குஜராத் முதல்வராக மோடி இருந்த காலகட்டத்தில் அம்மாநில அரசின் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பீமா கொரேகான் வழக்கில் மகேஷ் ராவத் எனும் செயற்பாட்டாளருக்கு மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய பிணையை நிறுத்தி வைத்தவர் நீதிபதி பெலா. பிணை கிடைத்தும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார் ராவத். அதே போல, பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தவர் நீதிபதி பெலா. ஆனால் மறுவிசாரணையில் மீண்டும் அவரை விடுவித்தது மும்பை உயர்நீதிமன்றம். தீர்ப்பு வந்த 7 மாதங்களில் இறந்தே போனார் சாய்பாபா. இதே நீதிபதி தான், டெல்லி உயர்நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள தங்கள் பிணை மனுவை விரைந்து விசாரிக்க கோரிய ஷர்ஜீல் இமாம் மற்றும் குல்ஃபிஷா ஃபாத்திமா ஆகியோரின் மனுவை தள்ளுபடி செய்தவர்.
’All The Appeals Are Dismissed’
எப்.ஐ.ஆர். 59ன் கீழ் சிறைவைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு காலகட்டங்களில் விசாரணை நீதிமன்றத்தால் பிணை மறுக்கப்பட்டு, தில்லி உயர்நிதீமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கின் தொடக்க காலகட்டத்திலேயே 6 பேர் வழக்கின் தரவுகள் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், சிறையில் உள்ள 12 பேரில் 9 பேரின் பிணை மனுவை ஒன்றாக விசாரித்தது தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஷாலிந்தர் கவுர் மற்றும் நவீன் சாவ்லா அமர்வு இந்த 9 பேரின் பிணை மனுக்கள் மீதான விசாரணை பல கட்ட இழுபறிக்கு பின்னர் முடிக்கப்பட்டு கடந்த ஜூலை 9ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி ஷாலிந்தர் கவுர் எழுதிய தீர்ப்பு செப். 2ஆம் தேதி வெளியானது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட சில நொடிகளிலேயே ’All The Appeals Are Dismissed’ என்று அறிவித்தார் நீதிபதி ஷாலிந்தர். பிணை கோரி தாக்கல் செய்த 9 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். அன்று மாலை 133 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு நகல் வெளியானது.
‘Bail is the rule; Jail is the exception’ - ’பிணை என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு’ - இது தான் உச்சநீதிமன்றத்தில் நாம் அடிக்கடி கேட்கக்கூடிய வரி. பீமா கொரேகான் வழக்கில் பிணை வழங்கப்பட்ட அருண் பெரேரா, வெர்னான் கான்சல்வேஸ் மற்றும் சோமா சென் ஆகியோரது #ஊபா வழக்கிலும், தில்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை வழக்கிலும் தனிநபர் சுதந்திரத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது உச்சநீதிமன்றம்.
ஆனால் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்ஃபிஷா ஃபாத்திமா போன்ற தோழர்களுக்கு ஆதரவாக மேலே குறிப்பிட்டுள்ள வழக்குகளின் தீர்ப்புகளை வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியும், அவற்றை ஏற்க மறுத்துள்ளது உயர்நீதிமன்றம். மேலும், இதே வழக்கில் கைது செய்யப்பட்டு 2021ஆம் ஆண்டிலேயே மூவருக்கு பிணை வழங்கப்பட்டதன் அடிப்படையை இவர்களின் பிணை மனுவுக்கு பொருத்திப்பார்க்க முடியாது என்று சொல்லியுள்ளது நீதிமன்றம்.
அதுமட்டுமில்லாமல் ’3000க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை, 30 ஆயிரத்துக்கும் அதிகமான மின்னணு ஆதாரங்கள், நூற்றுக்கணக்கான சாட்சிகள் என இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு மேலும் சில ஆண்டுகள் ஆகக்கூடும். ஏற்கனவே விசாரணை எதுவும் தொடங்கப்படாமல் 5 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்’ என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதத்தை நிராகரித்தது மட்டுமில்லாமல், இத்தகைய பெரிய வழக்கை விசாரணை அமைப்புகள் சிறப்பாக கையாண்டுள்ளதாகவும், வழக்கு அதன் இயல்பான போக்கில் (‘Natural Pace’) நடைபெறுவதாக நீதிபதி தீர்ப்பில் விளக்கமளித்துள்ளார்.
தில்லி கலவரம் நடைபெற்று 5 ஆண்டுகள் கடந்துவிட்டன. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், இன்னும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நிலையில் தான் வழக்கு உள்ளது. வழக்கு விசாரணை தொடங்கப்படாமல் வெறும் விசாரணை கைதிகளாகவே 5 ஆண்டுகளை கடந்து சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பிணை மனுக்கள் 3 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் காத்துக் கொண்டிருந்தன. ஆனால் இதை தான் ‘இயல்பான போக்கு’ என்கிறது தில்லி உயர்நீதிமன்றம். உமர் காலித் போன்றவர்களுக்கு மட்டும் சிறை தான் விதி - பிணை என்பது விதிவிலக்கு என்று சொல்கிறது நீதிமன்றம்.
மனிதர்களை அச்சுறுத்தும் நாய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை மறுவிசாரணை செய்ய அடுத்த சில நாட்களில் சிறப்பு அமர்வு அமைத்து, அந்த தீர்ப்பை நிறுத்திவைக்கும் நீதித்துறையை கொண்டது இந்நாடு. இங்கே தான் அரசியலமைப்பை பாதுகாப்பதற்காக போராடியதால் கைது செய்யப்பட்ட இந்நாட்டின் குடிமக்கள், பிணை எதுவும் இல்லாமல் 5 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டுள்ள அவலமும் அரங்கேறி வருகிறது.
![]() |
டெல்லி கலவரத்தை தூண்டிய பாஜக தலைவர்கள் |
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, ‘துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்’ என்று பொதுக்கூட்டத்தில் பேசிய அனுராக் தாகூர் அப்போது நிதியமைச்சகத்தில் இணை அமைச்சர், அடுத்து அமைந்த ஆட்சியில் தகவல் தொடர்பு அமைச்சர் பதவி அவருக்கு கொடுக்கப்பட்டது. அதே போல, ‘போராட்டக்காரர்களை காவல்துறை விரட்டவில்லை என்றால், நாங்களே தெருவில் இறங்குவோம்’ என்று தில்லி வன்முறைக்கு சில மணிநேரம் முன்பு வன்முறைக்கு தூண்டிய கபில் மிஸ்ரா தான் இப்போது தில்லி பாஜக அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர். கலவரக்காரர்களான மோடி - அமித்ஷா ஆகியோர் தலைமை வகிக்கும் ஆட்சியில் புனிதர்களா இருப்பார்கள்? கலவரக்காரர்கள் ஆட்சியில், சனநாயகவாதிகள் சிறைக் கொட்டடியில்.
பாசிச பாஜக அரசின் கூலிப்படையாக எதிர்க்கட்சியினரை குறிவைக்கும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சனநாயக சக்திகளை வேட்டையாடும் விசாரணை அமைப்புகளான சிபிஐ, என்.ஐ.ஏ., குடிமக்களின் வாக்குரிமையை திருடும் தேர்தல் ஆணையம் என இந்த பட்டியலில் நீதிமன்றங்களும் அதன் நீதிபதிகளும் தங்களை இணைந்துக் கொண்டுள்ளனர்.
காவி பாசிசத்திடம் தொலைத்த முதுகெலும்பை கண்டெடுக்குமா நீதித்துறை?காவி பாசிசத்திடமிருந்து சனநாயகத்தை பாதுகாப்பது ஒவ்வொரு சனநாயகவாதிகளின் கடமை. அந்த வகையில், உமர்காலித் உள்ளிட்ட 9 பேரையும் மீட்டெடுக்க மக்கள் மன்றத்தையும் தீவிரப்படுத்துவோம்!
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
4.9.2025
0 comments:
Post a Comment