19 June 2021

தேச விரோத பாஜகவிடம் பதில் இருக்கிறதா?

இந்திய ஒன்றியத்தின் அரசமைப்புக்கு எதிராக ஆளும் பாஜக அரசாங்கத்தால் கடந்த 2019 திசம்பர் 9,10 ஆகிய  தேதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்தை மக்களவை, மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டது.
ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்சா இச்சட்டத்தை அறிமுகப்படுத்தும் போதே இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு உருவானது. ஆனாலும் பெரும்பான்மையை வைத்து வெற்றி பெற்றது.


ஒன்றியம் முழுக்க குடியுரிமை திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் கடந்த 22.2.2020 அன்று இக்கொடுஞ்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி லட்சக்கணக்கான இளைஞர்களை திரட்டி பேரணி நடைப்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைப்பெற்ற அப்பேரணி அரசியல் களத்தில் பெரும் அதிர்வை உருவாக்கியது.


தலைநகர் புது தில்லியிலும் மாணவர்களின் போராட்டம் தீவிரமானது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தைச்சார்ந்த மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.
அப்போராட்டங்களை முடக்கவும் அச்சுறுத்தவும் RSS ரவுடிகளை இறக்கி துப்பாக்கி,லத்திகளால் மாணவர்களை அடித்து விரட்ட முயற்சித்தனர். ஆனாலும் மாணவர்கள் அஞ்சாது போராட்டங்களை தீவிரப்படுத்தினர். பொதுமக்களும் சாகின் பார்க்கை உருவாக்கி அங்கேயே தங்கி போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.
இப்போராட்டங்களை ஒடுக்க தேசவிரோத பாஜக ஊபா சட்டங்களை மாணவர்கள் மீது பாய்ச்ச ஆரம்பித்தது.


கடந்த 2020 மே மாதத்தில் மட்டும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முன்னின்று போராடிய இந்த பட்டியலில் உள்ள மாணவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது ஊபா சட்டம் பாய்ந்தது. 
1. அப்துல் காலித் (உமர் காலித் நண்பர்)
2. இஸ்ராத் ஜெஹான் (காங்)
3. மீரான் ஹைதர் (ராஷ்டிரிய ஜனதா தளம்)
4. தாஹிர் ஹுசேன் (ஆம் ஆத்மி)
5. குல்ஃபிஷா காட்டூம் (ஜாமியா)
6. சஃபூரா சர்கார் (ஜாமியா)
7. சஃபா உர் ரஹ்மான் (ஜாமியா)
8. ஆசிப் இஃபால் (ஜாமியா)
9. நடாஷா நர்வால் (டெல்லி பல்கலை)
10. தேவங்கனா கலிடா (டெல்லி பல்கலை)
11. ஷடாப் அஹமது
12. சலீம் மாலிக்
13. சலீம் கான்
14. அதர்
15. தஸ்லிம் அஹமது

பெரும்பாலானோர் ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலைப் பட்டதாரிகள். மொத்தம் 21 பேர் மீது டெல்லியில் கலவரம் நடந்த பின்னணியில் வழக்குகள் பாய்ந்தன. இதில் முக்கிய மாணவ தலைவர்களான
உமர் காலித் (முன்னாள் ஜே.என்.யூ மாணவர் தலைவர்),
ஷர்ஜீல் இமாம் ( ஜே.என்.யூ ஆராய்ச்சி மாணவர் - ஜனவரி 2020 சரணடைந்தார். 500 நாட்களுக்கு மேலாகசிறையில் இருக்கிறார்) ஆகியோரும் அடங்குவர்.


ஜவஹர்லால் நேரு பல்கலை ஆராய்ச்சி மாணவர்கள் நடாஷா நர்வால், தேவங்கனா கலிடா மற்றும் ஜாமியா மிலியா மாணவர் ஆசிப் இஃபால் ஆகியோர் 2020ஆம் ஆண்டு மே மாதம் சி.ஏ.ஏ. போராட்டத்தின் மூலம் மதக்கலவரத்தை தூண்டி வன்முறைக்கு வித்திட முயற்சித்தார்கள் என்றும், அமெரிக்க அதிபர் வருகையை மையப்படுத்தி சர்வதேச அரங்கில் இந்தியாவை அவமதிக்க போராட்டத்தை திட்டமிட்டு நடத்தியதாக போலீஸ் குற்றச்சாட்டி சிறைப்படுத்தினர்.

மே 2020லிருந்து ஊபாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். மற்ற வழக்குகளில் பிணை கிடைத்தும் இந்த வழக்கால் சிறையில் இருந்தனர். பல முறை பிணை கேட்டும் கிடைக்கவில்லை. இச்சூழலில் மீண்டும் மே 15 அன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் பிணைக்காக முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சித்தார்த் மிருதுள், அனூப் ஜெய்ராம் பிணைக்கான விசாரணையை நடத்தினர்.


அப்போது, “மாணவர்கள் மீது ஊபா சட்டத்தின் கீழ் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளான தீவிரவாத செயல்பாடு, தீவிரவாத செயல்பாடுகளுக்கு நிதி திரட்டுதல், தீவிரவாத செயல்களுக்கு சதி திட்டம் தீட்டுதல் என எதற்கும் குறிப்பிடும்படியாக எந்த ஆதாரமும் எங்கள் முன் வைக்கப்படவில்லை.
தில்லியின் நடுவே இருக்கும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மாணவர்களால் ஒருங்கிணைக்கப்படும் போராட்டத்தாலேயே ஆட்டம் காணும் அளவிற்கு இல்லாமல், நமது நாட்டின் அடித்தளம் மிக வலுவாகவே உள்ளது” என காவல்துறையின் குற்றச்சாட்டுக்களை விமர்சித்து தீர்ப்பளித்தனர்.

மேலும் நீதிபதிகள், “அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களின் நிலைப்பாட்டை முடக்கும் முனைப்பில் அரசியலைப்பு சட்டம் வழங்கும் போராடுவதற்கான உரிமைக்கும் தீவிரவாத செயல்பாட்டுக்கும் இடையேயான கோட்டை அரசு அழித்துள்ளது. அரசின் இத்தகைய செயல்பாடு தொடர்ந்தால் அது ஜனநாயகத்துக்கு ஆபத்தாக முடியும் என்று எச்சரித்தனர்.

பின்னர் பிணை கேட்டு விண்ணப்பித்த நடாஷா நர்வால், தேவங்கனா கலிடா, ஆசிப் இஃபால் ஆகியோருக்கு ஊபா சட்டத்திலிருந்து பிணை கிடைத்தது.
ஆனாலும் தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தில்லி போலீஸ்  அவசரம் அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அனைத்து தடைகளையும் தகர்த்து மூன்று மாணவ போராளிகளும் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளனர்.


குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க போராடிய மாணவர்களில் சபூரா சர்கார் கர்ப்பிணியாக இருந்ததை தெரிந்தே போலிசார் அடித்து ஊபா சட்டத்தில் சிறைப்படுத்தினர். இப்படி அச்சுறுத்தி கொடுஞ்சட்டங்களால் அடக்கி ஒடுக்குவது சரியா என்பது தான் நீதிமன்றத்தின் கேள்வி.

இக்கேள்விகளுக்கு தேசவிரோத பாஜகவிடம் பதில் இருக்கிறதா?

- வன்னி அரசு