21 September 2020

நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்கலாமா?

நீதிமன்றங்கள் நீதி சொல்லுவதற்கு பதில் அறிவுரைகள் சொல்லுவதில் தான் அக்கறை காட்டுகின்றன. ஆளும் அதிகார வர்க்கத்தால் நீதி மறுக்கப்படுவதால் தான் பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை நாடுகின்றனர். ஆனால் அங்கு நீதிக்கு பதிலாக அநீதியும் அறிவுரைகளுமே வழங்கப்படுவதை பார்க்க முடிகிறது. கடந்த 18.9.2020 அன்று மாண்பமை நீதிபதி கிருபாகரன் அளித்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சி மட்டுமல்ல தமிழ் மண்ணுக்கு எதிராகவும் சமூக நீதிக்கு எதிராகவும் அமைந்திருப்பது வேதனை அளிக்கிறது.

அதன் விபரத்தை பார்ப்போம்.

கடந்த 29.1.2014 அன்று அப்போதைய பிரதமர் அலுவலக அமைச்சரும் தற்போது புதுவை முதலமைச்சர் திரு.நாராயணசாமி அவர்களின் வீட்டருகே காருக்கு அருகே வெடிப்பொருளை வைத்த குற்றச்சாட்டின் பேரில், தேசிய விசாரணை முகமை வழக்கை நடத்தி வருகிறது.

வழக்கில் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த தோழர்கள் திருச்செல்வம், தங்கராஜ் (எ) தமிழரசன், கவியரசன் (எ) ராஜா, காளை லிங்கம், ஜான் மார்டீன் (எ) இளந்தணல், கார்த்திக் என 6 பேர் ‘ஊபா’சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

6 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்கள் பிணை கேட்டு நீதிமன்றத்தை நாடிவந்தனர். தற்போது இந்த வழக்கில் பிணை கோரிய காளைலிங்கம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே 2014 ஆம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் பண்ணை வீட்டில் வெடிகுண்டு வைத்த குற்றச்சாட்டில் இவர்களுக்கு 5 ஆண்டுகள் தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அய்யா நாராயணசாமி காருக்கருகே வைக்கப்பட்ட குண்டு வழக்கிலும் 5 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை தர முடியாது. ஏனென்றால் ஒரே வழக்குகள் தான் இவை. அதனால் இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையும், சாட்சிகள் விசாரணையும் முழுவதும் முடிவடைந்து வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் கொரோனா காலம் என்பதாலும் காளை லிங்கத்தால் போடப்பட்ட ஜாமீன் மனுவை, 13.5.2020 அன்று சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து தான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு முன்னர் 20.6.2018  மற்றும் 09.8.2019 என இரண்டு  முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் 09.4.2014 அன்று ரிமாண்ட் செய்யப்பட்டதிலிருந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக நீதிமன்ற காவலில் இருந்து கொடுமையை சந்தித்து வருகின்றனர்.

இந்த பின்னணியில் தான் பிணை கேட்ட மனுவை நீதியரசர்கள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில் பிணை மனு தள்ளுபடி செய்வதாக இருவருமே தீர்ப்பளித்தனர். ஆனால் நீதியரசர் கிருபாகரன் சொன்ன அறிவுரைதான் மிக மோசமானதாகும். அவரது கருத்து நச்சுக்கருத்து.அநீதியை விட  மோசமானதாகும்.

அவரது அறிவுரை இது தான்.

1 பத்தி: சனநாயக நிறுவனங்கள் மற்றும் தேசத்துக்கு எதிராக இளைஞர்களை போராட தூண்டுவதற்கு, மொழி மற்றும் சித்தாந்தத்தோடு, இனம், பிராந்தியம் மற்றும் மதத்தையும் கருவிகளாக தேசவிரோத சக்திகள் பயன்படுத்துகின்றனர்.

3 பத்தி: ஜார்கண்ட், ஒடிசா, தமிழ்நாடு, கேரள எல்லை உள்ளிட்ட பகுதிகளில் நக்சல் சிக்கல் உள்ளது. இதை மத்திய மாநில அரசுகள் சிறப்பாக கையாளுகின்றன. சில மெத்த படித்தவர்களும் மரியாதைக்குரிய ஆளுமைகளும் நக்சல்களுடன் தொடர்பில் இருந்துகொண்டு, அவர்களுக்கு உதவுவதாக வரும் ஊடக செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. எதிரி நாடுகளைவிட, நாட்டிற்குள் உள்ள சக்திகளால் தான் நமது தேசம் அதிக ஆபத்தில் உள்ளது.

21 பத்தி: தமிழ் மொழி மற்றும் தமிழ் நாட்டு விடுதலை என்று பேசும் சக்திகள், தன்னார்வ அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் குழுக்களின் பேரில் தமிழகத்தில் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் அச்சத்தையும் வெறுப்பையும் விதைத்து போராட தூண்டுகின்றனர்.

23 பத்தி: 2009 இலிருந்து போராட்டங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக இருப்பதற்கு சில சக்திகளே காரணம் என்று சொல்லப்படுகிறது. 2015இல் 20,450 போராட்டங்களுடன் தமிழ்நாடு முதலிடம் வகித்துள்ளது.  2014இலிருந்து 127 ஐ.எஸ்.ஐ ஆதரவாளர்களை தேசிய விசாரணை முகமை கைது செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக 33 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

24 பத்தி: உரிமைகளுக்காக போராடுகிறோம் என்று பெயரில் சில அமைப்புகள், தங்கள் கடமையை மறந்துவிடுகின்றனர். இவர்கள் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்ற பெயரில் எப்போதும் பிரிவினைவாதிகளையும், எதிரி நாடுகளைக் கொண்டாடும் ஆட்களையும் ஆதரிக்கின்றனர். சில சமயங்களில், ‘கருத்துரிமை’ ‘கருத்துச் சுதந்திரம்’ என்ற பெயரில், இவர்களே கூட தேச விரோத கருத்துகளை வெளியிடுகின்றனர். அரசுக்கு எதிராக போராடலாம், ஆனால் நாட்டுக்கு எதிராக போராடக் கூடாது.

25 பத்தி: ‘தமிழ் கலாச்சாரம்’ ‘தமிழினம்’ ‘ தமிழ் மொழி’ ஆகியவற்றை தங்கள் மோசமான திட்டங்களுக்கு ஆயுதங்களாக இந்த சக்திகள் பயன்படுத்தும் போது, அவர்களின் பிராச்சாரத்தை மேலும் பலப்படுத்தும் விதமாக அரசின் செயல்பாடு, குறிப்பாக உணர்வுப்பூர்வமான மொழி விடயத்தில் இருக்க கூடாது. ஏற்கனவே அத்தகைய செயல்பாட்டினால், மொழி உணர்வைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு அரசியல் கட்சிகள் காத்துக் கிடக்கின்றன.

26 பத்தி: அரசின் செயல்பாடுகளால் தங்கள் மொழி புறக்கணிக்கப்படுவதாகவோ, வேறொரு மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவோ தோற்றம் ஏற்பட்டால், இந்த பிரிவினைவாத சக்திகளின் விஷமப் பிரச்சாரத்திற்கு மேலும் எண்ணையை ஊற்றுவது போல அமைந்துவிடும்.

27 பத்தி: நமது நாடு பல இனம், கலாச்சாரம், மொழி, மதங்களைக் கொண்டது. அமைதியும், சமாதானமும் அவசியம். அதற்கு எந்தவொரு குடிமகனும் தனது மொழி, கலாச்சாரம், மதம், இனம் ஆகியவை எந்த அச்சுறுத்தலுமின்றி பாதுகாக்கப்படுகிறது என்று உணர வைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

30 பத்தி: அரசிடம் நாம் எதிர்பார்ப்பவை:
1. தங்கள் மொழி புறக்கணிக்கப்படுவதாகவோ அல்லது ஒடுக்கப்படுவதாகவோ மக்களின் மனதில் உருவாகாமல் தவிர்ப்பது.
2. அரசியலமைப்பிம் 8வது அட்டவணையில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், சில மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்வது.
3. மதவாத, பயங்கரவாத சக்திகளை கடுமையாக ஒடுக்குவது.

31 பத்தி: தேசத்தின் ஒற்றுமையும் இறையாண்மையும் பாதுகாக்கும் நோக்கத்திலேயே மேலேயுள்ள பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் எந்தப் பகுதியிலும் மொழியின் பெயரில் பதற்றத்தை உருவாக்க மொழி அடிப்படையிலான ஆட்களுக்கு இடமளித்துவிடக்கூடாது.

33 பத்தி: இந்த தேச விரோத சக்திகள், எல்லையில் நமது ராணுவ வீரர்கள் செய்த தியாகத்தை சிறுமைப்படுத்தி, மனித உரிமை மீறல் என்ற பெயரில் தீவிரவாதிகளை கொண்டாடுகின்றனர்.
மொழி, இனம், மதம், பிராந்தியம் அல்லது சித்தாந்தம் ஆகியவற்றின் பெயரில் சமூகத்தில் பதற்றத்தை தூண்டியும், வளர்ச்சியை முடக்கியும் நாட்டை பிரிக்க நினைக்கும் தேசவிரோத சக்திகளை அரசுகள் இரும்புக் கரம் கொண்டு கையாள வேண்டும். 
உலகின் பெரிய சனநாயக நாட்டையும், ‘வேற்றுமையில் ஒற்றுமையையும்’ மொழி அடிப்படைவாதிகள் உள்பட அழிவு சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் அரசுகளால் கையாளப்படும் என்பதை இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.


உடன் இருந்த 
இன்னொரு நீதிபதி மாண்பமை ஹேமலதா தமது தீர்ப்பில்,
1. இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதில் உடன்படுகிறேன்.
2.  நீதிபதி கிருபாகரன் அவர்களின் தமிழ் அமைப்புகள், மொழிகள் குறித்தான கருத்துகளையும் அரசுக்கான பரிந்துரைகளையும் நான் ஏற்கவில்லை, அவை இந்த மனுவுக்கு தொடர்பில்லாதவை.
3. மொழிகளைக் கற்பதென்பது ஒருவரின் தனிப்பட்ட தேர்வாகும்.


நீதிபதி ஹேமலதா அவர்களின் கருத்து தான் தமிழ்நாட்டின் கருத்து.

நீதிபதிகள் நீதியை தரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் வழக்குக்கு தொடர்பில்லாதவற்றை பேசுவது நீதியாகுமா?

அரசியல்வாதிகள் மேடையில் பேசுவது போல நீதிபதிகள் நீதிமன்றங்களை பயன்படுத்தலாமா?
 
அதுவும் இந்துத்துவத்தை செயல்படுத்த துடிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக அவர்களின் பாராட்டுக்களை பெறுவதற்காக அறிவுரை சொல்லுவதை தமிழ்நாடு ஏற்காது.

- வன்னி அரசு
    21.9.2020

05 September 2020

இந்து ஆட்டுக்குட்டிகளும் ரத்தம் குடிக்க அலையும் ஓநாய் ராஜாக்களும்

இந்து ஆட்டுக்குட்டிகளும்
ரத்தம் குடிக்க அலையும்
ஓநாய் ராஜாக்களும்..!


இராமநாதபுரம் மாவட்டம் வசந்தம் நகரில் கடந்த 31.8.2020 அன்று, நண்பர்கள் அருண் பிரகாஷ், யோகேஸ்வரன் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது,இருவரையும் ஒரு கும்பல் வெட்டிப்போட்டு விட்டு ஓடி விடுகிறது. இத்தாக்குதலில் அருண் பிரகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே இறந்து போகிறார். யோகேஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும் போதே,  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் என்னும் பொறுப்பான பதவியில் இருக்கக்கூடிய எச். ராஜா மறுநாளே (1.9.2020) காவல்துறையின் மோப்ப நாயைவிட விரைவாக குற்றவாளிகளை கண்டுபிடித்து 'ட்விட்டரி'ல் பதிவிடுகிறார். அவரது பதிவில் "கள்ளர் தெருவைச் சார்ந்த அருண் பிரகாஷ் என்பவர், 'லெப்ட்' சேக் மற்றும் 10 முஸ்லிம் மதவெறியார்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று மதவெறியை தூண்டியுள்ளார்.

ஆனால், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இந்த படுகொலை குறித்து "ராமநாதபுரம் வசந்தம் நகரில் 31.8.2020 அன்று நடந்த அருண்பிரகாஷ் கொலை இரு குழுவினருக்கு இடையே நடந்த சம்பவம்.மதம் சார்ந்த பிரச்சனை ஏதும் இல்லை" என 2.9.2020 அன்று, 'ட்விட்டரி'ல் விளக்கம் கொடுத்தது. அதுமட்டுமல்லாது 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறோம் என்றும் மாவட்ட காவல்துறை அதிகாரி வருண்குமார் கூறியுள்ளார்.

இப்படி சொன்ன மறுநாளே அதாவது 3.9.2020 அன்று மாவட்ட எஸ்பி வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். உண்மையை சொன்னதால் இந்த நடவடிக்கையா? என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் விளக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முதல்வரா அல்லது பாஜகவை காப்பாற்ற முதல்வரா? என்பது குறித்தும் விளக்க வேண்டும்.
 
இந்த கொலை இரு நண்பர் குழுக்களிடையே நடந்திருப்பதாகவும் கஞ்சா விவகாரம் இதில் இருப்பதாகவும் போலிஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. 

வைகை நகரை சார்ந்த சரவணன் என்பவருக்கும் அருண் பிரகாஷ் என்பவருக்கும் மோதல் உருவாகியுள்ளது. அதனடிப்படையில் தான் படுகொலை நடந்தேறியுள்ளது. இந்த கொலை வழக்கில் சரவணன், வெற்றி, இம்ரான்கான், 'லெப்ட்' சேக் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரு குழுக்களிலும் இசுலாமியார்களும் இந்துக்களும் கலந்திருக்கிறார்கள்.  
உண்மை இப்படி இருக்க, பொய்யான வதந்தியை பரப்பும் விதமாக எச்.ராஜா பதிவிடுவது சரியா? இப்போக்கு விசாரணையின் போக்கை மாற்றிவிடாதா? பொறுப்பான பதவியில் இருப்பவருக்கு இது அழகா? என்றெல்லாம் கேட்கலாம்.

ஆனால் பாஜகவிலிருக்கும் யாருக்குமே இது பொருந்தாது. அவர்கள் வன்முறையின் மூலம் மட்டுமே அரசியல் செய்து பழகியவர்கள். நன்முறையின் மீதோ சனநாயகத்தின் மீதோ பாஜக சங்பரிவாரக்கும்பலுக்கு நம்பிக்கை கிடையாது. அந்த அவநம்பிக்கையின் வழியில்தான் எச்.ராஜா இந்து-முஸ்லிம் கலவரத்தை தூண்டும் விதமாக தொடர்ந்து பதிவிடுகிறார். இப்படி பதிவிட்டால் கலவரம் வரும்; அதன் மூலம் தமது பார்ப்பனிய அரசியலை இந்துத்துவ அரசியலாக்கலாம் என திரிந்து வருகிறார். ரத்தம் குடிக்க அலையும் ஓநாயின் செயலை போல இருக்கிறது எச்.ராஜாவின் செயல்பாடு. 
தமிழ்நாட்டில் எப்படியாவது மதக்கலவரம் ஏற்பட்டு அதன் மூலம் இசுலாமியர்களும் இந்துக்களும் மோதினால்தான் பாஜகவை வளர்க்க முடியும் என்னும் சதித்திட்டத்தை எச்.ராஜா போன்ற வன்முறையாளர்கள் செயல்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சதிச்செயலின் தொடர்ச்சிதான் இம்மாதிரியான மத வன்மத்தை பரப்பிவருவது.

அருண்பிரகாஷ் படுகொலை முழுக்க முழுக்க போதை குழுக்களுக்கிடையே நடந்தவை. இது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால், கள்ளர் தெரு என்றும், முஸ்லிம் தீவிரவாதிகள் என்றும் எச்.ராஜா பதிவிடுவதன் நோக்கம் கள்ளர் சமூகத்துக்கும் முஸ்லிம்களுக்கும் மோதலை உருவாக்குவதுதான். அதில்கூட 'இந்து' என்று வழக்கமாக சொல்வதை தவிர்த்துவிட்டு 'கள்ளர்' என்று கீழ்த்தரமான சாதி, மத அரசியல் நடத்துகிறார்.
ஆனால், இந்த இரு ஆபத்தான அரசியல் எதுவுமே அக்கொலைச் சம்பவத்தில் இல்லை. இரு குழுக்களும் போதை வியாபாரம் செய்பவர்கள். அப்படிப்பட்ட போதைக் குழுக்களைக்கூட, தமது 'பிணந்தின்னி' அரசியலுக்கு பயன்படுத்தப் பார்க்கிறார் என்பதுதான் கேவலத்திலும் கேவலம்.
இந்த கேவலமான அரசியல் அரங்கேறுவது முதல்முறை அல்ல. இதற்கு முன்பே பலமுறை அரங்கேற்ற முயற்சித்தார். ஆனால், அத்தனையும் தோல்வியிலேயே முடிந்தது. அதற்கு பல சாட்சியங்கள் உள்ளன. அந்த சாட்சியங்களை பார்ப்போம். 

சாட்சியம் – 1
......................
கடந்த 27.1.2020 அன்று, விஜய் ரகு என்பவர் திருச்சி மார்க்கெட்டில் வைத்து வெட்டிக் கொல்லப்படுகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர். விஜய்ரகு கொல்லப்பட்டவுடனே எச்.ராஜா தனது 'ட்விட்டர்' பக்கத்தில், "விஜய் ரகு இசுலாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார்" என்று பதிவிட்டார்.
அவரைத் தொடர்ந்து பாஜகவின் முன்னணி தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், முரளிதர்ராவ் உள்ளிட்டோரும் 'முஸ்லிம் பயங்கரவாதம்' என்றே குற்றம் சாட்டினர். திருச்சி பகுதியில் சாலை மறியல் போராட்டங்களையும் பாஜக நடத்தியது.

இந்த வழக்கை விசாரித்த டிஐஜி அமல்ராஜ் "இது மதரீதியாக நடந்த கொலை அல்ல; காதல் விவகாரத்தில்தான் நடந்தது" என ஊடகவியலாளர்களிடையே விளக்கினார்.
விஜய் ரகுவை கொன்ற வழக்கில் ஹரிபிரசாத் நாயுடு, சுடர் வேந்தன், சச்சின் என்ற சஞ்சய், முகமது யாசர், மிட்டாய் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். (இந்துக்களைக்கூட  பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த பெருமை எச்.ராஜாவைத்தான் சாரும்). கொலையாளிகளிடம் போலிஸ் விசாரணை செய்தது.

விசாரணையில் பாலக்கரையை சார்ந்த முகமது உசேன் மகன் மிட்டாய் பாபுவுக்கும் விஜய் ரகுவின் மகள் காயத்ரிக்கும் நீண்ட காலமாக காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் கணவன் மனைவியாகவே சுற்றியுள்ளனர். காதலி காயத்ரியின் அம்மா உள்ளிட்டோருக்கும் இந்த காதல் விவகாரம் தெரியும். காயத்ரி வீட்டுக்கும் அடிக்கடி மிட்டாய் பாபு வந்து தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். திருமணத்திற்கு விஜய் ரகு மறுத்துள்ளதால் இந்த கொலை நடந்துள்ளதாக திருச்சி காவல்துறை உண்மையை அறிவித்தது. அதன்பிறகு விஜய்ரகு கொலை குறித்து பாஜக எதுவும் பேசவில்லை என்பது மட்டுமல்ல, அந்த குடும்பத்தையே நடுத்தெருவில் விட்டுவிட்டது. பாஜகவை நம்பிபோன விஜய் ரகு குடும்பம் பாவம் இப்போது நடுத்தெருவில் நிற்கிறது. 

சாட்சியம் - 2
......................
கடந்த 19.9.2016 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சூரி என்கிற சுரேஷ் படுகொலை செய்யப்படுகிறான்.
நண்பர்களோடு இரவில் குடித்துக் கொண்டிருந்தபோது ஓட ஓட விரட்டி செய்யப்பட்ட படுகொலை. இந்தப் படுகொலையைக் கண்டித்து பாஜக மற்றும் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். காரணம், கொல்லப்பட்ட சூரி விசுவ இந்து பரி'த் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர்.

இது போதாதா பாஜக கும்பலுக்கு? வழக்கம் போல எச். ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் "சூரியை படுகொலையை செய்த இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய்ய வேண்டும்" என அறிக்கை கொடுத்தனர். காவல்துறையும் பதற்றமாகி தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேட ஆரம்பித்தன.
இந்தச் சூழலில் போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் கஜா என்னும் கஜேந்திரன் தனது சகாக்களுடன் சரண் அடைந்தார். இவர் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ஓசூர் நகரச் செயலாளர் ஆவார். 
படுகொலையான சூரி அப்பகுதியின் பிரபல ரவுடி. காவல் நிலையத்தில் ரவுடிப் பட்டியலில் அவரது பெயர் உள்ளது. ஆள் கடத்தல், கந்து வட்டி, கேபிள் டிவி, கூலிக்கு கொலை செய்ய ஒருங்கிணைப்பது, 'ரியல் எஸ்டேட்', கட்ட பஞ்சாயத்து என அந்த மாவட்டத்தையே கலங்கடித்து வந்தவன். அதே போல சமூகவிரோத செயலை செய்து வந்தவன்தான் கஜேந்திரன். இருவருமே விசுவ இந்து பரிஷத் அமைப்பில் போட்டியாளர்கள். இந்தப் பின்னணியில்தான் சூரியை கொன்றதாக சொல்லி போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் சரணடைந்தான் கஜேந்திரன். இந்த சம்பவத்திலும் பாஜகவினருக்கு தோல்விதான். குறிப்பாக 
எச்.ராஜா போன்ற ரத்தம் குடிக்க அலையும் ஓநாய்களுக்கு பெருத்த ஏமாற்றம். 

சாட்சியம் - 3
.......................
கடந்த 24.1.2008 அன்று தென்காசியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடிக்கிறது. அதே போல தென்காசி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஆட்டோக்களிலும் அடுத்தடுத்து வெடிகுண்டுகள்  ஒரே நாளில் வெடித்தன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பதற்றமானது தென்காசி பகுதி. உடனடியாக எச். ராஜா, 
இல.கணேசன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் உடனடியாக தென்காசிக்கு பறந்து போய் சுற்றிப்பார்த்துவிட்டு "தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது. முஸ்லிம் தீவிரவாதிகளை இந்த அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. முஸ்லிம் தீவிரவாதிகள்தான் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வைத்துள்ளார்கள்" என தடாலடியாக அறிக்கை கொடுத்தனர்.

அதிர்ச்சி அடைந்த காவல்துறை தீவிரமாக விசாரித்தது. விசாரித்ததில் குண்டு வைத்ததாக 3 முக்கிய குற்றவாளிகளை போலிஸ் தூக்கியது. ஒருவர் பெயர் ரவிபாண்டியன், இன்னொருவர் நாராயணன் சர்மா, மூன்றாமவர் கே.டி.சி. குமார் ஆகியோர் தான். 

கைது செய்யப்பட்டவர்களில் எந்த முஸ்லிம் சமூகத்தினரும் இல்லை. இது குறித்து, அன்றைய ஐ.ஜி சஞ்சீவ்குமார், டிஐஜி கண்ணப்பன், மாவட்ட எஸ்.பி. ஸ்ரீதர் ஆகியோர் கூட்டமாக செய்தியாளர்களிடம் விளக்கம் கொடுத்தனர்.
இதில் என்ன கொடுமை என்றால், கைதான ரவி பாண்டியன் இந்து முன்னணியின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் குமார் பாண்டியனின் உடன் பிறந்த அண்ணன்தான். குமார் பாண்டியன் 2007இல் படுகொலை செய்யப்பட்டார்.

எதற்காக 
இந்த கொலை?

பெரிதாக ஒரு புடலங்காயும் இல்லை. 

இந்து முன்னணித் தலைவராக குமார் பாண்டியன் இருந்த போது நிறைய கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் தனிப்பட்ட முறையில் பல்வேறு தரப்பிலிருந்து பகை கூடிக்கொண்டே போனது. காவல் நிலையத்திலும் நிறைய புகார்கள். கந்து வட்டி புகாரும் குமார் பாண்டியன் மீது உள்ளது. இந்த பின்னணியில் தான் அவரால் பாதிக்கப்பட்டவர்களால் குமார் பாண்டியன் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் இந்து முன்னணி தலைமை எந்த உதவியும் செய்யவில்லை என்னும் கோபத்தில்தான் ரவி பாண்டியன் தமது பரிவாரங்களுடன் தாமே குண்டுகளை வைத்து கவனத்தை ஈர்க்க முயற்சித்துள்ளார். இந்த குற்றவாளிகளின் வீடுகளில் டெட்டனேட்டர், வெடிக்காத ஒரு வெடிகுண்டு, சர்க்யுட், பேட்டரி, டைம் செட் போன்ற பொருட்களை தென்காசி காவல்துறை கைப்பற்றியது.
காவல்துறை வழக்கை இப்படி முடித்ததால் பாஜக கும்பலுக்கு பெருத்த அடிமேல் அடி. இந்த வழக்கிலும் பாஜக நினைத்த மதக்கலவரம் உருவாகவில்லை.

சாட்சியம் - 4
....................
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுர் கணக்கப்பாளையத்தைச் சார்ந்தவர் நந்து என்ற நந்தகுமார். இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் மாவட்டத் துணைச் செயலாளர் கடந்த 18.3.2020 அன்று பெருமாநல்லூர் காவல் நிலையத்தில், "தன்னை 6பேர் கொண்ட கும்பல் வெட்டிப் போட்டு ஓடிவிட்டதாக" ரத்தம் சொட்ட சொட்ட புகார் மனு ஒன்றை கொடுத்தார். காவல் துறையும் விசாரணையை முடுக்கி விட்டது. இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் நந்தகுமாரை வெட்டிய முஸ்லிம் பயங்கரவாதிகளை கைது செய்ய வேண்டும் என அறிக்கை கொடுத்தனர்.
இறுதியாக ஒரே ஒருவர் கைதானார். பல கட்ட விசாரணைக்குப் பிறகு, துருவி துருவி விசாரித்ததில் அவர் கைது செய்யப்பட்டார். 

கைதான குற்றவாளி யார் தெரியுமா? 

அவர் - புகார் கொடுத்த நந்தகுமாரேதான்! 

காரணம் என்ன? 
அவருக்கு அவரே வெட்டிக் கொல்ல முடியுமா? இதுவெல்லாம் நடக்குமா? என்று போலிசே திகைத்துப் போனது. நந்தகுமாரே ஒப்புக்கொண்டார். "இந்து மக்கள் கட்சியில் மாவட்டப் பொறுப்பிலேயே எத்தனை ஆண்டுகள்தான் இருப்பது. மாநில அளவில் பதவி உயர்வு கேட்டேன். மறுக்கப்பட்டே வந்தது. அதனால்தான் நானே என்னை வெட்டிக் கொண்டு புகார் கொடுத்தேன்" என்றார். 3 மாதம் கம்பி எண்ணி விட்டு இப்போது பிணையில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
யாராவது பொது வாழ்க்கையில் அதுவும் இந்துக்களுக்காக போராட வருபவர்கள் இந்த கேவலத்தை செய்வார்களா? இந்த கேவலமான வேலையை செய்துவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போடுவது நேர்மையான அரசியல் தானா? 

சாட்சியம் - 5
....................
இந்து முன்னணியின் திருப்பூர் மாவட்ட தலைவர் கோபிநாத். இவர் கடந்த 29.2.2016 அன்று திருப்பூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். பொடனூர் அருகே  காரில் போய்க்கொண்டிருக்கும் போது தொப்பி போட்ட முஸ்லிம் சிலர் தன்னுடைய கார் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிவிட்டனர் என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார். காரின் முன் பகுதி எரிந்த புகைப்படமும் பத்திரிகைகளில் வெளிவந்தது.
வழக்கம் போல் எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் முஸ்லிம் தீவிரவாதிகளை கைது செய்ய வேண்டும் என அறிக்கை விடுத்தனர். திருப்பூர் காவல் துறை தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேட ஆரம்பித்தது.
இந்த வழக்கிலும் ஒரே ஒருவர் சிக்கினார். அவர் பெயர் முருகன். (எந்த முஸ்லிமும் சிக்கவில்லை) 

சரி, 
யார் இந்த முருகன்?

இவர் வேறுயாருமில்லை கோபிநாத்தின் உதவியாளர் தான். உதவியாளர் என்று மட்டும் சொன்னால் சரியாகுமா? ஆகவே, இந்து முன்னணியின் தொழிற்சங்கப் பிரிவின் பொறுப்பாளராகவும் நியமித்தார். 

எதற்காக இந்த குண்டு வெடிப்பு நாடகம்?

வேறொன்றுமில்லை, “பத்திரிகைகளில் பேசப்படக்கூடிய தலைவராக வரவேண்டும் என கோபிநாத் விரும்பினார். அதற்கு கோபிநாத் சொன்னது போலவே அவரது காரில் நானே குண்டுகளை வீசினேன். பழி முஸ்லிம்கள் மீது போடப்பட்டது. இதற்கு முன்பும் அவரது வீட்டில் தபால் வெடிகுண்டு வந்ததாக நான்தான் புரளியை கிளப்பினேன்" என்று காவல் நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்தார். இந்த வெடிகுண்டு நாடகத்திலும் பாஜக இந்துத்துவக் கும்பலுக்கு மூக்கடைப்புதான்.

சாட்சியம் - 6
.....................
இந்து முன்னணியின் சங்கரன் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்) நகரச் செயலாளர் ஜீவராஜ். இவர் கடந்த 5.7.2014 அன்று அவரது வீட்டு வாசலில் வைத்தே இரவு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது பல குற்றவழக்குகள். இருமுறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் தளைப்படுத்தப்பட்டார். நிறைய கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், பெண்கள் விவகாரம் என பல வழக்குகள் இருந்தன. அதனால் இந்த பின்னணியில் கொல்லப்பட்டிருக்கலாமோ என சங்கரன் கோவில் காவல்துறை விசாரணையை மேற்கொண்டது.
ஆனால், இந்து முன்னணியின் 'வீரத்துறவி' ராமகோபாலன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "இந்து மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலாக தமிழ்நாடு மாறிப்போவது வருந்தக்கூடியதாக இருக்கிறது. முஸ்லிம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்" என ஆவேசமாக விடுத்திருந்தார். (எச். ராஜாவின் பெரியப்பாவாச்சே)
ராமகோபாலன் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்கிற கவலையில் சங்கரன் கோவில் போலிஸ் மட்டுமல்லாது நெல்லை மாவட்ட போலிசே பல தனிப்படைகளாக பிரிந்து கொலைக் குற்றவாளிகளை தேடின. கடைசியில் ஜீவராஜியின் முதல் மனைவி அய்யம்மாளை காவல் துறை கைது செய்தது.

அய்யம்மாள் எதற்காக ஜீவராஜை கொலை செய்ய வேண்டும்? அய்யம்மாளே சொல்கிறார் கேளுங்கள் "ஜீவராஜ் ஒரு குடிகாரன். தினமும் குடிச்சுட்டு அடிப்பான். அவனோட சித்ரவதையை தாங்க முடியாமல் தான் எனது அம்மா வீட்டுக்கு போய்விட்டேன். நான் வீட்டை விட்டு போனதும் சர்மிளா என்ற தேவியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதை தட்டிக்கேட்டதால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அதனால் நானே முந்திக்கொண்டு ஆட்களை வைத்து கொலை செய்தேன்" என்று வாக்குமூலம் கொடுத்தார்.

இப்படி கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், பெண்கள் விவகாரம், பதவி ஆசை, ரவுடித்தனம் என சமூக விரோதச் செயல்களை செய்துவரும் பாஜக கும்பல் எப்படியாவது வன்முறையை கட்டவிழ்த்து,
இரு சமூகங்களை மோதவிட்டு லாபம் பார்க்கலாம் என கேவலமான அரசியலை செய்து வருகிறது.
எச். ராஜா போன்ற பார்ப்பனக் கும்பல் உழைக்கும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கி அதில் அரசியல் செய்யும் கேவலத்தை தொடர்ந்து செய்து வருகிறது. எப்போது பேசினாலும் சாதி, மத வன்மம் என்னும் நஞ்சை கக்கியே வருகிறார் எச்.ராஜா. இந்த ரத்த சாட்சியங்கள் எல்லாம் ஒரு 'சாம்ப்பிள்'தான். நிறைய இருக்கின்றன. நேர்மையான அரசியல் செய்ய தெரியாத கோழைகள் தான் சங்பரிவாரக் கும்பல். ஆனால் தமிழ்நாடு இந்த பிணந்தின்னியாக அலையும் அரசியல் கோழைகளை எதிர்கொள்ளும் துணிச்சலை பெற்றுள்ளது.  

- வன்னி அரசு
  5.9.2020