05 July 2021

அரச பயங்கரவாதத்தால் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி கொலை

அருட்தந்தை ஸ்டேன் சுவாமி கைது:
‘பீமாகோரேகான்’ சம்பவத்தை முன்வைத்து வேட்டையாடும் இந்துத்துவ பாஜக அரசு

இந்த 83 வயது பெரியவர் மாவோயிஸ்ட்களுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்ததாகவும் துரோகம் செய்ததாகவும் குற்றம் சுமத்தி தளைப்படுத்தப்பட்டுள்ளார். அதுவும் 'ஊபா' சட்டத்தில் தளை செய்திருக்கிறது தேசிய புலனாய்வு முகாமை என்னும் NIA அமைப்பு.

இவரது பெயர் ஸ்டேன்சுவாமி தமிழ்நாட்டைச் சார்ந்தவர். தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். இந்தியாவின் இயேசு சபையில் இருந்து கொண்டு சமூக சேவை செய்து வந்தவர். அருட்தந்தை என்று அழைக்கப்படும் பாதர் ஸ்டேன் சுவாமி பழங்குடி மக்களுக்காக பணி செய்வதற்காக ஜார்கண்ட் மாநிலத்தில் வாழ்ந்து வந்தார்.

கடந்த அக்டோபர் 6, 2020 அன்று தேசிய புலனாய்வு அமைப்பைச் சார்ந்த அதிகாரிகள் அருட்தந்தை ஸ்டேன் சுவாமியை விசாரனைக்கு ராஞ்சி (ஜார்கண்ட் தலைநகர்) வருமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். விசாரனைக்கு சென்றார். 
சுமார் 15 மணி நேர விசாரனைக்கு பிறகு 'ஊபா' சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.

இந்தப் பெரியவர் அப்படி என்ன தவறு செய்து விட்டார்?

2017 திசம்பர் 31 அன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 'எல்கார் பரிஷத்’மாநாடு நடைபெற்றது. 2018 சனவரி 1 அன்று பீமா கோரேகானில் தலித்துகள் வீரவணக்க நிகழ்வை நடத்தினர். அதையடுத்து அங்கு பெரும் வன்முறையை இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்தினர். பதிலடி கொடுத்து மக்களை காத்தனர் மகாராஷ்டிர தலித்துகள். இந்த சம்பவத்தில் தலித்துகள்தான் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். வன்முறை நடத்திய எந்த இந்துத்துவ இயக்கங்களை சார்ந்தோர் கைது செய்யப்படவில்லை. ஆனால்,எல்கார் பரிஷத் மாநாட்டில் கலந்து கொண்டு வன்முறையை தூண்டியதாக பல அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ‘ஊபா' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் முக்கிய மானவர்கள் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே ( இவர் புரட்சியாளர் அம்பேத்கரின் உறவினர்),
கவுதம் நவ்லாகா, கவிஞர் வர வரராவ், தொழிற்சங்கவாதி சுதா பரத்தவாஜ், சுதிர்தவாலே மற்றும் கபீர் கலைக் குழுவைச் சார்ந்த சாகர் கார்கே,ரமேஷ் கெய்சர், ஜோதி ஜக்தாப் உள்ளிட்ட 15 பேரை 'ஊபா' சட்டத்தில் கைது செய்து சிறைப்படுத்தியது. இந்துத்தவ பாஜக அரசு. இந்த பின்னணியில்தான் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார். "தான் பீமா கோரேகானுக்கு சென்றதும் இல்லை; மவோயிஸ்டுகளை பார்த்ததும் இல்லை”என ஸ்டேன் சுவாமி மறுத்துள்ளார். ஆனாலும் தேசிய புலனாய்வு அமைப்பு நடக்க முடியாத இந்த பெரியவரால் தேசத்துக்கு ஆபத்து எனவும் மாவோயிஸ்டுகளுன் சேர் ந்து தேசத்துக்கு ஆபத்து விளைவிக்கும் சதி செயலில் ஈடுபட்டார் என பொய்யாக குற்றம் சுமத்தி ‘ஊபா' சட்டத்தில் சிறைப்படுத்தி இருக்கிறது.

அருட்தந்தை ஸ்டேன் கடந்த 50 ஆண்டுகாலமாக பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வருபவர்.கேரளா, தமிழ்நாடு, ஜார்கண்ட் என பல்வேறு மாநிலங்களில் களப்பணி செய்து வந்தவர். ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வந்தவர். இதைத்தவிர பாதர் ஸ்டேன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. முதிர்ந்த வயதில், ஓய்வெடுக்க வேண்டிய வயதில் 'ஊபா' சட்டத்தில் சிறைப்படுத்தும் கொடூர மன நிலை பாஜக கும்பலை தவிர வேறு யாருக்கு வரும்?

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பீமா கோராகானை வைத்துக் கொண்டு தலித்துகளை ஒடுக்குவதில் குறியாக இருப்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
தலித்துகள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என குறிவைத்து இந்துத்துவ பாஜக அரசு வேட்டையாடுவதை எல்லோரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காகப் போராடுவோம். 'ஊபா' சட்டத்தில் தளைப்படுத்தப்பட்டோரின் விடுதலைக்காக தேசிய அளவில் சட்ட ரீதியான பாதுகாப்பு அமைப்பை இப்போதாவது தொடங்க வேண்டும். அதுதான் அவசரமும் அவசியமும்.

 -வன்னி அரசு
  11.10.2020

***

அருட்தந்தை ஸ்டேன் கடந்த 9 மாதங்களாக விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஒரு நாளும் விசாரணைக்கு அவரை போலீஸ் அழைத்ததில்லை. கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதம் இருமுறை பிணை கேட்ட அவரின் மனுவை என்.ஐ.ஏ. நீதிமன்றம் நிராகரித்தது. மே மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடும் சட்ட போராட்டத்துக்கு பின்னரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தவர், இன்று மதியம் அவரது பிணை மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மருத்துவமனையில் இறந்து போனார். அவரது இறப்பு என்பது பாஜக அரசு நிகழ்த்தியுள்ள பச்சையான அரச பயங்கரவாதம்!

-வன்னி அரசு
05.07.2021

02 July 2021

ஊபா சட்டம்: மக்கள் போராளி அகில் கோகாய் விடுதலை

ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த 
அகில் கோகாய் 550 நாட்கள் கழித்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். 
தீர்ப்பை வாசித்த நீதிபதி ப்ரஞ்சல் தாஸ்,
“தீவிரவாத ஆபத்திலிருந்து மக்களை காக்கும் பணியில் நாட்டின் முன்னணி விசாரணை அமைப்பாக உள்ள என்.ஐ.ஏ.வின் செயல்பாடு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. என்.ஐ.ஏ.விடம் எதிர்பார்க்கப்படும் உச்சபட்ச தரத்தை கைக்கொள்ளவேண்டும்" என விமர்சித்துள்ளார்.

சரி, யார் இந்த அகில் கோகாய்?

நாடு முழுக்க குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் வெடித்தபோது, அசாம் மக்களை திரட்டி போராடிய அசாமி இவர்.
தேசவிரோத பாஜக அரசு அகிலை ஊபா சட்டத்தில் கடந்த டிசம்பர் 12, 2019 அன்று கைது செய்து,அவர் மீது 12 வழக்குகள் பதியப்பட்டன. அதில் 2 வழக்குகளில் ஊபா சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்தது.

சிறையிலிருந்தபடியே ‘ராய்ஜோர்தான்’
என்னும் கட்சியை தொடங்கினார்.
நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அசாமில் சிஏஏ வை எதிர்க்கும் கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்.
சிப்சாகர் தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார்.
சிறையிலிருந்தபடியே தொகுதி மக்களிடம் கடிதங்கள் வாயிலாக பரப்புரை செய்தார். 
அகில் கோகாய் அம்மா பிரியடா கோகாய், மனைவி கீதாஶ்ரீ என குடும்பத்தினர் தேர்தல் பரப்புரை செய்தனர். பாஜக வேட்பாளர் சூரபி ராஜ்கோனை 11,875 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சிறையிலிருந்தே அகில் பெற்ற வெற்றி அசாம் மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கியுள்ளது. இப்போது ஊபா சட்டத்திலிருந்து விடுதலை ஆகியிருப்பது மேலும் எழுச்சியை அசாமியர் பெற்றுள்ளனர்.


விடுதலைக்கு பின்பு ஊடகத்திடம் 
பேசிய அகில் கோகாய், 'தீர்ப்பு எனக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் சிறைப்பட்டுள்ளோருக்கும் நம்பிக்கையை தரும். இந்திய அரசு ஊபாவையும் என்.ஐ.ஏவையும் தவறாக பயன்படுத்தியுள்ளது தெளிவாகிறது.
தேசவிரோத பாஜக அரசு இந்த வழக்கை புரிந்து கொண்டு ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட அத்தனை பேரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்'.

பொடா சட்டம் கடந்த 2002ல் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் அரசியல் பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டு, பின்னர் 2004ல் திரும்ப பெறப்பட்டது.

அது போல வடகிழக்கு மற்றும் காஷ்மீரில் ராணுவத்தின் அட்டூழியங்களுக்கு சட்ட பாதுகாப்பு தரும் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தையும், எதிர் கருத்து கொண்டோரை தேச விரோதிகளாக சித்தரித்து முடக்கும் தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

தேசவிரோத பாஜக அரசு இவற்றை உட்படுத்துமா?

- வன்னி அரசு
  2.7.2021