26 November 2013

படித்துரைப் பாண்டியும் பழ.நெடுமாறனும்..! - வன்னிஅரசு



படித்துரைப் பாண்டியும் பழ.நெடுமாறனும்..!
வன்னிஅரசு
அந்த நகைச்சுவைக் காட்சியை தொலைக்காட்சிகள் எப்பொழுது ஒளிபரப்பினாலும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிக்காதவர்களே இருக்க முடியாது! 
தேநீர்க் கடை முன்பு நடிகர் வடிவேலு தமது கோஷ்டிப் பரிவாரங்களுடன் போய் நிற்பார்.  கோஷ்டியில் ஒருவர் போய் டீக்கடைக்காரரிடம் "அண்ணனுக்கு ஒரு டீ போடு!" என்பார்.  டீக்கடைக்காரர் "டோக்கன் வாங்கு" என்பார்.  அவர் உடனே, "அண்ணே டோக்கன் வாங்கணுமாம்ணே" என்று வடிவேலுவிடம் வந்து சொல்வார்.  உடனே வடிவேலுமுகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, "இந்தப் படித்துரை பாண்டிக்கிட்டயே டோக்கன் கேக்குறியா?  நீ இந்த ஊர்லயே இருக்க முடியாதுடா.. டேய்" என்று கத்திக்கொண்டே டீக்கடையை அடித்து நொறுக்கிவிட்டு, "எங்ககிட்டயவே..." என்று கத்திக்கொண்டே தனது கோஷ்டிப் பரிவாரங்களுடன் ஓடி ஒரு மறைவில் இருந்துகொண்டுதன் கோஷ்டி ஆளிடம், "டேய்... அந்தக் கடைக்காரன் கடையை இழுத்து மூடிவிட்டு ஓடுறானான்னு பார்.  அவன் ஓடிட்டா அவன் நமக்கு அடிமைஓடாவிட்டால் நாம் அவனுக்கு அடிமை" என்று மூச்சிரைக்கச் சொல்வார். கோஷ்டியிலிருந்து ஒருவர் எட்டிப் பார்க்கையில்டீக்கடைக்காரர் கடையை இழுத்து மூடிவிட்டு தனது வேட்டியால் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஓட்டம் பிடிப்பார்.  இதனைப் பார்த்தவுடன் கோஷ்டியில் ஒருவர், "அண்ணே ஓடுறான்ணே!" என்று சொல்வார்.  அப்போது வடிவேலு மிக உற்சாகமாக, "அப்ப இன்னையிலருந்து நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா" என்று பெரிய ரவுடி போல 'ஃபிலிம்காட்டுவார். 
படித்துரைப் பாண்டியைப் போல அய்யா நெடுமாறன் தனது படை பரிவாரங்களுடன் தமிழகத்தில் அரசியல் செய்து வருகிறார்.  இவ்வளவு காலமும் வீராவேசமாகப் பேசினார்கள். கருணாநிதியை ரவுண்டு கட்டினார்கள்.  வா... வந்து பார்... என்கிற அளவில் பிளந்து கட்டினார்கள்.  தமிழர் துரோகி என்றார்கள்தமிழர்களுக்கு எதிரி என்றார்கள்,தமிழகத்திலிருந்தே விரட்ட வேண்டும் என்றார்கள்.  உச்சகட்டமாக தெலுங்கர் என்றுகூறி மார் தட்டினார்கள்.  புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்கு வந்தால்தான் எல்லாம் மாறும் என்று 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2011சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தார்கள்.  இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள்.  இன்னும் கூடுதலாகப் போய் ஜெயலலிதாவை ['ஈழத் தாய்என்றார்கள். உண்மையான புரட்சித் தலைவி அம்மாதான் என்றார்கள்.  அதிமுகவினரைவிடக் கூடுதலாக ஜெயலலிதாவை அம்மா அம்மா என்று ஊர் ஊராய் தொகுதி தொகுதியாய் கூவினார்கள். ஈழவிடுதலையை வாங்கித் தருபவர் என்று அடையாளப்படுத்தினார்கள்.  அம்மா வந்தால் தமிழகத்தில் ஈழவிடுதலைக்கான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றார்கள்.  ஏன்... அம்மாவே தலைமை தாங்கி ஈழப் போரை நடத்துவார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.
அம்மா ஆட்சிக்கு வந்தார்இனப்படுகொலை செய்த இராஜபக்சேவைத் தண்டிக்கவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றினார்.  தீர்மானத்தை வரவேற்று பழ.நெடுமாறன் ஆகா.. ஓகோ.. என வானுக்கும் மண்ணுக்கும் குதித்துக் குதித்து அறிக்கை வெளியிட்டார்.  எதிலும் இரண்டடி தாவி ஓடநினைக்கும் அண்ணன் சீமான்அதே அம்மாவைப் பாராட்டி சென்னை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினார்.  அது மட்டுமல்லாது அம்மாவைப் பாராட்டி வேலூரிலிருந்து சென்னை வரை நடை பயணம் வேறு.  அம்மாவே நாணி வெட்கப்படுமளவுக்கு புகழாரப் பொதுக்கூட்டங்கள்.
இந்தக் காட்சிகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கின.  கடந்த இரண்டாண்டுகளாகவே  தமிழகத்தில் மாவீரர் நாள் பொதுக்கூட்டங்களை நடத்த ஈழத்தாய் மறுத்து வருகிறார்.  மேதகு பிரபாகரன் அவர்களின் படங்களை அச்சிட்டு ஒட்டப்படும் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு வருகின்றன.  எந்த இடத்திலும் மாவீரர் நாள் விழாவுக்கோமே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கூட்டங்களுக்கோ தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுவரும் நெருக்கடிகள் தொடர்கின்றன.  இந்நிலையில்தான் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன.  கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன.  ஆனால் நெடுமாறன் வகையறாக்களோ இத்தகைய எந்தப் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை.  வெற்றி அல்லது வீரச்சாவு என முழங்கி 15 நாட்களாக உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்ட தோழர் தியாகு அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் களத்தில் குதித்தபோதுகூடஅவருக்கு வாழ்த்துச் சொல்லக்கூட நேரமில்லாமல் நெடுமாறன் தஞ்சை விளாரில் தங்கி முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.  தமிழர்களின் உணர்வுகளை மதித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.  அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளே -  அதாவது நவம்பர் 13 அதிகாலை - முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர்களையும்பூங்காவையும் தமிழகக் காவல்துறை இடித்துத் தள்ளியது. அங்கிருந்த நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரைபணி செய்ய விடாமல் தடுத்தாகச் சொல்லி வேனில் அள்ளிக்கொண்டுபோய் ஒரு திருமணத்தில் அடைத்தார்கள்.  எப்படியும் மாலை 5 மணிக்கு மேல் விட்டுவிடுவார்கள் என்று நினைத்திருந்தவர்களின் நினைப்பில் ஜெயலலிதா மண்ணைப் போட்டார்.  இரவோடு இரவாக 83 பேரையும் திருச்சி சிறைக்குள் திணித்தார்கள். 
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்தும்நெடுமாறன் உள்ளிட்ட 83பேர் கைதைக் கண்டித்தும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள்அமைப்புகள் அனைத்தும் அறிக்கை வெளியிட்டன.  'டெசோசார்பில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கே சென்று பார்வையிட்டுதமிழக அரசைக் கண்டித்ததோடுஇடிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசே கட்டித் தரவேண்டும்கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
9 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் பிணையில் வெளிவந்த அய்யா நெடுமாறனை, 'வாராது வந்த மாமணி', 'தமிழ்த் தேசியப் போராளிம.நடராசன் சிறைவாயிலிலேயே ஆரத்தழுவி வரவேற்றார். பின்பு செய்தியாளர்களிடம் நெடுமாறன்மிகுந்த கோபத்துடனும்முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டும்அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். (இந்த இடத்தில் உங்களுக்கு வடிவேலு ஞாபகம் வந்தால் நாம் பொறுப்பல்ல)
"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்த அதிகாரிகள் தன்னிச்சையாக எடுத்த முடிவாகத்தான் இருக்க முடியும்.  அவர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் முதல்வரைத் தவறாக நினைப்பார்கள்" என்று 'வீராவேசமாகப்பேசினார்.  முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்தது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியாது என்றும்அதிகாரிகள் தன்னிச்சையாகவே இடித்தார்கள் என்றும் நெடுமாறன் கூறுவதன் மூலம் நிகழ்ந்த தவறுகளுக்கு ஜெயலலிதா காரணமல்ல என்று மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறாராம். 
தமிழகத்தை ஆட்சி செய்பவருக்கு தமிழகத்தின் எந்த மூலையில் எது நடந்தாலும் தெரிந்திருக்க வேண்டும்தானே.  "அமைச்சரே மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்று வெளியில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் ஆட்சி நடத்தும் மங்குனி அரசியா ஜெயலலிதா?  என்ன சொல்ல வருகிறார் நெடுமாறன்.  ஒன்றுமே தெரியாமல் ஜெயலலிதா ஆட்சிபுரிகிறாரா?  அல்லது ஜெயலலிதாவைக் காப்பாற்ற நினைக்கிறாரா?  சரிஜெயலலிதாவிற்கு தெரியாமல் இடித்தார்கள் என்றால்அய்யா சிறைக்குப் போனது கூடவா அம்மாவுக்குத் தெரியாது.  நீதிமன்றத்தில் பிணை கேட்டதுகூடவா தெரியாதுமுள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பின்போதுஅரசு அனுமதி வழங்காததால் அய்யா நீதிமன்றத்திற்குப் போனாரேஇதுகூடவா அம்மாவுக்குத் தெரியாது?  கொளத்தூர் மணி அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததுகூடவா தெரியாது?  இவையும் அதிகாரிகளே தன்னிச்சையாக எடுத்த முடிவுதானா?  மாவீரன் நெடுமாறன் இப்படி அந்தர் பல்டி அடித்துப் பேசும் அரசியல்தான் என்ன!
சரிநெடுமாறன்தான் இப்படி என்றால்வீழ்ந்துவிடாத வீரத்துக்கும்மாண்டுவிடாத மானத்துக்கும் சொந்தக்காரரான சீமான்நெடுமாறன் கைதையொட்டி முள்ளிவாய்க்கால் முற்றத்திலேயே செய்தியாளர்களிடம் பேசும்போது இந்நிகழ்வுக்கு மத்திய உளவுத்துறைதான் காரணமாக இருக்க முடியும்.  மத்திய அரசால்தான் தமிழக அதிகாரிகள் தமிழர்களுக்கு எதிராக நடக்கிறார்கள்.  இப்போக்கை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.  நெடுமாறன் எப்படிப் பேசினாரோ அதையே சீமானும் தமிழக அரசுக்கும் முள்ளிவாய்க்கால் இடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார்.
இவ்வளவு கடுமையாகவும்தமிழினத்திற்கு விரோதமாகவும் நடந்துகொள்ளும் ஜெயலலிதாவைப் பார்த்து,ஜெயலலிதா செய்வது மக்கள் விரோதம் என்று சொல்லக்கூடத் துணிச்சல் இல்லாதவர்களாக இந்த 23ஆம் புலிகேசிகள் தமிழகத்தில் வலம் வருகிறார்கள்.  இதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்?  ஒன்றுமில்லை.  அடிப்படையில் கலைஞர் கருணாநிதி எதிர்ப்புதான்.  தமிழீழ விடுதலையோதமிழர் ஒற்றுமையோதமிழின விடுதலையோதமிழ்த் தேசிய அரசியலோ.. இந்த நெடுமாறன் வகையறாக்களுக்கு முக்கியமல்லகருணாநிதி எதிர்ப்புதான் முக்கியம் என்பதை முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்குப் பின்னான இவர்களின் அரசியல் நமக்கு உணர்த்துகிறது.  கலைஞர் கருணாநிதி சாதாரணமாகத் தட்டினாலே அய்யோ இரத்தம்... என்று கூப்பாடு போட்டவர்கள்ஜெயலலிதா உலக்கையை வைத்து இவ்வளவு மோசமாக அடித்தும் தலையில் வருவது தக்காளி சட்னிதான் என்று சிரித்துக்கொண்டே துடைத்துக்கொண்டு வருகிறார்கள். 
இப்போது முதலில் சொன்ன வடிவேலுவின் காமெடிக் காட்சியை நினைத்துப் பார்த்தால்நெடுமாறனின் அரசியல் கண்டு நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.
பாவம்... நெடுமாறன் வகையறாக்களுக்கு 'பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்...என்ன செய்வது?  இந்த இலட்சணத்தில் தமிழீழத்தை மீட்கப் போகிறார்களாம்... தமிழ்த் தேசியத்தை அடையப் போகிறார்களாம்!
இவர்களது அரசியல் கண்டு ஜெயலலிதாவின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் சொல்கிறது - "எவ்வளவு அடிச்சாலும் நெடுமாறன் தாங்குறாரே... இவர் ரொம்ப நல்லவரு..."

08 November 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீது கட்டப்படும் ஒரு புதிய அரசியல் அணி !!

மாவீரர்கள் என்றாலே நவம்பர் மாதம்தான் நினைவுக்கு வரும். உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் அவரவர் வீட்டுக்குள் மாவீரர்களின் திருவுருவப் படங்களை வைத்துத் தீபம் ஏற்றி வணங்குவார்கள். தமிழீழத்தை அடைய உறுதிமொழியும் எடுத்துக்கொள்வார்கள்.


“இன்று புனிதமான நாள். தமது உன்னதமான உயிருக்கும் மேலாக தமது தேசத்தின் விடுதலையை அதிஉன்னதமாக நேசித்து அந்த உயரிய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிக்கொண்ட எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்னாள். எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத்திருநாள்..”

என்று மாவீரர்கள் குறித்துப் பெருமையோடு மேதகு பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் உரையாற்றுவார்.


மண்ணை மீட்க வீரச்சாவடைந்த மாவீரர்களை வணங்கி விளக்கேற்றி சிறப்புச் செய்யும் அந்த மகத்துவ நாள்தான் நவம்பர் 27. தமிழீழ மண்ணில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களில்தான் தாய்மார்களும் குழந்தைகளும் குடும்பத்துடன் வந்து அந்த மாவீரர்களை வணங்குவார்கள். கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்துவார்கள். அந்தளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் ‘மாவீரர்கள்’ இருந்தார்கள்.

ஓர் இலட்சியப் பயணத்தில் தமிழீழத்தின் அடிக்கற்களால் தங்களை விதைத்துக்கொண்ட அந்த மாவீரர்களைப் போலவே பொதுமக்களும் வீரச்சாவடைந்தார்கள்.


விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்த பொதுமக்களுக்குத் தெரியும். எப்போது வேண்டுமானாலும் இனவெறியர்கள் தம்மைத் தாக்குவார்கள் என்று. ஆனாலும் மேதகு பிரபாகரன் கைப்பற்றிய சுதந்திரத் தமிழீழத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வாழ்ந்தார்கள். சிங்களப் பேரினவாதத்தின் கடும் பொருளாதார நெரக்கடியையும் மீறி வாழப் பழகினார்கள். 2008ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதம் போர் ஒப்பந்தத்தை மீறி போரைத் தொடங்கியபோதும் பொதுமக்கள் அச்சப்படவில்லை. “தாக்குல் நடத்தப் போகிறோம். எல்லோரும் இராணுவப் பகுதிக்குப் பாதுகாப்பாக வந்துவிடுங்கள்” என்று சிங்கள இராணுவம் ஹெலிகாப்டரில் பறந்துவந்து துண்டறிக்கை வெளியிட்டு எச்சரித்தார்கள். ஆனாலும், பொதுமக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பவில்லை. மேதகு பிரபாகரன் அவர்களை விட்டுவிட்டு ஓடிவிட விரும்பவில்லை. 2009 சனவரி 2ஆம் நாள் கிளிநொச்சியை உலக நாடுகளின் துணையுடன் சிங்களப் பேரினவாதம் கைப்பற்றிய பிறகும் பொதுமக்கள் பாதுகாப்புத்தேடி சிங்கள இராணுவம் அறிவித்த பாதுகாப்புப் பகுதிக்குள் செல்ல விரும்பவில்லை. ‘கிபீர்’ குண்டுகளும் ‘ஷெல்’களும் விழுந்தாலும் பொதுமக்கள் கிளிநொச்சியிலிருந்து பரந்தன் வழியாக தருமபுரம், விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு, இரணபாலை, மாத்தளன், புதுமாத்தளன், வலைஞர் மடம், வெள்ளா முள்ளிவாய்க்கால், முள்ளி வாய்க்கால் என்று இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து சென்றார்கள். அந்த இடப்பெயர்வுகளுக்கிடையே எத்தனையோ பேர் ‘கிபீர்’ தாக்குதலில் இறந்தார்கள். விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளில் ‘ஷெல்’ தாக்குதலில் ஆயிரக் கணக்கில் செத்து விழுந்தார்கள்.


தாய் சாக, மகளும் மகனும் தாயைப் புதைக்கக்கூட வழியில்லாமல் அப்படியே போட்டுவிட்டு இடம்பெயர்ந்தார்கள். நேற்றுவரை தங்களோடு பேசி ஆறுதல்கூறி ஓடி வந்தவர்கள் செத்து பிணங்களாய் ஆங்காங்கே கிடந்ததைப் பார்த்துக் கண்ணீர்விட்டுக் கடந்துவரத்தான் முடிந்ததே தவிர வேறெதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்தார்கள்.


அச்சூழலில்கூடசிங்கள இராணுவப் பகுதிகளில் பாதுகாப்புத் தேடி பொதுமக்கள் செல்ல விரும்பவில்லை. தங்களுடைய தலைவர் மேதகு பிரபாகரன் வழியிலேயே எதற்கும் சமரசமாகாமல் சாகத் துணிந்தார்களே தவிர, சிங்களப் பேரினவாதத்துக்கு அடிபணிய விரும்பவில்லை. அப்படிப் போராளிகளோடு போராளிகளாக மாண்டு மடிந்த பொதுமக்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் மாவீரர்களின் தியாகத்திற்கு இணையானதுதான்.
கொத்துக்குண்டுகளில் செத்து மடிந்தவர்கள் மட்டுமல்லாது, சிங்கள இராணுவத்தால் பிடிக்கப்பட்டு பல புலித் தளபதிகளைக் குறிப்பிட்டு, அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று கேட்டு சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனேகம் பேர். பிஞ்சு பிள்ளைகள், பெண்கள், முதியவர்கள் என்று தமிழீழத் தேசத்திற்காக வீரச்சாவடைந்தவர்கள் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டும். அப்படி சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக, சமரசமாகாமல் வீரச்சாவடைந்த போராளிகள் உள்ளிட்ட பொதுமக்களை வணங்கி அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகத்தில் ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ திறக்கப்படவுள்ளது. தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில், நவம்பர் 8ம் நாள், இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்படவுள்ளது. இதற்கான முழுச் செலவையும் ம.நடராசன் என்பவர் ஏற்றுள்ளார். இவர் தமிழீழப் போராட்டத்தை ஆதரித்தோ போராடியதோ இல்லை. தமிழீழம் குறித்தும் தேசிய இனவிடுதலை குறித்தும் இவருக்கு எவ்வித அரசியல் பார்வையும் இல்லை என்பது தமிழகம் அறியும்.



ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் இமானுவேல் சேகரனைக் கொலை செய்த முதன்மைக் குற்றவாளி முத்துராமலிங்கத் தேவரின் வழியில் அரசியல் செய்து வருபவர். மருதுபாண்டியர் விழா, பூலித்தேவன் விழா என்று தமிழகத்தில் சாதி அரசியலை கடந்த காலங்களில் நடத்தியவர், நடத்தி வருபவர். சாதியவாதிகளுக்குப் பின்புலமாக இருப்பவர்.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை முன்னிறுத்தி நடத்தும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கும் பின்புலமாக இருந்து இந்த செயற்கரிய செயலைச் செய்துள்ளார். முள்ளிவாய்க்கால் முற்றத்திற்காகக் கொடுக்கப்பட்ட விளார் நிலம்கூட மோசடி செய்து வாங்கப்பட்ட நிலம் என்று ம.நடராசன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

எப்படியானாலும் முள்ளிவாய்க்காலில் மாண்டு மடிந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்கு இடம்கொடுத்து முழுச் செலவையும் பொறுப்பேற்றுக்கொண்ட ம.நடராசன் அவர்களது கொடைக்குணத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

ஆனால், சிங்களப் பேரினவாதத்திற்கு அடிபணியாமல் சமரசமாகாமல் மாண்டு மடிந்த அம்மக்களின் தியாகத்தை அவமதிக்கும் வகையில், ஓர் சாதிய நிலப்பிரபுவிடம் அடிபணிந்து நினைவு முற்றம் அமைப்பதுதான் கவலையளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவிற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத், பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற இந்துத்துவவாதிகளை அழைப்பது தமிழ்த் தேசியத்திற்குக் கேடுவிளைவிப்பது மட்டுமல்லாது, தவறான முன்னுதாரணமுமாகும். இத்தகைய செயல் மேதகு பிரபாகரனின் தமிழ்த் தேசியப் போராட்டத்தையும் அவரது தூய்மையையும் கொச்சைப்படுத்துவதாகத்தான் அமையும்.

பாரதிய ஜனதா கட்சி தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கின்ற கட்சி அல்ல; தமிழீழம் அமைவதையும் விரும்புகிற கட்சி அல்ல. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்னவோ அதே நிலைப்பாட்டைத்தான் பா.ஜ.க.வும் கொண்டுள்ளது. இதை பழ.நெடுமாறன் அவர்களே தமது ‘உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்’ என்கிற நூலில் தெளிவுபடுத்துகிறார்:

“காங்கிரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தேசிய ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டுமானால் பலமான மத்திய அரசு மூலமே சாத்தியம். அதுவும் தன்னால் மட்டுமே அந்த ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க முடியும் என மார்தட்டுகிறது. மொழிவழி மாநிலங்களை அமைக்க மறுத்த பின்னர் மக்கள் போராட்டங்களின் விளைவாக மொழிவழி மாநிலங்களை அமைக்க ஒப்புக்கொண்ட காங்கிரசுக் கட்சி அம்மாநிலங் களுக்குரிய அதிகாரங்களை அளிக்க இன்னமும் மறுக்கிறது. பா.ஜ.க.வோ மொழிவழி மாநிலங்களை ஒழித்துவிட்டு ஒரே மத்திய அரசின்கீழ் 100 ஜன பாதங்களை அமைக்க வேண்டும் எனக் கூறுகிறது.

ஆக, இரு கட்சிகளுக்கிடையே அதிக வேறுபாடு இல்லை. காங்கிரஸ் கட்சி மிதவாத இந்துத்துவக் கட்சி. பா.ஜ.க. தீவிரவாத இந்துத்துவக் கட்சியாகும். காங்கிரஸ் கட்சி சமயச் சார்பின்மை முகமூடியணிந்து தனது உண்மை உருவத்தை மறைத்துச் செயற்படுகிறது. பா.ஜ.க.வோ ஒருபோதும் தனது நோக்கத்தை மறைக்காமல் பாசிச கோரமுகத்தை வெளிப்படையாகக் காட்டிச் செயற்படுகிறது. எனவே காங்கிரசுக்கும் பா.ஜ.க.விற்குமிடையே அதிக வேறுபாடுஇல்லை.” (பக்கம் 745) 

என்று மிகத் தெளிவாக விளக்குகிறார்.

அதாவது, காங்கிரசைவிட தீவிர இந்துத்துவக் கட்சி பா.ஜ.க.தான் என்று அய்யா பழ.நெடுமாறன் அம்பலப்படுத்துகிறார். பா.ஜ.க.வைப் பற்றி மேலும் அந்நூலில், 

“இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பல மொழிகள் பேசும் தேசிய இனங்கள் தத்தமக்குரிய பகுதிகளில் தனித்தனித் தேசங்களாக அமைந்திடுமானால் பார்ப்பனிய ஆதிக்கம் சிதைந்து போகும். பாரதப் பண்பாடு என்ற பெயரில் பார்ப்பனியப் பண்பாட்டை நிலைநிறுத்த முடியாது. அந்தந்த மொழிக்குரிய பண்பாடுகள் ஓங்கி வளர்ந்து தாங்கள் நிறுவ முயலும் போலியான பாரதப் பண்பாட்டைச் சிதைத்துவிடும் என இந்துத்துவவாதிகள் கருதுகின்றனர்” (பக். 746) 

என்று அம்பலப்படுத்துகிறார்.

அதாவது, தேசிய இனங்கள் பிரிந்துபோக ஒருபோதும் இந்துத்துவவாதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நெடுமாறன் கூறியிருக்கிறார்.

ஆனால், தமிழ்த் தேசிய இனத்திற்கான நாடாக தமிழீழம் அமைவதை மட்டும் பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளுமா? தனித்தேசத்திற்காக வீரச்சாவடைந்த அம்மக்களின் நினைவைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு பா.ஜ.க.வினர் அழைக்கப்பட்டிருப்பது முரண்பாடு இல்லையா? அவமதிப்பது ஆகாதா?

தமிழீழத் தேசத்திற்காக மிகப் பெரிய அறப்போராட்டத்தை நடத்தியவர் மேதகு பிரபாகரன். சிங்களப் பேரினவாதத்தின் தாக்குதலில் இந்துக் கோவில்கள் பல சிதைக்கப்பட்டன. ஏனென்றால் தமிழீழத்தின் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள்தான். ஏ9 நெடுஞ்சாலை வழியாக வரும்போது, இடைமறிக்கும் முறிகண்டி முருகன் கோவிலிலிருந்து யாழ்ப்பாணம் கந்தசாமி நல்லூர் கோவில் வரை இந்துக்கோவில்கள்தான். (கிறித்தவத் தேவாலயங்கள் குறைவுதான்). அப்படிப்பட்டக் கோவில்களையெல்லாம் சிங்களப் பேரினவாதம் உடைத்து நொறுக்கியது. முருகன்கோவிலில் முளைத்த அரச மர நாற்றுகளைத் தமிழர்கள் சுத்தம் செய்யும் நோக்கில் பறித்ததற்காக புத்தர் ஞானஒளி அடைந்த அரச மரத்தை இந்துக்கள் பறித்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட கொடுமையான காலத்தில்கூட மேதகு பிரபாகரன் அவர்கள் ‘இந்துக்களை கொடுமைப்படுத்துகிறார்கள்’, இந்து மதத்தின் கோவில்களைச் சிங்களமதவாதிகள் இடிக்கிறார்கள் என்று இந்துமதவாதத்தை முன்வைத்து அரசியல் தீர்வை உருவாக்க நினைக்கவில்லை.

சிங்கள மதவாதத்திற்கு எதிராக இந்து மதவாதத்தை ஒருபோதும் பிரபாகரன் முன்வைத்ததில்லை. அப்படி வைத்திருந்தால் இந்தியா முழுவதும் புலிகளுக்குப் பெரும் ஆதரவு உருவாகியிருக்கும். ஒருமுறை சிவசேனா தலைவர் பால்தாக்கரேகூட, “பிரபாகரன் ஒரு இந்து. ஆகவே, விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்” என்று அவரது ‘சாம்னா’ இதழில் எழுதியபோதுகூட பிரபாகரன் இந்துத்துவத்தை முன்வைத்ததில்லை. “தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம்’ என்றுதான் தேசிய இனத்தை முன்வைத்தார்.
                                 


                                          
                             
                                                              Source : Flickr : Arjun Sampath
மதவழியிலோ சாதி வழியிலோ தமிழர்களைத் திரட்டாமல் தேசிய இன அடையாளத்தோடு தமிழர்களைப் போராட்டக் களத்தில் ஒன்று திரட்டினார். அந்த வகையில் விடுதலைப்புலிகளின் போராட்டம் என்பது தூய்மையான தேசிய இனப்போராட்டமாகத்தான் உருப்பெற்று வலுப்பெற்றுள்ளது. ஆனால், அய்யா பழ.நெடுமாறன், பா.ஜ.க. புலிகளின் போராட்டத்தை ஆதரித்தது போலவும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் மலரப் போவது போலவும் கற்பிதம் செய்ய முயலுகிறார்.

2000 ஏப்ரல் 22ஆம் நாள் விடுதலைப் புலிகளின் படை சிங்கள இராணுவத்தை ஓடஓட விரட்டி ஆனையிறவு சமரில் வெற்றி பெற்றதையடுத்து யாழ்ப்பாணத்தை நோக்கி புலிகள் முன்னேறினர். யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் உள்ள பளை நகரமும் ஏப்ரல் 30ஆம் நாள் புலிகளால் கைப்பற்றப்பட்டது. யாழ் நகருக்குள் 35,000 சிங்கள இராணுவ வீரர்கள் புலிகளால் முடக்கப்பட்டனர். ஏ9 சாலை முழுவதும் புலிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் தரை வழியாக சிங்கள இராணுவம் யாழ் நகருக்குள் நுழைய முடியவில்லை. 35,000 இராணுவ வீரர்கள் உணவின்றித் தவித்தனர். இராணுவத்தினரின் குடும்பத்தினர் கொழும்புவில் தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில்தான், அன்றைக்கு சிங்களத் தேசத்தின் அதிபராக இருந்த சந்திரிகா உலக நாடுகளிடம் கெஞ்சினார். அப்போது, இந்தியாவின் ஆட்சிபீடத்திலிருந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமும் ஓடிப்போய் புலிகளிடமிருந்து இராணுவ வீரர்களைக் காப்பாற்றுங்கள் என்று மன்றாடினார்.

உடனே பிரதமர் வாஜ்பாயும் கடல்வழியே கப்பல்களை அனுப்பி சிங்கள இராணுவத்தினருக்கு உணவு அனுப்பியதோடு புலிகளின் முற்றுகையிலிருந்தும் காப்பாற்றினார். அப்போது மட்டும் பா.ஜ.க. சிங்கள இராணுவத்தை காப்பாற்றாமலிருந்தால் இன்று இந்த முள்ளிவாய்க்கால் அவலமே ஏற்பட்டிருக்காது. யாழ்ப்பாணத்தையும் புலிகள் கைப்பற்றியிருப்பார்கள். அந்த அளவுக்கு புலிகளின் போராட்டத்தை நசுக்கிய பா.ஜ.க.வினரைத்தான் பழ.நெடுமாறன் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அழைத்துப் பெருமைப்படுத்துகிறார்.

இது மட்டுமல்லாமல், பா.ஜ.க. ஆட்சியின்போது கடந்த 2000 ஜூன் 11, 12 ஆகிய நாட்களில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங் இலங்கைக்குச் சென்று அதிபர் சந்திரிகாவைச் சந்தித்து உரையாடிவிட்டு புலிகளை ஒடுக்குவதற்காகவும் அந்நாட்டின் வளர்ச்சிக்காகவும் இந்தியாவின் சார்பில் 100 மில்லியன் டாலர் கடன் உதவி வழங்குவதாக அறிவித்தார். இப்பயணம் குறித்து ஜஸ்வந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இலங்கையின் ஒற்றுமை மற்றும் எல்லைக்குட்பட்ட ஒழுங்கமைவு குறித்து இந்தியா தொடர்ச்சியாக பொறுப்புணர்வுடன் இருக்கிறது. இலங்கையில் நிரந்தரத் தீர்வு காண இந்திய அரசின் ஆதரவு எப்போதும் உண்டு” என்று கூறினார்.

ஜஸ்வந்த்சிங்கின் அந்த இருநாள் பயணம் என்பது இந்திய-இலங்கை என்னும் இரு நாடுகளின் உறவை வலிமைப்படுத்தத்தான் என்றும் கூறினார். புலிகளின் ஆனையிறவு வெற்றிக்குப் பிறகு இந்தப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி விடுதலைப்புலிகளின் போராட்டங்களை முடக்கிய பா.ஜ.க.வைத்தான் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அய்யா நெடுமாறன் அழைத்து விருந்து வைக்கிறார்.

மேலும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்திலிருந்து போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியிலிருந்துகூட அமைச்சர்கள் வாசன், ஏ.கே.அந்தோணி, ஜெயந்தி நடராசன் போன்றோர் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால் பா.ஜ.க.வின் தலைவர்களான நிதின்கட்காரி, வெங்கையா நாயுடு, அண்மையில் சேர்ந்த சுப்பிரமணியசாமி உட்பட பலர் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்கிறார்கள். இதுதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.

                            
                                                                  Source : The Hindu

அப்படிப்பட்ட இந்துத்துவ பா.ஜ.க.வைத்தான் நெடுமாறன் அழைத்து தமிழகத்தில் ஓர் அரசியல் ஆபத்தை உருவாக்க முயற்சிக்கிறார். இது முழுக்க முழுக்க தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது மட்டுமல்ல. சமயச்சார்பின்மைக்குப் பெரும் ஆபத்தானதுமாகும். இந்துத்துவத்தை பொது நீரோட்டத்தில் இணைத்தால் தமிழ்நாடு என்ன ஆகும் என்பதை நெடுமாறன் அவர்களே தமது ‘உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும்’ நூலில் விளக்குகிறார்:

“உருவாகாத இந்திய தேசிய மாயையில் மயங்கிய தமிழர்கள் தங்களின் தனித்த அடையாளங்களை இழந்தார்கள். மொழி, இனம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றால் தொன்மையும் பெருமையும் பெற்றவர்கள் என்பதை மறந்த நிலைக்குத் தமிழர்கள் ஆளாக்கப்பட்டார்கள். ஆனாலும் இருபதாம் நூற்றாண்டு நெடுகிலும் தமிழறிஞர்களும் தலைவர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கிய தமிழ்த்தேசிய உணர்வால் தமிழர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியும் விடுதலை வேட்கையும் துளிர்விட்டுள்ளன. இதை அழிக்க இந்து பாசிசம் உள்நுழைந்துள்ளது.

இந்தியத் தேசியத் தளையில் சிக்கித் தவித்து விடுபடப் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு மதவெறியூட்டி நிரந்தர அடிமை மயக்கத்தில் ஆழ்ந்த இந்துத்வா முயலுகிறது. இந்த அபாயத்திலிருந்து தமிழர்களைக் காக்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியவாதிகளுக்கு உண்டு. அந்தக் கடமையைத் தவறாமல் செய்வோம். தமிழ் மண்ணிலிருந்து இந்து பாசிசத்தை விரட்டியடிப்போம்.” (பக்கம் 752)

இப்படி, இந்து பாசிசத்தை விரட்டியடிப்போம் என்று அறைகூவல் விடுத்துவிட்டு அதே இந்துத்துவவாதிகளுக்கு சிவப்புக் கம்பளம் .. இல்லை.. காவிக்கம்பளம் விரிப்பதன் நோக்கம் என்ன?

அய்யாவின் கதர்ச்சட்டை காவியாக மாறுவதன் உள்நோக்கம் என்ன? ஓர் புதிய அரசியல் அணியைக் கட்டுவதாக இருந்தால் வெளிப்படையாகக் கட்டுங்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மேல் கட்டி மாவீரர்கள் மற்றும் பொதுமக்களின் தியாகத்தைக் களங்கப்படுத்தாதீர்கள்.

- வன்னிஅரசு ( vanni.viduthalai@gmail.com)

07 November 2013

நவம்பர் 7 - சாதிவெறி அரசியல் எதிர்ப்பு நாள் - போலித் தமிழ்த் தேசியவாதிகளை அடையாளம் காண்போம்!



அந்தக் கொடிய நிகழ்வு நடந்து ஓராண்டாகிவிட்டது. ஒரு நாட்டின் மீது படையெடுப்பு நடத்துவதைப்போல், சாதிவெறியர்கள் சேரிகளின் மீது படையெடுப்பு நடத்தி, குடியிருப்புகளைச் சின்னாபின்னப்படுத்திய நிகழ்வு நடைபெற்று ஓராண்டாகிவிட்டது.
நவம்பர் 7, 2012 அன்று தருமபுரி மாவட்டம், நாயக்கன் கொட்டாய், நத்தம் காலனி, அண்ணா நகர் காலனி, கொண்டம்பட்டி காலனி ஆகிய மூன்று சேரிகளை பா.ம.க.வைச் சேர்ந்த சாதிவெறியர்கள் தீக்கிரையாக்கினர். வீடுகளுக்குள் புகுந்து பொருட்களைக் கொள்ளையடித்துவிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் திறந்துவிட்டு, பெட்ரோல் குண்டுகளை வீசினர். சிங்கள இராணுவத் தாக்குதலில் நிலைகுலைந்து போன தமிழர்களின் வீடுகளைப்போல் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளெல்லாம் கருகிக் கிடந்தன.
பா.ம.க. தலைவர் இராமதாஸ் அவர்களால் வெறியூட்டப்பட்ட சமூகவிரோதிகளால் மூன்று சேரிகளும், இந்திய ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் காட்சிப் பொருளாகி நின்றன. சாதியை ஒழிப்பதற்காகப் போராடிய புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியாரின் தத்துவங்களுக்குச் சவால் விடுகின்ற வகையில், அந்த மூன்று சேரிகளைக் கொளுத்திய, குச்சிக்கொளுத்திகளின் திருப்பணி எக்காளமிடுகிறது.
திவ்யா என்கிற வன்னிய சாதிப் பெண்ணை, இளவரசன் என்கிற தாழ்த்தப்பட்ட இளைஞன் ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டான் என்கிற குற்றச்சாட்டைச் சுமத்தித்தான் அந்த மூன்று சேரிகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இப்படியான காதல் திருமணங்கள், தருமபுரியில் மட்டும் நடந்தேறவில்லை. காதல் திருமணங்கள் அனைத்து எல்லைகளையும் மீறித்தான் சங்க காலத்திலிருந்து நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், நடக்கக்கூடாதது நடந்துவிட்டதுபோல், இராமதாஸ் கும்பல் வெறியாட்டம் ஆடியது.
கடந்த காலம் வரை தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்கிற பெயரில் விடுதலைச் சிறுத்தைகளோடு இணைந்து மொழிப்போர் களத்தில் பா.ம.க செயல்பட்டது. தமிழர்களுக்காகவும், தமிழ்மொழிக்காகவும் பாடுபட்டது.. பாடுபட்டதுபோல் காட்டிக்கொண்டது. அப்புறம் என்ன இழவுக்கோ தொடங்கிய இடத்திற்கே பா.ம.க. திரும்பியது! கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தேர்தல் அரசியலில் தொடர் தோல்விகளைச் சந்தித்ததாலும், கட்சியிலிருந்து திரு.வேல்முருகன் போன்ற செல்வாக்குள்ள தலைவர்கள் வெளியேறியதாலும், பதவி வெறி, பண வெறி, குடும்ப வெறி ஆகியன தலைக்கேறி, அதிகார வெறிக்காக, படுகொலை அரசியலை, தீ வைக்கும் அரசியலை, சாதிவெறி அரசியலைக் கையிலெடுத்து, அதையே கொள்கை முழக்கமாக்கி அதற்காகப் பக்கவாத்தியக் கோஷ்டிகளைச் சேர்க்க ஆரம்பித்தார் இராமதாஸ். அப்படி உருவான அமைப்பின் பெயர்தான் அனைத்து சமுதாயப் பேரியக்கம். ஊர் ஊராய் இந்த சாதிவெறி பக்கவாத்திய கோஷ்டிகளை அழைத்துச் சென்று தலித்துகளுக்கெதிரான பஜனைப் பாடல்களைப் பாடினார். அதன் விளைவுதான் மரக்காணம் கலவரம்.
வெளிப்படையாக சாதிவெறியைத் தூண்டி அதன் மூலம் எழும் கலவரத்தால், சாதிவெறியர்களை வாக்குகளாகத் திரட்டத் திட்டமிட்டதன் விளைவுதான் தலித்துகள் மீதான வெலைவெறித் தாக்குதலும் சொத்துக்கள் சூறையாடலும்.
இராமதாஸின் இந்த மலிவான அரசியலை ஜனநாயக முற்போக்கு சக்திகள் அடையாளம் கண்டு கண்டித்தன. அய்யா நல்லக்கண்ணு, ஜி.இராமகிருஷ்ணன், தா.பாண்டியன் போன்ற பொதுவுடைமைவாதிகளும், ஆசிரியர் வீரமணி, சுபவீ, கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் போன்ற பெரியாரியவாதிகளும், பெ.மணியரசன், தியாகு, மே 17 திருமுருகன் காந்தி போன்ற தமிழ்த் தேசியவாதிகளும், மனுஷ்யபுத்திரன், ஞானி, அ.மார்க்ஸ், அறிவுமதி, கனிமொழி, மறைந்த கவிஞர் வாலி, குட்டி ரேவதி, யுகபாரதி உள்ளிட்ட எழுத்தாளர்களும் கவிஞர்களும் வெளிப்படையாக இராமதாஸின் சாதிவெறிய அரசியலை அம்பலப்படுத்திக் கண்டித்தார்கள், எழுதினார்கள், போராடினார்கள்.
ஆனால், தமிழகத்தில் இதுகாறும் முற்போக்கு முகமூடி அணிந்து கொண்டு பேசிவந்த தமிழறிவு மணியன், மகஇக புரட்சிக்காரர்கள் போன்றவர்கள் பாம்புக்குத் தலையாகவும், மீனுக்கு வாலாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் பகிரங்கமாக இராமதாஸின் சாதிவெறியை அம்பலப்படுத்துவதற்கும் கண்டிப்பதற்கும் பதிலாக,விடுதலைச் சிறுத்தைகளுக்கு இலவச அறிவுரைகளை வழங்கினார்கள். அத்துடன், இராமதாஸ் தலித்துகள் மீதும் சிறுத்தைகள் மீதும் என்ன அவதூறுகளைப் பரப்பினாரோ, அதே அவதூறுகளை அப்படியே பேசினார்கள்; எழுதினார்கள். இவர்களைவிட மோசமாக கள்ள மவுனம் சாதித்தவர்கள் தமிழ்த் தேசிய வேடதாரிகள். அயோத்திதாசப் பண்டிதர் மொழியில் சொல்வதென்றால் வேஷ பிராமணர்கள்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் வெற்றிகரமாக இயங்கியதை வரவேற்ற தமிழறிஞர்கள் பலர், இராமதாசையும் இணைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அந்த வகையில், தமிழறிஞர்களும் எழுத்தாளர்களும் ஓவியர்களும் ஒரு குழுவாக இராமதாசைச் சந்தித்து, தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் சிறுத்தைகளோடு இணைந்து செயல்படுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.
அப்படித்தான் ஜி.கே.மணி கோ.க.மணியானார். ஏ.கே.மூர்த்தி அ.கி.மூர்த்தியானார். இராமதாஸ் இராமதாசு ஆனார். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பலகட்டப் போராட்டங்கள் வெற்றிகரமாக நடந்தன. ஆனால், இதில் அரசியல் இலாபத்தோடுதான் இராமதாஸ் செயல்பட்டார் என்பதை பின்வந்த தேர்தல் காலங்களில் வெளிப்படுத்தினார். தருமபுரியில் அதை நிரூபித்தார். தமிழர் ஒற்றுமைக்கெதிராக தமிழர்களை சாதியின் பெயரால் வெறியூட்டி படுகொலை செய்யும் இராமதாஸின் பச்சை அயோக்கியத்தனத்தை தமிழ்த் தேசியம் பேசும் தமிழறிஞர்களும் கவிஞர்களும் ஓவியர்களும் துணிச்சலாகக் கண்டித்தார்களா?
தமிழுக்காக இராமதாஸ் பேசும்போது அய்யா என்றும், தமிழினப் போராளி என்றும் புளகாங்கிதம் அடைந்து பேசும் அதேவேளையில், தவறு செய்கிற போக்கினைக் கண்டிப்பதற்கும் துணிச்சல் வேண்டும். போர் வெறியோடு திரிந்த எத்தனையோ மன்னர்களை அறம் பாடி தமது எதிர்ப்பைத் தெரிவித்த தமிழ்ப் புலவர்களை சங்க இலக்கியங்களில் பார்த்திருக்கிறோம். அவர்களை தமிழறிஞர்களாக, கவிஞர்களாக தமிழகம் இன்னும் மதிக்கிறது. ஆனால், இங்கு தொன்மையான தமிழ் மொழி குறித்து அக்கறை கொள்பவர்கள், தொன்மையான தொல்குடிகளைப் பற்றி எவ்விதக் கவலையும் கொள்வதில்லை. சமூக மாற்றம் குறித்தும், அச்சமூகத்தின் விடுதலை குறித்தும் அக்கறையுடன் சிந்தனைகொள்பவர்களே உண்மையான அறிஞர்களாக இருக்க முடியும். ஆனால், இங்கு மொழி குறித்து கவலைகொள்பவர்கள் போலியாக, சந்தர்ப்பவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்.
சாதியத்தை விடமுடியாமல் பாவம் அவர்கள் தமிழர்வேடம் அணிந்து உலவுகிறார்கள். அப்படித்தான் தமிழ்த்தேசிய இயக்கவாதிகளும் வேடம் அணிந்து திரிகிறார்கள். புலி வேடம் போட்டவர்கள், மொழி வேடம் போட்டவர்கள், முற்போக்கு வேடம், புரட்சி வேடம் என்று வேஷம் கட்டி அலைகிறார்கள். அப்படி ஒரு வேடம் கட்டித் திரிகிற அய்யா பழ.நெடுமாறன் தமிழகத்தின் சாதியச் சிக்கல் குறித்து ஒருபோதும் கவலைகொண்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்து கொல்லப்பட்டுவரும் தொல்.தமிழர்களான தலித்துகள் குறித்து, அவருக்கு எவ்வித அக்கறையும் இருந்ததில்லை என்பதைத்தான் அவரது கடந்த கால அரசியல் இந்தத் தலைமுறைக்கு உணர்த்துகிறது. யார் சாதிவெறியர்களோ அவர்களைத் தமிழ்த் தேசியக் களத்தில் தமிழர் உணர்வாளர் என்கிற வேடம் அணியவைத்து அடையாளம் காட்டி வருகிறார். உதாரணம் ம.நடராசன்.
தருமபுரி மற்றும் மரக்காணத்தில் சாதிவெறியாட்டம் நடத்தியவர்களைக் கண்டித்து தமிழ்த் தேசியவாதிகளை ஒன்றுதிரட்டி இதுவரை போராட்டங்களை நடத்தியதில்லை. ஆனால், அத்தனைத் தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும் தலித்துகளின் பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது.
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழ்த் தேசியக் களத்திற்கு வந்தபிறகுதான் தமிழ்த் தேசியப் போராட்டமே விரிவடைந்தது. முல்லைப் பெரியாறு உரிமை, காவிரி நீர் போன்ற தமிழகத்தின் ஆற்று நீர் உரிமை, நெய்வேலி மின்சாரம் மற்றும் அணுஉலை எதிர்ப்பு போன்ற தமிழர்களுக்கான அத்தனை உரிமைப் போராட்டங்களிலும், மற்ற தமிழ்த் தேசிய இயக்கங்களைவிடத் தீவிரமாக வெகுமக்களை அணிதிரட்டிப் போராடிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். அப்படிப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் மீது அபாண்டக் குற்றச்சாட்டுகளை அள்ளித் தூவிய பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் அவர்களை வெளிப்படையாகக் கண்டித்து ஒதுக்காதவர்கள் எப்படி தமிழ்த் தேசியவாதிகளாகச் சொல்லிக் கொள்ள முடியும். தமிழ்த் தேசிய ஓர்மையைச் சிதைக்கும் கும்பலை அம்பலப்படுத்தாமல் கள்ள மவுனம் சாதிப்பவர்களும் சாதிவெறிக்குத் துணை போவதாகத்தானே அர்த்தம்.
இப்போது எல்லாம் முடிந்து ஓராண்டாகிவிட்டது. திரும்பிப் பார்த்தால் தமிழர் ஓர்மைக்கு யார் எதிரானவர்கள் என்று மக்கள் புரிந்துகொள்கிறார்கள். மூன்று சேரிகளும் எரிந்தன. தொடர்புடைய இளவரசன் கொல்லப்பட்டான். வெற்றிகரமாக அரங்கேற்றிய சாதிவெறியர்கள் வழக்கம்போல் அறிக்கைகள் விட்டுக்கொண்டு இன்னமும் அரசியல் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் வெட்கமே இல்லாமல் விவாதம் என்கிற பெயரில் சாதியத்தைப் பிரச்சாரம் செய்கிறார்கள். தலித்துகளுடைய உரிமையை நசுக்கிச் சாகடித்துவிட்டு தமிழர் உரிமைக்காகக் கண்ணீர் வடிப்பதாக அறிக்கை விடுவது முரண்பாடில்லையா?
இதைக் கூட கண்டிக்காமல் கண்டும் காணாமல் இருக்கும் தமிழ்த்தேசியவாதிகளை, அச்சாதிவெறியர்களைவிடக் கொடூரமானவர்களாகத்தான் மக்கள் அடையாளம் காண்பார்கள்.
தமிழ்த் தேசிய விடுதலை என்பது சாதி, மத ஒழிப்புடன்கூடியதாகத்தான் இருக்க முடியும். சாதியத்தை மறுதலிப்பதாகத்தான் இருக்க முடியும். தமிழ்த் தேசியத்திற்கு நேரெதிரானது இந்தியத் தேசியம். இந்தியாவிலேயே இந்து, இந்தி, இந்தியாவைப் புறக்கணிக்கின்ற, எதிர்க்கிற ஒரே தேசியம் தமிழ்த் தேசியம். இந்துத்துவத்திற்கு எதிரான தேசியம் தமிழ்த் தேசியம்தான். ஆனால், தமிழ்த் தேசியவாதிகள் இந்துத்துவவாதிகளாக இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். இல்லையென்றால், இந்துத்துவவாதிகளான பொன்.இராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி மகாலிங்கம், அர்ஜுன் சம்பத் போன்றவர்களோடு உறவு வைத்திருப்பார்களா?
இந்துத்துவத்தை உள்வாங்கிக் கொண்டதுதான் சாதியம். இந்துத்துவமும் சாதியமும் வேறு வேறல்ல. இவை குறித்துத்தான் புரட்சியாளர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் வாழ்நாள் முழுக்க விவாதித்தார்கள், பிரச்சாரம் செய்தார்கள்.
படம் : தி இந்து 

அப்படி இந்துத்துவத்தை உள்வாங்கிக்கொண்ட டாக்டர் இராமதாஸ் பேசுகிற தமிழ்த்தேசியமும், பழ.நெடுமாறன் பேசுகிற தமிழ்த்தேசியமும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதால்தான் இங்கே தமிழ்த்தேசியம் கேள்விக்குள்ளாகிறது. இராமதாஸ் தலித்துகளை ஊருக்கு வெளியே தள்ளி வைப்பதோடு, அரசியல் அதிகாரத்திலிருந்தும் புறக்கணிக்க விரும்புகிறார். நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகளோ முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்விலிருந்து தலித்துகளைப் புறக்கணிக்க விரும்புகிறார்கள். இருவரின் நோக்கமும் ஒடுக்கப்பட்ட மக்களைப் புறக்கணிப்பதுதான். பார்ப்பனியத்தின் இன்னொரு வடிவம்தான் புறக்கணிப்பு.
சமூகரீயாக நடைபெறும் புறக்கணிப்புகளுக்கு எதிராகத்தான் தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் இந்துத்துவத்தின் கொடுங்கோன்மை என்று அம்பலப்படுத்தினார்கள். புறக்கணிப்பதும் தள்ளிவைப்பதும் நீண்டகாலமாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. வடிவத்தை மாற்றிக்கொண்டு புறக்கணிப்புகள் சேரிகளை முற்றுகையிடுகின்றன. பொதுக்குளத்திலே குளிக்கக் கூடாது, பொது வீதிகளில் நடக்கக் கூடாது, மேலாடை அணியக் கூடாது, முழங்காலுக்கு மேல்தான் ஆடை அணிய வேண்டும், பொது ஏலம் கேட்கக்கூடாது, ஊர் மந்தையில் உட்காரக் கூடாது, உனக்கும் ஊருக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது, ஊருக்கு வெளியே குடியமர்த்திக் கொள்ள வேண்டும், தேநீர்க் கடைகளுக்குக்கூட வரக்கூடாது.. இத்தனைத் தடைகளோடு முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கும் வரக்கூடாது.
ஊருக்காக அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு வேலை செய்தவனை கடைசியில் ஊருக்கு வெளியே போ என்று சொல்வதைப் போல, தமிழர் உரிமைக்கான அத்தனை களத்திலும் களமாடிய விடுதலைச் சிறுத்தைகளை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வரத் தகுதியில்லை என்று புறக்கணிப்பதும் பார்ப்பனியம்தான். இந்துத்துவம் எந்த வடிவத்திலும் ஒடுக்கிக்கொண்டேதான் இருக்கும்.. புறக்கணித்துக்கொண்டேதான் இருக்கும்.. இதனுடைய வெளிப்பாடுதான் இராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி அல்லது அனைத்து சமுதாயப் பேரியக்கம்.
புறக்கணிப்புகளையும் ஒடுக்குமுறைகளையும் உடைத்துக்கொண்டே எழுவதுதான் சிறுத்தைகளின் போர்க்குணம். அப்படி உடைக்கும் வகையில் நவம்பர் 7 சாதி எதிர்ப்பு அரசியல் நாளில் அனைவரும் உறுதியேற்போம்! போலித் தமிழ்த் தேசியவாதிகளை அடையாளம் காண்போம்!
சாதியத்தை வேரறுப்போம்! - தமிழ்த்
தேசியத்தை வென்றெடுப்போம்!

- வன்னிஅரசு ( vanni.viduthalai@gmail.com)


05 November 2013

முள்ளிவாய்க்கால் முற்றமும் மன்னிக்காது!

ஓர் உன்னதமான விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டவர் மேதகு பிரபாகரன் அவர்கள். சிங்கள இனவெறியர்களால் ஒடுக்குமுறைக்குள்ளான தமிழினத்தை விடுவிக்க களத்தில் வெடித்தவர்; தமிழர் விடுதலைக்காகவே துடித்தவர்; அதற்காகவே புலிப்படை படைத்தவர்.
1956ஆம் ஆண்டு இலங்கை அதிபர் பண்டாரநாயகா சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று பிரகடனப்படுத்தியதை எதிர்த்து தமிழர்கள் கொதிப்புற்றனர். இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 1956 சூன் 5ஆம் நாள் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்உள்ள காலி முகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இப்போராட்டத்தில் தமிழறிஞர் வனப்பிதா தனிநாயகம் அடிகளார் கலந்துகொண்டு சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராக முழங்கினார். இதனால் சிங்கள இனவெறியர்கள் தமிழர்கள் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் உக்கினியாகலை அருகில் உள்ள கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கில் நிறுவப்பட்டிருந்த கரும்புத் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த தமிழர்கள் மீதுதான் முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவும் அம்பாறையில் குடியேற்றப்பட்ட சிங்களர்களால்தான் அக்கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தமிழர்கள் 150 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் முதல் இனப்படுகொலை என்று இலங்கை அவசரகாலச் சட்ட நூல் தெரிவிக்கிறது.
இதற்கடுத்து தொடர்ச்சியான படுகொலைகள் பல மாவட்டங்களில் நிகழ்த்தப்பட்டன. தலைநகர் கொழும்பில் தினமும் தமிழர்கள் கொல்லப்பட்டனர். சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று அறிவித்துவிட்டு தமிழ் மொழியைப் புறக்கணித்ததால் ஏற்பட்ட புறக்கணிப்பு அரசியலிலிருந்து இனப்படுகொலை அரசியல்ரீதியாகவே பகிரங்கமாகவே நிகழ்த்தப்பட்டது. ஈழத் தந்தை செல்வாவும், பண்டாரநாயகாவும் 26-7-1957 அன்று ஓர் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். தமிழ்மொழிக்கு சம உரிமை தொடர்பான அவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன கண்டிக்கு யாத்திரை கிளம்பினார். ஜெயவர்த்தனேவின் பிரச்சாரம் நாடு முழுக்க தமிழர்கள் மீது வெறுப்புணர்ச்சியைத் தூண்டியது (இப்போது இராமதாஸ் தலித்துகளுக்கெதிராகச் செய்வதுபோல்). தமிழர்கள் எல்லா நிலையிலும் எல்லா இடங்களிலும் புறக்கணிக்கப்பட்டனர். சூன் 1, 1981ஆம் அன்று தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான யாழ் நூலகத்தை இலங்கை இராணுவம் தீக்கிரையாக்கியது. இதில் 97,000 நூல்களும் சாம்பலாயின. அத்தனையும் வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்கள். 
இவ்வெறியாட்டத்திற்குப் பிறகு இனப்படுகொலைகள் தீவிரமாகின. சூலை 25, 1983 - திருநெல்வேலிப் படுகொலை, 1984 - வவுனியா மாவட்டம், சாம்பல் தோட்டம் படுகொலை; யாழ் மாவட்டம் சுண்ணாகம் காவல்நிலையப் படுகொலை; மார்ச் 28, 1984 - சுண்ணாகம் சந்தைப் படுகொலை; 1984 செப்டம்பர் - அனுராதபுரம் மாவட்ட எல்லை கிராமமான மதவாச்சிப் படுகொலை; 16-9-1984 - பருத்தித்துறை, சிக்கம் படுகொலை; 1984 திசம்பர் 1 - முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுச்சுட்டான், ஓதியமலை படுகொலை; திசம்பர் 2, 1984 - முல்லைத் தீவு மாவட்டம் குமுழுமுனைப் படுகொலை, அதே நாளில் வவுனியா மாவட்டம் செட்டிகுளத்தில் படுகொலை என்று 1980களில் தொடங்கி தமிழர்கள் இன்றுவரை கொத்துக்கொத்தாகக்கொல்லப்பட்டு வருகின்றனர். சிங்கள இனவெறியர்களோடு இணைந்து இராணுவமே கொலைவெறியாட்டத்தை நடத்தியது. இத்தகைய சூழலில் வேறு வழியில்லாமல் காலம் தமிழர்களிடத்தில் ஆயுதத்தைக் கையளித்தது. ஆயுதங்களை மட்டுமல்லாது, பிரபாகரன் என்கிற போராளித் தலைவனையும் காலம் பிரசவித்தது. 
சிங்களர்களின் ஒடுக்குமுறைக்கெதிராகவும், புறக்கணிப்புகளுக்கெதிராகவும், பிரபாகரன் முன்னெடுத்த போராட்டங்களை வரலாறு திரும்பிப் பார்த்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அந்த அறம்சார்ந்த போராட்டங்கள் உலகம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்களாக மாறின. ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலை வேட்கையாக புலிகள் உச்சரிக்கப்பட்டனர். உலகம் முழுக்கப் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மேதகு பிரபாகரன் அவர்களின் போராட்டத்தை ஆதரித்தனர். அப்படிப் புலிகளின் போராட்டத்தை வெளிப்படையாக தமிழகத்தில் ஆதரித்த இயக்கங்களில் முக்கியமானது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். 
1990க்கு முன்பு விடுதலைப் புலிகளுக்கான ஆதரவும், அவர்களின் நடமாட்டமும் வெளிப்படையாக இருந்தது. ஆனால், 1991 மே 21க்குப் பிறகு அதாவது, இராஜீவ் கொலையுண்டதற்குப் பிறகு தமிழகத்தில் விடுதலை என்ற சொல்லையே உச்சரிக்கத் தயங்கினர். புலிகளை ஆதரித்தவர்கள் ‘தடா’ சட்டம் போன்ற தேசத் துரோகச் சட்டங்கள் மூலம் அச்சுறுத்தப்பட்டனர். இச்சூழலில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக 1991ஆம் ஆண்டு இறுதியில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார் திருமாவளவன் எனும் இளைஞர். அந்த இயக்கத்திற்கு ‘விடுதலைச் சிறுத்தைகள்’ என்று பெயர் சூட்டினார். விடுதலை எனும் பெயரையே உச்சரிக்கப் பயந்த அந்த நெருக்கடி காலத்தில் ‘விடுதலைப் புலிகளின் தாக்கத்தால்தான் விடுதலைச் சிறுத்தைகள் என்று பெயரைச் சூட்டினேன்' என்று வெளிப்படையாகவும் துணிச்சலுடனும் அறிவித்தார். அறிவித்தது மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்று நெஞ்சுறுதியுடன் பிரகடனம் செய்தார்.
சாதியச் சிக்கல்கள் நிறைந்த தமிழகத்தில் - சாதியின் பெயரால் புறக்கணிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் திருமாவளவன். சிங்கள இனத்தில் ஒடுக்குமுறையிலிருந்து உருவானது விடுதலைப்புலிகள் இயக்கம். சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து உருவானது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். தேர்தல் புறக்கணிப்பு அரசியல் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டிய காலத்திலிருந்து, தமிழ்த் தேசிய அரசியலைச் சேரிகளில் விதைக்க ஆரம்பித்தார் திருமாவளவன். சாதிஒழிப்பும் தமிழ்த்தேசியமும் என்கிற எழுச்சி முழக்கம் சேரி இளைஞர்களிடையே முன்வைக்கப்பட்டது. அதனால்தான் மற்ற தலித் அமைப்புகளிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் முற்றிலும் மாறுபட்ட அமைப்பாகக் கவனிக்கப்பட்டது. வெகுமக்கள் மட்டுமல்லாது, அரசும் கூர்ந்து கவனித்தது. விடுதலைச் சிறுத்தைகளைக் கவனிப்பதற்காகவே ஒற்றுத்துறை ஒன்று இயங்கியது. ஆனால், எதற்கும் அச்சப்படாமல் துணிச்சலுடன் விடுதலைச் சிறுத்தைகளை வழிநடத்தினார் திருமாவளவன். 
1983ஆம் ஆண்டு மாணவராக இருந்தபோதே, மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராட்டங்களை முன்னெடுத்தது போல, மற்ற சனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து தற்போது தமிழ்த் தேசியக் களத்தில் களமாடி வருகிறார். 1984ஆம் ஆண்டு மாணவர் பருவத்தில் ‘விடுதலைப்புலி’ எனும் கையெழுத்து இதழ் நடத்தியது மட்டுமல்லாது, அதே ஆண்டில் பெரியார் திடலில் கவியரசர் கண்ணதாசன் பேரவை சார்பில் ஈழ விடுதலை ஆதரவு மாணவர் மாநாட்டை ஒருங்கிணைத்தார். மாணவப் பருவத்தில் தொடங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது - வலிமையாக... விரிந்த களத்தில்.
1991ஆம் ஆண்டு இராஜீவ் கொலைக்குப் பிறகு தமிழ்நாடு எப்படி ஒரு நெருக்கடி நிலையைச் சந்தித்ததோ அதைவிடக் கடும் நெருக்கடியை 2001ஆம் ஆண்டு தமிழகம் சந்தித்தது. ஜெயலலிதா அம்மையார் வெளிப்படையாகவே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மீது யுத்தத்தைத் திணித்தார். விடுதலைப் புலிகளை ஆதரித்த பெரும்பாலானோர் ‘பொடா’வில் தளைப்படுத்தப்பட்டனர். பிரபாகரன் பெயரையோ அவரது படத்தையோ பயன்படுத்துபவர்களுக்கு சிறைக்கதவு திறந்தே வைக்கப்பட்டிருந்தது. இச்சூழலில், அடுத்த கைது திருமாவளவன்தான் என்று ஊடகங்கள் ஆரூடம் கூறின. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில்தான் 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். புலித் தளபதிகளோடு பயணமானார். புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களைச் சந்தித்தார். தமிழகம் திரும்பியதும் கைது செய்யப்படலாம் என்று தங்களது விருப்பத்தை தலைப்புச் செய்திகளாக்கின ஊடகங்கள். “தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன்; கைது நடவடிக்கைக்கு அஞ்ச மாட்டேன்!” என்று விமான நிலையத்திலேயே செய்தியாளர்களிடம் முழங்கினார். தமிழக அரசின் அடக்குமுறைக்கெதிராக அடங்க மறுத்து, அதிரடிப் பாய்ச்சலில் பயணித்தது சிறுத்தைகள்.
இச்சூழல் குறித்து, யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழ்மண் இதழுக்கு (சனவரி 2008) அளித்த நேர்காணலின்போது, “பழ.நெடுமாறன், வைகோ போன்றவர்களின் கைதுக்குப் பின்பு தற்போது விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசக்கூடாது என்கிற பிரச்சாரத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் கொஞ்சம் அடிபணிந்திருந்தால் ஈழப் போராட்ட ஆதரவுக்கான சவப்பெட்டியின் கடைசி ஆணியை அடித்து முடித்திருப்பார்கள். ஆனால் அதற்குக் கொஞ்சமும் இடம்கொடுக்காமல் விடுதலைச் சிறுத்தைகள் அந்த சக்திகளின் முயற்சியைத் தகர்த்து விட்டார்கள். ஈழப் போராட்டத்திற்கான ஆதரவு தமிழகத்தின் இனி அதிகரிக்கத்தான் செய்யும். அதைத் தடுக்க முடியாத அளவிற்கு விடுதலைச் சிறுத்தைகளின் செயல்பாடுகள் இத்தருணத்தில் சரியாக இருக்கிறது. தமிழகத்தில் கருத்துரிமைக்கு எதிரான நெருக்கடியை இறுக்கமான சூழலை விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் உடைத்திருக்கிறார். ஏனென்றால், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கடத்துவது பெருமைதான் என்று வெளிப்படையாகப் பேசியதன் மூலம் அத்தகைய இறுக்கம் பிசுபிசுத்துப் போய்விட்டது. விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் கொஞ்சம் யோசித்துச் செய்வோம், கொஞ்சம் அடக்கி வாசிப்போம் என்று பின்வாங்கியிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும்” என்று உண்மையை உலகுக்கு உரத்துக் கூறினார். இன்றைக்கும் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழீழ மக்களுக்காக முதல்வர் விக்னேஸ்வரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
அப்படித்தான் ஜெயலலிதா அம்மையாரின் நெருக்கடிகளை உடைக்கும் வகையில் 23-11-2001 அன்று திருச்சி உறையூரில் ‘பொடா’ எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று வெளிப்படையாக அறிவித்து அதற்கான செயல்திட்டங்களையும் மேற்கொண்டார். ‘பொடா’வை எதிர்த்து தொடர்ச்சியாக தமிழகத்தில் முழக்கமிட்ட ஒரே தலைவர் திருமாவளவன்தான். இதன் தொடர்ச்சியாக கடந்த 5-8-2002 அன்று சென்னை பாம்குரோவ் விடுதியில் பொடா எதிர்ப்பு முன்னணியை உருவாக்கும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் அய்யா நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர் டி.கே.ரங்கராஜன், சுப.வீரபாண்டியன், விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். பொடா எதிர்ப்பு முன்னணியை உருவாக்கியதன் மூலம் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை எதிர்த்து தமிழகம் முழுக்க போராட்டங்களை முன்னெடுத்தார் திருமாவளவன். கடைசிவரை பொடாவை எதிர்த்துப் போராடியது சிறுத்தைகள்தான்.
இதையொட்டி சூலை 2003ஆம் ஆண்டு தமிழகம் முழுக்க அடக்குமுறைச் சட்டங்கள் எதிர்ப்பு மாநாடுகள் மண்டலவாரியாக சிறுத்தைகளின் சார்பில் நடத்தப்பட்டன. பிப்ரவரி 16, 2006 அன்று ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு ஒன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் இலட்சக் கணக்கான இளைஞர்கள் ஆர்த்தெழுந்தனர். 16-6-2006 அன்று தமிழகமெங்கும் ஈழத்தமிழர் பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள், 6-7-2006 அன்று மயிலை மாங்கொல்லையில் ஈழத்தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் என்று விடுதலை அரசியலுக்கான நெருப்பை சிறுத்தைகள் தொடர்ந்து அடைகாத்தது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வனின் படுகொலைக்குப் பிறகு, தமிழகத்தில் இரங்கலுக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. இத்தருணத்தில்தான் ‘கண்டனமும் இரங்கலும் தேசத் துரோகமா?’ என்கிற முழக்கத்தோடு சனவரி 25, 2008 அன்று கருத்துரிமை மீட்பு மாநாடு சென்னையில் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. யார் வாய்மூடிக் கிடந்தாலும் நாங்கள் வாய்மூடி இருக்க மாட்டோம் என்று முழங்கினார்.
இதனையடுத்து தமிழகத்திலிருந்த இறுக்கம் தளர்ந்தது. விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளின் தமிழீழ அரசியலை மையப்படுத்தியும், ஆதரித்தும் பல மாநாடுகளை தலைநகர் சென்னையிலேயே நடத்திக் காட்டியது. 2008 நவம்பர் மாதம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், ‘இந்திய அரசே போரை நிறுத்து! ஈழத் தமிழரைக் காப்பாற்று!’ என்கிற முழக்கங்களோடு அடுத்தடுத்த போராட்டங்களை அறிவித்தார். அக்டோபர் 23, 2008 அன்று இரயில் மறியல் போராட்டம்; 6-11-2008 - மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் உண்ணா நிலைப் போராட்டம், 11-11-2008 அன்று தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் தொடர்முழக்கப் போராட்டம், 18-11-2008 அன்று முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் பேரணி என தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஈழப் போராட்ட நெருப்பைப் பற்றவைத்தது சிறுத்தைகள். இதன் தொடர்ச்சியாக தமிழீழத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுமென்று வலியுறுத்தி, 26-12-2008 அன்று தமிழீழ அங்கீகார மாநாடு சென்னையில் நடைபெற்றது. அரசின் பல தடைகளைத் தகர்த்து இலட்சக்கணக்கான சிறுத்தைகள் புல்லாரெட்டி நிழற்சாலையை நிரப்பினர். 
தமிழீழ மக்கள் மீதான போரை நிறுத்த பலகட்டப் போராட்டங்களை நடத்திய பிறகும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் போர் நிறுத்தப்படவில்லை. இதன் உச்சகட்டமாகத்தான் தலைவர் திருமாவளவன் அவர்களே, தமது உயிரை ஆயுதமாகப் பயன்படுத்தத் துணிந்தார். 15-1-2009 அன்று சென்னை மறைமலைநகரில் உயுராயுதமாக காலவறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். நான்கு நாட்களாகத் தொடர்ந்த அந்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர விரும்பாத சமூகவிரோதிகளின் சதியால் உண்ணாநிலைப் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது. ஆனாலும், தமிழீழத்தின் தேவையை தமிழர்களின் விடுதலை அரசியலை முன்வைத்து, மீண்டும் 28-5-2009 அன்று மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரை விடுதலைச் சிறுத்தைகளின் அமைதிப் பேரணி நடைபெற்றது. ஈழப் போராட்டத்தில் கொத்துக்குண்டுகளால் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியாக அது நடத்தப்பட்டது.
போர் முடிந்து, புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டாலும், தமிழீழத்தின் தேவையும், விடுதலை வேட்கையும் தமிழர்களின் உயிர்மூச்சு என்பதை முன்னெடுக்கும் வகையில் 17-8-2009 அன்று எழும் தமிழ் ஈழம் எனும் மாநாட்டை நடத்தி உலகத் தமிழர்களிடையே நம்பிக்கையை விதைத்தார். விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் இத்தகைய வீரியமிக்க போராட்டங்களை நடத்தினாலும், மற்ற தோழமை இயக்கங்களின் சார்பில் நடைபெற்ற போராட்டங்களிலும் திருமாவளவன் கலந்துகொண்டு ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்தினார். அந்த வகையில்தான் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற அத்தனைப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு போராட்டத்தின் களத்தை விரிவுபடுத்தினார். 
சிங்களப் பேரினவாதத்தால் புறக்கணித்து ஒடக்குமுறைக்குள்ளான தமிழ் மக்கள் விடுதலைக்காக தமிழகத்தில் ஒடுக்குமுறைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்டிப் போராடிய விடுதலைச் சிறுத்தைகளின் களப்பணிகளும் அர்ப்பணிப்பும் விடுதலைப்புலிகளுக்கு நன்றாகவே தெரிந்தது. அதனால்தான் தமிழீழத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் 2002ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டிற்கு தலைவர் திருமாவளவன் அவர்களை அழைத்தார். தமிழகத்திலிருந்து புலிகளால் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்ட ஒரே அரசியல் அமைப்பு விடுதலைச் சிறுத்தைகள்தான். அந்த அளவுக்கு வீரியமிக்க போராட்டங்களால் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தமிழீழ ஆதரரவைக் கொண்டு சேர்த்த இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். எளிய சமானிய மனிதர்களை விடுதலைப் புலிகளின் விடுதலைப் போராட்டடத்தை ஆதரிக்கிற வகையில் துணிச்சலை உருவாக்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். சேரிகளிலும் குப்பங்களிலும் மேதகு பிரபாகரன் படங்களும், தமிழ்த் தேசியக் கருத்தியலையும் கொண்டு போய்ச் சேர்த்தது விடுதலைச் சிறுத்தைகளின் எழுச்சிமிகுந்த போராட்டங்களும் பரப்புரைகளும்தான். சுருக்காகச் சொன்னால், விடுலைப் புலிகளின் விடுதலை அரசியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்தது மட்டுமல்லாமல் இளைய தலைமுறையையும் போராட்டக் களத்தில் இறக்கியதும் விடுதலைச் சிறுத்தைகள்தான்.
விடுதலைச் சிறுத்தைகளுக்கே இத்தகைய களமாடுதல் தொடரும்போது பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகத்துக்கு எந்த அளவுக்கு களங்கள் இருக்கும் என்பதை உலகம் அறியும். இலங்கை மண்ணில் தமிழர்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டுமானால் தனித் தேசமாகத்தான் பிரிய வேண்டும், தமிழீழம்தான் தீர்வாக அமையும் என்று தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அத்தகைய தளகர்த்தர் தலைமையில், எத்தனையோ போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்தன. பெரியார் திடலே ஈழப் போராட்டத்திற்கான களங்களை உருவாக்கித் தந்தது என்றால் யாரும் மறுக்க முடியாது. 
1983ஆம் அண்டு கொழும்பில் தமிழர்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தொடங்கிய கலவரங்களால் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அடைந்தனர். இச்சூழலில் உடனடியாக பெரியார் திடலில் 18-6-1983 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திராவிடர் கழகம் சார்பில் ஆசிரியர் கூட்டினார். 2-7-1983 அன்று சென்னை புல்லாரெட்டி நிழற்சாலையில் அனைத்துக் கட்சி கண்டனப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதுதான் ஈழத்துக்கு ஆதரவான அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டம். இதனைத் தொடர்ந்து 1983 ஆகஸ்டு 15ஆம் நாளை துக்க நாளாக அறிவித்து, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டங்களை அறிவித்தார் ஆசிரியர். தமிழ்நாடெங்கும் இப்போராட்டம் பற்றி எரிந்தது. ஆசிரியர் கி.வீரமணி உட்பட திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை என சிறைக்குப் போன தோழர்கள் விடுதலையான பிறகும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர்.
தமிழர் இறைச்சிக் கடைகளைக் கொழும்பில் திறந்து தமிழர்களைக் கொன்றழித்த ஜெயவர்த்தனே 23-11-1983 அன்று புதுதில்லிக்கு வருவதை எதிர்த்து ஆசிரியர் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுக்க நடத்தி மீண்டும் கைதானார்கள். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இனப்படுகொலைக்கெதிரான போராட்டங்கள் வெடித்தன. இச்சூழலில்தான், ஆசிரியர் அவர்களின் முன்முயற்சியால் ‘டெசோ’ உருவாக்கப்பட்டது. கலைஞர் அவர்களைத் தலைவராக முன்மொழிந்து மே 13, 1985 அன்று ‘டெசோ’ (தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு) உருவானது. இவ்வமைப்பில் ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் அன்பழகன், பழ.நெடுமாறன் ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்பட்டனர். சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனேக்கு எதிரான போராட்டங்கள் டெசோ சார்பில் தமிழகம் முழுக்கக் கிளர்ந்தெழுந்தன.
30-8-1985 அன்று டெசோ சார்பில் நாடெங்கும் நடைபெற்ற ரயில் மறியல் தமிழகத்தை உசுப்பியது. இப்போராட்டத்தில் ஆசிரியர் உட்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்புக் கருவிகளைத் தமிழக அரசு பறிமுதல் செய்ததைக் கண்டித்து 23-11-1986 அன்று அடையாறில் பிரபாகரன் உள்ளிட்ட போராளிகள் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டபோது, ஆசிரியர் வீரமணி அவர்கள் பிரபாகரன் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாது, அரசோடு பேசி தொலைத் தொடர்புக் கருவிகளைத் திரும்பக் கொடுக்க வைத்தார். அப்போது சட்டக்கல்லூரி மாணவராக இருந்த விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்களும் மாணவர்களைத் திரட்டி பிரபாகரன் உண்ணாநிலையிருந்த அடையாறு இல்லத்திற்கே சென்று அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1987ஆம் ஆண்டு இராஜீவ்காந்தியும் ஜெயவர்த்தனேயும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் தமிழர்களுக்கு எந்தப் பயனும் அளிக்காது என்பதை தமிழகமெங்கும் பிரச்சாரத்தை முடுக்கிவிடும் வகையில் 16-6-1987முதல் 21-6-1987 வரை முதல் கட்டமாகவும், 7-9-1987 முதல் 11-9-1987வரை இரண்டாம் கட்டமாகவும் நாடு முழுவதும் இராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை எதிர்த்து ஆசிரியர் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இது மட்டுமல்லாமல், 26-10-1987 அன்று வானொலி-தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகைப் போராட்டம் ஆசிரியர் தலைமையில் எழுச்சியாக நடைபெற்றது. காவல்துறை வழக்கம்போல் ஆசிரியர் உள்ளிட்ட திராவிடர் கழகத்தினரைக் கைது செய்து சிறைப்படுத்தியது. இச்சூழலில் 22-12-1987 அன்று தமிழகம் வந்த ஜெயவர்த்தனேவின் பங்காளி இராஜீவ்காந்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆசிரியர் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய கையோடு, 25-1-1988 அன்று இந்தியக் குடியரசு விழாவிற்கு வந்த ஜெயவர்த்தனேவுக்கு கருப்புக்கொடி என்று எண்பதுகளில் தொடங்கிய வீரஞ்செறிந்த போராட்டங்களை இன்றும் கொள்கை வழுவாமல் நடத்திக்கொண்டிருக்கிற இயக்கம் - மற்ற இயக்கங்களுக்கு முன்னத்திஏராக வழிகாட்டும் வகையில் சனநாயகப் போரை நடத்தும் திராவிடர் கழகத்தின் களப்பணிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 
அப்பேரியக்கத்தை வலிமை குன்றாமல் நடத்திவரும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழீழப் போராட்டக் களத்தில் மட்டும் 22 முறை கைது செய்யப்பட்டுச் சிறை சென்றிருக்கிறார். 80 வயதைக் கடந்தும் இன்றும் இளைஞராக அனைவரையும் அரவணைத்து விருப்பு வெறுப்பின்றி பெரியார் வழியில், மானுடநேயத்துடன் சமரசமின்றிக் களமாடி வருகிறார். போராடி வருகிற இளைஞர்களை ஊக்கப்படுத்துவதோடு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். அப்படித்தான் விடுதலைச் சிறுத்தைகளையும் அரவணைத்து ஊக்கப்படுத்தி வருகிறார். பெரியார் திடல்தான் போராட்டக்காரர்களுக்கு உலைக்களமாகத் திகழ்கிறது. அந்த உலைக்களத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஆயுதம்தான் திருமாவளவன். அதனால்தான் எவ்விதச் சமரசமுமின்றி நெருக்கடிகளை உடைத்து பொதுநீரோட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி வருகிறார். 
அந்த உலைக்களத்தில் வடிக்கப்பட்ட இன்னொரு ஆயுதம்தான் சுபவீ. தொண்ணூறுகளில் ‘விடுதலைக் குயில்கள்’ அமைப்பைத் தொடங்கி தமிழ் இனம் மானம் காக்கக் களத்திற்கு வந்த போராளி சுபவீ, கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தாலும் மாணவர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர். இதற்காகவே பலமுறை கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைக்குள்ளானவர். 1992 மார்ச் மாதம் புலிகளை ஆதரித்து தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினார். கல்லூரிக்குப் போய்விட்டு போராட்டக் களம் நோக்கியே வந்து களமாடிய போராளி சுபவீ 1993ஆம் ஆண்டு மாவீரன் கிட்டு வீரச்சாவையொட்டு இரங்கல் நிகழ்ச்சி நடத்துவதற்காக, புலவர் புலமைப்பித்தன் உள்ளிட்ட உணர்வாளர்களோடு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார். அடிக்கடி போராட்டங்களினால் சிறைக்குப் போவதால் ஆசிரியர் பணி இடையூறாக இருப்பதாக உணர்ந்து, 1997ஆம் ஆண்டு தம்முடைய 45ஆம் வயதில் விருப்பு ஓய்வு கொடுத்துவிட்டு தீவிர இனவிடுதலைப் போராட்டத்தில் இறங்கினார்.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்கிற முத்திரை உங்கள் மீது விழுந்துள்ளதே என்று சுபவீயிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அது முத்திரை அல்ல; எனது முகவரி” என்று வெளிப்படையாகத் தமது முகவரியைப் பெருமையாக அறிவித்தார்.
2002ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் மூலம் தமிழீழ ஆதரவாளர்களை அச்சுறுத்திவந்த நிலையிலும் புலிகளை ஆதரிப்பது எனது கடமை என்று அறிவித்ததன் மூலம் பொடா சட்டத்தின்கீழ் கைதாகி 494 நாட்கள் சிறை அனுபவித்தார். சிறைவாசத்திற்குப் பிறகும், முன்பைவிட அதிரடிப் பாய்ச்சலில் புலியாக தமிழகத்தில் களமாடி வருகிறார்.
தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர் கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டு தலித்துகள் விடுதலையிலும், சமூக மாற்றத்திலும் அக்கறையுள்ள தலைவர்களாக வாழ்ந்து வருபவர்கள் ஆசிரியர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன், பேராசிரியர் சுபவீ. தலித்துகள் விடுதலையடைந்தால்தான் தமிழ்ச் சமூகம் முழுமையான விடுதலை அடையும் என்கிற கொள்கை நம்பிக்கையோடு களமாடி வருபவர்கள். அதனால்தான் தருமபுரி, மரக்காணத்தில் தலித்துகளுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட சாதிவெறியாட்டத்தை முதலில் கண்டித்துக் குரலெழுப்பினார்கள் ஆசிரியரும், பேராசிரியரும். ஈழவிடுதலைக் களம் என்றாலும், தலித்துகளின் விடுதலைக் களமானாலும், பெண்ணிய விடுதலைக் களமானாலும் முன்னணியில் நிற்பவர்கள். விடுதலைச் சிறுத்தைகளை நேசிப்பது மட்டுமல்லாது, எப்போதும் தோளோடு தோள் நிற்கும் தோழர்கள். உலகம் முழுக்க ஈழ விடுதலைக்காகச் சுற்றுப் பயணம் செய்தவர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் நேசிக்கப்பட்டவர்கள். 
இப்படிப்பட்ட தலைவர்களைத்தான் சிலர் ‘துரோகிகள்’ என்று சான்றிதழ் வழங்கியுள்ளனர். நிலப்பிரபுக்கள் ம.நடராசன் (சசிகலா), பொள்ளாச்சி மகாலிங்கம், விஐடி விசுவநாதன் போன்ற முதலாளித்துவப் பின்புலம் இல்லாதவர்கள்தான் இம்மூன்று தலைவர்களும். சாதாரண ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இவர்களது பின்புலம். மக்களோடு மக்களாக இருப்பவர்கள், மக்களுக்காகவே வாழ்பவர்கள், முதலாளித்துவத்துக்கு எதிரான தொழிலாளர்களின் தோழர்கள்.. இப்படிப்பட்ட தலைவர்களை, பெரிய முதலாளிகளுடன், கொடிய மதவாதிகளுடன் இனவிடுதலைக் களத்தில் கைகோர்க்கும் சில சுயநல சக்திகள் ‘துரோகிகள்’ என்று குற்றப்பத்திரிகை வாசித்ததை முள்ளிவாய்க்கால் முற்றம் மட்டுமல்ல தமிழ்ச் சுற்றமும் ஏற்காது. 
 காலம் ஒருநாள் பதில் சொல்லும்.
- வன்னிஅரசு ( vanni.viduthalai@gmail.com)

15 June 2013

சுயமாய் எடுத்த முடிவுதானா திவ்யா..?

செல்லங்கொட்டாய் திவ்யாவுக்கு வணக்கம்.

திவ்யா தவறாக நினைக்க வேண்டாம். இக்கட்டான ஒரு மன நிலையில் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் உங்களுக்கு இப்போது இப்படி ஒரு மடல் எழுதுவது உறுத்தலாக இருக்கலாம். இரண்டு தனி நபர்களின் காதல் திருமணமாக இருந்தால் கூட நான் இதை எழுதியிருக்க மாட்டேன். இரண்டு சமூகங்களுக்கிடையிலான மோதாலாக ஊதிப் பெருக்கப்பட்டு தலித் மக்களின் குடிசைகள் வரை எரிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து விட்டதால் மட்டுமே இதை எழுத வேண்டி நேர்ந்தது.

அக்டோபர் 14ஆம் நாள் பதிவுத் திருமணம் செய்துகொண்ட பிறகு என்ன நடந்தது என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. ஊராரின் குடும்ப கௌரவ பேச்சும் சாதிவெறியர்களின் நயவஞ்சகத்தையும் கொடூரமான அவமதிப்பையும் தாங்கமுடியாத உனது தந்தை நாகராஜ் மரணத்திற்குப் பிறகு, நத்தம் காலனி ரத்தச் சிவப்பாய் தீக்கிரையானதை மறந்துவிட முடியாது. இளவரசனோடான உங்கள் திருமணத்துக்குப் பிறகு நத்தம் காலனியிலுள்ள அத்தனை வீடுகளுமே தீக்கிரையாக்கப்பட்டன. வீட்டிலிருந்த டி.வி., வாசிங் மெசின், பீரோ, கட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள் என அனைத்துமே உடைத்து நொறுக்கப்பட்டு வெளியே வீசப்பட்டன. வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கொளுத்தப்பட்டு எலும்புக்கூடுகளாய் நின்றுகொண்டிருந்தன. உனது ஆசைக் கணவன் இளவரசனின் வீடு பார்க்கவே பரிதாபமாய்க் கிடந்தது. கொஞ்சம் பாத்திரங்களும் பாதி எரிந்த நிலையிலிருந்த மின்விசிறிகளுமே வீடு இருந்ததற்கான சாட்சியங்களாய் இருந்தன. நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மாற்றிக்கொள்ள துணிமணிகள்கூட இல்லாமல் மிக மோசமான நிலையில் நத்தம் காலனி மக்கள் கண்ணீரும் கம்பலையுமாய் நின்றுகொண்டிருந்தார்கள். நத்தம் காலனியே சுடுகாடுபோலக் காட்சியளித்ததை தொலைக்காட்சிவழி நீ பார்த்திருப்பாய்.





நத்தம் காலனி மட்டுமல்லாது, கொண்டம்பட்டி, அண்ணாநகர் காலனிகள்கூட சாதிவெறியர்களிடமிருந்து தப்பவில்லை. அடுத்தவேளை சாப்பிடக்கூட வழியில்லாமல் பொதுமந்தையில் கஞ்சி காய்ச்சிக் குடித்துக்கொண்டிருந்தார்கள். சேமித்து வைத்த நெல், வரகு, கம்பு போன்ற உணவு தானியங்கள் கருகிக் கிடந்ததைப் பார்க்கும்போது 'இந்த மக்கள் செய்த பாவம்தான் என்ன?' என்று நெஞ்சுருகாதோர் இருக்க முடியாது. சேமித்து வைத்த சொத்துக்கள் எல்லாமே பறிபோய்விட்டன. பள்ளிக்கூடம் செல்கின்ற குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாது, அவர்களது சான்றிதழ்களும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. இன்னமும் அந்த சான்றிதழ் கிடைக்கப்பெறாமல் எத்தனையோ பிள்ளைகள் பரிதவித்துக் கிடக்கிறார்கள். நீதிமன்றம் வழிகாட்டிய பிறகும் எந்தப் பயனும் இல்லை. நர்சிங் படித்த உன்னைப் போன்றோருக்குக் கல்விச் சான்றிதழின் முக்கியத்துவம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவ்வளவு வேதனைகளும் சோதனைகளும் எதற்காக நடத்தப்பட்டன என்பது உனக்கு நன்றாகவே தெரியும்! தனிப்பட்ட முறையில் உனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக நீ விரும்பிய ஆண்மகனை திருமணம் செய்ய முடிவெடுத்ததுதான் காரணம். இளவரசன் ஒரு தாழ்த்தப்பட்டவன் என்றாலும் அவனோடுதான் வாழ்வேன் என்று உறுதியாக இருந்து திருமணம் செய்தாய். தனிப்பட்ட உனது வாழ்க்கையை விரும்பியவனோடு அமைத்துக்கொள்ள இளவரசன் சார்ந்த சமூகம் கொடுத்த விலை சாதாரணமானதல்ல என்பதை நீ அறிவாய். அத்தனையையும் அம்மக்கள் தாங்கிக்கொண்டார்கள்.


உனது காதல் திருமணம் போலவே பல திருமணங்கள் உங்கள் பகுதிகளில் நடந்திருந்தாலும் உன்னுடைய காதலுக்கு ஏற்பட்ட நெருக்கடிபோல் யாருக்கும் ஏற்பட்டதில்லை. உன்னைக் காப்பதற்காகவே வாராது வந்த மாமணிபோல் களமிறங்கினார் மருத்துவர் இராமதாசு. நாடகக் காதல் செய்து உன்னை ஏமாற்றித் திருமணம் செய்ததாக ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்தார். ஆனாலும், அந்தப் பொய்ப் பிரச்சாரத்தைக் கண்டுகொள்ளாமல் நீ இளவரசனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தாய். உன்னுடைய ஒற்றைக் காதல் திருமணம் தமிழக அரசியலையே புரட்டிப்போட்டது. காதல் திருமணம் செய்தால் என்ன ஆகும் என்பதற்கு நத்தம் காலனிதான் எடுத்துக்காட்டு என்று மருத்துவர் இராமதாசு தலைமையிலான குச்சிக்கொளுத்திக் கும்பல் கொள்ளிக்கட்டைகளோடு பிரச்சாரம் செய்ததை நீ கவனமாகப் பார்த்துக்கொண்டுதான் இருந்தாய்.



                      நத்தம் காலனியில் தாக்குதலுக்கு உள்ளான இளவரசனின் வீடு. 


இளவரசனிடமிருந்து உன்னைப் பிரிக்க எத்தனையோ வழிமுறைகளைக் கையாண்டார்கள். உன்னைக் கெஞ்சினார்கள்; அச்சுறுத்தினார்கள். உன் தாய் தேன்மொழி, தம்பி மணிசேகரனைக் காட்டி 'பாச மிரட்டல்' செய்தார்கள். ஆனாலும் நீ எதற்கும் அஞ்சாது இளவரசனின் குடும்பத்தோடுதான் வாழ்ந்தாய். அப்போது உனக்காக இளவரசனின் குடும்பம் பட்டபாடுகள் சாதாரணமானதல்ல என்பதை உடனிருந்தே அறிந்திருப்பாய். வீடு கூட வாடகைக்குக் கிடைக்காமல் அலைந்த அலைச்சல் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்திருப்பாய். எப்போது யார் வந்து என்ன செய்வார்களோ என்கிற பதைபதைப்பு உன்னையும் இளவரசன் குடும்பத்தையும் தொடர்ந்துகொண்டேயிருந்தது. உன்னை மட்டுமல்லாது சேரியையும் அந்தப் பதைபதைப்பு விட்டுவைக்கவில்லை. எந்தச் சேரி எந்த நேரத்தில் எரியுமோ என்கிற அச்சம் குடிகொண்டிருந்தது.

பயந்ததைப் போலவே, மரக்காணத்தில் வீடுகள் எரிக்கப்பட்டன. மா மரங்கள், பலா மரங்கள் எரிக்கப்பட்டன. மரக்காணம் சேரியின் காவல்தெய்வமான அங்காளம்மனைக்கூட சாதிவெறியர்கள் விட்டுவைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க எத்தனையோ பேருந்துகள் கொளுத்தப்பட்டன. சாதிவெறியர்களின் வன்முறை வெறியாட்டம் மருத்துவர் இராமதாசு உள்ளிட்டோரைக் கைது செய்த பிறகு ஓரளவு குறைந்தது. ஆனாலும் பதற்றம் குறையவில்லை. இவை அத்தனைக்கும் உனது காதல் திருமணத்தையை அடிப்படைக் காரணமாகக் காட்ட முனைந்ததை நீ அறிவாய்.

பாவம், உனது காதலுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் என்ன தொடர்பு? தமிழகம் முழுக்க தலித் எதிர்ப்புணர்வை, தலித்துகள் மீதான காழ்ப்புணர்வைப் பரப்பிவிட்டார்கள். அனைத்து சமுதாயத்திற்கும் பொது எதிரியாக தலித்துகளைச் சித்தரித்தார்கள். ஒழுக்கமில்லாதவர்கள் என்று பொது விதியை உருவாக்க முயற்சித்தார்கள். ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருந்த பொதுப்புத்தி இதற்குக் களம் அமைத்துக் கொடுத்தது. இதன் மூலம் தமிழகத்தை, மானுட நாகரிகத்தை நூறாண்டுகளுக்குப் பின் இழுத்துச் சென்றதை, படித்த உன்னால் உணராமல் இருக்க முடியாது.

இதிகாசங்களில் இலக்கியங்களில் இல்லாத காதலையா நீயும் இளவரசனும் செய்துவிட்டீர்கள்? மலைசாதிப் பெண்ணான வள்ளியை முருகன் சாதி மறுப்புத் திருமணம் செய்த பின்பும் அவனே தமிழ்க் கடவுள் என்று வணங்கினார்கள். ஆனால் அந்த முருகன் வழியில் நீ திருமணம் செய்தவுடன் உன்னையும் இளவரசனையும் கொல்லத் துடிக்கிறார்கள். நீ உயர்நீதிமன்றத்தில் ஆஜர்ஆனபோது உன் முகத்தில் அந்தக் கொலை பயத்தைப் பார்க்க முடிந்தது. வழக்கறிஞர்கள் புடைசூழ நீ மிரட்சியோடு வந்ததைப் பார்த்தபோது உனது நிலை என்ன என்று தெரிந்தது. உன்னை எப்படியெல்லாம் மிரட்டினார்களோ? தைலாபுரம் தோட்டத்தில் எத்தனை நாள் சிறை வைக்கப்பட்டாயோ? "கீழ்சாதிப் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சாதி கவுரவத்தை குழிதோண்டிப் புதைச்சிட்டியே!" என்கிற வசைச் சொற்களால், நடைபிணமாய் நிலைகுலைந்துபோய் நீ நீதிமன்றம் வந்ததைப் பார்க்க முடிந்தது. செய்தியாளர்களிடம்கூட சுதந்திரமாகப் பேசவிடாமல், உன்னை இழுத்துச் சென்ற போக்கு பெண்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு உள்ளது என்பதைத்தான் காட்டியது. அம்மா வீட்டிற்கே போவதாய் நீதிபதிகளிடம் சொல்லிவிட்டதாகத் தீர்ப்பில் சொன்னார்கள். நீ மனக்குழப்பத்தில் இருப்பதாகவும் சொன்னார்கள்.

சகோதரி திவ்யா, உனக்குப் பிடித்த இளவரசனோடு பத்து மாதங்கள் வாழ்ந்தாய். இப்போது உங்கள் குடும்பத்தோடு போகப்போவதாய்ச் சொல்கிறாய். யாருடன் இருப்பது என்பது உன் அடிப்படை உரிமை. தாராளமாகப் போகலாம்.

ஆனால்...

நீ போகும்போது ஏனம்மா அழுதாய்?

இளவரசன் முகத்தைக்கூடப் பார்க்காமல் எப்படியம்மா போக முடிந்தது?

நீ எடுத்த முடிவு உன் சுயமான முடிவுதானா அல்லது மிரட்டலால் எடுத்த முடிவா?
அம்மா, தம்பியின் அழுகையால் எடுத்த முடிவா?

நாடகக் காதல்.. நாடகக் காதல் என்று ஊர் ஊராய்ப் புலம்பிய சாதிச் சொந்தங்களின் அழுத்தங்களால் எடுத்த முடிவா? அல்லது இந்தச் சமூகத்தில் வாழவே விடமாட்டார்கள் என்ற அவநம்பிக்கையால் எடுத்த முடிவா?

தான் வாழ்ந்த காலமெல்லாம் சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி சமூகநீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியாரின் மண்ணில் இன்னமும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்கிற அவநம்பிக்கையால் எடுத்த முடிவா?

எத்தனையோ புரட்சிகரக் குழுக்கள் உருவாகி சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவரப் போராடும் தமிழ் மண்ணில் விரும்பியவனோடு வாழ்வதுகூட முடியாத காரியம் என்கிற கோபத்தால் எடுத்த முடிவா?

ஜீன்ஸ் போட்டும், டி-சர்ட் போட்டும் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், பெண்களுக்கு சொத்துரிமை கொடுப்பதால்தான் தலித்துகள் இப்படி திருமணம் செய்கிறார்கள் என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்தபோது, பெண்களையே கேவலப்படுத்துகிறார்கள் என்கிற கோபத்தில்கூட பெண்ணுரிமை இயக்கங்கள் தெருவுக்கு வந்து போராடாத போக்கால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தாயா?

சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக, இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக அனைத்துச் சமுதாயப் பேரவை என்கிற பெயரில் ஊர் ஊராய் சாதிவெறியைத் தூண்டிக் கலவரம் செய்த பிறகும் அவர்களின் பிரச்சாரத்தைத் தடுக்காமல், கண்டிக்காமல் அவர்களுக்கு ஆதரவு தருகிற திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கலைஞரே இப்படி முடிவெடுக்கிறாரே, நாமெல்லாம் எம்மாத்திரம் என்கிற பயத்தினால் எடுத்த முடிவா?

'ஏனம்மா தாலியைக் கழற்றிவிட்டாய்? அம்மாவோடுதானே போகப்போகிறாய், போய்விட்டு வரவேண்டியதுதானே' என்று கேட்காமலிருந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மவுனம்தான் இந்த முடிவுக்குக் காரணமா? 

'உன்னுடைய திருமணத்திற்குப் பிறகுதானே மூன்று சேரிகள் கொளுத்தப்பட்டன, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன, குடியிருக்கக்கூட வீடுகள் இல்லாமல் போய்விட்டன. இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு அம்மாவுடன் போ' என்று நீதிபதிகள் சொல்லாததால்தான் உன்னால் இப்படி எளிதாக முடிவெடுக்க முடிந்ததா?



                         உயர்நீதிமன்றத்தை விட்டு வெளியில் வரும் திவ்யா (படம்: தி இந்து) 

துப்பட்டாவால் உன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து வெளியேறியபோது நீதியே சாதி அமைப்பு முறைக்குள் முடங்கிக் கிடக்கிறது என்பதை இந்த வழக்கின் மூலம் உணர்ந்ததால்தான் இப்படி ஒரு முடிவை எடுக்க முடிந்ததா திவ்யா?

இத்தனை அவநம்பிக்கைகளோடு வாழ முடியாதுதான். உன்னைப் போன்ற சாதாரண ஒரு பெண்ணைக்கூட பாதுகாக்க முடியவில்லையென்றால், வெறுமனே புரட்சி, பெண்ணுரிமை, சமூகநீதி, சட்டம், நீதி இவையெல்லாம் என்ன எழவுக்கு என்று கேட்கத்தான் தோன்றுகிறது.. உனது மனசாட்சியைப் போலவே. உன்னுடைய இயலாமையும், சாதி ஆதிக்கமும்தான் இந்த முடிவுகளுக்குக் காரணமாகிவிட்டது. பரவாயில்லை! உன்னுடைய சொந்த ஊரான செல்லங்கொட்டாய்க்குப் போகும்போது நத்தம் காலனியைக் கடந்துதான் நீ போவாய். உன்னுடைய காதலுக்குச் சாட்சியமாய், தியாகமாய் நின்றுகொண்டிருக்கும் அந்த நத்தம் காலனியை ஒரு முறை பார். உனக்காகப் பாதிப்பை ஏற்றுக்கொண்ட அந்த மக்களைப் பார். நானும் உன்னை துன் புறுத்த விரும்பவில்லை. ஆனால் உன் வாழ்வு முழுவதும் எரிக்கப்பட்ட குடிசைகளின் சாம்பல் நெடி இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் திவ்யா, நீ ஓணாய்களை நம்பிப் போகிறாய். உன் அப்பாவை சாதிவெறியர்கள் கொன்றதைப் போல, உனக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது. ஏனென்றால் நீ எங்கள் வீட்டு மருமகள். சாதி அமைப்பை உடைத்து நீ விரைவில் வருவாய் என நம்புகிறோம்.

எதிர்பார்ப்புடன்
சாதிஅமைப்பை உடைக்கும் களத்தில்..
வன்னிஅரசு

(இந்த வாரம் 15.06.13 கல்கி இதழில் வெளியாகியுள்ள என்னுடைய கடிதத்தின் திருத்தப்படாத பதிப்பு)