07 November 2013
அந்தக் கொடிய நிகழ்வு நடந்து ஓராண்டாகிவிட்டது. ஒரு நாட்டின் மீது படையெடுப்பு நடத்துவதைப்போல், சாதிவெறியர்கள் சேரிகளின் மீது படையெடுப்பு நடத்தி, குடியிருப்புகளைச் சின்னாபின்னப்படுத்திய நிகழ்வு நடைபெற்று ஓராண்டாகிவிட்டது.
நவம்பர் 7, 2012 அன்று தருமபுரி மாவட்டம், நாயக்கன் கொட்டாய், நத்தம் காலனி, அண்ணா நகர் காலனி, கொண்டம்பட்டி காலனி ஆகிய மூன்று சேரிகளை பா.ம.க.வைச் சேர்ந்த சாதிவெறியர்கள் தீக்கிரையாக்கினர். வீடுகளுக்குள் புகுந்து பொருட்களைக் கொள்ளையடித்துவிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் திறந்துவிட்டு, பெட்ரோல் குண்டுகளை வீசினர். சிங்கள இராணுவத் தாக்குதலில் நிலைகுலைந்து போன தமிழர்களின் வீடுகளைப்போல் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளெல்லாம் கருகிக் கிடந்தன.
பா.ம.க. தலைவர் இராமதாஸ் அவர்களால் வெறியூட்டப்பட்ட சமூகவிரோதிகளால் மூன்று சேரிகளும், இந்திய ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் காட்சிப் பொருளாகி நின்றன. சாதியை ஒழிப்பதற்காகப் போராடிய புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியாரின் தத்துவங்களுக்குச் சவால் விடுகின்ற வகையில், அந்த மூன்று சேரிகளைக் கொளுத்திய, குச்சிக்கொளுத்திகளின் திருப்பணி எக்காளமிடுகிறது.
திவ்யா என்கிற வன்னிய சாதிப் பெண்ணை, இளவரசன் என்கிற தாழ்த்தப்பட்ட இளைஞன் ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டான் என்கிற குற்றச்சாட்டைச் சுமத்தித்தான் அந்த மூன்று சேரிகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இப்படியான காதல் திருமணங்கள், தருமபுரியில் மட்டும் நடந்தேறவில்லை. காதல் திருமணங்கள் அனைத்து எல்லைகளையும் மீறித்தான் சங்க காலத்திலிருந்து நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், நடக்கக்கூடாதது நடந்துவிட்டதுபோல், இராமதாஸ் கும்பல் வெறியாட்டம் ஆடியது.
கடந்த காலம் வரை தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்கிற பெயரில் விடுதலைச் சிறுத்தைகளோடு இணைந்து மொழிப்போர் களத்தில் பா.ம.க செயல்பட்டது. தமிழர்களுக்காகவும், தமிழ்மொழிக்காகவும் பாடுபட்டது.. பாடுபட்டதுபோல் காட்டிக்கொண்டது. அப்புறம் என்ன இழவுக்கோ தொடங்கிய இடத்திற்கே பா.ம.க. திரும்பியது! கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தேர்தல் அரசியலில் தொடர் தோல்விகளைச் சந்தித்ததாலும், கட்சியிலிருந்து திரு.வேல்முருகன் போன்ற செல்வாக்குள்ள தலைவர்கள் வெளியேறியதாலும், பதவி வெறி, பண வெறி, குடும்ப வெறி ஆகியன தலைக்கேறி, அதிகார வெறிக்காக, படுகொலை அரசியலை, தீ வைக்கும் அரசியலை, சாதிவெறி அரசியலைக் கையிலெடுத்து, அதையே கொள்கை முழக்கமாக்கி அதற்காகப் பக்கவாத்தியக் கோஷ்டிகளைச் சேர்க்க ஆரம்பித்தார் இராமதாஸ். அப்படி உருவான அமைப்பின் பெயர்தான் அனைத்து சமுதாயப் பேரியக்கம். ஊர் ஊராய் இந்த சாதிவெறி பக்கவாத்திய கோஷ்டிகளை அழைத்துச் சென்று தலித்துகளுக்கெதிரான பஜனைப் பாடல்களைப் பாடினார். அதன் விளைவுதான் மரக்காணம் கலவரம்.
வெளிப்படையாக சாதிவெறியைத் தூண்டி அதன் மூலம் எழும் கலவரத்தால், சாதிவெறியர்களை வாக்குகளாகத் திரட்டத் திட்டமிட்டதன் விளைவுதான் தலித்துகள் மீதான வெலைவெறித் தாக்குதலும் சொத்துக்கள் சூறையாடலும்.
இராமதாஸின் இந்த மலிவான அரசியலை ஜனநாயக முற்போக்கு சக்திகள் அடையாளம் கண்டு கண்டித்தன. அய்யா நல்லக்கண்ணு, ஜி.இராமகிருஷ்ணன், தா.பாண்டியன் போன்ற பொதுவுடைமைவாதிகளும், ஆசிரியர் வீரமணி, சுபவீ, கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் போன்ற பெரியாரியவாதிகளும், பெ.மணியரசன், தியாகு, மே 17 திருமுருகன் காந்தி போன்ற தமிழ்த் தேசியவாதிகளும், மனுஷ்யபுத்திரன், ஞானி, அ.மார்க்ஸ், அறிவுமதி, கனிமொழி, மறைந்த கவிஞர் வாலி, குட்டி ரேவதி, யுகபாரதி உள்ளிட்ட எழுத்தாளர்களும் கவிஞர்களும் வெளிப்படையாக இராமதாஸின் சாதிவெறிய அரசியலை அம்பலப்படுத்திக் கண்டித்தார்கள், எழுதினார்கள், போராடினார்கள்.
ஆனால், தமிழகத்தில் இதுகாறும் முற்போக்கு முகமூடி அணிந்து கொண்டு பேசிவந்த தமிழறிவு மணியன், மகஇக புரட்சிக்காரர்கள் போன்றவர்கள் பாம்புக்குத் தலையாகவும், மீனுக்கு வாலாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் பகிரங்கமாக இராமதாஸின் சாதிவெறியை அம்பலப்படுத்துவதற்கும் கண்டிப்பதற்கும் பதிலாக,விடுதலைச் சிறுத்தைகளுக்கு இலவச அறிவுரைகளை வழங்கினார்கள். அத்துடன், இராமதாஸ் தலித்துகள் மீதும் சிறுத்தைகள் மீதும் என்ன அவதூறுகளைப் பரப்பினாரோ, அதே அவதூறுகளை அப்படியே பேசினார்கள்; எழுதினார்கள். இவர்களைவிட மோசமாக கள்ள மவுனம் சாதித்தவர்கள் தமிழ்த் தேசிய வேடதாரிகள். அயோத்திதாசப் பண்டிதர் மொழியில் சொல்வதென்றால் வேஷ பிராமணர்கள்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் வெற்றிகரமாக இயங்கியதை வரவேற்ற தமிழறிஞர்கள் பலர், இராமதாசையும் இணைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அந்த வகையில், தமிழறிஞர்களும் எழுத்தாளர்களும் ஓவியர்களும் ஒரு குழுவாக இராமதாசைச் சந்தித்து, தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் சிறுத்தைகளோடு இணைந்து செயல்படுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.
அப்படித்தான் ஜி.கே.மணி கோ.க.மணியானார். ஏ.கே.மூர்த்தி அ.கி.மூர்த்தியானார். இராமதாஸ் இராமதாசு ஆனார். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பலகட்டப் போராட்டங்கள் வெற்றிகரமாக நடந்தன. ஆனால், இதில் அரசியல் இலாபத்தோடுதான் இராமதாஸ் செயல்பட்டார் என்பதை பின்வந்த தேர்தல் காலங்களில் வெளிப்படுத்தினார். தருமபுரியில் அதை நிரூபித்தார். தமிழர் ஒற்றுமைக்கெதிராக தமிழர்களை சாதியின் பெயரால் வெறியூட்டி படுகொலை செய்யும் இராமதாஸின் பச்சை அயோக்கியத்தனத்தை தமிழ்த் தேசியம் பேசும் தமிழறிஞர்களும் கவிஞர்களும் ஓவியர்களும் துணிச்சலாகக் கண்டித்தார்களா?
தமிழுக்காக இராமதாஸ் பேசும்போது அய்யா என்றும், தமிழினப் போராளி என்றும் புளகாங்கிதம் அடைந்து பேசும் அதேவேளையில், தவறு செய்கிற போக்கினைக் கண்டிப்பதற்கும் துணிச்சல் வேண்டும். போர் வெறியோடு திரிந்த எத்தனையோ மன்னர்களை அறம் பாடி தமது எதிர்ப்பைத் தெரிவித்த தமிழ்ப் புலவர்களை சங்க இலக்கியங்களில் பார்த்திருக்கிறோம். அவர்களை தமிழறிஞர்களாக, கவிஞர்களாக தமிழகம் இன்னும் மதிக்கிறது. ஆனால், இங்கு தொன்மையான தமிழ் மொழி குறித்து அக்கறை கொள்பவர்கள், தொன்மையான தொல்குடிகளைப் பற்றி எவ்விதக் கவலையும் கொள்வதில்லை. சமூக மாற்றம் குறித்தும், அச்சமூகத்தின் விடுதலை குறித்தும் அக்கறையுடன் சிந்தனைகொள்பவர்களே உண்மையான அறிஞர்களாக இருக்க முடியும். ஆனால், இங்கு மொழி குறித்து கவலைகொள்பவர்கள் போலியாக, சந்தர்ப்பவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்.
சாதியத்தை விடமுடியாமல் பாவம் அவர்கள் தமிழர்வேடம் அணிந்து உலவுகிறார்கள். அப்படித்தான் தமிழ்த்தேசிய இயக்கவாதிகளும் வேடம் அணிந்து திரிகிறார்கள். புலி வேடம் போட்டவர்கள், மொழி வேடம் போட்டவர்கள், முற்போக்கு வேடம், புரட்சி வேடம் என்று வேஷம் கட்டி அலைகிறார்கள். அப்படி ஒரு வேடம் கட்டித் திரிகிற அய்யா பழ.நெடுமாறன் தமிழகத்தின் சாதியச் சிக்கல் குறித்து ஒருபோதும் கவலைகொண்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்து கொல்லப்பட்டுவரும் தொல்.தமிழர்களான தலித்துகள் குறித்து, அவருக்கு எவ்வித அக்கறையும் இருந்ததில்லை என்பதைத்தான் அவரது கடந்த கால அரசியல் இந்தத் தலைமுறைக்கு உணர்த்துகிறது. யார் சாதிவெறியர்களோ அவர்களைத் தமிழ்த் தேசியக் களத்தில் தமிழர் உணர்வாளர் என்கிற வேடம் அணியவைத்து அடையாளம் காட்டி வருகிறார். உதாரணம் ம.நடராசன்.
தருமபுரி மற்றும் மரக்காணத்தில் சாதிவெறியாட்டம் நடத்தியவர்களைக் கண்டித்து தமிழ்த் தேசியவாதிகளை ஒன்றுதிரட்டி இதுவரை போராட்டங்களை நடத்தியதில்லை. ஆனால், அத்தனைத் தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும் தலித்துகளின் பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது.
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழ்த் தேசியக் களத்திற்கு வந்தபிறகுதான் தமிழ்த் தேசியப் போராட்டமே விரிவடைந்தது. முல்லைப் பெரியாறு உரிமை, காவிரி நீர் போன்ற தமிழகத்தின் ஆற்று நீர் உரிமை, நெய்வேலி மின்சாரம் மற்றும் அணுஉலை எதிர்ப்பு போன்ற தமிழர்களுக்கான அத்தனை உரிமைப் போராட்டங்களிலும், மற்ற தமிழ்த் தேசிய இயக்கங்களைவிடத் தீவிரமாக வெகுமக்களை அணிதிரட்டிப் போராடிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். அப்படிப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் மீது அபாண்டக் குற்றச்சாட்டுகளை அள்ளித் தூவிய பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் அவர்களை வெளிப்படையாகக் கண்டித்து ஒதுக்காதவர்கள் எப்படி தமிழ்த் தேசியவாதிகளாகச் சொல்லிக் கொள்ள முடியும். தமிழ்த் தேசிய ஓர்மையைச் சிதைக்கும் கும்பலை அம்பலப்படுத்தாமல் கள்ள மவுனம் சாதிப்பவர்களும் சாதிவெறிக்குத் துணை போவதாகத்தானே அர்த்தம்.
இப்போது எல்லாம் முடிந்து ஓராண்டாகிவிட்டது. திரும்பிப் பார்த்தால் தமிழர் ஓர்மைக்கு யார் எதிரானவர்கள் என்று மக்கள் புரிந்துகொள்கிறார்கள். மூன்று சேரிகளும் எரிந்தன. தொடர்புடைய இளவரசன் கொல்லப்பட்டான். வெற்றிகரமாக அரங்கேற்றிய சாதிவெறியர்கள் வழக்கம்போல் அறிக்கைகள் விட்டுக்கொண்டு இன்னமும் அரசியல் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் வெட்கமே இல்லாமல் விவாதம் என்கிற பெயரில் சாதியத்தைப் பிரச்சாரம் செய்கிறார்கள். தலித்துகளுடைய உரிமையை நசுக்கிச் சாகடித்துவிட்டு தமிழர் உரிமைக்காகக் கண்ணீர் வடிப்பதாக அறிக்கை விடுவது முரண்பாடில்லையா?
இதைக் கூட கண்டிக்காமல் கண்டும் காணாமல் இருக்கும் தமிழ்த்தேசியவாதிகளை, அச்சாதிவெறியர்களைவிடக் கொடூரமானவர்களாகத்தான் மக்கள் அடையாளம் காண்பார்கள்.
தமிழ்த் தேசிய விடுதலை என்பது சாதி, மத ஒழிப்புடன்கூடியதாகத்தான் இருக்க முடியும். சாதியத்தை மறுதலிப்பதாகத்தான் இருக்க முடியும். தமிழ்த் தேசியத்திற்கு நேரெதிரானது இந்தியத் தேசியம். இந்தியாவிலேயே இந்து, இந்தி, இந்தியாவைப் புறக்கணிக்கின்ற, எதிர்க்கிற ஒரே தேசியம் தமிழ்த் தேசியம். இந்துத்துவத்திற்கு எதிரான தேசியம் தமிழ்த் தேசியம்தான். ஆனால், தமிழ்த் தேசியவாதிகள் இந்துத்துவவாதிகளாக இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். இல்லையென்றால், இந்துத்துவவாதிகளான பொன்.இராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி மகாலிங்கம், அர்ஜுன் சம்பத் போன்றவர்களோடு உறவு வைத்திருப்பார்களா?
இந்துத்துவத்தை உள்வாங்கிக் கொண்டதுதான் சாதியம். இந்துத்துவமும் சாதியமும் வேறு வேறல்ல. இவை குறித்துத்தான் புரட்சியாளர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் வாழ்நாள் முழுக்க விவாதித்தார்கள், பிரச்சாரம் செய்தார்கள்.
படம் : தி இந்து
சமூகரீயாக நடைபெறும் புறக்கணிப்புகளுக்கு எதிராகத்தான் தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் இந்துத்துவத்தின் கொடுங்கோன்மை என்று அம்பலப்படுத்தினார்கள். புறக்கணிப்பதும் தள்ளிவைப்பதும் நீண்டகாலமாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. வடிவத்தை மாற்றிக்கொண்டு புறக்கணிப்புகள் சேரிகளை முற்றுகையிடுகின்றன. பொதுக்குளத்திலே குளிக்கக் கூடாது, பொது வீதிகளில் நடக்கக் கூடாது, மேலாடை அணியக் கூடாது, முழங்காலுக்கு மேல்தான் ஆடை அணிய வேண்டும், பொது ஏலம் கேட்கக்கூடாது, ஊர் மந்தையில் உட்காரக் கூடாது, உனக்கும் ஊருக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது, ஊருக்கு வெளியே குடியமர்த்திக் கொள்ள வேண்டும், தேநீர்க் கடைகளுக்குக்கூட வரக்கூடாது.. இத்தனைத் தடைகளோடு முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கும் வரக்கூடாது.
ஊருக்காக அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு வேலை செய்தவனை கடைசியில் ஊருக்கு வெளியே போ என்று சொல்வதைப் போல, தமிழர் உரிமைக்கான அத்தனை களத்திலும் களமாடிய விடுதலைச் சிறுத்தைகளை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வரத் தகுதியில்லை என்று புறக்கணிப்பதும் பார்ப்பனியம்தான். இந்துத்துவம் எந்த வடிவத்திலும் ஒடுக்கிக்கொண்டேதான் இருக்கும்.. புறக்கணித்துக்கொண்டேதான் இருக்கும்.. இதனுடைய வெளிப்பாடுதான் இராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி அல்லது அனைத்து சமுதாயப் பேரியக்கம்.
புறக்கணிப்புகளையும் ஒடுக்குமுறைகளையும் உடைத்துக்கொண்டே எழுவதுதான் சிறுத்தைகளின் போர்க்குணம். அப்படி உடைக்கும் வகையில் நவம்பர் 7 சாதி எதிர்ப்பு அரசியல் நாளில் அனைவரும் உறுதியேற்போம்! போலித் தமிழ்த் தேசியவாதிகளை அடையாளம் காண்போம்!
சாதியத்தை வேரறுப்போம்! - தமிழ்த்
தேசியத்தை வென்றெடுப்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment