16 November 2024
மீண்டும் விடுதலைப் போர்!
'நாகர்கள் இந்தியர்கள் அல்லர்;நாகாலாந்து இந்தியா அல்ல. தனித்த மொழி, பண்பாடு, வரலாறு கொண்ட தேசிய இனம் தான் நாகர்கள். ஒருபோதும் அந்நிய ஆதிக்கத்தை ஏற்க மாட்டோம்' என்ற நிலைப்பாடு கொண்ட அமைப்பு 'நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில்' (NSCN-IM).
இந்திய அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக மீண்டும் ஆயுத போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்துள்ளது நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில்.
என்ன நடந்தது என்று விரிவாக பார்ப்போம்…
'நாகா பழங்குடிகள் இயக்கம்' (NTC) என்ற பெயரில் ஆங்கிலேய ஆட்சி காலத்தின் போது இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய பகுதிகளில் வாழும் நாகா இன மக்களின் உரிமைகளை முன்னெடுத்து செல்லும் இயக்கம் செயல்பட்டது.
1946ல் அந்த அமைப்பு 'நாகா தேசிய இயக்கம்' (NNC) என உருமாற்றம் பெற்றது. இந்தியாவுடன் இணையாமல் சுதந்திர நாகா தேசத்தை முன்வைத்து செயல்பட்டனர். இந்திய விடுதலை தினமான 1947 ஆக.15க்கு ஒரு நாள் முன்னர் 1947 ஆக.14ல் நாகாலாந்து எனும் தனி நாடு விடுதலை அடைந்ததாக அறிவித்தது நாகா தேசிய இயக்கம்.
1951ல் நாகா இன மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட சுயநிர்ணய தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து அடக்குமுறையை ஏவியது இந்திய ஒன்றிய அரசு. நாகா இன மக்கள் பெருமளவில் வாழும் பகுதிகள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, காஷ்மீர் போல அங்கும் இந்திய சனநாயகம் திணிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக ஆயுத போராட்டத்தை கையிலெடுத்தனர் நாகாக்கள்.
இதனை நீர்த்துபோகச் செய்யும் நடவடிக்கையாக 1963ல் 'நாகாலாந்து' எனும் மாநிலத்தை உருவாக்கியது இந்திய அரசு. காஷ்மீர் போன்று சிறப்பு அதிகாரங்களுடன், மலை மாவட்டங்களை உள்ளடக்கிய நிர்வாக குழுக்களை கொண்டது நாகாலாந்து மாநிலம். 1975ல் நாகா தேசிய இயக்கம் இந்திய அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது ஷில்லாங் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
நாகா தேசிய இனத்தின் உரிமைகளை இந்திய அரசிடம் காவு கொடுத்துவிட்டதாக தேசிய இயக்கத்தின் பல தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். அவர்கள் அனைவரும் இணைந்து 1980ல் உருவாக்கியது தான் 'நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில்' (NSCN). அது மேலும் உடைபட்டு இரு குழுக்களானது.
ஈசாக் சிஷி(I) மற்றும் முய்வா(M) ஆகியோர் தலைமையிலான அமைப்பு வலுவான இடத்தை பிடித்தது. அதுவே NSCN-IM என அந்த அமைப்பின் பெயரிலும் வெளிப்பட்டது. இன்னொரு குழு காப்லாங் தலைமையிலான NSCN-K. இவர்கள் மியான்மரில் இருந்து செயல்படுகின்றனர்.
1980 முதல் நாகாலாந்து மாநிலத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்துக்கு எதிராக தீவிரமான கொரில்லா போரில் ஈடுபட்டனர். ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1958 (AFSPA) மூலம் இந்திய ராணுவத்தினர் அப்பாவிகள் மீது நிகழ்த்திய பாலியல் வல்லுறவு, போலி மோதல் படுகொலை, காவல் சித்திரவதை உள்ளிட்ட கொடுமைகளுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கியது இந்திய அரசு. இந்த கொடுஞ்சட்டத்துக்கு எதிராக தான் மணிப்பூரின் இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா சுமார் 16 ஆண்டுகள் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டார்.
நாகாக்களின் போர்க்குணத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது இந்திய அரசு. 1995ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் பாரிஸ் நகரத்திலும், 1997ஆம் ஆண்டு பிரதமர் தேவ கவுடா சூரிச் நகரத்திலும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் விளைவாக, 1997ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி இந்திய ராணுவத்தின் மீது போராளிகள் தாக்குதல் நடத்த மாட்டார்கள். நாகாலாந்து தலைநகர் கோஹிமாவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள டாங்கி உயிரியல் பூங்கா பகுதியில் போராளிகளின் முகாம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது வரை ‘கேம்ப் ஹெப்ரோன்’ (Camp Hebron) என்ற பெயரில் தனி அரசாகவே அந்த முகாம் செயல்பட்டு வருகிறது. ‘நாகாலிம் மக்கள் குடியரசின் தலைமைச் செயலகம்’ என்று அந்த முகாம் அழைக்கப்படுகிறது. முகாமுக்கு உள்ளே கல்வி, சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட அரசு நிர்வாக அலுவலகங்கள், ராணுவ முகாம்கள், பயிற்சி முகாம்கள் என தனி கட்டமைப்பே உள்ளது. இந்த முகாமிலிருந்து தான் அந்த அமைப்பின் தலைவரும் இந்திய அரசுடனான பேச்சுவார்த்தை குழுவின் பிரதிநிதியுமான முய்வா செயல்பட்டு வருகிறார்.
2014ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நாகா அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசின் பிரதிநிதியாக நியமித்தது. 1997 போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திய அரசு கிட்டத்தட்ட 600 முறை அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் கப்லாங் தலைமையிலான அணியினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, இந்திய ராணுவத்தின் மீது தாக்குதலை தொடங்கிய நிலையில், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் உடன் இந்திய அரசு புதிய ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இந்திய அரசின் சார்பில் பேச்சுவார்த்தை பிரதிநிதி ஆர்.என்.ரவி தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது ‘Framework Agreement’ என அழைக்கப்பட்டது. அதாவது நிலையான தீர்வை எட்டுவதற்கான அடிப்படையான புரிந்துணர்வை வழிமொழியும் உடன்படிக்கை என்று சொல்லப்பட்டது.
‘இது வரலாற்றில் மிக முக்கியமான நாள், நாகாலாந்தில் அமைதி திரும்பிவிட்டது’ என்று அறிவித்தது மோடி அரசு. நாகா இன போராளிகளும் மக்களும் தங்களது நூற்றாண்டு கால போராட்டம் வெற்றியடைந்துவிட்டதாக கொண்டாடினர்.
அசாம், மணிப்பூர் & அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்கிய ‘நாகாலிம்‘ பகுதியை உருவாக்க வேண்டும், நாகாக்களின் தனி கொடியையும் அரசியலமைப்பு சட்டத்தையும் இந்தியா ஏற்க வேண்டும் என்பதே நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சிலின் பிரதானமான கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதன் பின்னணியில் மோடி தலைமையிலான இந்திய அரசு தனது சூழ்ச்சிவலையை விரிக்க ஆரம்பித்தது. உளவுத்துறையின் முன்னாள் இயக்குனரான ஆர்.என்.ரவி தனது சதிவேலையை தொடங்கினார். பெரும்பான்மை நாகாக்களின் ஆதரவு பெற்ற இயக்கமான நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சிலுக்கு போட்டியாக அந்த மாநிலத்தில் செயல்படும் அரசியல் இயக்கங்கள், சிவில் அமைப்புகள் உள்ளடக்கிய ‘நாகா தேசிய அரசியல் குழுக்கள்‘ (NNPGs) என்ற பெயரிலான ஒரு குழுவிடம் புதிய பேச்சுவார்த்தையை தொடங்கினார் ஆர்.என்.ரவி. இந்த அமைப்பினருடன் 2017ஆம் ஆண்டு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இரு தரப்பினாலும் ‘ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்பாடு‘ என்று புரிந்துகொள்ளும்படி இந்த ஆவணம் ‘Agreed Position’ என்று அழைக்கப்பட்டது.
ஆர்.என்.ரவி திட்டமிட்டு எதிர்பார்த்தது போலவே, இரு அமைப்புகளும் தத்தம் ஒப்பந்தங்களே இறுதியானது, அதை தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தங்களுக்கிடையே போட்டிபோட தொடங்கியது. இதற்கு பரிசாக நாகாலாந்தின் ஆளுநராக 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி. இந்திய வரலாற்றில் முதன்முறையாக அரசின் பேச்சுவார்த்தை பிரதிநிதியையே ஆளுநராக அறிவித்தது மோடி அரசு. ஆளுநராக தனது பிரித்தாளும் சதிவேலையை மேலும் தீவிரமாக்கினார் ரவி. சோஷலிச கவுன்சிலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி, போட்டி குழுக்களை வளரவிட்டார்.
அதுவரை ‘இந்தியாவின் பாதுகாப்பு விடயம்‘ என்ற இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று தாங்கள் போட்ட ஒப்பந்தத்தின் நகலை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தது நாகா சோஷலிச கவுன்சில். திருத்தப்பட்ட பொய்யான ஒப்பந்த நகலை பிற நாகா போராளி குழுக்களிடமும், சிவில் அமைப்புகளிடமும் வழங்கி ஆர்.என்.ரவி குழப்பம் ஏற்படுத்தியதாக 2020ஆம் ஆண்டு ஒப்பந்த நகலை வெளியிட்டு அவர் மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகளை வைத்தது நாகா கவுன்சில்.
முதலாவதாக ‘இரண்டு தனித்த அமைப்புகள் அமைதியான சூழலில், இணக்கமாக இருப்பதற்கு புதிய உறவுக்கான (New Relationship) ஒப்பந்தம்’ என்றிருந்த வரிகளில் ‘New’ என்ற வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டு அதன் நகலை மற்ற அமைப்புகளிடம் பகிர்ந்துள்ளார் ரவி. இந்த மோசடியான நகல் மூலம் நாகா குழுவினர் மத்தியில் குழப்பத்தையும் மோதலையும் ரவி உருவாக்கிவிட்டதாக குற்றஞ்சாட்டினர்.
மேலும், 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்பு சட்ட வரையறைக்குள் வராது. இது இறையாண்மை உள்ள தனித்த இரு அமைப்புகளால் போடப்பட்ட ஒப்பந்தம் என்றது முய்வா அமைப்பு.
இரண்டாவதாக, ரவி மீதான குற்றச்சாட்டுக்கு 2018 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி ‘வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு நிலை‘ என்ற தலைப்பில் உள்துறை தொடர்பான நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கை எண். 213ஐ சுட்டிக்காட்டியது நாகா கவுன்சில்.
அதில் நாகாலாந்து மாநில நிலை குறித்து நிலைகுழுவிடம் அறிக்கை சமர்ப்பித்த ஆர்.என்.ரவி, தனித்த இறையாண்மை கொண்டதாக (Shared Sovereignty) இந்தியாவுடன் இருப்போம் (with India) என்ற நிலைப்பாட்டில் இருந்த சோஷலிச கவுன்சில், இந்திய அரசின் தொடர் முயற்சிகளால் சிறப்பு அந்தஸ்தோடு (Special Status) இந்தியாவுக்குள் இருப்போம் (within India) என்று நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விட்டதாக பொய்யான தகவலை பதிவு செய்துள்ளார். மேலும் காஷ்மீரில் அப்போது நடைமுறையில் இருந்த 370 சட்டப்பிரிவை போல நாகாலாந்திலும் 371A சட்டப்பிரிவு நடைமுறையில் உள்ளது. அதைப் போன்றே கூடுதலாக சில சலுகைகள் கொடுத்தால் போதும் என்றார் ரவி.
இந்திய பாராளுமன்றத்திலும், நாகா குழுக்களிடமும் திட்டமிட்டு பொய் சொல்லி சதியில் ஈடுபட்ட ரவியை பேச்சுவார்த்தை பிரதிநிதி பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும், அதுவரை பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்தது நாகா கவுன்சில்.
‘சட்டம் ஒழுங்கை சீர்படுத்தவில்லை என்றால் அந்த துறையை தாமே ஏற்று நடத்துவேன்’ என்று நாகாலாந்து மாநில முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதினார் ரவி. இது சிக்கலை இன்னும் தீவிரமாக்கியது. இந்த கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து, 2021 செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக அறிவிக்கப்பட்டார், அதாவது நாகாக்களால் துரத்தப்பட்டார் ஆர்.என்.ரவி.
2015ல் நாகா கவுன்சிலை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு நாகா அரசியல் குழுக்களிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தின் நகலும் 2020ஆம் ஆண்டு வெளியாகி ஒன்றிய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது.
‘நாகாக்கள் தங்கள் எதிர்காலத்தை சுயநிர்ணயம் (Self Determine) செய்வதற்கான வரலாற்று மற்றும் அரசியல் உரிமைகளை இந்திய அரசு அங்கீகரிக்கிறது’ என்று பிரகடனப்படுத்தியது அந்த உடன்பாடு.
ஒருபக்கம் காஷ்மீரிகளின் உரிமைகளை நசுக்கி, காஷ்மீர் மாநிலத்தை துண்டாடி, யூனியன் பிரதேசமாக அறிவித்த இந்திய அரசு, மறுபுறம் நாகாக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாக சொல்கிறது இந்திய ஒன்றிய அரசு.
2019ஆம் ஆண்டோடு நாகா குழுக்களிடம் பேச்சுவார்த்தை அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாக ஒன்றிய அரசு அறிவித்த நிலையில், 2021ஆம் ஆண்டு ரவி துரத்தியடிக்கப்பட்ட பின்னர் இதுவரை பேச்சுவார்த்தை குழுவிற்கு புதிய பிரதிநிதியை ஒன்றிய அரசு நியமிக்கவில்லை.
திராவிடம் என்ற பெயரில் பிரிவினைவாதம் பேசுகின்றனர், திராவிடம் என்று பேசுபவர்கள் பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் என்று தமிழ்நாட்டில் பேசி வரும் ஆர்.என்.ரவி தான் அங்கு சுயநிர்ணய உரிமை வழங்கிவிட்டு வந்துள்ளார். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை நாம் அங்கீகரிக்கும் வேளையில், ஒன்றிய அரசின் இரட்டை வேடத்தை தான் அம்பலப்படுத்த முயல்கிறேன்.
இந்த சிக்கல் தொடர்ந்து வந்த நிலையில் தான் கடந்த நவ.7ஆம் தேதி 5 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார் நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சிலின் தலைவர் முய்வா.
2015ஆம் ஆண்டு தங்களிடம் இந்திய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில், அதனை தாமதப்படுத்தி நீர்த்து போகும் செயல்களில் இந்திய அரசே ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாகாலிம் தனித்த வரலாறும், இறையாண்மை கொண்ட நாகாலிம் நிலப்பரப்பு, கொடி மற்றும் அரசியலமைப்பு சட்டமும் விவாதத்திற்கு அப்பாற்பட்ட விடயங்கள் என்று அறிவித்துள்ளார் முய்வா.
2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தை இந்திய அரசு நடைமுறைப்படுத்தும் என்று இன்னமும் நாங்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க முடியாது. எங்கள் லட்சியத்தை நிறைவேற்ற ஆயுத போராட்டத்தை கையிலெடுக்கவும் தயங்க மாட்டோம். அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். மேலும் கடைசி வாய்ப்பாக, மூன்றாம் தரப்பை கொண்டு பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஓராண்டுக்கும் மேலாக மணிப்பூர் எரிந்துக் கொண்டிருக்கிறது. மலைவாழ் கிறிஸ்தவ குக்கி சமூகத்துக்கு எதிராக ஆளும் பாஜக அரசின் துணையோடு பெரும்பான்மை இந்து மெய்தி சமூக தீவிரவாத குழுக்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாகாலந்தில் தேசிய இன விடுதலைக்கான கொரில்லா போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மணிப்பூர் சிக்கலில் தொடக்கத்தில் அமைதி காத்த நாகா கவுன்சில், சமீபத்தில் மணிப்பூர் கிறிஸ்தவர்களின் உரிமைகளையும் உடைமைகளையும் பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக அறிவித்துள்ளது. கொரில்லா போர் தொடங்கும் நிலையில் இது மேலும் ஆபத்தான சூழலுக்கே வழிவகுக்கும்.
தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை தான் ஒற்றை குறிக்கோளாக நாகா போராட்டக்குழு முடிவெடுத்திருப்பது,
இந்தியா முழுக்க உள்ள தேசிய இனங்களை விழிப்படையச்செய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் கூட தமிழ்த்தேசியம் பேசுகிற கட்சி என பீற்றிக்கொள்வோர், நாகா விடுதலை போல அறிவிக்கத் துணிவுள்ளதா? இந்திய ஒன்றியத்துக்குள் இருந்து கொண்டு தமிழ்த்தேசிய அரசியலை பேசுவோர், நாகா தேசிய இன விடுதலைப்போராட்டத்தை ஒரு முறை படித்து பார்ப்பது நல்லது.
- வன்னி அரசு
நன்றி: நக்கீரன்
(16.11.2024 தேதியிட்ட நக்கீரன் இதழில் இந்தக் கட்டுரை இதே தலைப்பில் வெளியாகியுள்ளது)
Subscribe to:
Posts (Atom)