21 September 2020
நீதிமன்றங்கள் நீதி சொல்லுவதற்கு பதில் அறிவுரைகள் சொல்லுவதில் தான் அக்கறை காட்டுகின்றன. ஆளும் அதிகார வர்க்கத்தால் நீதி மறுக்கப்படுவதால் தான் பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை நாடுகின்றனர். ஆனால் அங்கு நீதிக்கு பதிலாக அநீதியும் அறிவுரைகளுமே வழங்கப்படுவதை பார்க்க முடிகிறது. கடந்த 18.9.2020 அன்று மாண்பமை நீதிபதி கிருபாகரன் அளித்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சி மட்டுமல்ல தமிழ் மண்ணுக்கு எதிராகவும் சமூக நீதிக்கு எதிராகவும் அமைந்திருப்பது வேதனை அளிக்கிறது.
அதன் விபரத்தை பார்ப்போம்.
கடந்த 29.1.2014 அன்று அப்போதைய பிரதமர் அலுவலக அமைச்சரும் தற்போது புதுவை முதலமைச்சர் திரு.நாராயணசாமி அவர்களின் வீட்டருகே காருக்கு அருகே வெடிப்பொருளை வைத்த குற்றச்சாட்டின் பேரில், தேசிய விசாரணை முகமை வழக்கை நடத்தி வருகிறது.
வழக்கில் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த தோழர்கள் திருச்செல்வம், தங்கராஜ் (எ) தமிழரசன், கவியரசன் (எ) ராஜா, காளை லிங்கம், ஜான் மார்டீன் (எ) இளந்தணல், கார்த்திக் என 6 பேர் ‘ஊபா’சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
6 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்கள் பிணை கேட்டு நீதிமன்றத்தை நாடிவந்தனர். தற்போது இந்த வழக்கில் பிணை கோரிய காளைலிங்கம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே 2014 ஆம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் பண்ணை வீட்டில் வெடிகுண்டு வைத்த குற்றச்சாட்டில் இவர்களுக்கு 5 ஆண்டுகள் தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அய்யா நாராயணசாமி காருக்கருகே வைக்கப்பட்ட குண்டு வழக்கிலும் 5 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை தர முடியாது. ஏனென்றால் ஒரே வழக்குகள் தான் இவை. அதனால் இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையும், சாட்சிகள் விசாரணையும் முழுவதும் முடிவடைந்து வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் கொரோனா காலம் என்பதாலும் காளை லிங்கத்தால் போடப்பட்ட ஜாமீன் மனுவை, 13.5.2020 அன்று சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து தான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு முன்னர் 20.6.2018 மற்றும் 09.8.2019 என இரண்டு முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் 09.4.2014 அன்று ரிமாண்ட் செய்யப்பட்டதிலிருந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக நீதிமன்ற காவலில் இருந்து கொடுமையை சந்தித்து வருகின்றனர்.
இந்த பின்னணியில் தான் பிணை கேட்ட மனுவை நீதியரசர்கள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில் பிணை மனு தள்ளுபடி செய்வதாக இருவருமே தீர்ப்பளித்தனர். ஆனால் நீதியரசர் கிருபாகரன் சொன்ன அறிவுரைதான் மிக மோசமானதாகும். அவரது கருத்து நச்சுக்கருத்து.அநீதியை விட மோசமானதாகும்.
அவரது அறிவுரை இது தான்.
1 பத்தி: சனநாயக நிறுவனங்கள் மற்றும் தேசத்துக்கு எதிராக இளைஞர்களை போராட தூண்டுவதற்கு, மொழி மற்றும் சித்தாந்தத்தோடு, இனம், பிராந்தியம் மற்றும் மதத்தையும் கருவிகளாக தேசவிரோத சக்திகள் பயன்படுத்துகின்றனர்.
3 பத்தி: ஜார்கண்ட், ஒடிசா, தமிழ்நாடு, கேரள எல்லை உள்ளிட்ட பகுதிகளில் நக்சல் சிக்கல் உள்ளது. இதை மத்திய மாநில அரசுகள் சிறப்பாக கையாளுகின்றன. சில மெத்த படித்தவர்களும் மரியாதைக்குரிய ஆளுமைகளும் நக்சல்களுடன் தொடர்பில் இருந்துகொண்டு, அவர்களுக்கு உதவுவதாக வரும் ஊடக செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. எதிரி நாடுகளைவிட, நாட்டிற்குள் உள்ள சக்திகளால் தான் நமது தேசம் அதிக ஆபத்தில் உள்ளது.
21 பத்தி: தமிழ் மொழி மற்றும் தமிழ் நாட்டு விடுதலை என்று பேசும் சக்திகள், தன்னார்வ அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் குழுக்களின் பேரில் தமிழகத்தில் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் அச்சத்தையும் வெறுப்பையும் விதைத்து போராட தூண்டுகின்றனர்.
23 பத்தி: 2009 இலிருந்து போராட்டங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக இருப்பதற்கு சில சக்திகளே காரணம் என்று சொல்லப்படுகிறது. 2015இல் 20,450 போராட்டங்களுடன் தமிழ்நாடு முதலிடம் வகித்துள்ளது. 2014இலிருந்து 127 ஐ.எஸ்.ஐ ஆதரவாளர்களை தேசிய விசாரணை முகமை கைது செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக 33 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
24 பத்தி: உரிமைகளுக்காக போராடுகிறோம் என்று பெயரில் சில அமைப்புகள், தங்கள் கடமையை மறந்துவிடுகின்றனர். இவர்கள் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்ற பெயரில் எப்போதும் பிரிவினைவாதிகளையும், எதிரி நாடுகளைக் கொண்டாடும் ஆட்களையும் ஆதரிக்கின்றனர். சில சமயங்களில், ‘கருத்துரிமை’ ‘கருத்துச் சுதந்திரம்’ என்ற பெயரில், இவர்களே கூட தேச விரோத கருத்துகளை வெளியிடுகின்றனர். அரசுக்கு எதிராக போராடலாம், ஆனால் நாட்டுக்கு எதிராக போராடக் கூடாது.
25 பத்தி: ‘தமிழ் கலாச்சாரம்’ ‘தமிழினம்’ ‘ தமிழ் மொழி’ ஆகியவற்றை தங்கள் மோசமான திட்டங்களுக்கு ஆயுதங்களாக இந்த சக்திகள் பயன்படுத்தும் போது, அவர்களின் பிராச்சாரத்தை மேலும் பலப்படுத்தும் விதமாக அரசின் செயல்பாடு, குறிப்பாக உணர்வுப்பூர்வமான மொழி விடயத்தில் இருக்க கூடாது. ஏற்கனவே அத்தகைய செயல்பாட்டினால், மொழி உணர்வைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு அரசியல் கட்சிகள் காத்துக் கிடக்கின்றன.
26 பத்தி: அரசின் செயல்பாடுகளால் தங்கள் மொழி புறக்கணிக்கப்படுவதாகவோ, வேறொரு மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவோ தோற்றம் ஏற்பட்டால், இந்த பிரிவினைவாத சக்திகளின் விஷமப் பிரச்சாரத்திற்கு மேலும் எண்ணையை ஊற்றுவது போல அமைந்துவிடும்.
27 பத்தி: நமது நாடு பல இனம், கலாச்சாரம், மொழி, மதங்களைக் கொண்டது. அமைதியும், சமாதானமும் அவசியம். அதற்கு எந்தவொரு குடிமகனும் தனது மொழி, கலாச்சாரம், மதம், இனம் ஆகியவை எந்த அச்சுறுத்தலுமின்றி பாதுகாக்கப்படுகிறது என்று உணர வைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
30 பத்தி: அரசிடம் நாம் எதிர்பார்ப்பவை:
1. தங்கள் மொழி புறக்கணிக்கப்படுவதாகவோ அல்லது ஒடுக்கப்படுவதாகவோ மக்களின் மனதில் உருவாகாமல் தவிர்ப்பது.
2. அரசியலமைப்பிம் 8வது அட்டவணையில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், சில மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்வது.
3. மதவாத, பயங்கரவாத சக்திகளை கடுமையாக ஒடுக்குவது.
31 பத்தி: தேசத்தின் ஒற்றுமையும் இறையாண்மையும் பாதுகாக்கும் நோக்கத்திலேயே மேலேயுள்ள பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் எந்தப் பகுதியிலும் மொழியின் பெயரில் பதற்றத்தை உருவாக்க மொழி அடிப்படையிலான ஆட்களுக்கு இடமளித்துவிடக்கூடாது.
33 பத்தி: இந்த தேச விரோத சக்திகள், எல்லையில் நமது ராணுவ வீரர்கள் செய்த தியாகத்தை சிறுமைப்படுத்தி, மனித உரிமை மீறல் என்ற பெயரில் தீவிரவாதிகளை கொண்டாடுகின்றனர்.
மொழி, இனம், மதம், பிராந்தியம் அல்லது சித்தாந்தம் ஆகியவற்றின் பெயரில் சமூகத்தில் பதற்றத்தை தூண்டியும், வளர்ச்சியை முடக்கியும் நாட்டை பிரிக்க நினைக்கும் தேசவிரோத சக்திகளை அரசுகள் இரும்புக் கரம் கொண்டு கையாள வேண்டும்.
உலகின் பெரிய சனநாயக நாட்டையும், ‘வேற்றுமையில் ஒற்றுமையையும்’ மொழி அடிப்படைவாதிகள் உள்பட அழிவு சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் அரசுகளால் கையாளப்படும் என்பதை இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.
உடன் இருந்த
இன்னொரு நீதிபதி மாண்பமை ஹேமலதா தமது தீர்ப்பில்,
1. இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதில் உடன்படுகிறேன்.
2. நீதிபதி கிருபாகரன் அவர்களின் தமிழ் அமைப்புகள், மொழிகள் குறித்தான கருத்துகளையும் அரசுக்கான பரிந்துரைகளையும் நான் ஏற்கவில்லை, அவை இந்த மனுவுக்கு தொடர்பில்லாதவை.
3. மொழிகளைக் கற்பதென்பது ஒருவரின் தனிப்பட்ட தேர்வாகும்.
நீதிபதி ஹேமலதா அவர்களின் கருத்து தான் தமிழ்நாட்டின் கருத்து.
நீதிபதிகள் நீதியை தரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் வழக்குக்கு தொடர்பில்லாதவற்றை பேசுவது நீதியாகுமா?
அரசியல்வாதிகள் மேடையில் பேசுவது போல நீதிபதிகள் நீதிமன்றங்களை பயன்படுத்தலாமா?
அதுவும் இந்துத்துவத்தை செயல்படுத்த துடிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக அவர்களின் பாராட்டுக்களை பெறுவதற்காக அறிவுரை சொல்லுவதை தமிழ்நாடு ஏற்காது.
- வன்னி அரசு
21.9.2020
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment