11 February 2025

தலைவர் பிரபாகரனுக்கு துரோகம் செய்யும் சீமான்!

 தமிழீழ விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவில் கடந்த 2005ஆம் ஆண்டு மாவீரர் நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. கிளிநொச்சியில் நான் தங்கியிருந்த ‘வன்னி வேளாண்’ அலுவலகத்தில் காத்திருந்தேன்.


‘நிதர்சனம்’ பொறுப்பாளரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகப் பொறுப்பாளருமான சேரலாதன் மற்றும் கடல் புலிகள் பொறுப்பாளர்கள் சிலர் என்னை அழைத்துப் போக வந்திருந்தனர். புலிகளின் வாகனம் முல்லைத்தீவை நோக்கி சீறியது. துவக்குகளை சுமந்த போராளிகளுடன் நானும் பயணப்பட்டேன். முல்லைத்தீவு கடற்கரையில் மாலையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த மாவீரர்களுக்கான அந்த நிகழ்வில் பங்கேற்க கடல் புலிகளின் தளபதி சூசை அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்.அதற்காகத்தான் விரைந்தோம்.


முல்லைத்தீவு கடற்கரையில் மதிய உணவுக்காக மரத்தடி நிழல் ஒன்றில் எல்லோரும் ஒதுங்கினோம். கேணல் சேரலாதனுடன் துவக்கு ஏந்திய போராளிகள் உணவுப் பொட்டலங்களுடன் வந்தமர்ந்தனர். இறைச்சி உணவு தான். ஆமைக்கறி எல்லாம் இல்லை. சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே, ஒரு பெரியவர் நல்ல போதையுடன் எங்களருகே வந்து, “என்னடா தம்பி இந்த துவக்கு வெடிக்குமா?” “எத்தன ஆமிக்காரன சுட்டிருக்க?” என சீண்டினார். போராளிகள் அதிக பொறுமையுடன் கடந்து வந்து வாகனத்தில் ஏறினர். நானும் ஏறினேன். அப்போதும் வாகனத்தை பின்தொடர்ந்து வந்து போராளிகளை சீண்டினார் அந்த போதை மனிதர்.

எனக்கே பயங்கர கோபம் வந்து, “என்ன இப்படி கிண்டலடிக்கிறார்.. அமைதியாக வர்றீங்க.. ஒரு அறை கொடுக்க வேண்டியது தானே?” என கோபத்துடன் கேட்டேன். அப்போது, “இந்த துவக்கு சிங்கள ஆமிய சுடுறதுக்கு தான் பயன்படுத்தனுமே தவிர, அப்பாவிகளை அச்சுறுத்த தொடக்கூடாது என்று உறுதி அளித்து தான் எங்களிடம் இந்த துவக்குகளை கையளித்தார் தலைவர்” என போராளிகள் பதில் அளித்தனர்.


விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு தாக்குதலும் ராணுவ நிலைகளின் மீது தான் இருந்ததே தவிர அப்பாவி சிங்கள மக்கள் மீதல்ல. 2001 ஆண்டு உலகமே அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்த கொழும்பு-கட்டுநாயக விமானத் தாக்குதலாக இருக்கட்டும், இறுதியாக 2008 ஆம் ஆண்டு நடைப்பெற்ற விடுதலைப்புலிகளின் வான் புலிகள் தாக்குதலாக இருக்குட்டும்  எல்லாமே சிங்கள ராணுவ நிலைகளை குறிவைத்தே தொடுக்கப்பட்டதாகும். ஆனால், தமிழ்நாட்டில் ஓர் அரசியல் கட்சியின் தலைவராக செயல்பட்டு வரும் சீமான், ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், “ என்னிடம் பிரபாகரன் கொடுத்த வெடிகுண்டு இருக்கு. உன்னிடம் இருக்கும் பெரியாரின் வெங்காயத்தை வீசு, நான் வெடிகுண்டை வீசுகிறேன். என்ன்வாகும்? புல்,பூண்டு கூட இருக்காது” என வன்முறையை தூண்டும் விதமாக பேசியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் எந்த ஆயுதமும் அப்பாவி மக்கள் மீது பயன்படுத்தக்கூடாது என்பது தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பேதகு பிரபாகரன் அவர்களின் நிலைப்பாடு. இதுவரை அப்படித்தான் செயல்பட்டு வந்துள்ளனர். ஆனால் சீமானோ விடுதலைப்புலிகளின் வெடிகுண்டை பெரியாரியவாதிகள் மீது வீசுவதாக சொல்வது, மேதகு பிரபாகரன் கொள்கைக்கும் நிலைப்பாட்டுக்கும் எதிரானது இல்லையா?

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் ஆதரவும், தமிழீழ விடுதலைக்கான ஆதரவும் இன்னமும் இளைஞர்களிடையே நீறுபூத்த நெருப்பாக இருப்பதற்கு காரணம் திராவிட இயக்கங்களும், திராவிட கருத்தியலை சுமந்து களமாடும் விடுதலைச்சிறுத்தைகள்  போன்ற இயக்கத்தினராலும் தான்.

2002ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் தான் வைகோ, பழ.நெடுமாறன், சுபவீ, கொளத்தூர் மணி, சாகுல் அமீது போன்ற விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் ‘பொடா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதே காலகட்டத்தில் தான் நக்கீரன் ஆசிரியர் கோபால் ‘பொடா’ சட்டத்தில் சிறைபடுத்தப்பட்டார். இந்த தலைவர்கள் அமைத்து கொடுத்த மேடையேறியதால் தான் எந்தவித களச்செயல்பாடும் இல்லாத சீமான் எனும் நபர் உலகுக்கு அறிமுகமானார். இப்படி விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை வேட்டையாடிய ஜெயலலிதாவை ஆதரித்து “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டவர் தான் சீமான்.


திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றாக அரசியல் செய்வதாக சொல்லி வந்தாலும், முழுக்க முழுக்க திமுக எதிர்ப்பும், கருணாநிதி வெறுப்புமே இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு உச்சகட்டமாக தந்தை பெரியார் வெறுப்பை உமிழ்ந்து வருகிறார்.

தந்தை பெரியாரின் அரசியல் என்பது முழுக்க தமிழ் - தமிழர் - தனித்தமிழ்நாடு என அமைந்தது. பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை உடைக்க திராவிட அரசியலை கூர்மைப்படுத்தினார். ஆரியத்தின் பகையை வீழ்த்த திராவிடத்தை ஆயுதமாகவும் கேடயமாகவும் முன்னிறுத்தினார். திராவிடத்தையும் தந்தை பெரியாரையும் வீழ்த்த பல வழிகளில் ஆரியம் பல பத்தாண்டுகளாக முயற்சித்தது. அத்தனையும் தோற்றுப் போனது. இப்போது சீமானை தூண்டி முயற்சிக்கிறது.

ஆரியமா? திராவிடமா? எனும் இனப்போரை மடை மாற்றி திராவிடமா? தமிழ்த்தேசியமா? என தமிழர்களுக்குள்ளேயே வன்முறையை நடத்த RSS போன்ற வலதுசாரிகள் தூண்டிவிட்டதன் விளைவு பெரியாரிய - திராவிட வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வருகிறார் சீமான்.


பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது முதல் இந்தியாவின் அடையாளமான மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சனநாயகம் மற்றும் தேசிய இனங்களின் அடையாளங்களை அழித்தொழிக்கவே முயற்சித்து வருகிறது. இந்துத்துவத்தின் முகமான சாவர்க்கர் போன்றோரின் இலக்கு இந்து ராஷ்டிரம் தான். இந்து ராஷ்டிரத்திற்க்கு தடையாக இருப்பது மதச்சார்பின்மையும் தேசிய இனங்களின் எழுச்சியும் தான். ஆகவே தான் பாஜக மதச்சார்பின்மை கோட்பாட்டை அழித்துவிட்டு மதவழி தேசியத்தை நிறுவ முயலுகிறது. மதவழி என்பது இந்து தேசியம் தான். இந்து தேசியத்திற்கு தடையாக இருப்பது இந்தியாவின் தேசிய இனங்களின் அடையாளமும், அதன் அரசியல் எழுச்சியும் தான்.

காஷ்மீரிகளின் தேசிய இன அடையாளத்தையும் அதன் எழுச்சியையும் சிதைக்கும் உத்தியே 370 ரத்தாகும். அதே போல, வடகிழக்கு மாநிலங்களின் தேசிய இன எழுச்சியை ராணுவத்தின் மூலம் ஒடுக்கி மத அரசியலை முன்னெடுத்து வருகிறது பாஜக. இந்தியா முழுக்க தேசிய இனங்களின் அடையாளங்களை அழித்துவிட்டு இந்து தேசியத்தை கட்டமைக்கும் முயற்சியில் பாஜக உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகள் முன்னெடுப்பதை தடுக்கும் விதமாக அந்தந்த மாநிலங்களில், மாநில உரிமைகளை பேசக்கூடிய அமைப்புகள், கட்சிகள் தீவிரமாகிக்கொண்டு இருக்கின்றன.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் தேசிய இனத்தின் அடையாளமான 'தமிழர்' உரிமைகளை காத்து வந்துள்ளன. இத்தகைய அரசியல் வலிமையை அழித்தொழிக்க பாஜக போன்ற இந்துத்துவ அமைப்புகள், தமிழ்த்தேசியத்தின் பெயரில் நாம் தமிழர் கட்சியை உருவாக்கியது. வடக்கே ராமரை வைத்து அரசியல் செய்து வெற்றி பெற்றது போல, தமிழ்நாட்டில் முப்பாட்டன் முருகன் என முன்னிறுத்தி மதவாத அரசியல் செய்ய செயல் திட்டம் வகுக்கப்பட்டது.
அதன்படி தான் இன்றைக்கு நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவதை பார்க்கலாம். சமீபத்தில் திருப்பரங்குன்றத்தில் பாஜக முன்னெடுக்கும் கந்தர் மலை அரசியலும் அதன் தொடர்ச்சியே!


தமிழ்த்தேசியத்தின் முதன்மை எதிரி இந்திய தேசியம் தான். தெலுங்கு தேசியமோ கன்னட தேசியமோ இருக்க முடியாது. ஆனால் சீமான் இந்திய தேசியத்தை எதிர்க்காமல் தெலுங்கு - கன்னட மக்களை எதிர்ப்பது பாஜகவின் மடைமாற்றும் உத்தி தான். இந்து - இந்தியத்தை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட போலி தமிழ்த்தேசிய அமைப்பு தான் நாம் தமிழர் கட்சி.

மேதகு பிரபாகரன் பவுத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராகவே சமரசமில்லாமல் களமாடி வந்தார். 'பவுத்த' சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக 'இந்து' அடையாளத்தை ஒருபோதும் முன்னிறுத்தியதில்லை. தமிழ்த்தேசிய அரசியலையே தீவிரப்படுத்தினார். இந்தியாவில் பால்தாக்கரே போன்ற இந்துத்துவவாதிகள் பிரபாகரனை இந்து என்று ஆதரித்தபோது கூட, தன்னை ஒரு போதும் இந்துத்துவ அரசியலோடு அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. ஆனால், மேதகு பிரபாகரன் பெயரை பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவ அரசியலை சீமான் முன்னெடுப்பது பிரபாகரனுக்கு செய்யக்கூடிய துரோகம் மட்டுமல்ல, தமிழ்த்தேசிய அரசியலுக்கு செய்யக்கூடிய துரோகமாகும்!


உண்மையான தமிழ்த்தேசியமென்பது சாதி ஒழிப்பை முன்னிறுத்துவதாகும். சாதி ஒழித்தல் ஒன்று நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று என தமிழ்த்தேசியத்திற்கு வழிகாட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ஆனால், சீமானோ குடிபெருமை எனும் பெயரில் சாதி ஆணவப்படுகொலைகளை ஆதரிப்பது எனும் சாதியவாத அரசியலை வளர்த்தெடுத்து வருகிறார். அதாவது, சாதியத்தையும் மதவாதத்தையும் இந்துத்துவத்தின் பெயரால் எப்படி பாஜக நிறுவனப்படுத்த முயலுகிறதோ, அதே உத்தியை தமிழ்த்தேசியத்தின் பெயரால் சீமான் நிறுவ முயலுகிறார்.

இது தமிழ்நாட்டில் ஓரு போதும் நடக்காது.

இளைஞர்களும் பெண்களும் சீமானிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

- வன்னி அரசு

நன்றி : நக்கீரன்
(12.02.25 தேதியிட்ட நக்கீரன் இதழில் இந்த கட்டுரை வெளியானது)