10 January 2026

திருப்பரங்குன்றம் தீபம் - நீதிபதிகளே அரசியலமைப்புச் சட்டத்தை மீறலாமா?

“தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று’

திருவிவிலியத்தில் வரும் இந்த வசனத்துடன் திச. 6 அன்று திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அளித்த தீர்ப்பு தொடங்குகிறது. இந்த தீர்ப்பு வெளிச்சத்தை தந்ததா அல்லது இருட்டுக்குள் நம்மை தள்ளுகிறதா என்பதை பார்ப்போம்.



படைப்பு, நம்பிக்கை மற்றும் இறை சக்தி ஆகியவற்றை குறிக்கும் வகையில் கடவுள் வெளிச்சத்தை குறிப்பிட்டுள்ளதாக நீதிபதிகள் சொல்லியுள்ளனர். ஆனால் அவர்கள் வழங்கிய தீர்ப்பு எந்தவித சான்றுகளும் இல்லாமல் இருட்டுக்குள் எழுதப்பட்டதாக அமைந்துள்ளது.

நூற்றாண்டு காலமாக அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தினரால் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால் மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்கா அருகே இருக்கும் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று ‘செட்டிங்’ வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் திச.1, 2025ல் தீர்ப்பளித்தார். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக, ஆதாரம் எதுவுமில்லாமல் வெறும் தனிநபர் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்ட அந்த தீர்ப்பை நியாயப்படுத்தும் முயற்சியாக தான் தற்போது நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு வழங்கிய தீர்ப்பு அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம் முதன்முறையாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தான் நீதிமன்றத்தில் வழக்காக பதிவானது. மதுரை முதல் கூடுதல் கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கில் (O.S.No.4 of 1920) 25.08.1923ல் தீர்ப்பு வெளியானது. ஆங்கிலேய நீதிபதி அளித்த உத்தரவின் பகுதிகளை மேற்கோள் காட்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு முக்கிய நிகழ்வுகளை தங்கள் தீர்ப்பின் பத்தி 21ல் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்.

1.1908ல் ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலைக்கும் தங்களுக்கு இனாம் வழங்கும்படி தர்கா தரப்பினர் விடுத்த கோரிக்கையை பிரிட்டிஷ் அரசு மறுத்துவிட்டது
2. 1862 மற்றும் 1912 ஆகிய ஆண்டுகளில் மலை உச்சியில் தர்கா அமைந்துள்ள பகுதியில் தீபம் ஏற்றும் இந்துக்களின் முயற்சியை மேஜிஸ்டிரேட் தடுத்து நிறுத்தியுள்ளார். அந்த இடத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம் (customary) அல்ல என்பதாலும், அமைதி சீர்குலைய வாய்ப்புள்ளதாலும் மேஜிஸ்டிரேட் தடுத்துள்ளார்.

நீதிமன்றத்தின் முன் உள்ள ஆவணங்களின்படி சுமார் 160 ஆண்டுகளாக மலை உச்சியில் தர்கா அருகே தீபமேற்றும் நடைமுறை (custom) இல்லை என்பது தெளிவாகிறது.

நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு தீர்ப்பின் பக்கம் 128 பத்தி 101 சொல்வது- ‘தமிழ் மாதமான கார்த்திகையின் முழுநிலவு நாளில் மலையின் மீது தீபமேற்றுவது என்பது தமிழ் கலாச்சாரத்தின் அங்கமான ஒரு சமய நடைமுறை. மாநிலம் முழுக்க இந்த கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது. எனவே அடிப்படை உரிமையை காக்கும் பொருட்டு சமய வழக்கத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் இந்த ரிட் மனுக்கள் விசாரணைக்கு ஏற்கத்தக்கது என்று அறிவிக்கின்றனர்.

சுவாமிநாதனின் தீர்ப்பை உறுதிசெய்த நீதிபதி ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு தீர்ப்பு

பக்கம் 124 பத்தி 94(c)ல் ’இப்போது நாம் எதிர்கொண்டுள்ள சிக்கலானது, சட்டம் குறித்த கேள்விகள், நம்பிக்கை மற்றும் வழக்கங்கள் ஆகியவற்றுடன் பின்னிப்பிணைந்துள்ளது’ என்று நீதிமன்றம் குறிப்பிடுகிறது.

இதே போன்ற கருத்து தான் பக்கம் 132 பத்தி 106லும் சொல்லப்பட்டுள்ளது. ‘இந்த விவகாரமானது வெறும் வழக்கத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பானது மட்டுமல்ல. சமயம் மற்றும் சுதந்திரம் தொடர்பான அடிப்படை உரிமையை நடைமுறைப்படுத்துவது தொடர்பானது’

நூற்றாண்டுக்கும் மேலாக திருப்பரங்குன்றம் மலையின் உச்சிபிள்ளையார் கோவிலில் அமைந்துள்ள தீபத்தூணில், ஒவ்வொரு கார்த்திகை மாதத்திலும் ’கார்த்திகை தீபம்’ ஏற்றப்பட்டு, இந்து சமய நம்பிக்கை கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் எந்தவித தடையோ இடையூறோ இல்லாமல் வழிபாடு செய்து வருகின்றனர்.

காலங்காலமாக திருப்பரங்குன்றம் கோவில் தரப்பாலும், உள்ளூர் மக்களாலும் பின்பற்றப்படும் சமய நம்பிக்கையும் வழக்கமும் யாருடையது? மலை உச்சியில் உள்ள தர்கா அருகில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்பது தான் சமய நம்பிக்கையா? அத்தகைய வழக்கம் முன்னர் இருந்தது என்பதற்கான வரலாற்று சான்றுகள் ஏதாவது உள்ளதா? நீதிமன்றம் சொல்லும் அந்த சமய வழக்கம் என்ன? இதனால் யாருடைய அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது?

காலங்காலமாக திருப்பரங்குன்றத்தில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம்

சனாதன கலவர கும்பலால் அதிகம் மேற்கோள் காட்டப்படும் 1994 வழக்கு பின்னணி என்னவென்று பார்ப்போம்..

திருப்பரங்குன்றத்தை பூர்விகமாக கொண்ட இந்து பக்த ஜன சபை எனும் அமைப்பின் தலைவராக இருந்த திரு.வி.தியாகராஜன் என்பவர் 1994ஆம் ஆண்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்கிறார். அதில் திருப்பரங்குன்றம் மலையில் பாரம்பரியமாக கோவில் நிர்வாகத்தால் தீபம் ஏற்றப்படும் இடத்தை (உச்சி பிள்ளையார் கோவில் தீபத்தூண்) தவிர்த்து வேறு இடத்தில் தீபம் ஏற்ற முயற்சிக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கு தடை விதிக்க வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கை.

இந்த வழக்கு இரண்டு ஆண்டுகள் விசாரிக்கப்பட்டு 21.11.1996ல் தீர்ப்பளிக்கப்படுகிறது. அதில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் உரிமை கோவில் தேவஸ்தானத்துக்கு மட்டுமே உள்ளது என்றும், குறிப்பாக உச்சி பிள்ளையார் கோவிலில் 1996ல் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் பக்தர்களின் விருப்பத்தை ஏற்று மலையின் வேறு பகுதியில் தீபம் ஏற்றுவதற்கு கோவில் நிர்வாகம் முன்வந்தாலோ அல்லது தனி நபருக்கு அனுமதி அளித்தாலோ, அதற்கு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் 1959 கீழ் வரும் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று, விளக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 1994 வழக்கை மேற்கோள் காட்டி மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையோடு 2014ல் அகில பாரத இந்து மகா சபாவை சேர்ந்த கணேசனும், வி.சுப்ரமணியம் என்பவரும் இரண்டு வழக்குகள் தொடுக்கின்றனர். இரு வழக்குகளையும் தனி நீதிபதி வேணுகோபால் தள்ளுபடி செய்கிறார். கணேசனின் மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் சுந்தரேஷ், சதிஷ்குமார் அமர்வும், சுப்ரமணியத்தின் வழக்கை நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வும் 2017ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்கின்றனர்.

திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்கா

இப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சட்டவியல் கோட்பாடு ’Res Judicata’. அதாவது, ஒரு நீதிமன்றத்தால் விசாரித்து முடித்து வைக்கப்பட்ட விவகாரத்தை மீண்டும் அதே அதிகாரம் கொண்ட வேறொரு நீதிமன்றத்தால் விசாரிக்க முடியாது என்று பொருள்படும் சட்டவியல் தான் ’Res Judicata’

மலையில் தீபமேற்றும் விவகாரத்தில் 2017ஆம் ஆண்டு வெவ்வேறு இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புகளை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் மீண்டு மனுக்களை விசாரித்தது தவறு என்ற வாதத்தை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் அமர்வு ஏற்க மறுத்து பக்கம் 144 பத்தி 121ல் அதனை நியாயப்படுத்துகின்றனர். ரிட் மனுக்களுக்கும் ’Res Judicata கோட்பாடு பொருந்தும் என்று சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் சொல்லியிருந்தாலும் கூட, பொதுநலனில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் அத்தகைய வாதம் பொருந்தாது என்று வாதிடுகின்றனர்.

கரூர் நெரூர் சமாதி வழக்கில், பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பார்பனர் அல்லாதவர்கல் உருளுவதற்கு அனுமதி கோரிய சனாதன கும்பல் தொடுத்த வழக்கில் 2015ஆம் ஆண்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எஸ்.வேலுமணி அமர்வு தடை விதித்தது. இதே போன்றதொரு கர்நாடக வழக்கில் 2014ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை நீதிபதிகள் மேற்கோள்காட்டினர்.

10 ஆண்டுகள் காத்திருந்த அந்த சனாதன கும்பல், மீண்டும் அதே கோரிக்கைகாக ’செட்டிங்’ வழக்கு போடுகின்றனர். அது நேராக சுவாமிநாதனிடம் செல்கிறது. ’எச்சில் இலையில் உருளுவது தனி நபர் உரிமை - மத நம்பிக்கை’ என்று பஜனை நடத்தி, எச்சில் இலையில் உருளுவதற்கு 2024ஆம் ஆண்டு அனுமதியும் அளித்தார் சுவாமிநாதன். சுயமரியாதைக்கு எதிரான அவலமான நிகழ்வு அரங்கேறியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறை செய்தது.

கரூர் நெரூர் கோவிலின் எச்சில் இலை உருளும் நிகழ்வு

மேல்முறையீட்டை விசாரித்த இருநீதிபதிகள் அமர்வு மார்.13, 2025ல் அளித்த தீர்ப்பில் சுவாமிநாதன் உத்தரவுக்கு தடை விதித்ததுடன். பின்வரும் கருத்துகளை தமது தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர்..

’இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை செல்லாது என்று தனி நீதிபதி அறிவிக்க முடியாது. இந்த நீதித்துறை ஒழுக்கத்தை மிகவும் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களுக்கு நீதித்துறை ஒழுங்கு மீது சந்தேகம் உருவாகும். இரு நீதிபதிகள் தீர்ப்பு செல்லாது என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பு, சட்டத்துக்கு புறம்பானது, நியாயம் கற்பிக்க முடியாதது என்று சொல்வதில் எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை. எனவே தனி நீதிபதி தீர்ப்பு செல்லாது’

சுவாமிநாதனின் ஒழுங்கீனமான தீர்ப்புக்கு தடை விதித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு

ஆக, கரூர் நெரூர் வழக்கில் நீதித்துறை ஒழுங்குக்கு எதிராக சட்டவிரோதமாகவும், ஒழுங்கீனமாகவும் செயல்பட்டவர் தான் சுவாமிநாதன். அதே போன்றதொரு செட்டிங் வழக்கு தான் திருப்பரங்குன்றம் வழக்கு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வோ, சுவாமிநாதனின் நீதித்துறை ஒழுங்கீனத்துக்கு வக்காலத்து வாங்கி, அதனை ஆதரித்துள்ளனர்.

பார்ப்பனர்கள் கட்டுப்படுத்தும் கோவில்களில் பெரும்பான்மை இந்துக்களான OBC, SC & ST சமூகங்களின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு சமூகநீதியை நடைமுறைப்படுத்திட முனைந்தால், ஆகம விதிகள் என்று கூப்பாடு போட்டு தடை போடுகின்றன நீதிமன்றங்கள். ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் நியமிப்பதற்கு இன்றும் தடை உள்ளது. ஆனால் திருப்பரங்குன்றத்தில் உச்சிபிள்ளையார் கோவிலில் தீபமேற்றுவது தான் ஆகமசாஸ்திரம் சொல்லும் விதி என்று கோவில் நிர்வாகமே சொன்னாலும் அதனை ஏற்க மறுத்துவிட்டது நீதிமன்றம். தர்கா அருகிலுள்ள தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று எந்த சமய விதி சொல்கிறது என்று நாம் கேட்டால், அது காலங்காலமாக பின்பற்றப்படும் வழக்கம், கலாச்சாரம் என்று கதைகட்டுகின்றனர். மேலும், அது தீபத்தூண் தான் என்பதையே இன்னும் ஆய்வு நடத்தி நிரூபிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

சுவாமிநாதனால் சிறுமைப்படுத்தப்பட்ட நீதித்துறையின் மாண்பை மீட்கும் வாய்ப்பை தவறவிட்டு, அதனை மேலும் சிறுமைப்படுத்தியுள்ளது நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு என்று தான் சொல்ல வேண்டும். இத்தகைய தீர்ப்புகளினால், 1959 தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் தான் மிகப்பெரிய ஆபத்தை எதிர்காலத்தில் சந்திக்கும் என்ற நிலை வந்துள்ளது. தமிழ்நாட்டின் திராவிட அரசியலின் விளைச்சலால் சமூகநீதியை உறுதியாக காத்து, பார்ப்பனிய சுரண்டலையும், ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்தி வரும் இந்து சமய அறநிலையத்துறையை வலுவிழக்க செய்யும் சனாதன வன்முறை கும்பலின் முயற்சியாகவும் இதனை பார்க்கலாம்.


ஒளி என்பது சிவனின் வடிவம் என்று திருமூலர் சொல்கிறார். எனவே பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மலை உச்சியில் தீபம் ஏற்றும் வழக்கமும், அதற்குரிய வாய்ப்பும் கோவில் நிர்வாகத்துக்கு இருக்கும்போது அதனை மறுப்பதற்கு காரணம் எதுவும் இல்லை என்று பக்கம் 163 பத்தி 140 (h)ல் சொல்லப்படுகிறது.

ஒளி என்பது கடவுளின் வடிவம் என்பது குறித்து இந்து சமயத்தவர்கள் இடையே கூட முரண்பாடு இருக்கலாம். ஆனால் அந்த மலையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதற்கு என்ன ஆதாரம்? தீபம் ஏற்ற கோருவதற்கு உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? என்று தானே நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்க வேண்டும். கலவர கும்பலின் நோக்கத்தை அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது நீதிமன்றம்.

170 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில், பக்கம் 165 பத்தி 140 (k)ல் தங்கள் வழிகாட்டுதல்களை சரியாக நடைமுறைப்படுத்தினால், ’..there will be only light and not any fight’ என்கிறது நீதிமன்றம்.

நாம் அவர்களுக்கு சொல்ல விரும்புவது.. ‘Courts have lost constitutional sight’

- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
8.1.2026