04 September 2025
புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கூறுகளில் ஒன்றான மதச்சார்பின்மையை நீர்த்து போகச்செய்யும் ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவார் கும்பலின் தொடர் முயற்சிகளில் ஒன்றாக குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது மோடி அரசு.
கடந்த 2019 திசம்பரில் குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில், இஸ்லாமியர்களின் பங்கேற்புடன் சனநாயக சக்திகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். தில்லி ஷாஹீன் பாக் போராட்டக் களம் நாடெங்கும் எதிரொலித்தது. அரசின் அடக்குமுறை - ஊடக இருட்டடிப்பு, இஸ்லாமிய வெறுப்பு பரப்புரை என அனைத்தையும் இஸ்லாமிய பெண்கள் துணிவுடன் எதிர்கொண்டனர்.
டெல்லி கலவரமும் எப்.ஐ.ஆர். எண் 59 ம்
தலைநகர் தில்லியில் பல இடங்களில் மிக வீரியமாக நடைபெற்றவந்த போராட்டத்தில், அரசின் ஆதரவோடு வன்முறையை அரங்கேற்றி சங்க பரிவார கும்பல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு பிப். 22 -24 ஆகிய நாட்களில் இஸ்லாமியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள் தாக்கப்பட்டன, அவர்களின் வீடுகள், வணிக வளாகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்ட பின்னணியில் அரங்கேறிய வன்முறை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் வழக்கு தான் எப்.ஐ.ஆர். 59/2020.
கடந்த 2020 பிப்ரவரியில் தில்லியில் வன்முறை நடைபெற்ற காலகட்டத்தில் 24மற்றும் 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். 2019 திசம்பரிலிருந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வந்தாலும், ட்ரம்பின் வருகையையொட்டி பெருமளவு வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற போராட்டக்காரர்கள் திட்டமிட்டதாகவும், அதற்காக பல மாதங்களாக சதி ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், இதன் விளைவாக தான் தில்லி கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மதரீதியாக நாட்டை துண்டாடும் திட்டமும் இருந்ததாக அரசு சொல்லியது.
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவ செயற்பாட்டாளர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் ஆகிய இருவரை தில்லி கலவரத்துக்கு மூளையாக செயல்பட்டதாக எப்.ஐ.ஆர். 59 குற்றஞ்சாட்டுகிறது. இந்த இருவருடன் சேர்த்து இந்த வழக்கில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என மொத்தம் 18 பேர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
1. தாஹிர் உசேன், 2. உமர் காலித், 3. காலித் சைஃபி, 4. இஷ்ராத் ஜெஹான், 5. மீரான் ஹைதர், 6. குல்ஃபிஷா ஃபாத்திமா, 7. ஷர்ஜீல் இமாம், 8. ஃபைசான் கான், 9. ஷடாப் அஹமத், 10. தஸ்லீம் அஹமத், 11. சலீம் மாலிக், 12. முகமது சலீம் கான், 13. அதார் கான், 14. சஃபூரா சார்கார், 15. ஷிஃபா-உர்- ரஹ்மான், 16. ஆசிஃப் இக்பால் தன்ஹா, 17. நடாஷா நர்வால், 18. தேவங்கனா கலிடா ஆகியோரை கைது செய்து சிறைப்படுத்தியது.
சாலையோர கடையில் மொபைல் சிம் விற்று வந்த ஃபைசான் கான் என்பவருக்கு 2020ஆம் ஆண்டும், பிஞ்சரா டோட் (கூண்டினை உடைத்தெறிவோம்) எனும் கல்லூரி மாணவிகள் அமைப்பை சேர்ந்த நடாஷா நர்வால் மற்றும் தேவங்கனா கலிடா ஆகியோருக்கு 2021ஆம் ஆண்டும் டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது. மேலும் ஜாமியா மிலியா பல்கலை மாணவர்களான இக்பால் தன்ஹா, சஃபூரா சர்கார் (கைது செய்யப்படும்போது 3 மாத கர்ப்பிணி), வழக்கறிஞர் இஷ்ராத் ஜெஹான் ஆகியோரும் வழக்கின் தன்மையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது.
எப்.ஐ.ஆர். 59 வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரில் 6 பேருக்கு 2 ஆண்டுகளிலேயே பிணை கிடைத்தும், மீதமுள்ள 12 பேரும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை வழக்கு விசாரணை தொடங்கப்படவில்லை.
உமர் காலித்தின் சட்டப்போராட்டம்
இந்திய நீதித்துறையின் தற்போதைய பரிதாபகர நிலைக்கான சாட்சியாக மாணவ செயற்பாட்டாளர் உமர் காலித் பிணை வழக்கு அமைந்துள்ளது. முதல் பிணை மனுவை விசாரணை நீதிமன்றம் 2022ல் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு பிணை மனு மீதான விசாரணை கிட்டத்தட்ட 14 மாதங்களில் 14 முறை ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில்
உமர் காலித்தின் பிணை மனுவை விசாரித்தவர் நீதிபதி பெலா திரிவேதி. இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வாகும் முன்னர், குஜராத் முதல்வராக மோடி இருந்த காலகட்டத்தில் அம்மாநில அரசின் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பீமா கொரேகான் வழக்கில் மகேஷ் ராவத் எனும் செயற்பாட்டாளருக்கு மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய பிணையை நிறுத்தி வைத்தவர் நீதிபதி பெலா. பிணை கிடைத்தும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார் ராவத். அதே போல, பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தவர் நீதிபதி பெலா. ஆனால் மறுவிசாரணையில் மீண்டும் அவரை விடுவித்தது மும்பை உயர்நீதிமன்றம். தீர்ப்பு வந்த 7 மாதங்களில் இறந்தே போனார் சாய்பாபா. இதே நீதிபதி தான், டெல்லி உயர்நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள தங்கள் பிணை மனுவை விரைந்து விசாரிக்க கோரிய ஷர்ஜீல் இமாம் மற்றும் குல்ஃபிஷா ஃபாத்திமா ஆகியோரின் மனுவை தள்ளுபடி செய்தவர்.
’All The Appeals Are Dismissed’
எப்.ஐ.ஆர். 59ன் கீழ் சிறைவைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு காலகட்டங்களில் விசாரணை நீதிமன்றத்தால் பிணை மறுக்கப்பட்டு, தில்லி உயர்நிதீமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கின் தொடக்க காலகட்டத்திலேயே 6 பேர் வழக்கின் தரவுகள் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், சிறையில் உள்ள 12 பேரில் 9 பேரின் பிணை மனுவை ஒன்றாக விசாரித்தது தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஷாலிந்தர் கவுர் மற்றும் நவீன் சாவ்லா அமர்வு இந்த 9 பேரின் பிணை மனுக்கள் மீதான விசாரணை பல கட்ட இழுபறிக்கு பின்னர் முடிக்கப்பட்டு கடந்த ஜூலை 9ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி ஷாலிந்தர் கவுர் எழுதிய தீர்ப்பு செப். 2ஆம் தேதி வெளியானது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட சில நொடிகளிலேயே ’All The Appeals Are Dismissed’ என்று அறிவித்தார் நீதிபதி ஷாலிந்தர். பிணை கோரி தாக்கல் செய்த 9 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். அன்று மாலை 133 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு நகல் வெளியானது.
‘Bail is the rule; Jail is the exception’ - ’பிணை என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு’ - இது தான் உச்சநீதிமன்றத்தில் நாம் அடிக்கடி கேட்கக்கூடிய வரி. பீமா கொரேகான் வழக்கில் பிணை வழங்கப்பட்ட அருண் பெரேரா, வெர்னான் கான்சல்வேஸ் மற்றும் சோமா சென் ஆகியோரது #ஊபா வழக்கிலும், தில்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை வழக்கிலும் தனிநபர் சுதந்திரத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது உச்சநீதிமன்றம்.
ஆனால் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்ஃபிஷா ஃபாத்திமா போன்ற தோழர்களுக்கு ஆதரவாக மேலே குறிப்பிட்டுள்ள வழக்குகளின் தீர்ப்புகளை வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியும், அவற்றை ஏற்க மறுத்துள்ளது உயர்நீதிமன்றம். மேலும், இதே வழக்கில் கைது செய்யப்பட்டு 2021ஆம் ஆண்டிலேயே மூவருக்கு பிணை வழங்கப்பட்டதன் அடிப்படையை இவர்களின் பிணை மனுவுக்கு பொருத்திப்பார்க்க முடியாது என்று சொல்லியுள்ளது நீதிமன்றம்.
அதுமட்டுமில்லாமல் ’3000க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை, 30 ஆயிரத்துக்கும் அதிகமான மின்னணு ஆதாரங்கள், நூற்றுக்கணக்கான சாட்சிகள் என இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு மேலும் சில ஆண்டுகள் ஆகக்கூடும். ஏற்கனவே விசாரணை எதுவும் தொடங்கப்படாமல் 5 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்’ என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதத்தை நிராகரித்தது மட்டுமில்லாமல், இத்தகைய பெரிய வழக்கை விசாரணை அமைப்புகள் சிறப்பாக கையாண்டுள்ளதாகவும், வழக்கு அதன் இயல்பான போக்கில் (‘Natural Pace’) நடைபெறுவதாக நீதிபதி தீர்ப்பில் விளக்கமளித்துள்ளார்.
தில்லி கலவரம் நடைபெற்று 5 ஆண்டுகள் கடந்துவிட்டன. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், இன்னும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நிலையில் தான் வழக்கு உள்ளது. வழக்கு விசாரணை தொடங்கப்படாமல் வெறும் விசாரணை கைதிகளாகவே 5 ஆண்டுகளை கடந்து சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பிணை மனுக்கள் 3 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் காத்துக் கொண்டிருந்தன. ஆனால் இதை தான் ‘இயல்பான போக்கு’ என்கிறது தில்லி உயர்நீதிமன்றம். உமர் காலித் போன்றவர்களுக்கு மட்டும் சிறை தான் விதி - பிணை என்பது விதிவிலக்கு என்று சொல்கிறது நீதிமன்றம்.
மனிதர்களை அச்சுறுத்தும் நாய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை மறுவிசாரணை செய்ய அடுத்த சில நாட்களில் சிறப்பு அமர்வு அமைத்து, அந்த தீர்ப்பை நிறுத்திவைக்கும் நீதித்துறையை கொண்டது இந்நாடு. இங்கே தான் அரசியலமைப்பை பாதுகாப்பதற்காக போராடியதால் கைது செய்யப்பட்ட இந்நாட்டின் குடிமக்கள், பிணை எதுவும் இல்லாமல் 5 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டுள்ள அவலமும் அரங்கேறி வருகிறது.
![]() |
டெல்லி கலவரத்தை தூண்டிய பாஜக தலைவர்கள் |
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, ‘துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்’ என்று பொதுக்கூட்டத்தில் பேசிய அனுராக் தாகூர் அப்போது நிதியமைச்சகத்தில் இணை அமைச்சர், அடுத்து அமைந்த ஆட்சியில் தகவல் தொடர்பு அமைச்சர் பதவி அவருக்கு கொடுக்கப்பட்டது. அதே போல, ‘போராட்டக்காரர்களை காவல்துறை விரட்டவில்லை என்றால், நாங்களே தெருவில் இறங்குவோம்’ என்று தில்லி வன்முறைக்கு சில மணிநேரம் முன்பு வன்முறைக்கு தூண்டிய கபில் மிஸ்ரா தான் இப்போது தில்லி பாஜக அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர். கலவரக்காரர்களான மோடி - அமித்ஷா ஆகியோர் தலைமை வகிக்கும் ஆட்சியில் புனிதர்களா இருப்பார்கள்? கலவரக்காரர்கள் ஆட்சியில், சனநாயகவாதிகள் சிறைக் கொட்டடியில்.
பாசிச பாஜக அரசின் கூலிப்படையாக எதிர்க்கட்சியினரை குறிவைக்கும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சனநாயக சக்திகளை வேட்டையாடும் விசாரணை அமைப்புகளான சிபிஐ, என்.ஐ.ஏ., குடிமக்களின் வாக்குரிமையை திருடும் தேர்தல் ஆணையம் என இந்த பட்டியலில் நீதிமன்றங்களும் அதன் நீதிபதிகளும் தங்களை இணைந்துக் கொண்டுள்ளனர்.
காவி பாசிசத்திடம் தொலைத்த முதுகெலும்பை கண்டெடுக்குமா நீதித்துறை?காவி பாசிசத்திடமிருந்து சனநாயகத்தை பாதுகாப்பது ஒவ்வொரு சனநாயகவாதிகளின் கடமை. அந்த வகையில், உமர்காலித் உள்ளிட்ட 9 பேரையும் மீட்டெடுக்க மக்கள் மன்றத்தையும் தீவிரப்படுத்துவோம்!
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
4.9.2025
23 July 2025
கடந்த 2006, ஜூலை 11ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு 7 மும்பை புறநகர் ரயில்களின் முதல்நிலை பெட்டிகளில் 7 குண்டுகள் வெடித்தன. இதில் 187 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர், 824 பேர் காயமடைந்தனர். மொத்தம் 13 பேர் மீது ‘தீவிரவாத தடுப்புக் குழு’ (ATS) குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. மேலும், 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாவும், 2 பேர் இறந்துவிட்டதாகவும் அறிவித்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015, செப். 30ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேரில் 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.
![]() |
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியிருந்த அப்பாவிகள் |
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள்:
1. கமல் அன்சாரி
2. முகமது ஃபைசல்
3. குத்புத்தின் சித்திக்
4. நவீத் உசேன்
5. ஆசிப் கான்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்:
1. தன்வீர் அகமது
2. முகமது மஜீத்
3. ஷேக் முகமது
4. முகமது சஜீத்
5. முசாமில் ரகுமான் ஷேக்
6. சுஹைல் மெகமூத்
7. சமீர் அகமது
விடுதலை செய்யப்பட்டவர்: அப்துல் வாஹித் ஷேக்
தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்கு மும்பை உயர்நீதிமன்றத்தை மராட்டிய அரசு அணுகியது. தண்டனை விதிக்கப்பட்ட தோழர்களும் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். மிகவும் எளிய பின்னணியை சேர்ந்த இவர்களால் வழக்கை மேற்கொண்டு நடத்த முடியாத சூழலில், நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட ஜாமியத் உலாமா-இ-இந்த் அமைப்பினர் இவர்களின் மேல்முறையீட்டு வழக்கை எடுத்து நடத்துவதற்கு முன்வந்தனர்.
மராட்டிய அரசால் மேல்முறையீட்டு வழக்கு மிகவும் தாமதமாக நடத்தப்பட்டு வந்ததால், வழக்கை விரைந்து நடத்த இஸ்லாமியர்கள் தரப்பு 2024ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தை அணுகியது. இதனால் நீதிபதிகள் அணில் கிலோர் & சந்தக் ஆகியோரை கொண்ட சிறப்பு விசாரணை அமர்வு அமைக்கப்பட்டு தொடர்ந்து 7 மாதங்கள் விசாரணை நடந்தது. இவ்வாண்டு சனவரியில் இறுதி தீர்ப்பு வழங்குவதற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
![]() |
உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதிகள் அணில் கிலோர் & சந்தக் |
கடந்த 2006ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2015ல் குற்றவாளிகளாக தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட 13 பேரும் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது ஒருவர் கோவிட் தொற்றால் 2021ஆம் ஆண்டில் மறைந்தார். மீதமுள்ள 12 பேரும் மராட்டிய மாநிலத்தில் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 22.7.2025 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த 19 ஆண்டுகளில் ஒரு முறைகூட இந்த 12 பேருக்கு பிணை வழங்கப்படவில்லை என்பது தான் நெஞ்சை உலுக்கும் கொடுமை.
ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த தீர்ப்பு மொத்தம் 671 பக்கங்களை கொண்டுள்ளது. மிகவும் விரிவான தீர்ப்பை இரண்டு நீதிபதிகளில் ஒருவரான அணில் கிலோர் எழுதியுள்ளார்.
இந்த வழக்கில் அப்பாவி இஸ்லாமியர்களுக்காக நாட்டின் முக்கியமான சட்ட ஆளுமைகளை அணுகியது ஜாமியத் உலாமா-இ-இந்த். வழக்கில் உள்ள அனைவரும் அப்பாவிகள், நடைபெற்ற தீவிரவாத சம்பவத்துக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாதவர்கள் என்பதை உறுதியாக நம்பிய வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.நாகமுத்து, ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்ற எஸ்.முரளிதர், நாடறிந்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன் ஆகிய மூன்று மூத்த வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டு சிறப்பு விசாரணை அமர்வில் ஆஜராகி வாதாடினர்.
![]() |
மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.நாகமுத்து, எஸ்.முரளிதர் & நித்யா ராமகிருஷ்ணன் |
நீதிபதி முரளிதருக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று கொலீஜியம் பரிந்துரைத்த பின்பும், அதனை ஏற்க மறுத்தது ஒன்றிய பாஜக அரசு. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவே கடந்த 2023ல் ஓய்வு பெற்றார் நீதிபதி முரளிதர். இவருக்கு பதவி உயர்வு வழங்காமல் மோடி அரசு பயந்ததற்கான காரணம் இப்போது புரிந்திருக்கும்.
முந்தைய ஒன்றிய காங்கிரஸ் ஆட்சியில், துணை ராணுவப்படையுடன் இணைந்து மாவோயிஸ்ட்கள் என்ற பெயரில் அப்பாவி பழங்குடிகளை வேட்டையாடிய ‘சல்வா ஜுடும்’ எனும் தன்னார்வ கூலிப்படைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கை நடத்தி, அதனை சட்டவிரோதம் என்று தீர்ப்பை பெற்றவர் வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன்.
விடுதலைக்கு வித்திட்ட வரலாற்று தீர்ப்பு!
குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து தண்டனை வழங்கிய சிறப்பு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள முரண்களையும், உரிய ஆதாரம் ஏதுமின்றி குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான மனநிலையில் விசாரணை அதிகாரிகள் செயல்பட்ட விதத்தையும் உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிப்படுத்தி உள்ளது.
காவல்நிலைய விசாரணையில் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, அழுத்தத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்ட அப்பாவிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் தான் ஒட்டுமொத்த குற்றத்தையும் அவர்கள் மீது சுமத்துவதற்கு அடிப்படை ஆதாரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களிடம் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை சமர்ப்பித்த RDX வெடிபொருள் தான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்படவே இல்லை. மேலும், குண்டுவெடிப்பில் என்ன வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது என்பது கூட காவல்துறை விசாரிக்கவில்லை. அரசு சார்பில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்சியங்கள் நம்பத்தகுந்ததாக இல்லை, அதிலும் சிலர் பல மாதங்கள் கழித்து சம்பவம் தொடர்பாக சாட்சி சொல்வதும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதும் சாத்தியமா? என்பது போன்ற அடுக்கடுக்கான சந்தேகங்களும் கேள்விகளும் தீர்ப்பில் உள்ளன.
இந்திய அரசால் பொய் குற்றச்சாட்டுகளின் பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமியர்களை மீட்கும் போராட்டத்தில் மேலும் ஒரு அழுத்தமான வெற்றியை பதிவு செய்துள்ளது ஜாமியத் உலாமா-இ-இந்த்.
யார் இந்த ஜாமியத் உலாமா-இ-இந்த்?
ஜாமியத் அமைப்பு இஸ்லாமிய அறிஞர்களின் அமைப்பு. இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து எண்ணற்ற இஸ்லாமிய அறிஞர்களை உயிர்கொடையாக கொடுத்தவர்கள். ஜின்னாவின் பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து, சுதந்திர இந்தியாவின் பக்கம் உறுதியாக நின்றவர்கள்.
![]() |
ஜாமியத்தின் சட்ட உதவிக் குழு |
இன்று அதே இந்திய நாட்டின் அரசால் தீவிரவாதிகள் என்று பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமியர்களின் விடுதலைக்காக சிறப்பு சட்ட உதவி குழுவை அமைத்து நீதிமன்றங்களில் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றான ‘ஜகாத்’ மூலம் நிதியுதவி பெற்று சட்ட உதவி வழங்குகிறது ஜாமியத். இதுவரை 192 அப்பாவி இஸ்லாமியர்களை குற்றமற்றவர்கள் என்று நிரூபித்து விடுவித்துள்ளது.
போராளி ஷாஹித் ஆஸ்மி!
வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி எனும் போராளியின் உயிர் தியாகம் தான் ஜாமியத்தின் சட்ட உதவிக்குழுவுக்கு விதையாக அமைந்தது. தீவிரவாத வழக்கு ஒன்றில் 7 வருடம் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷாஹித், சிறையிலிருந்தவாறே பள்ளிப் படிப்பை முடித்து இளநிலை பட்டத்தையும் பெற்றார். தாம் எதிர்கொண்ட அரச வன்முறையை ஊக்கமாக கொண்டு வழக்கறிஞரானார். தீவிரவாத வழக்குகளில் சிக்குண்ட அப்பாவி இஸ்லாமியர்களுக்கு வாதாடினார்.
![]() |
போராளி வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி |
‘தீவிரவாதிகளின் வழக்கறிஞர்’ என்று அழைக்கப்பட்ட ஷாஹித் ஆஸ்மி, கடந்த 2010ஆம் ஆண்டு தனது 32ஆம் வயதில் அவரது அலுவலகத்தில் வைத்தே சனாதனக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சாகிற வரை 17 பேரின் விடுதலைக்கு காரணமாக அமைந்தார். தனது பெயரான ‘ஷாஹித்’ என்பதற்கேற்ப அரச வன்முறையிலிருந்து அப்பாவிகளை மீட்கும் களத்தில் தனது உயிரையே தியாகம் செய்தார் ஆஸ்மி. இவரை படுகொலை செய்த வழக்கும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதனூடாக, ஆஸ்மி குறித்து திரைப்படம் கூட வந்துள்ளது. அப்படிப்பட்ட மனித உரிமை போராளியாவார்.
![]() |
மாலேகான் வழக்கில் சிறை மீண்ட அப்பாவிகள் |
மாலேகான் குண்டுவெடிப்பும் தொடரும் சனாதன பயங்கரவாதமும்!
கடந்த 2008ஆம் ஆண்டு 8 பேர் பலியான மாலேகான் குண்டுவெடிப்பில் முதலில் இஸ்லாமிய மாணவர் அமைப்பை (சிமி) சேர்ந்த 9 இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று தீவிரவாத தடுப்பு குழுவால் (ATS) கைது செய்யப்பட்டனர். சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டபோதும், ATS விசாரணை சரி தான் என்றது சிபிஐ.
ஆனால் 2011ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையில் தான், மாலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ‘அபினவ் பாரத்’ என்ற சனாதன பயங்கரவாத அமைப்பு தான் என்பதை கண்டுபிடித்தது. சம்ஜவுதா ரயிலில் குண்டு வைத்த தீவிரவாதி சாமியார் அசீமானந்தா இதனை வாக்குமூலமாக அளித்தார்.
![]() |
சனாதன பயங்கரவாதிகள் சாமியார் அசீமானந்தா, சாமியார் பிரக்யா சிங் & கர்ணல் புரோஹித் |
மாலேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாஜக முன்னாள் எம்.பி. பெண் சாமியார் பிரக்யா சிங், கர்ணல் புரோஹித், மேஜர் உபத்யாய், அஜய் ராஹிர்கர், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குல்கர்ணி ஆகியோர் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளனர். சாமியார் பிரக்யா சிங்குக்கு தூக்கு தண்டனையை கோரியுள்ளது என்.ஐ.ஏ.
இந்த வழக்கில் தூக்கு கயிற்றுக்கு முதலில் பொய்யாக நிறுத்தப்பட்ட அந்த அப்பாவி 9 இஸ்லாமியர்களுக்கும் வாதாடியது வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி தான் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணை கைதிகளாக 5 ஆண்டுகள் கழித்து 2011ல் பிணை கிடைக்கப் பெற்றது. 2016ஆம் ஆண்டு வழக்கிலிருந்து முழுவதும் விடுவிக்கப்பட்டனர்.
![]() |
பிரதமர் மோடி & சாமியார் அசீமானந்தா |
மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ‘மரண வியாபாரிகள்’ என்று வர்ணித்தார் அரசு வழக்கறிஞர் ராஜா தாக்ரே.
2006 மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு காலத்தில் சனாதன பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்ஹா குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய சாமியார் அசீமானந்தா, சாமியார் பிரக்யா சிங் தாகூர், கர்ணல் புரோஹித் உள்ளிட்ட காவி தீவிரவாதிகளை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மும்பை ரயில் குண்டுவெடிப்பில் இந்த மரண வியாபாரிகளுக்கு உள்ள தொடர்பை வெளிக்கொணர வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் முதுகெலும்பு!
கடந்த ஜூலை 21ஆம் தேதி வெளியான தீர்ப்பை எதிர்த்து மராட்டிய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. ஜூலை 25 அன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி கவாய் அமர்வு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் அழுத்தத்துக்கு ஆட்படாமல், அப்பாவிகளை விடுதலை செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்.
![]() |
தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் மோடி பஜனை |
பீமா கொரேகான் தொடர்பான அப்பட்டமான பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள அறிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்டோரின் பிணையை கூட உறுதி செய்யாமல் தவிர்த்த வரலாறு கொண்டது தான் உச்சநீதிமன்றம். ஒன்றிய அரசுடன் இணக்கமாக சென்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டை விட, துணிந்து நின்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை தான் மக்கள் கொண்டாடுகின்றனர் என்பதை தலைமை நீதிபதி கவாய் நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவெ ஒன்றிய அரசின் கூலிப்படையாக செயல்படும் அமலாக்கத்துறையையும் தேர்தல் ஆணையத்தையும் சட்டத்தின் துணை கொண்டு வறுத்தெடுத்து வருகிறார் என்பது ஆறுதல்.
![]() |
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் |
புரட்சியாளர் அம்பேத்கரின் அரசமைப்பு சட்டம் தந்த முதுகெலும்புடன் உச்சநீதிமன்றம் நிமிர்ந்து நிற்கட்டும்.
அப்பாவி முஸ்லீம்களை படுகொலை செய்வதும் அவர்களை பொய் வழக்குகளில் சிறைப்படுத்துவதும் மோடி தலைமையிலான சனாதனக்கும்பலின் சதி வேலையாகவே தொடர்கிறது. இந்த பயங்கரவாதத்திற்கு தலைமை நீதிபதி முற்றுப்புள்ளி வைக்கட்டும்.
- வன்னி அரசு
23.07.2025
26 March 2025
காவல்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்ததிலிருந்து ஒரு கிரிமினலாக சுற்றிக்கொண்டருந்தவர் பொன்.மாணிக்கவேல். சாதி பின்னணி, RSS பின்னணி ஆகியவற்றுடன் ஊடகத்தையும் பயன் படுத்திக்கொண்டு யோக்கியவான் போல வலம் வந்தார். ஆனால், சிலை தடுப்புப்பிரிவு அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு மக்களிடையே அம்பலமானார். சிலை கடத்தல் பேர்வழிகளோடு கூட்டு சேர்ந்தது மட்டுமல்லாது, RSS கும்பலோடும் இணைந்து இந்து அறநிலையத்துறையை ஊழல் மலிந்த துறையாக கட்டமைக்க திட்டமிட்டார். ஆனால், அத்தனையும் தோல்வியில் தான் முடிந்தது.
![]() |
திலகவதி IPS |
![]() |
காதர் பாட்சா |
![]() |
தீனதயாளன் |
![]() |
சுபாஷ் கபூர் |
![]() |
நீதியரசர் ஜெயச்சந்திரன் தீர்ப்பு |
![]() |
சிபிஐ எப்.ஐ.ஆர் நகல் |
நன்றி : நக்கீரன்
(மார்ச் 22 & 26 தேதியிட்ட நக்கீரன் இதழில் இரண்டு பாகமாக இந்த கட்டுரை வெளியானது)