21 June 2023

மணிப்பூர் வன்முறையும் பாஜகவின் பின்னணியும்

2021ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்ற பொழுதுதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தலைப்புச் செய்தியாக, 'பூமியின் கடைசி சிறந்த நம்பிக்கை', என்று குறிப்பிட்டிருந்ததாகவும், அதன் துணை தலைப்பாக, ‘உலகின் மிகவும் அன்புக்குரிய மற்றும் சக்திவாய்ந்த தலைவர் எங்களை ஆசீர்வதிக்க இங்கே இருக்கிறார் என்றும் சித்தரிக்கப்பட்ட செய்தி ஒன்று தற்பொழுது வைரலாகியுள்ளது.





இதே போல தான், ரஷ்யாஉக்ரைன் போர் நடந்துகொண்டிருந்த பொழுது, உக்ரைன் அதிபர், பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசியதாகவும், ரஷ்யாஉக்ரை போரைக் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடிதான் என கூறியதாகவும் வலதுசாரி ஆதரவாளர்கள் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தனர். அதன் உண்மைத்தன்மையும் கேள்விக்குறியாகவே உள்ளது.


தற்பொழுது, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்த முறை உலக யோகா தினத்தை அமெரிக்காவில் கொண்டாடுகிறார்.




2021 மோடியின் அமெரிக்க பயணம் உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் செலன்ஸ்கி பேசியதாக கூறிய தகவல் அனைத்தும் பிரதமர் மோடியின் பிம்பத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்க முயற்சிக்கப்பட்டன. ஆனால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடக்கும் கலவரத்தையும், கொத்துக்கொத்தாக மனிதர்கள் கொல்லப்படுவதையும் பார்த்தால், பிரதமர் மோடியை எப்படி உலகின் கடைசி சிறந்த நம்பிக்கை என்றும், ரஷ்யாஉக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் உலகத்தலைவர் என்று சொல்ல முடியும் என்று தான் தோன்றும்.


மணிப்பூர் மாநிலமே பற்றி எரியும் பொழுது பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது அமெரிக்காவில் உலக யோகா தினத்தைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார். மணிப்பூர் மக்கள் நெருப்பு கலவரத்தில் பொசுங்கி மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் பொழுது, அதனை அமைதிப்படுத்த வேண்டிய பிரதமர் மோடி, சாந்தி ஆசனத்தில் அமர்ந்து, அமைதியின் மகத்துவத்தை உலக மக்களுக்கு போதித்துக்கொண்டிருக்கிறார்.




பிரதமர் மோடியும், மத்திய பாசக அரசும், மணிப்பூர் மாநிலத்தை ஆட்சி செய்யும் பாசக அரசும் மணிப்பூர் மக்களைக் கைவிட்டுவிட்டது என்பதை அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் மூலம் தெரிகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கடந்த ஒருமாத காலமாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் தீக்கிரையாகி கொண்டிருக்கின்றன. வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவை திட்டமிட்டே எரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெய்தி வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பொது மக்கள் பக்கத்து மாநிலங்களான மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த வன்முறை குறித்தோ, அதன் ஆபத்து குறித்தோ ஆளும் பா.. அரசு கவலைப்பட்டது போல தெரியவில்லை. மணிப்பூர் முதல்வர் பைரன்சிங் வன்முறையாளர்களான மெய்திக் கும்பலுக்கே ஆதரவு தெரிவிப்பது போல செயல்பட்டு வருகிறார்.




தற்போது, இந்திய அளவில் கவலைகொள்ளும் சம்பவமாக மாறிவருவதை அறிந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அறிக்கை கொடுத்துள்ளன. எப்படியாவது வன்முறையை கட்டுப்படுத்தக் கோரியும் அதற்கு முன்னதாக பா.. அரசு கலைக்கப்படவேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், பாசக எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு உள்ளது.


உண்மையில் மணிப்பூரில் என்ன நடக்கிறது? என்பதை விரிவாக பார்க்கலாம்


கடந்த காலத்தில் மணிப்பூர் என்னவாக இருந்தது?


1947ஆம் ஆண்டு நாடு விடுதலைக்கு முன்னதாக மணிப்பூர் தனி நாடாக இருந்தது. சமஸ்தானங்களாக இருந்த பல்வேறு நாடுகளை, சிற்றரசுகளை இந்தியாவுடன் இணைக்கும் பணியை அன்றைக்கு ஜவகர்லால் நேருவும் படேலும் செய்தனர். அப்போது மணிப்பூரை ஆட்சி செய்த மன்னர் போத சந்திரசிங்கை மேகலாய மாநில தலைநகரான ஷில்லாங் நகருக்கு பேசுவதற்காக அழைத்து வந்தனர். இந்திய இராணுவத்தினர் மணிப்பூரை சூழ்ந்து கொண்டு, தொடக்கம் முதலே இந்தியாவுடன் இணைவதற்கு மறுத்து வந்த மணிப்பூர் மன்னர் சிறை வைக்கப்பட்டார். ஒரு வழியாக ஒரு வாரம் கழித்து இந்தியாவுடன் இணைக்க ஒப்புக்கொண்டு கையெழுத்து இட்டார். இப்படித்தான் மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1949 அக்டோபர் முதல் மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.




மணிப்பூர் மாநிலத்தில் முதல் முதலமைச்சராக 1972ஆம் ஆண்டு முகமது அலிமுதின் பதவி ஏற்றார். மணிப்பூர் மாநிலமாக அறிவிக்கப்படுவதற்கு முன் துணை மாநிலமாகவே அதாவது, யூனியன் பிரதேசமாக செயல்படும் என இந்திய ஒன்றிய அரசு முடிவு செய்திருந்தது. இதை எதிர்த்து மணிப்பூர் மாநில ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி உள்ளிட்ட போராட்ட குழுக்கள் போராட்டங்களை நடத்தின. அதன் பின்னர் 30 தொகுதிகளை உருவாக்கி மாநிலமாக தகுதி உயர்த்தப்பட்டது.


ஆனாலும், 1960களில் மணிப்பூரில் தேசிய இன அடையாளத்தைப் பாதுகாக்க இளைஞர்கள் ஆயுதம் தாங்கி போராடத் துவங்கினர்.  அண்டை மாநிலங்களான நாகலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களிலும் தனிநாடு கோரிக்கையை எழுப்பி போராட்டங்கள் வெடித்தன. ‘ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF), காங்லிபாக் மக்கள் புரட்சிகர கட்சி (PREPAK), மக்கள் விடுதலைப்படை (PLF) போன்ற இயக்கங்கள் மணிப்பூரின் தனித்தன்மையை பாதுகாக்க ஆயுதம் ஏந்தி போராடினஇந்தக் குழுக்களை ஒடுக்க ஆயுதப்படைகள் சிறப்புச் சட்டதை (AFSPA) 1980ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. மணிப்பூரிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்திய இராணுவம் மணிப்பூரிகளை வேட்டையாடியது. பெண்கள் இராணுவத்தால் பாலியல் கொடுமைக்கு உள்ளானார்கள்.


2004 ஆம் ஆண்டு மணிப்பூர் தலைநகரான இம்பாலைச் சார்ந்த மனோரமா தேவி என்ற இளம்பெண் அசாம் ஆயுதப்படை பிரிவினரால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அவரது பிறப்புறுப்பும் சிதைக்கப்படுகிறது. பொதுமக்கள் இச்சட்டத்துக்கு எதிராக போராட்டத்தை தொடருகின்றனர். ஐரோம் சர்மிளாபானு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குகிறார்.





16 ஆண்டகளுக்கு மேலாக உண்ணாவிதப் போராட்டம் நீடித்தது. இந்திய அரசு ஐரோம் சர்மிளாவை பிடித்துப் போய் வலுக்கட்டாயமாக திரவ உணவை திணித்தது. ஆயுதப்படைகள் சிறப்புச் சட்டம் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டாலும் இன்றும் அது மறைமுகமாக தொடரவே செய்கிறது. 


மணிப்பூரை பா.. கைப்பற்றுவதற்காக பல பொய்யான வாக்குறுதிகளை அறிவித்தது. கடந்த கால காங்கிரஸ் அரசு செய்ததைவிட மோசமான மதவெறியை மக்களிடையே திணித்தது. மணிப்பூரிகள் எனும் அடையாளத்துக்குள் மதவாதத்தை திணித்து கிறித்தவர்களை வேட்டையாட ஆரம்பித்தது. அதன் உச்சமாக இப்போது மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தேசிய இன விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய மணிப்பூரிகளுக்குள் இப்போது மதவெறியைத் தாண்டி, உள்நாட்டுக் கலவரத்தை செய்து கொண்டிருக்கிறது பா...


ஒவ்வொரு தேசிய இனத்தின் அடையாளங்களை அழித்து மதமோதலை உருவாக்குவது தான் பா...வின் செயல்திட்டம் ஒரே நாடுஅதுஇந்துராஷ்டிரமாகவும், ஒரே மொழி அதுஇந்தியாகவும் இருக்க வேண்டும் என்பதே பா...வின் சதித்திட்டம். அது மணிப்பூரில் வெற்றிகராக நடந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்ப்பது மற்ற தேசிய இனங்களுக்கு ஆபத்தாக முடியும்.


மணிப்பூரில் நடப்பது என்ன?


மணிப்பூர் மாநிலத்தில் பெரும் பொருளாதார வலிமையுடனும் அரசியல் செல்வாக்குவடனும் வசித்து வருபவர்கள் மெய்தி இனமாகும். நகர்ப்புறங்களில் அதாவது, சமவெளி பகுதிகளில் இருப்பவர்கள் மெய்தி மக்களாவர். அந்த மாநிலத்தில் மற்ற இரு இனக்குழுக்களான நாகா மற்றும் குக்கி இனமக்கள் பழங்குடி சமுதாயமாகவும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்களாகவும் உள்ளனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி அதிகாரமற்ற நிலையில் உள்ளனர்.


ஆனால், இந்து, .பி.சி மக்களாக இருக்கும் மெய்தி இனமக்கள் தங்களையும் பழங்குடி இனபட்டியலில் (ST) இணைக்கச் சொல்லி அரசாங்கத்தை வற்புறுத்தி வருகின்றனர். நாகா இனக்குழு பவுத்தர்களாகவும், குக்கி இனக்குழு கிறித்தவர்களாகவும் இருப்பதால் பா.. பெரும்பான்மை இந்துக்களை தம்முடைய மதவாதத்தை பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாட ஆரம்பித்தது. அதன் துவக்கம் தான் கிறித்துவ வெறுப்பு பரப்புரையை மேற்கொண்டது.


மணிப்பூர், உயர்நீதிமன்றத்தின் மூலம் மெய்தி இனக்குழுவை பழங்குடி பட்டியலில் இணைப்பதற்கான வழிகாட்டுதலை பெற்றது ஆளும் பா.. அரசு. இதைக் கண்டித்து கடந்த 03.06.2023 அன்று குக்கி மாணவர் அமைப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது.


சனநாயகப்பூர்வமாக நடைபெற்ற அப்போராட்டத்துக்குள் நுழைந்த மெய்தி வன்முறைக் கும்பல் தாக்குதலை தொடுத்தது. மணிப்பூரில் டோர்பாங்க், உக்ருல், காங்போக்பி, தமெங்லாங், தெங்னௌபால் பகுதிகளிலும் பழங்குடி மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர்அப்பேரணிக்குள்ளும் புகுந்து மெய்தி இந்துத்துவக் கும்பல் தாக்குதலை நடத்தியது.




குகி பழங்குடியினரின் வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்களை எரித்து வெறியாட்டம் போட்டனர் பா.. கும்பல். மதமாற்றத்தை தடுக்கும் ஒரு வகையான சதித் திட்டத்தோடு இந்த வன்முறையை பா.. கட்டமைத்துள்ளது. சாதி இந்துக்களை பழங்குடி பட்டியலில் இணைக்க முயற்சிப்பது பா...வின் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை என குக்கி இன மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


எதற்காக பழங்குடி பட்டியலில் மெய்தி இனக்குழு சேர்க்கப்பட வேண்டும்?


மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை இந்துக்களாக வசிக்கும் மெய்தி மக்கள் 64 சதவிகிதமாக உள்ளனர். ஆனால், 10 சதவிகித நிலங்கள் மட்டுமே அவர்களிடம் உள்ளன. மீதமுள்ள நிலங்கள் குகிகளிடமும் நாகாக்களிடமும் உள்ளன. மைதேயி மக்கள் பழங்குடி பட்டியலில் இணைத்தால் பழங்குடி மக்களின் நிலத்தை பறித்து விரட்டியடிப்பதே பா...வின் செயல்திட்டம்.




இதற்காகவே இந்த இடஒதுக்கீட்டுத் திட்டத்தை அரங்கேற்றி உள்ளது பா... இத்திட்டம் 1970களில் தொடங்குகிறது. பழங்குடி மக்களிடையே பரவும் கிறித்துவ மதமாற்றத்தை தடுத்திட, அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தி அச்சுறுத்தி வந்தது சங்பரிவார் கும்பல். அதனுடைய உச்சகட்டம் தான் இந்த வன்முறைத் தாக்குதல்.


மணிப்பூரில் நடக்கும் அரசியல்


மெய்தி – குகி பழங்குடியின மக்களுக்கு இடையில் தான் மோதல் நடக்கிறது என்று பார்த்தோம். வைணவ பிரிவைச் சேர்ந்த மெய்தி குழுவைத் தான் பாசகவும், மாநில அரசும் ஆதரிக்கின்றன. குகி சமூகம் என்பது மியான்மரில் இருப்பதால் அங்கிருந்து மக்கள் புலம்பெயர்ந்து மணிப்பூருக்கு வருவதும் அதிகரித்துள்ளது. அதனால், ஒன்றிய அரசு, மாநிலத்தை ஆட்சி செய்யும் பாசக அரசும் குக்கி சமூகத்திற்கு எதிரான நிலைப்பாட்டைத் தான் எடுக்கிறது. மணிப்பூரை தன் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் பாசக இப்படி நடந்து கொள்கிறது. அசாமில் அதிக இந்துக்கள் உள்ளனர். திரிபுராவிலும், பெங்காலி மக்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு பெங்காளி மக்கள் மத்தியில் அரசியல் செய்யலாம் என நினைக்கிறது பாசக. அசாம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாசக வலுவான அடித்தளத்தை கட்டமைக்க முயற்சிக்கிறது.  அத்துடன், வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியின மக்கள் இருந்தாலும் கூட பெங்காலியைச் சேர்ந்தவர்கள் தான் அரசு ஊழியர்களாக உள்ளனர். இதனால், பெங்காலி வாக்கினையும் பெறலாம் என பாசக யோசிக்கிறது.





 என்.ஆர்.சி கேட்கும் மெய்தி


மியான்மரில் இருந்து குகி மக்கள் வருவதால் அதனைத் தடுக்க தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மெய்தி மக்கள் முன்வைக்கின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான வலுவான குரல் ஒலித்துக்கொண்டு உள்ளது.  மணிப்பூர் கலவரத்தைப் பயன்படுத்த நினைக்கும் பாசக, மணிப்பூர் கலவரத்தைத் தூண்டி அதன் மூலம் என்.ஆர்.சியை கேட்க வைத்துள்ளது. என்.ஆர்.சியை அமல்படுத்தினால் தான் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று பாசகவினர் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.





டபுள் எஞ்ஜின் சர்க்கார்


இது ஒரு பக்கம் என்றால், பாசக எல்லா மாநில தேர்தல்களிலும் முன்வைக்கும் ஒற்றை ஆட்சி முறை, அதாவது டபுள் எஞ்ஜின் சர்க்கார் என்ற முழக்கமும் தற்பொழுது மணிப்பூரில் காலாவதியாகிவிட்டது. கர்நாடகா மாநிலத்தேர்தலின் போது பாஜக டபுள் எஞ்ஜின் சர்க்கார் என்ற முழக்கத்தை பிரதானமாக முன்வைத்தது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி அமைத்தால், அதனால், மாநிலங்கள் வளர்ச்சி அடையும் என்பது தான் பாசகவின் அந்த முழக்கத்தின் பின்னணி. தற்பொழுது, மணிப்பூர் மாநிலத்தை ஆட்சி செய்வது பாசக அரசு தான். உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாக மணிப்பூர் சென்று வந்துவிட்டார். ஆனால், அவரால் மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. பிரதமர் மோடி மணிப்பூர் என்ற மாநிலமே இந்தியாவில் இல்லாததைப் போல் அமெரிக்க சுற்றுப்பயணத்திற்கு கிளம்பிவிட்டார். அமித்ஷா, மோடி உள்ளிட்ட பாசக தலைவர்கள் கூறி வந்த டபுள் எஞ்ஜின் சர்க்கார் மணிப்பூரில் தோல்வி அடைந்து, மோடியும் அமித்ஷாவும் வரலாற்றின் முன் மண்டியிட்டு நிற்கின்றனர்.




மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால்மெய்தி மக்களுக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார் என்று பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் கூட பேசத் தொடங்கிவிட்டனர்.


மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 9 பாஜக எம்எல்ஏக்கள் 5 விஷயங்களை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர். அதில், மாநில அரசு மீதும் அதன் நிர்வாகத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அதனை மீட்டெடுக்க சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றி சில சிறப்பான நடவடிக்கைகளின் மூலமாக இந்த அரசு முறையான நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.





இதே போலபிரதமர் மோடியை சந்திக்க நேரம் வழங்கப்படாததைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தின் 10 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இப்படி இந்தியாவின் வடகிழக்கு மாநிலமே பற்றி எரியும் பொழுது பாஜக அதனை முடிவுக்கு கொண்டு வராமல் அரசியல் செய்து கொண்டு இருக்கிறது.


தேசவிரோத பாஜகவிடம் தமிழ்நாடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நம்முன் இருக்கும் கடமை.


வன்னி அரசு

21.06.2023