04 May 2024

மோடியின் தேர்தல் கால பித்தலாட்டங்கள்

இந்திய அரசியலமைப்பை மோடி சிதைத்துவிடுவார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் ஆரம்பம் முதலே எச்சரித்து வருகிறார். அவரை தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அமைப்புகளும் இயக்கங்களும் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றன. அதற்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் இல்லை. கடந்த 10 ஆண்டு காலமாக மோடி ஆட்சியில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகள், அரசியலமைப்புக்கு எதிரான நகர்வுகளை நுணுகி ஆராய்ந்தால் அதற்கான விடை கிடைத்துவிடும்.

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் இந்தியா முழுவதும் வேகமெடுத்துள்ளது. 400 இடங்களைக் கைப்பற்றுவோம் என சூளுரைத்த மோடி, இந்தியா கூட்டணியின் எழுச்சியைப் பார்த்து அஞ்சியவராகவும் தனது தோல்வியை உணர்ந்தவராகவும் மக்கள் முன்பாக பொய்யான தகவல்களை பதற்றத்துடன் பரப்பி வருகிறார்.



இந்திய தேர்தல் ஆணையமும் அதன் மூன்று ஆணையர்களும்

மோடியின் தேர்தல் பேச்சில் இருக்கும் நடுக்கம் அவரது தோல்வியை உறுதி செய்வதாக இருக்கிறது. அதே சமயத்தில் அவர் கூறும் பொய் தகவல்கள் அரசியல் சாசனத்தை மீறுவதாக இருக்கிறது. மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தலை நியாயமாக நடத்த வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம் மோடியின் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டு கண்டும் காணாதது போல் வேடிக்கை இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கூறாத பல தகவல்களை மோடி மக்கள் மத்தியில் தவறாக சித்தரித்து மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க முயற்சிக்கிறார்.

இந்த தேர்தல் உத்தியில் இரண்டு வியூகங்களை மோடி கையாளுகிறார். ஒன்று வாக்கு வங்கியை பெருக்க மத அடிப்படையில் வாக்குவங்கியை திரட்ட சதி செய்கிறார். இன்னொன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் அமோக ஆதரவுடன் சென்றுவிட்டதால், அதனை கண்டு அஞ்சியவராக காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இல்லாத அம்சங்களை திரித்து மக்களிடையே கூறுகிறார்.





காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து உங்களிடம் விளக்க நேரம் வேண்டும்”என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதிலடி கொடுத்துவிட்டார். இருப்பினும் கூட மோடி தனது பித்தலாட்டங்களை நிறுத்தியதாக தெரியவில்லை. இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும்.

மோடியின் இடஒதுக்கீடு பித்தலாட்டம்:

பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்துவிடப் போவதாக மோடி பொய் செய்தியை பரப்பியுள்ளார். தெலுங்கானாவின் ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய மோடி, காங்கிரஸ் "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சீர்குலைக்க பார்ப்பதாக குற்றம்சாட்டினார். இடஒதுக்கீட்டில் கைவைத்து, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் சதி செய்வதாக அப்பட்டமாக மோடி பொய் சொல்கிறார். ஆனால், உண்மை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களோ, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலேயோ மோடி கூறுவது போன்ற ஒரு கருத்தும் இடம் பெறவில்லை.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்கியத்தை கவனியுங்கள். “சிறுபான்மையினர் கல்வி, சுகாதாரம், பொது வேலை வாய்ப்பு, பொதுப்பணி ஒப்பந்தங்கள், திறன் மேம்பாடு, விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் பாகுபாடு இல்லாமல் நியாயமான பங்கைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்.” என்று தான் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதைத்தான் மோடி மாற்றி பொய் செய்தியை மக்கள் மன்றத்தில் பரப்புகிறார்.


காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் நலன் குறித்த பகுதி (ஆவணத்தில் பக்கம் 8 குறிப்பு 6)

தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 4% இடஒதுக்கீட்டை மேற்கோள் காட்டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டை முஸ்லீம் பயனாளிகளுக்கு காங்கிரஸ் திருப்பிவிட்டதாக பிரதமர் பொய் சொல்கிறார்.



2007 முதல் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கீழ் கல்வி மற்றும் அரசு வேலைகளில் 4% இடஒதுக்கீட்டை முஸ்லிம்கள் பெற்றுள்ளனர். மொத்தம் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமூக-பொருளாதார குறிகாட்டிகளின் அடிப்படையில் முஸ்லிம்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலில் சேர்த்துள்ளன.

மோடி பேசுவதில் உண்மையின்மையை பல்வேறு அம்சங்களில் விளக்கலாம். மற்றொரு விஷயத்தையும் இங்கே நாம் கவனிக்க வேண்டியுள்ளது. 12 ஆண்டுகள் மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் முஸ்லிம் சமூகங்களையும் பட்டியலிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ANI- என்ற செய்தி நிறுவனத்திற்கு மோடி அளித்த பேட்டியில், மாநிலத்தில் 70 முஸ்லிம் சாதிகள் இடஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதாக மோடி பெருமையாகப் பேசியிருந்தார் (குறிப்பிட்ட மோடியின் ANI பேட்டியை இங்கு காணலாம்)

ஆனால், இன்று தேர்தல் வெறியோடு மோடி அப்பட்டமாக காங்கிரஸ் கட்சி மீது பொய் குற்றச்சாட்டை சூட்டுகிறார். காங்கிரஸ் கட்சி பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடும் என்கிறார்.

தாம் உயிருடன் இருக்கும் வரை, பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை "முஸ்லிம்களுக்குப் பகிர்ந்தளிக்க" அனுமதிக்க மாட்டோம் என மோடி கூறுவது தான் இதன் உச்சமாக பார்க்க வேண்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி தங்களின் ஒதுக்கீட்டின் மீது கைவைத்து தங்களின் உரிமையை பறிக்கிறது என்று பொய்யான கருத்தை திரும்பத்திரும்ப மோடி சொல்லிக்கொண்டே இருக்கிறார். உண்மையில், யார் பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிப்பது என்றால் அது பாஜக - ஆர்.எஸ்.எஸ். என்பது தான் உண்மை.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள், எதிர்காலத்தில் “மத அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை" அகற்றுவோம் என்று தேர்தல் பேரணிகளின் போது வாக்குறுதி அளித்துள்ளனர். ஒரு நாட்டின் அமைச்சராக இருக்கும் ஒருவர் மத அடிப்படையில் பிரித்து பேசுவது தானே அப்பட்டமான அரசியல் சாசனத்தை மீறும் செயல். இந்த செயலை மோடி கும்பல் திட்டமிட்டு திரும்பத் திரும்ப செய்கிறது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநில தேர்தல்களில் இஸ்லாமியர்கள் - இந்துக்கள் இடையே வெறுப்புணர்ச்சியைத் தூண்டி அதன் மூலமாக வாக்கு வங்கியை பெறுக்கிக்கொள்ள பாஜகவும் மோடி கும்பலும் திட்டம் போடுகிறது.


விடுதலைச் சிறுத்தைகளின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு

தென் இந்தியாவில் நடந்த தேர்தல்களில் மோடி கும்பலால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாற்பதிலும் திமுக - காங்கிரஸ் - விசிக - இடதுசாரி கூட்டணி தான் வெற்றி பெறும். கேரளாவில் காங்கிரஸ் - கம்யூனிஸ்டுகள் இடையே தான் போட்டி, கர்நாடகாவில் ரேவண்ணாவில் பாலியல் வீடியோவால் பாஜக ஒட்டுமொத்த சீட்டையும் இழக்கப் போகிறது. ஆந்திரா, தெலங்கானாவில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பது உறுதியாகிவிட்டது. ஒட்டுமொத்தத்தில், தென்னிந்தியாவில் பாஜக காணாமல் போவது உறுதியாகிவிட்டது. இதனை ஈடுகட்ட மத பிரிவினைவாதத்தை தூண்டி, வட இந்தியாவில் வாக்குவங்கிக்காக மனித மாமிசம் வேண்டும் என்ற கோணத்தில் மோடியின் பிரச்சாரம் அமைந்துள்ளதை கவனிக்கலாம்.

55%, பரம்பரை வரியை வசூலிக்கிறதா காங்கிரஸ்?: 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் வாரிசு வரியை அறிமுகப்படுத்தும் என்று மோடி மற்றொரு பித்தலாட்டத்தைக் கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதை செய்தியாக வெளியுட்டுள்ளது. அதாவது, "காங்கிரஸ் பாதிக்கு மேல், 55%, பரம்பரை வரியாக வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக மோடி குறிப்பிட்டு பேசியதாக ஹிந்துஸ்தான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பரம்பரை வரி பற்றிய குறிப்பு எதுவுமே இல்லை. "வளம் மற்றும் வருமானத்தின் பெருகிவரும் சமத்துவமின்மையை கொள்கைகளில் பொருத்தமான மாற்றங்களின் மூலம் நாங்கள் நிவர்த்தி செய்வோம்." என்று மட்டும் தான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார சமத்துவமின்மையை பேசும் பகுதி (ஆவணத்தில் பக்கம் 28 குறிப்பு 21)

எங்கே தொடங்கியது மோடியின் பொய் பரப்புரை?:

ஏப்ரல் 21 அன்று ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் மோடி ஆற்றிய உரையுடன் தொடங்குகிறது மோடியின் பொய் பரப்புரை. முஸ்லிம்களுக்கு "ஊடுருவுபவர்கள்" "அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள்" என்று முத்திரை குத்தி தனியார் சொத்துக்களை கைப்பற்றி அவர்களுக்கு மறுபங்கீடு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக ஏப்ரல் 21 அன்று ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் தான் மோடி முதல் பொய்யைக் கட்டவிழ்த்துவிட்டார்.

"எந்தவொரு கட்சியும் அல்லது வேட்பாளரும் தற்போதுள்ள வேறுபாடுகளை மோசமாக்கும் அல்லது பரஸ்பர வெறுப்பை ஏற்படுத்தும் அல்லது பல்வேறு சாதிகள் மற்றும் சமூகங்கள், மத அல்லது மொழி ஆகியவற்றுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்கிறது இந்திய அரசியலமைப்பு சட்டம். இந்திய தேர்தல் ஆணையமும் இதனை கருத்தில் கொண்டு தான் செயல்பட வேண்டும். ஆனால், மோடியின் பேச்சுக்கள் அனைத்தும், அப்பட்டமாக முஸ்லீம் - இந்து பிரிவினையைத் தூண்டுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மோடியின் பேச்சுகுறித்து புகார் அளித்தன. ஆனாலும் மோடி வெளிப்படையாக முஸ்லீம்கள் என்று பேசுவதை நிறுத்திவிட்டு மறைமுகமாகவே பேசி வருகிறார்.

ஏப்ரல் 21 ஆம் தேதி மோடி பேசிய பேச்சின் உண்மை தன்மை என்ன என்பதை விரிவாக ஆராய வேண்டி இருக்கிறது. அதாவது, மோடி பேச்சை முதலில் பார்க்கலாம். திருமணமான இந்து பெண்களின் தாலி உட்பட தனியார் சொத்துக்களை கணக்கெடுத்து, பறிமுதல் செய்து, மறுபங்கீடு செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறியதாக மோடி குற்றம்சாட்டினார். அதாவது, "எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தங்க நகைகள் வெறும் காட்சிப் பொருளல்ல, அது அவர்களின் சுயமரியாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். "அவர்களின் தாலி அவர்களின் வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் தேர்தல் பிரகடனத்தில், அதை பறிப்பதாக மிரட்டுகிறீர்கள்?'' என்று காங்கிரஸ் கட்சியைப் பார்த்து மோடி விமர்சித்தார். 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்களின் தாலி ஒருபுறம் இருக்க, தனியார் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக எந்த குறிப்பும் இல்லை. நமது சொத்துக்களைத் "இந்தியாவில் ஊடுருவியவர்கள்" மற்றும் "அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு" (இஸ்லாமியர்களைத் தான் மோடி இப்படி கூறுகிறார்) இந்தியாவின் செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிடும் என்று கூறினார். இந்தியாவில் எத்தனை முஸ்லீம்கள் ஊடுருவியுள்ளார்கள் என்ற ஆதாரம் மத்திய அரசிடம் இதுவரை இல்லை. அதாவது, சட்ட விரோத குடியேற்றம் பற்றிய தரவுகள் தங்களிடம் இல்லை என நாடாளுமன்றத்தில் பலமுறை ஒன்றிய அரசு கூறியுள்ளது.


தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 2019-2021 (NFHS 5)

இந்திய முஸ்லீம்களின் கருவுறுதல் விகிதம், இந்துக்களை விட அதிகமாக இருந்தாலும், மற்ற அனைத்து சமூகங்களை விடவும் வேகமாக குறைந்து வருகிறது. தவிர, கருவுறுதல் என்பது பொருளாதாரத்தின் ஒரு செயல்பாடு, மதம் அல்ல: மிகவும் வளர்ந்த தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் ஏழை பீகாரில் உள்ள இந்துக்களை விட குறைவான குழந்தைகளை உற்பத்தி செய்கிறார்கள். குறிப்பாக பார்த்தோமானால் 1992ஆம் ஆண்டு 4.5% இருந்த முஸ்லீம்களின் கருவுறுதல் விகிதம் 2019-21இல் 2.4% என 47% குறைந்துள்ளது. அதேவேளை 1992இல் 3.3% இருந்த இந்துக்களின் கருவுறுதல் விகிதம் தற்போது 44% மட்டுமே குறைந்து 2% என உள்ளது. இதன் மூலம் மோடி பேசுவது அப்பட்டமான பொய் என்றே வெளிப்படுகிறது.

இந்துக்கள் சொத்தை காங்கிரஸ் பறிக்குமா?:

அலிகாரில் ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்த பிரச்சாரத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தனியார் சொத்துக்களை கணக்கெடுத்து பறிமுதல் செய்வதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்ற தவறான கூற்றை மோடி மீண்டும் மீண்டும் கூறினார். “காங்கிரஸின் ஷெஹ்சாதா [இளவரசர்]” – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றிய குறிப்பு – “கட்சி ஆட்சிக்கு வந்தால், உங்களிடம் எவ்வளவு வருமானம், சொத்து, வீடு உள்ளது என்பதைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும்… அரசாங்கம் சொத்தை கைப்பற்றி மறுபங்கீடு செய்வார்கள் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாக குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இதைப் பற்றி கூறவில்லை. ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தி, “நாட்டின் எக்ஸ்ரே பரிசோதனை செய்வோம். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், ஆதிவாசிகள், பொதுப்பிரிவைச் சேர்ந்த ஏழைகள், சிறுபான்மையினர் ஆகியோர் நாட்டில் தங்களின் பங்கு என்ன என்பதை அறிந்து கொள்வார்கள். இருப்பினும், கட்சி தனிப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து மறுபங்கீடு செய்யும் என்று அவர் கூறவில்லை.


நாட்டின் எக்ஸ்ரேவாக சாதிவாரி கணக்கெடுப்பு அமையும் - ராகுல் காந்தி

“உங்கள் கிராமத்தில் உங்களுக்கு ஒரு மூதாதையர் வீடு இருந்தால், உங்கள் குழந்தைகளுக்காக நகரத்தில் ஒரு சிறிய பிளாட் வாங்கியிருந்தால், அதில் ஒன்றைப் பறித்துவிடும் அளவுக்கு காங்கிரஸ் செல்லும். இது மாவோயிஸ்ட் சிந்தனை அல்லவா? காங்கிரஸ் உங்களின் உழைத்து சம்பாதித்த சொத்துக்களை பறிக்க நினைக்கிறது, பெண்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க நினைக்கிறது என்றார் மோடி.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் மறுபங்கீடு பற்றிய ஒரே குறிப்பு இதுதான்: “நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு அரசு நிலம் மற்றும் உபரி நிலங்கள் விநியோகிக்கப்படுவதைக் கண்காணிக்க காங்கிரஸ் ஒரு அதிகாரத்தை நிறுவும்.” 


ஏழைகளுக்கு நில விநியோகம் குறித்து பேசும் பகுதி (ஆவணத்தில் பக்கம் 6 குறிப்பு 7)

இது ஒரு புரட்சிகர வாக்குறுதி அல்ல: இந்தியாவில் 21 மாநிலங்களில் நில உச்சவரம்பு சட்டங்கள் உள்ளன, அவை 1960 களில் நாட்டில் நில உரிமையில் உள்ள வரலாற்று சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய அறிமுகப்படுத்தப்பட்டன.

மத அடிப்படையிலான ஒதுக்கீடு:

ஏப்ரல் 24 ஆம் தேதி சாகரில் பேசிய மோடி, கர்நாடகாவில் காங்கிரஸ் சட்டவிரோதமான முறையில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டினார். “ஒரே அறிவிப்பின் மூலம் அனைத்து முஸ்லிம் சமூகங்களையும் OBC ஒதுக்கீட்டில் சேர்த்தது. ஓபிசி இடஒதுக்கீட்டில் பெரும் பகுதியை காங்கிரஸ் பறித்து மத அடிப்படையில் வழங்கியதாக விமர்சித்தார். ஆனால், உண்மை மோடி சொல்வதைப் போல் இல்லை. முஸ்லீம்களுக்கான ஒதுக்கீட்டின் வரலாறு வேறுவிதமாக இருக்கிறது.

1962 ஆம் ஆண்டில், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம், மதத்தின் அடிப்படையில் அல்ல, ஆனால் ஆர்.நாகனா கவுடா கமிஷன் (சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்களுக்காக இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்ய 1962 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆணையம்) பேரில் முஸ்லிம் சமூகங்களின் குறிப்பிட்ட சாதிகளை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்த்தது. அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான வகைப்பாட்டின் அளவுகோல் மற்றும் இடஒதுக்கீடுகளின் அளவை பரிந்துரைக்க குழு அமைக்கப்பட்டது. அதற்கு முன்பே, மைசூர் மகாராஜா 1921ல் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். பின்னர், 1994 இல், HD தேவகவுடா தலைமையிலான ஜனதா தளம் (மதச்சார்பற்ற) அரசாங்கம் கர்நாடகாவில் உள்ள அனைத்து முஸ்லிம் சமூகங்களையும் OBC பட்டியலின் கீழ் கொண்டு வந்தது, அவர்களுக்கு 4% துணை ஒதுக்கீட்டை உருவாக்கியது.

ஜனதா தளம் (மதச்சார்பற்ற) தற்போது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சியாக உள்ளது. சமூக மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையின் அடிப்படையில் முஸ்லிம் சமூகங்கள் OBC பட்டியலில் சேர்க்கப்பட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கர்நாடகாவும் ஒன்று என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஆந்திராவில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் முதலில் முயற்சித்ததாகவும், நாடு முழுவதும் அதே ஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மோடி கூறினார். "அவர்கள் மதத்தின் அடிப்படையில் 15% ஒதுக்கீட்டை முன்மொழிந்தனர்," என்று மோடி பொய் தகவலைக் கூறினார். “எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசிக்களுக்கான தற்போதைய ஒதுக்கீட்டில் இருந்து திருடி, சிலருக்கு மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி முன்மொழிந்ததாக ஏப்ரல் 24ல் சர்குஜா பிரச்சாரத்தில் மோடி பித்தலாட்டம் செய்கிறார். 2009-ல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இந்த எண்ணத்தை வெளிப்படுத்தியது. 2014 தேர்தல் அறிக்கையிலும், இந்த விஷயத்தை ஒருபோதும் விட்டுவிட மாட்டோம் என்று தெளிவாகக் கூறியுள்ளனர். என்று மோடி பொய் சொல்கிறார்.


பாஜக ஆளும் குஜராத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) உள்ள முஸ்லீம் சமூகங்களின் பட்டியல்

ஆந்திராவில் காங்கிரஸ் அரசு 2005 இல் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றியது. "சமூக ரீதியாகப் பின்தங்கிய குடிமக்களில் ஒரு வகுப்பினரைத் தீர்மானிப்பதற்கான ஒரே அடிப்படையாக மதம் இருக்க முடியாது" என்று வாதிட்டு, உயர் நீதிமன்றம் இந்தச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது எனத் தள்ளுபடி செய்தது. 2009 தேர்தல் அறிக்கையில் , சிறுபான்மையினருக்கு "அவர்களின் சமூக மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையின் அடிப்படையில்" இடஒதுக்கீடு அளிப்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறி, ஒரு கவனமான கொள்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது.




அதன் 2014 செயல்திட்ட அறிக்கை : 


"பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தற்போதுள்ள இடஒதுக்கீடுகளை எந்த வகையிலும் பாதிக்காமல், அனைத்து சமூகங்களின் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோக்கி வழியைக் கண்டுபிடிப்பதில் இந்திய தேசிய காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது." என்று மட்டுமே கூறியுள்ளது. 




27% இடஒதுக்கீட்டைத் திருடுகிறதா காங்கிரஸ்?:

ஆக்ராவில் 25 ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக OBCகளுக்கான 27% ஒதுக்கீட்டில் ஒரு பகுதியை திருட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

வாரிசு வரியை ரத்து செய்தாரா ராஜீவ்காந்தி?:

கர்நாடகாவில் மொரீனாவில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி நடந்த பரப்புரையில் பேசிய மோடி, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, மன்மோகன் சிங்கின் பேச்சு மற்றும் காங்கிரஸ் கட்சி தாலியைப் பறிக்கும் பொய்யான கூற்றுக்களை திரும்பத் திரும்பக் கூறி, பின்னர் மோடி வாரிசு வரி விஷயத்திற்குத் திரும்பினார். இந்த நேரத்தில், அவர் ஒரு புதுமையான வரலாற்றைக் கூறுவதாக பிரகடனப்படுத்தினார். அதாவது, “இந்திரா காந்தி இறந்தபோது, அவரது மகன் ராஜீவ் காந்தி தனது சொத்தை வாரிசாகப் பெற வேண்டும், அரசாங்கத்திற்கு பணம் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள, சொத்தை காப்பாற்ற, பிரதமர் ராஜீவ் காந்தி வாரிசு வரியை ரத்து செய்தார். ” என்று பொய் செய்தியைக் கூறினார்.


தனது உரைக்கான விளக்கத்தை 2006ஆம் ஆண்டே வழங்கிய மன்மோகன்சிங்

1985ல் நிதியமைச்சராக இருந்த வி.பி. சிங்கால் வாரிசு வரியானது ஒழிக்கப்பட்டது, இறந்தவரின் சொத்துக்களுக்கு விதிக்கப்பட்ட எஸ்டேட் வரியே தவிர, சொத்தை வாரிசாகப் பெற்ற ஒருவர் செலுத்தும் பரம்பரை வரி அல்ல. வி.பி. சிங் தனது பட்ஜெட் உரையில் , "மார்ச் 16, 1985 அன்று அல்லது அதற்குப் பிறகு ஏற்படும் இறப்புகளின் மீது எஸ்டேட் வரி விதிக்கப்படாது" என்று கூறினார். இந்திரா காந்தி அக்டோபர் 31, 1984 அன்று படுகொலை செய்யப்பட்டார். 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் வி.பி. சிங் திருத்திய வாரிசு வரி சீர்திருத்தமே நடைமுறைக்கு வந்தது. அப்படி இருக்க மோடியின் பேச்சு அப்பட்டமான பொய் என்பது தானே உண்மையாக இருக்க முடியும்?

குரோனி கேப்டலிசம் முதல் கார்ப்பரேட் ஜமீன்தார் முறை:

இப்படி மோடியின் பேச்சுக்களை ஒவ்வொரு கூட்டமாக தனியாக கவனித்து பார்த்தால் அதில் அவர் கூறிய அத்தனை தகவல்களும் உண்மைக்கு மாறாக இருக்கிறது. அவரின் நோக்கம் என்பது முஸ்லீம் - இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி,இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற வேண்டும் என்பது தான். இந்தியா இந்துக்களின் நாடா என்று கேட்டால், அதுவும் இல்லை. இந்தியாவை சனாதன, பார்பனீய கும்பலின் கட்டுப்பாட்டில் கொண்டு வர மோடி திட்டம் போடுகிறார்.


”மோதானி”

2014 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த மோடி, குரோனி கேப்டலிசத்தை அதாவது, முதலாளிகளுக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதலாளிகளே கட்டி அமைத்த ஒரு அரசின் பிரதிநிதியாக மோடி இருந்தார். அதானியும், அம்பானியும் மோடியின் அரசை இப்படித்தான் உருவாக்கினார்கள். மோடியின் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் குரோனி கேப்டலிசமாக தான் உள்ளது. பிறகு மெல்ல மெல்ல நகர்ந்து தற்போது மோடியின் ஆட்சி முறையானது நிலப்பிரபுத்துவ காலக்கட்டத்தில் இருந்த ஜமீன்தார்கள், பண்ணையார்கள் போன்ற ஆட்சியை உருவாக்க முயற்சிக்கிறார். (இது ஒரு தனியாக கட்டுரையாகவே எழுதப்பட வேண்டிய பகுதி)

மோடியின் இந்த மக்கள் விரோத போக்கை நாம் ஜனநாயகத்தின் துணை கொண்டு, மக்கள் ஆதரவு கொள்கையை இன்னும் தீவிரப்படுத்தி அடித்து நொறுக்க வேண்டும்.







காலம் புதிய இந்தியாவிற்காக கனிந்து கொண்டிருக்கிறது. நாளைய விடியல் நமக்கானதாக இருக்கும்.

துணிந்து நிற்போம்.. பாசிய பாஜகவை வீழ்த்துவோம்!

-வன்னி அரசு

22 March 2024

அக்யுஸ்ட் பாஜக அஸ்வதாமனின் குற்றப்பின்னணி கதை

திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அ.அஸ்வதாமன் (எ) அக்யுஸ்ட் அஸ்வதாமனின் குற்றப் பின்னணி குறித்து 3 ஆண்டுகளுக்கு முன்னரே எனது முகநூல் பக்கத்தில் ஆதாரங்களுடன் வெளியிட்டேன். பலரும் ஊடக விவாதங்களில் இந்த வழக்குகள் குறித்து கேள்வி எழுப்பியதும், அதன் பின்னர் ஊடக விவாதங்களுக்கு வருவதையே நிறுத்திக் கொண்டான் அக்யுஸ்ட் அஸ்வதாமன்.



இன்று பாஜக வன்முறை கும்பல் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளான். தலித் பெண்கள் மீதும், குறிப்பாக தனது மனைவிடம் கூட வன்முறையை பிரயோகிக்கும் இந்த நபரின் குற்றப்பின்னணியை விரிவாக பார்ப்போம். 


வழக்கு எண் 1:


கடந்த 14.2.2016 அன்று தனது மனைவி துர்கா மற்றும் எட்டு மாத குழந்தையை, அவரது மாமனார் வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாததால், அவர்களை மீட்டு தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார் அக்யுஸ்ட் அஸ்வதாமன்.




22.03.2016 அன்று இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வருகிறது. அரசு வழக்கறிஞர் ஒரு புதிய தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்கிறார். அதாவது அக்யுஸ்ட் அஸ்வதாமனின் மனைவியை யாரும் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லவில்லை. அஸ்வதாமன் மீது அவரது மனைவி கொடுத்த வரதட்சனை புகார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதாகவும், தன்னை வரதட்சனை கேட்டு அடித்து துன்புறுத்தும் நிலையில் விவாகரத்து வழக்கு பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படுகிறது.

அஸ்வதாமன் வரதட்சணை வழக்கு நகல் 1
அஸ்வதாமன் வரதட்சணை வழக்கு நகல் 2


இதை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் முழுக்க முழுக்க குடும்ப பிரச்சனை. இதில் ஆட்கொணர்வு மனுவைக் கொண்டு தீர்வு சொல்ல முடியாது என்று சொல்லி அக்யூஸ்டு அஸ்வதாமனின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.

எட்டு மாத கைக்குழந்தையுடன் இருந்த தனது மனைவியை வரதட்சனை கேட்டு துன்புறுத்தி, அடித்து விரட்டியவர் தான் இந்த அக்யுஸ்ட் அஸ்வதாமன்.



வழக்கு எண் 2:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுத்தூர்பேட்டை தாலுகா, மதியனூர் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன்தனபாக்கியம் தம்பதியினர். இவர்கள் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய மகன் சிவானந்தனை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்க விரும்பி, அக்யுஸ்ட் அஸ்வதாமன், அவரது தந்தை அல்லிமுத்து நடத்தும் அருள் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு செல்கின்றனர். 13.6.2007 அன்று 70 ஆயிரம் பணத்தை கட்டி மகனை சேர்க்கின்றனர்.


A1 அல்லிமுத்து - A2 அஸ்வதாமன்


அக்யுஸ்ட் அஸ்வதாமனும் வரது தந்தையும் நடத்தும் அந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் போதிய வசதிகள் இல்லை என்பதும், சரியான அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவதும் பின்னர் தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் கட்டிய பணத்தையும் மாறுதல் சான்றிதழையும் தருமாறு மாணவனின் தாயார் தனபாக்கியம், நிறுவனத்தை அணுகினார்.


அவர்கள் நீண்ட காலம் இழுத்தடித்து 4.1.2008 அன்று தருவதாக தனபாக்கியத்தை வரச்சொல்கின்றனர். அலுவலகத்தில் அஸ்வதாமனும், அவனது தந்தை அல்லிமுத்துவும் இருந்துள்ளனர்


உள்ளே சென்ற தனபாக்கியத்தின் சேலையை பிடித்து இழுத்த அல்லிமுத்து, பறத் தேவிடியா, பணத்த கொடுக்குறதுக்கு உங்கள வரச் சொல்லலடி, உங்கள ஒழித்துக்கட்ட தான் வரச்சொன்னோம் என்று இழிவாக பேசி கன்னத்தில் அறைந்துள்ளார். இப்படி பணம் கேட்டு வந்தால் உயிரோடு விடமாட்டேன் என்று அத்துமீறிய அல்லிமுத்து குறித்து புகார் சொல்வேன் என்று தனபாக்கியம் போராடியுள்ளார். அப்போது அறையில் இருந்த அஸ்வதாமன், உங்கள உயிரோடு விட்டாதாண்டி போலீஸ்ல புகார் கொடுப்பீங்கஎன்று சொல்லி, இரும்பு சுத்தியலை எடுத்து தனபாக்கியத்தை கொலை செய்யும் நோக்கத்தில் தலையில் ஓங்கி அடித்துஒழிந்து போடிஎன்றார்


இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. தனபாக்கியத்தின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்தவர்கள் அவரை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பாற்றினர்.


இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் குற்ற எண்: 12/2008 பதியப்பட்டது. உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு (PRC No.6 of 2009) வந்தது.


இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) அல்லிமுத்துவும், இரண்டாம் குற்றவாளியாக (A2) அஸ்வதாமனும் உள்ளனர். அல்லிமுத்து மீது ... 294, 323, 506(2) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. அஸ்வதாமன் மீது ... பிரிவு 307படி கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கை நடத்தாமல் தாமதப்படுத்தி வந்தான் அக்யுஸ்ட் அஸ்வதாமன். மேலும், தான் பாஜகவில் இருப்பதாகவும், தன் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று தனபாக்கியம் குடும்பத்தினரை ரவுடி கும்பலை வைத்து மிரட்டி வந்தான்.


தங்கள் உயிருக்கு அஞ்சிய தனபாக்கியம் குடும்பத்தினர், தலித்துகளின் பாதுகாவலராக அன்று வலம் வந்த மாநில தலைவர் முருகனுக்கு கடிதம் எழுதினர். கல் உடைக்கும் தனது தந்தை வழி ஒட்டர் சாதி ஆட்கள் மூலம், சுத்தியலை வைத்தே அடித்து கொன்றுவிடுவேன் என்றும், தனது அம்மா வழி வன்னியர் சாதி ஆட்களிடம் சொன்னால் சும்மாவிடமாட்டார்கள் என்றும் அக்யுஸ்ட் அஸ்வதாமன் மிரட்டுவதாக அக்கடிதத்தில் சொல்லியுள்ளார் தனபாக்கியம்.


பாஜக தலைவர் முருகனுக்கு தனபாக்கியம் அனுப்பிய கடிதம் ப.1

பாஜக தலைவர் முருகனுக்கு தனபாக்கியம் அனுப்பிய கடிதம் ப.2


அப்போது பாஜக தலைவர் வேல் யாத்திரையில் பிஸியாக இருந்ததால், தனபாக்கியத்தின் அழுகுரல் அவரிடம் எடுபடவில்லை.


இந்த வழக்கை மேலும் தாமதப்படுத்தும் நோக்கில், தங்கள் மீதான வழக்கு ரத்து செய்யும்படி 2015ஆம் ஆண்டு A1 அல்லிமுத்துவும்,  A2 அஸ்வதாமனும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுகின்றனர்.


வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், 25.01.2022ஆம் ஆண்டு கீழ்கண்ட தீர்ப்பை வழங்குகிறார்.


”இருதரப்பு வாதங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நமக்கு தெரிய வருவது என்னவென்றால், புகார்தாரரான பெண்ணையும் அவரது தாயையும் தங்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் A1 அல்லிமுத்து  ஆபாசமாக பேசி, அடித்து துன்புறுத்தி சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது A2 அஸ்வதாமன் இரும்பு கம்பியை கொண்டு அப்பெண்களை தாக்கி காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டை புகார்தாரரின் தாயும், மேலும் 3 தனித்தனி சாட்சிகளும் உறுதிப்படுத்துகின்றன” 

அக்யுஸ்டுகள் தந்தை - மகன் மீதான வழக்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


அக்யுஸ்ட் அஸ்வதாமன் மீதான வழக்கு விவரம் 1

அக்யுஸ்ட் அஸ்வதாமன் மீதான வழக்கு விவரம் 2

அக்யுஸ்ட் அஸ்வதாமன் மீது குற்ற முகாந்திரம் உள்ளது - உயர்நீதிமன்றம்



இன்றும் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் A1 அல்லிமுத்து - A2 அஸ்வதாமன் மீதான வன்கொடுமை வழக்கு நடைபெற்று வருகிறது.



இந்த குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளரை நிறுத்தி தான் பெண்களையும் தலித்துகளையும் பாதுகாப்போம் என்று வேடமிட்டு வருகிறது பாஜக கும்பல்.