16 June 2024

மோடியின் வீழ்ச்சி தொடங்கியது!

சிலப்பதிகாரத்திலே ஒரு காட்சி.


பாண்டியனின் அரண்மனைக்குள் நுழைந்த கண்ணகி, செங்கோலும் வெண்குடையும் / செறிநிலத்து மறிந்துவீழ்தரும்/நங்கோன்றன் கொற்றவாயில் / மணிநடுங்க நடுங்குமுள்ளம்/ இரவுவில்லிடும் பகல்மீன்விழும் / இருநான்கு திசையும் அதிர்ந்திடும்/வருவதோர் துன்பமுண்டு/ மன்னவற் கியாம் உரைத்துமென


(பொருள்) அரசனுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் நிலத்தில் மடங்கி வீழும். நம் மன்னனது வெற்றி தரும் வாயிலின்கண் கட்டிய மணி என்னுள்ளம் நடுங்கும் வண்ணம் அசையும்இரவு நேரம் வான வில்லைத் தோற்றுவிக்கும். பகற் காலத்து விண்மீன்கள் எரிந்து கீழே விழும், எட்டுத் திசையும் அதிரும், ஓரு துன்பம் மன்னனுக்கு வர இருக்கிறது. நான் அரசனுக்கு இச் செய்தியைக் கூறுகிறேன் என்று கண்ணகி கூறுவார். இதே செய்தியைத் தான் 18-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மோடி என்கிற மன்னனுக்கு கூறியுள்ளது.

 


மோடியின் 400 தொகுதி வெற்றி முழக்கம் வெற்று முழக்கமாகிவிட்டது. ராமர் கோயில் அரசியலுக்கு சம்மட்டி அடி விழுந்துள்ளது. ராமர் கோயில் இருக்கும் ஃபைசாபாத் தொகுதியிலேயே பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது. பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை விட, அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், ராமர்இந்துத்துவா என தலித்துகளுக்கு எதிராக செயல்பட்ட லல்லு சிங் தோற்றது தலித் வேட்பாளரான அவ்தேஷ் பிரசாத்திடம் தான்.


அகிலேஷ் யாதவ் உடன் அவ்தேஷ் பிரசாத்
                                             

நாட்டின் ஒரே பழங்குடியின முதலமைச்சராக  இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் சிறை வைக்கப்பட்ட நிலையில், ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த அர்ஜூன் முண்டா, சோரனின் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். ஜார்கண்ட்டின் பழங்குடியினருக்கான ஐந்து தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

 

பாஜக ஆளும் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜகவின் அரசியல் சரிவு பட்டவர்த்தனமாகிவிட்டது. மோடி தனது தொகுதியான வாரணாசியில் பெற்ற வெற்றியை விட இரண்டு மடங்கு கூடுதல் வாக்குகளுடன் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து மீண்டும் களமிறங்கிய மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராயுடன் கடும் போட்டிக்கிடையே தான் வெற்றி பெற முடிந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு 4.8 லட்சமாக இருந்த வாக்கு வித்தியாசம் இப்போது வெறும் 1.5 லட்சமாக சரிந்துள்ளது. சிவசேனா என்ற மாநில கட்சியை உடைத்ததன் விளைவை மகாராஷ்ட்ராவில் பாஜக அனுபவித்துள்ளது. விவசாயிகளை கொடுமைப்படுத்தியதற்கு பஞ்சாபில் பாஜகவிற்கு விவசாய பெருங்குடி மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள்.  இவை எல்லாவற்றையும் விட, ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை வைத்து அரசியல் செய்த மோடிஆர்.எஸ்.எஸ். கும்பல், தேர்தல் முடிவுக்கு பிறகு ராமர் தங்களுக்கு கை கொடுக்கவில்லை என்பதால்ஜெய் ஜெகந்நாத்என்ற முழக்கத்திற்கு மாறிவிட்டார்கள். கடவுளையே மற்றியவர் மோடி ஒரு பச்சை சுயநலவாதி என்ற முகத்திரை கிழிந்து தொங்குகிறது.


மோடியை ஆட்டம் காணவைத்த அஜய் ராய்

தேசிய இனங்களின் எழுச்சிக்கு முன்பாக மோடியின் இந்துத்துவா கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பொறியாளர் ரஷீத், காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித் பால் சிங், இந்திரா காந்தி கொலையாளிகளில் ஒருவரான  பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா ஆகியோர் வெற்றி மோடியின் சர்வதிகாரத்திற்கு எதிரான தேசிய இன எழுச்சியாகவே சித்தரிக்கப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில், அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற அனைத்து ஆரூடங்களையும் பொய்யாக்கி, மோடியின் சர்வாதிகாரத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளது 18-வது மக்களவைத் தேர்தல்மோடிக்கு கிடைத்துள்ள இந்த தோல்வி, இந்தியாவின் ஆன்மாவான மதச்சார்பின்மைக்கும், பிரிவினைவாத எதிர் பேச்சுக்கும் கிடைத்த பதிலடியாகவே பார்க்கலாம்.


இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் மோடி ஒரு சர்வாதிகாரி என்பதை தொடர்ச்சியாக நக்கீரனில் எழுதி வருகின்றேன். அவரின் தேர்தல் முடிவு எப்படி இருக்கிறது என்பதை முன்பே பல அத்தியாயங்களில் எழுதியுள்ளேன். அவை மக்கள் தீர்ப்பு முன்பு உண்மையாகிவிட்டதை பெருமையோடு பகிர்ந்து கொண்டு, சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் களமாடி தங்களின் தீர்ப்பை அளித்த இந்திய மக்களை ஆரத்தழுவி முத்தமிடலாம்.


பாஜகவின் கூலிப்படையான தேர்தல் ஆணையம்

எத்தனை எத்தனை பொய்களை மிஞ்சி இந்த வரலாற்று சாதனையை இந்திய மக்கள் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பாகவே கருத்து கணிப்பு என்ற போர்வையில் ஊடகங்கள் செய்த பித்தலாட்டங்கள்மத்திய விசாரணை முகமைகளை கையில் வைத்துக்கொண்டு மோடி செய்த சர்வாதிகாரத்தனம், தேர்தலின் கண்ணியம் கெட்டுப் போகும் போது கூட கண்ணை மூடிக்கொண்டிருந்த தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் இந்தியா கூட்டணியின் முதுகை தட்டிக்கொடுத்தும் பாஜகவை தலையில் கொட்டு வைத்தும் ஒரு தேர்தல் முடிவை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

 

பொய்யான கருத்துக்கணிப்பு:

 

ஜூன் 1 ஆம் தேதி வெளியான அனைத்து ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளும் 350க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக தனித்துக் கைப்பற்றும் எனக் கூறின. நியூஸ் 24 டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் 400க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கூட்டணி பிடிக்கும் என குறிப்பிட்டது. இந்தியா டுடே-ஆக்சிஸ் இந்தியா கருத்துக்கணிப்பு 361-401 இடங்களும், டுடே சாணக்கியா பாஜகவுக்கு 335 இடங்களையும் பாஜக கூட்டணிக்கு 400 இடங்களையும் கொடுத்தது.


மோடி மீடியாவின் தேர்தல் கருத்துக்கணிப்பு

தி டைம்ஸ் நவ்.டி.ஜி கருத்து கணிப்பு 358 இடங்களை பாஜகவுக்கு வழங்கியது. ரிபப்ளிக் 359 இடங்களை பாஜக தனித்து கைப்பற்றும் எனக் கூறியது. நியூஸ் 18 கருத்து கணிப்பில் 315 இடங்களை பாஜக வசப்படுத்தும் எனக் குறிப்பிட்டது. இத்தனை ஊடகங்களும் பாஜகவின் ஊதுகுழலாக இருந்துள்ளன என நிரூபித்துவிட்டது மக்களின் தீர்ப்பு. அதாவது, தமிழ்நாடு புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் தான் களமிறங்கியது. ஆனால், மோடியின் மீடியா மாஃபியாக்கள் 12-13 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என கூறின. ஜார்க்கண்டில் சி.பி.எம் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால்,3 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று கூறியது. கேரளாவில் பாஜக அதிக வெற்றியை பதிவு செய்யும் என்றது மோடி மீடியா. ஆனால், முடிவு வேறாக வந்துள்ளது.


மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெறும் என்றது கருத்து கணிப்பு முடிவுகள். ஆனால், நடந்தது என்ன, ஒட்டு மொத்தமாக உத்தரப்பிரதேசத்தில் 80 இடங்களில் பாஜக வெறும் 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2014-ல் 71 இடங்களிலும் 2019ல் 62 இடங்களிலும் வென்ற பாஜக 2024ல் வெறும் 33 இடங்களை கைப்பற்றி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை என்று பேசிய ஸ்மிருத்தி இராணி வெற்றி பெறுவார் என்றார்கள். அவருக்கும் படுதோல்விகாங்கிரஸ்சமாஜ்வாதி படுதோல்வி அடையும் என்றது கருத்து கணிப்பு, ஆனால், பாஜகவை விட 37 இடங்களில் சமாஜ்வாதியும் 6 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் முத்திரை பதித்துள்ளது.


உ.பி. புல்டோசரை வீழ்த்திய மூவர் அணி

மகாராஷ்டிராவில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கூறிய கருத்து கணிப்பு முடிவுகள் தவிடு பொடியாகியுள்ளது. இந்தியாவின் அதிக அரசியல் நெருக்கடி உள்ள மாநிலமாக பார்க்கப்பட்ட மகாராஷ்டிராவில் பாஜக படு தோல்வியைக் கண்டுள்ளது. 48 தொகுதிகளைக் கொண்ட இங்கு 30 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. 2019ல் பாஜக 23 இடங்களிலும் 18 இடங்களில் அதன் கூட்டணி கட்சிகளும் வென்றன. அதே நிலை தொடரும் என்றன மோடியின் மீடியா மாஃபியாக்கள். ஆனால், 2004ல் கருத்துக்கணிப்பு பொய்யானது போலவே 2024 கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டது தேர்தல் களம். 

 

ஒட்டுண்ணி பாஜக விழுங்கிய கட்சிகளும்:

மோடிஆர்.எஸ்.எஸ் - இந்துத்துவா கருத்தியல்களை எதிர்த்த கட்சிகள் மட்டுமே தற்போது இந்திய அரசியலில் உயிர்பெற்று வந்துள்ளன. மோடியை எதிர்த்த, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்டவர்களின் கட்சிகள் வலுவான வெற்றியைப் பதிவு செய்துள்ளன. ஆனால், அரசியல் ஒட்டுண்ணி போல் இருந்து கொண்டு அதிமுக, ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.பி., ஒடிசாவின் பிஜூ ஜனதாதளத்தின் மீது சவாரி செய்த பாஜக அந்த கட்சிகளின் அடையாளத்தை அழித்துவிட்டது.


பாஜக விழுங்கிய நவீன் - ஜெகன்

மோடி அமைச்சரவையில் ரயில்வே துறை அமைச்சராக இருந்த அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்தின் பிஜூ ஜனதாதளத்தின் உதவியுடன் தான் மாநிலங்களவைக்கு சென்று ரயில்வே அமைச்சராகவே ஆனார். பாஜகவையும் மோடியின் சர்வாதிகாரத்தனத்தையும் சரியான நேரத்தில் எதிர்க்காததன் விளைவை நவீன் பட்நாயக் இன்று கண்டடைந்துவிட்டார். கூட்டணியில் இருந்த பிஜூ ஜனதாதளத்தையே ஒட்டுண்ணி பாஜக விழுங்கி, ஆட்சியை கவிழ்த்துவிட்டது. இதே நிலைமை தான் ஆந்திராவின் ஜெகன் மோகனுக்கும் நேர்ந்துள்ளது. பாஜகவின் ஒட்டுண்ணி தனத்திற்கு பலியான மற்றொரு கட்சியாக அதிமுக இருக்கிறது. 2017க்கு பிறகு பாஜகவின் கைப்பாவையாக இருந்த அதிமுக 2019க்கும் பிறகு பாஜகவில் மொத்தமாக கரைந்துவிட்டது. இப்போது, அதிமுகவின் நிலை என்ன? ஒட்டுண்ணி பாஜக அதிமுகவை முழுவதுமாக தின்று செறித்ததால் தனது அரசியல் எதிர்காலத்தையே தொலைத்துவிட்டு நிற்கிறது அதிமுக. இதே நிலை தான், ஏக்நாத் ஷிண்டேவுக்கும். ஏக்நாத் ஷிண்டேவை வைத்து சிவசேனாவை உடைத்து பாஜகவுக்கு மகராஷ்டிரா பாடம் கற்றுக்கொடுத்துவிட்டது. அங்கு, பாஜகவும் வெற்றி பெறவில்லை. ஏக்நாத் ஷிண்டேவும் காணாமல் போய்விட்டன.


பாஜக திண்று செரித்த அதிமுக
 

மதவாதசாதியவாதபிரிவினையின் தோல்வி:

 

2024நாடாளுமன்ற தேர்தல் நுணுக்கமான பல அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதில், முக்கியமானது, மோடி கையில் எடுத்த மதவாத, இனப் பிரிவினைவாதத்திற்கு எதிராக இந்தியர்கள் நிற்கிறார்கள். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில்புல்டோசரை யார் மீது ஏற்றலாம் என்று யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ளுங்கள்என்று கூறிய மோடி  மீதே புல்டோசரை ஏற்றி பாடம் புகட்டியிருக்கிறார்கள் மக்கள். இஸ்லாமிய வெறுப்பு அரசியலை பேசிய பாஜக உத்தரபிரதேசம் அயோத்தியிலேயே தோற்றுள்ளது. மணிப்பூரில் மொய்திகுக்கு இன மக்களிடையே பாஜக பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் செய்தது. மணிப்பூரில் 227 பேர் கொல்லப்பட்டனர். 70,000 பேர் அகதிகளாக்கப்பட்டனர். கலவரத்தை தடுக்க பாஜக தவறியது. நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் திமுககாங்கிரஸ் கடுமையாக நீதி கேட்டு போராடியது. விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோர் மணிப்பூர் களத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆனால், மோடி வாய் திறக்கவே இல்லை. மணிப்பூரில் 2 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அங்கு, காங்கிரஸ் பெற்ற வாக்குகளை கணிக்கும் போது, மொய்திகுக்கி இரண்டு இனமக்களுமே பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பது வெளிப்பட்டுவிட்டது.

 


ஜம்முகாஷ்மீரில் பாஜக மீதான கோபம் மக்களிடம் தேர்தல் முடிவுகள் மூலமாக வெளிப்படத்தொடங்கிவிட்டது. 2019 ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370- மோடி அரசு நீக்கியது. இதன் விளைவுகளை காஷ்மீர் மக்கள் பாஜகவுக்கு அளிக்கின்றனர். காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் ஆச்சரியமான முடிவை மக்கள் கொடுத்துள்ளனர். பொறியாளர் ரஷீத் என்று அழைக்கப்படும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷித் ஷேக் வெற்றி பெற்றுள்ளார். 2019லிருந்து உபா வழக்கில் சிறையில் வாடும் ரஷித் வெற்றி, மோடியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகக் குரல் என்பதை மறுக்க கூடாது.


UAPA கைதி அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்தில் தலித் மக்கள் பாஜகவுக்கு எதிராக திரட்சியான வாக்கை அளித்துள்ளனர். வளரும் சமூகங்களின் ஆய்வு மையம் - லோக்நிதி சிந்தனைக்குழு நடத்திய ஆய்வில்சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே அயோத்தியில் புதிய கோயில் வேண்டும் எனக் கூறியுள்ளனர். மீதமிருக்கும் 92 சதவிகிதம் பேர் அயோத்தியிலேயே பாஜகவின் இந்துத்துவத்திற்கு எதிராக எழுச்சிபெற்று கூடியுள்ளனர்.



மத்திய உள்துறை இணை அமைச்சரான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அஜய் மிஸ்டாவின் மகன் லக்கிம்பூர் கெனியில் விவசாயிகள் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்தார். இப்போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா படு தோல்வி அடைந்துள்ளார். மக்கள் விரோதமாக செயல்பட்ட மோடி அமைச்சர்கள் 19 பேர் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர். மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 20 அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளனர்.

 

மண்ணைக் கவ்விய மோடியின் அமைச்சர்கள்

கொடுங்கோல் ஆட்சி - மோடியின் தோல்வியே சாட்சி:

 

தமிழ்நாடு, பஞ்சாப், மணிப்பூர், மிசோரம், சிக்கிம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மாநில கட்சிகளுக்கு எதிராக நேரடி போட்டியில் ஈடுபட்ட பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. தமிழ்நாட்டில் 23 தொகுதிகளிலும், பஞ்சாபில் 13 தொகுதிகளிலும் மணிப்பூரில் 2 தொகுதிகளிலும் சிக்கிம், மிசோரம் ஆகிய இடங்களில் தலா ஒரு தொகுதிகள் என 40 தொகுதிகளை மொத்தமாக பாஜக இழந்துள்ளது. இந்த மாநிலங்கள் மோடியின் பாசிச குணத்திற்கு எதிராகவும் அடிப்படையில் தேசிய இன விடுதலையைக் கோரும் மாநிலங்களாகவும் உள்ளன. தாமரையின் செல்வாக்கும், மோடியின் சர்வாதிகாரத்தனமும் தேசிய இனங்கள் முன் கைகட்டி நிற்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஊழல், விவசாயிகளின் துயரம், போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, இவை எல்லாவற்றையும் விட மாநில அரசுகளை அழிக்கநினைக்கும் மோடியின் அரசியல் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து பாஜகவை தோற்கடித்துள்ளன.

 

NSA கைதி அம்ரித்பால் சிங் எம்.பி.

அஸ்ஸாமின் திப்ருகர் மத்திய சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் அம்ரித்பால் சிங் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுப்புக் காவலில் உள்ளார்இவரைப் போலவேபாராமுல்லா தொகுதியில் பொறியாளர் ரஷீத் வெற்றியும் பார்க்கப்படுகிறதுமோடி ஆட்சியில் 2019ல் உபா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ரஷித் வெற்றிமோடியின் சர்வாதிகாரத்திற்கு தேர்தல் வெற்றியாகவேகணிக்கப்படுகிறது.



சமத்துவ இந்தியா என்ற கனவை அடைவதற்கு நீண்ட காலம் இன்னும் போராட வேண்டி இருக்கிறது. ஆனால், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடித்தளமாக கொண்ட குடியரசின் அடித்தளத்தை வலுப்படுத்துவது மோடி காலத்தில் அதிமுக்கியமானது. மோடியின் சர்வாதிகார கரங்களில் இருந்து இந்தியாவை மீட்டு, குடியரசின் அடித்தளத்தைக் கட்டமைக்க பாடுபட்டு உயிர்த்தியாகம் செய்த, இன்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கும் சமத்துவ குடியரசிற்காக கனவு கண்டு கொண்டிருக்கும் மக்களுக்கும் இந்த தேர்தல் நிம்மதி பெருமூச்சை விட வைத்துள்ளது.


- வன்னி அரசு