28 August 2012

நெருப்பைத் தின்று வெளிச்சமானவளே கரும்புலி செங்கொடி முதலாமாண்டு நினைவாக வன்னிஅரசு

தமிழ்க்குடி தழைக்க
தன்னையே தீய்த்த
எங்கள் குலக்கொடி
ஈடில்லா செங்கொடியே

இந்தியக் கொடி
தூக்குக்கொடியாய்
தமிழர் மூவர்
உயிர்குடிக்க
துடிதுடிக்க
தமிழர் நெஞ்சமெல்லாம்
பதைபதைக்க
நீ மட்டும்
தமிழர் நிலமெல்லாம்
விதைவிதைக்க
விடுதலை
வித்தானாய்

தீயிலும் வேகாத
ஒளியானாய் - கரும்
புலியானாய்

இலை மலர
ஈழம் மலருமென்று
ஆரூடம் சொன்னவர்கள்
அவாள்களின் முந்தானையில்
முகக்கரி துடைப்பதைக்
காணவொண்ணாமல்
கரிக்கட்டையாய் ஆனாயோ

புலி புலியென்று
நெடுமரமாய் நின்று
தமிழ்த்தேசியத்தின்
கெடுமரமாய்
போயசைத்
தாங்கிப் பிடிப்பதைப்
பொறுக்காமல்
உன்னை
நெருப்புக்குள்
கருக்கிக் கொண்டாயோ

செங்கோலிருந்தும்
தில்லி விருந்துக்காக
ஏமாற்று நாடகங்கள்
அரங்கேற்றிய
நயவஞ்சகத்தைக்
காணச் சகிக்காமல்
வெந்தணலுக்கு உன்னை
தின்னத் தந்தாயோ

வெந்ததைத் தின்று
விதிவந்தால் சாகும்
தமிழ்ச் சாதிக்கு
உயரூட்ட
நெருப்பைத் தின்று
வெளிச்சமானவளே

உன் வெளிச்சத்தில்
தில்லி இருட்டைப் பொசுக்கி
சிறுத்தைகள் நாங்கள்
தமிழர் விடுதலையை
வென்றெடுப்போம்!

31 July 2012

நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம்: 'அய்யோ இப்பவே கண்ணைக் கட்டுதே!' -வன்னிஅரசு

"அரசே என்ன இது? உங்கள் உடல் மூடப்பட்டு முகம் மட்டும் தெரிகிறது. அந்த மல்யுத்த வீரனுடைய முகம் மூடப்பட்டு உடல் மூடப்படாமல் இருக்கிறது. ஒன்றும் புரியவில்லையே"
"அட மங்குனி அமைச்சரே! உன் மூளைக்கு இதெல்லாம் புரியாது. இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்குப் பின் வரும் தலைமுறைக்குத் தெரியவா போகிறது? இப்படி நோஞ்சானாக ஒரு மன்னன் இருந்தான் என்பதைவிட பராக்கிரமசாலியாக, மாபெரும் வீரனாக இருந்தான் என்று வரலாறு சொல்ல வேண்டும். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!"
இம்சை அரசன் திரைப்படத்தில் வரும் இந்தக் காட்சி போல இருக்கிறது 'நாம் தமிழர்' சீமானின் பேச்சும் போக்கும்.
seeman_2992009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பிறகு தொடங்கிய ஓர் அரசியல் கட்சிதான் 'நாம் தமிழர்'. திரைப்படங்களில் ஒரே பாடலில் பண்ணையாருக்கு எதிராக மக்களைத் திரட்டும் கதாநாயகன் போல செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழக அரசியலில் புரட்சி செய்யக் கிளம்பியிருக்கிறார்.

தமிழீழத்தை மீட்பதற்காக விடுதலைப் புலிகள் நடத்திய மாபெரும் போர் தற்போதைக்கு முடிவுற்ற சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியையும் (பிற்பாடுதான் கொடியில் சிறிது மாற்றம் செய்தனர்) தமிழர் பெருந்தலைவர் சி.பா. ஆதித்தனார் ஆரம்பித்த 'நாம் தமிழர்' இயக்கப் பெயரையும் 'எடுத்து'க்கொண்டு தமிழக அரசியலில் புரட்சி செய்யக் கிளம்பி இருக்கிறார் அண்ணன் சீமான் அவர்கள் (சொந்த புத்தி எதுவுமில்லை என்கிற விவாதத்திற்கெல்லாம் போக வேண்டாம்).

22 July 2012

சமூகப் புரட்சி செய்த போராளித் தந்தையின் நினைவு நாள் வன்னிஅரசு


சூலை 14ஆம் நாளே அங்கனூருக்குப் புறப்பட்டாச்சு...


கடலூர் மாவட்டத்திற்குள் நுழைகிற இடத்திலிருந்து அங்கனூர் வரை ஒரே சுவரொட்டிகள்மயம்தான்... 'சூலை 15ஆம் நாள் அய்யா தொல்காப்பியன் நினைவு நாள்... போராளித் தலைவரை எமக்களித்த போராளித் தந்தைக்கு வீரவணக்கம்!' என்ற வாசகங்களை சுவரொட்டிகள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன. வெற்றிலைக் கறை பற்களுடன் அய்யா தொல்காப்பியன் அவர்களின் சிரிப்பு செம்மண் வரப்புப்போல் இருந்தது. சிரிக்கிறாரா நகைக்கிறாரா என்று தெரியாத அளவுக்கான சிரிப்புடன் சுவரொட்டி எம்மை வரவேற்றது.

நாமே கட்டுவோம் வலிமையான அமைப்பை - வன்னிஅரசு

நாமே கட்டுவோம் வலிமையான அமைப்பை
- வன்னிஅரசு

நெருப்பைக் கடப்பது எளிது
பொறுப்பாய் நடப்பது கடிது
புயலைக் கொண்டுவருவது எளிது
மக்களை அமைப்பாக்குவது கடிது
எது கடிதோ, எது முடியாதோ
அதை நிகழ்த்துதல்தான் புரட்சி

பொதுக் கிணற்றில்
புது பக்கெட் வாங்கிக்கூட
தண்ணீர் எடுக்க முடியாது
பொதுத் தெருவில்
புதுச் செருப்புடன்கூட
நடமாட முடியாது
சைக்கிளில் செல்ல முடியாது
நல்ல பெயர் வைக்க முடியாது
நல்ல சோறு சாப்பிட முடியாது
கை நிறைய காசு இருந்தும்
கொட்டாங்குச்சியில்தான் தேநீர்
அது ஒரு காலம்
அது நீலத் துண்டுகளின் காலம்
அது மனுக்கொடுக்கும் காலம்
அந்தக் காலம் இப்போது மலையேறிவிட்டது

அடங்க மறு
அத்து மீறு
திமிறி எழு
திருப்பி அடி
இந்த முழக்கமே பொதுப் பாதையைத் திறந்து விட்டது
பொதுக் கிணற்றை உடைத்து
சேரிப்பக்கம் மடை மாற்றியது
தேநீர்க் கடைகளெல்லாம் அதிர்ந்தன
தனிக் குவளைகள் உடைந்தன

இந்த அதிசயத்தை நிகழ்த்தியது யார்?
இந்தப் புரட்சியை நடத்திக் காட்டியது யார்?

பொன்விழாக் காணும் போராளித் தலைவரை
காலம் முன்மொழிகிறது
அர்ப்பணிப்பு வழிமொழிகிறது

நெல்லை விதைத்தால்
நெல்லைத்தான் தரும் வயல்
வானம் பார்த்த பூமியானாலும்
கம்மங் கதிர்களும் வரகு கதிர்களும்
காத்துக்கிடக்கின்றன விவசாயிகள் வருகைக்காய்
முளைப்பாரித் திருவிழாவும்
பெரிசுகளின் கும்மியாட்டமும்
வயலுக்கும் வீட்டுக்குமாய்
தானியங்கள் குவிந்து கிடக்கும்.

அந்த விவசாயிக்குத் தெரியும்
நிலம் என்னுடையது
பயிர் என்னுடையது
உழைப்பு என்னுடையது
இலாபமும் என்னுடையது

அந்த விவசாயிக்குத் தெரியும்
நமக்கு நாமே திட்டத்தின்கீழ்தான்
வெள்ளாமையைப் பெருக்க முடியும் என்று

இப்போது சொல்லுங்கள்
இந்த அமைப்பு என்னுடையது
இந்த கோட்பாடுகள் என்னுடையவை
இந்த அமைப்பின் அனைத்தும்
எனக்கே எனக்கு

நாமே கொட்டுவோம் தங்கக் காசுகளை
நாமே கட்டுவோம் வலிமையான அமைப்பை
தொடர்வோம் தகதக தங்க வேட்டையை