27 September 2014
பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் ஒரு காட்சி. அவ்வளவு சீக்கிரம் அந்தக் காட்சியை மறந்து விட முடியாது. ஊர்ப் பெரிய மனிதரான விஜயகுமார், அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை கொட்டும் மழையில் அடித்து விரட்டிக்கொண்டே, “எங்களுக்கு உதவியா இருக்கிறதுக்குத்தான் உங்களை இங்கே குடியமர்த்தியிருக்கோம். இப்ப உங்களுக்கு எங்க பொண்ணு வேணுமாடா?” என்று ஆதிக்க சாதி வெறியுடன் கத்துவார். தலித்துகள் வேறு நாட்டைச் சார்ந்தவர்கள் போலவும், அவர்களை எங்கிருந்தோ இந்த மண்ணுக்குக் கூட்டி வந்தது போலவும் ஆதிக்கச் சாதியினருக்கு அடிமை வேலை செய்வதற்காகத்தான், அவர்கள் ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் போலவும் இயக்குநர் சேரன் அந்தக் காட்சியைப் படத்தில் காட்டியிருப்பார். இம்மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாறு, சமூக-அரசியல் குறித்த பார்வை எதுவுமே இல்லாமல்தான் இதுகாறும் திரைப்படங்கள் வந்துள்ளன.
இந்துத்துவச் சிந்தனையாளர்களாக, நிலப்பிரபுத்துவச் சிந்தனையாளர்களாகத்தான் பல இயக்குநர்கள் இப்படி அலைகிறார்கள். சமூகம் குறித்த பார்வையோ, சாதி எப்படி உருவானது என்கிற வரலாற்றுப் புரிதலோ இல்லாமல்தான் சமூகம் குறித்துப் பேசுகிறார்கள்; காட்சி அமைக்கிறார்கள். சேரி - குப்பங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட - மீனவ மக்களை ரவுடிகளாக, அல்லது காமெடியன்களாக, திருடர்களாக, அழுக்கானவர்களாக, அறுவருப்பானவர்களாகத்தான் காட்டியிருக்கிறார்கள்.
காமெடி நடிகர்கள் விவேக், சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்கள் சாதாரணமாக ‘அட்டு ஃபிகர்’ என்று சொல்லுவார்கள். அவர்கள் இந்தச் சொல்லாடலைத் தெரிந்துதான் சொல்கிறார்களா அல்லது தெரியாமல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ‘அட்டு’ என்பது என்ன மொழி? எங்கிருந்து வந்தது. ‘பிut’ என்கிற வார்த்தையிலிருந்துதான் வந்திருக்க முடியும். ‘பிut’ என்றால் குடிசை. குடிசைகள் அதிகம் இருக்கிற சேரிப் பகுதிகளிலிருந்து வரும் பெண்களைக் கிண்டல் செய்கிற சொல்லாடல்தான் இந்த ‘அட்டு’. இந்தச் சொல் ஒரு சமூகத்தையே இழிவுபடுத்துகிற வகையில் பயன்படுத்தப்படும் சொல் என்பதை எந்த இயக்குநராவது புரிந்து வைத்திருக்கிறார்களா?
தலித்துகளுக்கென்று தனி அடையாளம் உண்டு; ஒரு தனி பண்பாடு உண்டு; கலை-இலக்கியம் உண்டு. ஆனால் இவற்றையெல்லாம் குறித்து எந்தத் திரைப்படமும், கலை-இலக்கியவாதிகளும் கவலைப்பட்டதில்லை. வெளியே முற்போக்கு சிவப்பு அரசியலைப் பேசக்கூடிய இயக்குநர்கள்கூட ஆதிக்க சாதி குறித்த கதைகளைத்தான் படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் பாரதிராஜாவோ, பாலாவோ விதிவிலக்கல்ல. சமூக மாற்றத்திற்காகக் களமாடிய தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவராகக் காட்டிக் கொள்கிற நடிகர் கமல்ஹாசன்கூட சாதிப் பெருமை பேசும் ‘தேவர்மகன்’, ‘விருமாண்டி’ போன்ற படங்களைத்தான் எடுத்தார்.
இயக்குநர் பாலாகூட நல்ல இயக்குநர் என்று பெயர் பெற்றவர்; பல விருதுகளை வாங்கியுள்ளார். ஆனால் அவரது ‘அவன் இவன்’ படத்தில் கொடூர வில்லனாகக் காட்டப்படுபவர் மாடு அறுக்கும் தொழில் செய்பவர். மாட்டை அறுப்பவன் தலித் சமூகமாகத்தான் அடையாளம் காட்டுவார்கள். அந்தச் சமூகத்தில் உள்ளவனை வில்லனாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பாலா.
இப்படி.. தாழ்த்தப்பட்ட மக்களின், பண்பாட்டையும் வரலாற்றையும் இதுவரை யாருமே கதைக் களமாக்க முன்வராத சூழலில் மிகத் துணிச்சலாக எடுக்கப்பட்டுள்ள படம்தான் ‘மெட்ராஸ்’. இத்திரைப்படம் மூலம் பல்வேறுவிதமான ஆதிக்கச் சிந்தனை உள்ளவர்களை குலைநடுங்க வைத்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.
தென் மாவட்ட மக்களின் - குறிப்பாக மதுரை மாவட்ட தேவர் மக்களின் - வாழ்க்கைப் பதிவு, கொங்குக் கவுண்டர்களின் வாழ்க்கைப் பதிவு என்று பல திரைப்படங்கள் சாதிப் பெருமையை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளன. தங்களை வாழ வைக்கும் சென்னை மாநகரில் உட்கார்ந்துகொண்டு, அந்த சென்னை மக்களுக்கு எதிராகவே படம் எடுக்கிறார்கள்.
ஆனால் சென்னையின் மண்ணின் மைந்தர்களான, அதுவும் வியாசர்பாடி, புளியந்தோப்பு பகுதி மக்களின் வாழ்வியல் முறை, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களைப் பயன்படுத்தும் அரசியல் என்று கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளின் அரசியலால் வடசென்னை எப்போது பார்த்தாலும் முட்டலும் மோதலுமாய் இருக்கிறது. அவரவர் சக்திகளுக்கு விளம்பரம் எழுதுவதற்காக சுவர் பிடிக்கும் தகராறிலிருந்து, கொலை வரை போய்க்கெண்டிருக்கிறது.
சுவர் என்பது வெறும் சுவரல்ல; அது காலம் காலமாய் நிறுவப்பட்டிருக்கும் அதிகாரம் என்று கதை விரிகிறது. இந்தப் பகை அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் தேர்தல் அரசியலுக்கு எப்படியெல்லாம் சேரி மக்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை உள்ளீடாகக் கொண்டுதான் கதை நகர்த்தப்படுகிறது.
‘மெட்ராஸ்’ படத்தில் மிகப் பிரமாண்டமான வீடுகள் இல்லை; செட்டுகளும் இல்லை. மிகக் குறுகிய அவுசிங் போர்டு வீடுகளுக்குள்தான் கேமரா புகுந்து விளையாடுகிறது. பறந்து பறந்து அடிக்கும் ஹீரோத்தனமான சண்டைகள் இல்லாத எதார்த்தமான தெருச் சண்டைகள், கதாநாயகி சிரித்தவுடனேயே வெளிநாடுகளில் பல்வேறு அரை குறை ஆடைகளுடன் ஆட்டம்போடும் எந்தக் காட்சியையும் இதில் திணிக்காமல், மிக நேர்த்தியாக அன்றாடம், பார்த்துப் பழகிய இடங்களையே அழகியலாக காட்சிப்படுத்தியிருப்பது மிகச் சிறப்பு.
‘மெட்ராஸ்’ படமும் ஓர் ஆழமான நட்பைப் போற்றும் கதைதான். கிருஷ்ணப்ப நாயக்கர் குடும்பத்தின் அரசியல் ஆதிக்கத்தை எதிர்க்கும் அன்பு, அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அணி பொறுப்பாளர் ஆகிறார். அன்புவின் நண்பர்தான் ஹீரோ காளி (கார்த்திக்). கொல்லப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கரின் (கவிஞர் ஜெயபாலன்) படத்தைச் சேரிச் சுவரில் மிகப் பிரமாண்டமாக வரைந்து வைத்து அதை அழிக்க முடியாத அளவு பல்வேறு வதந்திகளைப் பரப்புகிறார்கள். அந்தப் படத்தை அழிக்க முயற்சி செய்கிறான் அன்பு. இதனையொட்டி நடக்கும் கோஷ்டிச் சண்டைகளும், கொலைகளும்தான் கதை.
படித்துவிட்டு ஐ.டி.யில் வேலை பார்க்கும் கதாநாயகன் காளிக்கும், அன்புக்கும் இடையேயான நட்பு, அன்பும் அவனது மனைவி மேரிக்கும் இடையேயான காதல் உறவு, வியாசர்பாடி மக்களுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு எல்லாம் அப்படி அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தன் வேலையுண்டு, காதல் உண்டு என்று சுற்றும் காளி, நண்பன் அன்புவை எதிரிகளிடமிருந்து காப்பாற்றச் சண்டையிடும் காட்சி இதுவரை திரையுலகம் பார்த்திராதது. மிக எதார்த்தமாக, ஹீரோத்தனம் இல்லாமல் தப்பித்துச் செல்லும் நோக்கிலேயே தற்காப்புக்காகச் சண்டையிடும் காட்சி மிகச் சிறப்பு. பகைவனை கொலை செய்துவிட்டு தப்பிக்க முடியாமலும், வழி தெரியாமலும் திணறும் காட்சி எதார்த்தமானதாக இருக்கிறது. பின்பு சரண்டராகப் போகும் நீதிமன்ற வளாகத்திலேயே அன்பு கொல்லப்படுவதும், கொல்லப்பட்ட பிறகு நடக்கும் அரசியல் விளையாட்டும் எதிர்பாராதது. துரோக அரசியல்தான் தன் நண்பனை வீழ்த்தியது என்பதை அறிந்து கொதிக்கும் கதாநாயகன், நண்பனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கிருஷ்ணப்ப நாயக்கரின் ஓவியத்தை அழிப்பதும், துரோகத்தை வெல்வதும்தான் கதை. இந்தக் கதைக்குள்தான் புதுக்கவிதை போன்ற நாயகன் - நாயகியின் காதல், கட்சித் தலைமையின் துரோகம், ஏமாற்று வேலை என்று எகிறிக்கொண்டே போகிறது. இறுதியில் ஓவியம் அழிக்கப்பட்ட சுவரில் ரெட்டைமலை சீனிவாசன் அறக்கட்டளை சார்பாக கல்வியை வலியுறுத்தி விளம்பரம் செய்திருப்பார்கள். நாயகனும் நாயகியும் அம்பேத்கர் பாடசாலையில் நின்று, ‘நாம் கல்வி கற்க வேண்டும், அத்துடன் சமூக அரசியலுடன் கூடிய அரசியலையும் கற்க வேண்டும்’ என்கிற புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியலைச் சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.
சேரி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தலித்துகளை இருட்டுக்குள் தள்ளும் அரசியலை வெளிச்சமாக்கியிருக்கிறது இந்த ‘மெட்ராஸ்’ திரைப்படம். தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள்கூட சாதி, மதம் என்று வரும்போது கத்தியைத் தூக்கிக்கொண்டு நிற்பார்கள் என்று கதாநாயகன் பேசுவது இங்குள்ள போலித் தமிழ்த் தேசியவாதிகளை தோலுரித்துக் காட்டுகிறது. சண்டை ஒன்றில் கதாநாயகன் அடிபட்டவுடன் வேறு நல்ல அமைதியான இடத்திற்குப் போவோம் என்று அப்பா சொல்லும் அப்பாவிடம், “இது நம்ம இடம், நாம ஏன் வெளியில போகணும்?” என்று காளி கேட்பது மண்ணுரிமை அரசியலை முன்னிறுத்துகிறது.
அன்பு கொல்லப்பட்டவுடன் அவனது பிணத்தின் முன்பு கானா பாலா பாடும் பாடல் துக்கமானது. சாவு வீட்டின் முன்பு வியாசர்பாடி இளைஞர்கள் ஆடும் சாவுக் கூத்து மிகைப்படுத்தப்படாமல் அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சேரி மக்களின் திருமண வாழ்க்கையில் வரதட்சணை என்பது ஒரு பிரச்சனையே இல்லை என்பதை கதாநாயகன் - கதாநாயகி நிச்சயதார்த்தக் காட்சியின் மூலம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இப்படி பல சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஜானி கதாபாத்திரம் மறக்கவே முடியாதது. அவர் கொல்லப்படும்போது ஒட்டுமொத்தக் கோபமும் கிருஷ்ணப்ப நாயக்கரின் ஆட்களின் மீதுதான் திரும்புகிறது. அப்படி கதை மாந்தராகவே ஜானி படம் முழுக்க வந்து போகிறார்...
சென்னை வடசென்னை
இந்தக் கறுப்பர் தமிழ் மண்ணை
யாரோ இசைப்பாரோ - எங்க
வேரை அசைப்பாரோ
எங்க ஊரு மெட்ராசு - அதுக்கு
நாங்கதானே அட்ரசு
.. என்ற படத்தின் தொடக்கப் பாடல் மூலம் சென்னையைப் பெருமைப்படுத்தும் மக்கள் கவிஞர் கபிலனின் வரிகளுக்கேற்ப இம்மண்ணின் வேர்களான தலித் மக்களின் வாழ்க்கையை வெறும் சாதிப் பெருமையாகப் பேசாமல், கடந்த கால சுயநல அரசியல் ஒரு சமூகத்தை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டது என்பதையும், அதிலிருந்து விடுபட சமூக அரசியலுடன்கூடிய கல்விதான் தேவை என்கிற கருத்தியலோடு படமாக்கிய இயக்குநர் பா.ரஞ்சித், இப்படத்தைத் துணிச்சலாகத் தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்டோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment