31 January 2015

ஈழத்தமிழர் சிக்கல்: புதிய இரு வல்லவர்களும் பழைய அலாவுதீன் விளக்கும்

இலங்கையின் புதிய இரு வல்லவர்களுக்கு பழைய அலாவுதீன் விளக்கு ஒன்று கிடைத்துவிட்டது. பங்காளிகள் எல்லாம் வேண்டாம் என்று பழைய குப்பை கூளங்களுடன் பரணியில் தூக்கிவீசப்பட்ட அந்த அலாவுதீன் விளக்கை மீண்டும் தூசிதட்டித் துடைத்து எடுத்துவிட்டார்கள். அந்த விளக்கு மிகவும் சக்தி வாய்ந்ததென்றும் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய வல்லமை பொருந்தியதென்றும் உலகின் சகல ஜனங்களுக்கும் அறிவிப்புச் செய்துவிட்டார்கள். அந்த விளக்கு இலங்கைத் தீவுக்கே வெளிச்சம் கொடுக்கப் போகிறதாம். அதைத் தடவித் தடவிப் பார்த்தாலே போதும் பாலும் தேனும் கிடைக்குமாம். அது எல்லோருக்குமான எல்லாவிதமான பசியையும் தீர்த்துவிடுமாம். அரை நூற்றாண்டுக்கு மேலான மக்கள் பிரச்சனைகளைக்கூட இந்த விளக்கு தீர்த்துவிடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட அந்த அற்புத விளக்கின் பெயர் 13வது சட்டத் திருத்தம். இரு வல்லவர்கள் மைத்ரிபால சிறீசேனா, ரணில் விக்ரமசிங்கே.



2009ஆம் ஆண்டு இனப்படுகொலை நடத்திய இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாகத் தண்டிக்க வேண்டும் என்று உலகம் முழுக்க தமிழர்கள் அப்போதிருந்தே போராட்டங்களை முன்னெடுத்தார்கள். ஐக்கிய நாடுகள் அவையில் இராஜபக்சேவைத் தண்டிக்க வாக்கெடுப்புக்கூட நடத்தினார்கள். தண்டிக்க முடியவில்லை. ஆனால் அறம் சார்ந்த தமிழர்கள் இராஜபக்சேவைத் தண்டிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் வந்தது. நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் இராஜபக்சேவை சனநாயக முறையில் தண்டித்தார்கள். வடக்கு-கிழக்கு, மலையகப் பிரதேசங்களின் கோப நெருப்பு இராஜபக்சேவை வீழ்த்தியது. இலங்கைத் தீவுக்கு யார் அதிபராக வரவேண்டும் என்று தீர்மானிக்கக்கூடிய சக்தியாய் சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்தனர். இராஜபக்சே கட்சியின் பொதுச்செயலாளரான மைத்ரிபால அதிபரானார். ஏற்கனவே குள்ளநரியாக இருந்த ரணில் விக்ரமசிங்கே 13வது சட்டத்தைக் காட்டி இப்போது நல்ல நரியாக ஊளையிடுகிறார். இலங்கையின் இனப்பிரச்சனைகள் அத்தனைக்கும் சர்வரோக நிவாரணி 13வது சட்டத் திருத்தம்தான் என்று மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இலங்கையின் உச்ச நீதிமன்றமே 13வது சட்டத்திருத்தம் செல்லாது என்று தீர்ப்புக் கூறிய பிறகும் இலங்கையின் புதிய வல்லவர்கள் அதை நடைமுறைப்படுத்தப் போவதாக ஏமாற்றுகிறார்கள்.

சரி இந்த 13வது சட்டத்திருத்தத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

தனித்தமிழ் ஈழத்தில்தான் தமிழ் மக்கள் சுதந்திரமாக தனித்த இறையாண்மையோடு வாழ முடியும் என்கிற உறுதியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத் தந்தை செல்வா போராடினார். ஆனாலும், சிங்கள, பௌத்தப் பேரினவாதம் ஈழத் தந்தை செல்வா அவர்களின் அறப்போராட்டத்தை அரச பயங்கரவாதம்கொண்டு ஒடுக்கியது. அழுத்த அழுத்த வெடிகுண்டுகள் வெடித்தன. புலிகள் முளைத்தனர். புலிகளின் ஆயுதவழிப் போராட்டத்தை நசுக்க சிங்களப் பேரினவாதம் கடும் முயற்சியில் ஈடுபட்டது. புலிகளின் வலிமையை, உறுதியை சிங்களவர்கள் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், 1987 சூலை 5ஆம் நாள் நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலால் சிங்களப் பேரினவாதம் நிலைகுலைந்தது. சிங்களம் மட்டுமல்ல உலகமே அதிர்ந்தது. புலிகளைச் சமாளிக்க முடியாமல் இந்தியாவின் உதவியை நயவஞ்சகமாக நாடினார் அன்றைய அதிபர் ஜெயவர்த்தனே. அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனேயின் வஞ்சகத்தை அறியாமல் சிங்கள வலையில் வீழ்ந்தார். சூலை 29, 1987அன்று இந்திய-இலங்கை உடன்பாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்பமிட்டனர். தமிழர்களின் சார்பில் கையெழுத்திட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியா மிரட்டியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தால் தமிழர்களுக்கு எந்தப் பலனும் இல்லையென்று பிரபாகரன் மறுத்துவிட்டார். தமிழர்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமலேயே உடன்படிக்கை கையொப்பமானது. இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை தமிழ்ப் பெண்களை வேட்டையாடியது. தமிழர் உடைமைகளைச் சூறையாடியது. தமிழர்களைக் கொன்றுகுவிப்பதன் மூலம் புலிகளை அடிபணிய வைக்க முயன்றது. கூடுதலாக, புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் குறிவைத்து கொலை செய்ய 'செக் மேட்' எனும் நடவடிக்கையிலும் இறங்கியது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒட்டுக் குழுக்களுக்கு இந்திய இராணுவமே ஆயுதங்களை வழங்கி புலிகளுக்கு எதிராகக் களமிறக்கியது. இந்த அணுகுமுறை இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கே எதிரானதாகும். அதாவது, போராளிக் குழுக்கள் அனைவரும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சனநாயகப் பாதைக்கு வரவேண்டும் என்பதுதான் இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம். ஆனால் புலிகளை மட்டும் அழிப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தமாக அது மாறிப்போனது. ஆனாலும் புலிகள் நெஞ்சுரத்தோடு இந்திய இராணுவத்தை எதிர்கொண்டார்கள். இந்திய இராணுவத்தின் அட்டூழியத்தைக் கண்டித்துத் தமிழகம் கொதித்தது. இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என்னும் போராட்டம் வலுத்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வி.பி.சிங் இந்தியப் பிரதமரானார். அமைதிப்படை திரும்பப் பெறப்பட்டது.




இந்திய-இலங்கை உடன்படிக்கை சனநாயகத்தின் முன் கிழித்தெறியப்பட்டது. விடுதலைப் புலிகள் இந்த உடன்பாடு குறித்து கடந்த சூலை 9, 1988 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 9 மாதங்களாக இந்திய இராணுவத்தினரால் எங்கள் மீது தொடுக்கப்பட்டுவரும் அநீதியான இராணுவ நடவடிக்கையினால் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் பாலிய வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். பல இலட்சம் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வனவிலங்குகளும் காடுகளும் அழிக்கப்பட்டன. 

 கடந்த 40 ஆண்டுகளாக இனப்படுகொலையொத்த அடக்குமுறையைச் சந்தித்துவரும் தமிழ் மக்களுக்கு பல கோடி ரூபாய் செலவழித்து தமிழர் பகுதிகளில் குண்டுகளைப் பொழிந்து இந்தியா சனநாயகத்தை சொல்லித்தர முயற்சிக்கிறது. இந்தியாவின் பிரச்சாரம் என்பது வடக்கு-கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக ஒன்றிணைத்து அங்கு தேர்தல் நடத்தப்பட்டால் தமிழர்களின் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சொல்கிறார்கள். இங்கே அளப்பரிய தியாகம் செய்த தமிழ் மக்களும், வீரச்சாவடைந்த மாவீரர்களின் அர்ப்பணிப்பும் அதிகாரமே இல்லாத மாகாண சபைத் தேர்தலுக்கோ மாகாணங்களின் தற்காலிக இணைப்புக்கோ அல்ல என்பதை நினைவுகூரவேண்டும். இங்கே வடக்கும் கிழக்கும் என்று சொல்லப்படுவது தமிழர்களின் தாயகம். அது பிரிவினைக்கு அப்பாற்பட்டது.

வடமராச்சியில் இலங்கை இராணுவ நடவடிக்கையையடுத்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட்டோம் என்று இலங்கை இராணுவம் கொக்கரித்தது. அதே வேளையில் 1987 சூலை 5 நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலையடுத்து சிங்களர்களும் ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறவில்லை என்பதையும், விடுதலைப் புலிகள் ஒடுக்கப்படவில்லை என்பதையும் உணர்ந்துகொண்டனர். தமிழர்களைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு இலங்கைக்குள் நுழைந்த இந்தியா, சிங்களர்களைவிட மோசமான கொடுமைகளைப் புரிந்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட்டதாகவும், கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கிறது. துரோகிகளின் உதவியிலாவது தேர்தலை நடத்த முடியுமா என்று வாய்ப்புகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது. 

 இந்திய இராணுவத்தின் முகாமாக மாற்றப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் போலியான தேர்தலை நடத்தி பொம்மை அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் தமிழீழத்தில் சனநாயகம் திரும்பிவிட்டது என்று உலகை நம்ப வைக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. ஏனென்றால், தமிழர்களுக்கு ஞாயமான பாதுகாப்பை வழங்காத எந்தவொரு தீர்வையும் சமாதானம் என்கிற போர்வையில் புலிகள் ஏற்க மாட்டார்கள் என்பதால் இந்தியா புலிகளை அழிக்கவும் அதன் தலைவர்களை ஒழித்துக்கட்டவும் பெரும் முயற்சி எடுத்துவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர்களையும் அழிப்பதன் மூலம் இந்திய-இலங்கை உடன்பாடு என்னும் தமிழர்களின் அடிமை சாசனத்தை அமல்படுத்த முடியும் என்று இந்தியா நம்புமானால் அது தவறாகும். 

தொடர்ந்து இந்தியா புலிகளை அழிப்பதிலும் தமிழர்களைக் கொல்வதிலும் ஈடுபடுமானால் அர்த்தமற்ற இந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து பின்வாங்கி அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக தமிழ்த் தேசத்தை நீண்டதொரு போராட்டத்திற்குத் தயார்படுத்த புலிகள் தள்ளப்படுவார்கள்.

- இப்படி தொலைநோக்குப் பார்வையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்ததன்பேரில், அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக, தமிழீழ விடுதலைக்காகப் போராடி இலட்சக் கணக்கான மக்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் மாண்டு மடிந்திருக்கிறார்கள். இந்தச் சோகத்தின் நெருக்கடியில்தான் 13வது சட்டத் திருத்தத்தை ரணில் விக்ரமசிங்கே நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். 

இந்திய அமைதிப் படையின் டாங்கியை வீழ்த்திய பெண் புலிகள்

1988ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் இந்தியாவே நடத்திய போலித் தேர்தலில் மாகாண முதல்வராக அமர்த்தப்பட்ட வரதராஜபெருமாள், 1990இல் இந்த சட்டத் திருத்தத்தால் தமிழர்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை என்று சொல்லிவிட்டு விடைபெற்றார். இந்திய இராணுவமும் இந்தியாவுக்குத் திரும்பும்போது வரதராஜபெருமாளை பாதுகாப்பாக கப்பலில் அழைத்துவந்து இறக்கிவிட்டது.

இப்படி, இந்தியாவின் எடுபிடியாக, பொம்மை முதல்வராக இருந்த வரதராஜபெருமாளே, இந்தச் சட்டத் திருத்தத்தால் எந்தவிதப் பயனும் இல்லை என்று சொன்ன பிறகும், இச்சட்டத்தை இப்போது நடைமுறைப்படுத்த இலங்கை அரசு துடிப்பதற்குக் காரணமென்ன?

முள்ளிவாய்க்கால் போருக்கு பின் சிங்கள அரசின் வெ(ற்)றிக் கொண்டாட்டத்தில் இராஜபக்சேவும் சிறீசேனாவும் 

வரும் மார்ச் 25ஆம் தேதி ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. அதற்குள்ளாக தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் என்ற பேரில் எதையாவது கொடுத்து இனப்பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று அறிவிப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அது மட்டுமல்லாமல் மார்ச் 25க்குப் பிறகு ஐ.நா. குழு இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்கத் தொடங்கினால் இராஜபக்சே மட்டுமல்ல அன்றைய இராணுவ தளபதி சரத் பொன்சேகா, மைத்ரிபாலசிறீசேனா (புலிகளின் மீதான போருக்கு ஒப்பமளித்த அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர்) போன்றோரும் குற்ற விசாரணையில் சிக்கிக்கொள்ள நேரிடும். இவற்றையெல்லாம் தடுப்பதற்காகவும், ஏமாற்றவும்தான் 13வது சட்டத் திருத்தத்தைத் தூசிதட்டி எடுத்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களை இலங்கையில் மீள்குடியமர்த்தும் பணியில் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த 30-1-2015 அன்று புதுதில்லியில் அகதிகள் மீள்குடியேற்றம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அக்கூட்டம் கூட்டப்படக்கூடாது என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தமிழர்களின் உணர்வைப் பிரதிபலிப்பதான, வரவேற்கத் தகுந்த எதிர்ப்பாகும். ஐ.நா. மனித உரிமை அவை கூடுவதற்கு முன்பு இந்தியாவில் உள்ள அகதிகள் இலங்கையில் குடியமர்த்தப்பட்டுவிட்டதாக உலகை நம்ப வைக்கத்தான் இத்தகைய முயற்சிகள் நடக்கின்றன. போர் முடிந்து இராஜபக்சே வீழ்த்தப்பட்ட பிறகு தமிழர்கள் அங்கே போவதுதானே ஞாயம்? என்றுகூடச் சிலர் கருத்து வைக்கிறார்கள்.

13வது சட்டத் திருத்தத்தின்படி முதலில் தமிழர்கள் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும். சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்தி, தமிழர் நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும். உயர் பாதுகாப்பு வளையமாக மாற்றப்பட்டுள்ள தமிழர் தாயகத்தின் நெருக்கடியைத் தளர்த்த வேண்டும். இவற்றை முன்னோட்டமாக புதிய மைத்ரிபால அரசு செய்யாமல் வேறு எதைச் செய்தாலும் உலகை ஏமாற்றத்தான் அது என்பது நிரூபணமாகும்.

இலங்கையை சர்வதேச நெருக்கடியிலிருந்து காப்பாற்ற இந்தியா இப்போதே அதற்கான பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டது.

ஆனால் தமிழர்களாகிய நாம்...?

வன்னிஅரசு.

0 comments:

Post a Comment