27 June 2024

தலித் வாக்குகள்: மோடியின் வீழ்ச்சியும் காங்கிரஸ் எழுச்சியும்

ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்க வடிவம் மட்டுமல்ல. இது முதன்மையாக தொடர்புடைய வாழ்க்கை முறை, இணைந்த தொடர்பு அனுபவம். இது அடிப்படையில் சக மனிதர்களுக்கு மரியாதை மற்றும் மரியாதைக்குரிய அணுகுமுறையாகும் - புரட்சியாளர் அம்பேத்கர்

தலித் எழுச்சி - மோடியின் வீழ்ச்சி:

இந்திய ஜனநாயகத்தின் மாண்பு சிதைக்கப்படும் போதெல்லாம் தலித் மக்கள் நாட்டின் இறையாண்மையைக் காத்துள்ளனர். சனாதனம் உயர்த்திப்பிடிக்கப்பட்ட போதும், சாதி ரீதியான கட்டமைப்புக்கு எதிராகவும், பொது சமூகத்தின் உரிமைக்கும் சேர்த்தே தலித் மக்கள் குரல் கொடுத்திருக்கின்றனர். உண்மையில், இந்தியாவின் வரலாறு என்பது ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையில் நடந்த போராட்டத்தின் வரலாறு தான். பார்ப்பனீயம் - சனாதனம் - மனு உள்ளிட்டவை இந்திய மக்களை பிரித்து சாதிய சமூகமாக பாகுபடுத்தி அரசியல் செய்த போது இதனை துணிச்சலோடு எதிர்த்தவர்கள் தலித் மக்கள் தான்.


கீழ் வெண்மணி மற்றும் பீமா கொரேகான் என இந்திய சரித்திரத்தில் ஒரு எழுச்சியையே தலித்துகள் தங்களின் உரிமை முழக்கத்தின் மூலமாக நிலைநாட்டி காட்டியிருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு மோடிக்கு எதிராக ஜனநாயக முறைப்படி வாக்கு அரசியலில் தலித் மக்கள் மிகவும் நுட்பமான ஒரு அரசியல் போராட்டத்தை நடத்தி மோடிக்கு கடிவாளம் போட்டுள்ளனர்.

பாஜக தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் போனதற்கும், கூட்டணியை நம்பியே ஆட்சியை தொடர வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியதே தலித் மக்களின் எழுச்சி தான். அதாவது, பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2019 தேர்தலுடன் ஒப்பிடும் போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 77 தொகுதிகளில் 22 இடங்களில் பாஜக தோற்று தற்போது 55 தொகுதிகளை மட்டுமே பாஜக தக்கவைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மொத்தம் 272 இடங்கள் தேவை. இதில், பாஜக வெறும் 240 தொகுதிகளை தான் கைவசம் வைத்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவுக்கு 32 இடங்கள் கூடுதலாக தேவைப்பட்டன. பாஜக செல்வாக்கு உள்ளதாக மோடி கும்பலால் திரும்பத் திரும்ப செல்லப்படும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட இடங்களில் பாஜகவை தலித் மக்கள் ஜனநாயகத்திற்கு எதிரி என இனம் காட்டி வெளியே தள்ளியுள்ளனர். 

மோடியை பணியச் செய்த இந்திய அரசியலமைப்பு சட்டம்

தலித் மக்களின் இந்த எழுச்சி தான் மோடியின் ஆட்சி கட்டிலை அசைத்துப் பார்த்துள்ளது. ஒவ்வொரு நாளும் பிரதமர் நாற்காலியில் மோடி நடுக்கத்துடன் அமர்ந்திருக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. எப்படி நடந்தது இது என்பதை விரிவாக ஆராய்ந்தால் பல நுட்பமான விஷயங்கள் வெளிச்சப்படுகின்றன. 

வட இந்தியாவில் கோலோச்சிய தலித் மக்கள்:

இந்தியா முழுமைக்கும் மொத்தம் 131 தொகுதிகள் பட்டியல் இன மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, பீகார், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 19 இடங்களில் பாஜகவுக்கு எதிராக பட்டியலின மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரித்து வாக்களித்துள்ளனர். மகாராஷ்டிரா, ஜார்கண்ட், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் முழுவதிலும் 10 பழங்குடியின தொகுதிகளை பாஜக இழந்துள்ளது.

இதில், நுட்பமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், பட்டியலின மக்களுக்கான தொகுதிகளில் 12 தொகுதிகளையும் பழங்குடியின மக்களுக்கான தொகுதிகளில் 7 இடங்களையும் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 2014ல் பட்டியலின பழங்குடியின மக்களின் தொகுதிகளில் 71 இடங்களையும், 2019ல் 77 இடங்களையும் பாஜக கைப்பற்றியது. மறுபக்கத்தில், 2019ல் 7 இடங்களை மட்டுமே தக்கவைத்திருந்த காங்கிரஸ் தற்போது பழங்குடியின மற்றும் பட்டியலின தொகுதிகளில் 32 தொகுதிகளை மீட்டுள்ளது. அதில் 19 தொகுதிகளை நேரடியாக பாஜகவை வீழ்த்தியுள்ளது ஒருவகையில், பாஜகவின் சனாதனத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியோடு தலித் மக்கள் கைகோர்த்து நின்றுள்ளனர் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

சமாஜ்வாதி கட்சி (SP) உத்தரபிரதேசத்தில் பட்டியலின மக்களுக்கான ஐந்து தொகுதிகளைக் கைப்பற்றியது; திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கூச்பெஹாரில் வெற்றி பெற்றது. தும்காவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) வெற்றி பெற்றது; சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP-SP)பாஜகவுக்கு எதிராக நின்ற திண்டோரியை கைப்பற்றியது.

பழங்குடிகள் இந்துக்கள் அல்ல, தனித்த சமய நம்பிக்கை கொண்டவர்கள் என்ற கருத்தை முன்வைக்கும் பாரதிய ஆதிவாசி கட்சியின் (BAP) ராஜ்குமார் ரோஹத் காங்கிரஸ் ஆதரவுடன் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா தொதிகுதியில் பாஜக வேட்பாளரைவிட 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பழங்குடிகளுக்கு ’பில் (Bhil) மாநிலம்’ கோரிக்கையை இன்னும் தீவிரப்படுத்துவோம் என்று அறிவித்துள்ளார் ராஜ்குமார்.

பீர்சா முண்டா படத்துடன் ஒட்டகத்தில்மக்களவைக்கு வந்த ராஜ்குமார் ரோஹத்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும் ஒன்றிய அமைச்சரவையில் பழங்குடியினர் விவகார அமைச்சராக பொறுப்பு வகித்த அர்ஜூன் முண்டாவை குந்தி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் காளி சரண் முண்டா கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பழங்குடிகளுக்கான 5 தனி தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் வேலூர் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி (3,36,591) 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார். விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் அறிஞர் ரவிக்குமாரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க வேட்பாளர் முரளி சங்கர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். (தமிழ்நாட்டின் நிலவரத்தை இன்னொரு பத்தியில் விரிவாக பேசலாம்.)

தலித் மக்களின் எழுச்சி எப்படி?

புரட்சியாளர் அம்பேத்கர் தொடங்கி வைத்த கருத்தியல் நெருப்பு 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பரவியது. இந்த தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் தலித் மக்கள் மிகவும் உறுதியாக இருந்துள்ளனர். அதாவது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் சாசனத்தையே மாற்றிவிடுவார்கள் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களிடம் உண்மையை விளக்கினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மோடியை காத்திரமாக எதிர்த்தவர். தமிழ்நாட்டில், 2014ல் இருந்து உண்மையிலேயே மோடியை, ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கும்பலை கொள்கைரீதியாக திருமாவளவன் வலுவாக தொடர்ந்து எதிர்த்து வந்தார். பாஜக - மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பை மாற்றிவிடுவார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் தலித் மக்களுக்கு போராடி பெற்றுக்கொடுத்த உரிமைகளைக் கூட மோடி கும்பல் பறித்து சனாதனவாதிகளின் கையில் கொடுத்துவிடுவார்கள் என்று முழங்கினார். திருமாவளவனின் சனாதன எதிர்ப்பு முழக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தியும் உருவ பொம்மையை எரித்தும் அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர். ஆனால், 2014லிருந்து தலைவர் திருமாவளவன் எதை முழங்கினாரோ அந்த கருத்து தான் இன்றைக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டுள்ளது.


வட இந்தியாவின் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தினூடாக இந்த கருத்தையும் தலித் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இதன் குறியீடுதான், பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்பது உறுதியான உடனேயே, காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்த போது அம்பேத்கர் வகுத்துக்கொடுத்த அரசியல் சாசனத்துடன் செய்தியாளர்களை சந்தித்தார். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல்சாசனத்தின் மீது பேரிடி விழும் என்ற எச்சரிக்கை மணியை தலித் மக்கள் மிகத்தெளிவாக புரிந்துகொண்டனர். இந்த அரசியல் புரிதல் தான் சர்வாதிகாரி மோடிக்கு தற்போது கடிவாளம் போட்டுள்ளது.

யாரைத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதில் தெளிவு:

தலித் வேட்பாளர்கள் என்ற அளவில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கூட தனித்தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கின. ஆனால், தனித்தொகுதியில் இருந்த வாக்காளர்கள் சர்வாதிகாரி மோடியும் அவரது வகையராக்களும் ஆட்சி அதிகாரத்தை அடைந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். இந்தியாவின் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் ஜைனர்கள், தமிழ்நாட்டில் கவுண்டர்கள், கர்நாடகாவில் லிங்காயத்துகள், மகாராஷ்டிராவில் மராட்டியர்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரெட்டிகள் சிறிய எண்ணிக்கையில் உள்ளனர். இந்த இடங்களில் தலித்துகளின் வாக்குகளை மிஞ்சி சில வாக்குகள் பாஜக வசம் சென்றன. இருப்பினும் கூட பாஜகவால் வெற்றிப்பெறமுடியவில்லை.

விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளை எடுத்துக்கொண்டால், தலைவர் திருமாவளவனையும் அறிஞர் ரவிக்குமாரையும் வீழ்த்தும் முழு வீச்சில் ஆர்.எஸ்.எஸ். - சங்பரிவார் கும்பல் தீவிரமாக களமாடியது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் ஆர்.எஸ்.எஸ் - சங்பரிவார் நேரடியாகவே தேர்தல் பணி செய்வதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. இவர்களோடு, பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவும் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தேர்தல் பரப்புரையில் இறங்கியது. சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சிதம்பரத்தில் பானையை உடைத்தே ஆகவேண்டும் என்றார். ஆனால், நடந்தது என்ன? மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சொந்தங்களும் கூட தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக நின்றனர். ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட இடங்களில் தான் அதிமுக இரண்டாம் இடம்பிடித்தது. ஆனால், பாமகவின் நிலை என்ன ஆனது? சர்வாதிகாரத்தையும் சாதிய கொடுங்கோன்மையையும் சிதம்பரம் தொகுதி மக்கள் மிக உறுதியாக எதிர்த்தனர்.

தலைவர் எழுச்சித்தமிழர் - அறிஞர் ரவிக்குமார்

பாஜக செல்வாக்கு செலுத்தும் மாநிலமாக பார்க்கப்படும் உத்தரப்பிரதேச அரசியல் களத்திலும் தலித் மக்கள் பாஜகவை விரட்டி அடித்துள்ளனர். இதில், இன்னொரு விஷயத்தையும் தெளிவாக புரிந்துகொள்ளலாம். உத்தரப்பிரதேசத்தில் பாஜக - சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி அதிகாரம் கொண்ட கட்சிகளாக இருக்கின்றன. மறைமுகமாக பாஜக உடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியில் இருப்பதை உத்தரப்பிரதேச மக்கள் தெளிவாகவே புரிந்துகொண்டனர். ராம்தாஸ் அத்வாலே, மாயாவதி இருவரும் அம்பேத்கரின் கொள்கையில் இருந்து பிறழ்ந்து செல்வதை உத்தரப்பிரதேச மக்கள் தெளிவாகவே இனங்கண்டு கொண்டுள்ளனர். இந்த இடத்தில் ஒரு ஒப்புமையை பார்க்க வேண்டி இருக்கிறது. அம்பேத்கரிய சிந்தனையை சர்வாதிகாரத்தையும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை எதிர்க்கும் தலைவர் திருமாவளவனை மக்கள் தமிழ்நாட்டில் ஆதரித்ததையும், அம்பேத்கரியத்திலிர்ந்து விலகிச் சென்ற மாயாவதியை உத்தரப்பிரதேசத்தில் மக்கள் எதிர்த்ததையும் ஒப்பிட்டுபார்க்கலாம். அதாவது, பகுத்தறிவு மாநிலம் சாதி, மத அடையாளங்களுக்கு அப்பால் சென்று பகுத்தறிவுடன் தலைவர் திருமாவளவனை அங்கீகரித்துள்ளனர். பக்தி உச்சமாக இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் மோடியை எதிர்க்காததால் மாயாவதியையும் மக்கள் நிராகரித்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி

மாயாவதியின் இந்த வீழ்ச்சி ஒருபக்கம் அம்பேத்கரிய சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதாலும் மற்றொருபுறம், மக்களை நேரடியாக பாதிக்கக் கூடிய விஷயங்களில் மௌனமாக இருந்ததன் விளைவால் ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய CAA க்கு எதிரான போராட்டங்களின் போது மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை தூண்டிவிட்டு NRC ஐ முன்மொழிந்தனர். ஆனால் யார் பாதிப்பை ஏற்படுத்தினார்கள்? மிருகத்தனமான காவல் சித்ரவதை அடக்குமுறைகளையும் தோட்டாக்களையும் எதிர்கொண்டவர்கள் முஸ்லிம்களும் தலித் மக்களுமாக இருந்தார்கள். பாதிக்கப்படும் தலித், இஸ்லாமியர்களுக்காக மாயாவதி குரல் கொடுக்காததன் பலனை தேர்தல் தோல்வி மூலமாக அடைந்துவிட்டார்.

பாஜகவின் மிருகத்தனமான போக்கு:

பாஜக 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற முழக்கத்தை தலித் மக்கள் முற்று முழுதாக நிராகரித்துவிட்டனர். அப்கி பார் 400 என்ற பாஜகவின் முழக்கமும் ”சம்விதன் காத்ரே மெய்ன் ஹை” (அரசியலமைப்புக்கு ஆபத்து வந்துவிட்டது) என்ற இரண்டையும் இந்தியாவில் உள்ள தலித் மக்கள் பொறுத்தி பார்த்து பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். ”ஹிந்து காத்ரே மெய்ன் ஹை” அதாவது ”இந்துக்களுக்கு ஆபத்து” என்ற பாஜகவின் 10 ஆண்டுகால பரப்புரையை மக்கள் புறக்கணித்துள்ளனர். இங்கு தான் நுட்பமான ஒருவிடயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்துத்துவ பெரும்பான்மை வாதத்திற்கு எதிராக அண்ணல் அம்பேத்கர் பற்றவைத்த தீயானது இன்றைக்கும் அணைந்துவிடவில்லை என்பது தான் அந்த செய்து. ஒருபக்கம், அந்த சுடரை தலைவர் திருமாவளவன் ஏந்தி நிற்பதும் மற்றொரு பக்கம் கன்ஷிராமால் வளர்த்தெடுக்கப்பட்ட மாயாவதி ஏந்த தவிர்த்ததன் விளைவுகளை மக்கள் பாடமாக கொடுத்துள்ளனர். அம்பேத்கர் தன் வாழ்நாள் இறுதி வரைக்கும் ஆர்.எஸ்.எஸ். - சனாதன - இந்துத்துவ கருத்திற்கு எதிராக இருந்தார். அகண்ட பாரதம், இந்தியா இந்துக்களுக்கான நாடு என்ற சனாதனவாதிகளுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தக்க பதிலடியைக் கொடுத்துக்கொண்டு தான் இருந்தார்.

மக்களவையில் தலைவர் - பொதுச்செயலாளர்

மோடியின் இரண்டாவது ஆட்சி காலம் முழுக்க முழுக்க சனாதன கருத்துக்களை உச்சம் அடைய செய்த காலமாக மாறியது. இஸ்லாமியர்கள், தலித்துகள் மீதான தாக்குதல்கள் தலைவிரித்தாடின. இதனை தலித், இஸ்லாமிய மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். இந்த சூழலில் தான், 400 இடங்களை பாஜக கைப்பற்றும் என்ற முழக்கத்தை இந்திய ஜனநாயகத்திற்கான பெரிய ஆபத்தாக இந்தியாவில் உள்ள தலித் மக்கள் பார்த்து பதிலடி கொடுத்துள்ளனர். இந்த தீவிர இந்துத்துவ மனநிலையை மாயாவதி எதிர்க்காததால் தான் 488 இடங்களில் போட்டியிட்டும் ஒன்றில் கூட பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெறவில்லை. உத்தரப்பிரதேசத்தில் அதன் வாக்கு வங்கி 2019ல் 19.42 சதவிகிதமாக இருந்து 2024ல் அதன் வாக்கு வங்கி 9.39 சதவிகிதமாக குறைந்துள்ளது. அம்பேத்கரிய சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு சமூக விடுதலையைக் கோரக்கூடிய சாதாரண வாக்காளர்களைக் கூட மாயாவதியால் தக்கவைக்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ். - மோடியின் சர்வாதிகாரத்தை மாயாவதி தக்க நேரத்தில் கண்டிக்கத் தவறியது தான். அதே நேரத்தில் பாஜக - சங்க பரிவார் கூட்டத்தை எதிர்க்கும் தீவிர அம்பேத்கரிய அரசியலை முன்வைத்த ஆசாத் சமாஜ் கட்சியின் இளம் தலைவர் சந்திரசேகர் ஆசாத், தான் போட்டியிட்ட நாகினா தனி தொகுதியில் 1,51,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். 2019ல் பகுஜன் சமாஜ் வென்ற தொகுதியை இம்முறை சுயேச்சையாக போட்டியிட்டு வென்றுள்ளார். பகுஜன் சமாஜின் சரியும் செல்வாக்குக்கு இது முக்கிய எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது.

அரசியல் சாசனத்தை ஏந்தி நிற்கும் சந்திரசேகர் ஆசாத்

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவை தலித் மக்கள் அம்பேத்கர் வழியில் தான் பார்த்துள்ளார்கள். ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்க வடிவம் மட்டும் அல்ல. இது வாழ்க்கை முறை, இணைந்த தொடர் அனுபவம். சக மனிதர்களுக்கு மரியாதை மற்றும் மரியாதைக்குரிய அணுகுமுறையாக இருக்கிறது. இஸ்லாமியர்கள், தலித்துகள், குழந்தைகள் மீதான தாக்குதல் அதிகரிக்கும் போது அதனை அமைதியாக இருந்து கேள்வி கேட்ட மக்கள் தேர்தல் முடிவுகள் மூலம் பாஜக நிர்மூலமாக்கிவிட்டனர்.

நிதீஷ் – சந்திரபாபுவுக்கு ஒரு பாடம்:

மாயாவதி, ராமதாஸ் உள்ளிட்டவர்களும் கூட பாஜக ஆதரவு நிலைப்பாட்டின் மூலமாக தக்க பாடத்தைக் கற்றுக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்பட்ட நிலை நாளை நிதீஷ் குமாருக்கும் சந்திரபாபுவுக்கும் ஏற்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதன் மூலமாக நிதீஷ் குமாருக்கு ஆதரவான ஒரு முடிவை பீகார் மாநிலம் கொடுத்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராகவும், மண்டல் கமிஷனுக்கு எதிராக கமண்டல் கமிஷனையும் முன்னிறுத்தும் பாஜகவின் ஊதுகுழலாக நிதீஷ் மாறினால் அவரின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.


தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியானது போட்டியிட்ட நான்கு தனித் தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. குல்பர்கா தனி தொகுதியை பாஜக இழந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஐந்து தனித்தொகுதிகளில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. மகாராஷ்டிராவிலும் கூட தனித்தொகுதியாக உள்ள ஒன்பது தொகுதிகளில் ஆறு தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை காங்கிரஸ் வேட்பாளர்கள் படுதோல்வி அடையச் செய்துள்ளனர். ராஜஸ்தானில் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்த பல தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதிகளில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஒரு ஆணவ போக்கு அரசியல் வரலாற்றில் எதையெல்லாம் செய்யும் என்பதை மோடியின் இந்த சறுக்கல் மூலமாகவும் ஒரு சிறிய அமைப்பு கூட ஜனநாயகத்தின் மாண்பை காக்க தனது அரசியல் ஆயுதம் மூலமாக பதிலடி கொடுக்க முடியும் என்பதை தலித் மக்களின் வாக்கு அரசியல் மூலமும் புரியவைத்துள்ளது. வரலாற்று ரீதியாக மோடிக்கு எதிராக தலித் மக்கள் கொடுத்துள்ள இந்த பதிலடியை மோடியின் அரசியல் வரலாற்றில் மறக்கவே முடியாத பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வு. குஜராத்தின் முதல்வராக மோடி இருந்த காலம் தொடங்கி 2024 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கூட மோடி தன்னை ஒரு அசைக்கவே முடியாத சக்தியாக நிறுவிக்கொண்டே இருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜகவும் மோடியும் வெறும் மைனாரிட்டிகள் தான் என்பதை தலித் மக்கள் மோடிக்கு கற்றுக்கொடுத்துவிட்டனர். இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், இஸ்லாமியர்களை வஞ்சித்ததற்கு கைமாறாகவும் உனாவில் தலித் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்கான நீதி போராட்டத்திற்கு கிடைத்த அறத்தின் வெற்றியாகவும் தலித் மக்கள் ஜனநாயகத்திற்கு கொடுத்துள்ள செய்தியாக இந்த தனித்தொகுதிகளில் தலித்துகளின் வெற்றியைப் பார்க்கிறேன்.

இந்தியா அரசியலில் தவிர்க்க முடியாதவர்கள் தலித்துகள் என்பதையும் தலித்துகளின் எழுச்சி ஒரு புரட்சி பாதையின் நெருக்கத்தை அடைந்துவிட்டது என்பதை மோடி கும்பல் உள்வாங்கிக்கொண்டுவிட்டது.

- வன்னி அரசு

(நக்கீரன் இதழில் ஜூன் 22 வெளியான கட்டுரை)

16 June 2024

மோடியின் வீழ்ச்சி தொடங்கியது!

சிலப்பதிகாரத்திலே ஒரு காட்சி.


பாண்டியனின் அரண்மனைக்குள் நுழைந்த கண்ணகி, செங்கோலும் வெண்குடையும் / செறிநிலத்து மறிந்துவீழ்தரும்/நங்கோன்றன் கொற்றவாயில் / மணிநடுங்க நடுங்குமுள்ளம்/ இரவுவில்லிடும் பகல்மீன்விழும் / இருநான்கு திசையும் அதிர்ந்திடும்/வருவதோர் துன்பமுண்டு/ மன்னவற் கியாம் உரைத்துமென


(பொருள்) அரசனுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் நிலத்தில் மடங்கி வீழும். நம் மன்னனது வெற்றி தரும் வாயிலின்கண் கட்டிய மணி என்னுள்ளம் நடுங்கும் வண்ணம் அசையும்இரவு நேரம் வான வில்லைத் தோற்றுவிக்கும். பகற் காலத்து விண்மீன்கள் எரிந்து கீழே விழும், எட்டுத் திசையும் அதிரும், ஓரு துன்பம் மன்னனுக்கு வர இருக்கிறது. நான் அரசனுக்கு இச் செய்தியைக் கூறுகிறேன் என்று கண்ணகி கூறுவார். இதே செய்தியைத் தான் 18-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மோடி என்கிற மன்னனுக்கு கூறியுள்ளது.

 


மோடியின் 400 தொகுதி வெற்றி முழக்கம் வெற்று முழக்கமாகிவிட்டது. ராமர் கோயில் அரசியலுக்கு சம்மட்டி அடி விழுந்துள்ளது. ராமர் கோயில் இருக்கும் ஃபைசாபாத் தொகுதியிலேயே பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது. பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை விட, அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், ராமர்இந்துத்துவா என தலித்துகளுக்கு எதிராக செயல்பட்ட லல்லு சிங் தோற்றது தலித் வேட்பாளரான அவ்தேஷ் பிரசாத்திடம் தான்.


அகிலேஷ் யாதவ் உடன் அவ்தேஷ் பிரசாத்
                                             

நாட்டின் ஒரே பழங்குடியின முதலமைச்சராக  இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் சிறை வைக்கப்பட்ட நிலையில், ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த அர்ஜூன் முண்டா, சோரனின் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். ஜார்கண்ட்டின் பழங்குடியினருக்கான ஐந்து தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

 

பாஜக ஆளும் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜகவின் அரசியல் சரிவு பட்டவர்த்தனமாகிவிட்டது. மோடி தனது தொகுதியான வாரணாசியில் பெற்ற வெற்றியை விட இரண்டு மடங்கு கூடுதல் வாக்குகளுடன் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து மீண்டும் களமிறங்கிய மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராயுடன் கடும் போட்டிக்கிடையே தான் வெற்றி பெற முடிந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு 4.8 லட்சமாக இருந்த வாக்கு வித்தியாசம் இப்போது வெறும் 1.5 லட்சமாக சரிந்துள்ளது. சிவசேனா என்ற மாநில கட்சியை உடைத்ததன் விளைவை மகாராஷ்ட்ராவில் பாஜக அனுபவித்துள்ளது. விவசாயிகளை கொடுமைப்படுத்தியதற்கு பஞ்சாபில் பாஜகவிற்கு விவசாய பெருங்குடி மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள்.  இவை எல்லாவற்றையும் விட, ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை வைத்து அரசியல் செய்த மோடிஆர்.எஸ்.எஸ். கும்பல், தேர்தல் முடிவுக்கு பிறகு ராமர் தங்களுக்கு கை கொடுக்கவில்லை என்பதால்ஜெய் ஜெகந்நாத்என்ற முழக்கத்திற்கு மாறிவிட்டார்கள். கடவுளையே மற்றியவர் மோடி ஒரு பச்சை சுயநலவாதி என்ற முகத்திரை கிழிந்து தொங்குகிறது.


மோடியை ஆட்டம் காணவைத்த அஜய் ராய்

தேசிய இனங்களின் எழுச்சிக்கு முன்பாக மோடியின் இந்துத்துவா கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பொறியாளர் ரஷீத், காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித் பால் சிங், இந்திரா காந்தி கொலையாளிகளில் ஒருவரான  பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா ஆகியோர் வெற்றி மோடியின் சர்வதிகாரத்திற்கு எதிரான தேசிய இன எழுச்சியாகவே சித்தரிக்கப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில், அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற அனைத்து ஆரூடங்களையும் பொய்யாக்கி, மோடியின் சர்வாதிகாரத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளது 18-வது மக்களவைத் தேர்தல்மோடிக்கு கிடைத்துள்ள இந்த தோல்வி, இந்தியாவின் ஆன்மாவான மதச்சார்பின்மைக்கும், பிரிவினைவாத எதிர் பேச்சுக்கும் கிடைத்த பதிலடியாகவே பார்க்கலாம்.


இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் மோடி ஒரு சர்வாதிகாரி என்பதை தொடர்ச்சியாக நக்கீரனில் எழுதி வருகின்றேன். அவரின் தேர்தல் முடிவு எப்படி இருக்கிறது என்பதை முன்பே பல அத்தியாயங்களில் எழுதியுள்ளேன். அவை மக்கள் தீர்ப்பு முன்பு உண்மையாகிவிட்டதை பெருமையோடு பகிர்ந்து கொண்டு, சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் களமாடி தங்களின் தீர்ப்பை அளித்த இந்திய மக்களை ஆரத்தழுவி முத்தமிடலாம்.


பாஜகவின் கூலிப்படையான தேர்தல் ஆணையம்

எத்தனை எத்தனை பொய்களை மிஞ்சி இந்த வரலாற்று சாதனையை இந்திய மக்கள் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பாகவே கருத்து கணிப்பு என்ற போர்வையில் ஊடகங்கள் செய்த பித்தலாட்டங்கள்மத்திய விசாரணை முகமைகளை கையில் வைத்துக்கொண்டு மோடி செய்த சர்வாதிகாரத்தனம், தேர்தலின் கண்ணியம் கெட்டுப் போகும் போது கூட கண்ணை மூடிக்கொண்டிருந்த தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் இந்தியா கூட்டணியின் முதுகை தட்டிக்கொடுத்தும் பாஜகவை தலையில் கொட்டு வைத்தும் ஒரு தேர்தல் முடிவை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

 

பொய்யான கருத்துக்கணிப்பு:

 

ஜூன் 1 ஆம் தேதி வெளியான அனைத்து ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளும் 350க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக தனித்துக் கைப்பற்றும் எனக் கூறின. நியூஸ் 24 டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் 400க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கூட்டணி பிடிக்கும் என குறிப்பிட்டது. இந்தியா டுடே-ஆக்சிஸ் இந்தியா கருத்துக்கணிப்பு 361-401 இடங்களும், டுடே சாணக்கியா பாஜகவுக்கு 335 இடங்களையும் பாஜக கூட்டணிக்கு 400 இடங்களையும் கொடுத்தது.


மோடி மீடியாவின் தேர்தல் கருத்துக்கணிப்பு

தி டைம்ஸ் நவ்.டி.ஜி கருத்து கணிப்பு 358 இடங்களை பாஜகவுக்கு வழங்கியது. ரிபப்ளிக் 359 இடங்களை பாஜக தனித்து கைப்பற்றும் எனக் கூறியது. நியூஸ் 18 கருத்து கணிப்பில் 315 இடங்களை பாஜக வசப்படுத்தும் எனக் குறிப்பிட்டது. இத்தனை ஊடகங்களும் பாஜகவின் ஊதுகுழலாக இருந்துள்ளன என நிரூபித்துவிட்டது மக்களின் தீர்ப்பு. அதாவது, தமிழ்நாடு புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் தான் களமிறங்கியது. ஆனால், மோடியின் மீடியா மாஃபியாக்கள் 12-13 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என கூறின. ஜார்க்கண்டில் சி.பி.எம் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால்,3 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று கூறியது. கேரளாவில் பாஜக அதிக வெற்றியை பதிவு செய்யும் என்றது மோடி மீடியா. ஆனால், முடிவு வேறாக வந்துள்ளது.


மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெறும் என்றது கருத்து கணிப்பு முடிவுகள். ஆனால், நடந்தது என்ன, ஒட்டு மொத்தமாக உத்தரப்பிரதேசத்தில் 80 இடங்களில் பாஜக வெறும் 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2014-ல் 71 இடங்களிலும் 2019ல் 62 இடங்களிலும் வென்ற பாஜக 2024ல் வெறும் 33 இடங்களை கைப்பற்றி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை என்று பேசிய ஸ்மிருத்தி இராணி வெற்றி பெறுவார் என்றார்கள். அவருக்கும் படுதோல்விகாங்கிரஸ்சமாஜ்வாதி படுதோல்வி அடையும் என்றது கருத்து கணிப்பு, ஆனால், பாஜகவை விட 37 இடங்களில் சமாஜ்வாதியும் 6 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் முத்திரை பதித்துள்ளது.


உ.பி. புல்டோசரை வீழ்த்திய மூவர் அணி

மகாராஷ்டிராவில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கூறிய கருத்து கணிப்பு முடிவுகள் தவிடு பொடியாகியுள்ளது. இந்தியாவின் அதிக அரசியல் நெருக்கடி உள்ள மாநிலமாக பார்க்கப்பட்ட மகாராஷ்டிராவில் பாஜக படு தோல்வியைக் கண்டுள்ளது. 48 தொகுதிகளைக் கொண்ட இங்கு 30 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. 2019ல் பாஜக 23 இடங்களிலும் 18 இடங்களில் அதன் கூட்டணி கட்சிகளும் வென்றன. அதே நிலை தொடரும் என்றன மோடியின் மீடியா மாஃபியாக்கள். ஆனால், 2004ல் கருத்துக்கணிப்பு பொய்யானது போலவே 2024 கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டது தேர்தல் களம். 

 

ஒட்டுண்ணி பாஜக விழுங்கிய கட்சிகளும்:

மோடிஆர்.எஸ்.எஸ் - இந்துத்துவா கருத்தியல்களை எதிர்த்த கட்சிகள் மட்டுமே தற்போது இந்திய அரசியலில் உயிர்பெற்று வந்துள்ளன. மோடியை எதிர்த்த, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்டவர்களின் கட்சிகள் வலுவான வெற்றியைப் பதிவு செய்துள்ளன. ஆனால், அரசியல் ஒட்டுண்ணி போல் இருந்து கொண்டு அதிமுக, ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.பி., ஒடிசாவின் பிஜூ ஜனதாதளத்தின் மீது சவாரி செய்த பாஜக அந்த கட்சிகளின் அடையாளத்தை அழித்துவிட்டது.


பாஜக விழுங்கிய நவீன் - ஜெகன்

மோடி அமைச்சரவையில் ரயில்வே துறை அமைச்சராக இருந்த அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்தின் பிஜூ ஜனதாதளத்தின் உதவியுடன் தான் மாநிலங்களவைக்கு சென்று ரயில்வே அமைச்சராகவே ஆனார். பாஜகவையும் மோடியின் சர்வாதிகாரத்தனத்தையும் சரியான நேரத்தில் எதிர்க்காததன் விளைவை நவீன் பட்நாயக் இன்று கண்டடைந்துவிட்டார். கூட்டணியில் இருந்த பிஜூ ஜனதாதளத்தையே ஒட்டுண்ணி பாஜக விழுங்கி, ஆட்சியை கவிழ்த்துவிட்டது. இதே நிலைமை தான் ஆந்திராவின் ஜெகன் மோகனுக்கும் நேர்ந்துள்ளது. பாஜகவின் ஒட்டுண்ணி தனத்திற்கு பலியான மற்றொரு கட்சியாக அதிமுக இருக்கிறது. 2017க்கு பிறகு பாஜகவின் கைப்பாவையாக இருந்த அதிமுக 2019க்கும் பிறகு பாஜகவில் மொத்தமாக கரைந்துவிட்டது. இப்போது, அதிமுகவின் நிலை என்ன? ஒட்டுண்ணி பாஜக அதிமுகவை முழுவதுமாக தின்று செறித்ததால் தனது அரசியல் எதிர்காலத்தையே தொலைத்துவிட்டு நிற்கிறது அதிமுக. இதே நிலை தான், ஏக்நாத் ஷிண்டேவுக்கும். ஏக்நாத் ஷிண்டேவை வைத்து சிவசேனாவை உடைத்து பாஜகவுக்கு மகராஷ்டிரா பாடம் கற்றுக்கொடுத்துவிட்டது. அங்கு, பாஜகவும் வெற்றி பெறவில்லை. ஏக்நாத் ஷிண்டேவும் காணாமல் போய்விட்டன.


பாஜக திண்று செரித்த அதிமுக
 

மதவாதசாதியவாதபிரிவினையின் தோல்வி:

 

2024நாடாளுமன்ற தேர்தல் நுணுக்கமான பல அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதில், முக்கியமானது, மோடி கையில் எடுத்த மதவாத, இனப் பிரிவினைவாதத்திற்கு எதிராக இந்தியர்கள் நிற்கிறார்கள். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில்புல்டோசரை யார் மீது ஏற்றலாம் என்று யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ளுங்கள்என்று கூறிய மோடி  மீதே புல்டோசரை ஏற்றி பாடம் புகட்டியிருக்கிறார்கள் மக்கள். இஸ்லாமிய வெறுப்பு அரசியலை பேசிய பாஜக உத்தரபிரதேசம் அயோத்தியிலேயே தோற்றுள்ளது. மணிப்பூரில் மொய்திகுக்கு இன மக்களிடையே பாஜக பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் செய்தது. மணிப்பூரில் 227 பேர் கொல்லப்பட்டனர். 70,000 பேர் அகதிகளாக்கப்பட்டனர். கலவரத்தை தடுக்க பாஜக தவறியது. நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் திமுககாங்கிரஸ் கடுமையாக நீதி கேட்டு போராடியது. விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோர் மணிப்பூர் களத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆனால், மோடி வாய் திறக்கவே இல்லை. மணிப்பூரில் 2 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அங்கு, காங்கிரஸ் பெற்ற வாக்குகளை கணிக்கும் போது, மொய்திகுக்கி இரண்டு இனமக்களுமே பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பது வெளிப்பட்டுவிட்டது.

 


ஜம்முகாஷ்மீரில் பாஜக மீதான கோபம் மக்களிடம் தேர்தல் முடிவுகள் மூலமாக வெளிப்படத்தொடங்கிவிட்டது. 2019 ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370- மோடி அரசு நீக்கியது. இதன் விளைவுகளை காஷ்மீர் மக்கள் பாஜகவுக்கு அளிக்கின்றனர். காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் ஆச்சரியமான முடிவை மக்கள் கொடுத்துள்ளனர். பொறியாளர் ரஷீத் என்று அழைக்கப்படும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷித் ஷேக் வெற்றி பெற்றுள்ளார். 2019லிருந்து உபா வழக்கில் சிறையில் வாடும் ரஷித் வெற்றி, மோடியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகக் குரல் என்பதை மறுக்க கூடாது.


UAPA கைதி அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்தில் தலித் மக்கள் பாஜகவுக்கு எதிராக திரட்சியான வாக்கை அளித்துள்ளனர். வளரும் சமூகங்களின் ஆய்வு மையம் - லோக்நிதி சிந்தனைக்குழு நடத்திய ஆய்வில்சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே அயோத்தியில் புதிய கோயில் வேண்டும் எனக் கூறியுள்ளனர். மீதமிருக்கும் 92 சதவிகிதம் பேர் அயோத்தியிலேயே பாஜகவின் இந்துத்துவத்திற்கு எதிராக எழுச்சிபெற்று கூடியுள்ளனர்.



மத்திய உள்துறை இணை அமைச்சரான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அஜய் மிஸ்டாவின் மகன் லக்கிம்பூர் கெனியில் விவசாயிகள் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்தார். இப்போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா படு தோல்வி அடைந்துள்ளார். மக்கள் விரோதமாக செயல்பட்ட மோடி அமைச்சர்கள் 19 பேர் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர். மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 20 அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளனர்.

 

மண்ணைக் கவ்விய மோடியின் அமைச்சர்கள்

கொடுங்கோல் ஆட்சி - மோடியின் தோல்வியே சாட்சி:

 

தமிழ்நாடு, பஞ்சாப், மணிப்பூர், மிசோரம், சிக்கிம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மாநில கட்சிகளுக்கு எதிராக நேரடி போட்டியில் ஈடுபட்ட பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. தமிழ்நாட்டில் 23 தொகுதிகளிலும், பஞ்சாபில் 13 தொகுதிகளிலும் மணிப்பூரில் 2 தொகுதிகளிலும் சிக்கிம், மிசோரம் ஆகிய இடங்களில் தலா ஒரு தொகுதிகள் என 40 தொகுதிகளை மொத்தமாக பாஜக இழந்துள்ளது. இந்த மாநிலங்கள் மோடியின் பாசிச குணத்திற்கு எதிராகவும் அடிப்படையில் தேசிய இன விடுதலையைக் கோரும் மாநிலங்களாகவும் உள்ளன. தாமரையின் செல்வாக்கும், மோடியின் சர்வாதிகாரத்தனமும் தேசிய இனங்கள் முன் கைகட்டி நிற்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஊழல், விவசாயிகளின் துயரம், போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, இவை எல்லாவற்றையும் விட மாநில அரசுகளை அழிக்கநினைக்கும் மோடியின் அரசியல் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து பாஜகவை தோற்கடித்துள்ளன.

 

NSA கைதி அம்ரித்பால் சிங் எம்.பி.

அஸ்ஸாமின் திப்ருகர் மத்திய சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் அம்ரித்பால் சிங் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுப்புக் காவலில் உள்ளார்இவரைப் போலவேபாராமுல்லா தொகுதியில் பொறியாளர் ரஷீத் வெற்றியும் பார்க்கப்படுகிறதுமோடி ஆட்சியில் 2019ல் உபா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ரஷித் வெற்றிமோடியின் சர்வாதிகாரத்திற்கு தேர்தல் வெற்றியாகவேகணிக்கப்படுகிறது.



சமத்துவ இந்தியா என்ற கனவை அடைவதற்கு நீண்ட காலம் இன்னும் போராட வேண்டி இருக்கிறது. ஆனால், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடித்தளமாக கொண்ட குடியரசின் அடித்தளத்தை வலுப்படுத்துவது மோடி காலத்தில் அதிமுக்கியமானது. மோடியின் சர்வாதிகார கரங்களில் இருந்து இந்தியாவை மீட்டு, குடியரசின் அடித்தளத்தைக் கட்டமைக்க பாடுபட்டு உயிர்த்தியாகம் செய்த, இன்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கும் சமத்துவ குடியரசிற்காக கனவு கண்டு கொண்டிருக்கும் மக்களுக்கும் இந்த தேர்தல் நிம்மதி பெருமூச்சை விட வைத்துள்ளது.


- வன்னி அரசு