27 June 2024
ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்க வடிவம் மட்டுமல்ல. இது முதன்மையாக தொடர்புடைய வாழ்க்கை முறை, இணைந்த தொடர்பு அனுபவம். இது அடிப்படையில் சக மனிதர்களுக்கு மரியாதை மற்றும் மரியாதைக்குரிய அணுகுமுறையாகும் - புரட்சியாளர் அம்பேத்கர்
தலித் எழுச்சி - மோடியின் வீழ்ச்சி:
இந்திய ஜனநாயகத்தின் மாண்பு சிதைக்கப்படும் போதெல்லாம் தலித் மக்கள் நாட்டின் இறையாண்மையைக் காத்துள்ளனர். சனாதனம் உயர்த்திப்பிடிக்கப்பட்ட போதும், சாதி ரீதியான கட்டமைப்புக்கு எதிராகவும், பொது சமூகத்தின் உரிமைக்கும் சேர்த்தே தலித் மக்கள் குரல் கொடுத்திருக்கின்றனர். உண்மையில், இந்தியாவின் வரலாறு என்பது ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையில் நடந்த போராட்டத்தின் வரலாறு தான். பார்ப்பனீயம் - சனாதனம் - மனு உள்ளிட்டவை இந்திய மக்களை பிரித்து சாதிய சமூகமாக பாகுபடுத்தி அரசியல் செய்த போது இதனை துணிச்சலோடு எதிர்த்தவர்கள் தலித் மக்கள் தான்.
கீழ் வெண்மணி மற்றும் பீமா கொரேகான் என இந்திய சரித்திரத்தில் ஒரு எழுச்சியையே தலித்துகள் தங்களின் உரிமை முழக்கத்தின் மூலமாக நிலைநாட்டி காட்டியிருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு மோடிக்கு எதிராக ஜனநாயக முறைப்படி வாக்கு அரசியலில் தலித் மக்கள் மிகவும் நுட்பமான ஒரு அரசியல் போராட்டத்தை நடத்தி மோடிக்கு கடிவாளம் போட்டுள்ளனர்.
பாஜக தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் போனதற்கும், கூட்டணியை நம்பியே ஆட்சியை தொடர வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியதே தலித் மக்களின் எழுச்சி தான். அதாவது, பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2019 தேர்தலுடன் ஒப்பிடும் போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 77 தொகுதிகளில் 22 இடங்களில் பாஜக தோற்று தற்போது 55 தொகுதிகளை மட்டுமே பாஜக தக்கவைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மொத்தம் 272 இடங்கள் தேவை. இதில், பாஜக வெறும் 240 தொகுதிகளை தான் கைவசம் வைத்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவுக்கு 32 இடங்கள் கூடுதலாக தேவைப்பட்டன. பாஜக செல்வாக்கு உள்ளதாக மோடி கும்பலால் திரும்பத் திரும்ப செல்லப்படும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட இடங்களில் பாஜகவை தலித் மக்கள் ஜனநாயகத்திற்கு எதிரி என இனம் காட்டி வெளியே தள்ளியுள்ளனர்.
தலித் மக்களின் இந்த எழுச்சி தான் மோடியின் ஆட்சி கட்டிலை அசைத்துப் பார்த்துள்ளது. ஒவ்வொரு நாளும் பிரதமர் நாற்காலியில் மோடி நடுக்கத்துடன் அமர்ந்திருக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. எப்படி நடந்தது இது என்பதை விரிவாக ஆராய்ந்தால் பல நுட்பமான விஷயங்கள் வெளிச்சப்படுகின்றன.
வட இந்தியாவில் கோலோச்சிய தலித் மக்கள்:
இந்தியா முழுமைக்கும் மொத்தம் 131 தொகுதிகள் பட்டியல் இன மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, பீகார், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 19 இடங்களில் பாஜகவுக்கு எதிராக பட்டியலின மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரித்து வாக்களித்துள்ளனர். மகாராஷ்டிரா, ஜார்கண்ட், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் முழுவதிலும் 10 பழங்குடியின தொகுதிகளை பாஜக இழந்துள்ளது.
இதில், நுட்பமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், பட்டியலின மக்களுக்கான தொகுதிகளில் 12 தொகுதிகளையும் பழங்குடியின மக்களுக்கான தொகுதிகளில் 7 இடங்களையும் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 2014ல் பட்டியலின பழங்குடியின மக்களின் தொகுதிகளில் 71 இடங்களையும், 2019ல் 77 இடங்களையும் பாஜக கைப்பற்றியது. மறுபக்கத்தில், 2019ல் 7 இடங்களை மட்டுமே தக்கவைத்திருந்த காங்கிரஸ் தற்போது பழங்குடியின மற்றும் பட்டியலின தொகுதிகளில் 32 தொகுதிகளை மீட்டுள்ளது. அதில் 19 தொகுதிகளை நேரடியாக பாஜகவை வீழ்த்தியுள்ளது
ஒருவகையில், பாஜகவின் சனாதனத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியோடு தலித் மக்கள் கைகோர்த்து நின்றுள்ளனர் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
சமாஜ்வாதி கட்சி (SP) உத்தரபிரதேசத்தில் பட்டியலின மக்களுக்கான ஐந்து தொகுதிகளைக் கைப்பற்றியது; திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கூச்பெஹாரில் வெற்றி பெற்றது. தும்காவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) வெற்றி பெற்றது; சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP-SP)பாஜகவுக்கு எதிராக நின்ற திண்டோரியை கைப்பற்றியது.
பழங்குடிகள் இந்துக்கள் அல்ல, தனித்த சமய நம்பிக்கை கொண்டவர்கள் என்ற கருத்தை முன்வைக்கும் பாரதிய ஆதிவாசி கட்சியின் (BAP) ராஜ்குமார் ரோஹத் காங்கிரஸ் ஆதரவுடன் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா தொதிகுதியில் பாஜக வேட்பாளரைவிட 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பழங்குடிகளுக்கு ’பில் (Bhil) மாநிலம்’ கோரிக்கையை இன்னும் தீவிரப்படுத்துவோம் என்று அறிவித்துள்ளார் ராஜ்குமார்.
பீர்சா முண்டா படத்துடன் ஒட்டகத்தில்மக்களவைக்கு வந்த ராஜ்குமார் ரோஹத் |
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும் ஒன்றிய அமைச்சரவையில் பழங்குடியினர் விவகார அமைச்சராக பொறுப்பு வகித்த அர்ஜூன் முண்டாவை குந்தி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் காளி சரண் முண்டா கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பழங்குடிகளுக்கான 5 தனி தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் வேலூர் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி (3,36,591) 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார். விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் அறிஞர் ரவிக்குமாரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க வேட்பாளர் முரளி சங்கர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். (தமிழ்நாட்டின் நிலவரத்தை இன்னொரு பத்தியில் விரிவாக பேசலாம்.)
தலித் மக்களின் எழுச்சி எப்படி?
புரட்சியாளர் அம்பேத்கர் தொடங்கி வைத்த கருத்தியல் நெருப்பு 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பரவியது. இந்த தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் தலித் மக்கள் மிகவும் உறுதியாக இருந்துள்ளனர். அதாவது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் சாசனத்தையே மாற்றிவிடுவார்கள் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களிடம் உண்மையை விளக்கினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மோடியை காத்திரமாக எதிர்த்தவர். தமிழ்நாட்டில், 2014ல் இருந்து உண்மையிலேயே மோடியை, ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கும்பலை கொள்கைரீதியாக திருமாவளவன் வலுவாக தொடர்ந்து எதிர்த்து வந்தார். பாஜக - மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பை மாற்றிவிடுவார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் தலித் மக்களுக்கு போராடி பெற்றுக்கொடுத்த உரிமைகளைக் கூட மோடி கும்பல் பறித்து சனாதனவாதிகளின் கையில் கொடுத்துவிடுவார்கள் என்று முழங்கினார்.
திருமாவளவனின் சனாதன எதிர்ப்பு முழக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தியும் உருவ பொம்மையை எரித்தும் அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர். ஆனால், 2014லிருந்து தலைவர் திருமாவளவன் எதை முழங்கினாரோ அந்த கருத்து தான் இன்றைக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவின் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தினூடாக இந்த கருத்தையும் தலித் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இதன் குறியீடுதான், பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்பது உறுதியான உடனேயே, காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்த போது அம்பேத்கர் வகுத்துக்கொடுத்த அரசியல் சாசனத்துடன் செய்தியாளர்களை சந்தித்தார். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல்சாசனத்தின் மீது பேரிடி விழும் என்ற எச்சரிக்கை மணியை தலித் மக்கள் மிகத்தெளிவாக புரிந்துகொண்டனர். இந்த அரசியல் புரிதல் தான் சர்வாதிகாரி மோடிக்கு தற்போது கடிவாளம் போட்டுள்ளது.
யாரைத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதில் தெளிவு:
தலித் வேட்பாளர்கள் என்ற அளவில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கூட தனித்தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கின. ஆனால், தனித்தொகுதியில் இருந்த வாக்காளர்கள் சர்வாதிகாரி மோடியும் அவரது வகையராக்களும் ஆட்சி அதிகாரத்தை அடைந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். இந்தியாவின் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் ஜைனர்கள், தமிழ்நாட்டில் கவுண்டர்கள், கர்நாடகாவில் லிங்காயத்துகள், மகாராஷ்டிராவில் மராட்டியர்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரெட்டிகள் சிறிய எண்ணிக்கையில் உள்ளனர். இந்த இடங்களில் தலித்துகளின் வாக்குகளை மிஞ்சி சில வாக்குகள் பாஜக வசம் சென்றன. இருப்பினும் கூட பாஜகவால் வெற்றிப்பெறமுடியவில்லை.
விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளை எடுத்துக்கொண்டால், தலைவர் திருமாவளவனையும் அறிஞர் ரவிக்குமாரையும் வீழ்த்தும் முழு வீச்சில் ஆர்.எஸ்.எஸ். - சங்பரிவார் கும்பல் தீவிரமாக களமாடியது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் ஆர்.எஸ்.எஸ் - சங்பரிவார் நேரடியாகவே தேர்தல் பணி செய்வதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. இவர்களோடு, பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவும் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தேர்தல் பரப்புரையில் இறங்கியது. சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சிதம்பரத்தில் பானையை உடைத்தே ஆகவேண்டும் என்றார். ஆனால், நடந்தது என்ன? மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சொந்தங்களும் கூட தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக நின்றனர். ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட இடங்களில் தான் அதிமுக இரண்டாம் இடம்பிடித்தது. ஆனால், பாமகவின் நிலை என்ன ஆனது? சர்வாதிகாரத்தையும் சாதிய கொடுங்கோன்மையையும் சிதம்பரம் தொகுதி மக்கள் மிக உறுதியாக எதிர்த்தனர்.
தலைவர் எழுச்சித்தமிழர் - அறிஞர் ரவிக்குமார் |
பாஜக செல்வாக்கு செலுத்தும் மாநிலமாக பார்க்கப்படும் உத்தரப்பிரதேச அரசியல் களத்திலும் தலித் மக்கள் பாஜகவை விரட்டி அடித்துள்ளனர். இதில், இன்னொரு விஷயத்தையும் தெளிவாக புரிந்துகொள்ளலாம். உத்தரப்பிரதேசத்தில் பாஜக - சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி அதிகாரம் கொண்ட கட்சிகளாக இருக்கின்றன. மறைமுகமாக பாஜக உடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியில் இருப்பதை உத்தரப்பிரதேச மக்கள் தெளிவாகவே புரிந்துகொண்டனர். ராம்தாஸ் அத்வாலே, மாயாவதி இருவரும் அம்பேத்கரின் கொள்கையில் இருந்து பிறழ்ந்து செல்வதை உத்தரப்பிரதேச மக்கள் தெளிவாகவே இனங்கண்டு கொண்டுள்ளனர். இந்த இடத்தில் ஒரு ஒப்புமையை பார்க்க வேண்டி இருக்கிறது. அம்பேத்கரிய சிந்தனையை சர்வாதிகாரத்தையும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை எதிர்க்கும் தலைவர் திருமாவளவனை மக்கள் தமிழ்நாட்டில் ஆதரித்ததையும், அம்பேத்கரியத்திலிர்ந்து விலகிச் சென்ற மாயாவதியை உத்தரப்பிரதேசத்தில் மக்கள் எதிர்த்ததையும் ஒப்பிட்டுபார்க்கலாம். அதாவது, பகுத்தறிவு மாநிலம் சாதி, மத அடையாளங்களுக்கு அப்பால் சென்று பகுத்தறிவுடன் தலைவர் திருமாவளவனை அங்கீகரித்துள்ளனர். பக்தி உச்சமாக இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் மோடியை எதிர்க்காததால் மாயாவதியையும் மக்கள் நிராகரித்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி |
மாயாவதியின் இந்த வீழ்ச்சி ஒருபக்கம் அம்பேத்கரிய சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதாலும் மற்றொருபுறம், மக்களை நேரடியாக பாதிக்கக் கூடிய விஷயங்களில் மௌனமாக இருந்ததன் விளைவால் ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய CAA க்கு எதிரான போராட்டங்களின் போது மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை தூண்டிவிட்டு NRC ஐ முன்மொழிந்தனர். ஆனால் யார் பாதிப்பை ஏற்படுத்தினார்கள்? மிருகத்தனமான காவல் சித்ரவதை அடக்குமுறைகளையும் தோட்டாக்களையும் எதிர்கொண்டவர்கள் முஸ்லிம்களும் தலித் மக்களுமாக இருந்தார்கள். பாதிக்கப்படும் தலித், இஸ்லாமியர்களுக்காக மாயாவதி குரல் கொடுக்காததன் பலனை தேர்தல் தோல்வி மூலமாக அடைந்துவிட்டார்.
பாஜகவின் மிருகத்தனமான போக்கு:
பாஜக 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற முழக்கத்தை தலித் மக்கள் முற்று முழுதாக நிராகரித்துவிட்டனர். அப்கி பார் 400 என்ற பாஜகவின் முழக்கமும் ”சம்விதன் காத்ரே மெய்ன் ஹை” (அரசியலமைப்புக்கு ஆபத்து வந்துவிட்டது) என்ற இரண்டையும் இந்தியாவில் உள்ள தலித் மக்கள் பொறுத்தி பார்த்து பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். ”ஹிந்து காத்ரே மெய்ன் ஹை” அதாவது ”இந்துக்களுக்கு ஆபத்து” என்ற பாஜகவின் 10 ஆண்டுகால பரப்புரையை மக்கள் புறக்கணித்துள்ளனர். இங்கு தான் நுட்பமான ஒருவிடயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்துத்துவ பெரும்பான்மை வாதத்திற்கு எதிராக அண்ணல் அம்பேத்கர் பற்றவைத்த தீயானது இன்றைக்கும் அணைந்துவிடவில்லை என்பது தான் அந்த செய்து. ஒருபக்கம், அந்த சுடரை தலைவர் திருமாவளவன் ஏந்தி நிற்பதும் மற்றொரு பக்கம் கன்ஷிராமால் வளர்த்தெடுக்கப்பட்ட மாயாவதி ஏந்த தவிர்த்ததன் விளைவுகளை மக்கள் பாடமாக கொடுத்துள்ளனர். அம்பேத்கர் தன் வாழ்நாள் இறுதி வரைக்கும் ஆர்.எஸ்.எஸ். - சனாதன - இந்துத்துவ கருத்திற்கு எதிராக இருந்தார். அகண்ட பாரதம், இந்தியா இந்துக்களுக்கான நாடு என்ற சனாதனவாதிகளுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தக்க பதிலடியைக் கொடுத்துக்கொண்டு தான் இருந்தார்.
மக்களவையில் தலைவர் - பொதுச்செயலாளர் |
மோடியின் இரண்டாவது ஆட்சி காலம் முழுக்க முழுக்க சனாதன கருத்துக்களை உச்சம் அடைய செய்த காலமாக மாறியது. இஸ்லாமியர்கள், தலித்துகள் மீதான தாக்குதல்கள் தலைவிரித்தாடின. இதனை தலித், இஸ்லாமிய மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். இந்த சூழலில் தான், 400 இடங்களை பாஜக கைப்பற்றும் என்ற முழக்கத்தை இந்திய ஜனநாயகத்திற்கான பெரிய ஆபத்தாக இந்தியாவில் உள்ள தலித் மக்கள் பார்த்து பதிலடி கொடுத்துள்ளனர். இந்த தீவிர இந்துத்துவ மனநிலையை மாயாவதி எதிர்க்காததால் தான் 488 இடங்களில் போட்டியிட்டும் ஒன்றில் கூட பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெறவில்லை. உத்தரப்பிரதேசத்தில் அதன் வாக்கு வங்கி 2019ல் 19.42 சதவிகிதமாக இருந்து 2024ல் அதன் வாக்கு வங்கி 9.39 சதவிகிதமாக குறைந்துள்ளது. அம்பேத்கரிய சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு சமூக விடுதலையைக் கோரக்கூடிய சாதாரண வாக்காளர்களைக் கூட மாயாவதியால் தக்கவைக்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ். - மோடியின் சர்வாதிகாரத்தை மாயாவதி தக்க நேரத்தில் கண்டிக்கத் தவறியது தான்.
அதே நேரத்தில் பாஜக - சங்க பரிவார் கூட்டத்தை எதிர்க்கும் தீவிர அம்பேத்கரிய அரசியலை முன்வைத்த ஆசாத் சமாஜ் கட்சியின் இளம் தலைவர் சந்திரசேகர் ஆசாத், தான் போட்டியிட்ட நாகினா தனி தொகுதியில் 1,51,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். 2019ல் பகுஜன் சமாஜ் வென்ற தொகுதியை இம்முறை சுயேச்சையாக போட்டியிட்டு வென்றுள்ளார். பகுஜன் சமாஜின் சரியும் செல்வாக்குக்கு இது முக்கிய எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது.
அரசியல் சாசனத்தை ஏந்தி நிற்கும் சந்திரசேகர் ஆசாத் |
2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவை தலித் மக்கள் அம்பேத்கர் வழியில் தான் பார்த்துள்ளார்கள். ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்க வடிவம் மட்டும் அல்ல. இது வாழ்க்கை முறை, இணைந்த தொடர் அனுபவம். சக மனிதர்களுக்கு மரியாதை மற்றும் மரியாதைக்குரிய அணுகுமுறையாக இருக்கிறது. இஸ்லாமியர்கள், தலித்துகள், குழந்தைகள் மீதான தாக்குதல் அதிகரிக்கும் போது அதனை அமைதியாக இருந்து கேள்வி கேட்ட மக்கள் தேர்தல் முடிவுகள் மூலம் பாஜக நிர்மூலமாக்கிவிட்டனர்.
நிதீஷ் – சந்திரபாபுவுக்கு ஒரு பாடம்:
மாயாவதி, ராமதாஸ் உள்ளிட்டவர்களும் கூட பாஜக ஆதரவு நிலைப்பாட்டின் மூலமாக தக்க பாடத்தைக் கற்றுக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்பட்ட நிலை நாளை நிதீஷ் குமாருக்கும் சந்திரபாபுவுக்கும் ஏற்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதன் மூலமாக நிதீஷ் குமாருக்கு ஆதரவான ஒரு முடிவை பீகார் மாநிலம் கொடுத்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராகவும், மண்டல் கமிஷனுக்கு எதிராக கமண்டல் கமிஷனையும் முன்னிறுத்தும் பாஜகவின் ஊதுகுழலாக நிதீஷ் மாறினால் அவரின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.
தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியானது போட்டியிட்ட நான்கு தனித் தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. குல்பர்கா தனி தொகுதியை பாஜக இழந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஐந்து தனித்தொகுதிகளில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. மகாராஷ்டிராவிலும் கூட தனித்தொகுதியாக உள்ள ஒன்பது தொகுதிகளில் ஆறு தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை காங்கிரஸ் வேட்பாளர்கள் படுதோல்வி அடையச் செய்துள்ளனர். ராஜஸ்தானில் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்த பல தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதிகளில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.
ஒரு ஆணவ போக்கு அரசியல் வரலாற்றில் எதையெல்லாம் செய்யும் என்பதை மோடியின் இந்த சறுக்கல் மூலமாகவும் ஒரு சிறிய அமைப்பு கூட ஜனநாயகத்தின் மாண்பை காக்க தனது அரசியல் ஆயுதம் மூலமாக பதிலடி கொடுக்க முடியும் என்பதை தலித் மக்களின் வாக்கு அரசியல் மூலமும் புரியவைத்துள்ளது. வரலாற்று ரீதியாக மோடிக்கு எதிராக தலித் மக்கள் கொடுத்துள்ள இந்த பதிலடியை மோடியின் அரசியல் வரலாற்றில் மறக்கவே முடியாத பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வு. குஜராத்தின் முதல்வராக மோடி இருந்த காலம் தொடங்கி 2024 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கூட மோடி தன்னை ஒரு அசைக்கவே முடியாத சக்தியாக நிறுவிக்கொண்டே இருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜகவும் மோடியும் வெறும் மைனாரிட்டிகள் தான் என்பதை தலித் மக்கள் மோடிக்கு கற்றுக்கொடுத்துவிட்டனர். இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், இஸ்லாமியர்களை வஞ்சித்ததற்கு கைமாறாகவும் உனாவில் தலித் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்கான நீதி போராட்டத்திற்கு கிடைத்த அறத்தின் வெற்றியாகவும் தலித் மக்கள் ஜனநாயகத்திற்கு கொடுத்துள்ள செய்தியாக இந்த தனித்தொகுதிகளில் தலித்துகளின் வெற்றியைப் பார்க்கிறேன்.
இந்தியா அரசியலில் தவிர்க்க முடியாதவர்கள் தலித்துகள் என்பதையும்
தலித்துகளின் எழுச்சி ஒரு புரட்சி பாதையின் நெருக்கத்தை அடைந்துவிட்டது என்பதை மோடி கும்பல் உள்வாங்கிக்கொண்டுவிட்டது.
- வன்னி அரசு
(நக்கீரன் இதழில் ஜூன் 22 வெளியான கட்டுரை)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment