27 September 2014
பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் ஒரு காட்சி. அவ்வளவு சீக்கிரம் அந்தக் காட்சியை மறந்து விட முடியாது. ஊர்ப் பெரிய மனிதரான விஜயகுமார், அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை கொட்டும் மழையில் அடித்து விரட்டிக்கொண்டே, “எங்களுக்கு உதவியா இருக்கிறதுக்குத்தான் உங்களை இங்கே குடியமர்த்தியிருக்கோம். இப்ப உங்களுக்கு எங்க பொண்ணு வேணுமாடா?” என்று ஆதிக்க சாதி வெறியுடன் கத்துவார். தலித்துகள் வேறு நாட்டைச் சார்ந்தவர்கள் போலவும், அவர்களை எங்கிருந்தோ இந்த மண்ணுக்குக் கூட்டி வந்தது போலவும் ஆதிக்கச் சாதியினருக்கு அடிமை வேலை செய்வதற்காகத்தான், அவர்கள் ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் போலவும் இயக்குநர் சேரன் அந்தக் காட்சியைப் படத்தில் காட்டியிருப்பார். இம்மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாறு, சமூக-அரசியல் குறித்த பார்வை எதுவுமே இல்லாமல்தான் இதுகாறும் திரைப்படங்கள் வந்துள்ளன.
இந்துத்துவச் சிந்தனையாளர்களாக, நிலப்பிரபுத்துவச் சிந்தனையாளர்களாகத்தான் பல இயக்குநர்கள் இப்படி அலைகிறார்கள். சமூகம் குறித்த பார்வையோ, சாதி எப்படி உருவானது என்கிற வரலாற்றுப் புரிதலோ இல்லாமல்தான் சமூகம் குறித்துப் பேசுகிறார்கள்; காட்சி அமைக்கிறார்கள். சேரி - குப்பங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட - மீனவ மக்களை ரவுடிகளாக, அல்லது காமெடியன்களாக, திருடர்களாக, அழுக்கானவர்களாக, அறுவருப்பானவர்களாகத்தான் காட்டியிருக்கிறார்கள்.
காமெடி நடிகர்கள் விவேக், சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்கள் சாதாரணமாக ‘அட்டு ஃபிகர்’ என்று சொல்லுவார்கள். அவர்கள் இந்தச் சொல்லாடலைத் தெரிந்துதான் சொல்கிறார்களா அல்லது தெரியாமல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ‘அட்டு’ என்பது என்ன மொழி? எங்கிருந்து வந்தது. ‘பிut’ என்கிற வார்த்தையிலிருந்துதான் வந்திருக்க முடியும். ‘பிut’ என்றால் குடிசை. குடிசைகள் அதிகம் இருக்கிற சேரிப் பகுதிகளிலிருந்து வரும் பெண்களைக் கிண்டல் செய்கிற சொல்லாடல்தான் இந்த ‘அட்டு’. இந்தச் சொல் ஒரு சமூகத்தையே இழிவுபடுத்துகிற வகையில் பயன்படுத்தப்படும் சொல் என்பதை எந்த இயக்குநராவது புரிந்து வைத்திருக்கிறார்களா?
தலித்துகளுக்கென்று தனி அடையாளம் உண்டு; ஒரு தனி பண்பாடு உண்டு; கலை-இலக்கியம் உண்டு. ஆனால் இவற்றையெல்லாம் குறித்து எந்தத் திரைப்படமும், கலை-இலக்கியவாதிகளும் கவலைப்பட்டதில்லை. வெளியே முற்போக்கு சிவப்பு அரசியலைப் பேசக்கூடிய இயக்குநர்கள்கூட ஆதிக்க சாதி குறித்த கதைகளைத்தான் படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் பாரதிராஜாவோ, பாலாவோ விதிவிலக்கல்ல. சமூக மாற்றத்திற்காகக் களமாடிய தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவராகக் காட்டிக் கொள்கிற நடிகர் கமல்ஹாசன்கூட சாதிப் பெருமை பேசும் ‘தேவர்மகன்’, ‘விருமாண்டி’ போன்ற படங்களைத்தான் எடுத்தார்.
இயக்குநர் பாலாகூட நல்ல இயக்குநர் என்று பெயர் பெற்றவர்; பல விருதுகளை வாங்கியுள்ளார். ஆனால் அவரது ‘அவன் இவன்’ படத்தில் கொடூர வில்லனாகக் காட்டப்படுபவர் மாடு அறுக்கும் தொழில் செய்பவர். மாட்டை அறுப்பவன் தலித் சமூகமாகத்தான் அடையாளம் காட்டுவார்கள். அந்தச் சமூகத்தில் உள்ளவனை வில்லனாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பாலா.
இப்படி.. தாழ்த்தப்பட்ட மக்களின், பண்பாட்டையும் வரலாற்றையும் இதுவரை யாருமே கதைக் களமாக்க முன்வராத சூழலில் மிகத் துணிச்சலாக எடுக்கப்பட்டுள்ள படம்தான் ‘மெட்ராஸ்’. இத்திரைப்படம் மூலம் பல்வேறுவிதமான ஆதிக்கச் சிந்தனை உள்ளவர்களை குலைநடுங்க வைத்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.
தென் மாவட்ட மக்களின் - குறிப்பாக மதுரை மாவட்ட தேவர் மக்களின் - வாழ்க்கைப் பதிவு, கொங்குக் கவுண்டர்களின் வாழ்க்கைப் பதிவு என்று பல திரைப்படங்கள் சாதிப் பெருமையை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளன. தங்களை வாழ வைக்கும் சென்னை மாநகரில் உட்கார்ந்துகொண்டு, அந்த சென்னை மக்களுக்கு எதிராகவே படம் எடுக்கிறார்கள்.
ஆனால் சென்னையின் மண்ணின் மைந்தர்களான, அதுவும் வியாசர்பாடி, புளியந்தோப்பு பகுதி மக்களின் வாழ்வியல் முறை, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களைப் பயன்படுத்தும் அரசியல் என்று கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளின் அரசியலால் வடசென்னை எப்போது பார்த்தாலும் முட்டலும் மோதலுமாய் இருக்கிறது. அவரவர் சக்திகளுக்கு விளம்பரம் எழுதுவதற்காக சுவர் பிடிக்கும் தகராறிலிருந்து, கொலை வரை போய்க்கெண்டிருக்கிறது.
சுவர் என்பது வெறும் சுவரல்ல; அது காலம் காலமாய் நிறுவப்பட்டிருக்கும் அதிகாரம் என்று கதை விரிகிறது. இந்தப் பகை அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் தேர்தல் அரசியலுக்கு எப்படியெல்லாம் சேரி மக்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை உள்ளீடாகக் கொண்டுதான் கதை நகர்த்தப்படுகிறது.
‘மெட்ராஸ்’ படத்தில் மிகப் பிரமாண்டமான வீடுகள் இல்லை; செட்டுகளும் இல்லை. மிகக் குறுகிய அவுசிங் போர்டு வீடுகளுக்குள்தான் கேமரா புகுந்து விளையாடுகிறது. பறந்து பறந்து அடிக்கும் ஹீரோத்தனமான சண்டைகள் இல்லாத எதார்த்தமான தெருச் சண்டைகள், கதாநாயகி சிரித்தவுடனேயே வெளிநாடுகளில் பல்வேறு அரை குறை ஆடைகளுடன் ஆட்டம்போடும் எந்தக் காட்சியையும் இதில் திணிக்காமல், மிக நேர்த்தியாக அன்றாடம், பார்த்துப் பழகிய இடங்களையே அழகியலாக காட்சிப்படுத்தியிருப்பது மிகச் சிறப்பு.
‘மெட்ராஸ்’ படமும் ஓர் ஆழமான நட்பைப் போற்றும் கதைதான். கிருஷ்ணப்ப நாயக்கர் குடும்பத்தின் அரசியல் ஆதிக்கத்தை எதிர்க்கும் அன்பு, அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அணி பொறுப்பாளர் ஆகிறார். அன்புவின் நண்பர்தான் ஹீரோ காளி (கார்த்திக்). கொல்லப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கரின் (கவிஞர் ஜெயபாலன்) படத்தைச் சேரிச் சுவரில் மிகப் பிரமாண்டமாக வரைந்து வைத்து அதை அழிக்க முடியாத அளவு பல்வேறு வதந்திகளைப் பரப்புகிறார்கள். அந்தப் படத்தை அழிக்க முயற்சி செய்கிறான் அன்பு. இதனையொட்டி நடக்கும் கோஷ்டிச் சண்டைகளும், கொலைகளும்தான் கதை.
படித்துவிட்டு ஐ.டி.யில் வேலை பார்க்கும் கதாநாயகன் காளிக்கும், அன்புக்கும் இடையேயான நட்பு, அன்பும் அவனது மனைவி மேரிக்கும் இடையேயான காதல் உறவு, வியாசர்பாடி மக்களுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு எல்லாம் அப்படி அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தன் வேலையுண்டு, காதல் உண்டு என்று சுற்றும் காளி, நண்பன் அன்புவை எதிரிகளிடமிருந்து காப்பாற்றச் சண்டையிடும் காட்சி இதுவரை திரையுலகம் பார்த்திராதது. மிக எதார்த்தமாக, ஹீரோத்தனம் இல்லாமல் தப்பித்துச் செல்லும் நோக்கிலேயே தற்காப்புக்காகச் சண்டையிடும் காட்சி மிகச் சிறப்பு. பகைவனை கொலை செய்துவிட்டு தப்பிக்க முடியாமலும், வழி தெரியாமலும் திணறும் காட்சி எதார்த்தமானதாக இருக்கிறது. பின்பு சரண்டராகப் போகும் நீதிமன்ற வளாகத்திலேயே அன்பு கொல்லப்படுவதும், கொல்லப்பட்ட பிறகு நடக்கும் அரசியல் விளையாட்டும் எதிர்பாராதது. துரோக அரசியல்தான் தன் நண்பனை வீழ்த்தியது என்பதை அறிந்து கொதிக்கும் கதாநாயகன், நண்பனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கிருஷ்ணப்ப நாயக்கரின் ஓவியத்தை அழிப்பதும், துரோகத்தை வெல்வதும்தான் கதை. இந்தக் கதைக்குள்தான் புதுக்கவிதை போன்ற நாயகன் - நாயகியின் காதல், கட்சித் தலைமையின் துரோகம், ஏமாற்று வேலை என்று எகிறிக்கொண்டே போகிறது. இறுதியில் ஓவியம் அழிக்கப்பட்ட சுவரில் ரெட்டைமலை சீனிவாசன் அறக்கட்டளை சார்பாக கல்வியை வலியுறுத்தி விளம்பரம் செய்திருப்பார்கள். நாயகனும் நாயகியும் அம்பேத்கர் பாடசாலையில் நின்று, ‘நாம் கல்வி கற்க வேண்டும், அத்துடன் சமூக அரசியலுடன் கூடிய அரசியலையும் கற்க வேண்டும்’ என்கிற புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியலைச் சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.
சேரி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தலித்துகளை இருட்டுக்குள் தள்ளும் அரசியலை வெளிச்சமாக்கியிருக்கிறது இந்த ‘மெட்ராஸ்’ திரைப்படம். தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள்கூட சாதி, மதம் என்று வரும்போது கத்தியைத் தூக்கிக்கொண்டு நிற்பார்கள் என்று கதாநாயகன் பேசுவது இங்குள்ள போலித் தமிழ்த் தேசியவாதிகளை தோலுரித்துக் காட்டுகிறது. சண்டை ஒன்றில் கதாநாயகன் அடிபட்டவுடன் வேறு நல்ல அமைதியான இடத்திற்குப் போவோம் என்று அப்பா சொல்லும் அப்பாவிடம், “இது நம்ம இடம், நாம ஏன் வெளியில போகணும்?” என்று காளி கேட்பது மண்ணுரிமை அரசியலை முன்னிறுத்துகிறது.
அன்பு கொல்லப்பட்டவுடன் அவனது பிணத்தின் முன்பு கானா பாலா பாடும் பாடல் துக்கமானது. சாவு வீட்டின் முன்பு வியாசர்பாடி இளைஞர்கள் ஆடும் சாவுக் கூத்து மிகைப்படுத்தப்படாமல் அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சேரி மக்களின் திருமண வாழ்க்கையில் வரதட்சணை என்பது ஒரு பிரச்சனையே இல்லை என்பதை கதாநாயகன் - கதாநாயகி நிச்சயதார்த்தக் காட்சியின் மூலம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இப்படி பல சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஜானி கதாபாத்திரம் மறக்கவே முடியாதது. அவர் கொல்லப்படும்போது ஒட்டுமொத்தக் கோபமும் கிருஷ்ணப்ப நாயக்கரின் ஆட்களின் மீதுதான் திரும்புகிறது. அப்படி கதை மாந்தராகவே ஜானி படம் முழுக்க வந்து போகிறார்...
சென்னை வடசென்னை
இந்தக் கறுப்பர் தமிழ் மண்ணை
யாரோ இசைப்பாரோ - எங்க
வேரை அசைப்பாரோ
எங்க ஊரு மெட்ராசு - அதுக்கு
நாங்கதானே அட்ரசு
.. என்ற படத்தின் தொடக்கப் பாடல் மூலம் சென்னையைப் பெருமைப்படுத்தும் மக்கள் கவிஞர் கபிலனின் வரிகளுக்கேற்ப இம்மண்ணின் வேர்களான தலித் மக்களின் வாழ்க்கையை வெறும் சாதிப் பெருமையாகப் பேசாமல், கடந்த கால சுயநல அரசியல் ஒரு சமூகத்தை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டது என்பதையும், அதிலிருந்து விடுபட சமூக அரசியலுடன்கூடிய கல்விதான் தேவை என்கிற கருத்தியலோடு படமாக்கிய இயக்குநர் பா.ரஞ்சித், இப்படத்தைத் துணிச்சலாகத் தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்டோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்த்துக்கள்.
05 September 2014
இனப்படுகொலை நாடான இலங்கையில் நடந்துவரும் 'யூத் வாலிபால் சாம்பியன்ஷிப் 2014' போட்டிகளில் இந்திய அணிகளின் சார்பில் விளையாடுவதற்கு தமிழக வீரர்கள் இருவர் அனுப்பப்பட்டதையொட்டி வாலிபால் பயிற்சியாளர் ஆண்டனி, மேலாளர் நாகராஜன் ஆகிய இருவரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்திருப்பதாக 'தி இந்து' தமிழ் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
போர்க் குற்றவாளியான இராஜபக்சேவைத் தனிமைப்படுத்தும் வகையில் இனப்படுகொலை நாடான இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். இத்தீர்மானத்தை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றன. இந்த அடிப்படையில் இனப்படுகொலை நாடான இலங்கைக்கு தமிழக வீரர்கள் அனுப்பப்பட்டதை அறிந்து உடனடியாக அவர்களைத் திரும்ப அழைத்திருக்கும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அந்த விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு கவனத்தில்கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும்.
பல ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்துத்தான் இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம்பெற்றிருக்க முடியும். அந்த வீரர்களின் இலட்சிய வேட்கை சர்வதேச அளவில் களமாடுவதுதான். ஆனால், இப்போது இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக நின்றுகொண்டிருக்கிறது.
இச்சூழ்நிலையில் தமிழக அரசு அந்த வீரர்களுக்குப் புத்துணர்வைத் தரும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். விளையாட்டிலும் அரசியல் புகுந்திருப்பதால் தமிழக அரசு இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருக்குத் தெரியாமலோ, தமிழக அரசுக்குத் தெரியாமலோ தமிழக வீரர்கள் இலங்கைக்குச் சென்றிருக்க முடியாது என்கிற போது, பயிற்சியாளரையும், மேலாளரையும் மட்டும் பணி நீக்கம் செய்திருப்பது யாரையோ காப்பாற்றுவதற்காகத்தான் என்பது வெட்டவெளிச்சமாகிறது.
இப்படியிருக்கையில், இந்தச் செய்தி வெளியில் வந்தால் பெரும் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்கிற அச்சத்தில் தமிழக அரசு பயிற்சியாளர்களைக் காவு கொடுத்திருப்பது வேதனையான செயல். முதல்வர் ஜெயலலிதா பயிற்சியாளர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பதை இரத்து செய்துவிட்டு இலங்கையுடனான எந்த உறவையும் இந்தியா வைத்துக்கொள்ளக் கூடாது என்று நரேந்திர மோடியை ஜெயலலிதா வற்புறுத்த வேண்டும்.
இந்த வகையில்தான் இராஜபக்சேவின் வணிக முகமூடியான லைக்காவின் 'கத்தி' திரைப்படத்தையும் தடை செய்ய வேண்டும். செய்வாரா முதல்வர் அம்மா?
இந்த வகையில்தான் இராஜபக்சேவின் வணிக முகமூடியான லைக்காவின் 'கத்தி' திரைப்படத்தையும் தடை செய்ய வேண்டும். செய்வாரா முதல்வர் அம்மா?
24 August 2014
ஒரு காட்சியில் ரவுடிகள் அத்தனை பேரையும் போலிஸ் ஜீப்பில்
ஏற்றும்போது, "என்னையும் ஏத்திக்கங்கய்யா.. இந்த ஏரியாவுல நானும் ரவுடின்னு
ஃபார்ம் ஆயிட்டேன்.. நம்புங்கய்யா நானும் ரவுடிதான்யா" என்று வடிவேலு
சொல்வதைப்போல தமிழகத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் 'ஃபார்ம்' ஆயிட்டு
அடுத்து என்ன பண்ணுவதுன்னு முழிச்சிக்கிட்டிருக்காங்க.
நடிகர் விஜயகாந்த் ஒரு கட்சி ஆரம்பித்து தலைவராக 'ஃபார்ம்' ஆயிட்டு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். தேர்தல் காலங்களில் ஒரு வியாபாரியைப்போல யார் அதிகமா சீட்டும் நோட்டும் தருகிறார்கள் என்று கணக்குப் போட்டு அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்தார். இதைப் போலத்தான் மருத்துவர் இராமதாசும். இவர் பேசுறதக் கேட்டா (என்னத்தப் பேசுனாலாம் அந்தக் கருமாந்திரத்தையும் ஊடகங்கள் பெரிசா போடுறதுதான் கொடுமை) ஏதோ உண்மை போலவே இருக்கும். ஆனால் அதில் வன்முறைத் தூண்டலும் ஏமாற்று வேலையும்தான் மிஞ்சும் (கொஞ்சம் நடிங்க பாஸ்).
இதேபோல் நடிகர்கள் கார்த்திக், சரத்குமார் போன்ற மாபெரும் தலைவர்களும் தலைவர்களாக 'ஃபார்ம்' ஆகி தமிழக அரசியலையே கலக்கோ கலக்கு என்று கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். (இவர்களுடைய இலக்கும் 2016இல் தமிழகத்தின் முதல்வராவதுதானாம்!)
இந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களும் ஒரு தலைவராக
'ஃபார்ம்' ஆகி படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். எந்தக் கோட்பாட்டுப்
புரிதலுமற்ற அரசியல்வாதியாகவே அம்பலப்பட்டு நிற்கிறார். கடந்த காலங்களில்
அவரது பேச்சுக்கள் பேட்டிகளைப் பார்த்தால் சாமானியனுக்கும் இது புரியும்.
'கத்தி' திரைப்படம் தொடர்பாக தமிழகத்தில் எழுந்த பிரச்சினை குறித்து சீமானின் கருத்து ஓர் உதவி இயக்குநரின் கருத்தைவிட மோசமாக இருக்கிறது (உதவி இயக்குநர்கள் மன்னிக்க). மாணவர் சமுதாயமும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் (நம்ம படித்துறைப் பாண்டி பழ.நெடுமாறனைத் தவிர), கத்தி திரைப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் மீது எதிர்ப்பைப் பாய்ச்சிக் கொண்டிருக்கும் சூழலில் கொஞ்சம்கூட அச்சமில்லாமல் லைகா நிறுவனத்திற்கும் அந்த இயக்குநருக்கும் ஆதரவாகப் பேசுவதன் மூலம் மேலும் அம்பலமாகியிருக்கிறார்.
இராஜபக்சேவின் வணிக முகமூடியாக லைகா நிறுவனம் இருப்பதை தமிழ்ச் சமூகம்
நிரூபித்த பிறகும் அண்ணன் சீமான் கத்தி திரைப்படத்தையோ, லைகா நிறுவனத்தையோ
எதிர்க்க மாட்டேன் என்று அடம்பிடிப்பது அவரது விருப்பம். ஆனால் நடிகர்
விஜய்யும் இயக்குநர் முருகதாசும் தமிழ்ப் பிள்ளைகள், அவர்களை நான் எதிர்க்க
மாட்டேன் என்று உளறுவதன் நோக்கம் என்ன?
விஜய் தமிழ்ப் பிள்ளையாய் இருக்கட்டும், அல்லது முதலியார் பிள்ளையாகக்கூட இருக்கட்டும். அது நமக்குப் பிரச்சனையல்ல. அந்தத் தமிழ்ப் பிள்ளை இந்தத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஏதாவது செய்திருக்கிறாரா? என்பதுதான் நம் கேள்வி.
புலிகளின் இனவிடுதலைப் போரைப் பற்றியோ தமிழர்களின்
மொழிப்போர் பற்றியோ தமிழகத்தில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பைப் பற்றியோ
அல்லது தமிழ்நாடு சேரி - ஊர் என்று பிரிந்து கிடப்பதைப் பற்றியெல்லாம்
நடிகர் விஜய்யிடம் யாரும் எந்தக் கருத்தையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை.
ஏனென்றால் அதைப் பற்றிய எந்தக் கருமாந்திரமும் அவருக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கும் அப்படித்தான்.
ஆனால் விஜய் நடித்து வெளிவந்த எந்தத் திரைப்படமாவது சமூக அக்கறையுள்ள
படமாக வந்துள்ளதா? அநேக படங்களில் இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாசப்
பாடல்களும்தான் மிஞ்சுகின்றன. சமூகத்தின் அவலங்களைக் கண்டும் காணாமல்
கடக்கும் போக்குதான் விஜய் போன்ற பெரும்பாலான சினிமாக்காரர்களுக்கு உண்டு.
நாங்கள் கலைஞர்கள், மொழிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பெரிய
அப்பாடக்கர்கள் மாதிரி வடக்கே போய் திக்கித் திணறி ஆங்கிலம் கலந்து
பேசுவது, தமிழகத்திற்கு வந்தால் மட்டும் தமிழ்ப் பிள்ளைகள் என்று பெருமை
பேசுவது இதையெல்லாம் யாரை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் வசனங்கள்.
இனப்படுகொலைக் குற்றவாளியாக இராஜபக்சேவை அறிவிக்க வலியுறுத்தி, நாடு
கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உலகம் முழுக்க கையெழுத்து இயக்கம்
ஒன்று தொடங்கப்பட்டது. அந்தப் பொறுப்பை தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள்
ஏற்றுக்கொண்டது. கடந்த 2011 சூலை 12 அன்று சென்னை செய்தியாளர்கள்
மன்றத்தில் தலைவர் தொல்.திருமாவளவன் அந்தக் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி
வைத்தார். இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், திரைப்படத்
துறையினர் என்று அனைவரிடமும் கையொப்பம் பெறப்பட்டது. அனைவரும் இராஜபக்சேவை
இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற வெறியோடு
கையெழுத்திட்டனர். நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட
ஏராளமான திரைத் துறை கலைஞர்கள் தாமாகவே முன்வந்து கையெழுத்திட்டனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் அவர்கள் 25-7-2011 அன்று நண்பன்
திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது கையெழுத்து வாங்க
முயற்சிக்கப்பட்டது. ஆனால் அவர் கையெழுத்திட மறுத்துவிட்டார். அவரது
தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கேட்டபோது, "அதெல்லாம் நாங்க போட
முடியாதுப்பா. நாங்க சினிமாக்காரங்க.. இதிலெல்லாம் தலையிட முடியாது" என்று
கூறி அவரும் மறுத்துவிட்டார்.
இப்போது சொல்லுங்கள் இராஜபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தும் ஒரு படிவத்தில் கையெழுத்திட மறுத்ததன் மூலம் விஜய் இராஜபக்சேவுக்கு ஆதரவாக, அதாவது அவரை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்று சொல்வதாகத்தானே அர்த்தம். இப்போது இராஜபக்சேவின் நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு அவர் நடித்துக் கொடுப்பது என்பது ஏதோ தெரியாமல் நடந்ததல்ல. திரை மறைவில் பல திட்டங்களை வடிவமைத்துத்தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் இந்தத் தமிழ்ப் பிள்ளை.
முழுக்க முழுக்க வணிக நோக்கத்தோடு படங்களில் நடிப்பது, தமிழர்
பண்பாட்டைச் சீரழிப்பது, தமிழ்ப் பண்பாட்டுக்கெதிராகத் தொடர்ந்து
நடித்துக்கொண்டிருக்கும் கலாச்சாரச் சீரழிவுப் பேர்வழியான விஜய் தமிழ்ப்
பிள்ளை என்பதற்காக அவரைத் தூக்கி வைத்து உச்சி முகர்ந்திட முடியுமா?
அண்ணன் சீமான் நடிகர் விஜய்யை ஆதரிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இடஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துள்ள இயக்குநர் முருகதாசை (ரிசர்வேஷன், கரப்சன், ரெக்கமண்டேசன் இவைதான் திறமையானவர்களுக்கு எதிரானது என்று புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோருக்குக் கூடத் தெரியாத, அரிய தத்துவத்தை தனது ஏழாம் அறிவு மூலம் சொன்னவர்தான் நம்ம முருகதாஸ்) ஆதரிக்க ஆயிரத்து இரண்டு காரணங்கள்கூட இருக்கலாம். அது பிரச்சனையல்ல. ஆனால் தமிழ்ப் பிள்ளை என்கிற ஒரு காரணத்தை மட்டும் முன்மொழிந்தால் திருகோணமலை பிள்ளையான்கூட நானும் 'தமிழ்ப் பிள்ளை'; என்று சொல்ல மாட்டாரா? கே.பி.யும் கருணாவும் டக்ளஸ் தேவானந்தாவும்கூட நாங்களும் தமிழ்ப்பிள்ளைகள்தான் என்று ஒரு திரைப்படம் எடுத்தால் அண்ணன் சீமான் அவர்களின் முடிவு என்னவாக இருக்கும்.
பாவம் நம் மாணவர்கள் செம்பியன்,
மாறன், பிரபா போன்றோர்தான் அந்தத் திரைப்படங்களுக்கும் எதிர்ப்புத்
தெரிவித்து அடி வாங்குவார்கள். தமிழ்கூறும் நல்லுலகம் அதையும் வேடிக்கை
பார்க்கும்.
எல்லோருக்கும் வாழ்நாள் இலட்சியம் என்று ஒன்று இருக்கும். சிலருக்கு
விஜய்யை வைத்துப் படம் எடுப்பதுதான் வாழ்நாள் இலட்சியமாக இருக்கிறது
என்றால் நாம் என்ன செய்ய முடியும்?
திரைப்படத்தின் க்ளைமாக்ஸில்
வரும் ட்விஸ்ட்டுகளைப் போலத்தான் அண்ணன் சீமானும் ஒரு ட்விஸ்ட்டாக 'கத்தி',
'புலிப் பார்வை' படங்களுக்கு அமைந்திருக்கிறார்.
ஸ்டார்ட்... ரெடி... ஆக்ஸன்... தமிழ்ப் பிள்ளைகளே... கொஞ்சம் நடிங்க பாஸ்.
- வன்னிஅரசு.
17 August 2014
வன்னிஅரசு
23ஆம் புலிகேசி வடிவேலு மன்னரைப்போல் ஆட்சி செய்து வருகிறார் ஜெயலலிதா. மக்களுக்காக ஆட்சி நடத்துவதாகச் சொல்லிவிட்டு அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா திரையரங்கம், அம்மா மருந்தகம் என்று அவருக்கு அவரே சொரிந்து வருகிறார். சட்டப் பேரவையில் 5 நிமிடப் பேச்சில், 50 முறை அம்மா அம்மா என்று சொன்னால்தான் அனுமதி கிடைக்கும். தமிழகத்தில் இனி மின்வெட்டே ஏற்படாது என்று சட்டப்பேரவையிலே அறிவித்தார். அறிவித்த நாளிலிருந்து 5 மணி நேரம், 6 மணி நேரம் என்று மின்வெட்டு தமிழகத்தை இருட்டாக்கியது. அந்த இருட்டில் வழிப்பறியும், கொலையும் கொள்ளையும் நாள்தோறும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த இலட்சணத்தில்தான் இருக்கிறது ஜெயலலிதா ஆட்சி.
தருமபுரியில் சாதிவெறியர்களின் கொலைவெறியாட்டத்திலிருந்து தொடங்கிய மரம் வெட்டிகளின் வன்முறைப் பயணம், தங்குதடையின்றி மாவட்டம் மாவட்டமாகப் தொடர்ந்தது. அதனைத் தடை செய்ய வக்கில்லாத ஜெயலலிதாவால்தான் இளவரசன் கொல்லப்பட்டான். ஜெயலலிதா வாய்மூடி அமைதி காத்ததால்தான் சாதிவெறியர்கள் பலமடங்கு துணிச்சலுடன் வெளிப்படையாகச் செயல்படத் தொடங்கினர். அந்தக் கும்பலை அடக்க முடியாத ஜெயலலிதா அரசு விடுதலைச் சிறுத்தைளை ஒடுக்கத் துடிக்கிறது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலைவர் திருமாவளவன் நுழையவே தடை விதித்தது. சாதி வெறியர்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கவே அனுமதி மறுத்தது. நத்தம் காலனி மக்களுக்குக் கொடுக்க வேண்டிய உடை, தட்டு முட்டு சாமான்கள் மற்றும் அரிசி, பருப்பு ஆகியவற்றை ஓராண்டாக அம்மக்களுக்குக் கொடுக்கக்கூட அனுமதிக்காத ஈவிரக்கமற்றராக ஜெயலலிதா நடந்துகொண்டது அவரது தலித் விரோத நடவடிக்கை மட்டுமல்ல மனித நேயத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட அம்மக்களுக்களோடு மக்களாக நின்று அழக்கூட தலைவர் திருமாவளவனுக்கு இன்று வரை அனுமதியில்லை. கொல்லப்பட்ட இளவரசன் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தத் தடை விதித்த ஈவிரக்கமில்லாத ஜெயலலிதாதான் ‘அம்மா’வாம். அப்படிப்பட்ட கொடு மனம் படைத்த ஜெயலலிதா இப்போது விடுதலைச் சிறுத்தைகளின் கல்வி உரிமை மாநாட்டுக்குத் தடை விதித்துள்ளார்.
அனைவருக்கும் கல்வியை இலவசமாக்கு என்கிற முழக்கத்தில் என்ன தவறு இருக்க முடியும்? கல்விக் கொள்ளையர்களிடமிருந்து மாதாமாதம் வரவேண்டிய கப்பத்திற்குத் தடை ஏற்பட்டு விடும் என்பதால்தான் இந்தத் தடையா? எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். அப்படிப்பட்ட எழுத்தறிவை அனைவருக்கும் இலவசமாக்க வேண்டும். கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்கிற விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா போலீசு சேலத்தில் ஆகஸ்டு 17 அன்று நடைபெறும் மாநாட்டிற்குத் தடை விதித்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் அத்தடையை நீக்கி மாநாடு நடத்த ஆகஸ்டு 14 அன்று அனுமதி அளித்தது. தமிழகம் முழுக்க கல்வி உரிமை மாநாட்டை விளக்கி சைக்கிள் பேரணி, பிரச்சாரங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் 16ந்தேதி காலையில் திடீரென சேலம் மாவட்ட நிர்வாகம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அதாவது சொந்த வாகனங்களில்தான் மாநாட்டிற்கு வரவேண்டும். வாடகை வாகனங்களில் வர அனுமதியில்லை என்பதுதான் அந்த ஆணை. ஜெயலலிதா எப்படிப்பட்ட கொடுமனம் படைத்தவராக இருந்தால் இப்படிப்பட்ட ஆணையைப் பிறப்பிக்க முடியும். தலித்துகள் எத்தனை பேருக்கு சொந்த வாகனங்கள் இருக்கின்றன? தமிழகத்தில் அப்படிப்பட்ட செல்வாக்கிலா தலித்துகளின் நிலை உயர்ந்துள்ளது? இப்படிப்பட்ட உத்தரவு வேறு கட்சியின் மாநாட்டிற்குப் போட்டிருக்கிறார்களா? முழுக்க முழுக்க சாதிவெறியை வளர்த்தெடுக்கும் மாமல்லபுரம் மாநாட்டிற்கு இப்படி தடை விதித்திருந்தால் ஜெயலலிதாவைப் பாராட்டியிருக்கலாம். ஆனால், கல்வியை வளர்த்தெடுக்க நடத்தப்படும் ஒரு மாநாட்டிற்குத் தடை விதித்திருப்பதுதான் அம்மாவின் துணிச்சலா? எளியவர்களிடம் சட்டத்தைக் காட்டி அடக்க நினைப்பதுதான் துணிச்சலா?
எளிய மக்களின் விடுதலைக்காக தன்னை விதைநெல்லாக விதைத்துக் கொண்ட போராளித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளை தமிழகம் முழுக்க சிறுத்தைகள் ஆகஸ்டு 17 அன்று கொண்டாடுவது வழக்கம். அந்த நாளில்தான் இந்த கல்வி உரிமை மாநாடு. காலங்காலமாய் கல்வி மறுக்கப்பட்ட சமூகமாகத்தான் தலித் சமூகம் இருந்து வந்துள்ளது. கல்வி அளிக்கப்பட்டால் அவர்கள் விழிப்புணர்வு அடைந்து மேம்பட்டுவிடுவார்கள் என்பதால்தான் கல்வி கேட்கக் கூடாது என்று மனுதர்மம் தடை விதித்தது. அதே தடையைத்தான் மனுதர்மவாதி ஜெயலலிதா இப்போது நடைமுறைப்படுத்துகிறார். பேய் அரசாண்டால் பினந்தின்னும் சாத்திரங்கள் என்பார்கள். இந்தப் பேயை ஆள விட்டதன் விளைவை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இந்தப் பேயை ஓட ஒட விரட்டியடிப்பது சிறுத்தைகளால் மட்டுமே முடியும் என்பதை வரும்காலம்முடிவு செய்யும்.
Subscribe to:
Posts (Atom)