19 October 2014

எத்தனை ஆட்சி மாற்றங்கள் வந்தென்ன?கத்திரி மலைவாழ் மக்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை

“இதோ கொஞ்ச தூரம்” என்று சொல்லித்தான் அழைத்துப் போனார்கள்.  
மேட்டூரிலிருந்து அதிகாலையில் அந்த மலையடிவாரத்தில் இறங்கியதுமே வேறொரு உலகிற்கு வந்துவிட்டோமோ என்றுதான் தோன்றியது.  “அதோ அதுதான் கத்திரி மலை...  பக்கம்தான்... போய்விடலாம்” என்று சொல்லிக்கொண்டே கையை உயர்த்தி வான் நோக்கிக் காட்டினார்கள் வழிகாட்டுவதற்காக எங்களுடன் வந்திருந்த மலைவாழ் இளைஞர்கள்.  தலை நிமிர்ந்து மலையைப் பார்த்தபோது, ‘ஏறி விட முடியுமா?’ என்கிற மலைப்புத்தான் கண்முன் நின்றது.  



வெட்கப்பட்டு பச்சையைப் போர்த்திக்கொண்டு நிற்கும் மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தது எங்களை வரவேற்று அழைப்பதுபோல் இருந்தது. உருட்டிவிடப்பட்ட கற்களும் அவற்றைத் தாண்டி நிற்கும் மணல் வெளியும் எங்களுக்கான பாதைகளாகின.  25 கிலோ மீட்டர் நடந்தால்தான் அந்த கத்திரி மலைக்குப் போக முடியும்.  செங்குத்தான மலைப் பகுதி. பாதையை உருவாக்கியவர்கள் கத்திரி மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களான சோளகர்கள்.  கன்னடம் பேசினாலும் இவர்களின் தாய்மொழி தமிழ்தான். மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தின் மண்ணின் மைந்தர்கள்.  இந்த மக்களின் குலதெய்வமான மங்கம்மாள் கோயில் திருவிழாவிற்காகத்தான் கத்திரி மலைக்கு வரச்சொல்லி நமக்கு அழைப்பு வந்திருந்தது.

மங்கம்மாள் கோவில் 
திராவிடர் கழகத் தோழர் வழக்கறிஞர் ஜூலியஸ் அவர்கள் ஒருங்கிணைக்க, அய்யா தகடூர் தமிழ்ச்செல்வன், தம்பிகள்  ஜோஸ்வா ஐசக், சஜித்குமார் மற்றும் கத்திரி மலை இளைஞர்களுடன் நடக்க ஆரம்பித்தோம்.  சம தளத்தைக் கடந்து மலை ஏறஏற மரங்களை கிழித்துக் கொண்டு வீசும் காற்றைப் போல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.  சமதளத்தில் எத்தனை கிலோ மீட்டரானாலும் நடக்க முடியும். ஆனால், சமமற்ற செங்குத்தான மலைப் பகுதியில் நடப்பதற்கு பயிற்சி வேண்டும் என்பதை 12-10-2014 அன்றுதான் உணர்ந்தோம்.  “வந்துவிட்டோமா... இன்னும் எவ்வளவு தூரம்” என்கிற வார்த்தைகள் மூச்சு வாங்க வாங்க அவ்வப்போது எங்களிடமிருந்து வந்துகொண்டுதான் இருந்தன.




சூரியன் நுழைய முடியாத அந்த அடர்த்தியான காடுகளுக்குள் நடப்பது என்பதே சுகமாகத்தான் இருந்தது.  ஆங்காங்கே மரங்களின் நிழலுக்குக் கீழே கிடக்கும் பெரும் பாறைகள் இருந்தன. எங்களுக்காகக் காத்திருந்ததுபோல் கிடந்த அந்தப் பாறைகளில் அனைவரும் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறிவிட்டுத்தான் போக முடிந்தது.  கொண்டுபோன தண்ணீர் பாட்டில்கள் தீர்ந்தாலும் எங்களுக்காக மலை உச்சியிலிருந்து மூலிகைத் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.  அந்தத் தண்ணீரைக் குடிக்கக் குடிக்க அவ்வளவு சுவை.  குடித்த பின்னர்தான் புதிய ‘எனர்ஜி’ கிடைத்தது.  களைப்புத் தீர்ந்தது.  மீண்டும் நடைபயணம்.

மலை ஏறஏற எங்களை வரவேற்கும்விதமாக மழை பொழிய மங்கலப் பாடல் முடிந்தது.  ஆம்.  குலதெய்வமான மங்கம்மாள் கோயில் திருவிழாவுக்காக ஒலிபரப்பப்பட்ட அந்தப் பாடலைக் கேட்ட பிறகுதான் கத்திரி மலைக்கு வந்தடைந்ததை நம்ப முடிந்தது.  25 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து விட்டோம் என்கிற பெருமிதத்துடன் கீழே எட்டிப் பார்த்தால் தலை சுற்றியது.  அவ்வளவு உச்சியில் நின்றுகொண்டிருந்தோம்.  சற்று நிமிர்ந்தால் ஆகாயம் தலையில் இடிப்பதாய் உணர்ந்தோம்.  

கத்திரி மலை மக்களைப் பார்த்த பிறகுதான் நிம்மதி வந்தது.  போனதும் சோளகர்கள் கொடுத்த அந்த கூட்டாஞ் சோறை உண்டோம்.  அமிர்தத்தையும் மிஞ்சும் உணவாக இருந்தது.  நவநாகரிக மாந்தர்களே வெட்கப்படும் அளவுக்கு உபசரிப்பு கத்திரி மலை மக்களிடம் இருந்தது.  அப்படி அம்மக்கள் முன்பின் தெரியாத எங்களை மிக வாஞ்சையாக வரவேற்றார்கள்.



லேசான மலைச் சாரல் கத்திரி மலையைத் தழுவியது.  கேழ்வரகுப் பயிறும் ஊடுபயிறான அவரையும் பச்சைப் பசேல் என குலுங்கின.  புளிய மரங்களும் வில்வ மரங்களும் காய்களைச் சுமக்க முடியாமல் விழி பிதுங்கின.  வீடுகளெல்லாம் மாட்டுச் சாணங்களைப் பூசிக்கொண்டு மினுமினுத்துக் கொண்டிருந்தன.  மண்ணைப் பிசைந்து கட்டப்பட்ட மண் வீட்டை தென்னை ஓலைகளும் நாணல்களும் கிரீடங்களாய் அலங்கரித்துக் கொண்டிருந்தன.  பத்துக்குப் பத்து அளவுக்கும் குறைவான அளவு கொண்ட வீடுகள்தான்.  அந்த ஊருக்கான மின்சாரத்தைத் தர 20 சோலார் கம்பங்கள் சூரியனுக்காகக் காத்திருந்தன.  மொத்தமே 70 வீடுகளைக் கொண்டதுதான் அந்த மலைக் கிராமம்.  மின்சாரத்தைப் பார்க்கவில்லை, பாழாய்ப் போன டி.வி. பெட்டியையும் பார்க்கவில்லை.  அங்கே ஒரே ஒரு ஆறுதல் சினிமாக்காரர்களின் அடையாளமே இல்லை.




ரசிகர் மன்றங்களே இல்லாத கிராமங்களில்லை.  ஆனால் கத்திரி மலையில் மட்டும் ரசிகர் மன்றங்களுக்குக் கத்திரி போட்டுவிட்டார்கள் போலும்.  அம்மக்களுக்கான தாகத்தைத் தீர்த்துக் கொண்டேயிருக்கும் மணிமேகலையின் பாத்திரமாய் காட்சியளிக்கும் ஊரின் ஒரே கிணறு வந்திருந்த மக்களுக்கும் நீரை வாரி இரைத்துக்கொண்டே இருந்தது.



மங்கம்மாளை தரிசிப்பதற்காக மலையடிவாரத்திலிருந்து வந்த மக்கள் கூட்டம் கத்திரி மலையை நிறைத்துக் கொண்டேயிருந்தது.  கோவிலைச் சுற்றி கூடாரம் அமைத்து மக்கள் தங்க ஆரம்பித்தார்கள்.  மலையடிவாரத்திலிருந்து வந்த மக்கள் பெரும்பாலும் வன்னியர்கள்தான்.  அவர்களுக்கும் குலதெய்வம் இந்த மங்கம்மாள்தான்.  பழங்குடி மக்களான சோளகர்கள் கொடுத்த அந்தக் கூட்டாஞ்சோற்றினை வந்திருந்த வன்னியர் மக்களும் உண்டு பசியாறினார்கள்.

மங்கம்மாளை  வழிபட்ட  பின்பு  

அரசு பழங்குடியின பெண்கள் உண்டி-உறைவிட உயர்நிலைப் பள்ளி


கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மங்கம்மாள் கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்றிட வன்னியர்கள் முயற்சித்து வந்ததை பழங்குடி மக்களான சோளகர்கள் முறியடித்தனர்.  அப்பகுதியில் தாசில்தாராக இருந்து பணி ஓய்வு பெற்ற குரு லட்சுமணன் என்பவர்தான் சோளகர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்று வருகிறார்.  இவரும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒடுக்கப்படும் பழங்குடியின மக்கள் பக்கம் நிற்கிறார். இவர் பதவியிலிருந்த காலத்தில்தான் கத்திரி மலைக்கென ‘அரசு பழங்குடியின பெண்கள் உண்டி-உறைவிட உயர்நிலைப் பள்ளி’ ஒன்றை பாடுபட்டுப் பெற்றுத் தந்தார். தன் வாழ்க்கையை பழங்குடியின மக்களுக்காக அர்ப்பணித்துவரும் மிகச் சிறந்த மனிதரான குரு லட்சுமணன் அவர்கள்தான் கோவில் திருவிழாவை நடத்துவதற்கும் இன்றுவரை உறுதுணையாக இருந்து வருகிறார். இதேபோல், வழக்கறிஞர் ஜூலியட் அவர்கள் அம்மக்கள் மீது போடப்படும் பொய் வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் நின்று போராடி வருகிறார்.  இவரும் கிறித்தவ வன்னியர்தான்.

அய்யா குரு லட்சுமணன்

கத்திரி மலை என்பது வீரப்பன் சுற்றிய பகுதி என்றும், காவல்துறையாலும் வனத்துறையாலும் கண்காணிப்புக்குள்ளான கிராமம் என்பதால் ஒருவிதப் பதற்றம் இருந்தது.  வேட்டையாடி சமூகமான இவர்கள் மீது வேட்டையாடுவதாக வழக்குப்போடுவதே வேடிக்கையாக இருக்கிறது.  அப்படித்தான் சின்னப்பி என்கிற மோட்டாவை பல்வேறு வழக்குகளில் தேடப்படுவதாக கர்நாடக வனத்துறை அறிவித்திருக்கிறது.  65 வயதைக் கடந்த மோட்டாவுக்கு 3 மனைவிமார்கள்.  7 ஆண்கள், 8 பெண்கள் என குழந்தைச் செல்வங்களைக் கொண்டவர்.  கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீட்டில் பேரக் குழந்தைகளைக்கூடக் கொஞ்ச முடியாமல் காட்டிலும் மலைக் குகைகளிலும் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  இவர் செய்த குற்றம்தான் என்ன?  கத்திரி மலையில் சோளகர்கள் குடியில் பிறந்ததுதான் இவர் செய்த குற்றம்.  இன்று மோட்டா குட்டி வீரப்பன் என்கிற சரவணனின் கூட்டாளி என்று தேடப்படுகிறார். சரவணன் இப்போது மைசூர் சிறையிலிருக்கிறார்.  மோட்டா அவரைப் பார்த்ததுகூட இல்லையாம். ஆனாலும் மோட்டாவைக் குறி வைக்கிறது கர்நாடக தோட்டா.  மோட்டாவின் மனைவியரில் ஒருவரான குந்தியம்மாளையும் மகன்கள் பேரக் குழந்தைகளையும் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆறுதல் கூறிவந்தோம்.  தலைவர் திருமாவளவன் அவர்களை ஒருமுறை சந்தித்து பாதுகாப்புக் கேட்டதை குந்தியம்மாள் நினைவுபடுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது.  

மோட்டாவின் மனைவி குந்தியம்மா

இரவில் உண்டி-உறைவிடப் பள்ளியில்தான் தங்கினோம். அவ்வளவு கூட்டம்.  கடும் இடநெருக்கடி.  அதிகாலை அவரவர் எழுந்து மலையிறங்க ஆரம்பித்தார்கள்.  நாமும் அந்த ஊரைவிட்டுக் கிளம்பும்போது, அம்மக்கள் மலைத்தேன் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள்.  உடன் வழிகாட்ட ஒரு தம்பியையும் அனுப்பி வைத்தார்கள்.  வழிநெடுக அந்தத் தேன்தான் களைப்பைப் போக்கியது.  

யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராமல் மலை உச்சியில் இயற்கையோடு வாழ்ந்து வரும் அவர்களை, நாகரிக மனிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள்தான், மக்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்கிறவர்கள்தான் வேட்டையாடத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  
எத்தனை ஆட்சி மாற்றங்கள் வந்தென்ன?  அவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை.  இந்தியாவை வல்லரசாக்கத் துடிக்கிறார்கள்.  இப்படி அவலம் நிறைந்த கிராமங்கள் இருக்கும் வரை என்ன மாற்றத்தைச் செய்து கிழித்து விடப்போகிறார்கள்.

(தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து வரும் மலைவாழ் மக்கள் மீதான அரச வன்கொடுமைகளுக்கு எதிராக எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஈரோட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது)

10 October 2014

குச்சிகொளுத்தி ராமதாசுக்கு வன்முறையைக் கண்டிக்க அருகதை உண்டா?

சாத்தான் வேதம் ஓதுகிறது அல்லது ஓர் ஓநாய் வன்முறைக்கு எதிராக அகிம்சை பேசுகிறது என்றால் யாராவது நம்புவார்களா? அப்படிப் பேசிக்கொண்டிருக்கிறது இராமதாசு என்கிற ஓநாய். தான் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து வழி நெடுக வன்முறையின்மூலமும் அநாகரிகத்தின் உச்சத்தின்மூலமும் தமிழக அரசியலை மோசமான பாதைக்கு நகர்த்திச் சென்ற மிகப் பெரிய வன்முறையாளர் பா.ம.க. இராமதாசு, இப்போது அமைதியைப் பற்றியும் சட்டம்-ஒழுங்கைப் பற்றியும் பேசுகிறார். நாகரிகத்தைப் பற்றிப் பேசுகிறார். இதெல்லாம் தமிழக அரசியலுக்கு நேர்ந்த அவலம். 


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வகையறாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனையொட்டி தமிழகம் முழுக்க அதிமுகவினரால் போராட்டங்களும் ஆங்காங்கே பேருந்து உடைப்புகளும் எரிப்புகளும் நடந்தேறின. இச்செயல்கள் ஏற்கக்கூடியவையல்ல. தொண்டர்களின் உணர்ச்சிப் பெருக்காலும், விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும் நடந்தேறிய செயல்கள். இவற்றை முன்வைத்துத்தான் பா.ம.க. இராமதாசு நாளொரு அறிக்கையின் மூலம் அதிமுகவை மிரட்டிக்கொண்டிருக்கிறார். வன்முறையின் ஒட்டுமொத்த உருவமான, அநாகரிகத்தின் மறு வடிவமான, பிற்போக்குத்தனத்தின் புதிய வடிவமான இராமதாசுக்கு வன்முறை குறித்தோ, அமைதி குறித்தோ பேசுவதற்கு எதாவது அருகதை உண்டா? அவருடைய கடந்த கால வன்முறை வெறியாட்டத்தின் பட்டியலைப் பார்த்தாலே அவரது யோக்கியதை புரியும்.

வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் செங்கல்வராயன் நாயக்கர் அறக்கட்டளையின் இயக்குநராகவும் இருந்தவர் ஏ.கே.நடராசன். பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட இந்த அறக்கட்டளையைக் கைப்பற்ற முயன்றார் இராமதாஸ். தனது மகள் கவிதாவின் சின்ன மாமனாரும் (சம்பந்தி) முன்னாள் டி.ஜி.பி.யுமான ராஜ்மோகன் என்பவரை அறக்கட்டளையின் தலைவராக்கச் சதித் திட்டம் போட்டார். விளைவு, 1996ஆம் ஆண்டு ஏ.கே.நடராசன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை நையப் புடைத்து மாடியிலிருந்து தூக்கி எறிந்தனர். படுகாயம் அடைந்த ஏ.கே.நடராசன் மூன்று ஆண்டுகள் கோமாவில் இருந்தார். இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட கூலிப்படையினர் தப்பித்துக்கொள்ள, பொய் வழக்கில் அன்றைய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகனும், அவரது குடும்பத்தினரும் பலிகடா ஆக்கப்பட்டனர்.

பா.ம.க.வில் தனித்துவமாக வளர்ந்த பேராசிரியர் தீரனை 1998ஆம் ஆண்டு இராமதாசு நீக்கினார். நீக்கப்பட்ட தீரன் ‘தமிழ் பா.ம.க.’ என்கிற கட்சியை உருவாக்கி ஊர் ஊராய் இராமதாசின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினார். ஆத்திரமடைந்த இராமதாசு தமது கட்சியின் அப்பாவி இளைஞர்களைத் து£ண்டி விட்டதன் விளைவு, ஆண்டிமடத்திற்குப் போகும்போது இரும்புலிகுறிச்சி அருகே பேராசிரியர் தீரன் அவர்களின் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டுகளை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலை முன்னின்று நடத்திய இரும்புலிகுறிச்சியின் பா.ம.க. பொறுப்பாளர் தமிழ்ஒளி வழக்குச் செலவுக்காக தைலாபுரம் தோட்டத்திற்கு அலைந்ததுதான் மிச்சம். நாயை விரட்டுவதுபோல் விரட்டியடித்தனர் இராமதாசு குடும்பத்தினர். “இராமதாசு என்னை நயவஞ்சகமாகத் து£ண்டிவிட்டார். அதற்கு நான் பலிகடா ஆகிவிட்டேன்” என்று பின்னாளில் பேராசிரியர் தீரனிடமே உதவி வேண்டி நின்றார் தமிழ் ஒளி.

1999ஆம் ஆண்டு வாழப்பாடி இராமமூர்த்தி அவர்கள் வன்னியர் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி வன்னிய மக்களுக்காகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தார். இதனைப் பொறுத்துக்கொள்ளாத இராமதாசு அப்பாவி இளைஞர்களைத் தூண்டிவிட்டு விழுப்புரம் அருகே வாழப்பாடி இராமமூர்த்தியின் காரை வழிமறித்துத் தாக்குதல் நடத்தினார்கள். இதில் வாழப்பாடியார் தப்பித்தாலும் பலர் காயமடைந்தார்கள். ஆனாலும் வாழப்பாடி இராமமூர்த்தியின் மீதான வன்முறைத் தாக்குதல் அவர் மறையும் வரை நின்றபாடில்லை.

வன்னியர் சங்கத்தை உருவாக்கியதோடு, பா.ம.க. என்கிற அரசியல் கட்சியையும் உருவாக்க உறுதுணையாய் இருந்த பு.த.அருள்மொழி, பு.த.இளங்கோவன் ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல்..

பா.ம.க.விலிருந்து பண்ருட்டி இராமச்சந்திரன் விலகியவுடன் அவரது அசோக் நகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு..

முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீரவன்னியர் பேரவை நடத்திக்கொண்டிருக்கும்போது அப்பேரவையைக் கலைக்கும்படி மிரட்டினார் இராமதாசு. அதற்கு அஞ்சாத ஜெகத்ரட்சகன் தொடர்ந்து வன்னியர் பேரவை நடத்தி வந்தபோது ஜெகத்ரட்சகனின் சம்மந்தி டெல்டா நாராயணசாமியை குடும்பத்துடன் கடத்திக்கொண்டுபோய் மிரட்டியதன் விளைவாக வீரவன்னியர் பேரவை கலைக்கப்பட்டு அவரும் திமுகவில் போய்ச் சேர்ந்தார்.

இப்படி வன்முறை வெறியாட்டத்தின் மூலம் அரசியலைத் தொடர்ந்த இராமதாசு கொலைவெறியாட்டத்தையும் நிகழ்த்தியுள்ளார்.

பா.ம.க.விலிருந்து விலகிய பண்ருட்டி இராமச்சந்திரன் ‘மக்கள் நல உரிமைக் கழகம்’ ஒன்றைத் தொடங்கினார். பா.ம.க.விலிருந்து விலகி பலர் பண்ருட்டியாரின் கழகத்தில் இணைந்தனர். அப்படி இணைந்த கரவொலி கதிரவன் என்பவர் மிகத் தீவிரமாக இராமதாசின் சுயநல வெறியை மேடைகளிலும் துண்டறிக்கைகள் மூலமும் அம்பலப்படுத்தினார். மக்கள் நல உரிமைக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த கரவொலி கதிரவன் திடீரென லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இராமதாசின் இயக்கத்தால் நடைபெற்ற இந்தக் கொலையை, பின்னாளில் விபத்து என்று வழக்கை முடித்தார்கள்.

அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் திண்டிவனம் பகுதியில் இராமதாசு குடும்பத்தினருக்குப் பெரும் சவாலாயிருந்தார். இதைப் பொறுக்க முடியாத இராமதாசு சி.வி.சண்முகத்தைக் கொலை செய்ய பா.ம.க.வின் அப்பாவி இளைஞர்களைத் தூண்டிவிட்டார். இராமதாசின் நயவஞ்சகத்தைப் புரிந்துகொண்ட இளைஞர்கள் யாரும் இதற்கு உடன்படவில்லை. ஆனாலும் கொலைவெறி தலைக்கேறிய இராமதாசு தனது மனைவி சரஸ்வதியின் சகோதரர் இராமச்சந்திரனின் இளைய மகன் ரகுவை (புதுச்சேரி அனந்தராமனின் தம்பி) கொம்பு சீவிவிட்டார். “கட்சியில் உனக்குப் பெரிய இடம் இருக்கு. முக்கியப் பொறுப்புக்கு வரப்போகிறாய்” என்றெல்லாம் ஆசை வார்த்தை காட்டவே ரகு தயாரானார். 2006ஆம் ஆண்டு திண்டிவனத்தில் சி.வி. சண்முகம் அலுவலகத்துக்குள்ளேயே கொலைவெறியுடன் கும்பல் ஒன்று புகுந்தது. சண்முகம் எங்கே என்று அரிவாளுடன் தேடியபோது, சண்முகத்தின் உதவியாளர் முருகானந்தம் அவர்களைத் தடுக்க அக்கொலைவெறிக் கும்பல் முருகானந்தத்தை வெட்டிக் கொன்றுவிட்டு சண்முகத்தைத் தேடியது. சண்முகம் தப்பித்து ஓடிவிட்டார். இருந்திருந்தால் அவரும் கொல்லப்பட்டிருப்பார். முருகானந்தம் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இராமதாசு இரண்டாவது குற்றவாளியாக அன்புமணி, மூன்றாவது குற்றவாளியாக சரஸ்வதி, நான்காவது குற்றவாளியாக இராமதாசின் தம்பி சீனிவாச கவுண்டர் என்று இராமதாசின் குடும்பத்தினர் பதினொரு பேர் குற்றவாளிகளாக சட்டத்தின் முன் நின்றார்கள்.

இவ்வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றுவந்த ரகு அடிக்கடி தைலாபுரம் சென்று, “நீங்கபாட்டுக்கு கொலை செய்யச் சொல்லிட்டுப் போயிட்டீங்க... யாரு கோர்ட்டுக்கு செலவு பண்ணுவாங்க? என்று செலவுக்கான தொகையைக் கேட்க ஆரம்பித்தார். “அதெல்லாம் இல்ல... வெளிய போடா..” என்று இராமதாசும் அவரது மனைவியும் விரட்டியடிக்க “அப்படியென்றால் நான் அப்ரூவராக மாறி போலீசில் எல்லா உண்மையையும் சொல்வேன்” என்று ரகு சொன்னதும் பயந்துபோன இராமதாசு அப்போதைக்கு பேசி ரகுவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஓரிரு நாளில் ரகு தர்பூசணித் தோட்டத்தில் இரவில் காவல் காத்துக்கொண்டிருந்தபோது கைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். காவல்துறையின் கருணையால், வழக்கம்போல் தற்கொலை வழக்காக முடித்தனர்.

பா.ம.க.வில் இளைஞர்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்று தனித்துவமாக வளர்ந்துவந்த பண்ருட்டி வேல்முருகனின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் பொறுமிக் கொண்டிருந்தார் இராமதாசு. 2011 தேர்தலில் பா.ம.க. படுதோல்வியைச் சந்தித்த பின் வேல்முருகன் அவர்களை கட்சியை விட்டு நீக்கினார். வேல்முருகனும் ஞாயம் கேட்டு ஊர் ஊராய் இளைஞர்களை அணிதிரட்டினார். இளைஞர்களும் பெருமளவில் வேல்முருகன் அவர்களின் பின்னால் திரண்டனர். இதனால் ஆத்திரமடைந்த இராமதாசு வழக்கம்போல் தனது கொலைவெறித் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தார். திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக காடுவெட்டி அருகே போய்க்கொண்டிருந்தபோது காடுவெட்டி குருவின் ரவுடிக் கும்பல் வேல்முருகன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர்.

இப்படி ஒரு ரவுடியைப் போல கொலைகளையும் கொலை முயற்சிகளையும் இராமதாசு நடத்தியது வேறு இனத்தவர் மீதல்ல. எந்தச் சமூகத்திற்கு உழைப்பதாகச் சொல்லி கட்சியைத் தொடங்கினாரோ, அந்த சொந்த வன்னிய சமூகத்தினர் மீதுதான் இவ்வளவு கொலைவெறியாட்டத்தையும் நடத்தினார். பா.ம.க.வின் மாணவரணியின் பொறுப்பாளராக இருந்த அறிவுச்செல்வன் கார் விபத்தில் இறந்ததாக செய்திகள் வந்தன. இது விபத்தல்ல, கொலைதான் என்று அறிவுச்செல்வனின் தந்தை சொன்னதோடு இராமதாசுக்கு எதிராக 16 கேள்விகளை எழுப்பினார். அந்தக் கேள்விகள் ஒட்டுமொத்த வன்னிய மக்களின் மனசாட்சியாய் இராமதாசின் முன் நிற்கின்றன.
சொந்த மக்களையே தன்னுடைய குடும்ப வளர்ச்சிக்காகப் பலி கொடுத்துவரும் இராமதாசு அப்பாவி தலித் மக்களை மட்டும் சும்மா விட்டுவிடுவாரா?

தலித்துகளின் தலைநிமிர்வுக்காகக் களமாடிவரும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது பல முறை, பல்வேறு இடங்களில் கொலைவெறித் தாக்குதலை நடத்தினார் இராமதாசு. அத்தாக்குதலையெல்லாம் சிறுத்தைகள் முறியடித்தன. ஆனாலும் எத்தனையோ தலித் இளைஞர்கள் இராமதாசின் சாதிவெறியால் கொல்லப்பட்டனர். தர்மபுரி சேரி மட்டுமல்ல பெரம்பலூர், ஒகளூர் சேரி மட்டுமல்ல வட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட சேரிகள் தீக்கிரையாக்கப்பட்டன.

மரக்காணம் கலவரம் 
காதல் நாடகம், சாதி கவுரவம் என்று தலித்துகளுக்கு எதிராகப் பல சாதிகளை ஒருங்கிணைத்து தமிழகம் முழுக்க வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார். காதலித்துத் திருமணம் செய்துகொண்டு தனது காதல் மனைவியோடு வாழ்ந்த இளவரசனையும் திவ்யாவையும் பிரித்ததோடு இளவரசனைக் கொலை செய்துவிட்டு தனது சாதிய தாகத்தைத் தீர்த்துக் கொண்டார்.

இவையெல்லாம் இராமதாசின் கொலைவெறி, வன்முறை அரசியலுக்கு எடுத்துக்காட்டுகள். (தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்துச் சொல்வதென்றால் அதற்குத் தனியாக ஒரு புத்தகமே போடலாம்)

தி.மு.க. தலைவர் கலைஞருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு செய்தியாளரிடம் பேசிய இராமதாசு, “கலைஞர் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிப்பவர், அந்த நாகரிகம் பாராட்டுக்குரியது” என்று சொன்னார். கலைஞர் நாகரிகமானவர்தான். ஆனால் இராமதாசு நாகரிகமானவரா? தருமபுரி கலவரத்திற்குப் பிறகு அவர் பேசிய பேச்சுக்களை இப்பவும் ‘யூ டியூப்’பில் பார்க்கலாம் அவரது நாகரிகத்தின் லட்சணத்தை (இணைக்கப்பட்டுள்ளது: குச்சிகொளுத்தி ராமதாசின் சாதி வெறி பேச்சு & காடுவெட்டி குருவின் சாதி வெறி பேச்சு). ஆசிரியர் கி.வீரமணி, ஜி.ராமகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி மற்றும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலரை அவன், இவன் என்று ஒருமையில் பேசியதும், முதுபெரும் அரசியல்வாதியான, கலைஞரை மேளம் அடிக்கிற பயல், சாதிகெட்ட பயல், அவன் கூட இருந்தால் கட்டியிருக்கிற வேட்டியக்கூட உருவிடுவான் என்று பேசியதும்தான் நாகரிக அரசியல் பண்பாடா?


பா.ம.க. தொடங்கியதிலிருந்து இராமதாசின் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் பார்த்தால், முன்னுக்குப்பின் முரணாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். தனது குடும்பத்திலிருந்து மகனோ வேறு யாருமோ அரசியலுக்கு வரவே மாட்டார்கள் என்று சத்தியம் செய்த இராமதாசுதான் இப்போது அதே அன்பு புத்திரனுக்காகக் கேவலமான அரசியல் செய்து வருகிறார். திராவிடக் கட்சிகளோடும் தேசியக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு வெட்கமே இல்லாமல் அவர்களின் கூட்டணிக்காக நாக்குத் தொங்க அலைகிற நாயாக மாறிவருவது அரசியல் நாகரிகமா?

பேசுகிற இடங்களிலெல்லாம் வன்முறையைத் தூண்டி விடுவதும், தமிழர்களாய் ஒருங்கிணைந்து தமிழ்த் தேசிய அடையாளத்தை மீட்க வேண்டிய வன்னிய சமூகத்திற்கு சாதிவெறி ஊட்டி தவறாக வழிகாட்டுவதுதான் நாகரிகமா? சொந்தச் சமூகத்தை நாகரிக உலகத்திற்கு அழைத்துச் செல்லாமல் கற்காலத்துக்கு அழைத்துச் செல்வதுதான் வழிகாட்டும் அரசியல் தலைவரின் நாகரிகமா?

வன்னிய மக்களுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லும் இராமதாசு அந்த மக்களுக்குச் செய்தது என்ன என்று அவரது மனசாட்சியைக் கேட்டாலே தெரியும். அவர் அரசியலில் நுழைந்த காலத்தில் ‘டி.எஸ்.இ. 1819’ என்கிற ஓட்டை அம்பாசிடர் காரில்தான் சுற்றினார். இன்றைக்கு அவரது நிலை என்ன? மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி என ஒவ்வொருவருக்கும் பல கோடி மதிப்புள்ள சொகுசுக் கார்கள். ஒன்றரை ஏக்கர் நிலத்தை வைத்திருந்த இராமதாசுக்கு இன்றைக்கு 1000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட தைலாபுரம் பண்ணை; ஏற்காட்டிலும் ஏலகிரியிலும் 1000 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட்டுகள்; திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள், கேஸ் ஏஜென்சிகள், கோடம்பாக்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நடிகை விஜயசாந்தியின் வீட்டை விலைக்கு வாங்கி மூத்த மகள் காந்திக்குக் கொடுத்தது, ஆழ்வார்பேட்டையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை வாங்கி இளைய மகள் கவிதாவுக்குக் கொடுத்தது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் பங்களாக்கள் என்று சொத்துக்களைக் குவித்துள்ள இராமதாசு தன் சொந்த சாதி மக்களின் கண்ணீரைத் துடைத்திருக்கிறாரா? பசியைத் தீர்த்திருக்கிறாரா? (பார்க்க- ஆலம்பாடி மக்களின் அழுகுரல்: தூய்மைவாதமும், சாதியவாதமும் பதில் கூறுமா?) வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்துள்ள இராமதாசு ஜெயலலிதாவின் வழக்குகளைப் பேசுவது காமெடியாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் கைதை ஒட்டி அதிமுகவினர் ஆங்காங்கே செய்துவரும் வன்முறைகளை ஒப்பீட்டளவில் பார்த்தால் சாதாரணம்தான். மாமல்லபுரத்தில் ஜெயலலிதாவை விமர்சனம் செய்து பேசிய பிறகு இராமதாசு கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதையொட்டி நடந்த வன்முறைகளோடு, வெடிகுண்டு வீச்சுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அதிமுகவினரின் போராட்டங்கள் மிகமிகச் சாதாரணம்.


ஆக, எப்படிப் பார்த்தாலும் தமிழக அரசியலில் நாகரிகம் குறித்தோ, வன்முறை குறித்தோ, சொத்துக் குவிப்பு தொடர்பாகவோ பேசுவதற்கு இராமதாசுக்கு எந்த அருகதையும் இல்லை. இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு எதிராக இராமதாசு பேசி வருவது திருச்சி சிறையில் அடைத்ததால் உள்ள வெறுப்புணர்ச்சியாலும் பழிவாங்கும் உணர்ச்சியாலுமே தவிர வேறல்ல.

விஜயகாந்த், ஜி.ராமகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் அதிமுகவினரைக் கண்டிப்பதற்கு ஒரு ஜனநாயக உரிமை உண்டு; கடமையும் உண்டு. ஆனால் இராமதாசுக்குத் தெரிந்ததெல்லாம் வன்முறைதானே. அப்படிப்பட்ட வன்முறையாளருக்கு அதிமுகவினரையோ ஜெயலலிதாவையோ கண்டிக்க எந்த அருகதையும் இல்லை. தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய தீய சக்தி இராமதாசுதான். இதை கலைஞர் உட்பட அனைவரும் புரிந்துகொண்டு எச்சரிக்கையாய் இருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டிற்கு நல்லது.

08 October 2014

ஆலம்பாடி மக்களின் அழுகுரல்: தூய்மைவாதமும், சாதியவாதமும் பதில் கூறுமா?

தூய்மை இந்தியா என்கிற பெயரில் இந்தியாவை தூய்மைப்படுத்தப் போவதாக பிரதமர் மோடி அறிவித்தாலும் அறிவித்தார். நடிகர்கள் கமல், சூர்யா, சல்மான்கான் உட்படப் பலர் துடைப்பமும் கையுமாக அலைகிறார்கள். இந்தியாவில் இப்போது ஒரே பிரச்சனை தூய்மை இல்லாததுதான். வறுமை ஒரு பிரச்சனை இல்லை; சாதி ஒரு பிரச்சனையில்லை; அணு உலைகளால் ஏற்படும் பாதிப்புகள் பிரச்சனை இல்லை; பட்டினிச் சாவுகள் ஒரு பிரச்சனை இல்லை; மனிதன் மலத்தை மனிதனே அள்ளும் அவலம்கூட ஒரு பிரச்சனை இல்லை. இப்போதைக்கு மோடிக்கு ஏற்பட்டுள்ள தலையாய பிரச்சனை இந்தியா சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான். 80 விழுக்காடு கிராமங்களைக் கொண்ட இந்தியாவில், எத்தனையோ கிராமங்கள் இன்னும் கழிப்பறைகளைப் பார்த்தில்லை. காடுகளிலும் மலைகளிலும்தான் தங்கள் காலைக் கடன்களைக் கழிக்கிறார்கள். எத்தனையோ கிராமங்களில் இன்னமும் மின்சாரமே நுழையவில்லை. அப்படிப்பட்ட ஒரு கிராமத்திற்குள்தான் நாம் நுழைந்தோம். 


ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியைப் பார்த்து மகிழும் மக்கள் கூட்டம் ஒரு புறம் அலைமோதுகிறது. போகிற வழியெங்கும் டாஸ்மாக் மனிதர்களின் கூட்டம் குடியும் கூத்துமாய் தள்ளாடுகிறது. நீழ்வீழ்ச்சியில் தள்ளாடும் பரிசல்களில் பயணமானோம். தகடூர் தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் ஜூலியஸ், ஜோஸ்வா ஐசக், கருப்பன், சேலம் அர்ஜூனன் ஆகியோரைக் கொண்ட குழுவுடன் ஒகேனக்கலின் அக்கரையில் பரிசலிலிருந்து இறங்கினோம். 

                               
கர்நாடக எல்லைக்குட்பட்ட அந்த கிராமத்தின் பெயர் ஆலம்பாடி. ஒகேனக்கல் பகுதியிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் அக்கிராமத்தை நோக்கி ஷேர் ஆட்டோவில் பயணமானோம். பாதையை மக்களே உருவாக்கியிருக்கிறார்கள். வெறும் பாறைகளும் செம்மண் புழுதியும்தான் வரவேற்றது. அடர்ந்த அந்த காட்டுப் பகுதிக்குள் ஆங்காங்கே ஆடுகளும் மாடுகளும் மேய்ந்துகொண்டிருந்தன. மனிதர்கள் குறைவுதான். பறவைகளின் கீச்சுச் சத்தங்களும் நீர்வீழ்ச்சியின் இசைச் சாரலும் இதமாக இருந்தன. தக்காளிச் செடிகளும், மிளகாய்ச் செடிகளும் காய்களைச் சுமந்துகொண்டே வயல்வெளியைப் பசுமையாக்கிக் கொண்டிருந்தன. புளிய மரங்களும், மூஞ்சை மரங்களும் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தன.

மேடு பள்ளங்களில் முதுகு வலியோடு ஆட்டோவில் பயணமானாலும் இவற்றையெல்லாம் ரசிக்க ரசிக்க வலியெல்லாம் போயே போய்விட்டன.

“இதுதாங்க எங்க ஆலம்பாடி” என்றார் எதிர்ப்பட்ட ஒருவர்.

“என்னங்க இங்க கொஞ்சம் வீடுதான் இருக்கு!” என்று கேட்டபோது,

“இது காலனிக்காரங்க வீடு” என்று சொன்னார்.

விசாரித்த பிறகுதான் தெரிந்தது அவர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்த சோளகர்கள். ஆலம்பாடி கிராமத்தினருக்கும் சோளகர்களுக்கும் எந்த ஒட்டும் இல்லை; உறவும் இல்லை.

ஆலம்பாடி கிராமத்திற்குள் நுழைந்தபோது ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்த 80 வயது பெரியவரைச் சந்தித்தபோதுதான், பல செய்திகளைச் சொன்னார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இதே கிராமத்தில்தான் வசித்து வருகிறார் அந்தப் பெரியவர்.


இப்போதுள்ள பிரச்சனை அந்த கிராமத்திலிருந்து எல்லோரையும் அப்புறப்படுத்த முயற்சிக்கிறது கர்நாடக வனத் துறை. 100 வீடுகளையும் 300 ஆட்களையும் கொண்ட அந்த ஊரில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. பாம்போ, பூச்சியோ கடித்தால்கூட பரிசலில் வந்து பென்னாகரம்தான் போக வேண்டும் அல்லது மேச்சேரி செல்ல வேண்டும். மருத்துவமனை இல்லை. ஒரே ஒரு பள்ளி உண்டு. அதுவும் கன்னடப் பள்ளி. 10 நாட்களுக்கு ஒருமுறைதான் ஆசிரியர் வருவார். இதுதான் கல்வியின் நிலை. அப்படியென்றால் படிக்கின்ற மாணவர்களின் நிலை எப்படி என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இத்தனையிலும் கொடுமை அந்த ஊரில் மின்சாரமே இல்லை என்பதுதான். மொத்த வீடுகளுக்கும் சேர்த்து ஆங்காங்கே மூன்று சோலார் கம்பங்கள்தான் நிற்கின்றன. இதிலிருந்துதான் வருவதுதான் இரவு விளக்கு வெளிச்சம். பெரும்பாலான வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்குகள்தான். இருக்கின்ற மூன்று தெரு விளக்குகள் இரவில் எப்போது வேண்டுமானாலும் அணையலாம். இப்படி போசமான நிலையில் உள்ள அந்த கிராமத்தில் கன்னடர்களும் சிலர் இருக்கிறார்கள். தமிழர்கள் பெருவாரியாக வசிக்கின்ற அக்கிராமத்தில் கன்னடர்களுக்கு மட்டும்தான் வீடு பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தமிழர்களுக்கு இல்லை. கடந்த 5 ஆண்டுகளாகவே ஆலம்பாடியை அப்புறப்படுத்த முயற்சிக்கிறது கர்நாடக அரசு. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் புலிகள் சரணாலயம்தான்.


ஒகேனக்கலுக்கு அப்படியே பின்னால் புலிகள் சரணாலயம் ஒன்றை அமைத்து அதற்கான பணிகளையும் செய்துகொண்டிருக்கிறது கர்நாடக அரசு. இதற்கு இடையூறாக இருக்கும் ஒரே கிராமம் இந்த ஆலம்பாடிதான். அதனால்தான் இக்கிராமத்தினர் யாரும் ஆடு, மாடுகளை வளர்க்கக் கூடாது என்று கர்நாடக அரசு அங்குள்ள மக்களுக்கு நோட்டீசு வழங்கியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அக்கிராமத்தில் உள்ளவர்களை அப்புறப்படுத்தும் பணியையும் தொடங்கிவிட்டதாக அப்பெரியவர் அச்சப்பட ஆரம்பித்தார்.

“தம்பி இந்த மண்ணுலதான் எல்லாத்தையும் பார்த்தேன்... இங்கேயே சாக வேண்டியதுதான். ஆனால், இந்த மண்ண விட்டு எங்கேயும் போக மாட்டோம்” இப்படித்தான் அங்குள்ள அனைவரும் கூறுகிறார்கள்.


கர்நாடக மாநிலம் கொள்ளேகால் மாவட்டத்தைச் சேர்ந்த ஆலம்பாடி கிராமம் இப்போது வரைபடத்திலிருந்து காணாமல் போவதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாய் உள்ளன. போன நாங்கள், “உங்களுக்காகப் போராட விடுதலைச் சிறுத்தைகளும் திராவிடர் கழகமும் (வழக்கறிஞர் ஜூலியஸ் திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்) துணை நிற்போம்” என்று நம்பிக்கை ஊட்டினோம். நல்ல பசி. அங்கிருந்த பெண்களிடம் ஏதேனும் கஞ்சி அல்லது கூழ் இருக்கிறதா என்று கேட்டுப் பார்த்தோம். பாவம் வேலை முடிந்து காடு கழனிகளில் கிடைப்பதைத்தான் அன்றாட உணவாகச் சாப்பிடுகிறார்கள். உணவுக்காக மாலை வரை காத்திருக்கச் சொன்னார்கள்.

கிளம்பும்போது ஒருவர், “தம்பி நாங்க படையாச்சிங்கதான். ஆனா எங்க நிலைமையைப் பாருங்கள்..” என்று கண்ணீரோடு சொன்னார்.


தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சாதி கவுரம் என்று பேசி அந்த கவுரவத்தைக் காப்பாற்ற கலவரங்களையும் கொலைகளையும் செய்யத் தூண்டிவிடும் மருத்துவர் இராமதாசுக்குத் தெரியுமா இப்படி ஒரு வாழ்நிலையில் படையாச்சிகள் இருப்பது? இச்சமூகத்தின் விடுதலைக்கும் சேர்த்துக் குரல் கொடுப்பதுதான் மனிதநேயம். சாதி பார்த்துக் குரல் கொடுப்பது ஏமாற்று வேலையாகும். வன்னியர்களின் விடுதலைக்கும் சேர்த்துத்தான் விடுதலைச் சிறுத்தைகள் களமாடும் என்கிற உறுதியோடு ஆலம்பாடியைவிட்டு வெளியேறினோம்.


நீர் வீழ்ச்சியின் சத்தமும் பரிசல்காரர்களோடு பயணிக்கும் அந்தப் பறவைகளின் இசையும் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பாவம் அக்கரை ஆலம்பாடி மக்களின் அழுகுரல்கள் இந்த நீர்வீழ்ச்சிச் சத்தங்களில் கரைந்து போகின்றன. 

சாதி கவுரவத்தைப் பேசுவோரும் தூய்மையைப் பேசுவோரும் ஆலம்பாடி கிராமம் போன்று ஆயிரக் கணக்கான கிராமங்கள் இந்தியாவைக் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு தூய்மை வாதமும், சாதியவாதமும் பதில் கூறுமா?

30 September 2014

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - செவப்பா இருக்கிறவங்க ஊழல் செய்ய மாட்டாங்களா?

'ஸ்நேக் பாபு' வடிவேலு நகைச்சுவைக் காட்சிபோல் தமிழக அரசியல் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.  ஒரு திரைப்படத்தில் அரசியல்வாதியாய் வரும் வடிவேலுவிடம் கையொப்பம் கேட்கும் கதாநாயகன் மாதவனிடம் லஞ்சம் கேட்பார்.  மாதவனோ லஞ்சத்தைக் கொடுக்க மறுத்து, இலவசமாய் கொடுக்க வேண்டிய வேட்டி சேலையை வடிவேலு பதுக்கிவிட்டார் என்று பொதுமக்களிடம் போட்டுவிடுவார்.  பொதுமக்களோ கோபத்துடன் வடிவேலுவை நையப் புடைக்க ஆரம்பிப்பார்கள்.  அப்போது ஒருவர், "டேய் செவப்பா இருக்கிறங்க பொய் சொல்ல மாட்டங்கடா" என்று சொல்லிக்கொண்டே அடிப்பார்.  

அதுபோல செவப்பாய் இருக்கும் ஜெயலலிதா ஊழல் செய்திருக்க மாட்டார் என்று அந்தக் காமெடியை உண்மையாக்க முயற்சித்து வருகின்றது ஒரு கூட்டம்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், 27-9-2014 அன்று 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது சிறப்பு நீதிமன்றம்.  சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 10 கோடி ரூபாய் அபராதத்துடன் கூடிய 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை.  கடந்த 18 ஆண்டுகளாக வாய்தா வாய்தா என்று இழுத்தடித்து ஒரு வழியாக இப்போதுதான் தீர்ப்பு வந்திருக்கிறது.  சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதுதான் நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது.  


தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றங்களில் தங்கள் தரப்பு ஆதாரங்களை அல்லது வாதங்களைக் கொடுத்து வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்ள ஜெயலலிதாவுக்கு நிறைய வாய்ப்புகளும் சனநாயக உரிமையும் உள்ளது.  
ஆனால், அந்த சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தமிழகம் முழுக்க அதிமுகவினரைக் கொண்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுவிட்டு சிறை சென்றிருக்கிறார் ஜெயலலிதா.  இத்தகைய வன்முறையின் மூலம் சட்டத்தைக் கையிலெடுத்து நீதியை அடி பணிய வைக்க முயற்சித்துள்ளார் ஜெயலலிதா.  தமிழகம் முழுக்க அம்மாவின் தொண்டரடியார்கள் பேருந்துகளை எரிப்பது, உடைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது என்று 27ந் தேதியை தொடங்கிவிட்டார்கள்.  தமிழகம் முழுக்க இத்தகைய வன்முறை வெறியாட்டம் நின்றபாடில்லை. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம், பேரணிகள், கருப்புச்சட்டை அணிந்து போராட்டம், ரயில் மறியல் போராட்டம் என தமிழகம் முழுக்க அதிமுகவினர் ஜெயலலிதா மீதான விசுவாசத்தைக் காட்ட போட்டி போட்டுக்கொண்டு கலவரம் செய்துகொண்டிருக்கின்றனர்.  

இந்தப் போட்டியில் மைய அரசின் முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானியும் இறங்கிவிட்டார்.  'நீதியரசர் ஜான் மைக்கேல் அளித்தது தீர்ப்பே அல்ல; அது அரசியல் வெறுப்புணர்ச்சி' என்று கொதித்து, லண்டன் விமானத்திலிருந்து குதித்து பெங்களூரு வந்தே விட்டார்.  


இவர்களுடன் சினிமாக்காரர்களும் தங்கள் விசுவாசத்தைகக் காட்டுவதற்கு நல்ல வாய்ப்பு என்று உண்ணாவிரதத்தில் (30-9-2014) உட்கார்ந்துவிட்டார்கள்.  ஊழல் செய்தார் என்பதற்காகத்தான் ஜெயலலிதாவுக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது.  காவிரி நீர் உரிமை கோரியதாலோ, அல்லது முல்லைப் பெரியாறு உரிமை கோரியதாலோ ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.  
ஆனால், தமிழ்நாட்டு உரிமைக்காக ஜெயலலிதா சிறைக்குச் சென்றதுபோல் சினிமாக்காரர்கள் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்துவிட்டார்கள்.  

நடிகர் விஜய் கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் புதுதில்லியில் ஊழலுக்கு எதிராக அன்னாஅசாரே உண்ணாவிரதம் இருந்தபோது மேடைக்கே சென்று வாழ்த்தினார்.. பாராட்டினார்.  பாராட்டியது மட்டுமல்லாமல் இந்தியாவில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்.  அதற்காக இயக்கம் எடுக்கும் அன்னா அசாரே பிரதமராகவும் வேண்டும் என்று முழங்கினார். ஊழலுக்கு எதிராக டெல்லிக்கு சென்று அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் விஜய், இங்கே ஊழலுக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து தன் அப்பா இயக்குனர் சந்திரசேகரை அனுப்பி ஆதரவு தெரிவித்து இரட்டை வேடம் போடுகிறார்.



அதே நாளில் சென்னையிலும் சினிமாக்காரர்கள் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்கள்.  நடிகர்கள் சரத்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்-நடிகைகள் ஊழலுக்கு எதிராக மைக் பிடித்து முழங்கினார்கள்.  ரஜினியும் கமலும் ஊழலுக்கு எதிராக அறிக்கை மட்டும் விட்டுவிட்டுப் படப்பிடிப்புக்குப் போய்விட்டார்கள்.  அன்றைக்குத் தமிழகம் முழுக்க ஊழல் எதிர்ப்புக்காக முழங்கிய அதே சினிமாக்காரர்கள் இன்று ஊழலுக்குத் தண்டனை கொடுத்தவுடன் இதையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.  


இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஜெயலலிதா பெற்ற தண்டனைக்குக் காரணமே காவிரி நீருக்காகப் போராடினார் என்றும், தில்லியை எதிர்த்தார் என்றும் அரிய பெரும் கண்டுபிடிப்புகளை அவர்களது திரைக் கதைகளைப் போலவே அள்ளிவிட்டார்கள் நடிகர்கள்.  விசுவாசத்தைக் காட்ட எப்படியெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது.  

தமிழகம் முழுக்க வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வெறியாட்டம் நடத்திவரும் அதிமுகவினரால் தமிழகத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய அராஜகங்களைக் கண்டிக்கத் துப்பில்லாத சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம் இருப்பது யாரை ஏமாற்ற?  சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையே கையைக் கட்டி, வாயைப் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை நினைத்தால் இது சனநாயக நாடுதானா என்று கேட்கத் தோன்றுகிறது.


வன்முறை செய்த ஒருவர் மீதுகூட வழக்குப் பதிவு செய்யாமல், தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த கலைஞர் மீதும், ஸ்டாலின் மீதும் வன்முறையைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யும் காவல்துறையின் போக்கு சர்வாதிகாரப் போக்காக மாறியுள்ளது.  சட்டத்தின்படிதான் காவல்துறை நடக்க வேண்டுமே தவிர விசுவாசத்தின்படி அல்ல.  வன்முறையைத் தடுத்து நிறுத்தச் சொல்லி இன்னமும்கூட முதல்வர் பன்னீர்செல்வம் எந்த வழிகாட்டலும் செய்ய வில்லை. 



ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்திய அன்னாஅசாரே முதல் அரவிந்த் கெஜ்ரிவால் வரை யாருமே இத்தகைய வன்முறைப்போக்கைக் கண்டிக்க முன்வராததற்கு வேறு உள்நோக்கம் இருப்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

வன்முறை, அராஜகத்தின் மூலம் சட்டத்தை அடிபணிய வைக்க முடியும் என்றால், இது தவறான முன்மாதிரியாக அமைந்திடாதா?  இதே வழிவகைகளை வலுத்தவர்கள் ஆங்காங்கே கையாண்டால், சட்டமும் நீதியும் எதற்கு?  ஜெயலலிதா சட்டத்தின் முன் தான் நிரபராதி என்று நிரூபித்து வெளியே வருவதுதான் நல்ல சனநாயகமாகும்.  அதைவிடுத்து அச்சுறுத்தி பிணையில் வருவது சனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எரானதுதான். 

செவப்பா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்று சொல்வதுபோல ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த அவாள்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் என்று தெரிவிக்கத்தான் இத்தனை வன்முறைகளும் போராட்டங்களும்.  இதுதான் உள்ளீடான மநுநீதி.

 வரலாறு நெடுக வன்முறை மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள் அதே பணியை இன்னமும் தொடருகிறார்கள்.  அதற்காகத்தான் ராம்ஜெத்மலானியும் நிற்கிறார்.  இதே துடிப்பு லல்லு பிரசாத் யாதவ் வழக்கில் தீர்ப்புச் சொல்லப்பட்டபோது இருந்திருந்தால் ராம்ஜெத்மலானி உண்மையான சட்டவல்லுநர் என்று புரிந்துகொள்ளலாம்.  அவாளுக்கு ஒரு நீதி சூத்திரவாளுக்கு ஒரு நீதியாகத்தான் அரசியலமைப்பையே மாற்ற முயற்சிக்கிறார்கள்.  அந்த நீதிதான் மநுநீதி. நாளையேகூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையிலிருந்து வெளிவரலாம்.  அப்போது நீதி சிறைப்படும்.