19 October 2014

எத்தனை ஆட்சி மாற்றங்கள் வந்தென்ன?கத்திரி மலைவாழ் மக்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை

“இதோ கொஞ்ச தூரம்” என்று சொல்லித்தான் அழைத்துப் போனார்கள்.  
மேட்டூரிலிருந்து அதிகாலையில் அந்த மலையடிவாரத்தில் இறங்கியதுமே வேறொரு உலகிற்கு வந்துவிட்டோமோ என்றுதான் தோன்றியது.  “அதோ அதுதான் கத்திரி மலை...  பக்கம்தான்... போய்விடலாம்” என்று சொல்லிக்கொண்டே கையை உயர்த்தி வான் நோக்கிக் காட்டினார்கள் வழிகாட்டுவதற்காக எங்களுடன் வந்திருந்த மலைவாழ் இளைஞர்கள்.  தலை நிமிர்ந்து மலையைப் பார்த்தபோது, ‘ஏறி விட முடியுமா?’ என்கிற மலைப்புத்தான் கண்முன் நின்றது.  



வெட்கப்பட்டு பச்சையைப் போர்த்திக்கொண்டு நிற்கும் மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தது எங்களை வரவேற்று அழைப்பதுபோல் இருந்தது. உருட்டிவிடப்பட்ட கற்களும் அவற்றைத் தாண்டி நிற்கும் மணல் வெளியும் எங்களுக்கான பாதைகளாகின.  25 கிலோ மீட்டர் நடந்தால்தான் அந்த கத்திரி மலைக்குப் போக முடியும்.  செங்குத்தான மலைப் பகுதி. பாதையை உருவாக்கியவர்கள் கத்திரி மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களான சோளகர்கள்.  கன்னடம் பேசினாலும் இவர்களின் தாய்மொழி தமிழ்தான். மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தின் மண்ணின் மைந்தர்கள்.  இந்த மக்களின் குலதெய்வமான மங்கம்மாள் கோயில் திருவிழாவிற்காகத்தான் கத்திரி மலைக்கு வரச்சொல்லி நமக்கு அழைப்பு வந்திருந்தது.

மங்கம்மாள் கோவில் 
திராவிடர் கழகத் தோழர் வழக்கறிஞர் ஜூலியஸ் அவர்கள் ஒருங்கிணைக்க, அய்யா தகடூர் தமிழ்ச்செல்வன், தம்பிகள்  ஜோஸ்வா ஐசக், சஜித்குமார் மற்றும் கத்திரி மலை இளைஞர்களுடன் நடக்க ஆரம்பித்தோம்.  சம தளத்தைக் கடந்து மலை ஏறஏற மரங்களை கிழித்துக் கொண்டு வீசும் காற்றைப் போல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.  சமதளத்தில் எத்தனை கிலோ மீட்டரானாலும் நடக்க முடியும். ஆனால், சமமற்ற செங்குத்தான மலைப் பகுதியில் நடப்பதற்கு பயிற்சி வேண்டும் என்பதை 12-10-2014 அன்றுதான் உணர்ந்தோம்.  “வந்துவிட்டோமா... இன்னும் எவ்வளவு தூரம்” என்கிற வார்த்தைகள் மூச்சு வாங்க வாங்க அவ்வப்போது எங்களிடமிருந்து வந்துகொண்டுதான் இருந்தன.




சூரியன் நுழைய முடியாத அந்த அடர்த்தியான காடுகளுக்குள் நடப்பது என்பதே சுகமாகத்தான் இருந்தது.  ஆங்காங்கே மரங்களின் நிழலுக்குக் கீழே கிடக்கும் பெரும் பாறைகள் இருந்தன. எங்களுக்காகக் காத்திருந்ததுபோல் கிடந்த அந்தப் பாறைகளில் அனைவரும் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறிவிட்டுத்தான் போக முடிந்தது.  கொண்டுபோன தண்ணீர் பாட்டில்கள் தீர்ந்தாலும் எங்களுக்காக மலை உச்சியிலிருந்து மூலிகைத் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.  அந்தத் தண்ணீரைக் குடிக்கக் குடிக்க அவ்வளவு சுவை.  குடித்த பின்னர்தான் புதிய ‘எனர்ஜி’ கிடைத்தது.  களைப்புத் தீர்ந்தது.  மீண்டும் நடைபயணம்.

மலை ஏறஏற எங்களை வரவேற்கும்விதமாக மழை பொழிய மங்கலப் பாடல் முடிந்தது.  ஆம்.  குலதெய்வமான மங்கம்மாள் கோயில் திருவிழாவுக்காக ஒலிபரப்பப்பட்ட அந்தப் பாடலைக் கேட்ட பிறகுதான் கத்திரி மலைக்கு வந்தடைந்ததை நம்ப முடிந்தது.  25 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து விட்டோம் என்கிற பெருமிதத்துடன் கீழே எட்டிப் பார்த்தால் தலை சுற்றியது.  அவ்வளவு உச்சியில் நின்றுகொண்டிருந்தோம்.  சற்று நிமிர்ந்தால் ஆகாயம் தலையில் இடிப்பதாய் உணர்ந்தோம்.  

கத்திரி மலை மக்களைப் பார்த்த பிறகுதான் நிம்மதி வந்தது.  போனதும் சோளகர்கள் கொடுத்த அந்த கூட்டாஞ் சோறை உண்டோம்.  அமிர்தத்தையும் மிஞ்சும் உணவாக இருந்தது.  நவநாகரிக மாந்தர்களே வெட்கப்படும் அளவுக்கு உபசரிப்பு கத்திரி மலை மக்களிடம் இருந்தது.  அப்படி அம்மக்கள் முன்பின் தெரியாத எங்களை மிக வாஞ்சையாக வரவேற்றார்கள்.



லேசான மலைச் சாரல் கத்திரி மலையைத் தழுவியது.  கேழ்வரகுப் பயிறும் ஊடுபயிறான அவரையும் பச்சைப் பசேல் என குலுங்கின.  புளிய மரங்களும் வில்வ மரங்களும் காய்களைச் சுமக்க முடியாமல் விழி பிதுங்கின.  வீடுகளெல்லாம் மாட்டுச் சாணங்களைப் பூசிக்கொண்டு மினுமினுத்துக் கொண்டிருந்தன.  மண்ணைப் பிசைந்து கட்டப்பட்ட மண் வீட்டை தென்னை ஓலைகளும் நாணல்களும் கிரீடங்களாய் அலங்கரித்துக் கொண்டிருந்தன.  பத்துக்குப் பத்து அளவுக்கும் குறைவான அளவு கொண்ட வீடுகள்தான்.  அந்த ஊருக்கான மின்சாரத்தைத் தர 20 சோலார் கம்பங்கள் சூரியனுக்காகக் காத்திருந்தன.  மொத்தமே 70 வீடுகளைக் கொண்டதுதான் அந்த மலைக் கிராமம்.  மின்சாரத்தைப் பார்க்கவில்லை, பாழாய்ப் போன டி.வி. பெட்டியையும் பார்க்கவில்லை.  அங்கே ஒரே ஒரு ஆறுதல் சினிமாக்காரர்களின் அடையாளமே இல்லை.




ரசிகர் மன்றங்களே இல்லாத கிராமங்களில்லை.  ஆனால் கத்திரி மலையில் மட்டும் ரசிகர் மன்றங்களுக்குக் கத்திரி போட்டுவிட்டார்கள் போலும்.  அம்மக்களுக்கான தாகத்தைத் தீர்த்துக் கொண்டேயிருக்கும் மணிமேகலையின் பாத்திரமாய் காட்சியளிக்கும் ஊரின் ஒரே கிணறு வந்திருந்த மக்களுக்கும் நீரை வாரி இரைத்துக்கொண்டே இருந்தது.



மங்கம்மாளை தரிசிப்பதற்காக மலையடிவாரத்திலிருந்து வந்த மக்கள் கூட்டம் கத்திரி மலையை நிறைத்துக் கொண்டேயிருந்தது.  கோவிலைச் சுற்றி கூடாரம் அமைத்து மக்கள் தங்க ஆரம்பித்தார்கள்.  மலையடிவாரத்திலிருந்து வந்த மக்கள் பெரும்பாலும் வன்னியர்கள்தான்.  அவர்களுக்கும் குலதெய்வம் இந்த மங்கம்மாள்தான்.  பழங்குடி மக்களான சோளகர்கள் கொடுத்த அந்தக் கூட்டாஞ்சோற்றினை வந்திருந்த வன்னியர் மக்களும் உண்டு பசியாறினார்கள்.

மங்கம்மாளை  வழிபட்ட  பின்பு  

அரசு பழங்குடியின பெண்கள் உண்டி-உறைவிட உயர்நிலைப் பள்ளி


கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மங்கம்மாள் கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்றிட வன்னியர்கள் முயற்சித்து வந்ததை பழங்குடி மக்களான சோளகர்கள் முறியடித்தனர்.  அப்பகுதியில் தாசில்தாராக இருந்து பணி ஓய்வு பெற்ற குரு லட்சுமணன் என்பவர்தான் சோளகர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்று வருகிறார்.  இவரும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒடுக்கப்படும் பழங்குடியின மக்கள் பக்கம் நிற்கிறார். இவர் பதவியிலிருந்த காலத்தில்தான் கத்திரி மலைக்கென ‘அரசு பழங்குடியின பெண்கள் உண்டி-உறைவிட உயர்நிலைப் பள்ளி’ ஒன்றை பாடுபட்டுப் பெற்றுத் தந்தார். தன் வாழ்க்கையை பழங்குடியின மக்களுக்காக அர்ப்பணித்துவரும் மிகச் சிறந்த மனிதரான குரு லட்சுமணன் அவர்கள்தான் கோவில் திருவிழாவை நடத்துவதற்கும் இன்றுவரை உறுதுணையாக இருந்து வருகிறார். இதேபோல், வழக்கறிஞர் ஜூலியட் அவர்கள் அம்மக்கள் மீது போடப்படும் பொய் வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் நின்று போராடி வருகிறார்.  இவரும் கிறித்தவ வன்னியர்தான்.

அய்யா குரு லட்சுமணன்

கத்திரி மலை என்பது வீரப்பன் சுற்றிய பகுதி என்றும், காவல்துறையாலும் வனத்துறையாலும் கண்காணிப்புக்குள்ளான கிராமம் என்பதால் ஒருவிதப் பதற்றம் இருந்தது.  வேட்டையாடி சமூகமான இவர்கள் மீது வேட்டையாடுவதாக வழக்குப்போடுவதே வேடிக்கையாக இருக்கிறது.  அப்படித்தான் சின்னப்பி என்கிற மோட்டாவை பல்வேறு வழக்குகளில் தேடப்படுவதாக கர்நாடக வனத்துறை அறிவித்திருக்கிறது.  65 வயதைக் கடந்த மோட்டாவுக்கு 3 மனைவிமார்கள்.  7 ஆண்கள், 8 பெண்கள் என குழந்தைச் செல்வங்களைக் கொண்டவர்.  கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீட்டில் பேரக் குழந்தைகளைக்கூடக் கொஞ்ச முடியாமல் காட்டிலும் மலைக் குகைகளிலும் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  இவர் செய்த குற்றம்தான் என்ன?  கத்திரி மலையில் சோளகர்கள் குடியில் பிறந்ததுதான் இவர் செய்த குற்றம்.  இன்று மோட்டா குட்டி வீரப்பன் என்கிற சரவணனின் கூட்டாளி என்று தேடப்படுகிறார். சரவணன் இப்போது மைசூர் சிறையிலிருக்கிறார்.  மோட்டா அவரைப் பார்த்ததுகூட இல்லையாம். ஆனாலும் மோட்டாவைக் குறி வைக்கிறது கர்நாடக தோட்டா.  மோட்டாவின் மனைவியரில் ஒருவரான குந்தியம்மாளையும் மகன்கள் பேரக் குழந்தைகளையும் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆறுதல் கூறிவந்தோம்.  தலைவர் திருமாவளவன் அவர்களை ஒருமுறை சந்தித்து பாதுகாப்புக் கேட்டதை குந்தியம்மாள் நினைவுபடுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது.  

மோட்டாவின் மனைவி குந்தியம்மா

இரவில் உண்டி-உறைவிடப் பள்ளியில்தான் தங்கினோம். அவ்வளவு கூட்டம்.  கடும் இடநெருக்கடி.  அதிகாலை அவரவர் எழுந்து மலையிறங்க ஆரம்பித்தார்கள்.  நாமும் அந்த ஊரைவிட்டுக் கிளம்பும்போது, அம்மக்கள் மலைத்தேன் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள்.  உடன் வழிகாட்ட ஒரு தம்பியையும் அனுப்பி வைத்தார்கள்.  வழிநெடுக அந்தத் தேன்தான் களைப்பைப் போக்கியது.  

யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராமல் மலை உச்சியில் இயற்கையோடு வாழ்ந்து வரும் அவர்களை, நாகரிக மனிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள்தான், மக்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்கிறவர்கள்தான் வேட்டையாடத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  
எத்தனை ஆட்சி மாற்றங்கள் வந்தென்ன?  அவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை.  இந்தியாவை வல்லரசாக்கத் துடிக்கிறார்கள்.  இப்படி அவலம் நிறைந்த கிராமங்கள் இருக்கும் வரை என்ன மாற்றத்தைச் செய்து கிழித்து விடப்போகிறார்கள்.

(தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து வரும் மலைவாழ் மக்கள் மீதான அரச வன்கொடுமைகளுக்கு எதிராக எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஈரோட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது)

0 comments:

Post a Comment