05 July 2024
நிலவியல் அடிப்படையில் இருவேறு துருவ முரண்பாடுகளோடு இருப்பது தான் இந்தியா. வடக்கே இமயமலை என்றால் அதற்கு நேர் எதிரே தெற்கே இந்தியப் பெருங்கடல், வடகிழக்கே பசுமை போர்த்திய மலைத்தொடர்களும், கங்கை, யமுனா, சரஸ்வதி, பிரம்மபுத்திரா நதிகள் பாய்கிறது என்றால், அதற்கு நேர் எதிரே வட மேற்கில் தார் பாலைவனம் இருக்கும்.
எழுத்தாளர் அருந்ததி ராய் |
இந்த முரண்பாடுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் மோடி ஆட்சி காலத்தில் பல்வேறு சட்ட திருத்தங்கள் நடந்துள்ளன. சமூக விஞ்ஞானிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். போராளிகளின் குரல்கள் நசுக்கப்பட்டுள்ளன. விளிம்பு நிலை மக்களின் விடுதலைக் கோரிய தலித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தீஸ்தா சிடல்வாட், ஆனந்த் டெல்டும்டே, அருட்தந்தை ஸ்டேன் சுவாமி, வரவர ராவ் என மோடி ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டது.
பீமாகொரேகான் வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள போராளிகள் |
இந்தியாவில் சமூக விடுதலைக்காக பாடுபடும் தலைவர்களை ஊபா மூலமாக கொடுஞ்சிறையில் அடைத்துள்ளார் மோடி. மூன்றாவது முறையாக பதவியேற்ற இரண்டாவது வாரத்திலேயே உலக புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயை ஊபா சட்டத்தில் கைது செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும், 13 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்குகளை தோண்டி எடுத்து நடவடிக்கை பாய்ச்சப்பட்டுள்ளது.
இந்த கட்டுரையின் தொடக்கத்தில், இந்தியா நிலவியல் அடிப்படையில் எப்படி இரண்டு முரண்பாடுகளோடு இருக்கிறதோ, அதே போலத்தான் அரசியல் ரீதியாகவும் இரு முரண்பாடுகள் உள்ளன. தன்னை கடவுளின் தூதன் என்று கூறிக்கொள்ளும் மோடியும் இங்கு தான் இருக்கிறார். எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல் மக்களுக்காக உழைக்கும் சமூக விஞ்ஞானிகளும் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். இந்த சமூக விஞ்ஞானிகளை ஒடுக்கவும், மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைத் தடுக்கவும், மோடி அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களை சிறையில் தள்ளவும் தான் ஊபா போன்ற கொடுஞ்சட்டங்களை மோடி அரசு திருத்தியுள்ளது. இதன் அபாயத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது. தற்போது, ஊபா என்ற அபாயம் அருந்ததி ராய் போன்ற உலக புகழ்பெற்றவர்களையே எளிதில் கைது செய்துவிடலாம் என்ற சூழல் இருக்கும் போது, இந்தியாவில் எளிய மக்களுக்காக பாடுபடும் தலைவர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.
சிறையிலிருந்து பிணையில் வரும் தீஸ்தா சிடல்வாட் |
கடந்த 2018ஆம் ஆண்டு ”நான்கு முறை சந்தித்தேன். நிர்மலாதேவி பரபரப்பு வாக்குமூலம்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டதற்காக நக்கீரன் குழுமத்தின் ஆசிரியர் திரு.நக்கீரன் கோபால் அவர்கள் மீது 124 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தார்கள். நக்கீரன் இதழ் பொய் செய்தி, அவதூறு கருத்து என்றார்கள். ஆனால், வரலாற்றை இன்று பார்த்தால், ஆறு ஆண்டுகள் கழித்து நிர்மலா தேவிக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்துள்ளது. ஆனால், அவர் யாருக்காக இந்த தொழிலை செய்தாரோ அவருக்கு என்ன தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டது?
அண்ணன் நக்கீரன் கோபால் |
உண்மையை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் ஆசிரியர் மீது 124 பிரிவில் வழக்கு. குற்றவாளி நிர்மலா தேவிக்கு சிறை. யாருக்காக நிர்மலா தேவி இதை செய்தாரோ அவர் தமிழ்நாட்டிலிருந்து பஞ்சாபிற்கு பறந்துவிட்டார். நக்கீரன் ஆசிரியரைப் போல் தான் மோடிக்கு எதிராக கேள்வி எழுப்புபவர்கள் மீது ஊபா போன்ற கொடூரமான சட்டங்கள் இந்தியாவில் பாய்ச்சப்படுகின்றன.
ஊபா என்றால் என்ன? பாஜக எப்படி திருத்தியுள்ளது?:
124 பிரிவு வழக்கு என்றால் என்ன என்றே நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்படுவதற்கு முன்பு வரை யாருக்கும் பெருமளவு தெரியாது. அது போலத்தான், 1967க்கு முன்பு வரை ஊபா சட்டம் என்றால் என்ன என்பது பெரும்பாலும் யாருக்குமே தெரியாது. 1967 டிசம்பர் 30 ஆம் தேதி தான் ஊபா (UAPA - Unlawful Activities Prevention Act) என்ற சட்டவிரோத நடவடிக்கை சட்டம் கொண்டு வரப்பட்டது. 2004ல் முதல் திருத்தம் இந்த சட்டத்தில் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பயங்கரவாத நடவடிக்கைகள் என்ற பெயரில் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிடப்பட்டன. இதனை தனிமனிதர்கள் மீதும் ஏவும் வகையில் தான் மோடி தனது இரண்டாவது ஆட்சி ஆண்டில் திருத்தினார். கடந்த 08.08.2019 ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே மோடி திருத்தினார். அதன்படி இந்திய குடிமகன் அல்லது குடிமகளை பயங்கரவாதி என அறிவிக்க அரசுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. இதனை மறுப்பதற்கான அதிகாரம் கூட தனிநபர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
இந்தியா உடன் காஷ்மீர் இணைக்கப்பட்ட போது, நாடாளுமன்றத்தில், நேருவோ அல்லது இந்தியா காஷ்மீர் ஒப்பந்தம் எதைக் கூறியதோ அதைத்தான் காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் கூறினார். ஆனால், தற்போது பாசிச பாஜக கும்பலால் அருந்ததி ராய் ஒரு பயங்கரவாதி போல் சித்தரிக்கப்பட்டு நிற்கிறார். அருந்ததி ராயை உலகமே அவரது எழுத்துக்காக கொண்டாடுகிறது. ஆனால், மோடியின் சனாதன கும்பல் அவரை பயங்கரவாதியாக காட்டுகிறது.
சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் கருவி ஊபா:
இதுவரை ஊபா வழக்கில் கைது செய்யப்பட்ட 85 சதவிகிதத்திலிருந்து 90 சதவிகிதம் வரையிலான நபர்கள் குற்றம் நிரூபிக்கப்படாதவர்களாகத்தான் உள்ளார்கள். இதுவரை 3,974-க்கும் மேற்பட்டவர்கள் ஊபா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் வெறும் 821 பேர் மீது தான் வழக்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015ல் வெறும் 14.5 சதவிகிதம் பேர் மீதான குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 85.5 சதவிகிதம் பேர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படாமலேயே சிறையில் உள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஊபா வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு வெறும் 10 பேர் மட்டுமே உபாவில் கைது செய்யப்பட்டனர். ஆனால், இன்றைய நிலை தலைகீழ், 120க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் நிலவரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அதாவது 2014க்கு முன்பு காஷ்மீரில் உபாவில் வெறும் 45 பேர் மட்டும் தான் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், 2014க்கு பிறகு 260க்கும் மேற்பட்டவர்கள் இன்றுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது ஏதோ பாசிச பாஜக மீது அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் திரித்தல் கருத்துக்கள் இல்லை. நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தாக்கல் செய்த விவரத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
2021ல் ஊபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 814 ஆக இருந்த எண்ணிக்கை 2022 இல் 1,005 ஆக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில், 788 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 500 பேருக்கு எதிராக தேசத்துரோக மற்றும் அரச வழக்குகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் 131 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, ஊபா சட்டத்தின் கீழ் 8,947 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 6,503 பேர் குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர் நித்யானந்த் ராய் கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்படாமல் 550 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம், மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் செயல்படும் மனித உரிமைப் போராளிகளை குறிவைத்து மட்டுமே இந்த ஊபா சட்டங்கள் அதிகம் ஏவப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பதவிக்கு வந்த ஓராண்டில் 130 இஸ்லாமிய இளைஞகள் மீது ஊபா சட்டம் ஏவப்பட்டது. 2021ல் யோகி ஆதித்யநாத் அரசு 94 பேர் மீது பிரயோகித்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை உத்தரப்பிரதேச உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையும் இதனோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டி இருக்கிறது. இதன் பின்னணியில் எழுத்தாளர் அருந்ததி ராய் மீதான ஊபா வழக்கு பரிந்துரையையும் கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும்.
ஏன் குறிவைக்கப்படுகிறார் அருந்ததி ராய்?:
அருந்ததி ராய் மீதான ஊபா வழக்கு என்பது 13 ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய ஒரு பேச்சுக்காக பதியப்பட உள்ளது. அதாவது, 2010ஆம் ஆண்டு காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் என எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதாக கூறப்படுகிறது. அருந்ததி ராய் உள்ளிட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்கின் சட்டப்பிரிவுகள் 153 A, 153B, 504 மற்றும் 505. இந்த வழக்குகளின் கீழ் பதியப்படும் குற்றம் நீரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படும். அருந்ததி ராய் மற்றும் பேராசிரியர் ஹூசைன் மீதான குற்றங்களை நீதிமன்றங்கள் எடுத்துக்கொள்வதற்கான வரம்பு காலம் அக்டோபர் 2013லேயே முடிவடைந்துவிட்டது. இருப்பினும் கூட, ஏன் இவ்வளவு காலம் கழித்து அருந்ததி ராய் குறிவைக்கப்படுகிறார் என்பதை கவனிக்க வேண்டும்.
மக்களுக்கான களத்தில் அருந்ததி ராய் - மேதா பட்கர் |
தன்னை கடவுளின் தூதன் என்று மனக்கோட்டை கட்டிக்கொள்ளும் மோடி ஏன் அருந்ததி ராயைப் பார்த்து பயப்படுகிறார். இவ்வளவு காலம் கழித்து அருந்ததி ராயை ஊபாவில் கைது செய்வதன் மூலம் மோடி மீது இன்னமும் எச்சரிக்கையாக இந்தியா கூட்டணி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கிறது. கடந்த காலங்களில் இருந்தது போல் இனி மோடி இருக்க மாட்டார். இப்போது, அவர் யாராலும் கேள்வி கேட்க முடியாத இடத்திற்கு தன்னை நகர்த்திக்கொண்டு விட்டார். அதாவது, கடவுளிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது. அதே போல கடவுளின் தூதனான தன்னிடமும் யாரும் கேள்விக் கேட்க கூடாது என்ற செய்தியை இந்திய மக்களுக்கு மோடி கொடுத்துள்ளார். இதனை இந்தியா கூட்டணியும் இந்திய மக்களும் உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கிறது. அருந்ததி ராய் மீதான ஊபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பேசுவது என்பது உண்மையில், எதிர்கால இந்தியாவை பாசிச மோடியிடம் இருந்து காப்பாற்றுவதற்கு சமமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
மோடி அரசு ஒரு மைனாரட்டி அரசு. நிதீஷ் குமார், சந்திரபாபு ஒத்துழைப்போடு தான் மோடி ஆட்சியை நடத்த முடியும் என்று தவறாக மதிப்பிட்டுவிட முடியாது. சிவசேனா, பிஜூ ஜனதாளம் இதற்கு சிறந்த உதாரணம். பாஜகவை விட இந்துத்துவ அரசியலில் தீவிரமாக இருந்த சிவசேனாவையே பாஜக உடைத்து சுக்கு நூறாக்கியுள்ளது. ஒன்றியத்தில் மோடியை எதிர்க்காமல் கூட்டணி வைத்திருந்த பிஜூ ஜனதாதளத்தையே அரசியல் நரித்தனத்தால் ஆட்சியிலிருந்து மோடி கும்பல் வெளியேற்றியுள்ளது. இந்த நிலை, நாளை நிதீஷ் குமாருக்கோ சந்திரபாபுவுக்கோ ஏன் ஏற்படாது?
2015ஆம் ஆண்டு விடுதலைச்சிறுத்தைகளின் ‘அம்பேத்கர் சுடர்’ விருது பெறும் அருந்ததி ராய் |
அருந்ததி ராயின் இந்த ஊபா வழக்கை, சமகால இந்திய அரசியலோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியத்தை எதிர்க்கட்சிகளும் இந்தியா கூட்டணியும் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும், சில மாதங்களில் கூட மோடி தனது சர்வாதிகார முகத்தை வெளிப்படுத்தக் கூடும். அதற்கு அருந்ததி ராய் ஒரு சிறந்த உதாரணம். இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு அரசியலமைப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் உயர்த்தி பிடித்துள்ள இந்தியா கூட்டணி தோழர்கள், அருந்ததி ராயையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் காக்க இன்னும் இன்னும் தீவிரமான போரை முன்னெடுக்க வேண்டி இருக்கும்.
காலம் தான் எவ்வளவு விசித்திரமானது. மோடியின் பாசிசத்தை எதிர்த்து போர் புரிந்து அவரை வீழ்த்த நிச்சயம் வாய்ப்பை ஜனநாயகத்திற்கும் ஜனநாயகவாதிகளுக்கும் கொடுக்கத்தான் போகிறது.
- வன்னி அரசு
27 June 2024
பீர்சா முண்டா படத்துடன் ஒட்டகத்தில்மக்களவைக்கு வந்த ராஜ்குமார் ரோஹத் |
தலைவர் எழுச்சித்தமிழர் - அறிஞர் ரவிக்குமார் |
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி |
மக்களவையில் தலைவர் - பொதுச்செயலாளர் |
அரசியல் சாசனத்தை ஏந்தி நிற்கும் சந்திரசேகர் ஆசாத் |