27 July 2011

ராஜபக்சேவை தண்டிக்க முடியும்! அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம்! திருமா வேண்டுகோள்!


ராஜபக்சேவை தண்டிக்க முடியும்! அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம்! திருமா வேண்டுகோள்!


அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகார குழு சிங்கள இனவெறி அரசுக்கு வழங்கி வந்த நிதி உதவினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. இனப்படுகொலை குற்றவாளிகள் இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகளாக விசாரிப்பதற்கு அழுத்தம் கொடுக்கிறவகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

மனிதநேய அடிப்படையிலான நிதியுதவியை தொடர்ந்து வழங்குவதென்றும் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு இராஜபக்சே கும்பல் உடன்பட்டால் பிற நிதியுதவிகளையும் வழங்குவதென்றும் அந்த குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அறிவிப்பின் மூலம் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான மனநிலை அனைத்துலக சமூகத்திடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இந்த வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகார குழுவை குறிப்பாக ஹாவர்ட் பெர்மன் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் நன்றியுணர்வுடன் பாராட்டுகிறது. சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இலங்கையில் கொலைக்களம் என்னும் குறுந்தகட்டின் மூலம் இத்தகைய மனமாற்றத்திற்கு அமெரிக்க அய்க்கிய அரசு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. சிங்கள அரசுக்கு எதிரான பொருளாதார தடையாக இல்லாமல் போர்குற்றங்களை விசாரிப்பதற்குரிய ஒரு முன்நிபந்தனை அறிவிப்பாகவே விளங்குகிறது. எனினும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழு இத்தகைய முடிவெடுத்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்று பாராட்டுகிறது.

இந்த சூழ்நிலையில் இராஜபக்சேவின் கட்சியை சார்ந்த முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே தமிழர்கள் மீது கருணை கொண்டு தமிழர்களுக்குரிய அதிகாரங்களை பகிர்ந்தளிக்கலாம் என்று அறிவுறுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இராஜபக்சேவுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையிலான தனிமனித அரசியலில் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவுகளா அல்லது சர்வதேச வலைப்பின்னலின் அடிப்படையிலான வெளிப்பாடா என்பது தெரியவில்லை. ஆயினும் சந்திரிகாவின் அறிவிப்பும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் முடிவும் சற்று ஆறுதல் அளிக்கிறது. இதிலிருந்து தமிழ் இனத்திற்கு ஆதரவான நம்பிக்கை ஒளிக்கீற்று பிறந்துள்ளது.

இராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி, விசாரித்து தண்டிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இதனை வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாழும் தமிழர்களும் ஒற்றுமையாக இருந்து அனைத்துலக சமூகத்தின் நன்மதிப்பை பெரும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இவண்

தொல்.திருமாவளவன்

0 comments:

Post a Comment