30 July 2011
22.06.2011 குமுதம் இதழில்
இரத்தமும் சதையுமாக நம் சொந்தங்கள் தத்தளித்து நின்றபோது, சிங்கள அரசின் சிண்டைப் பிடித்தவர் அவர்(ஜெயலலிதா). எங்களின் இழவு வீட்டிற்கு ஆறுதல் சொல்ல வந்த உறவு. அவரை ஆதரித்ததில் என்ன தவறு?
- சீமான்
***
‘ஈழத்தாய்’ ஜெயலலிதாவால் தமிழீழம் கிடைக்கட்டும்!
வன்னிஅரசு, செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
பயங்கரப் பசியோடு உணவு விடுதிக்குச் சென்ற ஒருவன், முதலில் 5 தோசை ஆணையிட்டு சாப்பிட்டான் பசி தீரவில்லை. மீண்டும் 5 இட்லி சாப்பிட்ட பின்னும் பசி அடங்கவில்லை; பூரி சாப்பிட்டான் பசி தீரவில்லை... கடைசியாக ஒரு வடை சாப்பிட்டான். "அப்பாடா வயிறு நிறைந்துவிட்டது. நான் ஒரு முட்டாள். முதலிலேயே வடையை மட்டும் சாப்பிட்டிருந்தால் வயிறு நிறைந்து பசி போயிருக்குமே!" என்று தனக்குள் புலம்பினானாம். இதுபோல இருக்கிறது அண்ணன் சீமானின் கருத்து.
ஜெயலலிதா அம்மையாரின் முந்தைய ஆட்சிக் காலங்களில்தான் தமிழீழ ஆதரவுப் போராட்டங்களை நடத்தியவர்கள் மீது அடக்குமுறைச் சட்டங்கள் பாய்ச்சப்பட்டன. அய்யா பழ. நெடுமாறன், அண்ணன் வைகோ, அண்ணன் சுபவீ, சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் போன்றவர்கள் 'பொடா' என்னும் கொடுநெறிச் சட்டத்தில் பல ஆண்டுகள் தளைப்படுத்தப் பட்டனர். தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர்கள் மீது கடத்தல் வழக்குகள் போடப்பட்டன.
மேதகு பிரபாகரன் அவர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்து தூக்கில் போட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை; ஈழத் தமிழர்களைத்தான் ஆதரிக்கிறேன் என்றும், போர் என்றால் அப்பாவி மக்களும் சாகத்தான் செய்வார்கள் என்றும் கர்வத்துடனும், திமிருடனும் கூறியவர்தான் ஜெயலலிதா.
இராமேஸ்வரத்தைத் தாண்டியும், வேதாரண்யத்தைத் தாண்டியும் ஒரு குண்டூசி கூட போகாதபடிப் பார்த்துக் கொண்ட ஜெயலலிதாவுக்கு, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 'ஈழத்தாய்' பட்டத்தை மேடைதோறும் வழங்கி அண்ணன் சீமான் அம்மாவைச் சொறிந்துவிட்டார்.
இந்துத்துவத்தின் - பார்ப்பனியத்தின் - இந்தியத் தேசியத்தின் குறியீடாய் கொள்கைரீதியாய்ச் செயல்பட்டுவரும் ஜெயலலிதா தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக இருக்கிறார் என்றும், தமிழீழத்திற்கு ஆதரவாக இருக்கிறார் என்றும் கதை கட்டிப் பரப்புரை செய்வது தமிழ்த் தேசியத்திற்குச் செய்யும் துரோகம். இப்படியே போனால் தமிழீழப் போராட்டத்தை, மேதகு பிரபாகரனைவிட ஜெயலலிதாதான் சரியாக வழிநடத்துகிறார் என்று சொன்னாலும் சொல்வார்கள்.
கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடந்த ஆயுதப் போராட்டங்களின்போது, ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத, ஆதரித்து ஒரு அறிக்கை கூட கொடுக்காத, சோ, சுப்பிரமணியசாமி, வாழப்பாடி இராமமூர்த்தி ஆகியோரைப் போன்று புலிகளால் தமது உயிருக்கு ஆபத்து என்று தொடர்ந்து அலறிய ஜெயலலிதாவை, இன்றைக்கு சட்டப்பேரவையில் ' பொருளாதாரத் தடை ' கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக தமிழீழப் போராட்டத்தின் ' லெப்டினண்ட் ' போலச் சித்தரித்துப் பரப்புரை செய்வது கால் நூற்றாண்டு கால ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்.
பொருளாதாரத் தடை என்னும் தீர்மானத்திலும் கூட, விடுதலைப் புலிகளின் மீதான் தன்னுடைய குரோதத்தைக் காட்டத் தவறவில்லை. புலிகளை பயங்கரவாதிகள் என்றும், ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன்னலமற்ற போராளிகளை அவமதிக்கும் ஜெயலலிதாவின் இந்த வரிகளை, மறந்தும் சீமான் நினைவில் கொள்ள விரும்பவில்லை என்று தெரிகிறது.
உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால் தமிழக அரசின் அதிகாரத்திற்குட்பட்ட பூந்தமல்லி, செங்கல்பட்டு, சிறப்பு முகாம்களில் பல ஆண்டுகளாக விசாரணையே இல்லாமல் சிறைப்பட்டிருக்கும் அப்பாவி ஈழத்து இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும். தெருக்களில் எந்தப் பாதுகாப்பும், வேலையும் இன்றித் திரியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரப் பணி கிடைக்க வழி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி ஈழத் தமிழர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். தமிழக அரசின் அதிகாரத்திற்குட்பட்டு செய்யக்கூடிய இவற்றையயல்லாம் செய்வாரா ஜெயலலிதா?
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னர் காங்கிரசுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்து, தேர்தலுக்குப் பின்னர் தொடர்ச்சியாக காங்கிரசுடன் கூட்டணிக்கு முயற்சிக்கிற ஜெயலலிதா, ஈழச் சிக்கலில் நமக்குத் துணையாய் இருப்பார் என்று அண்ணன் சீமான் எப்படி நம்புகிறார் என்று நமக்கு விளங்கவில்லை.
அண்மையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டு விழா சுவரொட்டிகளிலும், மேடையிலும் மிகக் ' கவனமாகவும், தந்திரமாகவும் ' மேதகு பிரபாகரன் அவர்களின் படங்கள் தவிர்க்கப்பட்டதுபோல், ஜெயலலிதாவின் நடவடிக்கைகளும் தந்திரமாக இருக்காது என அண்ணன் சீமான் நம்பட்டும் ! மக்கள் நம்பத் தயாராக இல்லை.
மேதகு பிரபாகரன் அவர்களால் மீட்க முடியாத தமிழீழத் தேசத்தை ஜெயலலிதாவாவது... இல்லை... இல்லை...' தமிழகத்திற்கு வாராது வந்த மாமணியாம் ஈழத் தாயாவது ' மீட்டுத் தரட்டும் !
***
கருஞ்சட்டை தமிழர் ஜீலை 1-15 இதழில்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment