10 September 2011

சாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகரனின் ஈகத்திலிருந்து பாடம் படிப்போம்!


குடிநீர்க் கிணறுகளில் மலத்தை வீசினார்கள்; குடியிருக்கும் வீடுகளை எரித்தார்கள்; ஒருவர்கூட வெளியில் வரமுடியவில்லை; வெளியில் வந்தவர் ஒருவர்கூட உயிருடன் திரும்பவில்லை; வெட்டி சாலையில் போட்டார்கள்; பெண்கள் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை; மரண ஓலங்களும் ஒப்பாரிகளும் வீதிகளை முற்றுகையிட்டன; மாடுகளும் ஆடுகளும் ஆங்காங்கே செத்துக் கிடந்தன; குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் காட்டிலும் மேட்டிலும் சுற்றிக்கொண்டிருந்தார்கள்; போலீசும் இராணுவமும் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இக்கொடுமைகள் எல்லாம் எங்கு நடந்தன?


ஈழத்திலா, அல்லது தற்போது புரட்சி நடைபெறும் லிபிய தேசத்திலா...

அங்கெல்லாம் இல்லை.

நம் தாய்த் திருநாடான தமிழகத்தில்தான் இத்தனைக் கொடுமைகளும் நடந்தன!

1956ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தின் தென்திசையிலுள்ள முதுகுளத்தூரில் நடந்த கொடுமைகள்தான் இவை.

இக்கொடுமைகள் யார் மீது அவிழ்த்துவிடப்பட்டன?

இன்றும் சமூக விடுதலைக்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிற தாழ்த்தப்பட்டோர் மீதுதான் இத்தனை கொடூரங்களும்.

காலங்காலமாய் அடக்குமுறை செய்து வந்த தேவர்களின் கொட்டத்தை அடக்குவதற்காகக் கொதித்தெழுந்த எரிமலைதான் இம்மானுவேல் சேகரன். இராணுவத்தில் களமாடிய அந்த மாவீரன் தம் சொந்த ஊரான செல்லூர் மற்றும் பரமக்குடி பகுதிகளில் நடக்கும் தம் மக்கள் மீதான கொடுமைகளைக் கண்டு வேதனைப்பட்டார். முத்துராமலிங்கத் தேவர் என்பவரின் தலைமையில்தான் இத்தகைய சாதிவெறியாட்டங்கள் நடைபெறுவதை அறிந்த மாவீரன் இம்மானுவேல் சேகரன் நேரடியாகவே முத்துராமலிங்கத்தை எதிர்க்கத் துணிந்தார். ""பள்ளப் பயலுகளுக்கு இவ்வளவு துணிச்சலா?'' என்று வெளிப்படையாகவே தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளர்கள் மீது வன்முறையைத் திணித்தனர். தலித்துகள் பலர் ஊரைக் காலி செய்து கிளம்ப ஆரம்பித்தனர்.

இந்நிலையில் 1956 செப்டம்பர் 10ஆம் நாள் இராமநாதபுரம் ஆட்சியர் சி.வி.ஆர். பணிக்கர் அவர்கள் சமாதானக் கூட்டம் ஒன்றை முதுகுளத்தூரில் கூட்டினார். இக்கூட்டத்திற்கு ஃபார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதிகள், அப்போது எம்.பி.யாக இருந்த முத்துராமலிங்கத் தேவர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டனர். அழைக்கப்பட்டவர்களில் இம்மானுவேல் சேகரன் முக்கியமானவர். அனைத்துச் சமுதாயத் தலைவர்களுடனும் ஆட்சியர் கலந்து பேசியபின், கலவரத்தைத் தடுக்க கூட்டறிக்கை தயார் செய்து அனைத்துத் தலைவர்களும் கையயாப்பமிட்டு வெளியிட முடிவு செய்யப்பட்டது. முத்துராமலிங்கத் தேவர் மட்டும் சேர்ந்து கையயாப்பமிட முடியாது என்றார். அதாவது ஒரு தாளில் கூட பள்ளர்களுடன் கையயாப்பமிட விருப்பமில்லை என்று தெரிவித்தார். இதனால் கோபமடைந்த ஆட்சியர் பணிக்கர், தேவரை எச்சரித்தார். வேறு வழியில்லாமல் தேவர் கையயாப்பமிட்டார். தலித்துகள் சார்பில் இம்மானுவேல் சேகரனும், காங்கிரஸ் சார்பில் நாடார்களும் அக்கூட்டறிக்கையில் கையயாப்பமிட்டனர். இது தொடர்பாகத்தான் இம்மானுவேல் சேகரனுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தமக்கு ஏற்பட்ட அவமானச் செயல் என்று முத்துராமலிங்கத் தேவர் வேதனைப்பட்டார். விளைவு மறுநாள் செப்டம்பர் 11 இரவு 9.30 மணிக்கு பரமக்குடியில் உள்ள பேருந்து நிலையத்தில் இம்மானுவேல் சேகரன் நின்றுகொண்டிருக்கும்போது தேவருடைய ஆட்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்தனர். முத்துராமலிங்கத் தேவர் உட்பட 12 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இ.பி.கோ. 302, 34, 109, 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்காகத்தான் தலித்துகளின் மீது அத்தனை வன்முறைகளும். காட்டுமிராண்டிகளின் செயல்போல முத்துராமலிங்கத் தேவரின் விசுவாசிகள் அன்றைக்குச் செய்தார்கள்.

தோழர்களே! இன்றைக்கு (செப். 11 ) சாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல்சேகரனின் நினைவு நாள். 1956ஆம் ஆண்டு அந்த மாவீரன் சிந்திய இரத்தம் தென் மாவட்டங்களில் தலித்துகளைத் தலை நிமிர வைத்தது என்றால் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் போன்ற சமரசமில்லாப் போராளியாகவே அன்றைக்கு இம்மானுவேல் சேகரன் இருந்திருக்கிறார் என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இன்னும் சாதிய இறுக்கம் உடைந்தபாடில்லை. தீண்டாமை நெறி குறைந்தபாடில்லை. சேரிகளை எரிக்கும் கொடூரங்கள் நின்றபாடில்லை. தமிழர்கள், சாதித் தமிழர்களாகவே இன்னமும் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் அரசியல் இலாபங்களுக்கு தாழ்த்தப்பட்டோரைப் பயன்படுத்தத் துடிக்கிறார்கள். திராவிட ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி; தமிழ்த் தேசியவாதிகளாக இருந்தாலும் சரி; இதில் வித்தியாசம் எதுவும் இல்லை. உதட்டளவில் சாதி ஒழிக என்றுகூட தமிழ்த் தேசியவாதிகள் முழக்கமிடத் தயங்குகிறார்கள். அடிமை நிலையிலிருக்கிற, சாதிக்கொடுமைகளுக்குள்ளாகிற தலித்துகளின் உணர்வை, விடுதலை வேட்கையை இப்போதுள்ள சாதியŠஇந்துத்துவத் தலைவர்கள் உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏனென்றால் தாழ்த்தப்பட்டோர் தலைமையை ஏற்று சமூக மாற்றத்தை நிகழ்த்த யாரும் தயாராக முன்வரவில்லை. இங்கே தமிழ்த் தேசியம் பேசுகிற தலைவர்கள் அனைவருமே போலித் தமிழ்த் தேசியவாதிகள்தான். ஒடுக்குமுறைக்குள்ளாகும் தமிழர்களை விடுதலை செய்யாத தமிழ்த்தேசியம் என்ன செய்துவிடப் போகிறது?

தியாகி இம்மானுவேல் சேகரன் போன்ற சமரசமற்ற போராளியாக, தலித்துகளுக்குக் கிடைத்திருக்கின்ற எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களுக்குப் பின்னால் அணி வகுப்பது ஒன்றே அந்த மாவீரன் இம்மானுவேல் சேகரனுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

இதிலிருந்து பாடம் படிப்போம்! வரலாறு படைப்போம்! வாருங்கள் தோழர்களே!

1 comments:

தேவன் said...

சாதி ஒழிப்பு பற்றிய கட்டுரை இருந்தால் தயவுசெய்து எனக்கு மின்னஞ்சல் செய்யவும்.

Post a Comment