06 September 2011
தூக்குக் கொட்டடியின் கீழ் நிற்கும், நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர். விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் 19.8.2011ஆம் நாள் சென்னையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 22.8.2011ஆம் நாள் தமிழகம் முழுக்க விடு தலைச்சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து 28.8.2011 அன்று மறைமலை நகரில் நடைபெற்ற மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் மருத்துவர் இராமதாசு அவர்களும் எமது தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களும் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இம் மாநாடு தமிழகத்தை மேலும் உசுப்பியது. விடுதலை உணர்வு நெருப்பைப் பரப்பியது.
இதற்கிடையே வழக்கறிஞர்கள் அங்கயற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதா ஆகியோர் 5 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தை வாழ்த்திப் பேச இலட்சக்கணக்கான விடுதலைச்சிறுத்தைகளின் சார்பாக எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடந்த 28.2.2011 அன்று கோயம்பேட்டில் உள்ள உண்ணாநிலைப் போராட்டத் திடலுக்கு வந்தார். அருள் எழிலன், மாலதி மைத்ரி, கவிதா முரளிதரன் போன்றவர்கள் எழுச்சித் தமிழரை வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு உட்கார்ந்திருந்த ஒருவர்கூட மரியாதைக்காக எழுந்துகூட வரவேற்கவில்லை. ஒரு தலைவர் அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தமிழ்த்தேசியக் களத்தில் பாடாற்றும் போராளித் தலைவரை அவமதிக்கும் நோக்கில் நடந்து கொண்டது அறம் சார்ந்த செயலா?
இது குறித்து என்னிடம் பேசிய அருள் எழிலன் கூட அதிகம் வருத்தப்பட்டார். இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் வெளிப்படுத்தினார். தமிழ்த்தேசியவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் இம்மாதிரியான ‘உள் உணர்வாளர்களை’ வைத்து எப்படித் தமிழ்த்தேசத்தைப் படைக்கப்போகிறோம்?
இத்தருணத்தில் கடந்த வார ‘ஜூனியர் விகடன்’ இதழில் பத்திரிகையாளர் கவின் மலர் எழுதிய கட்டுரையில் விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் வந்து வாழ்த்தி, போராட்டத்திற்கு ஆதுரவு கொடுத்தது பற்றி அக்கட்டுரையில் குறிப்பிடவில்லை. இது குறித்து நான் கவின் மலரிடம் பேசியபோது, “அலுவலகத்தில் ‘எடிட்’ செய்துவிட்டார்கள். நான் உங்கள் தலைவர் வந்தது குறித்து எழுதித்தான் அனுப்பினேன்” என்று வருத்தம் தெரிவித்தார்.
வழக்கறிஞர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்குப் பின்புலமாகக் களமாடிய தோழர்கள் கவிதா முரளிதரன், கவின்மலர், சந்திரா, ரேவதி போன்றவர்கள் முயற்சி பாராட்டத்தக்கது. அதிலும் குறிப்பாக கவிதா முரளிதரன் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைச்சிறுத்தைகளுடன் தோழமையோடு செயல்படுபவர். எழுச்சித்தமிழரின் கவிதைத் தொகுப்பு நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து ‘thirst’ என்கிற பெயரில் நூலாகக் கொண்டுவரக் களப்பணியாற்றியவர்.
எழுச்சித்தமிழர் மீதும் தலித் விடுதலை மீதும் அக்கறை கொண்டவர். அப்படிப்பட்ட தோழரை ‘தலித் விரோதி’ என்று சிலர் கொச்சைப்படுத்துவது முறையல்ல. அரசியல் களத்திற்கு இப்போதுதான் பெண்கள் வந்துள்ளனர். ஒரு சில தவறுகளைக் காட்டி அவர்களை அப்புறப்படுத்துவதோ அவமதிப்பதோ சனநாயகமல்ல. பெண்களும் தலித்துகள்தான். இச்சமூகத்தில் பெண்களுக்கும் தலித்துகளுக்கும்தான் ஒடுக்குமுறை அதிகம். ஆகவே, தோழர்களே தலித்துகளை அப்புறப்படுத்தவோ புறக்கணிக்கவோ முயற்சிக்காதீர்கள். பெண்கள் சுதந்திரமாகப் ‘பற’க்கட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment