17 September 2011
'நான் உமி கொண்டு வருகிறேன்; நீ அரிசி கொண்டு வா! இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடுவோம்!' என்கிற எனது கட்டுரைக்கு மறைமுகமாகப் பதில் சொல்ல முனைந்திருக்கிறார் யமுனா ராஜேந்திரன் அவர்கள். ஆனால் யமுனா ராஜேந்திரனுக்கு தமிழக அரசியல் இயக்கங்களின் அரிச்சுவடியோ, அதன் இயங்குதளம் குறித்த புரிதலோ இல்லை. அதனால்தான் அரசியல் இயக்கங்களின் ஒற்றுமையின்மையை அறிவுலகினரின் கையெழுத்து அறிக்கையோடு ஒப்பிடுகிறார். அநீக்கு எதிரான ஓர் அறிக்கையை எழுதி அதை இணையம் வழியே அனுப்பி வெவ்வேறு தத்துவார்த்தக் கோட்பாடுகளைக் கொண்ட முரண்பட்ட சிந்தனைவாதிகளிடம் கையெழுத்து வாங்குவதையும், வெகுசன மக்களிடையே அரசியல் செய்யும் அரசியல் அமைப்புகளின் கூட்டியக்கத்தையும் ஒன்றுபோலப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் எழுதியிருக்கிறார். அறிக்கைதான் ஒற்றுமையின் அடையாளம் என்றால் அந்த ஒற்றுமை அரை நூற்றாண்டு காலமாக தமிழக கட்சிகளிடையேயும், தமிழ் அமைப்புகளிடையேயும் உள்ளது என்று ஆணித்தரமாக சொல்வேன் யமுனாவுக்கு. ஏனென்றால் சம காலத்தில் நாம் எதிர்கொள்ளும் எல்லா நெருக்கடிகளிலும் எல்லா அரசியல் கட்சிகளுமே அவரவர் கண்டன அறிக்கையை வெளியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி கூட ஈழத் தமிழர் பிரச்சனையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. யமுனாவின் அளவுகோலின்படி சுயநலம் துறந்த உயரிய நோக்கம் கொண்ட அரசியல் ஒன்றை அறிக்கைகளே தீர்மானிக்கும் என்றால் நான் சொல்வது சரிதானே?
முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன், யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டிருப்பது போல, அது விடுதலைச் சிறுத்தைகளின் அறிக்கை அல்ல. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான எனது தனிப்பட்ட கட்டுரையே தானே தவிர கட்சியின் கருத்தல்ல. தமிழகத்து இளைஞர்களின் உணர்வுகளைத்தான் எனது கருத்தாகப் பதிவு செய்துள்ளேன். மூன்றாம் உலக நாடுகளோடு ஒப்பிடும்போது குடிமைச் சமூகத்தின் உயர்ந்தபட்ச உரிமைகளைக் கொண்ட பிரித்தானியாவில் பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டு தமிழக அரசியலை இணையத்தளத்திலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ நுனிப்புல் மேய்வதும் அதிலிருந்து ஒரு சுயமுடிவுக்கு வருவதும் எழுத்து நேர்மையாகாது; அறிவு நேர்மையும் ஆகாது. கொடூரமான சாதீயக் கட்டுமானத்தில் சேரிகளிலிருந்து நாங்கள் உருவாகி வந்தோம். புலிகளின் எழுச்சியோடு ஈழ மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம் வேர் விட்ட அதே காலத்தில் நாங்கள் சேரித் தமிழனை ஒருங்கிணைத்தோம். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக கிராமம் கிராமமாக ஈழ மக்களின் துயரங்களைக் கொண்டு சென்றோம். தமிழனுக்காக, தமிழுக்காக, எங்கள் கட்சித் தோழர்கள் பலர் இந்த நாட்களில் தமிழக போலீசால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொடூரமான தடா, பொடா, தேசியப் பாதுகாப்புச் சட்டங்களில் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் வாடியிருக்கிறார்கள். ஆனால் தமிழனுக்காக, தமிழுக்காக நாங்கள் போராடினாலும் தமிழக அரசியல் தளத்தின் பொதுப்பரப்பில் நாங்கள் 100 அடி 200 அடி விலக்கியே வைக்கப்பட்டிருக்கிறோம். இதனை கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் நன்றாகவே அறிந்திருப்பார். 'சிறுத்தைகளின் சதுரங்க அரசியல்' என்று யமுனா ராஜேந்திரன் எதைக் குறிப்பிடுகிறாரோ தெரியவில்லை. நேரடியாக மோதிக் களம் காண்கிற 'கபடி' அரசியல்தான் தலித்துகளுக்குத் தெரியுமே தவிர, 'செஸ்' போன்ற பார்ப்பனிய அரசியல் தெரியாது.
அவர் சதுரங்க அரசியல் என்று சொல்வதால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் என்னால் இங்கே சொல்ல முடியும். கரும்புலி முத்துக்குமார் தீக்குளித்து அது கொந்தளிப்பாக மாறியபோது நாங்கள் திமுக கூட்டணியிலும், மரியாதைக்குரிய வைகோ அதிமுக கூட்டணியிலும், மருத்துவர் இராமதாஸ் திமுக கூட்டணியிலும் இருந்தார். இப்போது நாம் தமிழர் என்ற இயக்கத்தை நடத்தும் திரு. சீமான் அவர்கள் அப்போது எந்த அமைப்பையும் தொடங்கியிருக்கவில்லை; ஒரு திரைப்பட இயக்குநராக மட்டுமே அறியப்பட்டார். இந்த மாதிரியான சூழலில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் அதிமுக, திமுக கூட்டணி தவிர்த்த மூன்றாவது அணி அமைப்போம் என்றார். அதை முக்கிய தலைவர்கள் அனைவரிடமுமே தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் வலியுறுத்தினார். அதிமுக, திமுக தவிர்த்த மூன்றாவது அணி அமைய விரும்பியது விடுதலைச் சிறுத்தைகள்தான். ஆனால் அதைத் தடுத்தவர்கள் யார் என்பதை யமுனா ராஜேந்திரன் எங்கள் கட்சியினரிடம் அல்ல, வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையனின் தம்பி இயக்குநர் புகழேந்தியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும். வைகோ, நெடுமாறன் போன்றோர் அதிமுக ஆதரவு நிலைக்குச் சென்ற நிலையில், நாங்கள் காங்கிரஸ் கட்சி இருக்கும் கூட்டணியில் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஆனால் அன்றைக்கு ஜெயலலிதா என்ன சொன்னார் என்பதெல்லாம் யமுனா ராஜேந்திரனுக்கு நினைவிருக்காது. விடுதலைச் சிறுத்தைகளை எங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்றார் ஜெயலலிதா. நாங்கள் திமுக கூட்டணிக்குச் சென்றோம். தேர்தல் அரசியலில் லாப நட்டங்களைக் கணக்குப் பார்த்து நாங்கள் கூட்டணி வைத்ததில்லை. ஜெயலலிதாவின் தலித் விரோதப் போக்கால் நாங்கள் திமுக கூட்டணியோடு சேர்ந்தோம்.
கரும்புலி முத்துக்குமாரின் வித்துடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது என்ன நடந்தது என்கிற உண்மை தெரியாமல், அல்லது தமிழ்நாட்டுக்கு வந்து கரும்புலி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தாமல் 'கற்றது தமிழ்' ராம் கற்றுக் கொடுத்ததை வைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடாற்றும் பேரியக்கமான விடுதலைச் சிறுத்தைகளை அவது£றாக எழுதுவது சரியல்ல. ராம் கட்டுரைக்கான விரிவான எனது பதிலை ஸ்ணீஸீஸீவீணீக்ஷீணீsu.தீறீஷீரீsஜீஷீt.நீஷீனீ-ல் பார்த்தால் தெரியும். கலைஞரை நம்பியோ ஜெயலலிதாவை நம்பியோ விடுதலைச் சிறுத்தைகளின் பயணம் இல்லை. ஈழ மக்கள் மீதான போருக்கு எதிராக கடந்த திமுக ஆட்சியின்போது மட்டும் எங்கள் கட்சியைச் சார்ந்த 25 பேருக்கும் மேற்பட்ட தொண்டர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்கள். நாங்கள் திராவிடக் கட்சிகளின் தொங்கு சதை அல்ல. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ஏதோ தேர்தலுக்காகத் தொடங்கப்பட்ட இயக்கமுமல்ல. சாதி வெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்ட சேரிச் சாம்பலிலிருந்து பூத்த இயக்கம். தலித் இளைஞர்களின் குருதிச் சேற்றிலிருந்து எழுந்த இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள். தமிழீழத்தில் எப்படி சிங்களர்கள் தமிழர்கள் மீது ஒடுக்குமுறையை, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்களோ அதே போன்ற ஒடுக்குமுறையை வன்முறையை இங்குள்ள தமிழர்கள் சக தமிழர்களான தலித்துகள் மீது கட்டவிழ்த்து விட்டதன் விளைச்சல்தான் விடுதலைச் சிறுத்தைகள். இன்றும் அந்த நிலை சிறிதளவும் மாறவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் வன்கொடுமைகளை - சாதிய ஒடுக்குமுறைகளை ஆண்ட திராவிடக் கட்சிகளும், முற்போக்கு முலாம் பூசிக்கொண்டு அலையும் கம்யூனிசக் கட்சிகள் கண்டும் காணாமல் இருந்ததால் ஏற்பட்ட கோபம்தான் விடுதலைச் சிறுத்தைகள்.
குண்டர் தடுப்புச் சட்டங்கள், தேசிய பாதுகாப்புச் சட்டங்கள் போன்ற அரசின் அடக்குமுறைச் சட்டங்கள் தொடர்ந்து சிறுத்தைகள் மீது ஏவப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளாக தேர்தல் புறக்கணிப்புப் பாதையில் பயணித்த விடுதலைச் சிறுத்தைகள் 1999ஆம் ஆண்டு தேர்தல் களத்திற்கு வந்தது. ஆக, விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் இலாபத்திற்காக தொடங்கப்பட்ட இயக்கமல்ல என்பதை சிறுத்தைகள் கடந்து வந்த பாதையைப் பார்த்தால் தெரியும். ஈழ விடுதலை குறித்து சிறுத்தைகளின் செயல்பாடுகூட இலாபநோக்கோடுதான் என்று யமுனா ராஜேந்திரன் எழுதியிருப்பது 'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற கொள்கை மூச்சோடு செயல்பட்டு வந்த விடுதலைப் புலிகளையே கொச்சைப்படுத்துவதாகும். ஏனென்றால், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அழைப்பை ஏற்று 2002ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து சென்ற ஒரே தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மட்டுமே. விடுதலைப் புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் திருமாவளவன் என்பதால்தான் யுத்தம் நடந்துகொண்டிருந்த 2009ஆம் ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் கடல்வழியே வன்னிக்கு நான் அழைக்கப்பட்டேன். யுத்தக் காட்சிகளைப் படமாக எடுத்து வந்து புதுவை இரத்தினதுரை அவர்களின் பின்னணிக் குரலோடு 'எமக்காகவும் பேசுங்களேன்' என்ற குறுந்தகடாக வெளியிட்டு, ஒட்டுமொத்தத் தமிழகத்திலும் போராட்ட நெருப்பைப் பற்றி எரியச் செய்ய முடிந்தது. உயிர் போனால் போகட்டும்; கொள்கையே முதன்மை என்று வாழ்பவர்கள்தான் விடுதலைச் சிறுத்தைகள்.
விடுதலைப் புலிகளை ஆதரித்தால் 'பொடா' என்று ஜெயலலிதா அம்மையார் எல்லோரையும் கைது செய்து மிரட்டிக் கொண்டிருந்த போதே, தமிழீழத்திற்கே சென்று திரும்பியவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள். அது மட்டுமல்ல 'தொடர்ந்து புலிகளை ஆதரிப்போம்; முடிந்தால் கைது செய்து பார்!' என்று ஜெயலலிதாவுக்கே சவால் விட்டவர்தான் தலைவர் திருமாவளவன் அவர்கள். இலாப நோக்கம் என்பது சிறுத்தைகளின் நிழலைக்கூட அண்டாது. போராட்ட நோக்கம்தான் சிறுத்தைகளின் தாரக மந்திரம். ஆகவேதான் தொடர்ந்து தமிழீழ அங்கீகார மாநாடு, கருத்துரிமை மாநாடு, தமிழர் இறையாண்மை மாநாடு, மரண தண்டனை ஒழிப்பு மாநாடு என்று தமிழர்களை உசுப்பிவிடும் மாநாடுகளை நடத்தினோம். இதில் சதுரங்க அரசியல் எங்கே வந்தது?
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் விடுதலைக்காக தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டங்களை நடத்திய ஒரே இயக்கம் சிறுத்தைகள் மட்டும்தான். யமுனா கண் கொண்டு காண முடியாத அளவுக்கு மறைத்துள்ள திரைகளை விலக்கி விட்டுப் பார்த்தால் மூவரின் மரண தண்டனைக்கு எதிராக சிறுத்தைகளின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்தது தெரியும். சிறுத்தைகளின் போராட்டம் மக்கள் மன்றத்திலும் ஒலித்தது தெரியும். நாடாளுமன்றத்தில் 'பேரறிவாளன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்! மரண தண்டனையை இரத்து செய்!' என்ற முழக்கங்கள் எழுதப்பட்ட பதாகையைத் தூக்கிப்பிடித்து தனியருவராக முழக்கம் எழுப்பியவர் தலைவர் தொல்.திருமாளவன் அவர்கள். பெரும்பலான புகலிட இணையதளங்களைத் தமிழக ஆதிக்க சாதித் தமிழர்கள் கட்டுப்படுத்தும் நிலையில், எங்கள் குரலை, போராட்டத்தை யார் வெளியிட்டார்கள் என்று வெளிப்படையாகவே நான் யமுனா ராஜேந்திரனைக் கேட்கிறேன். மூவரின் தூக்குத் தண்டனை விஷயத்தில் திரு. வைகோ உள்ளிட்ட வழக்கறிஞர்களின் சட்ட முயற்சியால்தான் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதே தவிர, முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பேரவைத் தீர்மானத்தினால் அல்ல என்பது தமிழக அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்குக் கூடத் தெரியும்.
உண்மையிலே ஜெயலலிதாவுக்கு மூவரின் உயிர் மீது அக்கறை இருந்தால், அமைச்சரவையைக் கூட்டி கவர்னருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். அது ஏன் இதை எழுதிக் கொண்டிருக்கிற இன்று தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அரசு விரும்பும் கைதிகளை விடுதலை செய்ய முடியும். மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் கூட குறைக்க முடியும். அவர்களை மன்னித்து விடுதலையே செய்ய முடியும். கலைஞர்தான் செய்யவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா அதைச் செய்யலாமே? ஆனால் தன்னிடம் அதிகாரம் இருந்தும் செய்யாமல் செல்லுபடியாகாத ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு ஏதோ சாதித்து விட்டதைப் போன்று பாவனை செய்கிறார் ஜெயலலிதா. எங்களைப் பொறுத்தவரையில் இந்தத் தீர்மானம் தமிழர்களை ஏமாற்றும் விதமாகப் போடப்பட்டது. அதுவும் குடியரசுத் தலைவர் மறு பரிசீலனை செய்யக் கோரி... இதற்காக நன்றி அறிவிப்பு நடைபயணங்கள், பொதுக் கூட்டங்கள் வேறு. தன்னிடம் அதிகாரமிருந்தும் செய்ய வேண்டியதைச் செய்யாமல், அதிகாரமற்ற ஒன்றை ஜெயலலிதா செய்தது மோசடித்தனமானதுதான். அந்த மோசடியை அங்கீகரித்து விட்டு, அமைச்சரவைத் தீர்மானத்தை வலியுறுத்தாது அதிகாரமற்ற பேரவைத் தீர்மானத்தைப் பாராட்டியே பொழுதைக் கழிப்பது அதை விட மோசடித்தனமானது. அது சரி, இந்த மூவரின் தூக்குத் தண்டனை குறித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? நன்றி அறிவிப்பு நடைபயணம் போனவர்கள் கொஞ்சம் கேட்டுச் சொன்னால் நல்லது. மூவரின் தூக்கிற்கு எதிராக சிறுத்தைகள் போராடிக் கொண்டிருந்தார்கள். தமிழகமெங்கிலும் வழக்கம் போல சட்டக்கல்லூரி மாணவர்கள் காத்திரமான போராட்டங்களை கோவை, சேலம், தஞ்சை, மதுரை, சென்னை, திருச்சி, திருநெல்வேலி என்று நடத்தினார்கள். சென்னையில் கயல், சுஜாதா, வடிவாம்பாள் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். இந்தப் போராட்டங்களுடன் இணைந்தேதான் நீதிமன்றப் போராட்டமும் நடந்தது. ஆனால் போராடிய வழக்கறிஞர்களுக்கு ஆதரவளிக்காமல் போராடாதீர்கள்... போராடி நீங்கள் காரியத்தைக் கெடுத்து விடாதீர்கள்! என்று வழக்கறிஞர்களிடம் சொல்லி போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்கும் சதிவேலையில் இறங்கியவர்கள் யார் என்பதை யமுனா ராஜேந்திரன் கேட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு வென்றவுடன் தங்களால்தான் இது நடந்தது என்று தம்பட்டம் அடித்து பெருமைப்பட்டுக் கொண்டபோது உண்மையிலேயே போராடிய வைகோ அவர்களின் மனநிலையும் ஏனைய தோழர்களின் மனநிலையிலும் என்னபாடு பட்டிருக்கும் என்பதை யமுனா நினைத்துப் பார்க்கட்டும்.
இறுதியாக,
சோனியாவின் தமிழக அதிகாரியாக கலைஞர் செயற்பட்டதாகச் சொல்கிறார் யமுனா, உண்மைதான். ஆனால் அதே அதிகாரியாக செயற்படத் தூபம் போட்டவர்தான் இந்த ஜெயலலிதா. அது எடுபடாமல் போன நிலையில்தான் ஈழத் தமிழர் மீது திடீர் அக்கறை வந்ததுபோல் ஜெயலலிதா நடித்தார். சிறுத்தைகளுக்கு அப்படியல்ல; நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஈழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், எங்கள் சேரி மக்களுக்கும் உண்மையாக இருந்தோம். ஜெயலாலிதாவின் அரவணைப்பில் இருப்பவர்கள் அடக்கி வாசிப்பது போல நாங்கள் எப்போதும் அடக்கி வாசித்ததில்லை. தேர்தல் அரசியலில் நாங்கள் சந்தித்த எல்லா சங்கடங்களையும் மீறி எப்போதும் ஈழ மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். மற்றபடி யமுனா ராஜேந்திரன் தமிழக இயக்கங்களிடையே ஒற்றுமை ஓதியிருக்கிறார். முத்துக்குமார் இறந்த போது வீரத் தியாகியாக கொண்டாடிய அதே சிறுத்தைகள்தான் இருளர் பழங்குடிப் பெண்ணான செங்கொடி இறந்த போதும் களத்தில் நின்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர் திருமாவளவன் அவர்கள் நாங்கள் 100 அடி 200 அடி 1,000 அடி தள்ளி நின்று போராடத் தயார். நாமெல்லாம் இணைந்து போராடுவோம் தனித்த சக்திகளாகச் செயல்படுவோம் என்கிற பொருள்படும்படி பேசினார். இந்தத் துணிச்சலும் பெருந்தன்மையும் தமிழக அரசியல் தலைவர்கள் எவரிடம் இருக்கிறது? முத்துக்குமார் இறப்பின் போது அதிமுக, திமுக தவிர்த்த மூன்றாவது அணி அமைப்போம் என்று தலைவர் திருமாவளவன் சொன்னாரோ அதையேதான் செங்கொடி இறுதி நிகழ்விலும் சொன்னார். இப்போதும் இவர்களுக்குள் அமைதி நிலவுகிறது. நாங்கள் காலம் காலமாகச் சேரிகளில் ஒதுக்குண்டு கிடந்தோம். பொது அரசியலுக்கு வந்து எங்கள் மக்கள் விடுதலைக்காகப் போராடி நாங்களும் தமிழர்கள்தான் எங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்கிறோம். முத்துக்குமார் நிகழ்வில் எங்களை ஒதுக்கியதும். இப்போது எங்களை ஒதுக்க நினைக்கும் மனதையும் யமுனா புரிந்து கொள்வாரா? நாம் தனி அணியாக இணைவோம் என்று நாங்கள் சொன்ன போது எங்களை தனிமைப்படுத்தியவர்கள் எப்படி ஜெயலலிதாவுக்கு ஆதரவாகப் பணி செய்தார்கள்... நாங்கள் தேர்தல் அரசியலில் திமுகவுடன் கூட்டணி கண்டோம். அவர்கள் செய்தால் அது சரி.. அதையே நாங்கள் செய்தால் துரோகம் என்பதன் அர்த்தம் என்ன? அதன் பின்னால் ஒழிந்திருக்கும் மனப்பாங்கை சாதித் தமிழ் மனம் என்று சொல்லலாமா?
மற்றபடி தனிப்பட்ட முறையில் நான் எழுதிய கட்டுரையை இயக்கங்களின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் அபாயம் கொண்டது என்று தடித்தனமாக எழுதுகிறார் யமுனா. இயக்கங்களுக்கிடையே நிலவும் ஒற்றுமை நாமறியாதது... யமுனா அறிந்தது. ஆகவே அந்த விஷயங்களுக்குள் ஓர் அரசியல் கட்சியின் பொறுப்பில் இருப்பவன் என்ற முறையில் நான் செல்ல முடியாது. ஆனால் இன்று தற்காலிகத் தாயாகத் தெரியும் ஜெயலலிதாவின் உண்மை முகம் என்னவென்பதை மரியாதைக்குரிய வைகோ தெரிந்து வைத்திருக்கிறார். நாளை நமது நண்பர்களும் புரிந்து கொள்வார்கள். ஜெயலலிதாவின் சதுரங்க அரசியலுக்குள் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள்தான் சிக்கிக்கொண்டிருக்கிறார்களே தவிர, விடுதலைச் சிறுத்தைகள் அல்ல. நாங்கள் எப்போதும் சுதந்திரத் தமிழீழத்திற்காகவும், தமிழின மீட்சிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவுமே போராடுகிறோம்.
சாதீயம் மறைத்துள்ள திரைகளை உடைத்து கண் திறந்து பாருங்கள். ஏனெனில் உண்மைகளுக்காக உரிமைகளுக்காக நாங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
***
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment