08 October 2014

ஆலம்பாடி மக்களின் அழுகுரல்: தூய்மைவாதமும், சாதியவாதமும் பதில் கூறுமா?

தூய்மை இந்தியா என்கிற பெயரில் இந்தியாவை தூய்மைப்படுத்தப் போவதாக பிரதமர் மோடி அறிவித்தாலும் அறிவித்தார். நடிகர்கள் கமல், சூர்யா, சல்மான்கான் உட்படப் பலர் துடைப்பமும் கையுமாக அலைகிறார்கள். இந்தியாவில் இப்போது ஒரே பிரச்சனை தூய்மை இல்லாததுதான். வறுமை ஒரு பிரச்சனை இல்லை; சாதி ஒரு பிரச்சனையில்லை; அணு உலைகளால் ஏற்படும் பாதிப்புகள் பிரச்சனை இல்லை; பட்டினிச் சாவுகள் ஒரு பிரச்சனை இல்லை; மனிதன் மலத்தை மனிதனே அள்ளும் அவலம்கூட ஒரு பிரச்சனை இல்லை. இப்போதைக்கு மோடிக்கு ஏற்பட்டுள்ள தலையாய பிரச்சனை இந்தியா சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான். 80 விழுக்காடு கிராமங்களைக் கொண்ட இந்தியாவில், எத்தனையோ கிராமங்கள் இன்னும் கழிப்பறைகளைப் பார்த்தில்லை. காடுகளிலும் மலைகளிலும்தான் தங்கள் காலைக் கடன்களைக் கழிக்கிறார்கள். எத்தனையோ கிராமங்களில் இன்னமும் மின்சாரமே நுழையவில்லை. அப்படிப்பட்ட ஒரு கிராமத்திற்குள்தான் நாம் நுழைந்தோம். 


ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியைப் பார்த்து மகிழும் மக்கள் கூட்டம் ஒரு புறம் அலைமோதுகிறது. போகிற வழியெங்கும் டாஸ்மாக் மனிதர்களின் கூட்டம் குடியும் கூத்துமாய் தள்ளாடுகிறது. நீழ்வீழ்ச்சியில் தள்ளாடும் பரிசல்களில் பயணமானோம். தகடூர் தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் ஜூலியஸ், ஜோஸ்வா ஐசக், கருப்பன், சேலம் அர்ஜூனன் ஆகியோரைக் கொண்ட குழுவுடன் ஒகேனக்கலின் அக்கரையில் பரிசலிலிருந்து இறங்கினோம். 

                               
கர்நாடக எல்லைக்குட்பட்ட அந்த கிராமத்தின் பெயர் ஆலம்பாடி. ஒகேனக்கல் பகுதியிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் அக்கிராமத்தை நோக்கி ஷேர் ஆட்டோவில் பயணமானோம். பாதையை மக்களே உருவாக்கியிருக்கிறார்கள். வெறும் பாறைகளும் செம்மண் புழுதியும்தான் வரவேற்றது. அடர்ந்த அந்த காட்டுப் பகுதிக்குள் ஆங்காங்கே ஆடுகளும் மாடுகளும் மேய்ந்துகொண்டிருந்தன. மனிதர்கள் குறைவுதான். பறவைகளின் கீச்சுச் சத்தங்களும் நீர்வீழ்ச்சியின் இசைச் சாரலும் இதமாக இருந்தன. தக்காளிச் செடிகளும், மிளகாய்ச் செடிகளும் காய்களைச் சுமந்துகொண்டே வயல்வெளியைப் பசுமையாக்கிக் கொண்டிருந்தன. புளிய மரங்களும், மூஞ்சை மரங்களும் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தன.

மேடு பள்ளங்களில் முதுகு வலியோடு ஆட்டோவில் பயணமானாலும் இவற்றையெல்லாம் ரசிக்க ரசிக்க வலியெல்லாம் போயே போய்விட்டன.

“இதுதாங்க எங்க ஆலம்பாடி” என்றார் எதிர்ப்பட்ட ஒருவர்.

“என்னங்க இங்க கொஞ்சம் வீடுதான் இருக்கு!” என்று கேட்டபோது,

“இது காலனிக்காரங்க வீடு” என்று சொன்னார்.

விசாரித்த பிறகுதான் தெரிந்தது அவர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்த சோளகர்கள். ஆலம்பாடி கிராமத்தினருக்கும் சோளகர்களுக்கும் எந்த ஒட்டும் இல்லை; உறவும் இல்லை.

ஆலம்பாடி கிராமத்திற்குள் நுழைந்தபோது ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்த 80 வயது பெரியவரைச் சந்தித்தபோதுதான், பல செய்திகளைச் சொன்னார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இதே கிராமத்தில்தான் வசித்து வருகிறார் அந்தப் பெரியவர்.


இப்போதுள்ள பிரச்சனை அந்த கிராமத்திலிருந்து எல்லோரையும் அப்புறப்படுத்த முயற்சிக்கிறது கர்நாடக வனத் துறை. 100 வீடுகளையும் 300 ஆட்களையும் கொண்ட அந்த ஊரில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. பாம்போ, பூச்சியோ கடித்தால்கூட பரிசலில் வந்து பென்னாகரம்தான் போக வேண்டும் அல்லது மேச்சேரி செல்ல வேண்டும். மருத்துவமனை இல்லை. ஒரே ஒரு பள்ளி உண்டு. அதுவும் கன்னடப் பள்ளி. 10 நாட்களுக்கு ஒருமுறைதான் ஆசிரியர் வருவார். இதுதான் கல்வியின் நிலை. அப்படியென்றால் படிக்கின்ற மாணவர்களின் நிலை எப்படி என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இத்தனையிலும் கொடுமை அந்த ஊரில் மின்சாரமே இல்லை என்பதுதான். மொத்த வீடுகளுக்கும் சேர்த்து ஆங்காங்கே மூன்று சோலார் கம்பங்கள்தான் நிற்கின்றன. இதிலிருந்துதான் வருவதுதான் இரவு விளக்கு வெளிச்சம். பெரும்பாலான வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்குகள்தான். இருக்கின்ற மூன்று தெரு விளக்குகள் இரவில் எப்போது வேண்டுமானாலும் அணையலாம். இப்படி போசமான நிலையில் உள்ள அந்த கிராமத்தில் கன்னடர்களும் சிலர் இருக்கிறார்கள். தமிழர்கள் பெருவாரியாக வசிக்கின்ற அக்கிராமத்தில் கன்னடர்களுக்கு மட்டும்தான் வீடு பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தமிழர்களுக்கு இல்லை. கடந்த 5 ஆண்டுகளாகவே ஆலம்பாடியை அப்புறப்படுத்த முயற்சிக்கிறது கர்நாடக அரசு. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் புலிகள் சரணாலயம்தான்.


ஒகேனக்கலுக்கு அப்படியே பின்னால் புலிகள் சரணாலயம் ஒன்றை அமைத்து அதற்கான பணிகளையும் செய்துகொண்டிருக்கிறது கர்நாடக அரசு. இதற்கு இடையூறாக இருக்கும் ஒரே கிராமம் இந்த ஆலம்பாடிதான். அதனால்தான் இக்கிராமத்தினர் யாரும் ஆடு, மாடுகளை வளர்க்கக் கூடாது என்று கர்நாடக அரசு அங்குள்ள மக்களுக்கு நோட்டீசு வழங்கியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அக்கிராமத்தில் உள்ளவர்களை அப்புறப்படுத்தும் பணியையும் தொடங்கிவிட்டதாக அப்பெரியவர் அச்சப்பட ஆரம்பித்தார்.

“தம்பி இந்த மண்ணுலதான் எல்லாத்தையும் பார்த்தேன்... இங்கேயே சாக வேண்டியதுதான். ஆனால், இந்த மண்ண விட்டு எங்கேயும் போக மாட்டோம்” இப்படித்தான் அங்குள்ள அனைவரும் கூறுகிறார்கள்.


கர்நாடக மாநிலம் கொள்ளேகால் மாவட்டத்தைச் சேர்ந்த ஆலம்பாடி கிராமம் இப்போது வரைபடத்திலிருந்து காணாமல் போவதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாய் உள்ளன. போன நாங்கள், “உங்களுக்காகப் போராட விடுதலைச் சிறுத்தைகளும் திராவிடர் கழகமும் (வழக்கறிஞர் ஜூலியஸ் திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்) துணை நிற்போம்” என்று நம்பிக்கை ஊட்டினோம். நல்ல பசி. அங்கிருந்த பெண்களிடம் ஏதேனும் கஞ்சி அல்லது கூழ் இருக்கிறதா என்று கேட்டுப் பார்த்தோம். பாவம் வேலை முடிந்து காடு கழனிகளில் கிடைப்பதைத்தான் அன்றாட உணவாகச் சாப்பிடுகிறார்கள். உணவுக்காக மாலை வரை காத்திருக்கச் சொன்னார்கள்.

கிளம்பும்போது ஒருவர், “தம்பி நாங்க படையாச்சிங்கதான். ஆனா எங்க நிலைமையைப் பாருங்கள்..” என்று கண்ணீரோடு சொன்னார்.


தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சாதி கவுரம் என்று பேசி அந்த கவுரவத்தைக் காப்பாற்ற கலவரங்களையும் கொலைகளையும் செய்யத் தூண்டிவிடும் மருத்துவர் இராமதாசுக்குத் தெரியுமா இப்படி ஒரு வாழ்நிலையில் படையாச்சிகள் இருப்பது? இச்சமூகத்தின் விடுதலைக்கும் சேர்த்துக் குரல் கொடுப்பதுதான் மனிதநேயம். சாதி பார்த்துக் குரல் கொடுப்பது ஏமாற்று வேலையாகும். வன்னியர்களின் விடுதலைக்கும் சேர்த்துத்தான் விடுதலைச் சிறுத்தைகள் களமாடும் என்கிற உறுதியோடு ஆலம்பாடியைவிட்டு வெளியேறினோம்.


நீர் வீழ்ச்சியின் சத்தமும் பரிசல்காரர்களோடு பயணிக்கும் அந்தப் பறவைகளின் இசையும் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பாவம் அக்கரை ஆலம்பாடி மக்களின் அழுகுரல்கள் இந்த நீர்வீழ்ச்சிச் சத்தங்களில் கரைந்து போகின்றன. 

சாதி கவுரவத்தைப் பேசுவோரும் தூய்மையைப் பேசுவோரும் ஆலம்பாடி கிராமம் போன்று ஆயிரக் கணக்கான கிராமங்கள் இந்தியாவைக் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு தூய்மை வாதமும், சாதியவாதமும் பதில் கூறுமா?

0 comments:

Post a Comment