26 October 2014

பா.ம.கவின் தலித்துகளுக்கெதிரான வெறுப்பு பிரச்சாரத்தை முறியடித்த கோவிந்தப்பாடி வன்னிய மக்கள்

எல்லையோர கிராமத்தில் கர்நாடக வனத்துறையால் வன்னிய 
இளைஞர் சுட்டுக் கொலைசிறுத்தைகள் நேரில் அஞ்சலி!
விடுதலைச் சிறுத்தைகளை வரவேற்ற வன்னியப் பெருங்குடிமக்கள்!

கர்நாடக எல்லைப் பகுதி கிராமங்களான செட்டிபட்டி, கோவிந்தப்பாடி, நெட்டைக்காலன் கொட்டாய், கருங்களூர், காரைக்காடு உள்ளிட்ட கிராமங்கள் இப்போது பெரும் சோகத்திலும் பதட்டத்திலும் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றன.  இந்த சோகத்திற்குக் காரணம் கர்நாடக வனத்துறையினர் அப்பாவிகள் மூவர் மீது நடத்திய துப்பாக்கிச் சூடுதான்.  
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்துள்ள கர்நாடக எல்லைப் பகுதியான செட்டிபட்டியைச் சேர்ந்த பழனி, கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா, நெட்டைக்காலன் கொட்டாயைச் சேர்ந்த முத்துச்சாமி ஆகியோர் கடந்த 22-10-2014 அன்று தீபாவளி கொண்டாட்ட உணவுக்காக மீன் பிடிக்க அதிகாலை 5 மணிக்கு அடிப்பாலாற்றின் மேற்குக் கரையில் தூண்டில் போட்டுக்கொண்டிருந்தனர்.  இப்பகுதியின் கிழக்குக் கரை கர்நாடக எல்லைப் பகுதியாகும்.  மேற்குக் கரையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மூவரையும் நோக்கி கர்நாடக வனத்துறையைச் சேர்ந்தவர்கள் எந்த முன்னறிவிப்புமின்றி திடீரெனத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.  பெரும் பதற்றத்துடன் தூண்டில்களையும் மீன்களையும் போட்டுவிட்டு மூன்று பேரும் ஓட ஆரம்பித்தனர்.  இதில்  பல இடங்களில் குண்டுகளால் துளைக்கப்பட்ட ராஜாவும் முத்துச்சாமியும் தப்பித்து விடுகிறார்கள்.  பழனியை மட்டும் வனத்துறையினர் சுற்றி வளைத்து கர்நாடக எல்லைப் பகுதிக்குள் கொண்டு செல்ல முயல்கின்றனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பழனி வனத்துறை காவலர்களோடு போராடுகிறார்.  அப்போது அங்கே வந்த கொல்லேகால் மண்டல வனத்துறை அதிகாரி வாசுதேவமூர்த்தி கடுங்கோபத்துடன் பழனியைத் தாக்க, காவலர்களும் கடுமையாகத் தாக்கி சித்ரவதை செய்தனர்.  பழனியின் கை, கால்களை அடித்து உடைத்ததோடு ஆணுறுப்பையும் வெட்டிப் போடுகிறார்கள்.  காடே பழனியின் கதறலை எதிரொலிக்கிறது.  கொலை வெறி கொண்ட வாசுதேவ மூர்த்தி பழனியின் வேட்டைத் துப்பாக்கியைப் பறித்து நெற்றிக்கு நேராக அருகிலிருந்தபடியே சுட பழனியின் இரண்டு கண்களும் வெளியே தெறிக்க மண்டை இரண்டாகப் பிளக்கிறது. பழனி இறந்த பிறகுதான் வாசுதேவ மூர்த்தியின் கொலை வெறி அடங்குகிறது. இறந்துபோன பழனியின் உடலை பாலாற்றின் மேற்குக் கரையில் தூக்கியெறிந்துவிட்டு வனத்துறை காவலர்கள் தப்பித்து விடுகின்றனர். காயமடைந்த ராஜாவும் முத்துச்சாமியும் நடந்ததை ஊரில் வந்து சொன்ன பிறகுதான் ஊர்க்காரர்கள் தேட ஆரம்பிக்கிறார்கள்.

கர்நாடக வனத் துறையால் கொல்லப்பட்ட பழனியின் உடல்  

வழக்கம்போல தமிழகக் காவல்துறை இதில் அரசியல் செய்ய ஆரம்பிக்கிறது. மிகக் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்ட நிலையில் பழனியின் உடல் மறுநாள் 23ந்தேதிதான் கிடைக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கர்நாடக எல்லைப் பகுதியிலுள்ள வனத்துறை சோதனைச் சாவடியை அடித்துச் சூறையாடினர்.  இதற்கிடையே வாசுதேவ மூர்த்தியைக் கைது செய்ய வலியுறுத்தி பழனியின் உடலை வாங்க மறுத்து சுற்றி உள்ள அனைத்துக் கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் எழுந்த பதற்றத்தைத் தணிக்க தமிழகக் காவல்துறை, பழனி இறந்தது கர்நாடகப் பகுதி என்பதால் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய மைசூருக்குத் திட்டமிட்டு திசை திருப்பி எடுத்துச் செல்கின்றனர்.  அப்பகுதிகளில் இரண்டு நாட்களாக பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.

சோகமே உருவான அக்கிராமத்திற்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் சென்று வரச்சொல்லி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பணித்தார்.  அதன்படி தலைவரின் தனிச்செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், ஜோஸ்வா ஐசக், மேட்டூர் மெய்யழகன், சேலம் அர்ஜுன், கொளத்தூர் தமிழ்மணி உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகளுடன் கோவிந்தப்பாடிக்கு 24-10-2014 அன்று இரவு 7 மணியளவில் சென்றடைந்தோம்.



மேட்டூரிலிருந்து கோவிந்தப்படி செல்லும் வழியெங்கும் காவல்துறையின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  காவலர்கள் துப்பாக்கியும் கையுமாக அலைந்துபொண்டிருந்தனர்.  நாங்கள் போய் இறங்கியதுமே காவல்துறையினர் வழக்கம்போலான தங்கள் சதிவேலையில் இறங்கினர்.  கொளத்தூர் காவல்துறை ஆய்வாளர் மனோகரன், டி.எஸ்.பி. ரவிக்குமார் ஆகியோர் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்டச் செயலாளர் மெய்யழகன், சேலம் அர்ஜுன் ஆகியோரை அழைத்து, "நீங்கள் அஞ்சலி செலுத்துவதை இங்குள்ள மக்கள் விரும்பவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் உள்ளே வந்தால் எதிர்ப்புத் தெரிவிப்போம் என்று ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். ஆகவே நீங்கள் வன்னிஅரசுவையும் தமிழ்ச்செல்வனையும் அழைத்துக்கொண்டு போய்விடுங்கள்" என்று மிரட்டும் தொனியில் சொல்ல, அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.



உடனே நாங்கள் அங்கு போய் டி.எஸ்.பி.யிடம் பேசினோம். "இங்குள்ள வன்னியர்கள் நீங்கள் வருவதை விரும்பலங்கய்யா" என்றார்.  அப்போதுதான் எமக்கே தெரியும் படுகொலை செய்யப்பட்ட பழனி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று.



டி.எஸ்.பி.யிடம் பேசிக் கொண்டிருந்தபோது கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ஒரு தம்பி காவல்துறையினரிடம் "சார்.. நீங்க இங்க அரசியல் பண்ணாதீங்க.  நான் பா.ம.க.வின் ஒன்றியத் துணைச் செயலாளர்தான்.  இவங்க வருவதால எந்தப் பிரச்சனையும் இல்ல.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாதான இவங்க வந்திருக்காங்க" என்று சொன்னதும் வன்னிய இளைஞர்கள் பலர் அந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசினார்கள். கூடுதலாக ஓர் இளைஞர், "அண்ணே நீங்க எங்க வீட்ல வந்து தங்குங்க" என்று கேட்டுக்கொண்டார்.  ஆனாலும் காவல்துறையினர் நம்மை விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர். பழனியின் உடல் மைசூரிலிருந்து வந்துகொண்டிருந்ததால் காவல்துறையினர் மேலும் பதற்றமாகி ஊரில் உள்ள சிலரை எங்களுக்கு எதிராகத் திருப்பிவிட ஆரம்பித்தனர்.  



நாங்களே ஊர்க்காரர்களிடம் பேசுகிறோம் என்று சொல்லிவிட்டு கோவிந்தப்பாடியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலசிங்கம் அவர்களிடம் பேசினோம். "விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் அனுப்பி வைத்துத்தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறோம்" என்று நாம் சொன்னதும் "நீங்க தாராளமா வாங்க. உங்களுக்கு யாரும் இங்க எதிர்ப்புக் காட்டல.." என்று சொல்லிக்கொண்டிருந்த அவர், கொளத்தூர் ஆய்வாளர் அங்கு வந்ததும் "போலீஸ் சொல்றதுபோல நீங்க போயிட்டு காலைல வாங்க" என்று மாற்றிப் பேசினார். இதனை காவல்துறை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி எம்மை அப்புறப்படுத்த முயன்றது.  ஆனாலும் அங்குள்ள ஊர் மக்களின் முன்பாக விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நமது கோரிக்கைகளை உரத்து முழங்கினோம்.

* படுகொலை செய்யப்பட்ட செட்டிபட்டி பழனி குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 25 இலட்சம் இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும்.
குண்டடி பட்டு படுகாயம் அடைந்துள்ள ராஜாவுக்கு ரூ. 10 இலட்சம் இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும்.

* வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் பழனியைப் பிடித்து சித்ரவதை செய்து சுட்டுக் கொன்ற கொல்லேகால் வனத்துறை மண்டல அதிகாரி (ஏ.சி.எஃப்.) வாசுதேவ மூர்த்தி மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். உடனடியாக அவரை பணிநீக்கமும் செய்யவேண்டும்.

* கருங்களூர், செட்டிபட்டி, காரைக்காடு கிராமங்களைச் சேர்ந்த அப்பாவித் தமிழர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

* நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி யானைத் தந்தங்கள் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு பல அப்பாவித் தமிழர்களைத் தேடி வருவதைக் கைவிட வேண்டும்.  அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
* வழக்கைத் திசைதிருப்ப கர்நாடக வனத்துறையுடன் தமிழகக் காவல்துறையும் சேர்ந்து சதி செய்வதை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
* எல்லைப் பகுதியில் தொடரும் பதற்றத்தைப் போக்கி தமிழர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 30-10-21014 அன்று ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

* படுகொலை செய்யப்பட்ட பழனி குடும்பத்தினரை விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி வழங்க 30-10-2014 அன்று வருகிறார். 



இப்படி அறிவித்ததுமே இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். 30-10-2014 அன்று ஈரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் என்று சொன்னதுமே விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தை இங்கேயே நடத்துங்கள் என்று இளைஞர் ஒருவர் உற்சாகமாக முழக்கமிட்டார்.

அங்கிருந்த ஒட்டுமொத்த வன்னியர்களும் விடுதலைச் சிறுத்தைகளின் இத்தகைய நடவடிக்கையினை வரவேற்றனர்.  ஓரிருவரை காவல்துறையினர் தூண்டிவிட்டாலும் யாரும் அதனைப் பொருட்படுத்தவில்லை. காவல்துறையினரின் கெடுபிடிகளை மீறி நாம் இருந்தாலும் இருதரப்பினருக்கும் இடையே காவல்துறையினரே பிரச்சனையைத் தூண்டிவிடுவார்கள் என்கிற அய்யம் நமக்கு ஏற்பட்டதால் அங்கேயே பழனிக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு கோவிந்தப்பாடியைவிட்டு வெளியேறினோம்.  பழனியின் உடல் 25-10-2014 அன்று இரவு சுமார் 11 மணியளவில் கோவிந்தப்பாடியை வந்து சேர்ந்தது.  காவல்துறை, மக்களை அச்சுறுத்தி இரவோடு இரவாக பழனியின் உடலைப் புதைக்கச் செய்தாலும் மக்களிடையே எழுந்துள்ள எழுச்சியை அவர்களால் புதைக்க முடியாது.
விடுதலைச் சிறுத்தைகள் அப்பகுதிக்குள் வந்ததை வன்னியப் பெருங்குடி மக்கள் வரவேற்றது யாருமே எதிர்பாராததுதான். கடந்த காலங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கெதிராக, தலித்துகளுக்கெதிராக சிலர் பரப்பிய வெறுப்புப் பிரச்சாரம் எடுபடவில்லை என்பதை கோவிந்தப்பாடி வன்னிய மக்கள் நிரூபித்துள்ளனர்.  

வன்னியர்களுக்கெதிரான அரச ஒடுக்குமுறை அடக்குமுறையை களத்தில் நின்று எதிர்த்த ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் என்பதை அம்மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.

பா.ம.க. தலைவர் கோ.க.மணியின் சொந்த ஊரான கோவிந்தப்பாடியிலேயே இந்த மாற்றம் என்றால் தமிழகத்தின் மற்ற இடங்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.  விரைவில் அந்த மாற்றம் வந்தே தீரும்.  

"தமிழர்களுக்கு எங்கே பாதிப்பு ஏற்பாட்டாலும் சிறுத்தைகள் அங்கே களமாடுவார்கள்!" என்று போராளித் தலைவர் தொல்.திருமாவளவன் சொன்னதற்கிணங்க சிறுத்தைகள் களமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வரலாற்றுப் பதிவாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல் பகுதியில் கர்நாடக வனத் துறையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களைக் குறித்தான என்னுடைய முந்தைய பதிவை இங்கு படிக்கலாம்: ஆலம்பாடி மக்களின் அழுகுரல்: தூய்மைவாதமும், சாதியவாதமும் பதில் கூறுமா?

0 comments:

Post a Comment