18 November 2012

பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்பு வாதமும்

அந்த அண்ணா நகர் காலனிப் பகுதியில் காடுகளுக்கு வேலைக்குப் போனவர்கள் அப்போதுதான் திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு உணவுக்காகச் சிலர் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். வயதானவர்கள் வருகிற தீபாவளிக்கு என்ன செய்யலாம் என்று வீடுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அண்ணாநகர் நுழைவாயிலில் உள்ள ஜோசப் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. வீடு திடுமெனத் தீப்பிடித்து எரிகிறது. ஆடு, மாடுகள் சிதறி ஓடுகின்றன. பெண்டு பிள்ளைகளின் கதறல் அந்தப் பகுதியையே நிலைகுலைய வைக்கிறது. "ஒரு பய இருக்கக் கூடாது. ஓடுங்கடி..." என்கிற மிரட்டல் சத்தம் ஒவ்வொரு வீட்டையும் தாக்கும்போது ஓங்காரமாய் ஒலிக்கிறது.

அந்தத் தெருவின் கடைசி வீடு நிறைமாத கர்ப்பிணியாகவுள்ள புவனாவின் வீடு. அப்பா திருப்பூரில் வேலைபார்த்து வருகிறார். அம்மாவோ பக்கத்தில் உள்ள கடலைக் காட்டில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார். தாக்குதலிலிருந்து தப்பிக்க சோளக் கொல்லைக்குள் ஒளிந்து கொள்கிறார் புவனா. அவரது வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், தவணை முறையில் வாங்கி வைத்திருந்த புதிய டிவிடி பிளேயர், டிவியை உடைத்துப் போட்டுவிட்டு பாத்திரங்களையும் சிதைத்துவிட்டுச் செல்கிறார்கள்.
புவனா 7 மணி வரை காட்டுக்குள் தனியாக நடந்தே போகிறார். அருகில் உள்ள கிராமத்தில் அடைக்கலம் கேட்கிறார். அவர்களோ, "அடைக்கலம் கொடுத்தா எங்களையும் அடிப்பாங்க... போ போ" என்று விரட்டுகின்றனர். வேறு வழியில்லாமல் அந்த நிறைமாத கர்ப்பிணி 10 கிலோ மீட்டர் தூரம் தனியாக நடந்தே சென்று பேருந்துகள் செல்லும் சாலையை அடைகிறார். போகிற வாகனங்களை வழிமறித்து 'லிப்ட்' கேட்டும்கூட அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை.
ஒரு வழியாக இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் அண்ணா நகர் சேரிக்குள் புவனா நுழையும்போது அப்பகுதியே ஒப்பாரியும் ஓலமுமாய் இருந்தது. 60 வீடுகளும் தாக்கப்பட்டிருந்தன. தாக்குதல் என்றால் சாதாரணத் தாக்குதல் இல்லை. பெட்ரோல் குண்டுகளால் சின்னாபின்னமாக்கியிருந்தனர். வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், அரசு கொடுத்த இலவச மிதிவண்டிகள், பீரோக்கள், கட்டில்கள் என்று வீடுகளிலிருந்த அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டன. துணிமணிகள் எரிந்துகொண்டிருந்தன. மாற்றுத் துணியில்லை. அண்ணாநகர் பகுதி மட்டுமல்ல கொண்டம்பட்டி சேரியும் இப்படித்தான் சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தது. கொண்டம்பட்டி பழைய காலனியும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை.
வன்முறைக் கும்பலின் தாக்குதலில் நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனிதான் மிகப் பெரிய தாக்குதலுக்குள்ளான பகுதி. இந்தக் காலனிக்குள் நுழையும்போதே எரிந்த வீடுகளின் சாம்பல் நெடிதான் வரவேற்றது. விவசாயிகளின் பழமைவாய்ந்த மாட்டு வண்டி ஒன்று தொழுவத்தோடு எரிக்கப்பட்டிருந்தது. இன்னமும் அந்த மாட்டு வண்டி நெருப்பில் தகித்துக் கொண்டுதான் இருந்தது. பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே இருந்த பட்டுப் புடவைகள், நகைகள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. சமையல் அறையிலிருந்த கேஸ் சிலிண்டரைத் திறந்துவிட்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடுகின்றனர். மிக நிதானமாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்தபின் பெட்ரோல் குண்டுகளை வீசி வீடுகளைச் சேதப்படுத்திவிட்டு ஓடுகின்றனர். வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் எலும்புக் கூடுகளைப் போல நின்று கொண்டிருந்தன. வீடுகளின் கட்டிடங்கள் மேற்கூரை மட்டுமல்ல சுவர்கள்கூட தரைமட்டமாயிருந்தன. மாற்றுத் துணிக்குக்கூட வழியில்லாமல் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. வெந்து தணிந்தது அந்தச் சேரி. வன்முறைக் கும்பல் மிகப் பொறுமையாக வந்த வேலையை முடித்துவிட்டுப் பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்தனர்.
இது ஏதோ ஈழத்தமிழர்கள் குடியிருக்கும் பகுதியில் சிங்களவர்கள் நடத்திய தாக்குதல் அல்ல. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட தமிழர்களான பறையர்கள் மீது இன்னொரு தமிழர்களான வன்னியர்கள் நடத்திய தாக்குதல்தான்.
இத்தனை வன்முறை வெறியாட்டத்திற்கான காரணமாகச் சொல்லப்படுவது ஒரு காதல் திருமணத்தைத்தான்.
dharmapuri_naththam_village_370தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனி. நல்ல விவசாய பூமிதான். சோளமும் கம்பும் பருத்தியும் விளைகிற பூமி. இந்த நத்தம் காலனியில் உள்ள பறையர்களுக்குச் சொந்தமாக விவசாய நிலம் இல்லையென்றாலும் திருப்பூர், பெங்களூர், கோவை பகுதிகளுக்குச் சென்று வேலை பார்த்து வருவதால் அங்குள்ள வன்னியர்களை நம்பி வாழ்வதில்லை. அதுமட்டுமல்ல கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நத்தம் காலனியைச் சுற்றியுள்ள சேரிகளுக்கெல்லாம் நத்தம் காலனிதான் பாதுகாப்பு. அதற்குக் காரணம் நக்சலைட்டுகள். இங்குதான் அப்பு, பாலன் போன்ற நக்சலைட்டுகள் தங்கி பணிசெய்தனர். அரச பயங்கரவாதத்திற்கெதிராகப் புரட்சி செய்யக் கிளம்பியவர்களுக்கு அடைக்கலம் தந்தது இந்த நத்தம் காலனிதான். அதனால்தான் அப்பு, பாலன் ஆகியோருக்கு ஊரின் நுழைவாயிலில் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழக உளவுத்துறையின் தீவிரக் கண்காணிப்புக்குள்ளான சேரி மட்டுமல்ல 'பொடா' கைதிகள் அதிகம் உள்ள சேரியும், அரசியல் வழக்குகள் அதிகம் உள்ள சேரியும் நத்தம் காலனிதான்.
அப்படிப்பட்ட காலனியைச் சார்ந்தவர் இளங்கோ. தருமபுரி அரசு மருத்துவமனையில் சமையல்காரராக வேலைபார்த்து வருகிறார். பாலாஜி, இளவசரன் என்கிற இரு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்தார். பக்கத்து ஊரான செல்லன்கொட்டாயைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் தமது மகள் திவ்யா, மகன் மணிசேகரனுடன் வசித்து வந்தார்.
திவ்யா வெளியூரில் இளநிலை செவிலியர் பட்டப் படிப்பு படித்து வந்தார். இளவரசன் வெளியூரில் பிஎஸ்சி படித்து வந்தார். பேருந்துகளில் போகும்போதும் வரும்போதும் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாகி, கடந்த அக்டோபர் 14 அன்று வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். மறுநாள் அக்டோபர் 15ஆம் தேதி சேலம் சரக டி.ஐ.ஜி. சஞ்சய்குமாரிடம் தஞ்சமடைந்து பாதுகாப்புக் கேட்கின்றனர்.
அது வரை பதுங்கியிருந்த சாதிவெறி அப்போதுதான் தலையைத் தூக்கியது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் மதியழகன். அக்கட்சியின் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். வெள்ளாய்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராஜா, ஆண்டியல்லி பஞ்சாயத்துத் தலைவர் சின்னச்சாமி, பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணசாமி மற்றும் பாமகவைச் சேர்ந்த பச்சையப்பன், மெடிக்கல் சிவா உள்ளிட்டோர் ஊர்க்கூட்டம் போடுகின்றனர். இக்கூட்டத்தில் புளியம்பட்டி, கோனயம்பட்டி, சவுலுப்பட்டி, செல்லங்கொட்டாய், வாணியம்படியான் கொட்டாய், புதூர், ரக்கிரியான் கொட்டாய், கதிர் நாயக்கன் நல்லி, குப்பூர், செங்கல்மேடு, சவுக்குத்தோப்பு, மத்தன் கொட்டாய், மூலக்காடு, கொல்லப்பட்டி, கொட்டாவூர், குட்டூர், கீழாண்டி அல்லி, மேலாண்டி அல்லி, வன்னியம்பட்டி, சீராம்பட்டி, லலிதாவூர், லாலாக்கொட்டாய், ஒட்டையான்கொட்டாய், காமராஜ் நகர், தாளிக்காரன் கொட்டாய், நாயக்கன்கொட்டாய், சவுலுக்கொட்டாய், வெள்ளாள்பட்டி உள்ளிட்ட 36 ஊர்களைச் சேர்ந்த வன்னியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சரவணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் இந்த ஒருங்கிணைப்பில் பின்னணியாகச் செயல்பட்டனர்.
ஊர்க்கூட்ட்டத்தின் முடிவில் தமது சாதிப் பெண்ணான திவ்யா வன்னியர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் போடுகின்றனர். இதனடிப்படையில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி நத்தம் காலனியைச் சார்ந்தவர்களை வரவழைத்து பஞ்சாயத்து நடத்துகின்றனர் வன்னியர்கள். பஞ்சாயத்தில், "வருகின்ற 7ஆம் தேதிக்குள் திவ்யாவை ஒப்படைக்காவிட்டால் பறப் பசங்க யாரும் உயிரோடவே இருக்க முடியாது" என்று பகிரங்கமாக மிரட்டப்படுகின்றனர்.
இந்நிலையில் திவ்யாவின் தந்தை நாகராஜ் நவம்பர் 7ஆம் தேதி மாலை 3 மணியளவில் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, மாலை 4 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர் வன்னியர்கள். பா.ம.க. பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் இந்தச் சாலை மறியல் நடைபெறுகிறது. 4.30 மணிக்கெல்லாம் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி, கொண்டம்பட்டி பழைய காலனி ஆகிய பகுதிகளில் நுழைந்து தீக்கிரையாக்குகின்றனர்.
தருமபுரியிலிருந்து பிரதான சாலையான செங்கல்மேட்டிலிருந்த மரங்களை அறுத்துப் போடுகின்றனர்.
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக வன்னிய சாதிவெறிக்கும்பல் அவசரமில்லாமல் பதற்றமில்லாமல் காவல்துறை வந்துவிடுவார்களோ என்ற பயமில்லாமல் பொறுமையாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை பல சேரிகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன, தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. சங்கராபுரம், குண்டுபட்டி, மருக்காளம்பட்டி, கொடியன்குளம், மீனாட்சிபுரம், அருப்புக்கோட்டை சத்தியவாணி முத்து நகர்... இப்படிப்பட்ட சேரிகளை சாதிவெறியர்கள் தாக்கிவிட்டு, வீடுகளுக்குத் தீ வைத்துவிட்டு ஓடியுள்ளனர். ஆனால் நத்தம் காலனி தாக்குதல் என்பது தமிழகத்திலேயே இதுவரை நடந்திராத கொடூரமான தாக்குதலாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னிய சாதிவெறியர்கள் சேரிக்குள் நுழைகிறார்கள். இதில் பெண்கள் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். முதலில் வீட்டுக்குள் உள்ள பீரோக்களை உடைப்பது அதில் உள்ள பணம், நகைகள், பட்டுப்புடவைகளைக் கொள்ளையடிப்பது. அதற்குப் பிறகுதான் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். வீட்டின் முற்றத்தில் உள்ள கார்கள், பைக்குகளைத் தீக்கிரையாக்கிவிட்டு விலை உயர்ந்த டி.வி., பிரிட்ஜ், லேப்-டாப், டிவிடி பிளேயர் போன்றவற்றையும் கொள்ளையடித்துள்ளனர். ஒரு சில வீடுகளில் இவைகளை உடைத்தும் போட்டுள்ளனர். அதாவது தூக்கிச் செலல முடிந்தவற்றைத் தூக்கிச் சென்றுள்ளனர். முடியாதவற்றை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். இதன் உச்சகட்டமாக நத்தம் காலனிக்காரர்கள் வணங்கும் கொடகாரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.













ஒவ்வொரு வீட்டைத் தாக்கும்போதும் "பறத் தேவடியா மகனுகளுக்கு வந்த வாழ்வப் பாருடா. வசதியப் பாருடா. இவனுங்களுக்கு இதெல்லாம் ஒரு கேடா..." என்று சொல்லிக்கொண்டே தாக்கியுள்ளளர்.
பறையர் வகுப்பைச் சேர்ந்த இளவரசன், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யா போன்ற காதல் திருமணங்கள் இப்பகுதியில் முதல் முறையன்று. அப்பகுதியில் இதுபோன்ற சாதி கடந்த காதல் திருமணங்கள் நிறைய நடந்துள்ளன. ஆனால் இத்தகைய கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பின்னணி இந்தக் காதல் திருமணம் மட்டுமல்ல.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரச பயங்கரவாதத்திற்கெதிராக எழுந்த நக்சல்களின் பாதுகாப்பு அரண் நாயக்கன் கொட்டாய் காலனிதான். பறையர்கள் மட்டுமல்லாமல் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இக்கிராமத்திற்கு வந்து செல்வார்கள். இந்த நத்தம் காலனிக்காரர்களே பல திருமணங்களை முன்னின்று நடத்தியுள்ளனர். அது மட்டுமல்ல சுற்றியுள்ள தலித்துகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் எந்தப் பிரச்சனை என்றாலும் நத்தம் காலனி மக்கள்தான் களத்தில் நிற்பார்கள். அந்த வகையில் உழைக்கும் மக்களுக்கான பாதுகாப்பு அரண் நத்தம் காலனிதான். ஆதிக்கச் சாதி வன்னியர்களைச் சார்ந்து வாழாமல் தனித்து சுயமாய் உழைத்து வாழ்ந்து வந்த நாயக்கன்கொட்டாய் பகுதி சேரி மக்கள் மீது வன்னியர்கள் மட்டுமல்ல, அப்பகுதி காவல்துறையும் வெறுப்புணர்வைக் கக்கியது. நாள் பார்த்தது. அந்த நாள்தான் நவம்பர் 7ஆம் நாள். நெடு நாட்கள் பசியை - வெறியை - உளவுத்துறையின் உதவியுடன் வன்னிய சாதி வெறியர்கள் தணித்துக் கொண்டனர்.
thirumavalavan_dharmapuri_641
உளவுத் துறைக்குத் தெரியாமல் ஒரு சேரி மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட முடியாது. மரங்களை வெட்டிப்போட்டு போக்குவரத்தைத் தடுத்துள்ளனர். பெட்ரோல் குண்டுகளை உருவாக்க பெட்ரோல் வாங்கியுள்ளனர். 36 கிராமங்களில் உள்ள வன்னியர்களை ஊர் ஊராய் போய்த் திரட்டியுள்ளனர். நக்சல்கள் பயிற்சியில் ஈடுபட்ட நாயக்கன் கொட்டாய் உளவுத்துறையின் முழு கண்காணிப்புக்குள்ளான பகுதி என்பதால் உளவுத்துறை போலீஸ் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


உளவுத் துறையின் நோக்கம் மீண்டும் நக்சல்கள் இங்கு வந்து போவதைத் தடுப்பது. சாதிவெறியர்களின் நோக்கம் பொருளியல்ரீதியாக சேரி மக்கள் தலைநிமிர்ந்து நிற்பதைச் சிதைப்பது. ஒரே காதல் பிரச்சனையில் இரண்டு பிரச்சனையைத் தீர்த்துக்கொண்டனர் உளவுத்துறையினர். உயிர்ச் சேதமில்லாமல் கொள்ளையடித்து வீடுகளை சின்னாபின்னப்படுத்தியதன் மூலம் மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பின்னால் நகர்த்தியிருக்கிறது இத்தாக்குதல். ஒவ்வொரு வீட்டிலும் 5 பவுன், 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ரூ. 5000 முதல் 5 லட்சம் வரை திருடப்பட்டிருக்கின்றன. இதுவரை 120க்கும் மேற்பட்ட வன்னியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் யாரிடமும் இன்னமும் நகைகளையோ பணத்தையோ கைப்பற்றியதாகத் தகவல் இல்லை. தங்குவதற்கு வீடு இல்லை. மாற்றிக்கொள்ள உடையில்லை. வாசலில் அகதிகளைப்போல கண்ணீரும் கம்பலையுமாய் உடகார்ந்திருக்கிறார்கள். முந்தைய தலைமுறைக்குப் பின்னால் பொருளாதாரரீதியாக எழுந்த இந்த தலைமுறை அடுத்த தலைமுறையில்தான் எழுந்து நிற்கும் என்கிற அளவில் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் பெருவிழாவில் பேசிய காடுவெட்டி குரு, "கலப்புத் திருமணங்கள் செய்பவர்களை உயிரோடு விடக்கூடாது" என்று பகிரங்கமாகப் பேசியதை மருத்துவர் ராமதாஸ் அவர்களும் ரசித்தார்.

சாதிவெறியோடு தமது சமுதாயத்தைத் திருடர்களாக, கொள்ளையர்களாக மாற்றிய மகத்தான சாதனையைச் செய்துவரும் மருத்துவர் ராமதாஸ் இனிமேல் தமிழ்ச் சமூகம் என்றோ தமிழ்த் தேசியம் என்றோ பேச அருகதை உண்டா? நடந்த சம்பவத்திற்கு பா.ம.க. பொறுப்பேற்று வெளிப்படையாக மன்னிப்புக் கேட்குமா?
பா.ம.க. வன்னியர்கள் மட்டுமல்லாமல், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மகஇக என கட்சி பேதம் இல்லாமல் ஒட்டுமொத்த வன்னியர்களும் இத்தாக்குதலில் கலந்துகொண்டு முதலில் சாதி, அப்புறம்தான் கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளனர்.
சேரி மக்களின் விடுதலைக்கு ஆயுதம்தாங்கிய புரட்சிதான் ஒரே வழி என்று முழக்கமிட்ட புரட்சிகரக் குழுக்களுக்குப் பதுங்குமிடமே சேரிகள்தான். இன்றைக்கு 'புரட்சி' செய்யப் புறப்பட்ட அந்த நக்சல்பாரிகள், அப்பாதையிலிருந்து விலகி தாங்கள் சார்ந்த சாதி அரசியல் கட்சிகளிலும், கட்டப்பஞ்சாயத்துகளுக்காக தனியே இயக்கங்களும் நடத்தி பிழைக்கப் போய்விட்டார்கள். பாவம் சேரிமக்கள். புரட்சிகரக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இந்தத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். 'புரட்சிக்காரர்களோ' பாதுகாப்பாகவும் வசதியாகவும் சாதி அரசியலில் வலம் வருகின்றனர். அரச பயங்கரவாதத்தை ஒழிக்க வந்தவர்கள் சாதி பயங்கரவாதிகளாக இன்று மாறிப்போனார்கள்.

இன்று நாயக்கன்கொட்டாய் முகப்பில் தோழர்கள் அப்புவும் பாலாவும் மட்டுமே உடைபடாமல் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்குச் சிலை வைத்த மக்களோ வீடின்றி வாசலின்றித் தவிக்கின்றனர்.

தமிழ்த்தேசியம் பேசுகின்ற எந்தத் தமிழ்த் தேசியவாதிக்கும் சேரி மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட மனமில்லை. வெளிப்படையாக வன்னியர்களைத் தூண்டிவிடும் காடுவெட்டி குருவையும், அந்த குருவைத் தூண்டிவிடும் ராமதாசையும் கண்டிக்க எந்தத் தமிழ்த் தேசியவாதிக்கும் துணிச்சல் இல்லை என்பதைத்தான் இந்தத் தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.
புரட்சிகரக் குழுக்களின் பிழைப்புவாதமும் பாமகவின் சாதிவெறியுமே நத்தம் காலனியைச் சிதைத்துள்ளது. 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதாக அறிவித்தனர். 36க்கும் மேற்பட்ட ஊரார் சேர்ந்து நத்தம் காலனி மீது தாக்குதல் நடத்தி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.
ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் கொதிப்பும் தோல்வியடைந்ததாக வரலாறு இல்லை.
சேரிப்புயல் ஒரு நாள் வரம்பு மீறும் - அன்று
வரலாறு மாறும் அப்போது, ஒப்பாரியும் ஓலமும் சேரிக்கு மட்டுமே சொந்தமாக இருக்காது.
- வன்னி அரசு, மாநிலச் செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

0 comments:

Post a Comment