28 November 2012

ம.க.இ.க. ‘புரட்சி’யாளர்களே - இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புகிறது?

''டே ஆறுமுகம் அப்படியே டெரரா மூஞ்சிய வச்சுக்க. அப்பதான் இவனுகள்ளாம் பயப்படுவானுங்க. கண்ண உருட்டி இன்னும் விறைப்பா மூஞ்சிய வைடா'' வெடிகுண்டு முருகேசன
் திரைப்படத
்தில் நடிகர் வடிவேலுவிடம் காமெடி செய்வார் கதாநாயகன் பசுபதி. அதுபோல காமெடி செய்கிறார்கள் நக்சல்பாரிகள் என்று தங்களுக்குத் தாங்களே பிதற்றிக் கொள்ளும் ம.க.இ.க. குழுவினர். 'டெரரா' எப்படி மூஞ்சிய வடிவேலு காட்டுகிறாரோ அதைப் போல புரட்சி, நக்சல்பாரி என்று மூஞ்சியக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ம.க.இ.க. கும்பல்.

நக்சல்பாரி புரட்சியாளர்கள் என்று குறுந்தகட்டிலே பேசுவது, சுவர்களில் எழுதித் தள்ளுவது, புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களில் விளம்பரங்கள் செய்ததைத் தவிர வேறு எங்கு புரட்சியை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நிலவுடைமையாளர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி உழைக்கும் தலித் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் நிலங்களை ஒப்படைத்து அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்து வருவதாக ஆந்திர நக்சல்பாரிகள் பற்றி அறிய முடிகிறது. இதே போல் பீகார், சட்டீஸ்கர், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் மாவோயிஸ்ட்டுகள் ஆதிகுடிகளுக்கு, அதாவது அந்த மண்ணின் மைந்தர்களுக்காகப் படை கட்டி ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் வர்க்கமான தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களும் அந்த நக்சல்பாரிப் போராளிகளோடு ஆயுதம் ஏந்தி களத்தில் நிற்பதைத் தொடர்ந்து கவனிக்க முடிகிறது. அரச பயங்கரவாதத்திற்கு எதிராகக் களமாடும் அப்போராளிகளுக்கு வழக்குகளும், சிறைகளுமே பரிசாகக் கிடைக்கின்றன. உச்சக்கட்டமாக மரணங்களையும் தின்று செரிக்கிறார்கள்.

பீகாரில் மாட்டுத் தோலை உரித்ததற்காக 4 தலித்துகளை தோலை உரித்துக் கொன்றனர் இந்துத்துவ நிலவுடமைப் பண்ணையாளர்கள். இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் இருவர் 6 மாதங்களுக்குப் பிறகு கொல்லப்படுகின்றனர்.

இப்படி புரட்சிகரக் குழுக்கள் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் களமாடுவதை நினைக்கையில் அப்போராளிகள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. பெருமையாகவும் அதே நேரத்தில் தலைநிமிர்வையும் உருவாக்குகிறது.

தமிழகத்தில் 1957ஆம் ஆண்டில் மாவீரன் இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டதிலிருந்து தருமபுரி நத்தம் சேரியைக் கொள்ளையடித்து தீக்கிரையாக்கிய சம்பவம் வரை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

குறிஞ்சான்குளத்தில் நாயுடு சாதி வெறியர்களால் அன்பு, சுப்பையா உள்ளிட்ட 4 தலித்துகள் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் தலித்துகளின் குலதெய்வமான காந்தாரி அம்மன் சிலை நிறுவ முயற்சி செய்ததுதான். இதே போல மேலூர் - சென்னகரம்பட்டியில் கோவில் சொத்துக்களில் ஏலம் கேட்டதற்காக அம்மாசி, வேலு என்கிற இரு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலவளவில் தேர்தலில் பங்கெடுத்ததற்காக முருகேசன், பூபதி, மூக்கன் ராஜா உள்ளிட்ட 7 தலித்துகள் பேருந்தில் பயணிக்கும்போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் புளியங்குடியில் கள்ளச்சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட காந்தி, வெள்ளையன், மதியழகன் ஆகிய மூன்று தலித்துகள் தூங்கும் போது கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இப்படி தலித்துகள் மீதான படுகொலைகள் ஏராளம்.

1995ஆம் ஆண்டு கொடியங்குளமாகட்டும், 1998ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டுப்பட்டியாகட்டும், ஒகலூர் சேரியாகட்டும், கடலூர் - புலியூர் சேரியாகட்டும், 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற சங்கரலிங்காபுரம் சேரியாகட்டும், கோவை காளப்பட்டி சேரியாகட்டும், பரணி புதுச்சேரியாகட்டும் அனைத்துச் சேரிகளுமே நத்தம் சேரியைப் போலவே சாதி வெறியர்களால் சூறையாடப்பட்டன. வழக்கம்போல் பின்னணியில் காவல்துறை இருந்துதான் இவ்வளவும் நடைபெற்றன. அரச வன்முறையும் சாதிய வன்முறையும் சேர்ந்துதான் தலித்துகளுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. நக்சல்பாரி புரட்சியாளர்கள் என்று சொல்லித் திரியும் ம.க.இ.க.வினர் தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய வன்முறைகளுக்கெதிராக பீகார், ஆந்திரா போராளிகள் போல களமாட முடிந்ததா? கண்டித்து சுவரொட்டி ஒட்டுவது என்பது இவர்கள் சொல்வது போலவே சாதாரண ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் செய்கிற வேலைதான்.

அதே வேலையைச் செய்யும் ம.க.இ.க. ‘புரட்சி’யாளர்களை என்னவென்று அழைப்பது? இவர்கள் என்ன புரட்சியைச் செய்து விட்டார்கள்? வழிகாட்டும் பீகார், ஆந்திரத்தைப் போல தமிழகத்தில் ஒரே ஒரு புரட்சியை நடத்திக் காட்டியிருக்கிறார்களா? பிறகு எப்படி இவர்கள் மீது நம்பிக்கை வரும்? குறைந்தபட்சம் மதிப்பாவது வர வேண்டுமே. மாறாக வெறுப்புதான் வருகிறது. போஸ்டர் ஒட்டுவது அல்லது ரயில் நிலையங்களில், பேருந்து நிலையங்களில் புதிய கலாச்சாரம் புத்தகங்களைக் கூவிக்கூவி விற்பதுதான் புரட்சி என்று அப்பாவி இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் போல.

தமிழகத்தில் ம.க.இ.க. அமைப்போ அல்லது புரட்சிகர அமைப்புகள் என்று சொல்லிக் கொள்ளும் அமைப்புகளோ ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக, நம்பிக்கையை ஊட்டும்விதமாகக் களத்தில் நின்றிருந்தால் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் தோன்றியிருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது.

எத்தனையோ தத்துவங்களும் புரட்சியாளர்களும் தோன்றிய பிறகும் தருமபுரி போன்ற வெறியாட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றால், அதற்காக இந்த புரட்சிகரக் குழுக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டுமே தவிர, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் இயக்கத்தை பிழைப்புவாதக் கட்சி என்றும், ஓட்டுப் பொறுக்கிக் கட்சி என்றும் சொல்வது அறிவுடைமையாகாது.

இவ்வளவு காலம் ஓட்டுப் போடவும், போஸ்டர் ஒட்டவும் பயன்படுத்தப்பட்ட பெரும் மக்கள் திரளை அமைப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

அரசியல் அதிகாரத்தின் பக்கமே தீண்டப்படாத மக்களாக விரட்டியடிக்கப்பட்ட இந்த மண்ணின் மைந்தர்களை ''அதிகாரமும் ஒரு சொத்துதான். அந்த சொத்தில் நமக்குரிய பங்கைக் கைப்பற்ற வேண்டும்'' என்று முழங்குகிற தலைவர் திருமாவளவன் அவர்களின் இந்த முழக்கத்தால் ஆதிக்கக் கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுவது நியாயம். ஓட்டுப் பொறுக்காத புரட்சிகரக் குழுக்களுக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது?

ஆயுதம் ஏந்தி போராடி தமக்கான அதிகாரத்தை வென்றெடுப்பது அல்லது சனநாயகரீதியாக தமக்கான அதிகாரத்தை வென்றெடுப்பது - இந்த இரு வழிகள்தான் உழைக்கும் மக்களுக்கான விடுதலை வழிமுறைகள்.

தமிழகத்தில் ஆயுதம் ஏந்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை பெருமளவில் வென்றெடுத்தது போலவும், விடுதலைச் சிறுத்தைகள் அதனைத் தடுப்பதுபோலவும் பொய்யான பிம்பத்தை உருவாக்கி, விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகத் திட்டமிட்டே பரப்புரை செய்து வருகிறார்கள்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் புறக்கணிப்பில் களமாடிய இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள். முதலில் உதிரியான, சிதறடிக்கப்பட்ட தலித்துகளை அமைப்பாக்க வேண்டுமானால், 'தேர்தல் புறக்கணிப்பு' அமைப்பையே புறக்கணித்து விடும் என்பதால்தான் தேர்தலில் பங்கெடுத்தது விடுதலைச் சிறுத்தைகள்.

தேர்தல் புறக்கணிப்பின் போது இந்த புரட்சிகரப் புடுங்கிகள் தலைவர் திருமாவளவன் அவர்களைச் சந்தித்து ஆயுதப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து, அவரது தலைமையை ஏற்றார்களா? அப்போதும் 'ஏகாதிபத்திய எடுபிடிகள்', 'பிழைப்புவாத தலித்துகள்' என்று தலித்துகளை கொச்சைப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, தேர்தல் புறக்கணிப்பின்போது எந்த புரட்சிகரக் குழுக்கள் சிறுத்தைகளைத் தேடி வந்து விவாதித்தது?

அரசியல் அதிகாரத்தைத் தலித்துகள் கைப்பற்றவே கூடாது என்பதுதான் ஆதிக்கச் சாதிகளின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாடுடன் இந்தப் புரட்சிகரக் குழுக்கள் செயல்படுவது சரியா? ஆதிக்கச் சாதியினர் ஓட்டுக் கட்சிகளாக மாறியதற்கும், ஒடுக்கப்பட்ட தலித்துகள் ஓட்டுக் கட்சிகளாக மாறியதற்கும் வித்தியாசம் இல்லையா?

முதலில் அரசியலில் பங்கெடுக்கும் உரிமையே தலித்துகளுக்கு மறுக்கப்படும் சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களைக் கொச்சைப்படுத்துவது மறைமுகமாக உரிமைகளை மறுக்கும் சதியல்லாமல் வேறென்ன? சாதி ஒழிப்பும் தமிழ்த் தேசியமும் உயிர்க் கொள்கைகளாகக் கொண்டு செயல்படும் விடுதலைச் சிறுத்தைகளைப் போன்று வேறு ஏதேனும் ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் உண்டா?

உள்ளூர் பண்ணை எடுபிடிகளாக நடத்தப்பட்ட தலித்துகளை தற்போது, ஏகாதிபத்திய எடுபிடிகள் என்று அழைப்பதன் நோக்கம் என்ன? யாருக்காவது எடுபிடிகளாகவே இருக்க வேண்டும் என்கிற நயவஞ்சகமா?

முதலில் உழைக்கும் மக்களிடத்தில் ஆக்கப்பூர்வமான நம்பிக்கையை, பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். அதை விடுத்து நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் என்று விளம்பரம் செய்வது எந்தப் பயனையும் தராது.

குறைந்தபட்சம் தோழர் தமிழரசன் அவர்களின் சாதி ஒழிப்புக் களத்திலாவது நேர்மையாகச் செயல்படுங்கள்.

இப்போது முக்கிய பிரச்சனைக்கு வருவோம். தருமபுரி வன்முறை வெறியாட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க இவர்களோடு சேர்ந்து ம.க.இ.க-வைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்தார்கள் என்று எழுதியிருப்பது அந்த இயக்கத்தை அவதூறு கிளப்புவதாக எதிர்வினையாற்றுகிறார்கள்.

அ.தி.மு.க., தி.மு.க வரிசையில் ம.க.இ.க.வைச் சேர்த்ததுதான் இந்த கோபத்திற்கு காரணமா? அல்லது குட்டு உடைந்து விட்டதே என்ற அதிர்ச்சி காரணமா?

கடந்த நவம்பர் 4ஆம் நாள் வன்னியர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து பஞ்சாயத்து ஒன்றை நாயக்கன்கொட்டாயில் கூட்டுகின்றனர். இந்தப் பஞ்சாயத்திற்குக் கட்டுப்பட தலித்துகள் நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றனர்.

இது குறித்து நத்தம் சேரியைச் சேர்ந்த பொடா பழனிச்சாமி என்கிற தோழர் மற்ற தோழர்களுடன் அப்பகுதியில் செயல்பட்டு வரும் புரட்சிகர இயக்கமான ம.ஜ.இ.க. மாநிலச் செயலாளர் தமிழ்வாணன் அவர்களைச் சந்தித்து முறையிடுகிறார்கள். அவரோ தாக்குதல் நடத்துவது குறித்து எச்சரிக்கையும் செய்து விட்டு, ''விவசாயப் பிரச்சினை குறித்து அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் போய் தோழர் சித்தானந்தம் அவர்களைப் பாருங்கள்'' என்று நழுவிக் கொள்கிறார். ம.ஜ.இ.க.விலிருந்து (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) பிரிந்து ம.ஜ.இ.அ (மக்கள் ஜனநாயக இளைஞர் அமைப்பு) என்கிற புதிய புரட்சி அமைப்பை நடத்தி வருகிறார் தோழர் சித்தானந்தம். இதே போல் மக்கள் யுத்தக் கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பச்சியப்பன் அவர்களிடமும் முறையிடுகின்றனர். அவரும் சாக்குப் போக்குச் சொல்லி கழன்று கொள்கிறார். நத்தம் சேரி தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய பா.ம.க.வைச் சேர்ந்த வி.பி.மதியழகனின் உறவினர்கள்தான் இந்த சித்தானந்தமும் பச்சியப்பனும். இத்தாக்குதலுக்கு பின்னிருந்து அனைத்து எடுபிடி வேலைகளையும் செய்தவர் தோழர் கிருஷ்ணன். இவர் அண்ணாநகர் பகுதியைச் சார்ந்த வன்னியர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர்.

இப்படியாக புரட்சிகரக் குழுக்கள் நத்தம் சேரித் தாக்குதலுக்குத் துணை போயிருப்பதைத்தான் 'பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்புவாதமும்' கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். மற்றபடி அப்புரட்சிகரக் குழுக்கள் எங்காவது ஆயுதப் போராட்டம் நடத்தி அழித்தொழிப்பு வேலைகள் செய்ததை நான் தடுக்கவும் இல்லை, கொச்சைப்படுத்தவில்லை. இதனால், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் புரட்சியைத் தடுத்துவிடவும் இல்லை.

ஆனால், ஒரு சந்தேகம் நெடு நாட்கள் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறது. நக்சல்பாரிப் புரட்சியாளர்கள்... நக்சல்பாரிப் புரட்சியாளர்கள்... என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புகிறது?

- வன்னிஅரசு, செய்தித்தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

0 comments:

Post a Comment