24 April 2013

கௌரவம் - சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு - வன்னிஅரசு


கௌரவம் - சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு - வன்னிஅரசு

அந்தப் பெரியவருக்கு வயது 70 இருக்கும். 23ஆம் புலிகேசி மன்னனைப்போல் அவருக்கும் ஒரு மீசை இருக்கும். இடுப்பில் பச்சை பெல்ட் மாட்டியிருப்பார். மேல் சட்டை இல்லை. முக்கால் அளவு வேட்டி. காலையில் எழுந்தவுடன் குளித்து விபூதிப் பட்டை தீட்டி பக்தி மணக்க மணக்க நடைபயணம் புறப்படுவார். யாரிடமும் பேசமாட்டார். யாராவது பேச முயற்சி செய்தால்கூட கண்டுகொள்ள மாட்டார். உணவு வாங்குவதற்கு வரிசையில்கூட வந்து நிற்க மாட்டார். எல்லோரும் உணவு வாங்கிச் சென்றபின் அவரது அலுமினியத் தட்டில் சோறு வாங்கிச் செல்வார். காவலர்கள் ஏதாவது கேட்டால்கூட, எதுவும் பேச மாட்டார். ஆனாலும் அந்த மத்திய சிறைவாசிகளில் பலர் அந்தப் பெரிசுக்கு மரியாதை கொடுத்துத்தான் வந்தார்கள்.

gouravam_450“டேய் இது எங்களுக்காக கட்டுன ஜெயிலுடா... பள்ளன் பறையன் எவனாவது ஜெயிலுக்கு வந்திங்கன்னா தேவன்னு சொல்லிப் பிழைச்சிட்டுப் போங்கடா” என்று தனிமைச் சிறையில் அடைபட்டிருக்கும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட கைதி கூட இந்தப் பெரிசைப் பார்த்தால் வணக்கம் போடுவான்.

பெரிசு பெயர் பாண்டித்தேவர். உசிலம்பட்டியைச் சேர்ந்தவர்.

நானும் பலமுறை அவரிடம் பேச முயற்சி செய்து பேச முயன்றேன் முடியவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டேன் - பாண்டித்தேவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையாம். மற்றபடி எந்த விவரமும் தெரியவில்லை. பாண்டித்தேவர் லாக்-அப் ஆகும்வரை நூலகத்தில்தான் இருப்பார். நூலகத்தில் உள்ள எல்லா நூல்களையும் படித்து முடித்தவர் அவர்தான். நூலக ஆசிரியர் சுருளிதான் என்னை பாண்டித்தேவருக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு வரும் நூல்களை அவருக்கும் படிக்கக் கொடுத்ததன் மூலம் என்னோடு சகஜமாகப் பேச ஆரம்பித்தார். அப்புறம்தான் அவரது முழுக் கதையும் எனக்குத் தெரிந்தது.

ஆசை ஆசையாய் வளர்த்த அவரது மகள் பக்கத்து ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட பள்ளர் வகுப்பைச் சேர்ந்த பையனைக் காதலித்துளளார். ஊரில் உள்ள புளிய மரங்களும் பனை மரங்களும்கூட இவர்களது காதல் கதையினை பேச ஆரம்பித்தன. பாண்டித்தேவருக்கு அது தெரியாமலா போய்விடும்! அவர் கோபத்தின் உச்சத்தில் இருக்கும்போது காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டது.

எட்டு மாதமாகக் கண்டுகொள்ளவில்லை. எட்டு மாதமாக வீட்டை விட்டே வெளியேறியதில்லை பாண்டித்தேவர். ஏதோ நடந்தது நடந்துபோச்சு என்று ஒன்பதாவது மாதம் வளைகாப்பு செய்து மகளை அழைத்து வருவதற்காக வைப்பதற்காக பாண்டித்தேவரின் மனைவி செல்கிறார். தலித் மருமகனும் மகிழ்ச்சியாக வளைகாப்பு முடித்து மனைவியை மாமியாருடன் அனுப்பி வைக்கிறார். வயறு நிறையக் குழந்தையோடு கை நிறைய வளையல்களோடு நெற்றி நிறைய மஞ்சள் குங்குமத்தோடு வாய் நிறைய சிரிப்போடு வந்த மகளைப் பார்த்து கட்டி அணைத்துக்கொண்டார் பாண்டித்தேவர். தன் கையாலேயே மகளுக்குச் சோறு ஊட்டிவிடுகிறார்.

இரவு 10 மணி. எல்லோரும் தூங்கப்போய்விட்டனர். நள்ளிரவில் திடீரென அலறல் சத்தம். வீட்டுக்குள் ஒரு உருவம் தீயில் எரிந்து விழுகிறது. வீட்டில் உள்ளவர்களும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் வந்து பார்க்கும்போது கருகிய நிலையில் பாண்டித்தேவரின் மகள் கிடக்கிறாள். வயிற்றுக்குள் இருந்த குழந்தையும் கருகி செத்துப்போனது.

“அப்பாடா... அப்பத்தான் என் சாதி கௌரவம் காப்பாற்றப்பட்டது தம்பி!” என்றார் பாண்டித்தேவர்.

“உங்க ஆசை மகளைக் கருக்கிட்டிங்களே. உங்க மகளைவிட சாதி பெரிசாப் போச்சா?” என்று கேட்டதற்கு,

அந்தப் பெரிசு எந்தச் சலனமும் இல்லாமல் சொன்னார்- “என்னை விட என் சாதி கௌரவம்தான் முக்கியம்”

இதற்காகத்தான் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

மதுரை மத்திய சிறையை இப்போது கடந்து போனாலும் அந்த பாண்டித்தேவர் என் நினைவில் வந்துபோவார்.

சக ஆயுள் சிறைவாசியாக நான் இருந்தாலும், இம்மாதிரியான காட்டுமிராண்டித்தனங்களின் எச்சங்களோடுதான் பயணப்பட்டேன். 1990ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வை, 1998ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றபோது அறிந்தேன். இப்படியெல்லாமா மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கொதித்துப் போனேன்.

ஆனால், நாயக்கன்கொட்டாய் இளவரசன்-திவ்யா காதலை சாக்காக வைத்து மூன்று சேரிகளைத் திட்டமிட்டுத் தீக்கிரையாக்கிய சாதிவெறியர்களை நினைக்கும்போது, பாண்டித்தேவர் என்கிற பெரிசு பரவாயில்லைபோல் தோன்றியது.

விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையில் வன்னியப் பெண் கண்ணகி, தலித் வகுப்பைச் சேர்ந்த முருகேசனை காதல் திருமணம் செய்துகொண்டார். எல்லா காதலர்களும் செய்வதைப்போலத்தான் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார்கள். கண்ணகியின் உறவினர்கள் ஊர் ஊராய்த் தேடிக் கண்டுபிடித்து ஊர் மந்தைக்கு அந்த காதல் ஜோடியை இழுத்து வந்தனர். மக்கள் யாவரும் பார்த்துப் பதைக்க, காதல் ஜோடி கதறக் கதற விஷம் கொடுத்து எரித்துக் கொல்கின்றனர். தங்களுடைய சாதி கௌரவத்தைக் காப்பதற்காக மனிதநேயத்தை கொன்றழித்த இந்தக் கொடூரத்தின் முன்பு பாண்டித்தேவர் என் நினைவில் வந்து வந்து போகிறார்.

இப்படி சமூகத்தில் அன்றாடம் நடக்கும் அவலங்களை, அநியாயங்களை படைப்புகளாக்க இச்சம்பவங்கள் யாரையும் உறுத்தவில்லையோ, மனசாட்சியை உலுக்கவில்லையோ என்று வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் ‘கௌரவம்’ திரைப்படம் வந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் நீயா? நானா? நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் கொடுமை செய்பவர்களைவிட அதனை அமைதியாக வேடிக்கை பார்ப்பவர்கள்தான் ஆபத்தானவர்கள் என்று குறிப்பிட்டார். அத்தகைய ஆபத்தானவர்கள் இந்தச் சமூகத்தில் பல்வேறு வடிவங்களில் உலவுகிறார்கள். மார்க்சியம் பேசுகிற, தமிழ்த் தேசியம் பேசுகிற, காந்தியம் பேசுகிற, முற்போக்குப் பேசுகிற எத்தனையோ இயக்குநர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் இயங்குகிறார்கள். எதற்கெடுத்தாலும் புரட்சி பேசுவது, அல்லது பெரியார் கருத்துகளைச் சொல்வது, இன்னும் கூடுதலாய் கருப்புச் சட்டையைப் போட்டுக்கொண்டு நாத்திகனாய் விசுவரூபம் எடுப்பார்கள். ஆனால் எடுக்கும் திரைப்படங்களைப் பார்த்தால் சமூகத்திற்கு எதிரான மசாலா படங்களையே எடுத்து பெருமை பேசுவார்கள்.

ஆனால் இயக்குநர் ராதாமோகன் அவர்கள் மிக நேர்மையாக இச்சமூகத்தில் நிலவும் சமூக அநீதியை திரைக்கதைப் போக்கில் எந்தத் திணிப்பும் இல்லாமல் அம்பலப்படுத்தியிருக்கிறார். சாதியின் பெயரால் நடக்கும் கௌரவக் கொலைகள் இயக்குநரை எந்த அளவுக்குப் பாதித்திருந்தால் இப்படியொரு படைப்பைப் படைக்கக் களம் இறங்கியிருப்பார்! சாதி எப்படியெல்லாம் சமூகத்திற்கு எதிராக இருக்கிறது என்பதை மிக நேர்த்தியாகப் திரைப்படமாக்கியிருக்கிறார்.

திரைப்படத்தில் பல இடங்களில் சினிமாத்தனமும் முரண்பாடுகளும் இருந்தாலும் இப்படியொரு கதையை களமாக அமைத்து தமிழகம் முழுவதும் சாதியை முன்வைத்து அரசியல் செய்பவர்களை அம்பலப்படுத்திய துணிச்சலுக்காகவே இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பாராட்ட வேண்டும்.

தன்னுடன் படித்த சண்முகத்தை தேடிப்போன நண்பர்களுக்கு அந்த டி.வெண்ணனூர் கிராமத்தில் நடப்பவை அதிர்ச்சியளிக்கின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சண்முகம் அந்த ஊரில் மேல் சாதிப் பண்ணையாரான பசுபதியின் மகளை காதலித்து கூட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார். அவர்கள் என்ன ஆனார்கள்? மர்ம முடிச்சுகளை கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களுடன் சேர்ந்து அவிழ்க்கின்றனர். சாதி கௌரவத்தைக் காப்பதற்காக அந்த காதல் ஜோடியை வெட்டிப் படுகொலை செய்யும்போது இந்தியாவில் இப்படி எத்தனைக் காதலர்கள் வெட்டியும் நஞ்சு கொடுத்தும் எரித்தும் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதை நினைக்கும்போது நம் குலை நடுங்குகிறது.

“உங்களுக்கு கௌரவம்தான் முக்கியம் என்றால் நீங்க சாக வேண்டியதுதானே? ஏன் என் பிள்ளையைக் கொன்னீங்க?” என்று பண்ணையாரை அவரது மனைவி கேட்கும்போது பல பெரிய மனிதர்களின் செவுளில் அறைந்ததுபோல் இருக்கிறது. கம்யூனிசம் பேசுகிற தொழிற்சங்கவாதிகூட எப்படி இருப்பார் என்பதை நாசர் தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். தலித்துகளுக்குள்கூட தீண்டாமை இருக்கிறது என்பதை சம்பந்தமில்லாமல் கம்யூனிஸ்டுகள் பேசுவதை இயக்குநர் சுட்டிக்காட்டியுள்ளார். சேரியைக் காட்டும்போதுகூட புரட்சியாளர் அம்பேத்கர் சிலை கோணியால் மூடப்பட்டிருக்கும் அயோக்கியத்தனத்தையும் சத்தமில்லாமல் படம்பிடித்துள்ளனர்.

தேநீர்க் கடைகளில் முன்பெல்லாம் தலித்துகளுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் ஊற்றுவார்கள். அதற்கடுத்து தனிக் குவளைகளை ஒதுக்கினார்கள். நாகரிகம் வளர வளர, அறிவியல் வளர வளர தீண்டாமையும் வேறொரு வடிவம் கொள்கிறது என்பதை திரைப்படத்தின் தேநீர்க் கடைகள் அம்பலப்படுத்துகின்றன. சேரியிலிருந்து வருகிற மாசி என்கிற இளைஞன் தேநீர் குடிக்க கடைக்கு வரும்போது மரத்தில் தொங்க விடப்பட்டுள்ள பயன்படுத்திவிட்டுத் தூக்கிப்போடும் காகிதக் குவளையில் தேநீர் குடிப்பான். உயர் சாதியினர் கண்ணாடிக் குவளையில் குடிப்பதை குளோஸ்-அப்பில் காட்டும்போது இப்பல்லாம் யார் சாதி பார்க்குறாங்க என்று முற்போக்குப் பேசுபவர்களின் முகத்தில் காறி உமிழ்வதுபோல் உள்ளது.

“சேரிக்காரர்கள் எவ்வளவுகாலம்தான் அடி வாங்குவார்கள். திருப்பி அடிப்பது எப்போது?” என்று சேரித் தோழர் கேட்கும்போது தலித் மக்களின் வலியையும் உணர்வையும் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளைக் களைய மாணவர்களும் இளைஞர்களும் களமிறங்கினால்தான் முடியும் என்று இயக்குநர் இளைஞர்களை உசுப்பேற்றியிருக்கிறார்.

இன்றைக்கு மாணவர்களை, இளைஞர்களை சாதிவெறி ஊட்டி தமிழகத்தை வன்முறைக் காடாக மாற்ற முயற்சி செய்து வரும் மனித சமூகத்திற்கே அவமானமான செயலை அரங்கேற்றி வருகிற காட்டுமிராண்டிகளுக்கு அறிவுரைக்கும் வகையில் சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு இத்திரைப்படம். சமூகத்தில் தன்னோடு வாழும் சக மனிதன் ஏன் இப்படி சாதியின் பெயரால் அவமானப்படுத்தப்படுகிறான்? புறக்கணிக்கப்படுகிறான்? கொல்லப்படுகிறான் என்பதை பிரகாஷ்ராஜ், ராதாமோகன் ஆகியோர் கேள்வி கேட்டிருப்பது துணிச்சலான செயல், பாராட்டுக்குரிய செயல்.

சமூகநீதிக்காகப் போராடுபவர்கள், முற்போக்குப் பேசுபவர்கள், சமூகத்தை மாற்றத் துடிப்பவர்களும் இத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். அனைவரையும் பார்க்கத் தூண்ட வேண்டும். அப்போதுதான் இந்தச் சமூகத்தின் அவலங்களை பரப்புரை செய்ததற்கான கடமையைச் செய்ததாக அமையும்.

- வன்னிஅரசு ( vanni.viduthalai@gmail.com)

0 comments:

Post a Comment