10 May 2013

மருத்துவர் இராமதாசின் பொய் முகமும், வேலாயுதபுர சாதியத்தின் கோர முகமும்-வன்னிஅரசு

“நெல்லை மாவட்டம் கழுகுமலைக்கு அருகே உள்ள அந்த ஊரில் வசிக்கின்ற நானூறு ரெட்டியார் குடும்பத்தினர் கதறி அழுகின்றனர். தாழ்த்தப்பட்டோர் எங்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று காப்பாற்றும்படிக் கதறி அழுகிறார்கள்”
vanniarasu_velayuthapuram_6
நாதஸ்வர வித்வான் எம்.எஸ்.முத்தையாவுடன்...
கடந்த 25-4-2013 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சாதிச் சங்கக் கூட்டத்தில் கூடியிருந்த இலட்சக்கணக்கானோர் மத்தியில் நூற்றுக் கணக்கான உளவுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இந்த அதிர்ச்சித் தகவலை மருத்துவர் இராமதாசு வெளிப்படுத்தினார். அந்த ஊர் எது என்று ஊடகவியலாளர்களும் உளவுத்துறையும் ஆராய ஆரம்பித்தனர்.
8-5-2013 அன்று நாமும் அந்த ஊரைத் தேடி பயணப்பட்டோம். அந்த ஊரின் பெயர் டி.வேலாயுதபுரம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையிலிருந்து 3வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த டி.வேலாயுதபுரம் (மருத்துவர் இராமதாசு சொல்வதைப்போல் நெல்லை மாவட்டத்தில் இல்லை.)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் இராசா, ஆதித் தமிழர் பேரவையின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், கவுதமன் ஆகியோருடன் நாமும் அந்த ஊருக்குச் சென்றோம். புளியம்பழங்களைச் சுமந்துகிடக்கும் மரங்களும், மஞ்சநெத்திப் பூக்களின் மணம் மரப்பும் மரங்களும் வழிநெடுக எங்களை வரவேற்றன. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த 47 குடும்பங்களும், ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 4 வண்ணார் குடும்பத்தினரும் அடங்கியதுதான் இந்த வேலாயுதபுரம்.
வேலாயுதபுரத்திற்குள் விடுதலைச் சிறுத்தைகள் கொடி பறக்கும் காரில் நுழைந்தவுடனேயே அந்த ஊர் மக்கள் கும்பல் கும்பலாகக் கூட ஆரம்பித்தனர். ஊர் மந்தைக்கு அருகே இரண்டு போலிசார் காவலுக்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் வேலாயுதபுரம் சேரிக்குச் செல்லும் பாதையைக் கேட்டுச் சென்றோம். எலந்தப் பழங்களை சின்னஞ்சிறு பிள்ளைகள் முள் படாமல் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். ஊருக்கும் சேரிக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது. சேரிக்குள் நுழைந்தோம்.
இந்தியாவிலுள்ள எல்லா ஊர்களும் சேரியை எப்படி நடத்துகின்றனவோ அப்படித்தான் வேலாயுதபுரமும் சேரியை நடத்துகிறது. ஊருக்கே செருப்புத் தைத்துக் கொடுத்தாலும் அருந்ததிய மக்கள் செருப்புப் போட்டுக்கொண்டு ரெட்டியார் தெருவுக்குள் நடக்க முடியாது. சைக்கிள் வாங்கலாம். ஆனால் உருட்டிக்கொண்டுதான் போக வேண்டும்; ஏறிச் செல்ல முடியாது. அங்குள்ள நடுநிலைப் பள்ளிக்குச் செல்லும் அருந்ததியர் குழந்தைகளுக்கு தனியேதான் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்புக்கு மேல் யாரும் படிக்கக் கூடாது.
இங்குள்ள அருந்ததியர்களுக்குச் சொந்தமாக நிலங்கள் எதுவும் இல்லை. கூலி வேலைக்குத்தான் செல்லவேண்டும். பெண்கள் அங்குள்ள தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்குச் சென்று தீக்குச்சிகளை அடுக்க வேண்டும். ஆண்கள் சீமைக் கருவேல மரங்களை வெட்டி கரிக்கட்டைகளாக்கி திருநெல்வேலி, தூத்துக்குடி, கழுமலை, சங்கரன்கோவில் போன்ற ஊர்களுக்குச் சென்று விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டும். இதுதான் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலை.
vanniarasu_velayuthapuram_7
சுபா குடும்பத்தாருடன்..
கடந்த 10-8-2006 அன்று தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைசெய்யும் சுபா என்கிற 16 வயது பெண், “இந்த ஊரின் கொடுமையிலிருந்து எங்கள் மக்கள் விடுதலை பெற வேண்டும்” என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார்.
ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் சுபாவை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வந்துள்ளனர். சாதிப் பெயரைச் சொல்லி கேலியும் செய்து வந்துள்ளனர். சுபா மட்டுமல்லாது சேரியிலிருந்து வருகிற எல்லா பெண்களிடமும் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கேலியும் கிண்டலும் செய்து கடுமையாக நடந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த சுபா தற்கொலை செய்துகொள்கிறார். காவல்துறையோ, வழக்கம்போல் சிலரைக் கைது செய்துவிட்டு பின்பு அவர்களை விட்டுவிடுகிறார்கள். சுபாவின் தற்கொலையை அடுத்து, போலிஸ், கோர்ட் என்று அதே சேரியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அலைய ஆரம்பிக்கிறார். “போலிசுக்கெல்லாம் போக வேண்டாம்!” என்ற ரெட்டியார்களின் கட்டளையை மீறி கருப்பசாமி களப்பணியாற்ற ஆரம்பித்தார்.
இந்நிலையில், கடந்த 12-4-2013 அன்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கருப்பசாமி வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு தொடர்பாக ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த 13 இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
“இந்த ஊர்ல ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கு தம்பி. எங்க தெருவுக்குள்ள ரேசன் கடை இல்லை. அவுங்க தெருவுக்குள்ள இருக்கிற ரேசன் கடைக்குத்தான் போக வேண்டும். யாரும் இல்லாத நேரமாப் பாத்து ஜன்னலுக்கு வெளியே நின்னுதான் வாங்க வேண்டும்” என்றார் சேரித்தெரு நாட்டாமை சுப்பிரமணி.
சுப்பிரமணியின் மகன் முத்துகிருஷ்ணனுக்கு ஊரில் அஞ்சல் அலுவலக உதவியாளராகப் பணி கிடைத்தது. “சக்கிலியப் பய தொட்ட லட்டர நாங்க வாங்கணுமா? ஒழுங்கு மரியாதையா வேலை வேணாம்னு எழுதிக் கொடுக்கச் சொல்லு” என்று தினமும் ரெட்டியார் சமூகத்தினர் சுப்பிரமணியை மிரட்ட ஆரம்பித்தனர். மிரட்டலுக்குப் பயந்து முத்துகிருஷ்ணன் வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்னைக்குச் செல்கிறார். இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால், முத்துகிருஷ்ணனோ சென்னைக்குப் போய் அடுத்தடுத்த போட்டித் தேர்வுகளை எழுதி இப்போது தலைமைச் செயலகத்தில் கமாண்டோவாக துப்பாக்கியும் கையுமாகப் பணிபுரிகிறார்.
நாதஸ்வர வித்வானாக அம்மாவட்டங்களில் புகழ்பெற்றவராக மதிக்கப்படும் எம்.எஸ்.முத்தையா, “இப்பகுதியில் திருவிழாக் காலங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் நாங்கள் போகக் கூடாது. ஊரில் உள்ள நிகழ்ச்சியில்தான் நாதஸ்வரம் வாசிக்க வேண்டும். அதுவும் இலவசமாகத்தான் வாசிக்க வேண்டும். உறவினர்களின் வீடுகளுக்கு நாங்கள் போக வேண்டுமென்றாலும், உறவினர்கள் எங்கள் வீடுகளுக்கு வரவேண்டுமென்றாலும் ஊர் மந்தையில் காலில் விழுந்து கேட்டுவிட்டுத்தான் போக வேண்டும், வரவேண்டும்” என்றார். சிறந்த நாதஸ்வர வித்வானான எம்.எஸ்.முத்தையாவுக்கு கடந்த ஆண்டுதான் அரசு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்தது. ஆனால் வேலாயுதபுரமோ...?
vanniarasu_velayuthapuram_8
கருப்பசாமி குடும்பத்தாருடன்..
அடிமைத்தனத்திற்கு எதிராக 2006ஆம் ஆண்டு உயிர்நீத்த சுபாவின் மறைவுக்குப் பிறகு அருந்ததியர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்தார்கள். மந்தையில் துணிச்சலாகக் கேள்வியெழுப்ப ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அரிபால் ரெட்டியார், அருந்ததியர் பலரை மந்தையில் வைத்தே அடித்துள்ளார். இவர் வேலாயுதபுரத்திலிருந்து வெளியேறி துபாயில் சென்று பணிபுரிந்து வந்தவர். “நான் போகும்போது ஊரு இப்படியில்லையே. இவனுகளுக்கு யார் துணிச்சலத் தந்தது? இவனுகள ஆரம்பத்துலயே அடக்கி வைக்கணும்” என்று அரிபால் ரெட்டியார் கொதித்துப்போனதன் விளைவு சேரியைச் சுற்றி முள் வேலி அமைக்கும் பணி தொடங்கியது. 47 குடும்பங்கள் வசிக்கும் அருந்ததியர் குடியிருப்பைச் சுற்றி இரும்பு முள்வேலி அமைத்தனர். அருந்ததியர்கள் இந்த முள்வேலிக்குள்தான் வாழ வேண்டும். ரெட்டியார்களின் காடு கரைகளில் கால் வைக்கக் கூடாது. கால் வைத்தால் தீட்டுப் பட்டுவிடுமாம்.
இந்தத் தீண்டாமை முள்வேலி அமைக்கும்போது பஞ்சாயத்து தலைவர் இராதாகிருஷ்ணன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இவர் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். “என்னையும் சக்கிலியர்களோடு ஒதுக்கி வைத்துவிடுங்கள். இதற்கு நான் உடன்படமாட்டேன்” என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். விளைவு 2011 பஞ்சாயத்துத் தேர்தலில் தோழர் இராதாகிருஷ்ணன் தோற்கடிக்கப்பட்டு அமராவதி என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மதிமுகவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பழனிச்சாமி ரெட்டியார்தான் இப்போது அருந்ததியர்களை ஒடுக்குவதில் மும்முரமாக இருக்கிறார். இவரோடு போஸ், அரிபால், சுப்புராஜ் (அதிமுக), இராஜேந்திரன், மணிகண்டன், நாராயண ரெட்டியாரின் மகன் பால்ராஜ், தவிட்டு ரெட்டியாரின் மகன் ரமேஷ், நாராயணன், பெத்து ரெட்டியார், சீனிச்சாமி ரெட்டியார் ஆகியோர்தான் தீண்டாமை முள்வேலி உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளைச் செய்வதில் முன்னணியில் நிற்பவர்கள். 
கடந்த 12-4-2013 அன்று கருப்பசாமி படுகொலை செய்யப்பட்டதை அடுத்துதான் இந்தத் தீண்டாமை முள்வேலி உலகுக்கே தெரிய வந்துள்ளது. 13-4-2013 அன்று அந்த ஊருக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. இராஜேந்திரன் அவர்கள் தீண்டாமை முள்வேலியைப் பார்த்துக் கொதித்துப் போய்விட்டார். அவரே முன்னின்று முள்வேலியைப் பிரித்து எறியும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனாலும், கழுகுமலை காவல்நிலைய அதிகாரிகளோ உள்ளூர்ப் பகை வேண்டாம் என்று ரெட்டிகளோடு ஒட்டி உறவாடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இத்தகைய சேரியைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் நமக்கு வந்தது.
ஆதித்தமிழர் பேரவையின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் தோழர்கள் சிலர் எங்களைப் பார்ப்பதற்காக சேரிக்குள் வர முயன்றனர். அப்போது ஊர் மந்தையில் பெண்கள் வழிமறித்து, “ஏண்டா சக்கிலியப் பயலுகளா, எங்கடா வந்தீங்க? இந்த நாய்களுக்கு நீங்கதான் சப்போர்ட்டா? கார்ல உள்ள போன அந்த சக்கிலிய நாயிகள நாங்க வெளியே விடப்போறதில்ல...” என்று வாய்க்கு வந்தபடி கூச்சலிட்டு அவர்களை அடிக்காத குறையாக விரட்டியடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலிசோ வேடிக்கை பார்த்ததைத் தவிர ஒன்றும் செய்யவில்லை. இதையறியாமல், நாங்களோ அந்தத் தீண்டாமை முள்வேலியையும் ஊர் மக்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரே ஒரு போலிஸ்காரர் எங்களிடம் வந்து, “சார் கொஞ்சம் இருங்க. அவங்க கும்பலா கூடி கோபத்தோட இருக்காங்க. போலிஸ் ஃபோர்ஸ் வந்ததுக்குப் பிறகு நீங்கள் போகலாம்” என்றார்.
vanniarasu_velayuthapuram_9
காவல் துறையினருடன்...
மாலை 5 மணிக்கு சேரிக்குள் போன நாங்கள் இரவு 7 மணியளவில் வெளியேற முயன்றோம். போக முடியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் இரு காவலர்களுடன் வந்து, “சார் எங்க பின்னாலயே வாங்க” என்றபடி நடந்து சென்றார்கள். நாங்கள் காரில் பின்தொடர்ந்தோம். ஊர் தெருவை நெருங்கும்போதே அந்தக் குரல் கேட்டது.
“அந்தச் சக்கிலியப் பயலுகள இறக்கிவிடுங்க. இவனுங்களுக்கெல்லாம் கார் ஒரு கேடா?” என்று கத்த ஆரம்பித்தனர். கைகளில் அரிவாள், வேல்கம்பு, ஈட்டி மற்றும் கற்கள். நிலைமையை அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு எங்களிடம் மிக அமைதியாகச் சொன்னார், “சார் போகலாம் சார். பேசிட்டேன். போற வழியில மந்தையில போய் இனிமே வரமாட்டோம்னு சொல்லிட்டுப் போயிருங்க” என்றார்.
அதிர்ந்துபோன நாங்கள், “அவர்களிடம் போய் சொல்ல வேண்டுமா? இல்லை காலில் விழுந்து செல்ல வேண்டுமா? என்ன நடக்கிறது இங்கே” என்று கோபத்துடன் கேட்டோம். சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் அந்த ஊர் மக்களிடமே சென்றுவிட்டார். உயர் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசிய பிறகு டி.எஸ்.பி. தலைமையில் காவல்துறையினர் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல்தான் சேரியைக் கடந்து ஊரையும் கடந்து வெளியேறினோம். நடந்ததை கழுகுமலைக் காவல் நிலையத்தில் புகாராக எழுதிக் கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி வற்புறுத்தி வந்தோம்.
டி.வேலாயுதபுரம் சேரியைப் பார்வையிடச் சென்ற நமக்கே இந்த நிலை என்றால் காலங்காலமாய் அங்கேயே குடியிருக்கும் அப்பாவி அருந்ததிய மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். இலங்கையில் முள்வேலி முகாம்களை அகற்றக் கோரி தமிழர்களெல்லாம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற சூழலில்தான், சொந்த மண்ணிலேயே முள்வேலிக்குள் மண்ணின் மைந்தர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.
இவ்வளவு கொடுமைகளையும் செய்துவிட்டு தலித்துகள்தான் கொடுமை செய்கிறார்கள் என்று மருத்துவர் இராமதாசு பேசுவது நியாயம்தானா? அவர் பொது மேடையில் நாகரிகமாகப் பேசுவதில்லை. பேசும் பேச்சிலும் உண்மை இல்லை. ஆனால் தொடர்ந்து எங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று சவால் விட்டுக்கொண்டேயிருக்கிறார். 'விடுதலைச் சிறுத்தைகள் பெண்களைக் கடத்துகிறார்கள், அதை வைத்துப் பேரம் பேசுகிறார்கள்' என்று வாய்க்கு வந்தபடி பேசி ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இதுவரை எந்த ஆதாரத்தையும் காட்டியதில்லை. இல்லாததை எப்படிக் காட்ட முடியும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இராமதாசு பேசுவதெல்லாம் பொய்யும் புரட்டும்தான் என்பதை இந்த வேலாயுதபுரம் சேரி உலகுக்குக் காட்டுகிறது. வேலாயுதபுரம் சேரிமக்களிடம் நாங்கள் வந்த நோக்கம் குறித்துப் பேசும்போது, “நீங்கதான் ரெட்டியார்களைக் கொடுமைப்படுத்துறதா டாக்டர் இராமதாசு சொன்னாரு. உண்மையான்னு பார்க்க வந்தோம்” என்று சொன்னபோது, ஒரு கிழவி கோபத்தோடு, “அந்த பிராடுகாரப் பயல இங்கக் கூட்டியா, அவனும் எங்கத் தாலிய அறுத்துட்டுப் போகட்டும்” என்றார்.
மருத்துவர் அவர்களே உங்கள் குடும்ப சுயநலத்திற்காக ஏன் இப்படி சேரிமக்களின் உயிரை எடுக்கிறீர்கள்?
- வன்னிஅரசு
Bookmark and Share

1 comments:

Bharath Thamizh said...

இந்த வழக்கை இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன் அண்ணா.

Post a Comment