05 August 2014
"எனக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் அச்சத்தைத் தங்களுக்குத்
தெரிவிக்க விரும்புகிறேன். தங்களது
கன்சர்வேட்டிவ் பார்ட்டிக்கு நிதியளிக்கும் முக்கிய நிறுவனமான லைக்கா (LYCA) மொபைல் நிறுவனத்திற்கும் இலங்கை அதிபர் இராஜபக்சேவுக்கும்
நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறித்து எனது
அச்சத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச
விசாரணைக்கு இராஜபக்சேவை உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கையை நானும்
எழுப்பியுள்ளேன்.
தொலைத் தொடர்பு
நிறுவனமான லைக்கா மொபைல் 2011ஆம் ஆண்டு
தொடங்கி, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு
426,292 மில்லியன் பவுண்ட்ஸ்
நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும், கடந்த ஜூன் 2012
'கார்டியன்' (Guardian) பத்திரிகையில்
கடந்த 3 ஆண்டுகளாக லைக்கா
நிறுவனம் அரசுக்கு எந்த வரியும் செலுத்தவில்லை என்று அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் இராஜபக்சே உறவினர் நிறுவனத்தில்
அதிகப் பங்குகளை வைத்துள்ளது.
இராஜபக்சேவின் மைத்துனர் தலைமை தாங்கும் இலங்கை அரசின் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்
நிறுவனத்தால் முன்னுரிமை அளிக்கப்பட்டுச் செயல்படும் நிறுவனமாக லைக்கா ஃப்ளை (LycaFly) உள்ளது.
காமன்வெல்த் உச்சி மாநாட்டையொட்டி நடைபெற்ற காமன்வெல்த் பிசினஸ் போரம்-2013
(Commonwealth Business Forum-2013) மாநாட்டிற்கு 'கோல்டன் ஸ்பான்சராக' (Gold Sponsor) லைக்கா நிறுவனம் செயல்பட்டுள்ளது. இராஜபக்சே அரசின் பின்னணியில் இயங்கும் லைக்கா
நிறுவனத்திடமிருந்து கன்சர்வேட்டிவ் கட்சி நன்கொடைகளைப் பெற்றிருப்பதால்தான்,
பலத்த எதிர்ப்புகளையும் மீறி காமன்வெல்த்
மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்வதாக அறிவித்திருப்பதில் சந்தேகம் எழுகிறது. இராஜபக்சே அரசுக்கும் லைக்கா மொபைல்
நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தவறும்பட்சத்தில் தாங்கள் எதிர்காலத்தில் மனித உரிமை குறித்து முன்னெடுக்கும் எந்த
முடிவுகளும் கேள்விக்குள்ளாக்கப்படும்" இங்கிலாந்து லேபர் பார்ட்டி நாடாளுமன்ற உறுப்பினர் டாம் பிளங்கின்சாப் கடந்த
நவம்பர் 18, 2013 அன்று இங்கிலாந்து
பிரதமர் டேவிட் கேமரூனுக்கு எழுதிய
கடிதத்தில் குறிப்பிட்டிருந்த செய்திதான் இது.
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டாம் குறிப்பிட்டுள்ள லைக்கா நிறுவனத்தின்
பின்னணி என்ன? அந்த நிறுவனத்தின்
இயக்குநர் யார்?
யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர்தான் சுபாஷ்கரன். இவர்தான் இந்த லைக்கா நிறுவனத்தின்
இயக்குநர். இவரது தந்தை அல்லிராஜா - தாய்
ஞானாம்பிகை. சிங்கள ஒடுக்குமுறைக்கெதிராக
விடுதலைப் புலிகளின் போர் வெடித்த பிறகு யாழ்ப்பாணத்தைவிட்டு அகதியாய்
நாடுநாடாய்த் திரிந்தவர்தான் இந்த சுபாஷ்கரன்.
ஆரம்ப காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும்போல இவரும் படாதபாடு
பட்டுக்கொண்டிருந்தார். வெளிநாடுகளுக்கு
ஆட்களை அனுப்புவது, அவர்களைத் தங்க
வைப்பதற்கான இடங்களைப் பிடித்துக்கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்து பிழைப்பு
நடத்தி வந்தார். 2003ஆம் ஆண்டு வெளிநாடுவாழ் இந்தியரான மிலிந்த் காங்லே உள்ளிட்ட 10 பேரோடு இணைந்து லைக்காடெல் எனும் நிறுவனத்தைத்
தொடங்குகிறார். ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்துத் தரப்பு
மக்களைக் குறிவைத்துத்தான் இந்த வியாபாரத்தைத் தொடங்குவதாக சுபாஷ்கரன்
குறிப்பிடுகிறார்.
பின்னர் 6 ஆண்டுகளில் லைக்கா
நிறுவனம் 1500 நபர்கள் கொண்ட நிறுவனமாக
வலிமைபெற்று, உலகெங்கும் 4000 பணியாளர்களைக் கொண்டு விரிவுபடுத்தப்படுகிறது. லைக்கா மொபைல் (LycaMobile), லைக்கா ஃப்ளை (LycaFly), லைக்கா மணி (LycaMoney), லைக்கா புரொடக்ஷன் (LycaProduction) என்று வகைப்படுத்தி ஐரோப்பிய நாடுகள் முழுக்க நிறுவனத்தின்
கிளைகளைத் தொடங்குகிறார்கள்.
இந்நிறுவனத்தின் தலைவராக சுபாஷ்கரனும், துணைத் தலைவராக பிரேம் சிவசாமி என்பவரும், தலைமை செயல் அதிகாரியாக கிறிஸ் தூளி என்பவரும் அதிகாரப்பூர்வமாகச்
செயல்பட்டு வருகின்றனர். மிகச்
சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இங்கிலாந்து நாட்டு ஆளும் கட்சிக்கு 426 மில்லியன் பவுண்ட்ஸ் நன்கொடையாகத் தரும் அளவுக்கு
உயர்ந்தது.
இந்த இடத்தில்தான் லேபர் பார்ட்டியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாம், பிரதமர கேமரூனை நோக்கி எழுப்பிய கேள்வி முக்கியத்துவம்
பெறுகிறது.
இலங்கையில் கடந்த 2013 நவம்பரில்
நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் மட்டுமல்ல
உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
கனடா உள்ளிட்ட பல நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ள வெளிப்படையாக மறுத்ததோடு,
'இனப்படுகொலை நடத்திய இலங்கையை உலக
நாடுகளிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
இனப்படுகொலை செய்த இராஜபக்சேவைத் தண்டிக்க வேண்டும்' என்று கண்டனக் குரல் கொடுத்தன. ஆனால், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன், நான் போரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கச் செல்கிறேன்
என்று அறிவித்துவிட்டு, நேரடியாக போரில்
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். இதைத்தான் நாடகம் என்று கூறி டாம்
கேள்விக்குள்ளாக்குகிறார்.
லைக்கா நிறுவனம் 426 மில்லியன்
பவுண்ட்ஸ் நன்கொடை அளித்ததால்தான் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்டதாக
டாம் குற்றம் சுமத்துகிறார்.
காமன்வெல்த் மாநாட்டிற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?
காமன்வெல்த் மாநாட்டுக்கான தேதி அறிவித்தபின் அம்மாநாட்டிற்கான கோல்டன்
ஸ்பான்சரை (Gold Sponsor) லைக்கா நிறுவனம்தான்
வழங்கியது. காமன்வெல்த் மாநாட்டிற்கு
ஸ்பான்சர் வழங்கிய நிறுவனங்களின் பட்டியலைப் பார்த்தால் அரசியல் அறிவு
இல்லாதவர்கள்கூட லைக்கா நிறுவனத்திற்கும் சிங்கள அரசுக்கும் உள்ள உறவைத்
தெரிந்துகொள்ளலாம்.
Board of Investment Srilanka (Prince Sponsor), AirTel, Bank of Ceylon, Ceylon Sea Board, John Keells, Sri Lanka Port Authority,
Standard Chartered Bank, LycaMobiles (Golden Sponsor), Silver Sponsors:
Brandis, Commercial Bank, Hatton National Bank, Mas Holdings, Mack Woods, Lunch
Sponsor : Al-Futtaim (AMW), ADB, BDBO Lanka, Central Bank of Srilanka, EY,
ILYKA. (Source: http://www.cbcglobal.org/events/details/commonwealth-business-forum-2013#sponsors)
இத்தகைய சிங்கள ஸ்பான்சர் நிறுவனங்களுக்கிடையில் கோல்டன் ஸ்பான்சர் வழங்கிய
ஒரே நிறுவனம் லைக்கா மட்டுமே. அதுவும்
தாமாக முன்வந்து வழங்கிய நிறுவனம் லைக்கா.
இவற்றை வைத்துப் பார்க்கும்போது இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டாம்
பிளெங்கின்சாப் அவர்களுக்கு மட்டுல்ல,
அனைவருக்குமே லைக்கா நிறுவனத்தின் மீது
சந்தேகம் எழத்தான் செய்யும்.
இது மட்டுமல்ல, இங்கிலாந்து இளவரசர்
சார்லஸ் நடத்திவரும் பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட்-க்கு (British Asian Trust)
1 மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை லைக்கா நிறுவனம்
ஸ்பான்சராக வழங்கியது. இந்த ஸ்பான்சரை
இந்த டிரஸ்ட்டின் அதிகாரப்பூர்வத் தூதரும் இலங்கை கிரிக்கெட் வீரருமான முத்தையா
முரளிதரன் மூலமாக வழங்குகிறார்கள். (Source:http://uk-lycamobile.blogspot.in/2012/07/lycamobile-presents-first-instalment-to.html)
சரி, லைக்கா நிறுவனத்தை நடத்தும்
சுபாஷ்கரன் ஒரு யாழ்ப்பாணத் தமிழர். அவரை
வைத்து இராஜபக்சே அரசு இவற்றை எல்லாம் செய்வதன் நோக்கம் என்ன?
காமன்வெல்த் மாநாடு நடப்பதற்கு முன்பே இலங்கை அரசால் ஒரு கூட்டம்
நடத்தப்படுகிறது. அக்கூட்டத்தின் முக்கிய
நோக்கம் இலங்கையில் நடைபெற்ற போருக்குப் பின் பொருளாதாரரீதியாக இலங்கையை எப்படி
உயர்த்துவது? பன்னாட்டு வணிகங்களின் முதலீட்டை எப்படி இலங்கைக்குக்
கொண்டு வருவது? இலங்கைக்கு முதலீடு செய்வதில் ஏற்படும் அச்சத்தை எப்படிப்
போக்குவது? என்கிற அம்சங்கள்
விவாதிக்கப்பட்டன. இதன்
தொடர்ச்சியாகத்தான் கடந்த 2013 நவம்பர் 12 முதல் 14 நாட்களில்
காமன்வெல்த் பிசினஸ் கவுன்சில் (Commonwealth Business Council) கூட்டம் கூட்டப்பட்டது.
பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் முக்கிய நிறுவனமாக
லைக்காவும் கலந்துகொண்டது. இந்த வணிக மாநாட்டுக்குத்தான் கோல்டன் ஸ்பான்சரை லைக்கா
நிறுவனம் வழங்கியது. லைக்கா நிறுவனம்
உலகம் முழுக்க வேர் பரப்பியிருப்பதால் இந்நிறுவனத்தை இராஜபக்சே அரசு பயன்படுத்தத்
திட்டமிட்டதன்விளைவுதான், போரில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுபாஷ்கரன் நேரடியாக உதவக் களமிறக்கிவிடப்பட்டது.
காமன்வெல்த் பிசினஸ் போரம் 2013 தொடக்கவிழா (Commonwealth Business Forum) |
தனது தாய் ஞானாம்பிகையின் பேரில் தொடங்கப்பட்ட ஞானம் ஃபவுண்டேஷன் (Gnanam Foundation) மூலமாக
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார், புத்தளம், திரிகோணமலை மற்றும் வவுனியா மாவட்டத்தில் எந்தத் தொண்டு
நிறுவனத்தின் உதவியுமில்லாமல் ஞானம் ஃபவுண்டேஷனே நேரடியாக நலத்திட்ட உதவிகளைச்
செய்தது. இதுவரை 2000 மதிவண்டிகள், 2000 தையல் எந்திரங்கள், 10000 மாணவர்களுக்கு
பள்ளிப் பைகள், சீருடைகள், 5 இலட்சம் பேனா, 5 இலட்சம் பென்சில்கள், மாலை நேர
வகுப்புகள், மருத்துவ முகாம்கள்,
51 குடும்பங்களுக்கு நிதி உதவிகள், 3000 மில்லியன் பவுண்ட்ஸ் அளவுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இத்துடன், தான் படித்த யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்யாலயா
பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களுக்கான
கல்விச் செலவையும் ஏற்றுள்ளது. (Source:http://www.gnanam-foundation.org/lycas-gnanam-foundations-second-phase-gets-underway-with-rs-3000-million/)
வடக்கு மாகாணத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு அமைச்சரவை, சுபாஷ்கரனை அணுகி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து
நலத்திட்ட உதவிகளைச் செய்யுமாறு வலியுறுத்தினர்.
ஆனால், சுபாஷ்கரன் அதற்கு உடன்பட
மறுத்துவிட்டு, சிங்கள அரசு மூலமாகவே
ஞானம் ஃபவுண்டேஷனின் நலத்திட்ட உதவிகளைச் செய்து வருவதால் பலத்த சந்தேகங்களை
எழுப்பியுள்ளது. இன்றுவரை வடக்கு மாகாண
அமைச்சரவை சுபாஷ்கரனோடு தொடர்புகொள்ள முயற்சிசெய்கிறது. ஆனால், அவரோ தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருந்து வருகிறார்.
பாதிக்கப்பட்டப் பகுதிகளில் ஊடகவியலாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்கூட
அனுமதிக்கப்படாத சூழலில், வடக்கு மாகாண
அமைச்சர்களே குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அனுமதி மறுக்கப்படும் சூழலில், சுபாஷ்கரனும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் இலங்கை
தேசம் முழுக்க சுதந்திரமாகப் போய்வர அனுமதிக்கப்படுவதன் பின்னணி என்ன என்கிற
கேள்வி இயல்பாய் எழுகிறது.
வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்திய இராஜபக்சேவைத்
தண்டிக்கும் வகையிலும் இலங்கையைத் தனிமைப்படுத்தும் வகையிலும் உலகம் முழுக்கப்
போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் லைக்கா நிறுவனம் முலம் இலங்கையில் தொழில்
வளங்களை உருவாக்கவும், தொழில் முதலீட்டாளர்களை
முதலீடு செய்ய வைக்கவுமான தூதராக சுபாஷ்கரன் செயல்பட்டு வருவதாகவும், மேலும் போருக்குப்பின் யுத்தப்பகுதி உள்ளிட்ட இலங்கையைச்
சுற்றிப்பார்க்க லைக்கா நிறுவனம் மூலம் டூரிசம் பேக்கேஜ்களை (Tourism Package) ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் லைக்காஃப்ளை (Lycafly) வழங்கி
வருகிறது. (Source:http://www.lycaflyholidays.com/portfolio-view/tour-north-sri-lanka/ and http://www.lycaflyholidays.com/portfolio-view/culture-northeast-sri-lanka/)
இச்செயல் இலங்கை அரசின் போர்க் குற்ற நடவடிக்கைகளை மூடி மறைக்கவும் மறந்து போகவுமான முயற்சியாகக் கருதப்படுகிறது.
இத்தகைய இனப்படுகொலையாளியின் பங்காளியாகச் செயல்பட்டுவரும் லைக்கா குழுமத்தின்
லைக்கா புரொடக்ஷன்ஸ்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'கத்தி' திரைப்படத்தைத்
தயாரிக்கிறது.
தற்போது இத்திரைப்படத்தின் கதை குறித்தோ, அதில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் குறித்தோ
விவாதமில்லை. மிகப்பெரிய இனப்படுகொலை
நடத்தியவருக்குப் பின்னணியாக இருக்கும் சுபாஷ்கரன் இப்படத்தைத் தயாரிப்பது
குறித்துத்தான் விவாதங்கள் எழுகின்றன. இதில் இருவேறு கருத்துக்கள்
தேவையில்லை. லைக்கா நிறுவனம் முழுக்க
முழுக்க இராஜபக்சே அரசின் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும், ஐங்கரன்
கருணாமூர்த்தியும் முழுப் பூசணிக்காயை அல்ல முழு மலையையே சோற்றில் மறைப்பதுபோல்
லைக்கா நிறுவனத்தைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள். அல்லது இராஜபக்சேவின் இரத்தக் கறையைத் துடைக்க
முயற்சிக்கிறார்கள். இதுவும்
இராஜபக்சேவைக் காப்பாற்றும் ஒரு முயற்சிதான்.
தமிழகத்தில் ஈழ விடுதலைக்காகப் போராடும் அரசியல் கட்சித் தலைவர்களைச்
சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளதாக இயக்குநர் முருகதாஸ் பேட்டியளிக்கிறார். இது முற்றிலும் ஏமாற்று வேலை. படுகொலை நடத்திய இரத்தம் தோய்ந்த கரங்களோடு
தமிழகத்தில் வணிகம் செய்ய, இராஜபக்சே லைக்கா
நிறுவனத்தின் துணையோடு விஜய் - முருகதாஸ் கூட்டணியோடு களம் இறங்கியுள்ளார்கள்.
நாம் என்ன செய்யப் போகிறோம் தமிழர்களே!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment